COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் –11 : அஷ்டாங்க யோக தத்துவம்
அத்தியாயம் 43
நாரத முனிவர் வருகை; மன்னனுக்கும் ராணிக்கும் உபதேசம்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா தொடர்ந்து கூறினார் ‘ஓ ஸ்ரீமத் தத்தப் பெருமானே, நான் உமது திருவடிகளை பணிந்து வணங்குகிறேன்; நான் செய்த பிழைகளை மன்னித்தருளும்’ என்று அரசன் ஆயு கதறினான்; அவ்வாறு கதறியபடியே அவன் தரையில் மயங்கி விழுந்தான் ||1||
தீபக் தன் குருவின் சொற்களைத் தொடர்ந்து மிகக் கவனமாகக் கேட்டவாறு இருந்தான் ‘ ஸ்ரீமத் தத்த பகவானை மகிழ்விக்கும் பேறு பெற்றிருந்த அரசன் ஆயுவின் கவலையும் புலம்பலும் அத்தகையதாகவே இருந்தன; அவனது துயரம் அளவற்றதாக இருந்தது ||2||
எவ்விதமாக ஒருவர் ஸ்ரீமத் தத்த பகவானை வழிபட்டாலும் சரி; செல்வத்தை நாடியோ, துன்பம் நீங்க வேண்டும் என்று பிரார்த்தித்தோ, அல்லது இறைத் தத்துவத்தை அறியும் உண்மையான விருப்பத்துடனோ, அல்லது வாழும் போதே முக்தி நிலையை அடைய விரும்பியோ, எப்படி வழிபட்டாலும், முழு பக்தியுடன் அவரைச் சரணடைந்தால், அவர்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்களாகவே கருதப்படுவர் ||3||
ஒருவரிடம் நற் புண்ணியங்களின் இருப்பு (சஞ்சிதம்) போதுமான அளவு இருந்தால், ஸ்ரீமத் தத்த பகவானே அவருக்குத் தன் மீது பக்தி உண்டாக அருள் புரிவார்; அவ்வாறு இல்லையெனில், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்கள் மற்றத் தாழ்ந்த நிலையிலுள்ள தேவதைகள் அல்லது தெய்வங்களின் மீது பக்தி செலுத்துபவர்களாக மாற்றி விடுவர்||4||
ஒரு வேடன் தன் இலக்கின் மீது எவ்வாறு முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்துவானோ, அதே போலவே, ஒருவரின் அனைத்து மன உணர்வுகளும், ‘வாழும்போதே முக்தி பெறும்’ (ஜீவன்முக்தி) நிலையை அறிவதில் தீவிர விருப்பம் கொண்டிருக்க வேண்டும்; அந்த நோக்கத்திற்காகவே சர்வ வல்லமை படைத்த இறைவனிடம் ஆழ்ந்த பக்தியும் மரியாதையும் கொண்டிருக்க வேண்டும்||5||
ஒருவேளை அந்த வேடன் கவனக் குறைவாக இருந்து, தனது இலக்கில் இருந்து கவனத்தை சிதற விட்டு, அவனை, மயக்கும் மற்றப் பொருட்களின் மீது சஞ்சரிக்குமானால், நிச்சயமாக அவன் தன் இலக்கைத் தவற விடுவான்; மாறாக, உறுதியான மனதுடன் இருப்பவர்கள் தாங்கள் தேடுவதை நிச்சயம் அடைவார்கள்’||6||
வாழும்போதே முக்தி பெறும் நிலையை அறிவதற்கு இத்தகைய தகுதியே முன் நிபந்தனையாக அமைகிறது; அத்தகையோரின் உள்ளம், இறை தத்துவத்தை அறிவதில் அசைக்க முடியாத உறுதியைக் கொண்டிருக்கும்; ஒரு காதலன் தன் காதலியின் மீது எவ்வாறு தீவிரமாக ஈடுபாடு கொண்டிருப்பானோ, அதே போலவே ஒருவரின் முழுமையான மன உணர்வுகளும் இறைவனை நோக்கியே ஒரு முகப் பட்டிருக்க வேண்டும் ||7||
ஒரு செயலில் ஒருவன் தனது முழுமையான மன நிலையிலும் கவனத்துடனும் இருந்து கொண்டு செயல் பட்டால், அது சம நிலை சார்ந்த நற்பயனைத் தரும் என்று கூறப்படுகிறது; இல்லையேல், அது வெறும் உடல் இயந்திரத்தனமாகச் செய்யும் சடங்குச் செயலாகவே அமையும், அதன் பயனும் ஐயத்திற்குரியதே ||8||
வாழும்போதே முக்தி அடைந்த நிலையில் இருப்பவர்கள் கூட, தங்கள் மன உறுதியில் கவனமாக இல்லா விட்டால், அவர்களும் தடுமாறி விடுவர்; அவர்களின் மனச் எண்ணங்கள், திசை மாறிச் சென்ற வேறு உலகியல் விவகாரங்களை நோக்கிப் பாய்ந்து விடத் தொடங்கும்||9||
இறைவனைத் தேடும் அனைத்து வகையினரிலும், ஞானிகளே மிகச் சிறந்தவர்கள் ஆவர்; ஒரு உதாரணத்திற்கு சொல்வதானால், வெறும் உணர்வு பூர்வமான பக்தியுடன் இருந்து கொண்டு தேடுவதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டுமே அது போதுமானதாக இருக்காது||10||
அத்தகையோர் தங்கள் மனதை ஒருமுகப்படுத்த முயன்றாலும், அவர்களால் அவ்வாறு செய்ய முடிவதில்லை; விரைவில் அவர்கள் விரக்தி நிலையை அடைந்து விடுகின்றனர்; ஆனால், இறைவனிடம் தாங்கள் கொண்ட அர்ப்பணிப்பில் விழிப்புடன் இருப்பவர்கள், ஐம்புலன்களின் இச்சைகளால் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை ||11||
அவசரத்தினாலோ அல்லது வெறும் பெருமைக்காகவோ செய்யப்படும் அனைத்துச் செயல்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, தாம் செய்யும் செயலின் பயனைப் பற்றியே சிந்திக்காமல் கடமையாற்றுபவர்களே, தெய்வத்துடன் ஒன்றிணைந்த ‘பாகவத பக்தர்களின்’* நன்னடத்தை குணங்களைக் கொண்டவர்கள் ஆவர்; அவர்கள் தெய்வத்தை வணங்கி, துதித்து மேன்மையான நன்மை பெறுகின்றனர்
{*பாகவத பக்தர்கள் (Bhagavatas) என்பவர்கள் பரம புருஷ பகவானான ஸ்ரீமத் கிருஷ்ணரை அல்லது விஷ்ணுவை முழுமையாக சரணடைந்து, பக்தித் தொண்டில் (பக்தி) மூழ்கியிருப்பவர்கள்; இவர்கள் சாதி, மதம் கடந்து, அனைத்து உயிர்களிலும் இறைவனைக் காணும் தூய அன்பர்கள்} ||12||
