சாந்திப்பிரியா
சோழ மன்னர்கள் கட்டி உள்ள ஆலயங்களில் நகரின் மத்திய பகுதியில் உள்ள சொக்கநாதர் ஆலயம் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது. சோழ மன்னர்கள் கட்டிய ஆலயம் என்றவுடன் அது சிவன் கோவிலாக இருந்திருக்கும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. அது சொக்கநாராயணஸ்வாமி என்ற விஷ்ணுவின் ஆலயம். பழைய விமான நிலையம் போகும் பாதையில் உள்ள தோம்லுர் பஸ் ஸ்டாண்டு எதிரில் போகும் குறுகிய சந்தில் உள்ளது அந்த ஆலயத்திற்கு செல்லும் வழி. இராஜராஜ சோழன் பத்தாம் நூற்றாண்டில் கட்டியதாக கூறப்படும் அந்த ஆலயம் பிராண சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் கிரக தோஷங்களை போக்கவும் கட்டப்பட்ட ஆலயம் என்று கூறுகின்றனர். சாலையின் மட்டத்தில் இருந்து சுமார் 50 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி எழப்பப்பட்டு உள்ள அந்த வைஷ்ணவ ஆலயத்தில் உள்ள மூல மூர்த்தியின் பெயர் சொக்க நாராயணஸ்வாமி. தெலுங்கில் சொக்கா எனில் அழகுள்ளவர் என அர்த்தம். நீங்கள் அந்த ஆலயத்தில் உள்ள மூலவரைப் பார்த்தால் எத்தனை அழகு சொட்டுகின்றது என பிரமிப்பீர்கள்.
அந்த ஆலய வளாகத்திற்குள் நுழைந்ததும் இடப்புறம் ஒரு வினாயகர் சன்னதியும்ää வலப்புறம் ஒரு அனுமார் சன்னதியும் நேருக்கு நேர் பார்த்தபடி அமைந்துள்ளன. அந்த இரண்டும் பிற் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. அந்த இரு சன்னதிக்கும் மேல்புறத்தில் சொக்கநாதர் சன்னதி மூன்று தடுப்பு அறைகளைக் கொண்டு கட்டப்பட்டு உள்ளது. முதலில் உள்ளது ஒரு சிறிய அளவிலான அர்த மண்டபம். அதற்கு அடுத்து தியான மண்டபம். அதில் பிராண சக்தியை அதிகரிக்கச் செய்யும் மூன்று குறிப்பிட்ட நிலைப் பகுதி உள்ளன. அதை தொடர்வது குறுகிய வழிப் பாதை. அதற்கு அடுத்து மிகச் சிறிய அறை. அதில் உற்சவ மூர்த்தி அமர்த்தப்பட்டு உள்ளது. அதன் பிறகு காணப்படுவது மூலமூர்த்தி உள்ள கற்பக்கிரகம் .
சனிக்கிழமைகளில் மூலவருக்கு திருமஞ்சனம் படைக்கப்படுகின்றது. அங்குள்ள கருங்கல் தூண்களில் பல சித்திர வேலைபாடுகள் காணப்படுகின்றன. இராமயணக் கால காட்சிகள் போல மனதுக்குத் தோன்றும் அவற்றில் வாலி சுக்ரீவன் போன்ற உருவங்களும் உள்ளன. மேலும் அந்த மண்டபத்தின் அடிப்புறம் ஒரு பெரிய பாதாள அறை இருந்தது என்றும் அது மூடப்பட்டு விட்டதாகவும் கூறுகின்றனர்.
கற்பக் கிரக சன்னதி மண்டபத்தை விட்டு கீழ் இறங்கி வந்தால் வெளிப் பிரதர்ஷணப் பிராகாரத்தில் ஐந்து இடங்களில் சக்தி தரும் நிலைகள் உள்ளன. அந்த நிலைகள் கட்டம் போட்டு காட்டப்பட்டு உள்ளன. அந்த குறிப்பிட்ட நிலையில் நின்று கொண்டு தியானம் செய்தால் பிராணிக் எனர்ஜி அதிகமாகும் என்று கூறப்படுகின்றது. சன்னதியின் வெளிப்புறம் உள்ள மூன்று பக்கச் சுவற்றிலும் மற்றும் கதவுகளிலும் ( பாறைக் கற்களினால் கட்டப்பட்டு உள்ள சுவர் ) கிரந்தத்திலுமம் தமிழிலும் கன்னடத்திலும் ஆலயம் பற்றிய செய்திகள் செதுக்கப்பட்டு உள்ளன.
சோழ மன்னர் காலத்திய அனைத்தும் இன்றைய யேலஹங்கா எனும் இராஜேந்திர சோழவள நாடான அன்றைய இலைப்பாக்கு என்ற இடத்தில்தான் இருந்துள்ளன. தேசிமானிக்கப்பட்டினம் என்ற இடத்தில் உள்ள கல்வெட்டுக் குறிப்புக்களில் தோம்லூர் என்ற பெயரை தோம்லூர் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. பெங்களுர் மாவட்ட புராதன நூல் தொகுப்பு பாகம் ஒன்பதில் இங்கு ஆறு கல்வெட்டுக்கள் உள்ளது எனவும் அந்த தமிழ் கல்வெட்டுக்கள் சக்ரவர்த்தி ‘போசலா விக்ரமாநந்த தேவா’ அனைத்து ஆலய அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை எனவும் தெரிவிக்கின்றது.