5

மரங்களில்  வேப்ப மரம் ஆண் வர்கத்தை சார்ந்தது என்றாலும் வேப்ப மரமே பல பெண் தெய்வங்களுக்கு விசேஷமான மரமும் ஆகும்  என்பதினால் வேப்ப மரத்தை ஜாதி பேதம் இல்லாமல், ஆண்களும் பெண்களும் வணங்குகிறார்கள்.  அதனால்தான் ஆணான  பூரி ஜகன்னாதரும், பெண்ணான சுபத்ரையின் உருவமும் இந்த மரத்தில் வடிவமைக்கப்படுகிறது. அந்த வேப்ப மரமும் சில தனித் தன்மைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படி தேடப்படும் வேப்ப மரத்தின் தன்மைகள் என்ன ?
1) கருமையான நிறத்துடன் காட்சி தர வேண்டிய வேப்ப மரத்தில் அது வளர்ந்தது முதல் எந்த பறவையின் கூடும் கட்டப்பட்டு இருக்கக் கூடாது.
2) அந்த வேப்ப மரத்தின் பக்கத்தில் ஒரு புளிய மரம் இருக்க வேண்டும்
3) அந்த மரத்தின் அருகில் சுடுகாடு இருக்க வேண்டும்
4) அந்த மரத்தின் அடியில் பாம்புப் புற்று அல்லது பாம்புப் பொந்து இருக்க வேண்டும்.
5) அந்த அடிப்பகுதியில் உள்ள பொந்தில் கொடுமையான விஷ நாகம் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
6) மரத்தின் அடிப்பகுதி வளைந்திருக்காமல், வேர் பகுதியில் இருந்து பத்து அல்லது பன்னிரண்டு அடி உயர அளவு வரை, நேராக வளர்ந்து இருக்க வேண்டும்
7) அந்த மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, அதாவது பத்து அல்லது பன்னிரண்டு அடி உயர அளவிற்கு மேல் குறைந்தது நான்கு கிளைகள் அமைந்து மரம் படர்ந்து இருக்க வேண்டும்.
8) அந்த மரத்தின் அடிப்பகுதியிலோ அல்லது மேல் பகுதியிலோ ஏதாவது ஒரு இடத்தில் இயற்கையாகவே கண்கள், சங்கு, சக்கரம் மற்றும் தாமரை போன்ற சின்னங்கள் ஏதாவது காணப்பட வேண்டும்.

 

இத்தனை தன்மைகள் கொண்ட வேப்ப மரங்கள் பல இடங்களில் கிடைக்குமா என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.  இப்படிப்பட்ட தன்மைகளைக் கொண்ட மரங்கள் எங்கே உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. அப்படி என்றால் மிகவும் அபூர்வமாகவே காட்சி அளிக்கும் அந்த மரங்களை எப்படி கண்டு பிடித்து மரத்தை வெட்டி எடுத்து வந்து சிலைகளை செய்கிறார்கள்? புதிய சிலைகளை வடிவமைக்கத் தேவையான மரத்தைக் கண்டு பிடிக்கும் தேடல் எப்படித் துவங்கி முடிவுறுகிறது?  திருவிழா துவங்கியதும் முதலில்  பூரி மன்னரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு மரத்தைத் தேடும் பணிக்கென ஒரு குழு நியமிக்கப்படுகிறது.

இந்த பணியில் ஈடுபடுத்தப்படுபவர்கள் இந்த ஆலயத்தில் சேவை செய்பவர்களின் வம்சாவளியினராக உள்ளார்கள். பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் 36 பிரிவை சேர்ந்தவர்கள் சேவகர்களாக உள்ளார்கள். இந்த 36 பிரிவினரைத் தவிர வேறு எவருக்கும் அந்த ஆலயத்தில் சேவகம் செய்ய உரிமைக் கிடையாது.  இப்படியான 36 பிரிவினரை  ‘அனங்க பீமதேவ்’ என்ற மன்னனே தனது ஆட்சியில் சட்டப்படி நியமித்ததாக வரலாற்று செய்திகள் குறிப்பிட்டு உள்ளன. இந்த 36 பிரிவினர்களில் அந்தணர்கள்தான் ஆலய சன்னதியில் பூஜை செய்ய வேண்டும் என்ற நியதியை வைத்திருக்கவில்லை என்பதினால்  அந்த பூஜைகளையும் இந்த 36 பிரிவினர்களில் உள்ள ஒரு பிரிவினரே செய்கிறார்கள். புதிய சிலையை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு 59 நாட்களுக்கு முன்  சித்ரா சுக்ல தசமி தினத்தன்று தேடுதல் யாத்திரை துவங்குகிறது.

