சாந்திப்பிரியா
கிருஷ்ணர் இந்து சமயத்தில் முக்கியமான ஒரு கடவுளாக கருதப்படுபவர். இவர் பத்து அவதாரங்களை அதாவது தசாவதாரம் எடுத்த விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். கிருஷ்ண அவதாரத்தை எடுக்க அவர் பூமியிலே வாசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக பிறக்க வேண்டி இருந்தது. கிருஷ்ணா என்ற சமஸ்கிருத சொல்லிற்கு கருமை அல்லது அடர்ந்த நிறம் என்ற அர்த்தம் தரும். அதனால்தான் கரும் நீல நிறத்தவரான கிருஷ்ணரை கருநீல தெய்வம் என்று கூறுவார்கள்.
கிருஷ்ணரின் காலம் குறித்து பல சர்ச்சைகள் உள்ளன என்றாலும் புராண நூல்கள் மற்றும் ஜோதிட கணிப்புக்களின் அடிப்படையில் கிருஷ்ணரின் பிறப்பில் இருந்து இறப்பின் காலம் கி.மு 3228 ஆம் முதல் கி.மு. 3102 வரையிலும் இருக்கலாம் என்பதாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுளாஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது. வேதங்கள் இயற்றப்பட்டது அதற்கும் முற்பட்ட காலத்தில், அதாவது கி.மு.5000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலம் என்பதினால் வேதங்களில் கிருஷ்ணரைப் பற்றிய குறிப்புக்கள் இல்லை, மாறாக கிருஷ்ணரின் முந்தைய அவதாரமான மகாவிஷ்ணுவைப் பற்றியே அவற்றில் கூறப்பட்டு உள்ளது. ஆகவேதான் வேதங்களில் கிருஷ்ணருக்கு புகழ் சேர்க்கும் பகவத் கீதைப் பற்றிய குறிப்புக்கள் இல்லை. கிருஷ்ணரின் காலமும் வேத காலத்துக்கு பின்னரே நிகழ்ந்துள்ளது என நினைக்கத் தோன்றுகிறது.
கிருஷ்ணரைப் பற்றிய தகவல்கள் நமக்கு மூன்று மூல நூல்களிலிருந்து கிடைக்கின்றன. அவை:-
(1) மகாபாரதம்
(2) ஹரி வம்சம்
(3) பல்வேறு புராணங்கள்.
புராணங்கள் என்பது பதினெட்டு வகைகளாகும். ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு சமயப் பிரிவிற்கு முக்கியத்துவம் தந்து பல பண்டிதர்களினால் பல்வேறு கால கட்டத்தில் எழுதப்பட்டு உள்ளன என்பதினால் அத்தனை புராணங்களையும் இயற்றியவர் ஒருவரே என்பதாக இருக்க முடியாது. ஒரே கருத்தைக் கொண்ட புராணமே பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பண்டிதர்களாலும் பல்வேறு வடிவங்களில் எழுதப்பட்டு உள்ளன. முன் காலங்களில் நமது இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் என அனைத்துமே வாய் மொழி மூலமே அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்பட்டன என்பதினால்தான் அவற்றில் காணப்படும் செய்திகள் வாய்மொழி செய்தியாக பரப்பப்பட்டபோது அவரவர் கற்பனைகள் சிலவற்றை சேர்த்தே அதை பரப்பி இருக்கிறார்கள் என்பது ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக ஏற்றுக் கொண்டுள்ள நம்பிக்கை ஆகும். அனைத்துப் புராணங்களிலும் கிருஷ்ணரைப் பற்றிய குறிப்பு இல்லை. ஒரு சிலவற்றில் மட்டும் அவரைக் குறித்த செய்திகள் உள்ளன. பிரம்ம புராணம், விஷ்ணு புராணம், வாயு புராணம், ஸ்ரீமத் பாகவதம், பிரம்ம வைவத்ர புராணம், ஸ்கந்த புராணம், வாமன புராணம், கூர்ம புராணம் போன்ற சிலவற்றில் கிருஷ்ணரைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்க இன்னும் சில புராணங்களில் அவரைக் குறித்த எந்த குறிப்புமே காணப்படவில்லை.
கிருஷ்ணரைக் குறித்த செய்திகள் அதிகம் தெரியத் துவங்கியது மகாபாரத காலத்தில்தான். கிருஷ்ணரைப் பற்றிய முக்கியமான குறிப்புக்கள் மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் பெருமளவில் காணப்படுகிறது. மகாபாரதத்தில் முதன் முதலாக திரௌபதி துரியோதனனின் சபையில் அவமானப்பட்டபோதுதான் கிருஷ்ணரைப் பற்றிய செய்தியே முதன் முதலாக வெளித் தெரியத் துவங்கியது எனலாம். இப்படியாக கிருஷ்ணர் முதலில் ஒரு முக்கியமான பாத்திரமாக அறிமுகம் ஆவது மகாபாரதத்தில்தான். அதற்குப் பின்னரே பகவத் கீதை மூலம் பிரபலம் அடைந்த கிருஷ்ணரின் போதனைகள் வெளிவரத் துவங்க அவருடைய பிறப்பும் இளமைக் கால லீலைகளும் பரவலாக வெளிவரத் துவங்கின.
ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணரின் கடந்த கால குழந்தைப் பருவத்தைப் பற்றி அதிகம் விவரிக்கப்பட்டு இருக்கையில் மகாபாரதத்தில் கிருஷ்ணரின் சக்தியையும், அவருடைய திருவிளையாடல்களையும் அதிகம் விவரித்துள்ளார்கள். அது போலவே ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஹரிவம்சம் எனும் நூலிலும் கிருஷ்ணருடைய இளமைக் கால வீர தீர செயல்களை விவரித்து, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட வந்த ஒரு கடவுளாக அவரைக் காட்டி உள்ளார்கள். மகாபாரதத்தில் கூறப்படாத செய்திகளை சொல்வதற்காகவே எழுதப்பட்ட புராணம்தான் ஹரிவம்சம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை இந்துக்கள் மத்தியில் தற்போது பரவலாக கிருஷ்ண வழிபாடு காணப்படுகிறது என்றாலும் இந்தியாவின் வடபகுதிகளில் சிலவற்றில்தான் முதன் முதலில் கிருஷ்ண வழிபாடு துவங்கி இருந்தது. அதன் காரணம் இந்தியாவின் வடபகுதிகளில் அதிகம் காணப்படும் யாதவ குலத்தில் கிருஷ்ணர் பிறந்தது ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். கிருஷ்ணர் வாழ்ந்திருந்த இடமும், அவருடைய வீர தீர செயல்கள் வெளித் தெரிந்த இடங்களும், அவர் கட்டிய அரண்மணை, த்வாரகை நதியில் மூழ்கி விட்ட அவர் வாழ்ந்திருந்த அரண்மணை போன்ற அனைத்துமே வட மானிலத்தின் பகுதிகளில்தான் இருந்துள்ளன என்பதினால் அவரை கன்னையா என்று அழைத்து வடநாட்டின் சில பகுதிகளில் அவரை பூஜித்துள்ளர்கள். முன் காலத்தில் யாதவ குலத்தவர் பசு மாடுகளை ஓட்டி ஜீவனம் செய்து வந்தவர்கள் என்பதினால் யாதவர்களை ஆயர் குலத்தினர் என்று அழைத்தார்கள். யாதவ குலத்தவர் இந்தியாவில் வடநாட்டில் உள்ள மதுராவில் ஜமுனா நதிக்கரையில் பெருமளவில் வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள். ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகைத் தருவதற்கு முன்னரே யாதவர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்றும், அவர்களே ஆரியர்களை எதிர்த்தவர்களில் முதன்மையானவர்கள் என்ற கருத்துக்களும் உள்ளது. ஏன் எனில் ஆரியர்கள் அந்தணர்கள் எனக் கருதப்பட்டவர்கள். அதனால்தான் ஆரியர்கள் எனப்பட்ட அந்தணர்கள் முதலில் யாதவ குலத்தை சார்ந்த கிருஷ்ணரை கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் பின்னர் ஆரியர்கள் இந்த நாட்டில் வந்து ஆதிக்கம் செலுத்தத் துவங்கியதும் தமக்கு ஸ்திரமான இடம் அமைய வேண்டும் என்பதற்காக கிருஷ்ணர் அவதரித்த யாதவ குலத்தவரையும் அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி கிருஷ்ணரின் மூத்த அவதாரமான விஷ்ணுவை இளம் நீல நிறத்தவராக ஏற்றுக் கொண்டு, கிருஷ்ணரை கரிய நீல நிறத்தவர் என்றும், அவர் ஆரியர்கள் அல்லாதோர், அதாவது திராவிடர்களின் கடவுள் என்ற ஒரு பிரமையையும் பரப்ப முயன்றுள்ளார்கள்.
கிருஷ்ணர் பூமியிலே மனித ரூபமாக வாழ்ந்திருந்த காலத்திலே வைதீக வழிபாட்டு முறை மற்றும், வைதீகம் அல்லாத வழிபாட்டு முறைகள் என இரு வகைகளிலான வழிபாட்டு முறைகள் அமைந்து இருந்தன. அதன் காரணம் வேதங்களின் தாக்கமேயாகும். வேத வழிமுறையிலான வழிபாடு தோன்றுவதற்கு முன்னால் மக்கள் இயற்கையை எளிதாக வழிபட்டு வந்திருந்தார்கள். இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், நெருப்பு போன்றவற்றினைக் கண்டு பயந்த ஆதி மனிதர்கள் அவற்றைக் கடவுள்களாக வழிபடத் தொடங்கினார்கள். சூரியன், சந்திரன், அக்னி, வருணன் என இயற்கையே முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது. இவை சிந்து நதிக்கரையில் நிகழ்ந்ததாகவும், இவர்களில் ஒரு பிரிவினரையே ஆரிய இனத்தவர் என்றும் நம்புகிறார்கள். வேத முறையிலான வழிபாடு சிக்கல் நிறைந்தது. அது அந்தணர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. வேத வழிபாட்டு முறை மந்திரங்களை உள்ளடக்கியது என்பதினால் ஆரியர்களைத் தவிர பிற சாமான்யர்களால் அவற்றைக் கடைபிடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட வழிபாட்டு முறையை ஒரு குறிப்பிட்ட இனத்தவரே கடைப் பிடித்து வந்துள்ளார்கள்.
இதை எதற்காக குறிப்பிடுகின்றேன் என்றால் கிருஷ்ணர் வாழ்ந்திருந்ததாக கூறப்படும் காலமான கி.மு 3228 ஆம் முதல் கி.மு. 3102 எனும் காலகட்டம் சிந்துவெளி நாகரீகம் தழைத்திருந்தக் காலம் ஆகும். சிந்துவெளிப் பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்தததாகக் கூறப்படுகின்றது. சிந்து வெளிப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி உறுதியாக அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், ஆய்வாளர்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற கருத்துக்களை முன் வைத்து சிந்து வெளி பண்பாட்டுக்கு உரியவர்கள் திராவிட இனத்தவர்களே என்றும் இல்லை ஆரியரே என இன்னொரு பகுதியினரும் கூறிக்கொண்டு இருந்தாலும், புதைப் பொருள் ஆராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்து அந்த காலகட்டத்தில் சமய தொடர்ப்பு இருந்திருக்கலாம் என்பதாக ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பலி பீடங்கள் போன்றவை இருந்துள்ளதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இந்து சமய கடவுளில் ஒருவரான சிவனின் உருவ அமைப்பு கொண்ட சிலைகள், ஓவியங்களின் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து அந்த காலத்து மக்கள் மும்மூர்த்திகளை அடையாளம் கண்டு கொண்டிருக்கலாம் என்பது தெரிகிறது. எனவேதான் விஷ்ணுவின் தசாவதாரத்தின் சில நிகழ்வுகளும் நடந்திருக்கலாம் என்பது நம்பக் கூடியதாக உள்ளது.
