திருவண்ணாமலையில் புறநகர் பகுதியில் உள்ள பச்சையம்மன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். பல இடங்களில் உள்ள முக்கியமாக முருகனும் வள்ளி தேவியும் உள்ள ஆலயங்களிலும் பார்வதி தேவி பச்சையம்மனாக வழிபடப்படுகிறார். அது போலவேதான் இந்த ஆலயத்திலும் பார்வதி தேவியை பச்சையம்மனாக வழிபடுகிறார்கள். அவளது சிலை சுதை ஓவிய வடிவில் அமைந்துள்ளது. சுதை ஓவியம் என்பது சுண்ணாம்புக் கலவையை காரைப்பூச்சு போல சுவர் மீது பூசி அதன் மீது ஓவியம் வரைவதைக் குறிக்கும். சுதை சிற்பங்கள் எனப்படும் சுண்ணாம்புக் காரை பூச்சு மீது உருவாக்கப்பட்ட ஆலய சிற்பங்கள் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பழக்கத்தில் இருந்துள்ளது. அந்தக் கலவையைக் கொண்டு வண்ண ஓவியம் வரைவது எளிதல்ல. அவற்றின் நிறம் காலப்போக்கில் சற்று மங்கலாகுமே தவிர சிற்பங்கள் எளிதில் பழுதடைவது இல்லை.
இந்த ஆலயத்தைக் குறித்து இரண்டு கருத்துக்கள் உள்ளன. முன் காலத்தில் இது அந்த கிராமத்துக்கு காவலாக இருந்த கிராம தேவதை வழிபாட்டுத் தலமாக அமைந்து இருந்தது என்றும், இன்னொரு கருத்தின்படி இது கிராமத்தில் பார்வதி தேவிக்கு அங்கு தவத்தில் இருந்த முனிவர்களால் அமைக்கப்பட்ட ஆலயம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் தற்போது உள்ள ஆலய வளாகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட ஆலயம் அல்ல. அப்போது அது திறந்த வெளியில் இருந்திருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. தற்போது உள்ள ஆலய வளாகம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். எது எப்படியோ, இந்த ஆலயத்தின் வரலாறு சுவையானது.
வாழைப்பந்தலை வந்தடைந்தவள் தான் தவம் இருக்க உள்ள இடம் கைலாயத்தைப் போலவே குளுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு வாழை இலைகளினால் ஆன பந்தல் ஒன்றை அமைத்தாள். அதன் அடியில் அமர்ந்து கொண்டு தவம் இருக்க ஆரம்பித்தாள். தவத்தில் சிவபெருமானை ஆராதிக்க மணலால் செய்த ஒரு சிவலிங்கத்தை உருவாக்க நினைத்தவள் நதியோ அல்லது குளமோ உள்ளதா என நீர் நிலையைத் தேடினாள். எங்கும் நீர் கிடைக்கவில்லை. ஆகவே தனது மகன்களான வினாயகர் மற்றும் முருகனை அழைத்து எங்கிருந்தாவது நீர் கொண்டு வருமாறு அனுப்பினாள். நேரம் ஓடியது, ஆனால் அவர்கள் வந்தபாடில்லை. ஆகவே தவத்தை துவக்க வேண்டிய நேரம் கடந்து விடக் கூடாது என்பதற்காக பூமாதேவியிடம் தனக்குத் தேவையான நீரைத் தருமாறு அவளை தட்டி எழுப்ப தன்னிடம் இருந்த தந்தத்தினால் பூமியை தட்ட அவள் தட்டிய இடத்திலிருந்தே பெரிய நீரூற்று எழும்பியது. அதில் இருந்த நீரைக் கொண்டு மணலினால் ஆன சிவலிங்கத்தை அமைக்கத் துவங்கியபோது அவளுடைய மகன்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களும் தம்முடன் இரண்டு நதிகளின் தேவதைகளை அழைத்து வந்திருந்ததினால் அதைக் கண்டு மகிழ்ந்து போன பார்வதி அந்த இரண்டு தேவதைகளையும் தனக்கு பூமா தேவி தந்திருந்த நீர் நிலையுடன் கலந்து விடுமாறு கூற அவர்களும் தனது நதிகளுடன் அதில் சென்று மறைய அந்த இடத்தில் மூன்று நீர் நிலைகள் கலந்த நீர் நிலை உருவாயிற்று. அதையே மூன்று நதிகளின் சங்கமம் எனப்படும் முக்கூடல் என்ற நீர் நிலையாக கூறலானார்கள்.
அந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்தை அமைத்து தவமிருக்கத் துவங்கியதும் அவளது தவத்தைக் கலைக்க அங்கிருந்த ராக்ஷசன் ஒருவன் முயற்சி செய்தான். ஆகவே அதனால் துன்பமுற்ற பார்வதி தேவி சிவபெருமானிடம் அவன் தொல்லையைக் குறித்து முறையிட, சிவபெருமானும், தன்னுடன் விஷ்ணு பகவானையும் அழைத்து வந்து அந்த ராக்ஷசனை அழித்து அவளது தவம் இடையூறு இல்லாமல் தொடர அங்கேயே வாமுனி மற்றும் செம்முனி எனும் இரு முனிவர்களாக உருவெடுத்து அவளுக்கு காவலுக்கு நின்றார்கள். அதனால்தான் அந்த முனிவர்களுக்கும் அந்த ஆலயத்தில் சிலைகள் உள்ளன. அவர்களைத் தவிர பல முனிவர்களும், ரிஷிகளும் பார்வதியின் தவத்துக்கு காவலாக இருந்தவாறு அங்கேயே தவம் இருந்தார்களாம். அவர்களது சிலைகளும் ஆலயத்தில் காணப்படுகின்றன.
வாழைப் பந்தலில் பச்சை நிறத்து சூழ்நிலையில் அவள் தவம் இருந்தப் பின் திருவண்ணாமலைக்கு சென்று சிவனுடன் ஐக்கியமாகி சிவனின் ஒரு பாதியாகி, சிவசக்தியானாள். அதனால்தான் வாழைப் பந்தலில் தவமிருந்த பார்வதிக்கு அங்கேயே ஆலயம் அமைந்தது. பச்சை நிற சூழ்நிலையில் இருந்தவாறு தவமிருந்த பார்வதியை பச்சையம்மன் என்ற பெயரில் வணங்கலானார்கள். அங்கிருந்துதான் வேறு பல இடங்களுக்கும் பார்வதி தேவியானவள் பச்சையம்மனாக சென்றாள். பார்வதி தேவியானவள் பச்சையம்மன் என்ற முதல் அவதாரம் எடுத்தது இங்குதான் என்பது ஐதீகம். ஆகவேதான் எங்கெல்லாம் பச்சையம்மனாக பார்வதி தேவி வழிபடப்பட்டாலும், பச்சையம்மனின் மூல ஆலயம் திருவண்ணாமலையில் உள்ள பச்சையம்மனின் ஆலயமே ஆகும்.