கருப்ப ஸ்வாமி – காவல் தெய்வம் 
சாந்திப்பிரியா

சிறு முன்னுரை:

இவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்டு காலமாக சர்ச்சைகள் பல உண்டு. அதற்குக் காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலவி வந்த பிராமணர்கள் மற்றும் பிராமணர்கள் அல்லாதோர் அதாவது ஆரியர்கள்- திராவிடர்களின் இடையே இருந்த வழிபாட்டு முறைகள்தான். கடவுள் வழிபாடு என்றாலே பிராமணர்கள் ஆதிக்கத்தில் இருந்தவை என்ற காலத்தில் பிராமணர்கள் அல்லாதோர் தமக்கென சில வழிபட்டுத் தலங்களை அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. பிராமணர்களின் கடவுள் மற்றும் பிராமணர்கள் அல்லாதோரின் கடவுட்கள் என்ற ஜாதிப் பிரிவினைகளும் தோற்றுவிக்கப்பட்டே இருந்தன. அப்போதெல்லாம் கிராமங்களில் இருந்த ஏழை எளிய மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகி இருந்தார்கள். கிராமப் புறங்களில் இருந்த இடங்களில் இயற்கை தோற்றுவித்த சீற்றங்கள், நோய் நொடிகள் மற்றும் வேறு பல தீய ஆவிகளின் ஏவல்களையும் ஒடுக்க அவர்களுக்குத் ஒரு துணை தேவையாக இருந்தது. அந்த நேரங்களில் அவ்வப்போது அவர்களைக் காத்து நின்ற பராக்கிரமசாலிகளை அவர்கள் தம்மைக் காத்தவர் என வழிபாட்டு அவர்களை தெய்வமாகவே வழிபடத் துவங்கினார்கள். அப்படி பிறந்தவையே அவரவர் ஊர்களைக் காத்து வருபவர்களாக நம்பப்படும் கிராம தேவதைகள்.
பொதுவாகவே அந்த காலத்தில் நிலவி வந்த சூழ்நிலையை இங்கு ஓரளவு படம் பிடித்துக் காட்டி உள்ளேன்.
ஆனால் தற்காலத்தில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் இடையே இருந்த வழிபாட்டு முறை வேற்றுமை அகன்று ஒரு காலத்தில் கிராமிய தேவதைகளாக மட்டுமே கருதப்பட்ட, பிராமணர் அல்லாதவர்கள் வணங்கி வந்த தெய்வங்கள் எனக் கூறப்பட்டு வந்த பல தெய்வங்களை இன்று எந்த ஜாதி பேதமும் இன்றி அனைவருமே, ஏன் பிராமணர்கள் கூட வணங்குகிறார்கள் என்பதே காலத்தினால் ஏற்பட்டுள்ள மாற்றம், தெய்வ பக்தி அதிகரித்து உள்ளத்தின் அடையாளம். இப்படியாக வணங்கப்படும் பண்டை காலத்தில் கிராம தேவதைகள் எனக் கூறப்பட்ட, ஆனால் இந்த காலத்தில் தெய்வமாக ஏற்கப்பட்டு உள்ளவர்கள்  பல அவதாரங்களில் உள்ள கருமாரி அம்மன்கள், மாரி அம்மன், ரேணுகா தேவி, நாக தேவதைகள், சங்கிலிக் கறுப்பர், சுடலை மாடன், பேச்சி அம்மன் போன்றவர்கள் .
இந்தியாவின் பல பாகங்களிலும் கிராம தேவதைகள் உண்டு. அந்தந்த ஊர் பழக்கப்படி அங்காங்கே கிராம தேவதைகளை உருவ வழிபாடு செய்கிறார்கள். வடநாட்டில்
பெரும்பாலும் ஹனுமானை அல்லது பைரவரை கிராம எல்லைகளில் வைத்து அதையே ஊர் காவல் கடவுளாகக் கருதுகிறார்கள். தென் இந்தியப் பகுதிகளில் அந்தந்த ஊர்களில் வீர மிக்கச் செயல்களை செய்தவர்களையும், ஆபத்து ஏற்பட்ட நேரங்களில் அந்த ஊருக்கு துணையாக இருந்த மக்கள் மரணம் அடைந்ததும் அந்த ஊரை அவர்களின் ஆவிகள் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு உருவச் சிலைகளை அமைத்து வழிபட்டார்கள். அது போல அகால மரணம் அடைந்தவர்களின் ஆவிகளும் தம் கிராமத்தைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கைகளில் அவர்களுக்கு ஒரு உருவம் கொடுத்து அந்த உருவங்களை ஊர் எல்லைகளில் அமைத்து அவர்களை வழிபட்டார்கள்.
ஆந்திரா, கர்நாடகாவின் சில இடங்களில் அப்படிப்பட்ட பெண்களை மாரி எனும் அம்மன்களாக பாவித்து ஊர் காக்கும் தேவதைகளாக, தம்முடைய ஊர்களில் நோய் நொடி இல்லாமல் பாதுகாக்கும் கிராம தேவதைகளாக போற்றி வழிபட்டார்கள். கிராம தேவதைகளின் வரலாற்றைப் பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் ஊர் மக்களின் துன்பங்களிலும், துயரங்களிலும் பங்கேற்றவர்கள், படை வீரர்கள், கிராம மக்களின் நலனைப் பாதுகாத்தபோது தமக்கே அநியாயம் செய்யப்பட்டு உயிர் நீத்தவர்கள் போன்றவர்களாகாவே இருப்பார்கள். ஆனால் பொதுவாகக் கூறப்படும் கிராம தேவதைகளில் இருந்து மாறுபட்ட கிராமிய தேவதையாக உள்ளவர்கள் கறுப்ப ஸ்வாமி, சுடலை மாடன் மற்றும் பலதரப்பட்ட அம்மன்கள் போன்றவர்களே. அவர்களை ஒருசாரர் தெய்வமாகவே கருதி ஆலய வழிபாட்டை செய்கிறார்கள். அவர்களுக்கு வெளி நாடுகளில்- சிங்கபூர், மலைசியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பெரும் பக்தர்கள் கூட்டமே உண்டு.
 