இந்த பின்னணியைக் கொண்டுதான் ஆரியர்கள் வருகை தருவதற்கு முன்னரே, இந்தியாவில் வட பகுதிகளில் கிருஷ்ணர் வாழ்ந்திருந்த காலத்திலேயே அந்தணர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்ற செய்திகளை நம்ப இடம் உள்ளது. இதை மகாபாரத யுத்த காலத்து செய்திகள் மூலம் அறிய முடியும். ஆகவே ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தப் பின்னரே அந்தணர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்ற கூற்று பொய்யானது. அந்த காலத்திலே வாழ்ந்திருந்த அந்தணர்கள் நடத்திய அனைத்து யாகங்கள் மற்றும் யக்யங்களில் சிவன், விஷ்ணு, பார்வதி, லஷ்மி, சந்திரன், சூரியன் போன்ற பிற தெய்வங்களின் ஆராதனைகளைப் போலவே தேவேந்திரன் எனப்பட்ட இந்திரனை வைதீக தெய்வம் எனக் கருதி யாகங்களில் இந்திர ஆராதனையை முக்கியமானதாக செய்து வந்திருந்தார்கள்.
வேத காலத்தில் வைதீகங்கள் ஏற்றுக் கொள்ளாத தெய்வங்களை அவைதீக தெய்வம் என்பார்கள். அந்த அவைதீக தெய்வங்கள் முதலில் மானிட ரூபத்தில் அவதரித்து இருந்த தெய்வங்கள் ஆகும். இதனால்தான் ராமர், ஹனுமார், பரசுராமர், பலராமன், கிருஷ்ணர், சீதை மற்றும் தத்தாத்திரேயர் போன்றவர்களை எவரும் முதலில் தெய்வமாக கருதவில்லை. அவர்களை அவதூதர்கள் மற்றும் இராமாயண, மகாபாரத நாயகர்களாகவே பார்த்தார்கள். பிற்காலத்தில் கூட அவைதீக தெய்வங்கள் பட்டியலில் ஒரு நிலைவரை பல அம்மன்கள் அதாவது காளியம்மன், கருமாரி அம்மன், ஐயனார், காளி போன்ற தெய்வங்கள் இருந்துள்ளன. அவர்களையும் பல காலம் பொறுத்தே வைதீக தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட நிலைமை ஆரியர்களின் வருகைக்குப் பின்னர் இன்னும் அதிகரித்தது. இதனால்தானோ என்னவோ மானிடராகப் பிறந்திருந்த தெய்வங்களின் பட்டியலில் முதலில் அவைதீக தெய்வம் எனக் கருதப்பட்டு வந்திருந்த கிருஷ்ண வழிபாடு அவர் அவதரித்த உடனேயே துவங்காமல், பல காலம் பொறுத்து துவங்கியது.
கிருஷ்ணர் வேத வழிபாட்டு முறைகளை ஊக்குவிக்கவில்லை என்பதினால்தான் அவரை வைதீக வழிபாட்டை மேற்கொண்டவர்கள் தெய்வமாக ஏற்றுக் கொள்ளாமல் சாமான்ய மாநிடராகவே கருதி உள்ளார்கள். இந்த பின்னணிக்குக் காரணம் வைதீக தெய்வம் எனக் கருதப்பட்ட இந்திரனை ஒரு கட்டத்தில் அவமானப்படுத்தி இந்திர வழிபாடு தேவை அற்றது என்ற கருத்தை கிருஷ்ணன் வெளிப்படுத்தினார். அதனால் இந்திரனுக்கும் கிருஷ்ணருக்கும் பகை ஏற்பட்டு விடுகிறது.
புராணத்தில் காணப்படும் அந்தக் கதையின்படி ஒரு முறை கோவர்த்தன மலையின் அடிவாரத்தில் பிருந்தாவனப் பகுதியில் இருந்த பராஜ் எனும் கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்கு நிலவிய பஞ்சத்தைப் போக்க மழையை பொழிய வைக்குமாறு இந்திரனை வேண்டிக் கொண்டு வருண ஜெபம் செய்யத் துவங்கினார்கள். அதில் வேத வேள்விகள் செய்யப்பட்டன. அந்த யாகத்தில் பங்கெடுத்தவர்களில் முக்கியமானவராக கிருஷ்ணரை வளர்த்த தந்தையும் இருந்தார். பஞ்சத்தினால் ஏற்கனவே துயறுற்று இருந்த மக்கள் ஏன் இன்னும் அதிக துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் தம்மிடம் உள்ள பொருட்களை யாகத்தில் அழிக்க வேண்டும் என்று கருதிய கிருஷ்ணர் அவர்கள் செய்த யாகத்தில் இந்திரனுக்கு தர இருந்த ஆஹூதியை தடுத்து நிறுத்தி அங்கிருந்த மக்களிடம் கூறினார் ‘மழையை பொழிய வைப்பது இந்திரன் அல்ல, மாறாக, நமக்கு இடம் தரும் கோவர்த்தன மலையே ஆகும். இந்த மலையில் இருந்தல்லவா நதிகளும், ஆறுகளும் ஓடி வருகின்றன. நாம் துயருற்று உள்ளபோது இங்கு ஓடி வந்து வந்து நமக்கு ஆறுதல் தராத இந்திரனை நாம் ஏன் வழிபட வேண்டும். பயன் கருதி செய்யும் பலி மற்றும் பூசைகள் நமக்கு தேவை இல்லை, அவரவர் செய்யும் செயல்களின் விளைவுகளைத்தான் அவரவர் அனுபவிக்கிறார்கள். நாமோ எந்தக் கவலையும் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருப்பவர்கள். நாம் வணங்க வேண்டிய தெய்வங்களோ மலைகளும் இயற்கையையும்தான். ஆகவே நமக்கெல்லாம் தங்கும் இடமும், நமது கால்நடைகளுக்கான உணவான புற்களைக் கொடுக்கும் மலைகளும், பால் கொடுக்கும் பசுக்கள் மட்டுமே நாம் ஆராதிக்க வேண்டியவை. இந்த உண்மைகளை உணராமல் யாகம் செய்து, இந்திரனுக்கு அர்க்கியம் தருவது பிராமணர்கள் மட்டுமே. ஆகவே அதைத் தவிர்த்து நமக்கு வாழ்வு தரும், இயற்கை தந்துள்ள பூமியையே முதலில் வழிபடுவோம்’ என்று கூறிய கிருஷ்ணர், யாகத்தில் இந்திரனுக்கு தர வேண்டிய அஹூதியை தடுத்து நிறுத்தி இந்திரனை அவமானப்படுத்தினார். இப்படியாக இந்திரனுக்கும் கிருஷ்ணருக்கும் பகை எழுந்தது .
