நாயன்மார் எனும் சிவனடியார்கள் மொத்தம் அறுபத்தி மூன்று பேர்கள் ஆவர். அவர்கள் வாழ்ந்திருந்தக் காலம்  கி.பி 400-1000 என்பதாகும். அந்த அறுபத்தி மூன்று நாயன்மார்களைக் குறித்த குறிப்புக்கள் பெரிய  புராணத்தில் காணப்படுகின்றது.  சிவனடியார்களான அந்த நாயன்மார்களுக்கு அனைத்து  சிவாலயங்களிலும் சிலைகள் உள்ளதைக் காணலாம். தமிழ்நாட்டின் சென்னையில்  உள்ள கபாலீஸ்வரர் ஆலயத்தில் அவர்களை கௌரவிக்கும் விதத்தில் அறுபத்தி மூவர் எனும் விழாவே ஒவ்வொரு வருடமும்  நடைபெறுகிறது என்பதில் இருந்தே அவர்களது  பெருமையைப் புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட நாயன்மார்களில் ஒருவரே பூசலார் என்பவர்.
பரம ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பூசலார் திருநின்றவூரில் பிறந்தவர், பெரும் சிவபக்தர். அவர் தினமும் வீட்டருகில் இருந்த சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத்தை தரிசனம் செய்து அதை பூஜித்தப் பின்னரே வீடு திரும்புவார். ஆனால் அந்த ஆலயமோ மேல்கூரை இல்லாத ஆலயம் ஆகும்.  மேல்கூரை இல்லாததினால் அந்த சிவலிங்கம்  மீது மழை காலத்தில் பெய்த மழை நீர் விழுந்து ஓட, வெயில் காலத்தில் வெயில் அதன் மீது விழுந்து அதை சுற்றி இருந்த பகுதியை தகிக்க வைத்தது.

 

அந்த நிலையைக் கண்ட பூசலார் மனம் வருந்தினார். வெயில் மற்றும் மழையில் இருந்து சிவலிங்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால்  அதன் மீது ஆலயம் அமைக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் அவரே ஏழை எனும்போது எங்கிருந்து பணம் இருக்கும்? தனது ஆசையை பலரிடமும் கூறியும் யாரும் ஆலயம் எழுப்ப தேவையான பணத்தைத் தர முன்வரவும் இல்லை. அத்தனைப் பணமும் அவர்களிடம் இல்லை.

ஆகவே மனம் சோர்ந்து போனவர் இனி தனது உள்ளத்திலேயே அந்த சிவலிங்கத்துக்கு ஆலயம் எழுப்பிட முடிவு செய்தார். ஒருநாள் சிவலிங்கம் முன்பாக நின்று கொண்டு  ‘சிவபெருமானே, என்னால் இந்த ஜென்மத்தில் உங்களுக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட முடியவில்லை, ஆனாலும் வேறு எந்தப் பிறவியிலாவது உனக்கு ஆலயம் அமைப்பேன். அதற்கான தேவைகளை நீதான் பூர்த்தி செய்து வைக்க வேண்டும்’ என்றுக் கூறினார். அன்று இரவு அவருக்கு கனவிலே தோன்றிய சிவபெருமான் கூறினார் ‘ பக்தா, நீ ஏன் கவலைப்படுகிறாய். இந்த ஜென்மத்திலேயே உன்னால் முடியாவிடிலும் உன்மூலம்  ஒரு ஆலயம் எனக்கு அமைக்கப்படும். ஆகவே நீ எனக்கு எப்படி ஒரு ஆலயத்தை அமைக்க வேண்டும் என்பதை மனதிலேயே கட்டி முடித்து விடு. அதற்குக் கும்பாபிஷேகமும் செய்து வை. நான் அதில் கலந்து கொண்டு உன்னை சிறப்பிப்பேன்’  என்று கூறிவிட்டு மறைந்தார்.