கருப்ப ஸ்வாமி
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கிராம தேவதையாகவும், அதே சமயத்தில் ஒரு கடவுளாகவும் பாவிக்கப்பட்டு வழிபடப்பட்ட சங்கிலிக் கறுப்பர் என்பவரை கறுப்ப ஸ்வாமி, கோட்டைக் கறுப்பு, மாடக் கறுப்பு, பதினெட்டாம்படியான், பெரியக் கருப்பம், காட்டுக் கருப்பன், முத்துக் கருப்பன் போன்ற பெயர்களிலும் அழைக்கின்றார்கள். அவரை கடவுளுடன் சேர்த்து கூறும் கிராமியக் கதை மதுரை அழகர் கோவிலில் உண்டு. அவருக்கு  அங்கு அவருக்கு தனி சன்னதி உள்ளது. அந்த சன்னதி வருடத்துக்கு ஒருமுறைதான் திறக்கப்படும். மதுரையில் உள்ள அழகர் ஆலயம் கள்ளர் என்ற இனத்தவருக்கு சொந்தமாக இருந்தது.  அப்படிப்பட்ட கள்ளர்கள் எனப்படுவோர் மதுரையை சுற்றி இருந்த சில கிராமங்களில் இருந்ததாகவும்  அவர்கள் ஒரு காலத்தில் பிராமணர்களாக இருந்தவர்கள் என்றும், பிழைப்புக்காக அவர்கள் அரசரின் படையினராக  வேலை செய்து வந்ததினால் அவர்களை கள்ளர்கள் என அழைத்தார்கள் என்றும் கிராமியக் கதையைக் கூறுகிறார்கள். அவர்களே பிற்காலத்தில் வைஷ்ணவர்களாக மாறினார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இதற்கான ஆதார பூர்வமான செய்திகள் இல்லை. வாய்மொழிக் கதை மற்றும் திருவிழாக்களில் சாமியாடிகள் கூறும் கதைகள்தான்.
கருப்ப ஸ்வாமி  பற்றிக் கூறப்படும் கதை இது .  ராமபிரான் இலங்கைக்குச் சென்று வெற்றி வாகை சூடிவிட்டு வந்தார். பரதனின் வேண்டுகோளை ஏற்று அயோத்தியாவுக்குச் சென்று விட்டு வந்தவர் பரதனிடம் ஆட்சியைத் தந்தப் பின் பதினான்கு வருடங்கள் வனவாசத்தில் மீதி இருந்த வருடங்களைக் கழிக்க வேண்டும் என்பதற்காக  சீதையுடன் மீண்டும் வனத்தில் சென்று வசிக்கலானார். அங்கு அவர் வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தார். ராமபிரான் வெளியில் செல்லும்போதெல்லாம் அந்த குடிலின் வாயிலில் அமர்ந்து கொண்டு இருந்த ஒரு முனிவரே அந்த குடிலுக்கு காவலாக இருந்து வந்தார். ராமர் அப்போது அங்கு வசித்த போதுதான் சீதைக்கு ஒரு குழந்தையும் பிறந்து இருந்தது.
ஒரு நாள் அந்த குடிலின் வாயிலில் இருந்த முனிவர் கண்களை மூடியபடி தவத்தில் இருந்தார். ராமர் காட்டிற்குள் கனிகளைப் பறிக்கச் சென்று இருந்தார். சீதையோ என்றும் இல்லாமல் அன்றைக்கு தனது குழந்தையையும் தூக்கிக் கொண்டு இன்னொரு பக்கம் சென்று பூஜைக்கு மலர்களை பறிக்கச் சென்று விட்டாள். திடீர் என கண் விழித்த முனிவர் உள்ளே உள்ள குழந்தையின்  சப்தமே இல்லையே  என உள்ளே சென்று பார்த்தார். குழந்தையைக் காணவில்லை. பகீர் என்றது. குழந்தையை ஏதாவது மிருகங்கள் தூக்கிக் கொண்டு போய்  விட்டதா எனக் குழம்பியவர், ராமர் அல்லது சீதை வந்து குழந்தையை தேடினால் என்ன செய்வது என பயந்து போய் மந்திரம் ஓதிய தர்பையை அந்தக் குழந்தை படுத்துக் கிடந்த பாயில் வைக்க அது குழந்தையாக உருவெடுத்தது.
அழகர் கோவிலில் கருப்ப ஸ்வாமி சன்னதியின் 
கதவுகளுக்கே பூஜைகள் செய்கிறார்கள்  
சற்று நேரம் பொறுத்து சீதை வந்தாள். உள்ளே இருந்த இன்னொரு குழந்தையைக் கண்டு வியந்தாள். முனிவரோ கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தார். அவரை எப்படிக் கேட்பது?  அதே நேரத்தில் ராமரும் வந்து விட்டார். வீட்டிலே வந்தவர் ஒரு குழந்தைக்கு பதிலாக இரண்டு குழந்தைகள் எப்படி வந்தது என யோசனை செய்ய, சீதையும் அந்தக் குழந்தைக் குறித்து தனக்கே தெரியாது எனக் கூற வந்த நேரத்தில் அவளைப் பேச விடாமல் ராமர் அந்த இரண்டு குழந்தைகளில் உண்மையானக் குழந்தை யார் எனக் கண்டு பிடிக்க நெருப்பை மூடினார். இரண்டு குழந்தைகளையும் அதைத் தாண்டிக் கொண்டு தன்னிடம் வருமாறு அழைக்க அவருடைய உண்மையானக் குழந்தை தீயைக் கடந்து வந்து விட, தர்பையினால் உருவான குழந்தை தீயில் விழுந்து எரிந்து விட்டது. ஆகவே ராமர் கருணைக் கொண்டு அதை தீயில் இருந்து வெளியில் எடுத்து உயிர் கொடுக்க அந்தக் குழந்தையே கறுப்ப ஸ்வாமி ஆயிற்று. இப்படியாக கருப்ப ஸ்வாமி ராமபிரானின் வளர்ப்புக் குழந்தையானாராம்.
ஆலயத்தில் கருப்ப ஸ்வாமியின் பாத அணிகள்