கிருஷ்ணர் சிறு வயதில் இருந்தபோது நடந்த இந்த சம்பவத்தில் அவர் கூறிய பகவத் கீதைக்கு இணையான அதே தத்துவத்தை அவர் தெய்வ நிலையில் இருந்து கூறியதாக எவருக்கும் நினைத்திருக்கவில்லை . தம்மில் உள்ள எதோ ஒரு புத்திசாலி மனிதர் தமக்கு நியாய நிலையை எடுத்துக் காட்டுவதாகவே அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள். அதே நேரத்தில் இந்திரனோ அந்தணன் அல்லாத ஒரு யாதவ மானிடன் தன்னை அவமானப்படுத்தி தனக்கு கிடைக்க வேண்டிய யாக பாகத்தை தடுத்தி நிறுத்தி விட்டாரே என கோபம் அடைந்தார்.
கிருஷ்ணரின் அந்த போதனையினால் கவரப்பட்ட மக்கள் காலம் காலமாக பழக்கத்தில் இருந்த மரபு வழிபாட்டு முறைகளை ஏற்றுக் கொள்ளத் தயங்கி மாறுதலான எண்ணம் கொள்ளத் துவங்கினார்கள். அதனால் கோபமுற்ற இந்திரன் தன்னுடைய சக்தியை எடுத்துக் காட்டவும், தன்னை ஆராதிக்காதவர்களை தாம் கடுமையாக தண்டிப்பேன் என்பதை நிலை நாட்டவும் அந்தப் பகுதி முழுவதும் மூழ்கி விடும் அளவிற்கு திடீர் என கடும் மழையை பொழிவிக்க வைத்தார். காட்டாறு போல சீறிக்கொண்டு வந்த மழை ஊரையே அழித்து விடுமோ என்ற அச்சத்தை தரும் வகையில் தொடர்ந்து பெய்யத் துவங்க அதனால் அச்சமுற்ற மக்களை சாந்தப்படுத்தினார் கிருஷ்ணர். கோவர்த்தன மலையை அடியோடு பெயர்த்து எடுத்தார். அதை அந்த முழு பூமியின் மீது குடைப் போல தூக்கிப் பிடித்தார். பெய்த அனைத்து மழையும் வாய்க்காலில் வழிந்தோடிய வெள்ளம் போல அங்காங்கே இருந்த நதிகளிலும் கடலிலும் சென்று கலந்தன. பிருந்தாவனத்துக்கு எந்த குறையுமே ஏற்படவில்லை. பல காலம் தொடர்ந்து பொழிந்த மழை பெய்ய, அந்த மழை நிற்கும் வரை கிருஷ்ணர் கோவர்த்தன மலையை கீழே வைக்கவே இல்லை.
கோபத்தில் கொந்தளித்து போயிருந்த இந்திரன் இதையெல்லாம் பார்த்தான். கோபம் ஒருவனின் கண்களை மறைக்கும்போது அவனது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய மனமும் சிந்தனைகளை செய்யாது. அந்த இயல்பின்படி பெரும் மழையை பொழிவித்து அதன் மூலம் கோர தாண்டவம் ஆடிக் காட்டிய இந்திரன், எந்த ஒரு சலனமும் இன்றி மக்கள் பாதுகாப்பாக காக்கப்படுவதை கண்டான். இது சாமான்யமான ஒரு மனிதனால், அதுவும் ஒரு சிறு வயது பாலகனால் செய்யக்௬டிய செயலல்ல என்பதினால் இதை செய்துள்ள பாலகன் தெய்வீக அம்சமாகவே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தான். அந்த தெய்வீக அம்சத்தின் கோபத்திற்கு மேலும் ஆளாகாமல் இருக்க முடிவு செய்த இந்திரன் வேறு வழி இன்றி மழைப் பொழிவதை நிறுத்தினார். கிருஷ்ண அவதாரம் யார் என்பதை கண்டறிந்தார். மகாவிஷ்ணுவிடம் சென்று மன்னிப்புக் கேட்டு அவர் அவதாரமான கிருஷ்ணரை அரவணைத்துக் கொண்டார்.இந்த சம்பவத்தின் மூலமே முதன் முதலில் கிருஷ்ணர் ஒரு தெய்வீக அவதாரம் என்ற உண்மை வெளித் தெரியலாயிற்று என்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இந்திரனுடனான கிருஷ்ணரின் பகைக் குறித்து இலங்கையில் பேராதனைப் பல்கழகத்தை சேர்ந்த பேராசிரியரான தில்லைநாதன் என்பவர் கிருஷ்ண வழிபாடு என்பதில் புராணங்களில் காணப்படும் ஒரு முக்கியமான குறிப்பை எடுத்துக் காட்டி உள்ளார். அதில் அவர் எழுதி உள்ளார் ”கிருஷ்ண என்ற பெயர் முதலில் குறிப்பிடுவது இந்திரனைப் போற்றும் இருக்வேத வாக்கியமொன்றிலாகும். கிருஷ்ணனின் மனைவியரை இந்திரன் கொன்றோழித்ததாகவும், அதன் பின் 50,000 கிருஷ்ணர்களை இந்திரன் கொன்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அந்த கிருஷ்ணர்கள் இருக்வேதப்படி ராக்ஷசர்கள் ஆவர். ஆரியர்கள் இந்திரனை பிரியத்தோடு தம் தலைவராக கொண்டாடியமையும், தங்களது ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர்களை ராட்ஷசர் என்றும் அசுரர் என்றும் அவர்கள் கருதினார்கள்”.