வேறெந்த இலக்குகளையும் மனதில் வைத்துக் கொள்ளாமல், தெய்வத்தின் தூய அருளை மட்டுமே வேண்டிக் கொண்டு செயல்படுபவர்கள் உண்மையான பக்தர்கள் ஆவர்; மாறாக, தங்கள் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காக மட்டுமே தற்காலிகமாக தெய்வத்தை வணங்கி துதிப்பவர்கள் சற்றுத் தாழ்ந்த நிலையில் உள்ள பக்தர்கள் ஆவர்||13||
உலக பந்தங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பவர்கள், அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் திடீரெனத் தகர்ந்து விழும் போது நிலை குலைந்து போகின்றனர்; அந்த சூழல்கள்தான் அவர்களை துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக இறைவனிடம் பக்தி செலுத்தும் கட்டாய நிலையில் கொண்டு செல்கின்றன; அந்த மன மாற்றம் கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து விடுகிறது’ ||14||
மிகுந்த துன்பத்தைச் சுமப்பவர்களும், நற் செயல்களால் கிடைத்த புண்ணியங்களை நிறையக் கொண்டிருக்கும் இரு வகையினரும் தங்கள் துன்பக் காலங்கள் முழுவதிலும் இறைவனிடம் பக்தி செலுத்தி நிலைத்திருக்கிறார்கள்; இறுதியில், அவர்கள் தாங்கள் விரும்பிய இயல்பான மன நிலையை மீண்டும் பெறுகிறார்கள் ||15||
ஆனால், ஒருவன் இறைவனுக்கு மிக அருகில் இருக்கும் பக்தர்களின் வரிசையில் மேலே செல்ல விரும்பினால், அதற்கான முதல் தகுதி, ‘இறைவனை அறிய வேண்டும்’ என்ற உண்மையான விருப்பமே ஆகும்; பல்வேறு வகையிலான ஆதாயங்களுக்காகத் துன்பப்படுவதை விட்டு விட்டு அதற்கு பதிலாக ‘இறைவனை அறிய வேண்டும்’ என்ற புனித நோக்கத்திற்காக ஒருவன் துன்பத்தை ஏற்கத் தயாராக இருந்தால், அவனுள் தெய்வீகத்தை அறிய வேண்டும் என்ற ஆசை முழுமையாக மலர்ந்து விடும்||16||
உலகப்பற்று எனும் வலையில் சிக்கி, செல்வம், பெண்கள் மற்றும் சுற்றார் மீதே முழு விருப்பம் கொண்டிருப்பவர்களின் அறிவாற்றல் முற்றிலும் மழுங்கி விடுகிறது; தங்களுக்கு எது நன்மை, எதை செய்தால் செல்வம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றலைக் கூட அவர்கள் இழந்து விடுவார்கள்||17||
குழந்தைகள் பேறு அல்லது சமூகத்தில் நல்ல பெயர் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அவர்கள் தெய்வத்திடம் சரண் அடைகின்றார்கள்; அவர்கள் முற்பிறவி நல் வினைப் பயனைச் சேமித்து வைத்திருந்தால், இறைவனிடம் பக்தி கொள்கிறார்கள்; இல்லையெனில், தங்கள் விருப்பங்களை மிக விரைவாக நிறைவேற்றித் தரக்கூடிய, தங்களுக்குத் பிடித்த வேறு ஏதேனும் தெய்வத்தை நாடுகிறார்கள்||18||
செல்வந்தராக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே, ஆன்மீகத் தேடலில் உள்ளவர்கள் சிறிய தெய்வங்களை வழிபடுகிறார்கள்; அந்த தெய்வங்களின் மீது அவர்கள் வைத்திருக்கும் பக்தி உண்மையானதாகவே இருந்தாலும், வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய உண்மையான நன்மை எது என்பதைப் பற்றிய தெளிவை அவர்கள் இழக்கிறார்கள்||19||
அத்தகைய தெய்வங்களுக்கு ஊக்கமளிப்பவரும், விருப்பங்களை நிறைவேற்றித் தரும் ஆற்றலை வழங்குபவருமான பரம்பொருள் மட்டும் இவர்களால் கவனிக்கப்படாமலே இருக்கிறார்; எனவே, சிறு தெய்வங்கள் மூலம் தங்கள் விருப்பங்கள் நிறைவேறிய உடனேயே அத்தகைய பக்தி மறைந்து விடுகிறது; அதன் விளைவாக, துயரங்களின் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது ||20||
இறைவன் ஒவ்வொருவருக்கும் தேவையான அனைத்தையும் வழங்குகிறார்; இந்த உண்மையை முழுமையாக நம்பி உணர்ந்தவர்களே இறைவனை உண்மையாக தேடும் பக்தர்கள் ஆவார்கள்; அவர்களே நற் செயல்களைச் செய்பவர்கள்; ஏனெனில், தங்கள் உண்மையான தெய்வம் எங்கு உள்ளது என்பதை இவர்கள் நன்கு அறிவர் ||21||
மாறாக, தங்கள் விருப்பங்கள் உடனடியாக நிறைவேற வேண்டும் என்று விரும்புபவர்கள், இறைவனிடம் தங்கள் பக்தியை வளர்த்துக் கொள்ளவே முடிவதில்லை; அதனால்தான் அவர்கள் தெய்வங்களிடமிருந்து பெறும் பலன்களும் காலத்தால் வரையறுக்கப்பட்ட, நிலையற்ற பலன்களாகவே அமைகின்றன||22||
சர்வ வல்லமையுள்ள இறைவன் வழங்கும் பலன்களுக்கு ஈடான பலன்களை, வேறு எந்தத் தெய்வத்தாலும் வழங்க இயலாது; இருந்தாலும் தங்கள் மீது செலுத்தும் பக்தியால் பாவங்கள் குறைவதைக் காணும்போது, அந்த தெய்வங்களும் கருணையினால் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள் ||23||
ஒரு பிறவியில் தாம் கொண்டிருந்த பக்தி முயற்சியில் பாதியில் நின்றவர்கள் அடுத்தடுத்த பிறவியில் அந்த ஆன்மீக சேமிப்பு என்பது அவர்களுக்காகக் காத்திருப்பதைக் காண்கிறார்கள்; அத்தகையவர்கள் பக்தியில் பலவீனமாக இருந்தாலும், தாம் தவற விட்ட தூய பக்தியையும், தெய்வ அர்ப்பணிப்பையும் விரைவாக மீட்டெடுக்கிறார்கள்||24||
ஒருவர் எதோ ஒரு வகையில் பக்தி செலுத்தினாலும் , அவர் ஒருபோதும் பாதகமான நிலைகளை எதிர் கொள்ள மாட்டார்; ஆயினும் புத்தியின் களங்கம் ஒருவரை பக்தி மார்கத்தில் இருந்து திசை திருப்பி, எல்லா தீமைகளுக்கும் ஆளாகக் கூடியவராக மாற்றி விடுகின்றது ||25||