இதில் படிமகாபத்திரா எனும் பிரிவை சார்ந்த குடும்பத்தின் உறுப்பினர் முதன்மையானவராக இருக்கிறார்கள். மகாபத்ரா என்பவர்கள் பூரி ஜகன்னாதருக்கு சகோதரர்கள் என்பதாக கூறிக் கொள்வார்கள். தேடுதல் வேட்டையில் படிமகாபத்திராவைத்  தொடர்ந்து அவருக்கு உதவியாக அவருடன் செல்பவர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் :

  •   20  தைத்யாபதிகள்(இந்தப் பிரிவினர் பூரி  ஜகன்னாதரின் வம்சாவளிகள் எனப்படுகிறார்கள். அவர் பூமியிலே வாழ்ந்திருந்த காலத்தில் அவருக்கு உறவினர்களாக இருந்த வம்சத்தினரின் வழித் தோன்றல்கள்.  இவர்கள் பழைய சிலைகளை பூமியிலே புதைத்தப் பின் இந்து தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள இறந்தவருக்கு செய்யும் பத்து நாள் காரியங்களையும் செய்பவர்கள்).
  • 1  லேங்கா *
  • மகாரனாக்கள்*  (* இந்த இரண்டு பிரிவினரும், அதாவது லேங்கா மற்றும் மகரனாக்கள் ஆலயத் திருவிழாவில் ஊர்வலத்துக்கான தேர்களை வடிவமைக்கும் பிரிவை சேர்ந்த தச்சர்கள் ஆவர்.  இவர்களே ஆலய  மூர்த்திகளின் உருவத்தையும் மரத்தில் வடிவமைப்பவர்கள்).
  • 16  பிராமணாக்கள்
  • தௌலகர்னாக்கள்
  • 30  காவல் நிலைய அதிகாரிகள் மற்றும்
  • 2  துணை இன்ஸ்பெக்டர்கள்

இப்படியாக மரத்தை தேடுதல் யாத்திரையில் 50 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் ஒரு குழுவாகக் கிளம்புவதற்கு முன்னதாக ஒரிஸ்ஸாவில் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டிருக்கும் பூரி மன்னரின் அனுமதியைப் பெற வேண்டும். அதன் பின் அவர்கள் அங்கிருந்து 50 மைல் தொலைவில் உள்ள ககட்பூர் எனும் கிராமத்தில் உள்ள மங்களா தேவி ஆலயத்துக்கு செல்ல வேண்டும் என்பது விதி. மங்களா தேவி ஆலயத்துக்கு எதற்காக செல்ல வேண்டும்? அங்குதான் அவர்களுக்கு அந்த நான்கு தெய்வங்களுக்கான சிலையை வடிவமைக்கத் தேவையான வேப்ப மரம் உள்ள இடம் அவர்களது கனவில் அந்த தேவியினால் கூறப்படுமாம். அந்த மங்களா தேவியின் கதை என்ன?

 மங்களா தேவியின் கதை:

மங்களா தேவி என்பவள்  பார்வதி தேவி படைத்த துர்கையின் அம்சம். மஹிஷாசுரமர்தினியாக  பார்வதி அவதரித்தபோது அந்த  யுத்தத்தில், ஒரு கட்டத்தில் பல அபூர்வமான சக்திகளை பெற்றிருந்த  மஹிஷாசூரன் எனும் அந்த அசுரன் துர்கையின் வடிவான மஹிஷாசுரமர்தினியை சமுத்திரத்தில் தள்ளி மூச்சு விட முடியாமல் தண்ணீரில் அவளை அமுக்கி கொலை செய்ய முயன்றான்.  அப்போது நீரில் முழுகி  தவித்த துர்க்கை மேலே வந்து பெருமூச்சை விட்டபோது அந்த மூச்சில் இருந்து மங்களா தேவி  வெளி வந்தாள்.  அந்த இருவரும் சேர்ந்து மஹிஷாசுரனை அந்த யுத்தத்தில் துரத்தித் துரத்திக் கொன்றார்கள் என்ற ஒரு புராணக் கதை ஒரிசாவில் உண்டு.  அந்த சமுத்திரத்தின் கிளை நதியே ப்ராச்சி எனப்படும் நதியாகும். அந்த யுத்தத்திற்குப் பிறகு அந்த பூமியிலேயே தானும் ஒரு தெய்வமாக அவதரிக்க விரும்பிய மங்களா தேவி பல காலத்துக்கு அந்த  ப்ராச்சி நதியில்தான் மறைந்து இருந்தாள். அந்த நதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கென பல படகுகள் ஓடும்.

