கிராம தேவதைகளும் 

நகர தெய்வங்களும் -3
(வழிபாட்டுத் தலங்கள்  தோன்றிய  வரலாறு  ) 

-சாந்திப்பிரியா-

ஒரு விஷயத்தை மனதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கிராம ஆலயங்களில் உள்ள தெய்வங்கள் மற்றும் கிராம தேவதைகள் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்றால் கிராம தேவதைகள் என்பவர்கள் இரண்டாம் நிலைக் தெய்வங்கள். அவர்கள் மூல தெய்வங்களின் அதாவது சிவன், விஷ்ணு, பார்வதி போன்றவர்களின் பூத கணங்கள் அல்லது அவர்களுடைய பரிவார தேவதைகள் எனக் கருதப்பட்டன. அதாவது கிராம தேவதைகளை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலைக் தெய்வங்கள் என்று கூடக் கூறலாம்.

முதலாம் கட்ட காலத்தில் வழிபடப்பட்ட கிராம தேவதைகள்- பாறைகள், விலங்குகள், சூலம், போன்ற உருவங்கள்தான். ஆனால் அவை பூதகணங்களில் அடக்கம் இல்லை. முதலாம் கட்ட கிராம தேவதைகள் ஒரு விதத்தில் ஆவி உலக வழிபாட்டுடன் சம்மந்தப்பட்டது. அந்த கால மக்கள் இனம் தெரியாத சக்திகளை ஆவிகள் என நம்பியதினால்தான் அப்படிப்பட்ட உருவ வழிபாட்டை கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை தமக்கு பாதுகாப்பு வேண்டும் என்று எண்ணினார்கள். அதனால்தான் கிராம தேவதைகள் தம்மையும் தமது சக்தியையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக கிராம மக்களை ஏதாவது ஒரு விதத்தில் பயமுறுத்தத் துவங்கினார்கள். கிராம மக்கள் சிலரின் கனவில் தோன்றி தான் இன்ன இடத்தில் புதைந்து உள்ளதாகவும், தன்னை வெளியில் எடுத்து வழிபட்டால் அந்த ஊரைக் காத்தபடி இருப்பேன் எனவும் கூறுவார்களாம். அதன்படி அந்த கிராம மக்கள் கனவில் வந்த அந்த தேவதைகளைக் கண்டறிந்து சிறு ஆலயம் எழுப்பி வழிபடுவார்கள். அந்த தேவதையும் அந்த ஊரைக் காத்தபடி ஊர் எல்லைகளில் அமர்ந்து இருப்பார்களாம். அதனால் கிராம மக்கள் உருவமற்ற அந்த கடவுட்களின் சின்னமாக கற்களையும், பாறைகளையும், சூலாங்களையும் ஏன் சில இடங்களில் பானைகளையும் குப்புற வைத்து அதையே கனவில் வந்த தேவதைகளாக எண்ணி அதற்கு மஞ்சள் குங்குமம் பூசி வழிபட்டு வந்துள்ளனர். இந்த நிலை சற்று மாறுபட்டபோது இரண்டாம் கட்ட கிராம தேவதைகள் – கருப்பசாமி, ஐயனார், முனீஸ்வரர், சுடலை மாடன் – போன்றவர்கள் தெய்வங்களின் உருவங்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் தெய்வங்களின் பூத கணங்களாக கருதப்பட்டு வணங்கப்பட்டு வந்துள்ளார்கள்.

இன்னொரு விஷயத்தையும் கூர்ந்து ஆராய்ந்தால் அந்த காலத்தில் கிராம மக்கள் தம்மை அறியாமலேயே தம்மைக் காக்கும் கடவுளாக தெய்வங்களின் பலவிதமான சின்னங்களை வணங்கி வந்துள்ளார்கள் என்பது புரியும். அதைக் கூட சில மாகான்கள் தெய்வங்களின் செயலே என்றே கூறுகிறார்கள். தெய்வங்கள் மனித உருவில் பூமிக்கு வந்திருந்தபோது, அந்த மனித உடம்பைத் துறந்து சென்றபோது அவர்களது உடல்கள்களும், அவர்களது பரிவார தேவதைகள் மற்றும் கணங்களின் உடல்களும் பூமியில் பல இடங்களிலும் புதைந்து இருந்தன எனவும், அவை தெய்வீக உடல்கள் என்பதினால் அவை அதே வடிவத்தில் அவை அனைத்துமே காலப்போக்கில் கற்களாக மாறி அதே உருவத்திலான சிலைகளாயின. இப்படியாக வெளிவந்ததே கடவுட்களின் பல உருவங்களும் என்பதும் சில மகான்களின் கூற்று ஆகும்.