ஆத்ம விடுதலை பெறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன; ஆயினும் அவை கடினமானவை, அவற்றுள் மிக எளிதானது பக்தியுடன் இருப்பது; அதில் பக்தன், பக்தி முறை மற்றும் வணங்கப்படும் இறைவன் ஆகிய மூன்று பிரிவினரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ||26||
நல்ல புத்தி என்பது, உள்ளே பக்தி உதயமாகும்போது போது ஏற்படும் விதியின் நல்ல திருப்பத்தை உணர்ந்து கொள்வதாகும்; அத்தகைய விழிப்புள்ளவர்களுக்கு தெய்வம் அருள் புரிந்து, அவர்களை நல் வழிப் பாதையில் செல்ல அருள் புரிகின்றார்||27||
இறைவனிடம் பக்தி செலுத்துவதன் முக்கியத்துவம் இதுதான்; அது பக்தனை அழிய விடாது; கடந்த காலத்தின் அவன் சேமித்து வைத்து இருந்த இழிவான செயல்களின் தாக்கங்களை மாற்றி அமைக்க அது உதவுகின்றது ||28||
உண்மையான பக்தி கொண்டு இருக்கையில், கடந்த கால நிறைவேறாத ஆசைகள் மற்றும் தீய மன எண்ணங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன; பக்தியினால் நாளுக்கு நாள் சம நிலையான எனும் அமைதி மலர்கிறது, அனைத்தின் மீதான பற்றின்மையும் மலரத் துவங்குகின்றது ||29||
குரு வேத தர்மா தொடர்ந்தார் ‘ஓ தீபக், பக்தியை விட்டால் வேறு வழி இல்லை; தேவ கன்னி ஊர்வசியின் மகனான பக்தியுள்ள அரசன் ஆயுள், நிச்சயமாக புண்ணியசாலி என்பதை அறிந்து கொள்||30||
அவர் அனைத்து வஞ்சகங்களையும் துறந்தார், அவரது ஆசை ஒரு வாரிசுக்காக இருந்தது; அவர் சென்று ஸ்ரீமத் தத்த பகவானை தேடி, கண்டு பிடித்து அங்கேயே அவருக்கு சேவை செய்து தங்கினார்||31||
அவனுடைய பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆன பின்னர், புதிதாகப் பிறந்த இளவரசன் மூலம் அவன் விரும்பியதைப் பெற்றான்; ராணி கருவுற்றிருந்த அந்த நாட்கள் மகிழ்ச்சியான நாட்களாக இருந்தன; தம்பதியினர் தற்போது சந்தித்த வலி விதியின் தற்காலிக காரணமாக அமைந்த ஒன்றுதான் ||32||
ஆனால், ஸ்ரீமத் தத்த பகவான் மீதான அவரது பக்தியே, அப்படிப்பட்ட துயரமான, வேதனையான சூழ்நிலைகளிலும் கூட, இறைவனிடம் தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தவும், இறைவன் மீது தனக்கிருந்த அன்பான மரியாதையை இழக்காமல் இருக்கவும் அவரைத் தூண்டியது ||33||
தமது விருப்பம் நிறைவேறுவதற்காக இறைவனிடம் காட்டும் பக்தி என்பது முதல் நிலை; அந்தப் பக்தி தொடர்ந்து கொண்டிருக்கையில் சூழ்நிலை சார்ந்த துக்கமோ, துயரமோ அல்லது விதியால் நிர்ணயிக்கப்பட்ட கொடுமைகளோ அவனோடு சேர்ந்திருந்தால், அது இரண்டாம் நிலை வழிபாட்டில் வரும்; அவற்றை எல்லாம் தாங்கி கொண்டு இறைவனை தேடுவது மூன்றாம் நிலை வழிபாடாகும்; அந்த நிலையை அவரை செல்லத் தூண்ட வேண்டும் என்பதே எல்லாம் வல்ல இறைவனின் தெளிவான விருப்பம்||34||
துயரத்தால் வேதனைப்பட்டு, தங்கள் பக்தியைத் தொடர்ந்த அரசன் ஆயுவைப் போன்றவர்கள், இறைவனால் விரைவில் கவனிக்கப் படுகின்றார்கள்; எனவே அத்ரி முனிவரின் தெய்வ மகன், நாரத முனிவரை வரவழைத்து, அவரிடம் இவ்வாறு கூறினார் ||35||
அரசன் ஆயு புலம்புகிறான்; விதியின் காரணமாக தற்காலிகமாக ஆத்ம விடுதலை தேடும் பக்தன் எனும் நிலையில் இருந்து, அவனது வலியைப் போக்கிக் கொள்ள விரும்பும் ஒருவனாக மாறி விட்டான்; ஆகவே அவனிடம் சென்று சென்று அவனுக்குப் பொருத்தமான அறிவுரை கூறுங்கள்; நல்ல ஆலோசனை கூறி ஆறுதல்படுத்துங்கள் ||36||
அந்த மன்னன் தவம் மேற் கொண்டார்; அவரது அக ஆற்றல்கள் தூய்மையாக்கப்பட்டுள்ளன; எனவே துன்பத்தில் உள்ள அவர் உங்களிடமிருந்து அறிவுரை பெற்ற பிறகு, மீண்டும் இறைவனை தேடும் முயற்சியில் தீவீரமாக தன்னை இணைத்துக் கொள்ளட்டும்||37||
பகவானின் விருப்பத்தை நாரத முனிவர் கேட்டார்; மேலும் மூன்று உலகங்களையும் கடந்து செல்வதில் புகழ் பெற்றவராக இருந்ததினால், அவர் தனது வீணையை தோளில் சுமந்து கொண்டு, கடவுளின் மகிமைகளை பாடிக் கொண்டு ஆயு மன்னனின் ராஜ்ஜியத்திற்கு வந்தார்||38||
அரண்மனைக்கு சென்ற நாரத முனிவர், பகவான் விஷ்ணுவே, பகவான் விஷ்ணுவே என்று பாடியவாறு , தனது இனிய மெல்லிசைகளை இசைத்தார்; மன்னன் அவரை ஒரு முனிவருக்கு ஏற்றவாறு வரவேற்று, மரியாதையுடன் வணங்கினான்||39||
‘நல்ல விதியின் காரணமாகவே, நீங்கள் என் ராஜ்ஜியத்தில் காலடி எடுத்து வைத்துள்ளீர்கள்’ இவ்வாறு இனிய வார்த்தைகளால் அவரை வரவேற்று, முனிவருக்கு ஓர் இருக்கையை அளித்து, அந்த மதிப்பிற்குரிய விருந்தினரை வணங்கினார்||40||
மன்னர் மரியாதையுடன் கூறினார் ‘இன்று எங்களுக்கு ஒரு புனிதமான நாள், உங்களைப் போன்ற ஒரு புனிதமானவரைக் காணவும், உங்கள் புனித பாதங்களை வணங்கவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது||41||
சான்றோர் அனைத்து உயிர்களிடத்தும் கருணை காட்டுபவர்கள்; இப் பிரபஞ்சம் எங்கும் காணக் கிடைக்காத ஒப்பற்ற கனிவான அன்பை வெளிப்படுத்துபவர்கள் அவர்கள்; மென்மையான சொற்களாலும், ஞானம் செறிந்த அறிவுரைகளாலும், அவர்கள் இதமான மழைத் துளிகளைப் போலத் தங்கள் ஆசிகளைப் பொழிகிறார்கள் ||42||
