மனக் குழப்பங்களை
தீர்க்கும் 
சிந்தாமணி விநாயகர்
ஆலயங்கள்
சாந்திப்பிரியா
மகாராஷ்டிரத்தில் மிகப் பிரசித்தி பெற்றது அஷ்ட சித்தி விநாயகர் என்ற எட்டு விநாயகர் ஆலயங்கள். அதில் ஒன்றுதான் சிந்தாமணி கணேஷ் என்ற விநாயகர் ஆலயம். அது போலவே மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் மற்றும் உஜ்ஜயினியிலும் சிந்தாமணி கணேஷர் ஆலயம் உள்ளது. இந்தூரிலும் உஜ்ஜயினியிலும் உள்ள ஆலயங்கள் பரமார் மன்னர் காலத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை எனத் தெரிகின்றது.
 

ஜுனா  இந்தூர் விநாயகாரின் ஆலயம்  . அவருக்கு  செல்போன் மற்றும் கடிதம் மூலம்  தமது பிரச்சனைகளை கூறுகின்றனர் 

ஜுனா இந்தூர் என்ற பகுதியில் உள்ள அந்த பெருமை வாய்ந்த கணபதிக்கு தமது குறைகளை ஒரு கடிதமாக எழுதி அவரிடம் வைக்கின்றனர். அதை வைத்து விட்டால் நாம் அந்த பிரச்சனையைக் குறித்து சிந்தனை செய்ய வேண்டாம், கணபதியே அந்த குறைக்கு நிவாரணம் தருவார் என்ற நம்பிக்கை பெருமளவு உள்ளதினால் இந்தியாவில் இருந்து மட்டும் அல்ல அந்த ஆலயத்தின் விஷேசத்தைப் பற்றி அறிந்துள்ள உலகெங்கும் உள்ள பக்தர்கள் அந்த ஆலயத்துக்கு கடிதம் எழுதுகிறார்கள். அதை அந்த ஆலயப் பூசாரி விநாயகர் முன்னால் வைத்துவிட்டு மறுநாள் எடுக்கின்றார். கடிதத்துக்கு எவரும் பத்திக் கோருவது இல்லை. விநாயகருக்கு குறையைக் கூறி கடிதம் மட்டும் எழுதினால் போதும் . அவர் பார்த்துக் கொள்வார். அது மட்டும் அல்ல சமீப காலமாக கடிதம் எழுத முடியாதவர்கள், தமது உடனடிப் பிரச்னைக்கு தீர்வு காண விநாயகர் ஆலயத்துக்கு நண்பர்கள் மூலம் செல் போனில் தமது பிரச்சனையை விநாயகரிடம் கூறுகிறார்கள். அப்போது அந்த பூசாரி அந்த போனை கணபதியின் காதுக்கு அருகில் வைக்கின்றார்.
ஆனால் உஜ்ஜயினியில் சிப்ரா நதிக்கரைக்கு அருகில் உள்ள சிந்தாமணி விநாயகருக்கு அப்படி செய்யத் தேவை இல்லை. அந்த விநாயகரை மனதார நினைத்துக் கொண்டு அல்லது கடிதம் எழுதி எடுத்துக் கொண்டு அந்த விநாயகரிடம் சமர்ப்பித்தால் குறைகள் தீருமாம்.
 உஜ்ஜயின் ஆலயத்து சிந்தாமணி கணேசர் தனது மனைவிகளுடன் 
  மற்றும் அவர் ஆலயம்
அங்குள்ள மிகப் பெரிய விநாயகர் தமது மனைவிகளான சித்தி மற்றும் புத்தியுடனும் தரையில் சாய்ந்து அமர்ந்தவாறு காட்சி தருகின்றார். சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அது தானாகவே தோன்றிய ஸ்வயம்பு மூர்த்தி என்பதுதான் அந்த ஆலயத்தின் மிகப் பெரிய விசேஷம். திருமணத்துக்கான முதல் பத்திரிகை, வண்டி வாங்கினால் முதலில் அங்கு செல்வது போன்ற நம்பிக்கைகள் அதிகம் உள்ளது. அந்த ஆலயத்துக்கு திரளான மக்கள் வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் பூனா நகரில் இருந்து இருபத்தி இந்து கிலோ தொலைவிலான தேயோர் சிந்தாமணி ஆலயத்துக்கு செல்ல நிறைய பஸ் மற்றும் பிற வண்டி வசதிகள் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயத்தைப் பற்றியும் சில கதைகள் உள்ளன. ஒருமுறை பிரும்மாவுக்கு ஒரே மனக் குழப்பம் ஏற்பட்டது. ஆகவே அவர் இந்த ஆலயம் உள்ள இடத்தில் அப்போது தங்கி இருந்த விநாயகரை வந்துத் துதித்து மன உளைச்சளை நிவர்த்தித்துக் கொண்டாராம். இன்னோரு கதையின்படி பிரும்மாவுக்கு அப்போது அங்கு விநாயகர் இருந்தது தெரியாது எனவும் அந்த இடத்தில் வந்து தங்கியபோது தமது மன உளைச்சல் தானாகவே பனிபோல விலகி மனம் அமைதி அடைந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்து தேவலோகத்துக்கு திரும்பிச் சென்றப் பின் அங்கிருந்த நாரத முனிவர் மூலம் அந்த இடத்தில் உள்ள சிந்தாமணி விநாயகரின் சக்தியைப் புரிந்து கொண்டாராம். அந்த இடத்தில் இருந்த ஆலயத்திற்கு சிந்தாமணி எனப் பெயர் ஏன் ஏற்பட்டது? ஒரு காலத்தில் அந்த இடத்தில் அப்ஜீத் என்ற மன்னன் ஆண்டு வந்தான். வெகு காலம் அவனுக்கு குழந்தை இல்லை. ஆகவே தவமிருந்து ஒரு புதல்வனைப் பெற்றான். அந்தப் பிள்ளை வளர்ந்து ஆளானதும் கபில முனிவரிடம் சிந்தாமணி என்ற மன சஞ்சலத்தைத் தீர்க்கும் கல் உள்ளது எனக் கேள்விப்பட்டு அவர் வீட்டிற்குச் சென்று அதை திருடி வந்து விட அதை அறிந்த முனிவர் அங்கிருந்த விநாயகரிடம் அது பற்றி கூறி அழுதார். ஆகவே விநாயகர் மனித உரு எடுத்து அந்த இளவரசனுடன் சண்டையிட்டு அதை திரும்பப் பெற்று வந்தார். ஆனால் முனிவர் அந்தக் கால் தனக்கு இனித் தேவை இல்லை எனவும் அதற்குப் பதில் வினாயகரே அங்கு தங்கி தனக்கு மன நிம்மதி தரவேண்டும் எனக் கூற விநாயகரும் அங்கேயே தனினார். அந்த சின்தாமணிக் கல்லை மீட்டு அதே கல்லின் மகிமையை , அதாவது ஒருவரது மன சஞ்சலங்களை அகற்றும் சக்தியை தந்தவண்ணம் அமர்ந்ததினால் அவருக்கு சிந்தாமணி கணேஷர் என்ற பெயர் ஏற்பட்டது.