எங்கெல்லாம் தெய்வங்கள் அவதரிக்க நினைத்தார்களோ அங்கெல்லாம் இருந்த மக்கள் கனவிலும் தோன்றி தம்மை வெளியில் எடுக்க வைத்து பல இடங்களிலும் தெய்வங்களும் அவர்களது பரிவார தேவதைகளும் அமர்ந்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ கிராமத்தில் இருந்த மக்கள் (அப்போதெல்லாம் நகரங்கள் இருந்ததில்லை என்பதை முன்னரே கூறி உள்ளேன்) தம்மை அறியாமலேயே தெய்வங்களின் சின்னங்களை மட்டுமே வணங்கி வந்துள்ளனர் என்பது வியப்புக்குரிய செய்தி ஆகும். மக்கள் வணங்கி வந்திருந்த முக்கியமான சின்னங்கள் எவற்றைக் குறிப்பவை என்பதைப் பார்த்தால் வியப்பே ஏற்படும் ? கிராம மக்கள் சிங்கங்கள், புலி , ஓநாய், பூனை, கழுதை, முதலை, போன்ற மிருகங்களின் சிலைகளையோ அல்லது கருடன், பருந்து போன்ற பறவைகளின் சிலைகளையோ வணங்கவில்லை . அவர்கள் வணங்கி வந்தவை குறிப்பிட்ட பொதுவான சில சின்னங்களே. அவை என்ன?

குத்துக் கல்- இது சிவபெருமானின் லிங்க நிலையைக் குறிப்பது.
பாம்புப் புற்று – அம்மன்களைக் குறிப்பது
வேல் மற்றும் சேவல் – முருகனைக் குறிப்பது.
யானை – இந்திரனின் வாகனம் என்பதினால் தேவலோகக் கடவுட்களைக் குறிக்கும் சின்னம்
நாகங்கள் – ராகு, கேது போன்ற கிரகங்கள் மற்றும் மாரி அம்மன்
குதிரை – அஸ்வாரூடை எனும் மகிஷாசுரமர்த்தினியின் படை தளபதியான அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளின் வாகனம்
சூலம் : மகிஷாசுரமர்த்தினி மற்றும் துர்கை
பயங்கர முகம் கொண்ட சின்னங்கள் : காளிதேவி
நாய் – பைரவர்
வரிசையான எட்டு அல்லது ஒன்பது பாறைகள் அல்லது கற்கள் : சப்த கன்னிகைகள் மற்றும் நவக்கிரகங்கள்
குப்புற வைக்கப்பட்ட வட்ட வடிவிலான பானைகள் : சந்திரன், சூரியன்

கிராம மக்கள் வணங்கிய கிராம தேவதைகள் யார்? அதையும் படியுங்கள். கிராம மக்கள் வணங்கும் கிராம தேவதையான கருப்பசாமி யார்? முதலில் கிராம தேவதையாக கருதப்பட்டு இருந்த கருப்பசாமி காலப் போக்கில் ராமர் காட்டில் இருந்தபோது சீதைக்கு காவல் இருந்த முனிவரால் தர்பை மூலம் படைக்கப்பட்ட குழந்தை என்றும், யார் தன்னுடைய உண்மையான குழந்தை என்பதைக் கண்டு பிடிக்க ராமர் நடத்திய தீ பரீட்சையில் தீயில் கருகி எரிந்து போன தர்பைக்கு ராமரே மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப, தீயில் எரிந்ததினால் கருப்பாக மாறிய அவர் கருப்பசாமி ஆனார் என்றக் கதைகளும் உள்ளது. அது முதல் கருப்பசாமி ராமரின் வளர்ப்புக் குழந்தையானார் என்பது கிராமியக் கதை. முதலில் அவர் கிராம மக்களினால் ஆராதிக்கப்பட்டதினால் கிராம தேவதையாக இருந்தார். காலம் மாறிய பின்னர் அவரையும் ஒரு கடவுளாக ஏற்றுக் கொண்டு உள்ளதினால்தான் தமிழ்நாட்டில் கருப்பசாமிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவருக்கு மதுரை அழகர் ஆலயத்தில் தனி மரியாதையுடன் கூடிய சன்னதியே உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் எனும் ஊரில் அவருக்கு கோவில் உள்ளது. அதில் அம்பாள் செல்லாண்டியம்மன் எனும் அன்னைக்கும் சன்னதி உள்ளது. மேலும் கருப்பசாமியை சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் ஆகம வழியிலான தெய்வமாகவே ஏற்றுக் கொண்டு நகரங்களில் ஆலயங்கள் அமைத்து வழிபடுகிறார்கள். அங்கெல்லாம் அவர் கிராம தேவதையாகக் கருதப்படுவது இல்லை. இன்னொரு கதையின்படி கருப்பசாமி கருப்பாக இருப்பதினால் சில காரணங்களினால் அவர் பிராமணர் அல்லாத யாதவர் குலத்தில் பிறந்து இருந்த கிருஷ்ணரின் அவதாரம் எனவும், மக்களை துன்பங்களில் இருந்து காப்பாற்ற பூமியில் கிருஷ்ணரே கருப்பசாமியின் உருவத்தில் அவதரித்து உள்ளார் என்கிறார்கள்.