இறைவனின் புனித அடியார்களிடம் ஒருவன் உண்மையான பக்தி செலுத்தும் போது, அனைத்துத் தெய்வங்களும், ஏன் விதியும் கூட திருப்தி அடைகின்றன என்று சொல்லப்படுகிறது; தங்கள் கடமைகளை மறந்து உறக்கத்திலும், உலகப் பற்றிலும் மூழ்கிக் கிடக்கும் ஆத்மா க்களைத் தட்டி எழுப்புபவர்கள் அந்த அடியார்களே ஆவர் ||43||
தற்போதைய சூழலில், நான் துயரம் எனும் பெருங் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்; இதைத் தெய்வமான ஸ்ரீமத் தத்தர் நன்கு அறிவார்; எனக்கு ஆறுதல் கூறி , நல்வழி காட்டும் அறிவுரைகளை வழங்கவே உங்களை இங்கு அனுப்பி வைத்துள்ளார் என்று நான் கருதுவதில் தவறு இல்லையே? ||44||
எனக்கு ஒரு நல்ல மகனைப் அடையும் வகையிலான வரத்தை அருளியவர் அந்தத் ஸ்ரீமத் தத்த பகவானே ஆவார்; ஆனால், எதிர்பாராத விதமாக என் மகன் இப்போது என் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து விட்டான்; அதன் விளைவாக நாங்கள் அனைவரும் அவனுக்காகத் துயருற்று வாடுகிறோம்; ஓ முனிவரே, இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தயவு செய்து எனக்குக் கூறுங்கள் ||45||
மன்னரின் அந்த வார்த்தைகளைக் கேட்டதும், நாரத முனிவர் புன்னகையுடன் மென்மையாகச் சிரித்து விட்டு கூறினார் ‘ஒருமுறை நினைத்தாலே போதும், அந்த அடியாரை உலகப் பற்றுகளிலிருந்து விடுவித்து உயர்த்துபவர் யார் தெரியுமா? ||46||
அவரேதான், நீங்கள் நூறு ஆண்டுகளாக மிகக் கவனத்துடனும், முழுமையான பக்தியுடனும் இடை விடாமல் வழிபட்டு வந்த ஸ்ரீமத் தத்தர் பகவான் ஆவார்; அப்படியிருக்க, இப்போது நீங்கள் ஏன் துயருற்று வாடுகிறீர்கள்? ||47||
உங்கள் மகனை, மற்ற உயிர்களைப் போலவே உடலெடுத்து வந்த ஒரு ஆத்மா வாக மட்டுமே நீங்கள் கருதியிருந்திருந்தால், இப்போது உங்கள் துயரக் கண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கும் இந்தத் துயரத்திற்கான இடத்தை, உங்கள் மனதிற்குள் நீங்கள் உருவாக்கிக் கொண்டே இருந்திருக்க மாட்டீர்கள்||48||
என்னை மிகவும் வியப்படையச் செய்வது அந்தப் பார்வைப் பிழையே ஆகும்; மனைவியர், புதல்வர், செல்வம் ஆகியவை நிலையற்றவை என்பதையும், இந்த உடலும் அவ்வாறே நிலையற்றது என்பதையும் நீ நன்கு அறிவாய்; அப்படியிருந்தும், ஒவ்வொருவரும் தங்களை இந்த உடலாகவே கருதிக் கொண்டு, தாங்கள் நிலையானவர்கள் என்று நினைப்பது எத்துணை வியப்புக்குரியது ||49||
அன்பிற்குரிய அரசனே, நீயும் அந்த மாயையில் சிக்கிக் கொண்டாய்; எனவே, உடலைத் தாங்கியுள்ள ஓர் ஆத்மா வாகிய நீ, இந்த உடலின் மீதும் உறவுகளில் பற்று வைத்துக் கொண்டே இருக்கிறாய்; இம்முறை அது துயர வடிவில் வெளிப்பட்டாலும் கூட அவ்வாறு பற்று வைக்கும் செயலில், உனக்குள் உறையும் பரமாத்மாவை நீ கவனிக்கத் தவறி விட்டாய் ||50||
நீ அறிந்திருக்கும் முதுமொழிகளை நினைவு கூறுவாயாக; இந்த உடல் குழந்தைப் பருவம், இளமைப் பருவம் எனப் பல மாற்றங்களுக்கு உட்பட்டது; நீ அந்த மாற்றங்களுக்கெல்லாம் ஒரு சாட்சியாகத் திகழ்கிறாய்; அந்தச் சாட்சிதான், எவ்விதக் கறையுமற்றுத் திகழும் அந்த ஆத்மா தான், காலத்தால் அழியாததும் நித்தியமானதும் ஆகும் ||51||
உன் ஐம்புலன்களையும் சுவாசத்தையும் தவறாகப் பயன்படுத்தி, இங்குமங்கும் அலைந்து திரியாதே; நீ இந்த உடலின் மாற்றங்களுக்கு மட்டுமல்லாமல், உனது வெளித் தெரியாத அகங்காரத்திற்கும், உன் புத்தியைச் செலுத்தும் விதத்திற்கும் கூட ஒரு சாட்சியாகவே இருக்கிறாய் ||52||
உன் உடல், மனைவி, புதல்வர் எனப் பலவற்றின் மீதும் உனது அன்பு சிதறிக் கிடக்கிறது; காந்தம் இரும்புத் துகள்களைத் தன்பால் ஈர்ப்பதுபோல, உனக்குள் உறையும் ஆத்மாவின் இருப்பினாலேயே இவை அனைத்தும் உனக்கு விருப்பமானவையாகத் தோன்றுகின்றன ||53||
ஆனால், யோகப் பாதையில் செல்வத்தின் மூலம், இந்த உடல் உள்ளிட்ட அனைத்தும் தத் தமக்குரிய இயல்பான உணர்வு நிலையை அடைகின்றன; இதன் விளைவாக, மனம் எவ்விதக் குழப்பமுமின்றிச் சஞ்சரிக்காமல், ஆரோக்கியமான சமநிலை உணர்வுடன் அவற்றைக் கண்காணிக்கும் ஆற்றலைப் பெறுகிறது||54||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘அநார்ய: ச து விக்ஞேயோ தேஹ்-இந்த்ரிய-மனோதியாம், சாக்ஷிண்ணம் பரமாத்மானம் அஸங்கம்யோ ந வேத்யஜம்’
இதன் பொருள் என்ன என்றால் தங்கள் உடல், ஐம்புலன்கள் மற்றும் சஞ்சல மிக்க மனதின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கும் அனைவரையும் அறிவற்றவர்கள் என்றே அறிந்து கொள்வாயாக; அத்தகையவர்களால் இவ்வுலக இன்பங்களை முழுமையாக அனுபவிக்கவும் இயலாது; அதே சமயம், எவ்விதப் பற்றுமற்றுத் திகழும், காலத்தால் அழியாத பரமாத்மாவின் பேரின்பத்தை நுகரும் அளவிற்குத் தூய்மையுடன் இருக்கவும் முடியாது||55||
புத்தியானது தனக்குள் ஒடுங்கி மறையும்போது, உறக்க நிலை மேலோங்குகிறது; அதே புத்தி மீண்டும் செயல்படத் தொடங்கும்போது, விழிப்பு நிலை உண்டாகிறது||56||
