COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -11 : அஷ்டாங்க யோக தத்துவம்
அத்தியாயம் 42
மகனைக் காணாத துயரத்தில் மன்னனும் ராணியும்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா தன் சீடன் தீபக்கிற்குத் தொடர்ந்து கூறினார் ‘நகுஷன் கடத்திச் செல்லப்பட்ட பிறகு, அந்த அரக்கனால் உருவாக்கப்பட்ட அனைத்து மாயைகளும் விடியற் காலையில் மறைந்து போயின; மறுநாள் காலையில் மன்னர் ஆயுவின் அரண்மனையில் இருந்த அனைவரும் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தனர்; அதேபோல ராணி இந்துமதியும் விழித்தெழுந்தாள் ||1||
தன் அருகில் இருந்த தனது குழந்தையைக் காணாத அவள், அவனை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடினாள்; பின்னர், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அப்போதுதான் விழித்தெழுந்திருந்த தன் பணிப் பெண்ணிடம் குழந்தையைப் பற்றிக் விசாரித்தாள்||2||
அந்தப் பணிப் பெண்ணின் பதிலைக் கேட்டு வியப்படைந்த அவள், தன் கண்களைத் தேய்த்துக் கொண்டு தெளிவாகப் பார்த்தாள்; ஆயினும், குழந்தை இருக்கும் எந்தவொரு இடத்தின் அடையாளத்தையும் யாராலும் கண்டறிய முடியவில்லை; இதனால் ராணியின் அந்தப்புரத்திற்குள் பெரும் துயரம் சூழ்ந்து கொண்டது||3||
குழந்தை எங்கு சென்றிருக்கக் கூடும் என்று தான் நினைத்த இடங்களிலெல்லாம் தாய் இந்துமதி தொடர்ந்து தேடினாள்; ஆயினும் அவனை அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை; எனவே அவள் உரக்கக் கதறி அழுதவாறே, தரையில் மயங்கி விழுந்தாள் ||4||
துயரத்தால் கதறிய ராணி இவ்வாறு புலம்பினாள் ‘ஐயோ! என் வாழ்வு வீணாகி விட்டதே; யாரோ ஒருவன் என் உயிரையே என்னிடமிருந்து பறித்துச் சென்று விட்டானே; என் மகன் காணாமல் போய் விட்டான்; நமது எதிரி தனது மாய வலையை இந்த அரண்மனை வளாகம் முழுவதும் விரித்து விட்டான் போலும் ||5||
அவள் மேலும் இவ்வாறு அலறினாள் ‘ஓ இறைவா, பரம்பொருளே, என் குழந்தையை யார் கடத்திச் சென்றது?; ஓ பிரபஞ்சத்தின் பரம பாதுகாவலனே, சர்வ வல்லமை படைத்த இறைவா, இனி நான் என்ன செய்வேன்? ||6||
துயரம் என்னும் தீயில் என்னைச் சுட்டெரிய விட்டு விட்டு, என் குழந்தை எங்குதான் சென்று விட்டான்?; அவன் சந்திர குலத்தின் ரத்தினம் ஆயிற்றே; அவன் இல்லாமல், என் மனதை நான் எவ்வாறு அமைதியாகவும் சம நிலையோடும் வைத்துக் கொள்வேன்’ ||7||
யார் அந்தக் கோழை?; அவன் எதற்காக இங்கு வந்து, என் துரதிர்ஷ்டவசமான குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டான்?; எதற்காக அவன் எங்களின் செல்வத்தைக் கொள்ளையடிக்கத் துணிந்தான்?; நான் ஏன் இவ்வளவு ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து போனேன்?||8||
அவளது துயரத்தின் தீவிரம் அதிகரிக்கவே, பெற்றோர் இருவரும் கடும் தவத்தை மேற் கொள்ளத் தீர்மானித்தனர்; இழந்த தங்கள் மகனை மீண்டும் பெறும் நம்பிக்கையில், மிகக் கடுமையான ஆன்மீக நியமங்களைக் கடைப் பிடிப்பதாக அவர்கள் சபதம் பூண்டனர் ||9||
