இந்தியாவின் பல மாநிலங்களிலும் நாகங்கள் வணங்கி பூஜிக்கப்படுகின்றன. இதற்கு முன்னால் 2010 ஆம் வருடத்தில் ஜூன் மாதம் நாகர்கோவிலில் உள்ள ஒரு நாகராஜர் ஆலயம் பற்றிய கட்டுரையை வெளியிட்டு இருந்தேன். அதைத் தொடர்ந்து இந்தக் கட்டுரை வெளியாகின்றது. நாகர்கோவிலில் உள்ள ஆலயத்தைப் போல கேரளாவில் உள்ள மானரசாலா ஸ்ரீ நாகராஜர் ஆலயம் புகழ் பெற்ற ஆலயம். அந்த ஆலயத்திலும் நாகங்கள் பூஜித்து வணங்கப்படுகின்றன. கேரளத்து ஆலயம் எழுந்ததைப் பற்றிய சுவையான கதை உள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபட் எனும் இடத்தில் உள்ள இந்த நாகராஜர் ஆலயம் எழுவதற்கு மூல காரணமாக இருந்தவர் பரசுராமரே என்கிறார்கள்.
தத்தாத்திரேயர் சரித்திரத்தில் பரசுராமர் எப்படி சினம் கொண்டு தனது தந்தை ஜமதக்னியை வஞ்சகமாகக் கொன்ற ஷத்ரியர்களை இருபத்தி ஒருமுறை பூமியெங்கும் சென்று துரத்தித் துரத்திக் கொன்று குவித்தார் என்ற கதை உள்ளது . ஆனால் எத்தனை மனிதர்களைத்தான் கொன்று குவிப்பது என மனம் வெறுப்பு அடைந்த பரசுராமர் தத்தாத்திரேயரிடமே மீண்டும் சென்று சரண் அடைந்தார். அவரிடம் தீஷை பெற்று வனத்தில் தவத்தில் அமர்ந்தார். காலம் கடந்தது. பரசுராமர் மனதில் அமைதி இல்லை. காரணம் ஷத்ரியர்களைக் கொன்ற பாவத்தினால் ஏற்பட்ட தோஷம் பரசுராமருக்கு விலகவில்லை. தான் பூமியிலே அவதரித்ததற்கான காரணத்தை செய்து முடித்தப் பின் தேவலோகத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டிய தருமணம் வந்துவிட்டதை உணர்ந்தார்.
மனித ரூபத்தில் பிறந்து விட்டதினால் வனத்தில் இருந்த ரிஷி முனிவர்களிடம் சென்று தன்னுடைய தோஷத்தைக் களைந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என ஆலோசனைக் கேட்டார். அவர்களும் அந்த தோஷம் களைய வேண்டுமானால் ஒரு பூமியையே படைத்து பிராமணர்களுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும் என்றார்கள். ஆனால் ஏற்கனவே உள்ள பூமியில் இருந்து இன்னொரு பூமியை எங்கு படைப்பது. எங்கிருந்து பூமியைக் கொண்டு வருவது? பரசுராமர் அதைப் புரிந்து கொண்டார். தனது தோளில் இருந்த கோடாரியை எடுத்து கடலுக்குள் எறிந்தார் . அந்தக் கோடாலி கடலுக்குள் இருந்த சிறு பூமியை பிளந்து எடுத்து வந்தது . கடலிடம் சற்று உள்ளே செல்லுமாறுக் கூறியப் பின் அந்த நீரின் மீது அதை வைக்க அங்கு ஒரு புதிய பூமி உருவாயிற்று. கடல் அருகிலேயே ஏற்படுத்திய பூமியை அங்கிருந்த பிராமணர்களுக்கு தானமாகக் கொடுத்தார். ஆனால் அந்த பூமியில் யாரும் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டது. காரணம் கடலுக்குள் இருந்து வெளிவந்த பூமி என்பதினால் அது முழுவதும் உப்பு பூமியாகவே இருந்தது. அதில் என்ன விளையும்? யார் வாழ்வது? குடிக்க நல்ல நீர் கூடக் கிடைக்காதே. மீண்டும் ஏற்பட்ட அந்தக் குழப்பத்திற்கு விடைக் காண ரிஷி, முனிவர்களிடம் ஆலோசனைக் கேட்க அவர்களும் நாகங்கள் காலகோடா எனும் விஷத்தை அந்த