மறுநாள் காலை எழுந்த பூசலார் மனதை திடமாக்கிக் கொண்டார். சிவபெருமான் கனவில் கூறியபடி ஒரு ஆலயத்தை இதயத்திலேயே அமைக்க முடிவு செய்தார். அந்த ஆலயம் எப்படி அமைந்து இருக்க வேண்டும் என மனக்கண்ணில் அதன் வடிவத்தை அமைத்துக் கொண்டார். கருவறை, தியான மண்டபம் முதல், சுற்றுப் பகுதி, மதில்சுவர் என அனைத்தும் எப்படி அமைந்து இருக்க வேண்டும் என அத்தனை   நிலைகளையும் மனதிலேயே வடிவமைத்துக் கொண்டார். அதன் பின் தினமும் ஆலயத்துக்கு சென்று சிவலிங்கத்தை வழிபடும்போது கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பார். சிவலிங்கத்தை சுற்றி கொத்தனார்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவது போல மனத் திரையில் கனவு கண்டார்.

பூசலாருக்கு மனக்கண்ணில் உருவான ஆலயம்.
பின்புறம் உள்ள ஆலயப்  படத்தையும், கிராமிய 
சூழ்நிலையையும்  வரைந்துள்ளவர் 
—  திருமதி  Subhashini Harish  —
முதல் நாள் தியானத்தில் அந்த ஆலயத்துக்கு அடித்தளம் அமைப்பதில் இருந்து துவங்கி ஒவ்வொரு நாள் தியானத்தின்போதும் கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுவதைப் போல மனதில் ஆலயத்தை எழுப்பிக் கொண்டே இருந்தார். காலம் கடந்து கொண்டு இருந்தது. இப்படியாக  தினம் தினம் அந்த சிவலிங்கத்தை வணங்குகையில் தனது மனதிலேயே ஆலயத்தை கட்டிக் கொண்டு இருந்தார்.  ஆலயம் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்க அந்த ஆலயம் அமைக்க எத்தனை ஆண்டுகள் தேவையோ அத்தனை ஆண்டுகள் அந்த சிவலிங்கத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு ஆலயத்தை எழுப்பி வந்தார்.  முடிவாக ஆலயமும் கட்டப்பட்டு  முடிவுற்றது. இனி கும்பாபிஷேகம்  செய்ய வேண்டியதே மீதம் இருந்தது. அதற்கும் தேவையான தேதியைக் குறித்துக் கொண்டு கும்பாபிஷேக வைபவத்துக்கான ஏற்பாடுகளையும் இதயத்துக்குள்ளேயே  செய்யலானார்.

இந்த நிலையில் காஞ்சீபுரத்தை ஆண்டு வந்திருந்த பல்லவ மன்னனான காடவர்கோன் ராஜசிம்மன் என்பவர் காஞ்சீபுரத்தில் உண்மையிலேயே ஒரு சிவன் ஆலயத்தைக் கட்டிக் கொண்டிருந்தார். அந்த ஆலயமும் பூசலாரின் மனக்கண்ணில் கட்டி முடித்த அதே தினத்தில் முடிவுற்றது.

பூசலார்  எந்த தேதியில் கும்பாபிஷேகத்தை நடத்த நினைத்திருந்தாரோ அதை அறிந்திடாமல் பண்டிதர்கள் பிரசன்னம் பார்த்துக் கூறியது போல அதே தினத்தன்று மன்னன் ராஜசிம்மனும் இங்கே காஞ்சீபுரத்தில் கும்பாபிஷேக வைபவம் நடைப்பெற ஏற்பாடுகளை செய்யலானார். அந்த மன்னனுக்கோ அல்லது பூசலாருக்கோ ஒருவருக்கொருவர் காஞ்சீபுரத்திலும் திருநின்றவூரிலும் அவரவர் எழுப்பிக் கொண்டு இருந்த ஆலயத்தின் விவரமோ இல்லை கும்பாபிஷேக  ஏற்பாடுகளோ தெரியாது.

கும்பாபிஷேக வைபவத் தேதியை குறித்த நாளன்று மன்னன் பூஜைகளை விமர்ச்சையாக செய்துவிட்டு சிவபெருமானிடம் மனதார வேண்டினார் ‘சிவபெருமானே, நான் கட்டி முடித்துள்ள ஆலய கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடந்து முடிந்திடவும் நீங்களே எனக்கு ஆசி கூற வேண்டும். அன்று நீங்கள் ஆலயத்தில் எழுந்தருளி எங்களைக் காத்தருளி, எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதங்களை வழங்க வேண்டும்.’