ஐயனார் யார்? அவர் சிவன் மற்றும் மோகினி அவதாரத்தில் இருந்த விஷ்ணு என்ற இருவர் மூலமும் படைக்கப்பட்டவர் என்று தமிழ்நாட்டில் கடலூரை சேர்ந்த தென்னம்பாக்கம் கிராமத்து முத்தையனார் கோவில் கதை உள்ளது. அங்குள்ள ஆலயத்தில் உள்ள ஐயனாருக்கு காவல் வீரபத்திரர் ஆவார். ஐயனாரை அங்கு அழகன் முத்தையனார் என்ற பெயரில் அழைக்கிறார்கள். அதே ஐயனார் கடலூர் மாவட்டத்திலேயே உள்ள இடைச்செருவாய் எனும் சிறிய கிராமத்தில் மஞ்சபத்திரய்யனார் எனும் பெயரில் கிராம காவல் தெய்வமாக இருக்கிறார். அது போலவே பாண்டிச்சேரி மானிலத்தில் உள்ள புதுப்பெட்டில் உள்ள மஞ்சனீச்வரர் எனும் ஆலயத்தில் பூரணா, புஷ்களா எனும் இரண்டு அம்பாள் சகிதமாக ஐயனார் காட்சி தருகிறார். ஐயனாரே பின்னர் ஐயப்பனாக அவதரித்தார் என்பதும் இன்னொரு புராணக் கதை.

அடுத்த கிராம தெய்வம் வீரபத்திரர். அக்னி வீரபத்திரருக்கு மதுரை சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் என்ற கிராமத்தின் அருகில் உள்ள சூரக்குடி என்ற சிறு ஊரில் பிரபலமான ஆலயம் உள்ளது. அங்கு உள்ள ஒரு அரச மரத்தடியில்தான் வீரபத்திரர் வந்து தங்கி இருந்து தவம் இருந்து தோஷத்தைக் களைந்து கொண்டாராம். அது மட்டும் அல்ல அந்த நேரத்தில் அவர் அந்த கிராமத்தின் தேவதையாக இருந்து ஊரைக் காத்து வந்தாராம். அவரையும் யார் என்று தெரியாமல் வீரபத்திரர் என்ற பெயரில் கிராம தேவதையாக வழிபட்டு வந்தார்கள். ஆனால் அவர் சிவபெருமானால் படைக்கப்பட்டவர் என்பது பின்னர் தெரிந்தபோது அவருக்கும் ஆகம முறையிலான பூஜைகளை செய்யத் துவங்கினார்கள். கும்பகோணத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்திலும் அவருக்கு பெரிய ஆலயம் உள்ளது. அது முன்னர் கிராம தேவதை ஆலயமாக இருந்ததாம்.

மாரியம்மனை எடுத்துக் கொண்டால் அவர் பாம்புப் புற்றில் இருந்து வெளியானவர், மழையைப் பொழிய வைப்பவர், நோய்களை தீர்ப்பவர் என்று கருதி கிராம மக்கள் வணங்கினார்கள். காலப் போக்கில்தான் அவரும் பார்வதியின் அவதாரம் என ஏற்கப்பட்டு நகர ஆலயங்களில் அமர்த்தப்பட்டு ஆகம முறையிலான பூஜை புனஸ்காரங்கள் அவருக்கும் செய்யப்பட்டன. வேறு பல அம்மன் ஆலயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் சென்னை புரசைவாக்கம் அருகே குயப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ஆதி மொட்டையம்மன் கோவில் முன்னர் கிராம ஆலயமாக இருந்ததுதான். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள முண்டகண்ணி அம்மன், கோல விழி அம்மன், தம்பு செட்டி சாலையில் உள்ள காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூரில் உள்ள சிவன் ஆலயம், என அனைத்துமே முன்னர் கிராம ஆலயங்களாக இருந்தவைதான்.

