சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள். ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள். சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்? சிவனும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க உருவம் ஆகும். சிவன் இன்றி சக்தி இல்லை, அது போலவேதான் சக்தி இல்லாமல் சிவனும் இல்லை. ஆகவே பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான் எனும் பரப்பிரும்மன் என்பது சிவனும் சக்தியும் இணைந்துள்ள சிவசக்தி ரூபமே என்பதினால் சிவனை தனியான உருவிலே பூஜிக்காமல் சிவசக்தியான லிங்க உருவிலே பூஜிக்கிறார்கள். என்றுமே பார்வதி மற்றும் சிவனுக்கு தனி உருவம் கிடையாது. அவர் உடலில் பாதி பார்வதியாக உள்ளது.
சிவ லிங்கங்கள் நான்கு வகைப்படும். அவற்றில் முதலாவதானது ஆலயங்களில் வைத்து பூஜிக்கப்படும் ‘அசல லிங்கம்’ என்பதாகும். ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை ‘பரார்த்த லிங்கம்’ என்றும் கூறுவார்கள். அது சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள், சுயம்பு லிங்கம் என்பது தானாகத் தோன்றியது ஆகும். சிவபெருமானின் புதல்வர்களான வினாயகர் மற்றும் முருகப் பெருமான் போன்றவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டதை காணலிங்கம் என்பார்கள். தைவிக லிங்கம் என்பது விஷ்ணு பகவானும் பிற தேவர்களும் சேர்ந்து ஸ்தாபித்தவை ஆகும். ஆரிட லிங்கம் ரிஷி முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்டவை. அவற்றை சில ராக்ஷசர்களும் அசுரர்களும் கூட ஸ்தாபித்து இருக்கிறார்கள். மனிதர்கள் ஸ்தாபித்தவற்றை மானுட லிங்கம் என்பார்கள். ஆலய கோபுரங்களையே கூட தூல லிங்கம் என்றும் கூறுவார்கள்.
இரண்டாவது வகை சிவலிங்கமானது இதயத்தில் சிவலிங்கத்தின் ஒரு உருவை நினைத்து இஷ்ட லிங்கமாக பூஜிக்கப்படும் ‘சலன லிங்கம்’ என்பதாகும்.
மூன்றாவது வகையிலான சிவலிங்கங்கள் ஹோமங்களில் பூஜிக்கப்படும் ‘அசலசல லிங்கம்’ ஆகும்.
நான்காவது வகை ‘சலாசல லிங்கம்’ எனப்படும் காணலிங்கமும் நவரத்தினங்களிலான லிங்கங்களும் ஆகும்.
சிவ பூஜையை அனைவராலும் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அதற்குக் கட்டுப்பாடுகள் நிறையவே உள்ளன. பூஜைகளில் இரு வகைகள் உள்ளன. சாதாரணமாக வீடுகளில் செய்யப்படும் தினசரி பூஜை மற்றும் இரண்டாவது குருவிடம் இருந்து தீட்ஷை பெற்றுக் கொண்டு செய்யப்படும் பூஜைகள். தினசரி வீடுகளில் சிவபூஜையை ஆசாரத்தோடு செய்யலாம். ஆனால் ஞான மார்கத்துக்கு செல்ல விரும்புபவர்கள் செய்ய வேண்டிய சாஸ்திரோத்தமான சிவ பூஜையை முறைப்படி ஒரு பண்டிதரிடம் இருந்து கற்றறிந்து அவரை ஆசானாக ஏற்றுக் கொண்டு அதன் பின்னரே பூஜைகளை செய்யத் துவங்க வேண்டும். அதற்கு பல நியமங்கள் உண்டு.
சிவ பூஜை செய்யும்போது பூஜையில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து என ஒற்றைப் படையிலேயே சிவலிங்கங்களை வைத்து அவற்றுக்கு பூஜைகளை செய்ய வேண்டும். இரண்டு, நான்கு போன்ற இரட்டை இலக்கில் லிங்கங்களை வைத்து பூஜித்தால் அது வியாதிகளை தரும், மன வலிமையை தளர்த்தும் என்பார்கள்.