 

பின் குறிப்பு: அனைவரும் அறிந்து
கொள்ள வேண்டிய முக்கிய  குறிப்பு 

எனக்கு சில குருமார்களிடமும் பண்டிதர்களிடமும் பழக்கம் உண்டு.  நான் அவர்களை சந்திக்கும் போதெல்லாம் எதையாவது கேட்டு என் அறிவை வளர்த்துக் கொள்ள முயலுவேன். அது என் பழக்கம். ஒரு நாள் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை ஒரு குருவிடம் கேட்டேன். ‘ ஸ்வாமி, பல இடங்களிலும் சில குறிப்பிட்ட சக்தி பெற்ற கடவுட்கள் உள்ளனரே. உதாரணமாக சிந்தாமணி கணேஷ் என்கிறார்கள். அவர் எனக்குத் தெரிந்து மூன்று இடங்களில் உள்ள  ஆலயங்களில் உள்ளார். நான் இந்தூர் மற்றும் உஜ்ஜயினி சிந்தாமணி கணேஷரை தரிசித்து  உள்ளேன் . ஆனால் என்னால் பூனாவுக்கு அருகில் உள்ள தேயூருக்கு சென்று அங்குள்ள சிந்தாமணி கணேசரை பர்ர்க்க முடியவில்லை. ஆனால் அவரை வேண்டினால் நிச்சயமாகப் பலன் உண்டு என்கிறார்களே. எனக்கும் அவரை வேண்டிக் கொள்ள ஆசைதான். எங்களைப் போன்ற நடுத்தர வகுப்பினர் அங்கெல்லாம் சென்று அந்த கடவுட்களை வணங்கி வேண்டுதல் செய்ய முடியாமல் இருக்கும் வகையில் பொருளாதார தடை உள்ளதே. அதற்கு ஏதும் மாற்று மார்க்கம் உண்டா?