முன்னர் ஒரு காலத்தில் வனப்பகுதிகளில் இருந்த சமயபுரம் மாரி அம்மன், புங்கைனல்லூர் மாரி அம்மன், ஏன் வனப்பகுதில் இருந்த திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம், கும்பகோணத்தில் சித்தாடி எனும் கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் என பல்வேறு ஆலயங்கள் அனைத்துமே ஒரு காலத்தில் கிராம ஆலயங்களாக இருந்தவைதான். இது போல பலப் பல ஆலயங்கள் முன்னர் கிராம ஆலயங்களாகவே இருந்துள்ளன. பிற்காலத்திலே அவை ஆகம வழிமுறை ஆலயங்களிலாயின. பொதுவாகவே வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு எங்கெல்லாம் ஆலயங்கள் எழுந்தனவோ அவை அனைத்துமே கிராம ஆலயங்களாக இருந்தவை.

பேச முடியாதவரை பேச வைக்க அருள் புரியும் என கிராம மக்கள் வணங்கித் துதிக்கும் பேச்சி அம்மன் யார் ? அவர் சரஸ்வதியின் அவதாரம். இசக்கி அம்மன் யார்? அவர் பார்வதியின் அவதாரம்.

கிராம தேவதை என கூறப்பட்ட முனீஸ்வரரை எடுத்துக் கொள்ளுங்கள். சிவபெருமானின் நெற்றியில் இருந்து வெளிப்படவராக கருதப்படும் அவர் சிவமுனி, மகா முனி, ஜடாமுனி, நாதமுனி, தரமுனி, வாழும் முனி மற்றும் தரமாமுனி என ஏழு அவதாரங்களை எடுத்தாராம். இலங்கையில் ஊறுகொடவத்தை என்ற ஊரில் கிராம ஆலயமாக இருந்த முனீஸ்வரர் வழிபட்டுத் தலம் இன்று மகா பத்ரகாளி ஆலயமாக மாறி உள்ளது. இப்படியாகத்தான் பல கிராம தேவதைகளும் தெய்வங்களுடன் இணைத்து பேசப்பட்டார்கள்.

ஒரு வருத்தமான உண்மை என்ன என்றால் முன்னர் ஒரு காலத்தில் கிராமங்களில் இருந்த ஆலயங்கள் பிராமணர்கள் அல்லாதோர் ஆலயம் என்றும், கிராமங்களுக்கு வெளியில் இருந்தவை பிராமணர்கள் ஆலயங்கள் எனவும் பார்க்கப்பட்டதினால் கிராம ஆலயங்கள் தெய்வீக ஆலயங்களாக கருதப்படவில்லை. அது மட்டும் அல்ல கிராம ஆலயங்களில் மிருக பலிகள் தரப்பட்டன, வேத முறையிலான மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்படவில்லை, மற்றும் அவற்றில் பூஜைகளை செய்ய பண்டிதர்களும் இருந்திருக்கவில்லை. இவை அனைத்துமே கிராம ஆலயங்கள் தெய்வீக ஆலயங்களாக ஏற்கப்படாமல் இருந்ததின் காரணம். ஆனால் காலப்போக்கில் அனைத்துமே மாறிவிட்டன. இன்று முன்னர் கிராம ஆலயங்களாக இருந்த பல ஆலயங்கள் ஆகம முறையிலான வழிபாட்டு முறைகளை ஏற்று பிரபலமாக ஆகிவிட்டன. ஆகம விதிப்படி தெய்வங்களின் சிலைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

காலம் மாறிக் கொண்டே இருக்க, ஆகம விதி ஆலயங்கள் தோன்றத் துவங்கிய காலத்தில் கிராம தேவதைகள் மற்றும் நகர தெய்வங்கள் என்ற பேதங்கள் மறையத் துவங்கி தெய்வங்கள் சில பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கப்பட்டன. தெய்வங்களை கிராம தெய்வங்கள், குல தெய்வங்கள், இன தெய்வங்கள் என பிரித்துக் கூறலானார்கள் ?

 ………தொடரும்