அடுத்தது ஆலயங்களுக்கு செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சிவ வழிபாட்டு முறை. சிவன் ஆலயங்களுக்கு சென்று சிவபெருமானை வழிபட ஏதும் விதி முறைகள் உள்ளனவா என்றால், உண்டு என்பதே சரியான பதில் ஆகும். வேதகமங்களில் கூறப்பட்டு உள்ள விதி முறைகளை அப்படியே கடைபிடிக்க முடியுமா, முடியாதா என்பது இரண்டாம் பட்ஷம். ஆனால் ஞான மார்கத்தை அடைய நினைப்பவர்கள் உறுதியோடு இருந்தவாறு வேதகமங்களில் கூறப்பட்டு உள்ள விதி முறைகளை கடைபிடிப்பார்கள். வாழ்க்கையில் மேன்மை அடைய நினைப்பவர்கள், அவற்றில் கூறப்பட்டு உள்ள சிலவற்றையாவது முடிந்தவரை கடை பிடிக்கலாம்.
ஆலயங்களில் சென்று நமஸ்கரிக்கும் வழக்கம் தொன்று தொட்டு வந்துள்ள பழக்கம் ஆகும். வேத காலத்திலிருந்தே நமஸ்கரிக்கும் வழக்கம் இருந்துள்ளது. நமஸ்காரம் செய்வதில் எப்படிச் செய்ய வேண்டும், எவ்வளவு தடவைகள் செய்ய வேண்டும் என்று நியதிகள் உள்ளன. நமஸ்காரத்தை சிவன் ஆலயத்தில் எந்த முறையில் செய்ய வேண்டும் என்றும் சிவ விதிகளில் கூறப்பட்டு உள்ளன.
சிவன் ஆலயங்களுக்கு செல்பவர்கள் தூரத்தில் இருந்தே தென்படும் தூல லிங்கம் எனப்படும் கோபுர உச்சியை கண்டதும் தமது இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி வைத்து இருகரம் கூப்பி வணங்கிட வேண்டும். சாலையில் சென்று கொண்டிருந்தாலும் சரி, முடிந்தவரையில் அதை செய்யலாம். வாகனத்தை தாமே ஓட்டிக் கொண்டு செல்பவர்கள் சாலையை விட்டு அகன்று ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி விட்டு அதை செய்ய வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம்.
அந்த காலங்களில் ஆலயத்துக்கு செல்பவர்கள் நடந்தே சென்று வந்தார்கள் என்பதினால் தூரத்தில் இருந்தே ஆலயத்தைப் பார்த்த உடன் தமது சிரஸ் மீது தமது இரு கைகளையும் வைத்துக் கொண்டு வணங்கினார்கள். ஆனால் தற்காலத்தில் வாகனங்களில் செல்பவர்களால் அப்படி செய்ய இயலவில்லை என்பதினால் அதை விட எளிதான வழியாக ஆலயத்தை சென்று அடைந்ததும் ஆலயத்துக்கு உள்ளே நுழையும் முன் ஆலய கோபுரத்தை பார்த்ததும் தலை மீது தமது இரு கைகளையும் வைத்துக் கொண்டு வணங்கலாம். தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது ‘மூன்றங்க நமஸ்காரம்’ எனப்படுகிறது. அதாவது கைகள், தலை மற்றும் மனதை ஒன்றிணைத்து செய்யப்படும் மூன்று அங்க நமஸ்காரம் ஆகும்.
அதன் பிறகு ஆலயத்துக்குள் சென்றதும் பலிபீடத்துக்கு பின்புறத்தில் இருந்து ஆண்டவனை நோக்கி நமஸ்கரிக்க வேண்டும். ஒரு வேளை சிவன் சன்னதி கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப்பட்டு இருந்தால் வடக்கை நோக்கி தலையை வைத்து வணங்கிட வேண்டும்.
அது போல தெற்கு மற்றும் வடக்கு நோக்கி அமைந்துள்ள சன்னதிகளில் கிழக்கு நோக்கி நமஸ்கரிக்க வேண்டும். கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கே தெரியாமல் ஒளிந்து கொண்டு இருக்கும் காமம், இச்சை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் போன்ற எட்டு தீய குணங்களையும் ஆலய சன்னதிக்குள் நுழையும் முன்னால் பலி தருவது போல அங்கேயே அழித்து விட்டு ‘உன்னிடம் வருகிறேன் இறைவா, எனக்கு நீயே அருள் புரிய வேண்டும்’ என வேண்டிக் கொள்ளும் இடம் ஆகும்.