பூமியில் வந்து உமிழ்ந்தால் அந்த உப்புத் தன்மை அடியோடு அழியும் என்றார்கள். ஆகவே பரசுராமர் நாகராஜரைக் துதிக்க நாகராஜரும் அவர் முன் பிரசன்னமாகி அவர் கேட்ட வரத்தை அருளினார். பல்லாயிரக்கணக்கான கொடிய நாகங்கள் அந்த பூமிக்கு வந்து விஷத்தை உமிழ பூமியின் உப்புத் தன்மை விலகி அந்த பூமியே பெரும் பசுமைப் பிரதேசமாக மாறி அற்புதமான செடி கொடிகளுடன் கூடியதாக அமைந்தது. அதுவே இன்றைய கேரளத்து மாநிலம் என்று நம்புகிறார்கள். அந்த கட்டத்தில் பரசுராமரும் வேத முறைப்படி அந்த இடத்திலேயே விஷ்ணு-சிவன் இருவரும் ஒன்றிணைந்த ஸ்ரீ நாகராஜரை மந்தார மரங்கள் அடர்ந்த அந்த சோலையில் ஸ்தாபித்தார். அவரைத் தவிர சர்பயாக்ஷி, நாகயாகஷி, நாக சாமுண்டி போன்ற பல நாகங்களையும் அங்கு பிரதிஷ்டை செய்து யாகம் செய்தார். அதை செய்து முடித்து அந்த பூமியை புனிதமாக்கியவுடன் பரசுராமர் அதை அங்கிருந்த பிராமணர்களிடம் தந்து எப்படி அந்த இடத்தை நிர்வாகிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளைக் கூறி விட்டு அதனுடன் தான் அங்கு வந்ததற்கான காரணம் நிறைவேறி விட்டதினால் இனி தனக்கு அங்கு வேலை இல்லை எனக் கூறி மறைந்து விட்டார்.
அதன் பின் பல ஜென்மங்கள் கடந்தன. வாசுதேவா மற்றும் ஸ்ரீதேவி என்ற இரண்டு பிராமணர்களும் அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு வெகு காலம் குழந்தைகள் பிறக்கவே இல்லை. பகவனை வேண்டித் துதித்தும் பலன் ஏற்படவில்லை. அவர்கள் இருந்த வனப் பிரதேசம் பரசுராமர் ஏற்படுத்திய பூமிதான். அப்போது ஒரு முறை அந்த வனத்தின் ஒரு பகுதி தீப் பிடித்து எரிந்தது. அங்கிருந்த ஜீவா ராசிகள் தீயில் கருகி மடிந்தன. ஆனால் அந்த பூமிக்கு அடியில் பொந்துகளில் இருந்த பாம்புகளோ தீக்காயங்களுடன் தப்பி ஓடி வாசுதேவா மற்றும் ஸ்ரீதேவி இருந்த இடத்தை வந்து அடைந்து மயக்கமுற்றன. அந்த தம்பதியினரோ வந்து மயங்கிக் கிடப்பது பாம்புகளே என்று பயந்து ஓடவில்லை. மாறாக கருணையுடன் அவர்கள் அந்த பாம்புகளை எடுத்து அவற்றின் காயங்களுக்கு மூலிகை மருந்து போட்டு அங்கு இருந்த மந்தார மரங்களின் அடியில் விட்டு பாதுகாத்தார்கள். சில நாட்களிலேயே அவை உயிர் பிழைத்தன. அவர்களின் நல்ல செயலைக் கேள்விப்பட்ட பாம்புகளின் மன்னரான நாகராஜர், தனது இனத்தை பாதுகாத்து உயிர் பெறச் செய்தவருக்கு நன்றிக் கடன் செலுத்த அவர்களுக்கு மகனாகவே பிறப்பதாக அவர்கள் கனவில் தோன்றிக் கூறினார். அது மட்டும் அல்லாமல் அந்த தம்பதியினர் அங்கு நாக பூஜை செய்யுமாறு கூறினார். அவர்களும் அதை செய்து வந்தார்கள். என்ன அதிசயம் சில மாதங்களிலேயே ஸ்ரீ தேவி கர்ப்பமுற்று இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஐந்து தலை ராஜ நாகமாகவும் மற்றது மனிதப் பிறவியாகவும் இருந்தன. அந்த ஐந்து தலை நாகமே ஆனந்தா மற்றும் வாசுகி என்றும், ஒரு சாபத்தின் காரணமாகவே அவர்கள் சாபவிமோசனம் அடைய அங்கு வந்து பிறந்ததாகவும் ஒரு கிராமியக் கதை உள்ளது.