கலகலவென சிரித்தார் குருஜி. அதன் பின் கூறினார் ‘ இதைப் பார். ஒவ்வொரு இடத்திலும் உள்ள கடவுட்களுக்கு சில சக்திகள் உள்ளன. ஒரே கடவுள் பல இடங்களில் சில அவதாரங்கள் எடுத்து தன்னுடைய குறிப்பிட்ட சக்தியை அந்த இடத்தில் வைக்கின்றார். உண்மையில் அந்த இடத்தில் சென்று தரிசிப்பதின் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன.  ஆனால் அதற்காக ஒவ்வொரு ரூபத்திலும் இருந்து விசேஷ சக்தியை பல ஆலயங்களில் வெளிப்படுத்தும் அவர்  பல மைல்களுக்கும் அப்பால் இருந்தவாறு தன்னை வேண்டும் பக்தர்களை கைவிடுவது இல்லை. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். அனைத்து இடத்திலும் உள்ளவர். எங்கிருந்தாலும் அவரிடம் அந்த அனைத்து சக்திகளையும் வைத்துள்ளவர். ஆகவே அங்கெல்லாம் சென்று அவரை வேண்டி பிராயச்சித்தம் பெற முடியாதவர்களுக்கு நிச்ச்சயமாக வேறு மார்க்கம் உண்டு. உன்னால் தேயூருக்கு செல்ல முடியவில்லையா . அதற்கு ஏன் கவலைப்படுகிறாய்? நீ குறிப்பிட்ட ஆலயத்து கடவுளுக்கு வேண்டுதல் செய்ய நினைகின்றாயா. சரி. குளித்துவிட்டு பூஜை அறைக்குச் சென்று ஒரு நெய் விளக்கு ஏற்றி வை. தேயூர் விநாயகரை மனதில் பிரார்த்தித்துக் கொண்டு அவரிடம் உன் குறையைக் கூறு. அது நிவர்த்தி அடைந்தால் அவருக்கு இன்ன காணிக்கை செலுத்துவதாகக் கூறு.  முடிந்தால் காரியம் முடிந்த அன்றே இல்லை எனில் மறுநாள் விநாயகரின் ஆலயத்துக்குச் சென்று அவர் உண்டியலில் அவருக்காக நீ கூறிய காணிக்கையை அவர் பெயரை தியானித்துக் கொண்டே போடு. அதாவது தேயூர் விநாயகருக்கு வேண்டுதல் என்றால் ஏதாவது ஒரு விநாயகரின் ஆலயத்துக்குச் சென்று  ‘தேயூர் விநாயகா இந்த காணிக்கையை உனக்கு நான் இங்கே செலுத்துகிறேன். நீ எடுத்துக் கொள்ள வேண்டும்’ என மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அங்குள்ள உண்டியலில் போட்டால் போதும். அதை அவர் ஏற்பார். ஒன்ற நினைவில் வைத்துக் கொள். எந்த கடவுளுக்கு எந்த நாள் விசேஷமானது என்பதை கவனித்து அந்த நாளில்தான் அவரிடம் பிரார்த்தனையும் செய்ய வேண்டும் . அது போல அந்த காணிக்கையையும் அதே நாளில்தான் செலுத்த வேண்டும். அது மட்டுமே முக்கியம்.  உதாரணமாக சிவனுக்கு உகந்தது திங்கள் கிழமை, அம்பாளுக்கு உகந்தது வெள்ளிக் கிழமை, தஷிணாமூர்த்திக்கு வியாழக் கிழமை ,  விநாயகருக்கு செய்வாய் , என அந்தந்த நாளை மனதில் கொண்டு அன்று நீ விரும்பும் ஆலயத்து மூர்த்தியை மனதில் வைத்துக் கொண்டு  அவர்களை  வேண்டிக்கொள். கடவுள் உன்னைக் கைவிடமாட்டார். உன் வேண்டுதல் எந்த ஆலயத்துக்கோ அந்த ஆலயத்து ரூபத்தில் தன்னை மாற்றிக் கொண்டு நீ தரும் காணிக்கையை பெற்றுக் கொள்வார். இதை நம்பு. ஆனால் உன்னால் முடியுமா, கண்டிப்பாக அங்கு சென்று வேண்டிக் கொள். முடியவில்லையா, நான் கூறியபடிச் செய்  ‘ என்றார். என் மனம் அமைதி அடைந்து திரும்பினேன்.

எனக்கு கிடைத்த இந்த அறிவுரையை  நம்புபவர்கள் நம்பட்டும், நம்பாதவர்களின் வழி அவரவர்களுக்கே என்ற மன நிலையோடு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.