சன்னதிக்குள் நுழையும் முன்னால் பலி பீடத்தின் அருகில் பூமியிலே வீழ்ந்து நமஸ்கரிப்பதின் மூலம் எந்த நலனையும் அடைய முடியாது. அங்கு நமஸ்கரித்து தனது அனைத்து தீய எண்ணங்களையும் அங்கேயே பலி கொடுத்தப் பின் மனதின் ஆணவத்தை பலியிட்டப் பின் மனதில் மிஞ்சி நிற்கும் எண்ணங்கள் மிஞ்சி நிற்கும் அந்த மேன்மையான நேரத்தில்தான் சன்னதிக்குள் சென்று ஆண்டவனை தரிசிக்க வேண்டும்.
கோயில் வளாகத்தில் அனைத்து இடங்களிலும் நமஸ்கரிப்பது சரியல்ல. கோயில் கர்ப்பக்கிரகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால், கொடி மரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். கர்ப்பக்கிரகம் தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ பார்த்தபடி இருந்தால், கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். கொடிமரத்திற்கும் தெய்வ சன்னதிக்கும் இடைபட்ட பகுதியில் நமஸ்கரிக்கக் கூடாது.
ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்வது சிறந்தது. தலை, இரண்டு கைகள், முகம் போன்றவை, ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புக்களும் தரையில் படும்படி வணங்குதல் ‘அஷ்டாங்க நமஸ்காரம்’ எனப்படும்.
அதைப் போலவே பெண்கள் ‘பஞ்சாங்க நமஸ்காரம்’ செய்ய வேண்டும். கை இரண்டும், தலையும் மற்றும் முகமும் பூமியில் தொட்டிருக்க முழங்கால் முட்டி இரண்டும் மட்டும் தரையில் படுமாறு இருந்தபடி முழங்கால் போட்டபடி நமஸ்கரிக்க வேண்டும். ஸாஷ்டாங்கமாக நமஸ்கரிக்காமல் உடம்பை குறுக்கிக் கொண்டு நமஸ்கரிப்பதின் மூலம் ஸ்த்ரீகள் வளைந்து கொடுக்கும் குணமுள்ளவர்களாக, அடக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அந்த வகையிலான நமஸ்காரம் ஒரு உருவகமாக அமைந்து இருக்கிறது. மேலும் தலை, கைகள் மற்றும் முழங்கால் ஆகிய அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு இருந்தவாறு நமஸ்கரிப்பது நல்வாழ்க்கையும், சுமங்கலிகளுக்கு நீடித்த மண வாழ்க்கையையும் தரும் என்பது ஐதீகம்.
அது போலவே வியாதிஸ்தர்களினால் கீழே விழுந்து வணங்க முடியாமல் இருக்கலாம். அப்படி என்றால் அவர்கள் ஆலயத்தில் எப்படி நமஸ்கரிக்க வேண்டும்? கீழே விழுந்து நமஸ்கரிக்க இயலாத நிலையில் உள்ளவர்கள் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி வைத்து கரம் குவித்து வணங்கிட வேண்டும். அதை ‘த்ரியங்க நமஸ்காரம்’ என்பார்கள். இந்த முறையிலான நமஸ்காரத்தை ஆண்கள், பெண்கள் என இருவருமே செய்யலாம். சிவபெருமானும் அதை மனப்பூர்வமாக ஏற்கிறார். சிவ கடாட்சம் முழுமையாக கிடைக்க இந்த மாதிரியான நமஸ்காரங்களை செய்யலாம் என்பதும் சிவ விதியில் கூறப்பட்டு உள்ளது.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவுதான் அவசர வேலையாக வெளியில் போக வேண்டும் என்றாலும் கூட சிவன் சன்னதியில் ஸ்வாமிக்கு அபிஷேகம் நடைபெறும் பொழுதும், நெய்வித்தியம் படைக்கப்படும் போதும் நமஸ்கரிக்கலாகாது.
அடுத்து சன்னதியை பிரதர்ஷனம் செய்யும் முறை. சாதாரணமாக சன்னதியை ஒருமுறை மட்டுமே பிரதர்ஷணம் செய்து விட்டு பலர் ஆலயத்தில் இருந்து வெளியேறிச் செல்வார்கள். ஆனால் அது சரியான முறை அல்ல. சன்னதியை மூற்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது முறை பிரதர்ஷணம் செய்ய வேண்டும். பிரதர்ஷணம் செய்ய எண்ணம் இல்லாவிடில் சன்னதியை நோக்கி நின்று வணங்கிய பிறகு அப்படியே திரும்பி வந்து விட வேண்டும்.