அன்று இரவு உறங்கிக் கொண்டிருந்த மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் அவருக்குக் கூறினார் ‘ மன்னா,  நீ கும்பாபிஷேக வைபவத்தை நடத்த நினைத்துள்ள நாளில் என்னால் ஆலயத்துக்கு வந்து பூரணாஹூதியை  ஏற்க இயலாது. ஆகவே தேதியை மாற்றி அமைத்துக் கொள்.’.

மன்னன் கேட்டார்  ‘சிவபெருமானே, இப்படி நீங்களே கூறிவிட்டால் இந்த பக்தனால் என்ன செய்ய இயலும்?  தயவு செய்து  அதற்கான காரணத்தை இந்த பக்தனுக்கு கூறி அருள் புரிவீர்களா?’
சிவபெருமான் கூறினார் ‘மன்னா, அதே தேதியில் திருநின்றவூரில் என்னுடைய பக்தன் பூசலார் என்பவன் கட்டி உள்ள ஆலயத்தின் கும்பாபிஷேகத்துக்கு வருவதாக முதலிலேயே வாக்களித்து விட்டேன். அதனால் நீ கட்டி உள்ள ஆலயத்தின் கும்பாபிஷேகத்துக்கான தேதியை தள்ளி வைத்துக் கொள்’.

கனவு கலைந்து எழுந்த மன்னன் திடுக்கிட்டான். தனக்கே தெரியாமல் திருநின்றவூரில் ஒரு சிவன் ஆலயம் கட்டப்பட்டு உள்ளதா? திடுக்கிட்டு விழித்தெழுந்த மன்னன் தான் கட்டிய ஆலயத்தின் கும்பாபிஷேக தேதியை தள்ளி வைத்தப் பின்,  அமைதியாக நினைத்துப் பார்த்தான் ‘என்ன இது. தான் காஞ்சீபுரத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டிக் கொண்டு இருக்கையில் அங்கிருந்து அறுபது கல் (கிலோமீட்டர்) தொலைவில் தன் ஆளுமைக்கு உட்பட்ட நகரில் பூசலார் என்று யாரோ ஒருவர் சிவபெருமானுக்கு ஒரு ஆலயத்தை எழுப்பி உள்ளாரா?’.

நம்ப முடியாமல் போன மன்னன் உண்மையில் அங்கு ஆலயம் கட்டப்பட்டு உள்ளதா என்பதைக் காண எந்த நாளில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக சிவபெருமான் கூறினாரோ அந்த தினத்திலேயே தனது பரிவாரங்களை அழைத்துக் கொண்டு அதைக் காண  சிவபெருமான் கூறிய  அதே திருநின்றவூருக்கு விரைந்து சென்றார்.

ஆனால் அந்த ஊரோ சின்ன கிராமமாக இருந்ததைக் கண்டு வியந்தான். அனைத்து வீடுகளுமே குடுசையில் வேயப்பட்டு இருக்க, கண்களுக்கெட்டிய  தூரம்வரை எந்த ஆலயமும் கண்களில் தென்படாமலிருக்க, அங்கிருந்த மக்களிடம் ஆலயம் குறித்த விவரம் குறித்துக் கேட்க, அவர்களோ மன்னனிடம் என்னக் கூறுவது என்பது தெரியாமல் விழித்தார்கள். ஆலயம் இருந்தால்தானே அதைப் பற்றிக் கூற முடியும்.

ஆனாலும் அவர்களில் இருந்த வயதான ஒருவர் மன்னனிடம் வந்து கூறினார் ‘மன்னா, எங்களுக்குத் தெரிந்து இந்த ஊரில் யாருமே ஆலயம் கட்டவில்லை. நாங்களோ ஏழைகள். எங்களால் எப்படி ஒரு ஆலயத்தைக் கட்ட முடியும். ஆனால் அதோ வெகு தொலைவில் ஊர் மூலையில் தெரிகிறதே சின்ன  தோட்டம் போன்ற  இடம்.  அங்குதான் ஒரு  திறந்தவெளியில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அதைதான் இங்குள்ளவர்கள் ஆலயமாகக் கருதி அங்கு சென்று அதை வணங்கி வருகிறோம். அங்குள்ள ஒரு மரத்தடியில்தான் பூசலார் என்றொரு சன்யாசி அமர்ந்து கொண்டு அந்த சிவலிங்கத்தை வணங்கி வருகிறார். அவர்தான் எங்களிடம் பல முறை அங்கு ஆலயம் அமைக்க பண உதவி கேட்டார். நாங்களோ ஏழைகள். எங்கிருந்து ஆலயம் கட்ட பணம் தர முடியும் என்று கூறி விட்டதினால் அவர் ஊருக்குள் வருவதை துறந்து விட்டு சிறு குடிசையைக் கட்டிக் கொண்டு அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  ஆகவே அவரிடம் சென்று கேட்டுப் பாருங்கள்’ என்று கூற மன்னன் பூசலார் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி விரைந்தான்.