ஆனால் அந்த தம்பதியினர் தம்முடைய இரண்டு பிள்ளைகளையுமே ஒன்றாக பாவித்து வளர்த்து வந்தார்கள். காலம் ஓடியது. நாரராஜருக்கும் தன்னுடைய கடமையை முடித்துக் கொண்டு தன்னுடைய லோகத்துக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார். அவர் அங்கு வந்து பிறந்ததின் காரணம் அங்கு தான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள வேண்டும் என்பதற்காகவே. ஆகவே ஒரு நாள் அந்த தம்பதியினரிடம் தாம் அவதரித்ததின் காரணம் முடிந்து விட்டதினால் தான் அந்த பூமியிலேயே நிலையாக நாகராஜராக இருக்க உள்ளதாகவும் தன்னை அங்கு வழிபடுமாறும் கூறிவிட்டு பூமிக்கு அடியில் சென்று மறைந்து விட்டார். அந்த தம்பதியினரும் அந்த இடத்தில் நாகராஜர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறு ஆலயம் அமைத்து வழிபாட்டு வந்தார்கள். எந்த இடத்தில் ஜென்ம ஜென்மாந்திரங்களுக்கு முன்னர் பரசுராமருக்கு நாகராஜர் தோற்றம் தந்தாரோ, எந்த இடத்தில் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் நாகராஜரை பிரதிஷ்டை செய்து பூஜித்தாரோ, அந்த இடத்திலேயே மந்தார மரங்கள் சூழ்ந்த அதே இடத்தில் அந்த தம்பதியினர் சிறு ஆலயம் அமைத்து இருந்தார்கள் என்ற நம்பப்படுகின்றது . நாளடைவில் அந்த வழிபாட்டு தலம் பெரிய ஆலயமாக உருவெடுத்து இன்று பலரும் சென்று வணங்கும் ஸ்ரீ நாகராஜர் ஆலயமாக மாறி உள்ளது . அந்த பிராமணத் தம்பதியினரின் வம்சாவளியினரே இன்றும் அங்கு ஆலயத்தை நிர்வாகித்து பூஜைகளை செய்து வருகிறார்களாம்.
அந்த ஆலயத்தின் பிரதான தெய்வம் விஷ்ணுவின் அவதாரத்தையும், சிவபெருமானின் சக்தியையும் உள்ளடக்கிய நாகராஜரே. அவருக்கு அடுத்து உள்ளவள் முத்துப் போன்ற வெண்மை நிறம் கொண்ட வாசுகி என்ற நாகமே. மற்ற நாகங்கள் தட்ஷகன், கார்கோடகன், பத்மா, மகாபத்மா, சங்கபாலா, குளிகன் போன்றவையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆலயத்தில் வயதான ஒரு அம்மையாரே பூஜைகளை செய்து வருகின்றார். அவர்கள் குடும்பமே அந்த ஆலயத்தையும் பராமரித்து வருகிறார்கள்.
இன்றும் அந்த ஆலயத்தில் பல தெய்வ சக்தி கொண்ட பாம்புகள் வருவதாகக் கூறுகிறார்கள். அந்த பாம்புகளின் தோற்றங்களைப் பற்றியும், அவற்றினால் அங்கு சென்று வழிபட்ட பல பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள், மகிமைகளைக் குறித்து பல கதைகள் நிலவுகின்றன. அவற்றைக் கேட்கும்போது திகைப்பாக உள்ளது. ஆனால் அங்கு சென்று தரிசிப்பதின் மூலம் பெரும் பாப விமோசனம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். பாம்பு கடித்தவர்கள் அந்த ஆலயத்து பிரசாதத்தை உட்கொண்டால், பாம்பின் விஷம் முறிந்து விடுவதாக கூறுகிறார்கள். அப்படி செய்தால் பாம்பு கடித்தவர்கள் இறப்பது இல்லையாம். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வணங்குவத்தின் மூலம் நிச்சயமாக குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள் என்கிறார்கள். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் வருடாந்திர விழாவிற்கு நாடெங்கும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து பூஜித்து வணங்குகிறார்கள்.
Mannarasala sree Nagaraja Temple
Mannarasala Dewaswom
Mannarasala P.O, Haripad
Tel +91 479 2413214,2141626
Email: info@mannarasala.org