பிரதர்ஷணம் செய்து முடித்தப் பின் சண்டிகேஸ்வரர் சன்னதிக்குச் சென்று மூன்று முறை கைகளை தட்டியோ அல்லது கைவிரல்களினால் சொடுக்கி சப்தம் எழுப்பியப் பிறகுதான் திரும்ப வேண்டும். தற்காலத்தில் சிலர் சண்டிகேஸ்வரர் சன்னதியில் சென்று சப்தம் எழுப்பக்கூடாது என்ற வாதத்தைக் கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்தாகும். ஆலயங்களில் பைரவர் எப்படி விழித்திருந்து தாம் உள்ள சன்னதியை கண்கொட்டாமல் விழித்திருந்தபடி காத்து வருவாரோ, அது போலவேதான் சண்டிகேஸ்வரர் சிவபெருமான் சன்னதியை கண்கொட்டாமல் விழித்திருந்தபடி காத்து வருவது மட்டும் அல்லாமல் அங்கு வருபவர்களின் வரவை தன்னிடம் பதிவு செய்து வைத்துக் கொள்கிறார். அவரை தட்டி எழுப்பும் வகையில் எழுப்பப்படும் சப்தம் அவர் சன்னதியில் மணி ஓசையை எழுப்புவதற்கு சமமானது. மற்ற சன்னதிகளில் உள்ளதைப் போல அவரது சன்னதியில் ஆலய மணி தொங்க விடப்பட்டு இருப்பது இல்லை என்பதினால் மணி ஓசை எழுப்புவதைப் போல கைகளினால் சப்தம் போடுகிறார்கள்.
சிவபெருமானின் பூஜை மற்றும் விரதங்களில் மேன்மையானது பிரதோஷ பூஜை ஆகும். சிவபெருமானுக்கு எவர் ஒருவர் பூஜை செய்யவில்லையோ, பூஜை செய்ய முடியாத நிலையில் உள்ளாரோ அவர்கள் வேறு எந்த பூஜையயுமே செய்யத் தேவை இல்லை. பிரதோஷ தினத்தன்று சிவன் ஆலயத்துக்குப் போய் சிவபெருமானை நந்தியின் கொம்புகள் வழியே தரிசனம் செய்து வணங்கினால் போதும். சிவபெருமானுக்கு பூஜை செய்த பலன் அனைத்தும் கிடைத்து விடும். தோஷம் என்றால் குறை உள்ளது என்பதான அர்த்தம். பிரதோஷம் என்றால் குறை அற்றது என்பது பொருள் ஆகும். ஆகவேதான் குறை இல்லாத அந்த நேரத்தில் சிவபெருமானை வணங்கித் துதிப்பது சிறப்பான பலனைத் தரும். அதுவும் சனிக்கிழமைகளில் வரும் சனி பிரதோஷம் தனிப் பிரதோஷமாக கருதப்படுகிறது. அதன் காரணமும் பிரதோஷ பூஜை துவங்கியதின் காரணமும் இந்தக் கதை மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஒருமுறை தேவலோகத்தில் கைலாயத்தின் சபையில் அனைத்து கடவுட்களும், தேவர்களும் கூடி இருந்த போது அங்கு நடனமாடிய ஒரு தேவ கன்னிகையின் நடனத்தை மெச்சிய விஷ்ணுவானவர், வேண்டும் என்றே தனது மனைவி லஷ்மியைப் பார்த்து அந்த கன்னியின் நடனத்தை பெருமளவு புகழ்ந்து பேசி, அவளுக்கு லஷ்மி போட்டிருந்த மாலையை பரிசாகத் தருமாறு அவளுக்கு சைகை காட்டினார். அதைக் கவனித்து விட்ட பார்வதி தேவி லஷ்மியை முந்திக் கொண்டு உடனே தனது கழுத்தில் இருந்த மாலையை கயற்றி அந்த நடனமாடிய மங்கைக்கு பரிசாகத் தந்தாள். அப்படி விஷ்ணு பகவான் செய்ததற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் கன்னிகையும் அதை மெத்த மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு செல்லும்போது வழியில் துர்வாச முனிவரை சந்திக்க நேரிட்டது. அவள் கையில் இருந்த அற்புதமான மாலையின் அழகில் மயங்கி அதை தனக்கு பரிசாகத் தருமாறு கேட்டார். அவளும் தயங்காமல் அதை அவருக்கு தந்தப் பின் அந்த மாலை தனக்குக் கிடைத்தக் கதையையையும் மகிமையையும் கூறினாள்.