மன்னன் பூசலாரிடம் சென்றபோது அவர் கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தார். மன்னன் வந்த ஓசையைக் கேட்டவர் கண்விழிக்க மன்னனும் அவரிடம் சிவபெருமான் தனது கனவில் கூறியதையும், தான் வந்த விவரத்தையும்  கூறிவிட்டு, அந்தப் பகுதியில் அவர் கட்டி உள்ள ஆலயத்தை காண ஆவலுடன் வந்துள்ளதாகக் கூற,  பூசலார் சற்றும் தயங்காமல் தான் எந்த ஒரு ஆலயத்தையும்  எங்கும் கட்டவில்லை  என்றும், சிவபெருமான் அவர் கனவில் தோன்றிக் கூறியபடியே சிவபெருமானுக்கான ஆலயத்தை தனது இதயத்திலேயே கட்டி வந்துள்ளதாகவும் அன்றுதான் அந்த ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாகவும், தான் அதை உடனடியாக செய்யக் கிளம்பிக் கொண்டு உள்ளதாகவும், மன்னரும் அங்கு வந்து உள்ளதால் அவரும் அதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறும் மன்னனிடம் கேட்டுக் கொண்டப் பின் மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்.

இவர் என்ன பித்தரா அல்லது பைத்தியமா என்று அனைவரும் அரண்டு நின்று கொண்டிருந்தபோதே மன்னனுக்கும் அவர் பரிவாரங்களுக்கும் முன்னால் பெரிய காட்சி தோன்றியது.  அவர்கள் முன்னால் பெரிய சிவன் ஆலயம் காணப்பட, அதன் உள்ளே மேளதாளம் முழங்கிக் கொண்டிருக்க அந்த ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறுவதைப் போலவே தத்ரூபமாகக் காட்சி அமைந்து இருந்தது. நேரம் நகர்ந்தது.

அனைவரும் ஆனந்தமாக தம்மை மறந்து அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு பிரசாதத்தை வாங்கிக் கொள்ள,  அந்தக் காட்சி அப்படியே மறைந்தது. அனைவரும் திக்கிட்டுப் போய் நின்றிருக்க பூசலார் கண் விழித்தார். மன்னனும் அவர் பரிவாரங்களும் அப்படியே அவர் கால்களில் விழுந்து வணங்கினார்கள். ஆஹா, ஒரு சிவபக்தருக்கு சிவபெருமான் எப்படி அவர் ஆசையை நிறைவேற்றித் தந்துள்ளார் என்பதை எண்ணி வியந்தார்கள். மன்னனிடம் தான் கட்டிய ஆலய  கும்பாபிஷேக வைபவத்துக்கு வந்து விழாவை சிறப்பித்ததற்கு நன்றி கூறியப் பின் அடுத்தகணம் அங்கிருந்த சிவலிங்கத்தில் பூசலார் ஆத்மாவும் பறந்து போய் புகுந்துக் கொண்டு  அப்படியே மறைந்து போனார்.

மன்னனுக்குப் புரிந்தது. அங்கு இருந்த சிவலிங்கத்தின் மீது ஆலயம் எழுப்ப விரும்பிய பூசலார் அளவற்ற சிவபக்தி கொண்டவர். அவர் ஆசையை நிறைவேற்ற எண்ணிய சிவபெருமான் அவர் மனக்கண்ணில் அதை நடத்தி முடித்திருப்பதினால் எந்த மாதிரியான ஆலயக் காட்சியை கண்டாரோ அதே போன்ற சிவபெருமான் ஆலயத்தை அங்கு பூசலாருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே சிவபெருமானின் விருப்பமாக இருந்துள்ளது என்பதை அறிந்து கொண்டார்.