இந்த முழு உலகமும் அதன் நிகழ்வுகளும், அறிவின் செயல்பாட்டைச் சார்ந்துள்ளன; நீயோ அதற்கு ஒரு சாட்சி மட்டுமே; உன்னைச் சாட்சியாக இருக்கச் செய்யும் அந்த ஆற்றல் கண்களுக்கு புலப்படாதது மற்றும் நிலையானது; அப்படியிருக்க நீ ஏன் துன்பத்திற்கு ஆளாகிறாய்? ||57||
மனைவிகள், மகன்கள், செல்வம் போன்றவற்றின் மீதான வெறிக்கு வழி வகுக்கும் கவனத்தையும் பாசத்தையும் விரும்பும் அந்த சூட்சுமமான அகங்கார ஆற்றலையும் நீ வெல்ல வேண்டும்; அந்த ஆற்றல், நிலையற்ற அனைத்திலும் தன்னை வீணாக்குவதற்குப் பதிலாக, உள்ளிருக்கும் களங்கமற்ற ஆத்மா வை அறிவதாக மாறட்டும் ||58||
பரம்பொருள் அல்லது ஆத்மா என்பது இவ்வுலகப் பொருட்களால் (ஐம் புலன்களால் அல்லது மாயையால்) கறைபடாதது; அது எப்போதும் தூய்மையானது; அந்தச் சாரத்துடன் ஒன்றிணைந்து, அது உனக்கே உரியது என்பதை ஏற்றுக் கொள்வாயாக; ஞானியர் ‘சர்வ ஞானம்’ என்று போற்றுவதும் அந்தச் சாரத்தையே; இந்தப் பிரபஞ்சம் இயங்குவதற்கும், கோடிக்கணக்கான உயிர்கள் வாழ்வதற்கும் ஆதாரமாக இருப்பது அந்த ஒரு மகா சக்திதான் ||59||
உள்ளிருக்கும் ஆத்மா தான் அது குடி இருக்கும் ஒவ்வொரு உடலுடனும் விளையாடுகிறது; அந்தத் தூய ஆத்மா வை உள்ளபடியே உணர்ந்து கொண்டால் , மற்ற அனைத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்; செய்கைகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற நமது விருப்பமே, நாம் செய்யும் செயல்களின் பலன்களுடன், நமது நடவடிக்கைகளின் பலன்களுடன் நம்மைத் தொடர்பு கொள்ளச் செய்கிறது||60||
ஸ்தூல சரீரம் (பூத உடல்), சூட்சும சரீரம் (மனம், புத்தி, அகங்காரம்) மற்றும் காரண சரீரம் ஆகிய மூன்றிற்கும் அப்பாற்பட்டு விளங்குவதே ஆத்ம சொரூபம்; அகங்காரத்தின் அலைகளும், எண்ணங்களும் ஒடுங்கி, நான்-என்ற அகந்தை அற்ற நிலையில் ஆழ்ந்த அமைதி நிலவும் இடமே ஆத்மா ஆகும் ||61||
பரமாத்மா அல்லது சிவன் என்று அறியப்படும் அந்த சாரத்திலிருந்து உடலுள்ள ஆத்மா வேறுபடவில்லை, அதற்குத் தேவையானது எல்லாம் சுய உணர்வு எனும் ஆத்மாவோடு தொடர்பு கொள்வதுதான், அது நிகழ்ந்து விட்டால், துக்கம், சோகம், சீற்றம், பாவங்கள் அல்லது துன்பம் இனி எப்படி நிலைத்திருக்கும்? ||62||
தூல உடல்களும் சூக்கும உடல்களையும்தான் நான் (ஆத்மா) என தவறாக அடையாளம் காண்கின்றோம் ; அந்த ஆத்மா இயல்பாகவே தூய்மையானது, முதன்மையானது; அது ஒரு சாட்சியாக மட்டுமே உள்ளது; நம்முடைய உண்மையான அடையாளத்தை மறந்து, உறவுகள் (மகன், மனைவி, செல்வம்) மற்றும் உடலின் மீது அதீதப் பற்று வைக்கும்போது, அவற்றிற்கு ஏற்படும் மாற்றங்களை நமக்கேற்பட்டதாகக் கருதுகிறோம்; இந்தத் தவறான அடையாளப்படுத்தலே பாசத்தையும், அதன் தொடர்ச்சியாகத் துக்கத்தையும் உருவாக்குகிறது ||63||
மேற்கூறிய அத்வைத (பேதமற்ற) நிலையை உணராதவர்கள், மெய்யான ஆனந்தத்தை அறிய இயலாதவர்களாவர்; இவர்களே தங்கள் பிள்ளைகளால் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்; மேலும், துயரச் சுழற்சிகளை மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்காக இவர்கள் பல பிறவிகளை எடுக்கிறார்கள் ||64||
பிள்ளைகள் பிறக்கும்போது, தங்கள் தாயாருக்கு கடுமையான பிரசவ வேதனையைத் தருகிறார்கள்; பிறந்த அந்தத் தருணத்திலிருந்தே, இப் பிள்ளைகளுக்குக் கிரக தோஷங்களோ அல்லது வேறு நோய்களோ ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமோ?’ என்ற கவலைக்கும் அச்சத்திற்கும் அவர்கள் காரணமாகி விடுகிறார்கள் ||65||
பிள்ளைகள் அடிக்கடி நோய் வாய்ப்பட்டு, தங்கள் பெற்றோருக்குப் பெருத்த அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்; அவர்கள் வளர்ந்த பிறகு, அந்தச் சகோதரர்களே ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டு பெரியோர்களுடன் சண்டையிடுகிறார்கள்; ஏன், அண்டை வீட்டாரும் இவர்களைப் பற்றிப் புகார் கூறிக் கொண்டு சண்டையிட வருகிறார்கள்||66||
இளமைப் பருவத்தை எட்டிய அந்த பிள்ளைகள் வளரும்போது, ‘இவர்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று பிழைப்பார்களா அல்லது மந்த புத்தியுடன் இருப்பார்களா?’ என்று பெற்றோர் கவலைப்படுவார்கள்; கற்பிக்கப்படும் கல்வியை அந்த பிள்ளைகள் கிரகித்துக் கொள்ளவில்லை என்றால், அது அவர்களை பராமரிப்பவர்களின் கவலை சுமையை மேலும் அதிகரிக்கவே செய்கிறது||67||
ஆண்டுகள் உருண்டோடும்போது, அவர்கள் கவலைப்படப் புதிய காரணங்களைக் கண்டடைகிறார்கள்; இன்னும் திருமணம் ஆகவில்லையே, இன்னும் தகுந்த துணையைத் தேடிக் கொள்ளவில்லையே; எதிர் காலத்தில் இவர்களின் நிலை என்னவாகுமோ?’ என்றெல்லாம் அவர்கள் கவலை கொள்கிறார்கள் ||68||
குறிப்பாக திருமணத் துணையைப் பற்றியே ஐயங்கள் எழுகின்றன; ஒருவேளை விதி வசத்தால் திருமணம் நடந்தேறினாலும், தம்பதியரிடையே பரஸ்பர அன்பும் பாசமும் இல்லையென்றால், அது முதியவர்களுக்கு மேலும் கவலையையே கூட்டுகிறது ||69||