அப்போது இந்திரனக் காணச் சென்று கொண்டு இருந்த துர்வாச முனிவர் இந்திரனுக்கு என்ன பரிசை கொண்டு செல்லலாம் என எண்ணிக் கொண்டு செல்கையில் அந்த தேவ கன்னிகை மூலம் கிடைத்த மாலையைக் கண்டு மனம் மகிழ்ந்து அதை கொண்டு போய் தேவேந்திரனிடம் தந்தார். அந்த மாலையின் மகிமையைக் கூறும் முன்னரே இந்திரன் தனது பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஐராவதத்தின் தும்பிக்கை மீது அந்த மாலையை வைக்க, அந்த யானையும் அதை கீழே தள்ளி காலால் மிதித்து துவம்சப்படுத்தியது. அதைக் கண்ட துர்வாச முனிவர் பெரும் கோபம் அடைந்தார். தான் தந்த மாலை, அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருந்து கிடைத்த மாலையை இந்திரன் அவமானப்படுத்துவதா என்ற சினம் கொண்டார். இந்திரனுக்கு அவன் சக்திகளும் செல்வங்கள் அனைத்தும் அழியட்டும் என சாபமிட்டார். அதைக் கேட்ட இந்திரனும் தேவர்களும் வெலவெலத்துப் போய் துர்வாச முனிவரின் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கேட்டு அந்த சாபத்தை விலக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் எனக் கூறுமாறு அவரிடம் வேண்டினார்கள். துர்வாச முனிவரும் சினம் அடங்கியதும், அவர்கள் பாற்கடலைக் கடைந்து அதில் இருந்து வெளிவரும் அமிர்தத்தைப் பருகினால் மட்டுமே அந்த சாபம் விலகும் என தெளிவுபடுத்தினார்.
பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்து உண்ண வேண்டும் என்ற விதிக்கான ஒரு பின்னணிக் காரணம் உண்டு. அது துர்வாச முனிவருக்கும் தெரியாது. ஏன் எனில் அது பரமேஸ்வரரின் திருவிளையாடல் ஆகும். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற பல காலத்துக்கு முன்னால் நிகழ்ந்த ஒரு சம்பவமே அதற்க்குக் காரணம் ஆகும்.
ஒரு கட்டத்தில் அசுரர்கள் பலம் அதிகரித்து தேவர்களின் அழிவு துவங்கும். அந்த வேளையில் தேவலோகத்தின் பெருமையை வெளிப்படுத்தி, மும்மூர்த்திகளின் அவதாரகணங்களான தேவர்களுக்கு மரணமெய்யாத நிலையை ஏற்படுத்தித் தந்து அவர்களை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்பதற்காக பரப்பிரும்மன் பிரபஞ்சத்தை படைத்தபோதே தமது சக்தி கொண்ட சிறிய உருண்டையை பாதாளத்தின் அடியில் ஒளித்து வைத்திருந்து அதைப் பாதுகாக்க அதன் மீது கொடிய விஷத்திலான படுக்கையையும் அமைத்து இருந்தார். அதை ஸ்வாசித்தாலே போதும், மரணம் வந்து விடும் எனும் அளவுக்கு கொடிய விஷத்தன்மைக் கொண்டது அந்த நஞ்சு. பூமியின் அடிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு கீழே பாதாள லோகம் உள்ளது. பல யோசனை தூரம் விரிந்து படந்துள்ள அந்த பாதாள லோகத்தின் அதிபதியே வாசுகி எனும் நாகம் ஆகும். அங்கு லட்ஷக்கணக்கில் நாகங்கள் வசித்து வந்தன. அந்த பாதாளத்தில் யாராலுமே புக முடியாது. அதனால் நாகங்களால் அந்த அமிர்தமும் அவைகளுக்கு தெரியாமலேயே பாதாளத்தில் பாதுகாக்கப்பட்டு வந்திருந்தன. அப்படி ஒளித்து வைக்கப்பட்டு இருந்த அமிர்தத்தை வெளியில் எப்படி எடுப்பது ? அது பிற்காலத்தில் மும்மூர்த்திகள் மூலமே வெளிப்பட வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தி இருந்ததினால் அதற்கான வேளை வந்தபோது ஒன்றன் பின் ஒன்றாக மேலே கூறப்பட்ட நிகழ்வுகள் நடைபெறலாயின.