அப்போது ஒரு நாள் மாலை அந்த நதியில் ஒரு படகோட்டி படகை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டு இருந்தார். ஆனால் நடு நதியில் படகு சென்று கொண்டு இருந்தபோது திடீர் என அந்த படகு நகராமல் அப்படியே நடு நதியில் நின்று விட்டது. என்ன செய்தும் படகை நகர வைக்க முடியவில்லை. நதியில் குதித்து கரைக்கு நீந்திப்போய் யாரையாவது அழைத்து வரலாம் என எண்ணிக் கொண்டு நதியில் குதிக்க முயன்றாலும் அவனால் நகரவும் முடியவில்லை. இரவும் வந்து விட கடவுள் மீது பாரத்தைப் போட்டு விட்டு அப்படியே படகில் தூங்கி விட்டார். மறுநாள் விடியற்காலை அவன் கனவில் தோன்றிய மங்களா தேவி தான் அந்த நதியில் புதைந்து கிடப்பதாகவும், தன்னை வெளியில் எடுத்து அங்கு நதிக்கரையில் ஒரு ஆலயம் அமைப்பதாக உறுதி மொழி கொடுத்தால் தான் அந்த கிராமத்தைப் பாதுகாப்பதாகவும், மேலும் தான் வைஷ்ணவம் மற்றும் சைவத்தை இணைக்கும் பாலமாக இருப்பேன் எனவும், தன்னை வெளியில் எடுத்து ஆலயம் அமைப்பதாக சத்தியம் செய்தால் மட்டுமே அவன் படகு அங்கிருந்து செல்ல முடியும் என்று கூறி விட்டு மறைந்தாள். காலை விழித்தெழுந்த படகோட்டி சற்றும் தாமதிக்காமல் வானத்தைப் பார்த்து அந்த தேவி கூறியபடி சத்தியம் செய்தார்.  அடுத்து அவர் அப்படியே நதியில் குதிக்க அந்த நதியே இரண்டாக பிளவுபட்டு பாதை அமைத்துக் கொண்டதைப் போல அவன் நீருக்குள்ளே செல்ல பாதை அமைத்துக் கொடுத்தது. அதில் சென்று நதிக்குள் முழுகி இருந்த மங்களா தேவியில் சிலையை எடுத்து வெளியில் வந்தவுடன் நதி மீண்டும் பழையபடி ஆயிற்று.  படகும் நகர்ந்தது.

அவனும் ஊருக்குள் சென்று நடந்த விவரங்களை ஊராருக்கு எடுத்துச் சொல்லி அங்கு நதிக் கரையில் ஆலயமும் அமைத்தான். அந்த ஆலயம் பூரியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தது. ஆலயம் அமைந்த ஆலயத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஊரார் யோசனை செய்து கொண்டு நதிக்கரையில் நின்று கொண்டு இருந்தபோது, அவர்கள் முன்னிலையில் மிகப் பெரிய ஒரு காகம் பறந்து வந்தது. நதியின் மத்திய பகுதிவரை பறந்து சென்ற காகம் அப்படியே நீருக்குள்ளே ஒரு அம்பைப் போல சர்..ர்..ர் என நுழைந்து மறைந்தது.  அங்கிருந்த படகோட்டிக்கு ஒரே ஆச்சர்யம். தான் எந்த இடத்தில் இருந்து மங்களா தேவியின் சிலையை வெளியில் எடுத்தானோ அதே இடத்தில் நீரில் காகம் மூழ்கியதைக் கண்டு வியந்து அதை கிராமத்தினருக்கும் கூறினான். அனைவரும் அந்த செயலைக் கண்டு வியந்தார்கள். அங்கு பேசப்பட்டு வந்திருந்த உள்ளூர் பாஷையில் காக்கா என்றால் காகம் என்றும், அட்கா என்றால் மூழ்கியது என்றும் புரி என்றால் இடம் என்றும் அர்த்தம் இருந்ததினால் காகம் மூழ்கிய இடம் என்பதை குறிக்கும் வகையில் அந்த இடத்தின் பெயரை காகாட்காபுரி என்று அவர்கள் வைக்க நாளடைவில் அந்த இடம் காகட்பூர் என மருவியது.

(** மேலே காணப்படும் மூன்று படங்களும் தெய்வீக வேப்ப மரத்தில் காணப்படும் சின்னங்கள் ஆகும்)

…..தொடரும்