இந்தக் கூற்று எந்த அளவில் உண்மையாக இருக்க முடியும்? இந்த யுகத்தில் இருந்தது ஒரே ஒரு கிருஷ்ணர் மட்டுமே. ஒருவேளை அவருக்குப் பிறந்த வாரிசுகள் கிருஷ்ணர்கள் எனக் கூறப்பட்டு இருந்தனவோ என்றால் அதுவும் இருக்க முடியாது. கிருஷ்ணருக்கு இருந்தது 16108 மனைவிகள் மட்டுமே. சிவபெருமானின் அருளினால் கிருஷ்ணருக்கு இருபதுக்கும் குறைவாக வாரிசுகள் பிறந்தன. அவர்கள் அனைவருமே எட்டு அஷ்டபார்யா என அழைக்கப்பட்ட எட்டு மனைவிகள் மூலமே பிறந்தன எனும்போது எப்படி இந்திரனால் 50,000 கிருஷ்ணர்களைக் கொன்று இருக்க முடியும்? சிவபெருமானின் அருளினால் கிருஷ்ணருக்கு பிறந்த ஒரு மகன் மூலமே அவர் அவதரித்த யாதவ வம்சத்தையும் கிருஷ்ணரே அழித்துக் கொண்டக் கதை தனிக் கதை.
ஆகவே இதைப் பார்க்கும்போது இந்திரன் கொன்றதாக கூறப்படுவது கிருஷ்ணரை அல்ல என்பது விளங்கும். அப்படி என்றால் இந்திரன் கொன்றதாக கூறப்படும் கிருஷ்ணர்கள் யாராக இருக்க முடியும்? இந்த பூமியிலும், தேவ லோகத்திலும் கூட யாதவ குலத்தினரைத் தவிர வேறு குலங்களை சார்ந்த பல அசுரர்களும், அரக்கர்களும் கூட கிருஷ்ணரின் வழிவந்தவர்கள் எனக் கூறிக் கொண்டு இருந்துள்ளவர்கள். அவர்கள் தம்மை கிருஷ்ணர்கள் என அழைத்துக் கொண்டு உள்ளதான சில குறிப்புக்களும் கிராமியக் கதைகளில் காணப்படுகின்றன. பல கட்டங்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நிகழ்ந்துள்ளன. பல தேவலோக யுத்தங்களில் அசுரர்கள் மற்றும் அரக்கர்களுக்கு எதிராக இந்திரன் தேவர்களுக்காக போரிட்டு உள்ளார். அந்த யுத்தங்களில் பெருமளவில் அசுரர்களும், அரக்கர்களும் மரணம் அடைந்துள்ளார்கள். அந்த யுத்தங்களில் கிருஷ்ணர்கள் எனக் கூறிக் கொண்டிருந்த அசுர கும்பலும் அடக்கம் ஆகும். ஆகவே இந்திரன் கொன்றதாக கூறப்படும் 50,000 கிருஷ்ணர்கள் என்பது கிருஷ்ணர் தங்கி இருந்த பூமியில் கிருஷ்ணர்கள் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருந்த அரக்கர்களே என்பதில் சந்தேகம் இருக்காது.
கிருஷ்ணர் எப்படி 16,100 மனைவிகளை மணந்தார் ? இது முறையா என்ற கேள்வி எழலாம். கிருஷ்ணரும் இந்திரனும் நேருக்கு நேர் போரிடவில்லை. கோவர்த்தன மலையைத் தூக்கி நின்றவாறு இந்திரனின் கர்வ பங்கத்தை கிருஷ்ணர் அடக்கியதால் எழுந்த கோபம் சில காலமே நீடித்தது. அதன் பின்னர் அதே இந்திரன் நரகாசுரனை அழிக்க கிருஷ்ணரின் துணையை நாடினார். கிருஷ்ணரும் நரகாசுரனை அழித்து விட்டு அவன் சிறை பிடித்து வைத்திருந்த 16,100 பெண்களை சிறை மீட்டார். அவர்கள் வெகு காலம் சிறையில் இருந்ததினால் அவர்களை மீண்டும் மரியாதை தந்து ஏற்க சமூகம் விரும்பவில்லை என்பதினால் அஷ்டபார்யா என அழைக்கப்பட்ட எட்டு மனைவிகளான ருக்மணி, சத்தியபாமா, சம்பவதி, நாக்னஜிதி, காலிந்தி, மித்ரவிந்தா, பத்ரா, லக்ஷ்மணா என்பவர்களைத் தவிர தான் விடுதலை செய்த அந்த 16,100 பெண்களையும் கிருஷ்ணர் சுதேசி மனைவிகளாக மணந்து கொண்டார். கிருஷ்ணர் நரகாசுரனை கொன்ற பிறகு அப்பெண்களை அவர்களின் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அனைவரையும் கிருஷ்ணர் மணக்கவில்லை என்றால் அவர்களை சமுதாயம் ஒதுக்கி வைத்து விடும். அவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக நரகாசுரனின் மாளிகையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள். அவர்கள் சரீரத்தினால் வேறெந்த விதங்களிலும் துன்புறுத்தப்படவில்லை என்றாலும் கூட அதை உணராமல் அவர்களது தூய்மையான கற்பை சமுதாயம் ஏற்காமல் அவர்களை தள்ளி வைத்து விடும் என்ற உணர்வு கிருஷ்ணருக்கு இருந்தது. ஆகவேதான் இந்த முடிவை எடுத்த கிருஷ்ணர் அவர்களை பெயரளவுக்கு மணந்து கொண்டார் .