இது எப்படி இவ்வளவு திடீரென்று நிகழ்ந்தது?; பிறந்த சிறிது காலத்திலேயே, அவன் இந்த பூமியில் பிறக்காதது போல மறைந்து விட்டானே;அவன் ஒரு தெய்வீகக் குழந்தையைப் போலவே காட்சியளித்தான்; அவனைப் போன்ற ஒருவனை நான் என் கனவில் கூட கண்டதில்லை’ என்று அவள் விம்மி அழுதாள் ||10||
இங்கிருந்து அவனை யாரால் கடத்திச் சென்று இருக்க முடியும்?; யார் வந்து அவனை கடத்திச் சென்றது?; எதற்காக அவ்வாறு செய்தனர்?; ஸ்ரீமத் தத்தாத்திரேயப் பெருமானிடமிருந்து வரமாகப் பெற்ற இந்தக் குழந்தை, எப்படி மறைந்து போயிற்று; நான் அனுபவிக்கும் இந்தத் துயரத்தைப் பாருங்கள்’ என்று அவள் தொடர்ந்து புலம்பினாள் ||11||
எவருடைய மகத்துவம் அளவிற்கதிகமோ, எவரைத் தேவர்கள் அனைவரும் தலை வணங்குகிறார்களோ, அந்தச் சர்வ ஞான (எல்லாம் அறிந்த) ஸ்ரீமத் தத்தாத்திரேயப் பெருமானே, தமது வரத்தின் மூலம் இவனை நமக்கு மகனாக அருளினார் ||12||
காலமே அஞ்சக் கூடிய ஆற்றல் கொண்டவர் ஸ்ரீமத் தத்தப் பெருமான்; அவர் அருளும் வரங்களும் ஆசிகளும் அனைத்தும் நிச்சயம் பலிக்கும்; அப்படியிருக்க, என் விஷயத்தில் மட்டும் அது ஏன் பலிக்கவில்லை?; நிகழ்வுகளின் இந்தத் திருப்பத்தைக் கண்டு நான் திகைத்து நிற்கிறேன் ||13||
என் குழந்தை எவ்வளவு வசீகரமானவன்; தெய்வீகப் பண்புகள் கொண்ட என் குழந்தையே, என்னிடம் திரும்பி வா; அழகே உருவானவனே, நீ எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாய்?; நீயே என் உயிருக்கு ஆதாரமானவன்; விரைந்து என்னிடம் திரும்பி வா ||14||
என் மீது உனக்கு ஏன் இவ்வளவு கோபம்?; நான் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து விட்டதால், உன்னைச் சரி வரக் கவனிக்கத் தவறியதுதானா அதற்குக் காரணம்?; வா, விரைந்து என்னிடம் திரும்பி வா; இனிமேல் நான் ஒருபோதும் இவ்வளவு கவனக் குறைவாக இருக்க மாட்டேன்’ என்றெல்லாம் கதறி அழுதாள் ராணி ||15||
மேலும் கதறிக் கொண்டே இருந்தாள் ; ‘துதி: ‘ஹரப் பெருமானே; சிவபெருமானே; என் அறிவில் படிந்துள்ள மயக்கத்தை நீக்கியருள்வாயாக; அந்த மயக்கத்தால்தான் நான் என் மகனை இழந்து விட்டேன்; இப்போது நான் என்ன செய்வது? ||16||
அந்தத் துரதிர்ஷ்டவசமான இரவில் நான் விழித்து இருந்திருந்தால் உறக்கம் என்னை ஆட்கொண்டிருக்கா விட்டால், நான் இந்தத் துயரமான சூழலைச் சந்தித்திருக்க மாட்டேன்; என் மகனே, நான் எப்படி உன்னை இழக்க நேர்ந்தது?’ ||17||
நீயே தெய்வீகப் பண்புகள் நிறைந்தவன்; எதிர் காலத்தில் ஒரு சிறந்த கல்விமானாக, பண்டிதனாகத் திகழப் போகிறவன்; ஆனால், என் கண்களுக்கு நீ தென்படாமல் மறைந்து விட்டதால், அந்த நம்பிக்கைகள் அனைத்தும் இப்போது வீணாகி விட்டன ||18||
நீ உன் பகைவர்களை வெல்வாய்; அரசை அற நெறியோடு ஆள்வாய்; எங்கள் முதுமையில் எங்களுக்குத் துணையாய் நின்று எங்களை உயர்த்துவாய்; இவையே நாங்கள் கொண்டிருந்த எண்ணங்கள், ஓ என் மகனே||19||
