அத்தியாயம் – 5
துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தினால் விஷ்ணு பகவான் பத்து அவதாரங்களை எடுத்தார். பகீரதன் பெரும் பிரயாசை செய்து கங்கையை பூமிக்கு எடுத்து வந்தார். அந்த செயலை பகிரப் பிரயத்தினம் என்பார்கள். இந்த உலகில் தீமைகள் அதிகரித்தபோது அதே போன்ற பகீரதப் பிரயத்தினம் செய்து தீமைகளை தடுத்து நிறுத்தி தர்ம நெறியை நிலைநாட்ட மனித உருவில் அவதரிக்க முடிவு செய்த தத்தாத்திரேயர் தன்னிடம் வேண்டிக் கொண்ட ஒரு பிராமணப் பெண்மணிக்கு அவளுடைய மகனாகவே இந்த பூமியில் பிறந்தார். அந்தக் கதையை இப்போது கூறுகிறேன் கேள்” என்று கூறிய சித்த முனிவர் அந்தக் கதையைக் கூறத் துவங்கினார்.
” துவாபர யுகமும் முடிந்து கலியும் பிறந்தது. அங்காங்கே தர்மநெறி முறைகள் குறையத் துவங்கின என்றாலும் பரவலாக தர்ம நெறி முறைகளை அனுஷ்டித்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அப்படி வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள்தான் அப்பலராஜு என்ற தெலுங்கு பிராமணத் தம்பதியினர். சாஸ்திர நெறிமுறைகளை விட்டு விலகாமல், அனைத்து வேதங்களையும் கற்றறிந்து, தர்மநெறி முறையில் வாழ்ந்து வந்தவர்கள் அந்த தம்பதியினர். கணவனும் மனைவியும் நகமும் சதையும் போல அனைத்திலும் ஒற்றுமையுடன் இருந்தவாறு வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்களின் பெரும் வருத்தம் என்ன என்றால் அவர்களுக்கு பிறந்த பத்து மழலை செல்வங்களில் எட்டு இறந்து விட மிஞ்சியது இரண்டேதான். ஆனாலும் அவற்றிலும் ஒன்று குருடாகவும், இன்னொன்று முடமாகவும் பிறந்து இருந்தது. நாம் செய்த புண்ணியப் பலன் இதுதான் என்று தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு அப்போதும் தர்ம நெறி தவறாமல் வாழ்ந்து வந்தார்கள் அந்த தம்பதியினர்.
ஒவ்வொருவர் வீட்டிலும் இறந்தவர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பது வழக்கம் அல்லவா. அது போலவேதான் அப்பலராஜு வீட்டிலும் சிரார்த்த தினம் வந்தது. அன்று வேண்டும் என்றே தத்தாத்திரேயர் ஒரு பிராமணர் உருவில் சென்று பிராமணர்கள் போஜனம் முடியும் முன்னரே அந்த வீட்டில் யாசகம் கேட்டார். எந்த ஒருவர் வீட்டிலும் சிரார்த்த தினத்தன்று பிராமண போஜனம் முடியும்வரை பிட்ஷை போட மாட்டார்கள். அதுவும் சிரார்த்த காரியங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதோ கதவைக் கூட திறக்க மாட்டார்கள். யாராவது கால்கைகளை அலம்பிக் கொள்ளாமல் வீட்டுக்குள் வந்துவிட்டால் சிரார்த்த காரியத்துக்கு களங்கம் ஏற்பட்டு சாஸ்திர சம்பிரதாயங்களை மீறியதாகி விடும் என்பதினால் அந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்தது.
சிரார்த்த காரியங்கள் துவங்கி விட்ட நிலையில் வாசலில் வந்து நின்ற பிராமணரை அப்பலராஜுவின் மனைவியான சுமதி பார்த்து விட்டாள். அவளும் நல்ல தர்ம பத்தினி என்பதினால் அவள் மனதில் இனம் புரியாத ஒரு பயம் தோன்றியது. சிரார்த்தம் நடக்கும் வீடுகளில் எந்த ஒரு பிராமணரும் சென்று யாசகம் கேட்பதில்லை. ஆனால் இந்த பிராமணர் ஏன் சிரார்த்தம் நடந்து கொண்டு இருக்கும்போதே வாசலில் வந்து ‘பவதி பிட்ஷாம் தேகி’ என்று கேட்கிறார். இந்த சம்பவம் எதோ காரணமாகத்தான் நடக்கிறது. ஆனால் அதன் காரணம் அவளுக்கு விளங்கவில்லை. அது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கமோ மனதில் ஒரு சலனம். வாசலில் வந்து பிட்ஷை எடுக்கும் பிராமணருக்கு பத்து அரிசி தானியத்தைக் கூட -அட்சதைப் போல- போடாமல் அனுப்புவது பெரும் குற்றம். அதுவும் திவசம் நடக்கும் அன்று அப்படி வெறும் கையுடன் ஒரு பிராமணரை அனுப்பிவிட்டால், பிட்ஷை கிடைக்காத அவர் மனதில் வருத்தத்தோடு சென்றால் பித்ருக் காரியமும் நிறைவடையாதே என அனைத்தையும் சில ஷணங்களில் யோசனை செய்து விட்டு தனது கணவனை ஜாடையாகக் கேட்கலாம் என எண்ணிக் கொண்டு அவரை நோக்கினாள்.