ஒருவேளை தம்பதியர் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்ந்தாலும், அவர்களுக்குக் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை என்றால், அவர்கள் விவாகரத்து பெற்று மறுமணம் செய்து கொள்ள வேண்டுமா?; இந்தக் கேள்வியும் அவர்களுக்குப் பெருங் கவலையை ஏற்படுத்துகிறது||70||
வளர்ந்து வரும் கால கட்டத்தில், வாழ்வாதாரத்திற்குத் தேவையான செல்வம் சேர்ப்பதில் ஏதேனும் தடங்கல்கள் ஏற்பட்டால் அதுவும் கவலையைத் தருகிறது; இறுதியாக, உடல் தளர்ந்து முதுமை எய்தும்போது, தங்கள் ஓய்வு காலத்தை எப்படிக் கழிப்பது என்று எண்ணிப் பெற்றோர்கள் கலங்குகிறார்கள் ||71||
தங்கள் குழந்தைகளை வெறும் ‘மகன்கள்’ அல்லது ‘மகள்கள்’ என்று மட்டுமே கருதுபவர்கள், அவர்களைத் தனி ஆத்மா க்களாகப் பார்க்கத் தவறுபவர்கள், ஒவ்வொரு நாளும் எழும் புதிய புதிய சிக்கல்களால் பெரும் சுமையை சுமக்கிறார்கள்; இறக்கும் நாள் வரை அவர்களின் வாழ்க்கை இவ்வாறே கவலைகளோடு கழிகிறது ||72||
ஒரு தாய் கருவுற்றிருக்கும்போதோ அல்லது கருத்தரிக்க இயலாத நிலையிலோ, அல்லது பிரசவத்தின்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ, அந்நாள் முதலே, குழந்தையைப் பற்றிய கவலைகள் தொடங்கி விடுகின்றன; ஆகையால் பெற்றோர்களுக்கு, கவலை என்பது கருத்தரிப்பதற்கு முன்பிருந்தே தொடங்கி, அதன் பின்னரும் இடைவிடாத கவலை எனும் தீயால் தாங்கள் வாட்டப்படுவதாகவே தோன்றுகிறது ||73||
சமூகத்தில் உங்களைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கி, இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்; உங்கள் மகனின் மீது நீங்கள் வைத்திருக்கும் பாசத்தை, சாஸ்திரங்கள் அறிவுறுத்தியுள்ள நல் வழியில் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்; உங்கள் மகனின் பிறப்பினால், பரம்பொருளின் மீது நீங்கள் கொண்டுள்ள பக்திப் பெருக்கமும் அன்பும் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்; இந்த உயர்ந்த புரிதலோடு உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயலுங்கள்’ ||74||
நாரத முனிவர் தொடர்ந்து கூறினார் ‘ஓ ஆயுவே இப்போது உன்னை வாட்டிக் கொண்டிருக்கும் உன் மகனைப் பற்றிய கவலையானது, உண்மையில் அசுரனான ஹுண்டாசுரன் வசமே உள்ளது; அவன் உன் மகனைக் கடத்திச் சென்று, அவனைத் தன் எதிரியாகவே கருதுகிறான்; கூடிய விரைவில் அவனைக் கொன்று விடுவதற்காகவே, தன் அசுர ராஜ்யத்திற்கு அவனை அழைத்துச் சென்றுள்ளான்||75||
விதி வசத்தாலேயே உன் மகன் ஹுண்டாசுரனின் பிடியிலிருந்தும், அவனது கூட்டாளிகளின் பிடியிலிருந்தும் தப்பித்து, இப்போது ஒரு முனிவரின் பாதுகாப்பில் நலமாக இருக்கிறான்; அவன் பூரண நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறான்; அவனுக்குத் தேவையான அனைத்துக் கலைகளையும், அறிவையும் அந்த முனிவர் அவனுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார் ||76||
அவன்தான் அங்கே வளர்ந்து, தன் பகைவர்களை அழித்து, முனிவர்கள் கற்பித்த கல்வியைப் பெற்று, திருமணம் செய்து கொண்டு, அதன் பின் தன் புது மனைவியுடன் உன்னிடம் திரும்பி வருவான் ||77||
ஆகவே, அவனைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம் என்று உனக்குத் தெரிவிக்கவே இங்கு வந்தேன்; உன் அரசை நீதியுடன் ஆட்சி செய்; உன் மகன், ஸ்ரீமத் தத்த பகவானின் அருளால் பெற்ற இந்த உடலைக் கொண்டே, எதிர் காலத்தில் தேவலோக மன்னனான இந்திரனின் சிம்மாசனத்தைப் பகிர்ந்து கொள்ளும் பெருமையைப் பெறுவான்’||78||
இவ்வாறு நாரத முனிவர் துயருற்ற பெற்றோரைத் தேற்றி விட்டு, விரைவாக விடைபெற்றுச் சென்றார்; மனத் தெளிவு பெற்ற மன்னன், இப்போது துயருற்றிருந்த தன் மனைவியிடம் இவ்வாறு கூறினான் ||79||
உயிருள்ளவை (சித்) எவை, உயிரற்றவையும் நிலையற்றவையும் (அசித்) எவை என்ற பகுத்தறிவை நாரத முனிவர் நமக்குக் கற்பித்துள்ளார்; நாம் அந்தப் பகுத்தறிவைப் பின்பற்ற முயன்று, நம் துயரத்தை விட்டு விடுவோம் ||80||
ஆத்மா க்களாகிய நமக்கு, யார், யாருக்கு மகன் ஆக முடியும்?; வெறும் கற்பனையின் காரணமாக ஒருவன் ஏன் பந்தத்தில் சிக்கிக் கொள்ள வேண்டும்?; தவறான அடையாள உணர்வால் பிறந்த அந்தப் பாசக் கயிற்றை நாம் அறுத்து எறிவோம்; அப்போதுதான் மனம் தான் தேடும் அமைதியைப் பெறும் ||81||
பெரும் முயற்சியின் மூலமே என்னால் ஸ்ரீமத் தத்த பகவானை பார்த்து மகிழ்விக்க முடிந்தது; அவர்தான் எனக்கு இந்த வரத்தை அருளினார்; நானும் ஒரு மகனைத் தவிர வேறு எதையும் அவரிடம் கேட்கவில்லை||82||
எனினும், இந்த மகன் உனக்குத் துயரத்தை ஏற்படுத்துவான் என்று ஸ்ரீமத் தத்த பகவான் அப்பொழுதே என்னிடம் கூறியிருந்தார்; இப்போது அது அனைத்தும் நிகழ்ந்து விட்டது; அவர் அந்தச் சமயத்திலேயே என்னை முன்னெச்சரிக்கை செய்திருந்தார்||83||