தன அரண்மனைக்குத் திரும்பிய மன்னன் உடனடியாக சிற்பிகளை வரவழைத்து, தமக்கு பூசலார் காட்டிய அதே மாதிரியான தோற்றம் கொண்ட ஆலயத்தின் வரைபடத்தை  தயாரிக்குமாறுக் கூறினார். அடுத்து  ஆலயம் அமைக்கத் தேவையான அனைத்து வேலைகளும் மளமளவென நடந்திட, ஆலயம் எழுப்பும் பணியும் விரைவாகத் துவங்கின. அடுத்த சில  நாட்களிலேயே பூசலார் கட்ட நினைத்த அதே தோற்றத்தில் ஒரு ஆலயமும் எழுந்தது.  மன்னனும் இரவு பகலாக ஆட்களை வைத்து அந்த ஆலயத்தை பூசலார் இருந்த இடத்திலேயே கட்டி முடித்தப் பின்னர்,  தான் காஞ்சீபுரத்தில் கட்டிய ஆலயத்துக்கும் சேர்த்து அடுத்தடுத்து கும்பாபிஷேகமும் செய்து முடித்தார்.

இப்படியாக பூசலார் அமர்ந்திருந்த இடத்தில் கட்டப்பட்ட ஆலயம் இதயலீஸ்வரர், அதாவது இதயத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்ற பெயருடனும், காஞ்சீபுரத்தில்  மன்னனால் முதலில் கட்டப்பட்டு இருந்த ஆலயத்தின் பெயர் ஏகாம்பனாதர் ஆலயமென்றும் ஆயிற்று. அந்த இருதயாலீஸ்வரர் கோயிலில் கருவறையில் சிவபெருமானின்  லிங்க வடிவத்துக்கு  அருகே பூசலாரும் காட்சி தருகிறார்.

இதய நோய் உள்ளவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து திங்கள் கிழமைகளில் வழிபட்டு வந்தால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தின் இன்னொரு விசேஷம் என்ன என்றால் மற்ற அனைத்து சிவாலயங்களிலும் காணப்படுவது போல கருவறையில் சிவலிங்கம் தனியாக இல்லாமல் சிவலிங்கத்தின் பக்கத்திலேயே பூசலாரின் சிலையும் ஸ்தாபனம் செய்யப்பட்டு உள்ளதுதான்.

ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வினாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான், நந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் நடராஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. சங்கு சக்கரம் தாங்கிய மகாவிஷ்ணுவும் மூல சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறார்.

இந்த ஆலயம் சென்னையிலிருந்து 33 கி.மீ. தொலைவில் அரக்கோணம்  ரயில் நிலையத்திலிருந்து 1-2 கிலோமீட்டர் தூரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருநின்றவூரில் அமைந்துள்ளது.

இதே ஆலயக் கதையைக் கொண்ட இன்னொரு ஆலயமும் திருநெல்வேலி மாவட்டத்தின் வீரகேளம்பத்தூரில் உள்ளது. அதையும் 1100 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம் என்கிறார்கள். அங்குள்ள சிவலிங்கத்தை மனஈஸ்வரர்  என்கிறார்கள். அந்த ஆலய விலாசம் : 

 மூலவர் : இருதலாயஈசுவார் (மன ஆலய ஈஸ்வரர்)
ஆலய மூல அம்மன்/தாயார் :மீனாட்சி
ஆலய தல விருட்சம் :வில்வம்
ஆலய தீர்த்தம் : சிற்றாறு
காலம் : 1063 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :வீரகேரளம்புதூர்
ஆலயம் உள்ள இடம் :வீரகேரளம்புதூர்
மாவட்டம் :திருநெல்வேலி
இருதலாயஈசுவார் எனும் மன ஈஸ்வரர் 
ஆலயப் படங்கள் மற்றும்  இருதலாயஈசுவார் 
ஆலயக் குறிப்பை தந்து உதவிய திரு பெ.இசக்கிராஜ்  
அவர்களுக்கு நன்றி