ஆனால் அப்பலராஜு அவளை கவனிக்காமல் சிரார்த்த மந்திரங்களை ஓதியபடி அமர்ந்து கொண்டிருக்க வாயிலில் வந்திருந்த பிராமணரும் இரண்டாம் முறையாக ‘பவதி பிட்ஷாம் தேகி’ எனக் கூறி விட்டார். சாதாரணமாக மூன்று முறை அப்படிக் கூவிய பின் ஒன்றும் கிடைக்காவிடில் பிட்ஷை கேட்டு வருபவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள் என்பதினால் சுமதி சற்றும் தாமதிக்காமல் வெளியில் சென்று அவசரமாக பிட்சைப் போட்டு விட்டு வீட்டுக்குள் செல்ல முற்பட்டாள். அதையே எதிர்பார்த்துக் காத்திருந்த தத்தாத்திரேயர் சற்றும் தாமதிக்காமல் அவளுக்கு தன்னுடைய நிஜ ரூபத்துடன் தரிசனம் தர அவள் அங்கேயே அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள். ”அம்மா, உனக்கு என்ன வரம் வேண்டும்…கேள்…தருகிறேன்” என்று தத்தர் அவளைக் கனிவுடன் கேட்க அவளும் அவரிடம் கூறினாள் ”பரமாத்மா, கேட்டவர் அனைவருக்கும் அவர்கள் கேட்டதை எல்லாம் தயங்காமல் கொடுத்து அருள் புரிபவர் நீங்கள் . அப்படிப்பட்டவர் இங்கு வந்து என்னை அம்மா என்று அழைத்தீர்கள். ஆனால் அந்த சப்தத்தை ஒருநாள் கூட மரணம் அடைந்து விட்ட என் எட்டு குழந்தைகள் மூலம் கேட்க முடியாத அபலை நான். அது மட்டும் அல்ல, உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளும் குருடாகவும், முடமாகவும் இருக்கும்போது நான் கேட்க என்ன உள்ளது? ஆனாலும் இந்த ஜென்மத்தில் அம்மா என்று என்னை அழைக்க மழலைப் பேறு இல்லை என்றாலும், அடுத்த ஜென்மத்திலாவது உங்களைப் போன்ற நற் பண்புகள் கொண்ட, நீண்ட ஆயுளும், நோயற்றவனாகவும், பெரும் புகழ் பெற்று விளங்குபவனாகவும் இருக்கும் ஒரு மகவை நான் பெற்றிட அருள் புரிந்தால் அதுவே இந்த அபலைக்கு போதும்’ என்று கதறி அழுதாள். ஆனால் அவளுக்கு தன் முன் காட்சி தந்தது தத்தாத்திரேயர் என்பது அப்போது புரியவில்லை. மனம் அத்தனை வெறுமையாக இருந்தது.
அவளை தேற்றி சமாதானப்படுத்தினார் தத்தர். ‘அம்மா, கவலைப்படாதே. விரைவிலேயே நீ மீண்டும் கர்ப்பம் அடைந்து நல்லதொரு மகனைப் பெற்றெடுப்பாய். அது தத்தாத்திரேய அவதாரமாக இருக்கும் (தான் என்று கூறாமல் இப்படி மறைமுகமாகக் கூறினார்). ஆனால் ஒன்றை மனதில் நியாபகம் வைத்துக் கொள். பிறக்கும் மகன் வயதானதும் அவன் கூறும் எதையும் தட்டாதே, தடுக்காதே. அவன் கூறுவதை அப்படியே செய்யும் மனநிலையில் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். ஏன் எனில் உனக்குப் பிறக்க உள்ள மகனோ பெரிய மகானாகி பலருக்கும் தீட்ஷை தருபவனாக இருப்பான். தன்னிடம் வந்து சரண் அடைந்தவர்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் சக்தியையும் பெற்று இருப்பான். ஆகவே நீ மன நிம்மதியோடு சென்று பித்ரு காரியங்களை நடத்தி முடிக்க உன் கணவருக்கு துணை இரு’ என்று கூறிய பின் அப்படியே மறைந்து விட்டார். அதுவே துவாபர யுகம் முடிந்து கலியும் பிறந்த நேரம் ஆகும்.