என் வம்சம் தழைக்க வேண்டும் என்ற ஆசையாலும், அந்த விருப்பத்திலேயே மனம் லயித்திருந்ததாலும், இப்போது நான் இவ்வுலகப் பந்தங்களில் காரணமின்றி சிக்கிக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்; அதன் உண்மையான பொருளை நான் இப்போதுதான் உணர்கிறேன்||84||
வேதங்கள் ‘புலன்களுக்கு எட்டாதது’ என்று போற்றும் அந்தப் பரம்பொருளை, சோம்பேறிகளும் மந்த புத்தியுடையவர்களும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது; அவர்கள் எதார்த்தத்தை, தங்களுக்கு அல்லது தங்கள் கற்பனைகளுக்கு ஏற்றவாறே புரிந்து கொள்கிறார்கள்; இதன் விளைவாக, அவர்களின் வாழ்வில் துயரங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன ||85||
இன்று நாரத முனிவர் நமக்கு எடுத்துரைத்த அனைத்தும், ஒரு பேருண்மையை புரிந்து கொள்வதற்கு துணை புரிந்துள்ளன; அதாவது, நான் கடவுள் ஸ்ரீமத் தத்தரை எவ்வகையில் வழிபட்டிருப்பினும், அதன் பலனாகவே இந்த பேறு எனக்குக் கிடைத்து உள்ளது ||86||
தவம் புரிவதாயினும், வேத யாகங்களை இயற்றுவதாயினும், இறை நாமத்தைச் ஜெபிப்பதாயினும் அல்லது தாராளமாகத் தானமளிப்பதாயினும், அவற்றால் மட்டும் அவர் அனைவருக்கும் காட்சி தருவதில்லை; அத்திரி முனிவரின் திருமகனாக அந்தத் தெய்வம், களங்கமற்ற பக்தியினால் மட்டுமே அடையக் கூடியவர்; அத்தகைய அவதார இறைவனையே நான் தரிசிக்கும் பேற்றைப் பெற்றுள்ளேன் ||87||
இவ்வாறு அவர் அனைத்து வகையிலும் நமக்கு அருள் புரிந்துள்ளார்’; இவ்வளவு கூறி விட்டு அவர் மௌனமானார்; ஆனால் அதைக் கேட்ட அரசி, தெய்வமான ஸ்ரீமத் தத்தரின் கருணையானது எப்போதும் தங்கள் நன்மைக்காகவே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாள் ||88||
அதன்பின் அரசி ஸ்ரீமத் தத்த பகவானை வணங்கி விட்டு, தன் உள்ளம் கனிந்த அன்போடு இவ்வாறு கூறினாள் ‘இத் திருமொழிகள் மிகவும் வலிமை வாய்ந்தவையாகவும், உள்ளத்திற்கு இனியவையாகவும், மரணப் படுக்கையில் கிடந்த ஒருத்தியை மீண்டும் உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மருந்தாகவும் எனக்குத் தோன்றுகின்றன||89||
இந்த ஆறுதல் தரும் போதனையானாது அனைத்து வேதங்களின் சாரமாகிய அமுதக் கலவையாகத் தோன்றுகிறது; அத்தகைய அரிய தொகுப்புரையையே நாரத முனிவர் நமக்கு உபதேசித்துள்ளார்; இப்போது என் மனம் அமைதி அடைந்து விட்டது; இனி உங்கள் மீதோ அல்லது இவ்வுலகத்தில் மீதோ எனக்கு எவ்விதக் குறையும் இல்லை; என் மனம் இப்போது கவலைகளிலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டது’ ||90||
அருள் கூர்ந்து, நாரத முனிவரை நம்மிடம் அனுப்பி வைத்த அதே இறைவன்தான் இவர்; நம் கற்பனை மற்றும் நமது தவறான நம்பிக்கைகளை அவர் களைந்து விட்டார்; இப்போது, ‘அவருடைய திருவடிகளில் பக்தி’ எனும் உணர்வு நம் உள்ளத்தில் முளைத்தெழுந்துள்ளது ||91||
போற்றி உமக்கு, ஓ இறைவா ஸ்ரீமத் தத்தா, ஓ பரம்பொருளே, முடிவற்ற புருஷோத்தமனே, சாதாரண ஐம்புலன்களின் எல்லைக்கு அப்பாற்பட்டவரே, செயல்களைச் செய்பவர் நீரே; படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்து, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவரும் நீரே ||92||
குணங்களாகட்டும், அல்லது செயல்களுக்கு உட்படும் பொருட்களாகட்டும், அல்லது ஆற்றல் மிக்க ஞானத்தின் விளைவாகட்டும், பெயரும் உருவமும் கொண்ட அனைத்திற்கும் நீரே முழு முதற் தலைவராகத் திகழ்கிறீர்; ஆயினும், அந்த பொருட்கள் அனைத்தும் அழிவுறும் தன்மையைக் கொண்டிருப்பதால், அவற்றோடு இணைத்துப் பார்க்கும்போது, நீரும் ஒரு மாயப் பொருளைப் போலவே தோன்றுகிறீர் ||93||
இறைவன் சங்கரனாக நின்று அனைத்தையும் அழிப்பவர் நீரே; இறைவன் பிரம்மாவாக நின்று படைப்புலகத்தை அனுபவத்திற்குரியதாக்குபவரும் நீரே; காலத்தின் நியதிப்படி படைப்பைக் காப்பவர் இறைவன் விஷ்ணுவாகிய நீரே; ஓ ஒப்பற்ற தனிப் பொருளே, இத்தகைய பற்பல பெயர்களையும் உருவங்களையும் ஏற்றுக் கொள்பவர் நீரே ||94||
அபர்ணா அல்லது பார்வதி தேவியின் திவ்ய பதியாய் இருப்பவர் நீரே; லட்சுமி தேவியின் துணையாய் இருப்பவர் நீரே; சரஸ்வதி தேவியோடு இரண்டறக் கலந்திருப்பவர் நீரே; அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பவரே, உமக்கு என் வந்தனங்கள்; அனைத்துக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளாய் இருந்தும், என் கணவரால் அறியப்பட்டவரே, உமக்கு என் வந்தனங்கள் ||95||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘மாயாபிஃ புருஷரூபஸ்த்வம் ப்ரதிரூபோ விபாஸி யத், ரூபம் ரூபம் ஸ்வபக்தானாம் உத்தாரயேந்த்ர தே க்ரியா’*