அதே சமயத்தில் கிருஷ்ணரோ அந்த மனைவிகளுடன் வேறெந்த தொடர்பையும் வைத்துக் கொள்ளாமல் அவர்களுக்கு புதிய அரண்மனை கட்டி ஒரு மரியாதையான இடத்தில் அவர்களை வாழ வைத்து வழி காட்டினார். நாதியற்று, சமூகத்தினரால் விலக்கி வைத்திருந்த நிலை தோன்றியபோது அந்தப் பெண்களை கிருஷ்ணர் தானே மணந்து கொண்டு அவர்களுக்கு தங்க மாளிகை கட்டிக் கொடுத்து அதில் தங்க வைத்து அவர்கள் வாழ்விற்கு ஒரு அர்த்தமும், சமூகத்தில் மரியாதையையும் கொடுத்தார். அதன் பின் அவர்களைக் குறித்த வேறு எந்த குறிப்புக்களுமே புராணங்களில் காணப்படவில்லை. ஆகவே கிருஷ்ணருக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள் இருந்ததின் காரணம் இதுதான்.
கிருஷ்ணரின் திருமண வாழ்க்கை குறித்தும் சில முரண்பாடுகள் இருந்துள்ளன. கிருஷ்ணர் மணந்து கொண்ட மனைவிகளில் முக்கியமானவர்கள் ருக்மணி மற்றும் சத்யபாமா என்பவர்களே என்றாலும் ராதை என்பவரும் கிருஷ்ணரின் வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகித்து உள்ளார். ராதையை கிருஷ்ணர் மணந்து கொண்டதான விளக்கம் இல்லை என்றாலும் ராதை என்பவர் கிருஷ்ணரின் அந்தரங்க ஆலோசகர் என்றும், நல்ல நண்பர் என்றும், ராதையே கிருஷ்ணரின் உண்மையான சக்தி என்றும் வைஷ்ணவ சமுதாயத்தின் ஒரு பிரிவினர் ஏற்றுக் கொண்டார்கள்.
கிருஷ்ணரின் அந்தரங்க சக்தியாக ராதா இருக்கலாம் என்று கருதும் நிம்பர்கர் எனும் சம்பிரதாயம் மற்றும் அதைப் பின் தொடர்ந்து வந்த கௌடிய வைஷ்ணவப் பாரம்பரியத்தின் அங்கமான சைதன்ய மஹாபிரபு என்ற இரு பிரிவினரின் நம்பிக்கையிலும் ராதா மிகப் பெரிய பெண் தெய்வமாகக் கருதப்படுகிறார். கௌடிய வைஷ்ணவப் பிரிவினர் ராதாவை பெண் தெய்வம் என்றும், கிருஷ்ணரும் ராதாவும் ஒரே தெய்வம் என்றும், அந்த இருவரும் இணை பிரிக்க முடியாத ஒரே சக்தி என்றும் நம்புகிறார்கள்.
வைஷ்ணவர்களை பொருத்தவரை அவர்கள் கிருஷ்ணருடைய திருமணம் குறித்து இரண்டு விதமான கருத்துக்களைக் கூறி உள்ளார்கள். அந்த உறவு இரண்டு வகைகளிலானது. முதலாவது ‘ஸ்வாக்ய-ரஸா’ அதாவது திருமண நிலை. இரண்டாவது ‘பராகியா-ரஸா’ அதாவது அன்பைக் குறிப்பிடும் உறவு முறை.
நிம்பர்க்கர் சம்பிரதாயத்தில் கிருஷ்ணருடனான ராதாவின் உறவு முறையை ஸ்வாக்கிய-ரஸா நிலை என்று கருத, கௌடிய பாரம்பரியம் ராதா மற்றும் கிருஷ்ணரின் உறவை பராகியா-ரஸா எனவும் கருதுகிறார்கள்.
பாகவத புராணத்தில், ராதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அந்த நூலின் பத்தாவது அத்தியாயத்தில் கிருஷ்ணரின் இளம் பருவத்தில் கோபியர்களுள் குறிப்பிட்ட ஒருவருடன் மனதார விளையாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் வெளி வந்த கீத கோவிந்தம் என்ற நூலில் ராதாவைப் பற்றிய செய்தி சற்று விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.
கீத கோவிந்தம் எனும் கோபியர் பாடல் பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்ட காவியம் ஆகும். இதனை கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் என்பவர் இயற்றி உள்ளார். பக்தி இலக்கியத்தின் சமஸ்கிருத காவியங்கள் இரண்டு வகைப்படும். அவை சாதாரண காவியம், மற்றும் மஹா காவியம் என்பன ஆகும். இந்த இரு வகை காவியங்களில் கீத கோவிந்தம் என்பது மஹா காவியம் வகையைச் சார்ந்ததாகும். இந்தக் காவியத்தில் ராதை, கிருஷ்ணன், சகி ஆகிய மூவரே முக்கியமான கதாபாத்திரங்களாக காட்டப்பட்டு உள்ளார்கள். இந்த காவியத்தில் கிருஷ்ணனை பரமாத்மாவாகவும், ராதையை ஜீவாத்மாவாகவும், சகியை ஞான குருவாகவும் வெளிப்படுத்தி, ஜீவாத்மாவானது பரமாத்மாவை அடைய முயலும் நிலையை அந்த பாத்திரங்கள் மூலம் விளக்கிக் காட்டி உள்ளதாக நம்புகிறார்கள்.
சத்தியபாமா கிருஷ்ணரின் அஷ்ட மனைவியருள் ஒருவர். இவரே பூமாதேவியின் அம்சமாக கருதப்படுபவர். கிருஷ்ணருக்கும் நரகாசுரனுக்கும் நடந்த போரில் ஒரு பெண்ணால்தான் தனக்கு மரணம் நேரவேண்டும் என்று நரகாசுரன் வரம் பெற்று இருந்ததினால் சத்தியபாமா கிருஷ்ணனின் தேரோட்டியாக சென்று நரகாசுரரை வதம் செய்தார் என்ற நம்பிக்கையை சில வைணவ நூல்களில் காணலாம்.