ஒன்பது மாதங்கள் உன்னை நான் பெரும் சிரமத்துடன் என் கருவில் சுமந்தேன்; ஆனால், உன்னைக் காணப் போகிறோம் என்ற ஒரே நம்பிக்கையில், அந்தச் சிரமங்களை ஏதும் பொருட்படுத்தாமல் அந்த நாட்கள் கழிந்தன; ஆனால் இப்போது, அந்த நம்பிக்கை அறவே அற்றுப் போய்விட்டது ||20||
இப்போதைய துயர நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கையில், நான் கருவுற்றிருந்த காலம் முழுவதுமே ஒரு கனவாகவே தோன்றுகிறது; ஓ என் அன்பு மகனே, என் மீது துயரத்தின் ஒரு பெரும் மலையே வந்து விழுந்து விட்டது போல் உணர்கிறேன்||21||
என் அனைத்து ஆசைகளும், என் கருவின் பயனே ஆன உன்னைச் சுற்றியே மையம் கொண்டிருந்தன; ஆனால் அந்த ஆசைகளில் எதையுமே நீ இது வரை நிறைவேற்றவில்லை; அந்த வெற்றிடத்தை இனி யார் வந்து நிரப்ப இருக்கின்றார்கள் ||22||
இப்போது பேசுவதற்கே நான் களைத்துப் போய் விட்டேன்; ஆயினும் என் துயரத்திற்கு மட்டும் முடிவே இல்லை; என் உயிரே என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டது போல் உணர்கிறேன்; என் அச்சங்களையும் துயரங்களையும் தணிக்க இவ்வுலகில் எவராலும் இயலாது||23||
நான் உன்னை முழுமையாக நம்பியிருந்தேனே; ஏன் என்னை விட்டுப் பிரிந்து நீ சென்று விட்டாய்?; இந்தத் துயரப் பிரிவு ஏன் உன்னைச் சிறிதும் உலுக்கவில்லை?; எனக்குப் பதிலளிப்பாயாக, ஓ என் அன்பு மகனே ||24||
எந்தத் திசையிலும் உன்னைக் காணாததால், என் நம்பிக்கைகள் அனைத்தும் வீணாகி விட்டவைப் போல தோன்றுகின்றன; உடைந்த நம்பிக்கைகளுடன் என் நிலையும் பரிதாபத்திற்குரியதாகி விட்டது; இனி நான் என்னை எப்படிக் காத்துக் கொள்வேன்?’ ||25||
இவ்வாறு புலம்பியபடியே, ‘உன் அழகிய முகத்தை மறக்க முடியாமல் , நான் என் தலையைச் சுவரில் மோதிக் கொள்கிறேன்; ஐயோ! மரணம் ஏன் என்னை இன்னமும் வந்தடையவில்லை? ||26||
ஓ மகனே; நீ ஏன் உன் முகத்தை எனக்குக் காட்ட மறுக்கிறாய்?; எங்கே சென்று ஒளிந்து கொண்டாய்?; பார், உனக்காக என் மார்பகங்களில் பால் சுரந்து நிரம்பி வழிகிறது; அப்படியிருந்தும் ஏன் இன்னும் என் கண்களுக்குத் தென்படாமல் இருக்கிறாய்? ||27||
என் நெஞ்சம் தீயில் வெந்து கொண்டிருக்கிறது; என் மனம் பெரும் குழப்பத்தில் தவிக்கிறது; என் உடல் நிலை மிகவும் நலிவுற்றுப் போயிருக்கிறது; இத்தனைக்கும் பிறகும், என் பரிதாப நிலையைக் கண்டு உன் மனம் மட்டும் ஏன் இரங்கவில்லை? ||28||
இந்த உலகத்திற்காக நானே உன்னை பெற்றெடுத்தேன்; ஆனால் இப்போது அப்படி சொல்வதற்கே நான் வெட்கப்படுகிறேன்; உன் பிரிவால் என் முகம் களங்கப்பட்டு விட்டது போல் தோன்றுகிறது; இனி நான் மற்றவர் முகத்தை எப்படி நிமிர்ந்து பார்ப்பேன்? ||29||
தொடக்கத்திலேயே நீ என் கருப்பையில் கருவாக உருவாகாமல் இருந்திருந்தால், இந்த அளவற்ற துயரத்திலிருந்து நான் தப்பித்திருப்பேன்; ஏனெனில், என் துயரம் ஒரு மலையைப் போலப் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது||30||
