ஒருமுறை சந்திரன் தனது நண்பரான குருவின் மனைவியுடன் தகாத உறவு கொண்டு ஒரு குழந்தைப் பெற்றுக் கொண்டார். அதனால் கோபமுற்ற தேவர்கள் அவருடைய உருவம் பொலிவு இழக்க வேண்டும் என சாபம் தந்தனர். ஆகவே வருத்தமுற்ற சந்திரன் பிரும்மாவிடம் சென்று ஆலோசனைக் கேட்க அவரும் அந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற தட்ஷிண புஷ்கரணி என்ற இடத்துக்குச் சென்று அங்குள்ள குளத்தில் நீராடினால் சாபம் போகும் என்றார். சந்திரனும் இப்போது திருக்கண்ணமங்கை ஆலயம் உள்ள இடத்துக்கு வந்து அந்த குளத்தில் நீராட இறங்கிய உடனேயே சாப விமோசனம் பெற்றாராம். அந்த குளத்தின் மகிமை அப்படியா ? ஆமாம் அந்தக் குளம் உள்ள இடம் திருக்கண்ணமங்கை ஆலயம். அதில்தான் மகாலஷ்மி குளித்து உள்ளாள். விஷ்ணுவை தான் திருமணம் செய்து கொண்ட போது அந்த குளத்து நீரை விஷ்ணுவின் கைகளில் ஊற்றி அவருக்கு அபிஷேகம் செய்தாள். அதன் கதை என்ன?
ஒரு காலத்தில் பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்து அமிருதம் எடுத்தபோது அங்கிருந்த விஷ்ணுவின் அழகில் மயங்கிய மகாலஷ்மி அவதாரம் எடுத்து இருந்த லஷ்மி தேவி அந்த அவதாரத்திலும் விஷ்ணுவை மணக்க விரும்பினாள். ஆகவே தற்போது திருக்கண்ணமங்கை ஆலயம் உள்ள இடத்துக்கு வந்து லஷ்மி வனம் எனப்படும் பகுதியில் ஒரு குறுகலான பொந்தில் அமர்ந்து தவம் செய்தாள். அவளுடைய தவத்தினால் மகிழ்ந்து போன விஷ்ணு அவளை அந்த இடத்திலேயே வந்து மணக்க முடிவு செய்தார். ஆனால் முப்பத்தி மூன்று கோடி தேவர்களும் , ரிஷி முனிவர்களும் அந்த திருமணத்துக்கு தாமும் வர விரும்பினார்கள். ஆனால் சிறிய இடத்தில் இருந்த அங்கு சென்று எப்படி நிற்பது? ஆகவே அவர்கள் சிறு தேனிக்களாக உருவெடுத்து அங்கு சென்று விஷ்ணு பக்தவத்சலப் பெருமாள் என்ற பெயரில் அன்னை லஷ்மியை மகாலஷ்மி அவதாரத்தில் மணம் முடிப்பதைக் கண்டு களித்தனர். அதுவே இன்று திருக்கண்ணமங்கை ஆலயமாக உள்ளது. அதன் எதிரில்தான் புஷ்கரணி என்ற அந்தப் புனிதக் குளமும் உள்ளது. அந்த குளத்தில் நீராடினால் பல நன்மைகள் ஏற்படும் என்கிறார்கள்.
அந்த ஆலயத்தின் அதிசயம் என்ன என்றால் சன்னதியில் ஆயிரக்கணக்கில் சுற்றித் திரியும் தேனிக்கள் இன்றுவரை எவரையும் கடித்தது இல்லையாம். அவை எங்கிருந்து வருகின்றன என்பது எவருக்கும் தெரியவில்லை. ஆலயம் கட்டப்பட்ட காலமும் தெரியவில்லை என்றாலும் அது பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது என்பது மட்டும் தெரிகின்றது. தாயாரின் பெயரை கண்ணமங்கை நாயகி என்றும் , அபிஷேகவல்லி என்றும் அழைக்கின்றார்கள்.
தாயார் சமேதமாக பக்தவத்சலப் பெருமாள் காட்சி தருகிறார். கும்பகோணத்தில் இருந்து ௨௫ கிலோ தொலைவிலும் , மற்றும் திருவாரூரில் இருந்து எட்டு கிலோ தொலைவிலும் உள்ளது இந்த விஷ்ணு ஷேத்ரம் . அங்கு செல்ல நிறைய பஸ் வசதிகள் உள்ளன.