அதே போல விதர்ப்ப நாட்டு மன்னரின் மகளும், தன்னுடைய விருப்பம் இன்றி சிசுபாலனுடன் நிச்சயிக்கப்பட்டு இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி தன்னைக் காப்பாற்றி மணந்து கொள்ளுமாறு கிருஷ்ணரை வேண்டிக் கொண்டு கிருஷ்ணரை மணந்து கொண்ட ருக்மணியே கிருஷ்ணரின் முதன்மை மனைவி என்றும் அவர் லட்சுமி தேவியின் அம்சமானவர் எனவும் வைஷ்ணவர்களினால் கருதப்படுகிறார்.
கிருஷ்ணனுக்கு ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரவிந்தா, நக்னாஜிதா, பத்ரா மற்றும் லக்ஷ்மணா என்று அஷ்ட மனைவிகள் இருந்தாலும், ஆலயங்களில் கிருஷ்ணர், ருக்மிணி-சத்யபாமா சமேதராகவே எழுந்தருளியிருப்பது வைஷ்ணவ மரபாகும். ஆனால் பல வடநாட்டு வைஷ்ணவ சம்பிரதாயங்களில் கிருஷ்ணரை ராதாவுடன் இணைத்தே பூஜிக்கிறார்கள்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பூமியிலே அவதரித்து வருவேன் என்பதாக கிருஷ்ணர் கூறியது கிருஷ்ணருடைய வாக்கல்ல. கிருஷ்ணருடைய வாய் மூலம் விஷ்ணுவே கூறினார். பகவான் விஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுக்க முடிவெடுத்ததின் முக்கியமான காரணம் கீழ் காணும் புராணக் கதையில் கூறப்பட்டு உள்ளது.
ஒரு முறை மஹா விஷ்ணுவிடம் சென்ற பூமாதேவி குறைப்பட்டுக் கொண்டாள் ‘அனைத்தையும் அறிந்தும், அறியாதவர் போல சயனித்து இருக்கும் பரமாத்மனே, நான் சுமக்கும் பூமியின் மீது நடைபெறும் பாவ சம்பவங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு என்னால் இருக்க முடியவில்லை. தினம் தினம் தொடர்கதை போல தொடர்ந்து கொண்டு உச்ச கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் அந்த அக்கிரம நிகழ்வுகளை நீங்கள்தான் தடுத்து நிறுத்தி என் மனபாரத்தைக் குறைக்க வேண்டும்’.
அவள் குறையைக் கேட்ட நாராயணனும் பூமாதேவியை சில காலம் பொறுமையாக இருக்குமாறும், தக்க நேரத்தில் தான் பூமியிலே தோன்றி அவற்றை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாக அவளுக்கு உறுதி கூறினார்.
அதன் பின்னரும், பல காலம் கடந்தும், பூமியிலே நிகழ்ந்து வந்த அக்கிரமங்களுக்கும், பாவச் செயல்களுக்கும் குறைவே இல்லை. ஆகவே பல காலம் பொறுமையாக இருந்த பூமாதேவி மீண்டும் விஷ்ணுவை சந்தித்து அவரிடம் கேட்டாள், ‘நாராயணா, நீங்கள் கூறியதைப் போல இன்று வரை பொறுமை காத்து நிற்கிறேன். ஆனால் இனியும் பாவாத்மாக்கள் செய்யும் கொடுமைகளை தாங்கிக் கொண்டு நிற்கும் சக்தி எனக்கில்லை. நான் சுமக்கும் பூமி மீது பாவாத்மாக்கள் மட்டுமா உள்ளார்கள்? அவர்களைத் தவிர நல்லவர்களும், புண்ணியாத்மாக்களும் எத்தனைக் கோடி உள்ளார்கள். அவர்களைக் காக்கும் பொறுப்பும் எனக்கில்லையா? ஒன்று தீயவர்களை அழிக்க தக்க உபாயம் செய்யுங்கள்….இல்லை என்றால் நானே என்னை அழித்துக் கொண்டு அனைவரையும் அழிக்க வகு வகுத்து விடுவேன்’ எனக் கோபமாகக் கூறினாள். அதைக் கேட்ட நாரதர் பயந்து போனார். பூமித் தாய் தன்னை அழித்துக் கொண்டால் மீண்டும் பிரும்மன் படைத்த உலகமே அல்லவா அழிந்து விடும் என்பதினால் ஓடோடிச் சென்று பரமாத்மனிடம் அந்த செய்தியைக் கூற சிவனும் கொதித்தெழுந்தார்.
சிவனும், பிரம்மனும் முன்னே செல்ல அவர்களை பின் தொடர்ந்து சென்ற மற்ற தேவர்களும் பூமாதேவியை சந்தித்து அவளை தம்முடன் அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் சென்றார்கள். அதற்கு முன்னதாக விஷ்ணுவும் ராமாவதாரத்தை எடுத்து முடித்துக் கொண்ட களைப்புடன் சயனத்தில் இருந்திருந்தார் என்பதினால் பல காலம்வரை அவரை யாருமே தொந்தரவு செய்யாமல் களைப்பு ஆறும்வரை சயனித்து இருக்கட்டும் என்று எண்ணி இருந்தார்கள். இந்த நிலையில் பூமாதேவியின் நிலையைக் கூற அவர்கள் அனைவரும் விஷ்ணுவிடம் செல்லவும் அங்கு விஷ்ணு காணப்படவில்லை. அவர் பூலோகம் சென்று பாலராமராக அவதரித்து விட்டார் என்ற செய்தி கிடைத்தது. அனைவரும் அதிர்ந்து நின்றார்கள்.