தீயில் இருந்து வெளி வந்ததினால் உடல் முழுவதும் கறுப்பாகி விட்டதினால் அந்தக் குழந்தை கருப்ப ஸ்வாமி என்ற பெயர் பெற்றது. அன்று முதல் அவர் ராமர் அங்கிருந்தவரை அவருடைய குடிலுக்கு காவல் காத்து வந்தார்.  ராமபிரானின் குடிலுக்குள் எதிரில் ஒரு குடிலை அமைத்து அவர் நாள் முழுவதும் அதற்குள் அமர்ந்து இருந்தபடி ஒரு படை வீரனைப் போல ராமபிரானின் குடிலைக் காத்து வந்தார். வருடத்துக்கு ஒருமுறைதான் வெளியில் தலைக் காட்டினார்.  இதனால்தான் அழகர் கோவிலில் உள்ள அவர் சன்னதியை  வருடத்துக்கு ஒரே ஒரு முறை மட்டுமே திறப்பதாக கூறுகிறார்கள்.  அவர் ஊரை விட்டு வெளியில் இருந்த வனத்தில் பிறந்ததினால் நகரங்களை விட்டு வெளியில் உள்ள கிராமங்களை வனங்களாக கருதி அவரை கிராம எல்லைகளில் உள்ள ஆலயத்தில் வைத்து வணங்கி உள்ளார்கள். ராமனுடன் சம்மந்தப்பட்டு இருந்ததினால் அவரை ஒரு தேவதையாக அங்கீகரித்தார்கள்.