இதன் விளக்கம் என்ன என்றால் ‘பகவானே! உமது மாயையினால் நீர் மனித உருவம் எடுத்தவர் போலத் தோன்றுகிறாய்; ஆனால் நீர் உண்மையில் அண்ட சராசரங்களின் ரூபமாகவே இருக்கிறாய்; உமது பக்தர்களின் துயரத்தைப் போக்குவதற்காகவும், அவர்களை உய்விப்பதற்காகவும் நீர் வெவ்வேறு ரூபங்களை (அவதாரங்களை) எடுக்கிறாய்; உம்முடைய அதியற்புதமான ‘மாயா’ சக்தியின் காரணமாகவே, நீர் ஒரு திவ்ய புருஷனாகிய ‘தத்த’ இறைவனாகக் காட்சி அளிக்கிறீர்; உண்மையில், ஆண்-பெண் எனும் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவராக, நீர் உம்முடைய சுய நிலையில் திகழ்கிறீர்’ {*இந்த ஸ்லோகம் ஸ்ரீமத்மத் பாகவதத்தில் (4.7.51) இடம் பெற்றுள்ளது}||96||
கற்பனையையும், அதனோடு தொடர்புடைய அனைத்தையும் கடந்து செல்ல எனக்கு வல்லமையளித்தவர் நீரே; நான் வெறும் இந்த உடல் மட்டுமல்ல என்பதை உணரும்படி என்னை விழித்தெழச் செய்தவர் நீரே; காமம், பேராசை மற்றும் கோபம் ஆகியவற்றை வெல்ல எனக்குச் சக்தியளித்தவர் நீரே; என் உள்ளத்தில் பக்தி எனும் விதையை விதைத்தவரும் நீரே ||97||
உமது உண்மை இயல்பு என்னவென்று நான் அறியேன்; உமது திருவடிகள் எங்குள்ளன என்பதையும் நான் அறியேன்; இவ்வுலகில் உள்ள பெரும்பாலோர் எத்துணை ஆழமாகப் பற்றுக்களில் சிக்கித் தவிக்கின்றனர் என்பதைப் பாரும்; இப்போது, உமக்குத் தொண்டு செய்வதால் விளையும் பேரின்பத்தை நான் நுகர எனக்கு அனுமதியருளும்; தூய அத்வைத நிலையை (பேதமற்ற ஒருமை நிலையை) நான் முழு உணர்வுடன் அறியச் செய்தருளும்||98||
மனிதன் ஐம் புலன் இன்பங்களை விரும்பினால், அதையும் நீரே அவனுக்கு அருளுகிறீர்; ஆனால், உண்மையான ஆன்மீகத் தேடலுடையவர்களுக்கு விடுதலையை அருள்பவர் நீரே; அவ்வாறு விடுதலை பெற்ற ஆத்மா க்கள் உமது திருவடிகளில் திளைத்து மகிழ்கின்றனர்; அனைத்து உயிரினங்களுக்கும், விரும்பியதை அருளும் சிந்தாமணி எனும் அற்புத ரத்தினத்தைப் போன்றவர் நீரே என்று தோன்றுகிறது||99||
எனது மிக உயர்ந்த ஆன்மீக நிலை உன்னிடமே குடி கொண்டிருக்கிறது’ இவ்வாறு இறைவனைப் பிரார்த்தித்த, அமைதி அடைந்த அரசி இந்துமதி, பின்னர் தன் கணவனான மன்னனையும் அவ்வாறே பிரார்த்திக்குமாறு மென்மையாகத் தூண்டினாள்; அவரும் மிகுந்த அன்புடனும் பக்தியுடனும் இறைவனைப் பிரார்த்தித்தார் ||100||
ஓ தேவாதி தேவனே, எனது சிந்தனை ஆற்றல்கள் அனைத்தும் உமது திருவடிகளிலேயே நிலைத்திருக்கட்டும்; உமது திவ்ய உபதேசங்களினால் அனைவரையும் ஆசீர்வதிக்கும் பரம்பொருளே; உமது ஆனந்தமயமான திருவிளையாடல்களில் நான் முழுமையாக லயித்துப் போக அருள்வீராக ||101||
உமது தெய்வ குணங்களைப் போற்றிப் பாடுவதன் மூலம் எனது பேச்சு தூய்மையடையட்டும்; அவ்வாறு செய்வதன் மூலமே நான் விரும்பும் அந்தப் பெரும் பேற்றைப் பெறுவேன்; ஓ, ஸ்ரீமத் தாத்தா பகவானே எனது மிக உயர்ந்த செல்வமாகத் திகழும் ஞானப் பொருளே||102||
உம்மிடம் உண்மையான பக்தி கொண்டுள்ள அடியவர்களுக்குச் சேவை செய்ய என் கைகள் பயன்படட்டும்; ஓ இறைவா, அந்த மங்கலமான வரத்தை எனக்கு இப்போதே அருள வேண்டும் ||103||
உமது புகழைப் பாடும்போது என் மனம் உருகட்டும்; உமது உண்மை இயல்பை உணரும்போது என் ஆத்மா வே உருகிப் போகட்டும்; அத்தகைய நற்செயல்கள் மூலம், நான் செய்த கர்ம வினைகளின் விளைவுகளால் என் மீது சுமத்தப்பட்டுள்ள பெரும் சுமை குறைய அருள்வீராக||104||
என் உடல் தெய்வீகப் பரவசத்தால் சிலிர்க்கட்டும்; உமது இருப்பை உணரும்போது என் உடல் மயிர்கள் சிலிர்த்து நிற்கட்டும்; உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதங்களால் நான் கட்டுண்டு கிடக்காத, அந்த மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைய அருள்வீராக ||105||
ஒரு கழுகு எவ்வாறு தான் பிணைக்கப்பட்டிருந்த கட்டுகளிலிருந்து விடுபட்டுப் பறக்கிறதோ, அதேபோலவே, நம்மைச் சிக்க வைக்கும் இந்த உலகப் பற்று எனும் பிணைப்பிலிருந்து விடுபட, எங்களுக்கும் நீரே அருள் செய்ய வேண்டும் ||106||
என் உணர்வுகள் தூய்மையானவையாக இருந்து, உமது திருவடிகளிலேயே முழுமையாக நிலை பெறட்டும்; மேலும், இந்தச் செல்வங்கள் அனைத்தும் உமது அருளால் என்னுடனேயே என்றும் நிலைத்திருக்கட்டும்||107||
இவ்வாறு, அரசன் ஆயு மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் கடவுள் ஸ்ரீமத் தத்தரை மீண்டும் மீண்டும் போற்றித் துதித்தான்; பின்னர், தன் அரசை அறநெறி வழுவாமல் ஆட்சி செய்து வந்தான்; அந்த ஆட்சி தொடர்பான அனைத்துக் கடமைகளையும், பசுவின் குளம்படி மண்ணில் ஏற்படுத்திய சிறு பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீரைப் கடப்பதற்குத் தேவைப்படும் மிகச் சிறிய முயற்சியைப் போலவே, மிகவும் எளிதானவையாகவும் அற்பமானவையாகவும் அவன் கருதினான்||108||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் நாற்பத்து மூன்றாம் (43) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் நாற்பத்து மூன்றாம் (43) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 4539 = 4647
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -11, அத்தியாயம் 43 முடிவடைந்தது
அத்தியாயம் 44 தொடர்கின்றது