அந்த நேரத்தில் ஒரு குரல் ஒலித்தது. ‘நீங்கள் யாரும் கிருஷ்ண அவதாரம் எடுக்க வேண்டிய நான் ஏன் முதலில் பலராமர் அவதாரம் எடுத்தேன் என்பதைக் குறித்து யோசனை செய்ய வேண்டாம். அதற்கு சின்ன காரணம் ஒன்று உள்ளது. பலராமர் வேறு யாரும் இல்லை. என் அனைத்து அவதாரங்களிலும் எனக்கு யாராவது உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய சக்தியைக் கொடுத்து நானே படைத்து வைத்துள்ள ஆதிசேஷனின் மறு உருவாகும். நான் எடுக்கும் ஒவ்வொரு அவதாரத்திலும் எனக்கு துணையாக இருக்க ஆதிசேஷனை ஏதாவது ஒரு உருவில் படைக்க வைத்து, என்னுடன் அழைத்துச் செல்வது என் பழக்கம். அதனால்தான் முதலில் நான் என் சக்தியுடன் கூடிய ஆதிசேஷன் மூலம் பலராமனாக அவதரித்தேன். அதன் பின் அவருடைய சகோதரனான கிருஷ்ணராக அவதரிக்க எண்ணியே அப்படி செய்தேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் என்னுடைய சக்தியைக் கொண்டு நான் ஒரே நேரத்தில் பல அவதாரங்களை எடுக்க முடியும். ஆகவே கவலை இன்றி அனைவரும் செல்லுங்கள். நான் விரைவில் கிருஷ்ணராக அவதரிக்க உள்ளேன்’. அதைக் கேட்ட அனைவரும் திருப்தி அடைந்து திரும்பிச் சென்றார்கள். விரைவில் தான் கூறியபடியே பூமியிலே வாசுதேவர்- தேவகிக்கு குழந்தையாக விஷ்ணுவும் கிருஷ்ணராக அவதரித்தார்.
இப்படியாக பூமியிலே அவதரித்த கிருஷ்ணரே மகாபாரத யுத்தத்தின் முக்கிய நாயகராக காட்டப்பட்டார். இதனால்தான் வேதங்களுக்கு பிற்பட்ட காலத்தில்தான் கிருஷ்ணர் அவதரித்து உள்ளார் என்ற கூற்று வலுப்படுகிறது. பகவத் கீதையில் யாகங்களுக்கும், ஹோமங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படாமல், அவரவர் செய்ய வேண்டிய கடமைகளை கிருஷ்ணர் எடுத்துரைத்தார். ஒருவர் தன் மீது நம்பிக்கைக் கொண்டு தாம் ஆற்ற வேண்டிய கடமையை செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை எடுத்துரைக்க, தாம் அவதரித்ததின் காரண காரியத்தை வெளிப்படுத்த, கண்ணன் என அழைக்கப்பட்ட சிறு வயதிலேயே இந்திரனுக்கான ஆஹூதியை தடுத்து நிறுத்தி யாதவர்களுக்கு போதனை செய்ததின் மூலம் பகவத் கீதையின் சாராம்சத்தை வெளிப்படுத்தி வைத்தார்.
கிருஷ்ண வழிபாடு பரவலாக இந்தியாவில் எப்போது துவங்கியது ?
நிம்பர்க்கர் என்பவர் ராதாவைப் பற்றிய கொள்கைகளை எங்கும் பரவச் செய்த முதல் வைஷ்ணவ ஆச்சார்யர் ஆவார். அவரும் வடநாட்டை சேர்ந்தவரே. பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில்தான் பக்தி இயக்கங்கள் மூலம் கிருஷ்ணர் வழிபாடு உச்சத்தை அடைந்தது. இந்தியாவில் வடபகுதியில் இருந்த ஒரிசாவில் ஜெகன்னாதர், ராஜஸ்தான், மஹாராஷ்டிராவில் விதோபா மற்றும் விட்டலா என கிருஷ்ண உருவங்கள் பல வடிவங்களில் உருவாக்கப்பட்டு வழிபடப்பட்டன. தென் இந்தியப் பகுதியில் சற்றே குறைந்த அளவில் கர்நாடகப் பகுதி, கேரளா மற்றும் இலங்கை போன்ற இடங்களிலும், வடநாட்டின் பல பகுதிகளிலும் கிருஷ்ண வழிபாட்டில் பல ஆலயங்கள் எழுந்தன.
ஆனால் தென் நாட்டைப் பொருத்தவரை தமிழகத்திலும்,ஆந்திராவிலும் சைவம் என்றால் சிவன் என்றும், வைஷ்ணவர்கள் என்றால் விஷ்ணு என்ற பேதத்திலேயே தெய்வ வழிபாடுகள் இருந்து சிவனும், விஷ்ணுவும் வழிபடப்பட்டார்களே தவிர பண்டைக் காலம் தொட்டு பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை கிருஷ்ணர் வழிபாடு அதிகமாக காணப்படவில்லை. இரண்டாயிரம் அல்லது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டுள்ள அல்லது வழிபடப்பட்டுள்ள எந்த ஒரு ஆலயத்திலும் கிருஷ்ண வழிபாடோ அல்லது கிருஷ்ணருக்கான சன்னதியோ இல்லை என்பதில் இருந்து இந்த உண்மை விளங்கும். பதினைந்தாம் நூற்றாண்டுவரை கிருஷ்ணருக்கென்ற தனி ஆலயமே நகர்புறத்திலோ இல்லை கிராமப்புறத்திலோ கூட இல்லாமல் இருந்தது. அப்படி கிருஷ்ணர் ஆலயம் இருந்தாலும் அவை முதன் முதலில் விஷ்ணுவின் ஆலயமாகவே காணப்பட்டன. அதன் பின்னரே கிருஷ்ணருக்கு சில மன்னர்கள் காலத்தில் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் தென் பகுதியில் தமிழ்நாட்டை ஒட்டி இருந்திருந்த அன்றைய இலங்கை தீவில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கிருஷ்ணர் ஆலயம் இருந்துள்ளது என்கிறார்கள்.
பிற்காலத்தில் அதாவது கடந்த 2000 ஆண்டுகளுக்குள் தென் பகுதியில் தமிழ்நாட்டில் கிருஷ்ண பரமாத்மாவுக்கு பல ஆலயங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் அற்புதமான பரிகார தலங்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ண மங்கை, கபிஸ்தலம் ஆகிய ஐந்து தலங்களும் பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்ற சிறப்புப் பெற்றவை என்றாலும் வட இந்தியாவில் காணப்படும் பரவலான கிருஷ்ண வழிபாடு தென் இந்தியப் பகுதிகளில் இல்லை என்பது தவிர்க்க முடியாத உண்மை ஆகும்.