அத்தியாயம் – 4
அதனால் அவளுடைய பதிவிரதா சக்தி எந்த அளவிற்கு பலம் வாய்ந்தது என சோதனை செய்து பார்க்குமாறு இல்லாததையும், பொல்லாததையும் கூறி திருமூர்த்திகளின் மனைவிகள் தமது கணவன்மார்களை தூண்டி விட திடீரென ஒரு நாள் மதியம் திருமூர்த்திகள் மூவரும் பிராமணர்கள் போலச் சென்று அனுசூயாவின் குடில் முன் நின்று கொண்டு ”அம்மா, தாயே, நாங்கள் பிராமணர்கள். எங்களுக்கு உணவு தர முடியுமா?” என்று கேட்டார்கள். அவளும் அவர்களை ஸ்நானம் செய்துவிட்டு வருமாறும், அதற்குள் தனது கணவரும் வந்து விடுவார் என்றும், அதற்குள் அவர்களுக்கான உணவையும் தயார் செய்து வைப்பதாகவும் கூறினாள்.
அவர்களும் குளித்து விட்டு வந்தப் பின் உணவருந்த அமர்ந்தார்கள். ஆனால் அத்ரி முனிவர் வந்தபாடில்லை. அவர்கள் தாம் விரைவில் திரும்பிச் செல்ல வேண்டும் எனக் கூறியதால், அத்ரி முனிவர் வராவிடிலும் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை உணவருந்தாமல் அனுப்பக் கூடாது என்று எண்ணிய அனுசூயாவும், வந்தவர்களுக்கு அர்க்கியம் தந்து, இலைப் போட்டு சாப்பிட உட்காருமாறு கூறினாள். வந்தவர்களோ அனுசூயா திடுக்கிடுவது போல ஒரு நிபந்தனையை வைத்தார்கள். அவர்கள் கூறினார்கள் ”அம்மணி, இதுவரை நாங்கள் எங்கு சென்று உணவு அருந்தினாலும் எங்களுக்கு உணவு பரிமாறுபவர்கள் தம் உடலில் ஒரு பொட்டுத் துணியும் இருக்காமல் அவர்கள் மனது களங்கம் இல்லாமல் நிர்வாண நிலையில் உள்ளது என்ற சத்தியத்தை வெளிப்படுத்தும் விதமாக நிர்வாணமான உடம்புடன் இருந்து, பறிமாறினால்தான் உணவு அருந்துவோம் என்ற விரதம் பூண்டு உள்ளோம். எவர் ஒருவர் பரிபூரணமான நிர்வாண நிலையில் மனதை வைத்திருப்பாரோ அவரே பரிபூரண பதிவிரதையாக இருக்க முடியும் என்பதால் நீயும் அப்படிப்பட்ட நிலையில் பறிமாறினால்தான் உணவை உண்போம்” என்றார்கள்.
அடுத்தகணமே வந்தவர்கள் யார் என்பதை தனது பதிவிரதா சக்தி மூலம் அனுசூயா உணர்ந்து கொண்டு விட்டாள். சமையல் அறையினுள் சென்று மானசீகமாக தன் கணவரை வணங்கினாள். வந்திருப்பது பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவன் என்றும் தன் கற்பை சோதனை செய்யவே அவர்கள் வந்து இருக்கிறார்கள் என்பதினால் மூவரும் என் குழந்தைகளாக மாற வேண்டும் என அவரை வேண்டினாள். அவ்வளவுதான் அடுத்தகணம் திருமூர்த்திகள் மூவரும் சிறு குழந்தைகளாக மாறி தரையில் உருளத் துவங்க அவர்களை எடுத்து தனது மடியில் வைத்துக் கொள்ள அவள் மார்பில் இருந்து வழிந்த பாலை அந்த மூவரும் குடித்தார்கள். அதன் பின் உறங்கி விட்டார்கள்.
தனது கடமைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த அத்ரி முனிவர் தனது ஞான திருஷ்டியினால் நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். அதே சமயம் திருமூர்த்திகளின் மனைவிகளும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அனுசூயாவும் நடந்ததை அவர்களுக்கு கூற அங்கு நடந்ததைக் கேள்விப்பட்டவர்கள் அவள் மகா பதிவிரதை என்பதை புரிந்து கொண்டு அவள் கால்களில் விழுந்து மன்றாடி தத்தம் கணவன்மார்களை மீண்டும் தம்மிடம் பழைய உருவிலேயே திருப்பித் தருமாறு கேட்டார்கள். அத்ரி முனிவரும் அனுசூயாவும் அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு திருமூர்த்திகளுக்கு பழைய உருவை திருப்பிக் கொடுக்க அவர்கள் முன் பிரசன்னமான திருமூர்த்திகள் மூவரும் ஒன்றிணைந்த உருவமாகி தத்தாத்திரேயர் எனும் அவதாரத்தை காட்டினார்கள் ”. (தத்தாத்திரேய அவதாரம் தோன்றக் காரணமாக இந்த நாடகம் திருமூர்த்திகளினால் நடத்தப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. ஏன் எனில் அந்த அவதாரத்தின் மூலமே மும்மூர்த்திகளின் சார்ப்பாக ஒரு குரு பரம்பரையை தோற்றுவிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. அவர் கலிகாலத்தில் பதினாறு அவதாரங்களை எடுத்து மனித குளத்தை ரட்ஷிக்க உள்ளார் என்கிறார்கள் )
இதைக் கூறிய சித்த முனிவர் நாமத்ஹரகாவிடம் மேலும் கூறினார் ”மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் பல மனித ரூபங்களை எடுத்து மனித உலகில் உலவ உள்ளார். அவர்களது மேம்பாட்டிற்காக தான் யார் என்பதை வெளிக் காட்டாமல் பல்வேறு ரூபங்களை எடுத்தும், எடுக்கவும் உள்ளார். அவரது மகிமைகள் ஏராளம் உண்டு. இப்போதும் அவர் உலகில் அவதாரம் எடுத்து வந்துள்ளார்”.
அதை எல்லாம் கேட்ட நமத்ஹரகா சித்த முனிவரிடம் ஆவலுடன் கேட்டார். ”கடவுளைப் போல என்முன் வந்து என்னுடைய அஞ்சாமைகளை விலக்கிக் கொண்டு இருக்கும் மகா முனிவப் பெருமானே, தத்தாத்திரேயர் மனித உலகில் ஒரு அவதாரம் எடுத்து வந்து உள்ளார் என்று கூறினீர்களே, அந்த அவதாரம் என்ன, அவர் இப்போது எங்கு இருக்கிறார் போன்ற விவரங்களை தயவு செய்து எனக்கு எடுத்துரைப்பீர்களா” எனப் பணிவுடன் கேட்க சித்த முனிவரும் அந்தக் கதையையும் கூறத் துவங்கினார் (இத்துடன் அத்தியாயம் – 4 முடிந்தது).