என் மார்பில் இருந்து சுரக்கும் பால் வீணாக வழிந்தோடிக் கொண்டிருக்கிறது; ஏன் நீ ஓடி வந்து என்னிடம் சேரவில்லை?; எங்கே சென்று விட்டாய்?; ஏன் என்மீது கோபம் கொண்டு, என் கண்களுக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கிறாய்? ||31||
என் மகனைப் பிரிந்து நிற்கும் அளவிற்கு, நான் என்ன அநீதி இழைத்து விட்டேன்?; என் கண்களுக்கே அணிகலனாகத் திகழ்ந்த உன்னை ஒருமுறை கூட என் மார்போடு அணைத்து, உன் மனம் குளிரும் வரை நான் பாலூட்டவில்லையே||32||
ஓ மகனே, ஓடி வா என்னிடம்; உன் மனம் திருப்தியடையும் வரை பாலருந்து; என்மீது வன்மம் பாராட்டி, தொடர்ந்து மறைந்திருக்காதே||33||
இறைவனின் அருளால் உன்னை நான் வரமாகப் பெற்றேன்; அப்படியிருந்தும் இப்போது துயரத்தில் மூழ்கி கிடக்கின்றேன்; இந்தச் சூழ்நிலையை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை; என் அறிவு மழுங்கிப் போய் விட்டது; இந்த இழப்பினால் ஏற்பட்ட வேதனையை நான் எப்படித் தாண்டி வருவேன்?||34||
என் வாழ்வின் மையம் சிதறிப் போய் விட்டது போல் தோன்றுகிறது; அதன் விளைவாகவே நான் இந்தத் துயரத்தை எதிர் கொள்ள நேர்ந்துள்ளது; என் உயிர் ஏதோ நூலிழையில் தொங்கிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது; அந்த அளவிற்கு நான் நிலை குலைந்து போயிருக்கிறேன்||35||
நீ என் கருவில் இருந்தபோது, நான் எத்தனை அற்புதமான காட்சிகளைக் கண்டேன்; உன் முகம் பார்ப்பதற்கு எத்தனை அழகாக இருந்தது; அப்படியிருந்தும், உன்னைச் சீராட்டி வளர்க்கவோ, உனக்கு உணவூட்டிப் பேணவோ என்னால் இயலவில்லையே; நான் எத்தனைப் பெரும் பாவியாகி விட்டேன்||36||
மகன்களிலேயே சிறந்தவன் என் மடியில் அமர்ந்திருந்தான்; அதுவே என் நம்பிக்கையாக இருந்தது; ஆனால் இப்போது அந்த நம்பிக்கை என்னிடம் இல்லை; உன் குழந்தைத் தள்ளு வண்டியும் (pram), ஊஞ்சலும் காலியாகக் கிடக்கின்றன; உனக்காக நான் ஒரு தாலாட்டுப் பாடலைக் கூடப் பாடியதில்லையே ||37||
பாசத்தால் என்னை உன்னுடன் பிணைத்து விட்டு, இப்போது நீ என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டாய்; உனக்கு எண்ணெய் பூசி, நன்றாக நீராட்டி மகிழும் வாய்ப்பு கூட எனக்குக் கிடைக்கவில்லையே ||38||
வாயிற் காப்பாளர்களும், பணிப் பெண்களும் அங்கிருந்தும், அவர்களும் உறங்கி விட்டனர்; எங்கள் பணியாளர்கள் அனைவரையும் உறங்கச் செய்தது எதுவோ?; யார் உன்னை ஏமாற்றித் திருடிச் சென்றார்கள்?; எனக்கு ஒன்றும் புரியவில்லையே||39||
சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு கனவு போலத் தோன்றுகின்றன; உன்னை நான் சுமந்து பெற்றெடுத்தது வீணாகி விட்டதோ என்று தோன்றுகிறது; அதே போல, பிரசவத்தின் போது நான் பட்ட வேதனையும், உனக்காகச் செய்யப்பட்ட ஜாத கர்மம் மற்றும் பிற சடங்குகளும் வீணாகி விட்டனவோ என்று தோன்றுகிறது ||40||