வெள்ளை குதிரை மீது கருப்ப ஸ்வாமி  

படை வீரராக சித்தரிக்கப்பட்டு  இருந்ததினாலோ என்னவோ கருப்ப ஸ்வாமி தனது தலையில்  நீண்ட முண்டாசு கட்டியபடியும், கையில் பெரிய வாளைக் கொண்டும் காட்சி தருகிறார். அவர் முகத்தில் பெரிய முறுக்கு மீசையும் உள்ளது. அவருடைய வாகனம் வெள்ளைக் குதிரை. ஏன் என்றால் அவர் தேவ லோக அஸ்வாரூடை தேவியின் கணங்களில் ஒன்றானவர் என கருதப்படுவதினால் மற்ற குதிரைகளில் இருந்து மாறுபட்ட குதிரையை உபயோகப்படுத்துவதான ஐதீகம் உள்ளது. அஸ்வாரூடை மட்டுமே தனது சேனையில் வெள்ளைக் குதிரைகளை  வைத்து இருந்தவள். சிதா பிராட்டியும் பார்வதியின் அவதாரங்களில் ஒன்றான லஷ்மி தேவியின் அவதாரம் என்பதினால் கருப்ப ஸ்வாமியையும் தேவகணமாக கிராம மக்கள் கருதியதில் வியப்பு இல்லை.

நாமக்கல் மாவட்டம், சிங்களாந்தபுரத்தை அடுத்துள்ள

காட்டுக்கோவிலில் உள்ள கருப்பு ஸ்வாமியின்   சிலைகள். 

அவரை  இங்கு கருப்பன்ணர் என்கிறார்கள்
 

தமிழ் நாட்டு கிராமங்களில் சாதாரணமாக கருப்ப ஸ்வாமி ஆலயம் இல்லாத ஊரே கிடையாது. அங்கெல்லாம் அவரை ஊர் காவல் தெய்வமாக போற்றி வணங்குகிறார்கள். ஆனால் கருப்ப ஸ்வாமியை சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் உள்ளவர்கள் ஒரு தெய்வமாகவே வணங்கி வழிபடுகிறார்கள். அவரை ஐயப்ப சுவாமியின் ஆலயத்தின் காவலர் என்றும் கருதுவதினால் அவருக்கு பதினெட்டாம் படியான் என்ற பெயரும் உண்டு.
கருப்ப ஸ்வாமி உள்ள இடங்களில் பேய் பிசாசுகள் நுழையாதாம். பில்லி சூனியங்களை வைப்பவர்கள் அவர் உள்ள இடத்தின் அருகில் கூட செல்ல முடியாது. தீமைகளை அழித்து நீதியை நிலைநாட்டுபவர் என்பதினால் அவரை ஹனுமானுக்கு ஒப்பானவர் என்றும் கருதுகிறார்கள். அவரை ஹனுமாருடன் ஒப்பிடுவத்தின் காரணம் ஹனுமாரைப் போலவே அவரும் ராமபிரானுக்கு அடிமையாக இருந்தவர், ராமபிரானினால் படைக்கப்பட்டவர் என்பதினால்தான். கருப்ப ஸ்வாமிக்கு மந்திர உச்சாடனை செய்தும் அவரை பிரார்த்திக்கின்றார்கள்.