அதற்காக நடந்த அந்த நாடகத்தில் சிவபெருமானும் விஷ்ணுவும் அமிர்தத்தை எப்படி வெளியில் எடுக்கலாம் என்பதற்கான வழிமுறைகளை குறித்துப் பேசி ஒரு முடிவு எடுத்தார்கள். அமிர்தத்தை வெளியில் எடுக்க விஷ்ணு தக்க ஏற்பாட்டை செய்ய வேண்டும். ஆனால் அது வெளி வருவதற்கு முன்னால் அமிர்தத்தின் மீது ஒரு கேடயம் போல படர்ந்திருந்த விஷத்தை வெளியில் எடுக்க வேண்டும். அதை ஸ்வாசித்தாலே போதும், மரணம் வந்து விடும் எனும் அளவுக்கு கொடிய விஷத்தன்மைக் கொண்டிருந்த அந்த நஞ்சு உலகெங்கும் பரவினால் அனைவருமே மரணம் அடைந்து விடுவார்களே என்ற அந்தக் கவலையை தன்னிடம் விட்டு விடுமாறு சிவபெருமான் விஷ்ணுவிற்கு தைரியம் அளித்தார். அந்த விஷத்தன்மையை தடுப்பது தன் பொறுப்பு என்று பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர்தான் பரமாத்மனின் அவதாரமாயிற்றே !
அத்தனைப் பெரிய பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளியில் எடுப்பது தேவர்களால் மட்டுமே முடியாத காரியம் என்பதினால், அமிர்தத்தின் தன்மையைக் கூறி பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளியில் எடுக்க அசுரர்களில் உதவியையும் பெறுவதற்கு கிருஷ்ணர் உருவில் இருந்த விஷ்ணு யோசனைக் கூறி அசுரர்களிடம் நயவஞ்சகமாகப் பேசி அதையும் நிறைவேற்றித் தந்தார். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தை கயிறாக்கி, மத்து சுழலும் மேடையாக விஷ்ணுவே கூர்மாவதாரம் எடுத்து கடலுக்குள் அமர்ந்து கொள்ள பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளியில் எடுக்கும் பணி துவங்கியதும் அந்தக் கொடிய விஷம் முதலில் வெளியில் வர அதை சிவபெருமான் தன கையில் ஏந்தி உண்டு தனது தொண்டையில் அடக்கிக் கொள்ள, மீண்டும் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு அசுரர்களை ஏமாற்றி அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மீட்டுக் கொடுத்து அவர்களுக்கு மரணமெய்யாத நிலையை ஏற்படுத்தித் தந்தார்.
தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்க அதை உண்டவர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள். சிவபெருமானையே மறந்து விட்டார்கள். மறுநாள், பதிமூன்றாம் நாள் திரியோதசியாகும். அன்றுதான் அனைவரையும் காப்பாற்ற சிவபெருமான் விஷத்தை உண்ட நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவில் வர ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டார்கள்.
விஷத்தை தனது தொண்டையில் அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்த சிவபெருமானும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அனைவரையும் மன்னித்தப் பின் அனைவரையும் ரட்சிக்கும் விதமாக தனது வாகனமான நந்தியின் மீது ஏறிக் கொண்டு அதன் இரு கொம்புகளுக்கும் இடையே நின்றபடி அற்புதமான நடனம் ஆடினார். அப்போது அதைக் கண்டு களித்த அனைவருக்கும் பேரானந்த மன அமைதியும், ஆனந்தமும் கிடைத்தது. அது மட்டும் அல்லாமல் சிவபெருமானின் பரிபூரண ஆசியும் கிடைத்தது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நேரம் சுக்கிலபக்ஷம் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டு பக்ஷத்தும் இடையே வருகின்ற திரயோதசித் திதியாகும். அது நடைபெற்ற நேரமோ சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் அதன் பின்னர் வந்த மூன்றே முக்கால் நாழிகையாகும். அதனால்தான் முன்னரே கூறியது போல தோஷமற்ற பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கித் துதிப்பது சிறப்பான பலனைத் தரும் என்கிறார்கள்.
எந்த ஸ்வாமி சன்னதியையும் மூன்று முறை பிரதட்சிணம் அதாவது வலம் வந்து துதிக்க வேண்டும் என்பதும் ஐதீகம். அது போலவே பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதியை சோம சூத்திரப் பிரதட்சணம் என்ற முறையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் பலனே மிகப் பெரியது. இதை சிலர் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்றும் கூறுவது உண்டு.