எதிர் காலத்தில் நான் உன்னை மீண்டும் காண்பேனா?; அதை யாரால் நம்ப முடியும்?; மகனே, நான் விரைவில் இறந்து விடுவேன் போலிருக்கிறது; அந்த அளவுக்குத் தாங்க முடியாத துயரத்தை நான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்||41||
என் மனம் அமைதியற்றுத் தவிக்கிறது; நான் ஒரு பாவி என்று என்னை நானே நொந்து கொள்கிறேன்; மரணம் ஏன் என்னை அரவணைத்துச் செல்லவில்லை என்று வியக்கிறேன்; உயிர் இன்னும் உடலில் இருக்கும்போதே எத்தகையதொரு கொடிய வேதனை எனக்கு ஏற்பட்டுள்ளது? ||42||
நான் யாரையாவது புறக்கணித்தேனா?; அல்லது யாருக்காவது அநீதியாக செயல்பட்டேனா?; நான் கொடுத்த வாக்கை மீறினேனா?; அல்லது துரோகம் ஏதேனும் செய்தேனா?; அல்லது, ஒருவன் தன் உழைப்பால் ஈட்டிய செல்வத்தை நான் பறித்துக் கொண்டேனா?; நான் ஏதேனும் இழிவான செயலைச் செய்தேனா? ||43||
நான் எப்போதாவது ஒரு பாம்பைக் கொன்றேனா?; அல்லது ஒரு கற்றறிந்த அந்தணரின் செல்வத்தைச் சூறையாடினேனா?; இவ்வூரில் யாரையாவது கொலை செய்தேனா?; என் முற் பிறவிகளில் நான் செய்த கர்ம வினைகளை நான் எப்படி அறிந்து கொள்ள முடியும்? ||44||
பாவங்களிலேயே மிகக் கொடியது என்று கருதப்படுவது, இறை ஞானம் பெற்ற ஒருவரைத் தெரிந்தே அழிப்பதாகும்; அத்தகைய கொடிய குற்றத்தைச் செய்பவனின் ஒட்டு மொத்த வம்சத்தையே அழிக்கும் அளவுக்கு, அந்தப் பாவம் தீப்பிழம்பாய் எரியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன ||45||
ஒருவன் எவ்வளவுதான் புகழ் பெற்றவனாக இருந்தாலும், அவன் ஒரு அந்தணனின் செல்வத்தைப் பறித்துக் கொண்டால், அவனுக்கு வரும் பிறவிகள் எதிலும் குழந்தைச் செல்வத்தின் இன்பம் கிடைக்காது என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன் ||46||
அப்படியானால், என் கைகளால், இறை ஞானம் பெற்ற ஒரு அந்தணரை இழிவு படுத்தும் செயலில் நான் ஏதேனும் பங்கு வகித்தேனா?; அதனால்தான் மகனே, நீ எனக்குக் கிடைக்காமலே அழிந்து போனது போல உள்ளது ||47||
முற் பிறவிச் செயல்களின் விளைவாக இல்லாவிடில், இத்தகைய ஒரு பேரழிவு ஒரு போதும் நிகழ்ந்திருக்காது; அவ்வாறெனில், நானும் முற்காலத்தில் ஒருவரை அபகரித்திருக்க வேண்டும்; அதன் பயனைத்தான் இப்போது நான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேனோ என்னவோ தெரியவில்லை ||48||
குழந்தைகளுக்கிடையே ஒரு ரத்தினம் போலத் திகழ்ந்த என் மகனே; ஏதேனும் ஒரு பிறவியில் நான் நகைகளைத் திருடியிருக்க வேண்டும் போலும்; அதனால்தான், இன்று நீ என்னுடன் இல்லாமல் போய் விட்டாய் ||49||
என் அருகிலேயே உறங்கிக் கொண்டிருந்த என் குழந்தையை நான் இழந்து விட்டது, எத்தனை வியப்பளிப்பதாக இருக்கிறது; உணவருந்தத் தயாராக இருந்த ஒருவரின் தட்டை, நான் ஏதேனும் ஒரு சமயத்தில் பறித்துக் கொண்டேனா? ||50||
உன்னிடம் அனைத்து நற்பண்புகளும் நிறைந்திருந்தன; ஆனால் இப்போது நீ திடீரென மறைந்து விட்டாய்; நான் என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்குப் துரோகம் இழைத்திருக்க வேண்டும்; அதன் விளைவைத்தான் இப்போது நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் ||51||
அல்லது நான் ஒரு அந்தணரைக் கொன்றிருக்க வேண்டும்; இல்லையேல், ஒரு குழந்தையைத் துன்புறுத்திக் கொன்றிருக்க வேண்டும்; அத்தகைய பாவச் செயல்களின் காரணமாகவே, என் அன்பு மகனும் இப்போது என்னுடன் இல்லாமல் போய் விட்டான் போலும் ||52||
காரணமே இல்லாமல், வழிப் போக்கனான ஒரு துறவியை நான் துன்புறுத்தினேனா?; என் வீட்டிற்கு வந்த விருந்தினரையோ அல்லது பசியுடன் வந்த ஒருவரையோ நான் எப்போதேனும் வெளியே தள்ளினேனா?; பசியால் வாடிய ஒருவரின் வாயிலிருந்து உணவை நான் பறித்துக்கொண்டேனோ?; அதனால்தான் என் மகன் இப்போது என்னுடன் இல்லையோ? ||53||
ஒருவருக்கு அடைக்கலம் தருவதாகச் சொல்லி விட்டு, பின்னர் அவரைக் காட்டிக் கொடுத்தேனோ?; தெய்வங்களின் சன்னிதியில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை நான் அணைத்தேனோ?; அதனால்தான் என் குழந்தை இப்போது என் கண்களுக்குத் தென்படாமல் போய் விட்டானா? ||54||
மேற் கூறிய பாவங்களில் எதையும் நான் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம்; அப்படி என்றால் இந்த நேரத்தில் என் மகன் மட்டும் ஏன் என்னுடன் இல்லை? அவனை யார் கடத்திச் சென்றது? ||55||
ஆலய அர்ச்சகர்களை நான் மதிக்கத் தவறி விட்டேனோ?; பிற மதங்களையோ அல்லது நம்பிக்கைகளையோ சார்ந்த தெய்வங்களை நான் இகழ்ந்து பேசினேனா?; அல்லது, ஒரு வழிபாட்டுச் சடங்கை பாதியிலேயே விட்டு விட்டு வந்தேனா?; அதனால்தான் இப்போது நான் இந்த இழப்பைச் சந்திக்க நேர்ந்ததோ? ||56||
நான் நல்ல உணவைச் சமைத்து, பலரை விருந்துக்கு அழைத்து விட்டு, அவர்களைத் தனித் தனியே அமரச் செய்து, பாரபட்சம் காட்டினேனா?; அல்லது, அழைக்கப்பட்ட விருந்தினர்கள் வருவதற்கு முன்பாகவே நான் உணவருந்தி விட்டேனா?; என் மகனை விட்டு நான் பிரிய நேர்ந்ததற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும்? ||57||
வீணான சொற்களைப் பேசி கல்வியில் சிறந்த அந்தணரை நான் அவமதித்தேனா?; அல்லது, பசுக்களுக்கும் பண்ணை விலங்குகளுக்கும் உரிய புல்லையும் தீவனத்தையும் நான் பறித்துக் கொண்டேனா?; அதனால்தான் இப்போது நான் இந்தத் துயர நிலையை அனுபவிக்கிறேனா? ||58||
என் சொந்த பந்தங்களிடமே நான் எப்போதேனும் அநீதியாக நடந்து கொண்டேனா?; என் கணவருக்கு நான் வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டேனா?; அன்போடு வாழ்ந்த ஒரு தம்பதியைப் பிரித்து வைக்க நான் சதி செய்தேனா?; அதனால்தான் இப்போது நான் இந்தத் துயரத்தைச் சுமக்க நேர்ந்ததோ? ||59||
அல்லது, நான் கண்ட அந்தத் துர்சொப்பனங்களின் விளைவுதான் இதுவோ? அவர்கள் அத்தகைய நற்பயனை அருள முடியுமா?; நான் சூரியக் கடவுளை மிக உருக்கமாகப் பிரார்த்தித்தேனே; அது வீணாகி விட்டதா? ||60||
என் உள்ளம் இவ்வளவு வறிய நிலையில் தவிக்கிறது; இதை நான் யாரிடம் பகிர்ந்து கொள்வேன்?; இந்தப் பெருந் துயரிலிருந்து மீள யாராவது ஒரு வழி காட்ட முடியுமா? யாரேனும் என் உயிரைப் புதுப்பிக்க முடியுமா? ||61||
என் மனம் கொந்தளிப்பிலும் துயரத்திலும் ஆழ்ந்துள்ளது; இப்போது இந்த அரசாட்சியால் எனக்கு என்ன பயன்?; என் ரத்தினம் போன்ற மகன் இல்லாததால், அனைத்தும் எனக்கு நஞ்சாகவே தோன்றுகின்றன||62||
அன்பிற்குரிய ஒரு மகன், அனைத்துச் செல்வங்களையும் விட மேலானவன்; பிள்ளைச் செல்வம் இல்லாதவர்களை, யார் தேடிச் சென்று அவர்கள் வீட்டில் உபசரிப்பார்கள்? ||63||
நானும் ஒரு மலட்டுப் பெண்ணாக மாறி விட்டதாகத் தோன்றுகிறது; அத்தகைய வீடுகளில் பிச்சை ஏற்கத் துறவிகளும் விரும்புவதில்லை; பிள்ளைச் செல்வம் பெற்ற தாய், இவ்வுலகில் எங்கு சென்றாலும் போற்றப்படுகிறாள்||64||
இந்த அரண்மனை எனக்கு ஒரு காடு போலவே தோன்றுகிறது; பிள்ளைச் செல்வம் இல்லாத வீடு ஒரு காட்டைப் போலவே பாழானது; நான் இவ்வளவு ஆசையோடு இவ்வுலகிற்கு ஈன்றெடுத்த மகன் இல்லாத நிலையில், இந்த அளவற்ற செல்வத்தால் எனக்கு என்ன பயன்? ||65||
பெற்றோர் இரு தரப்பிலும் உள்ள முன்னோர்கள், தங்கள் வம்சாவளியில் பிறக்கும் பிள்ளைகளுக்காக விண்ணுலகில் காத்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது; அவர்கள் ‘இப்போது நம் வம்சம் தழைத்தோங்கும்; நாம் மேலான நிலைகளை அடையத் தேவையானவற்றை இப்பிள்ளை நமக்கு அளிப்பான்’ என்று கூறுவார்கள்||66||
நான் ஏன் தொடர்ந்து உயிர் வாழ வேண்டும்?; ஏன் ‘மலடி’ என்ற பழிச் சொல்லைச் சுமக்க வேண்டும்?; அவமானங்களைத் தாங்கிக் கொண்டு இங்கு வாழ்வதை விட, மரணத்தைத் தழுவுவதே சிறந்த வழியாகத் தோன்றுகிறது’ என்றெல்லாம் அழுது கொண்டிருந்தாள் ||67||
குரு வேத தர்மா தொடர்ந்து கூறிக் கொண்டு இருந்தார் ‘இவ்வாறு அவள் புலம்பி விட்டு, மயங்கித் தரையில் விழுந்தாள்; அவளது பணிப் பெண் விரைந்து சென்று, நிகழ்ந்த அந்தத் துயரச் சம்பவத்தை மன்னரிடம் தெரிவித்தாள் ||68||
துயரம் மேலிட, மன்னர் அந்தப் பணிப்பெண்ணுடன் அந்தப்புரத்திற்கு விரைந்தார்; அங்கே தன் அரசி, தரையில் மயங்கிக் கிடக்கும் பரிதாபகரமான நிலையைக் கண்டார்||69||
பெருந் துயரில் ஆழ்ந்த அவள், கடும் புயலில் சிக்கிய வாழை மரத்தைப் போல நடுங்கினாள்; அவளது பணிப் பெண்கள் அவளைத் தேற்றி, மயக்கம் தெளியச் செய்ய முயன்றனர்; ஆயினும் அவள் முழுமையாக உணர்வு பெறவில்லை||70||
அவளை அந்த நிலையில் கண்ட மன்னர் ஆயுவும் உள்ளுக்குள் அச்சம் அடைந்தார்; அவளது ஆழ்ந்த துயரத்தை அவரும் உணர்ந்தார்; அதனால் ஏற்பட்ட உடல் தளர்ச்சியால் அவரும் மயங்கி விழுந்தார்||71||
வெளி உலக உணர்வை இழந்து, ஊர்வசி எனும் தேவ மங்கையின் மைந்தனான அவன், தன் கைகளை நெற்றியில் வைத்துக் கொண்டு, மீண்டும் துயரக் கண்ணீர் விட்டார் ||72||
சிறிது நேரத்திற்கு முன்புதான் தன் மகனின் பிறப்பைக் கேட்டு பெற்ற மகிழ்ச்சி, இப்போது இந்தத் துயராலும், திடீரெனச் சூழ்ந்த இந்தப் அவலத்தால் களங்கப்பட்டு விட்டது; இத்தகைய இரு துருவங்களான உணர்வுகளை எவரால் ஒப்பிட்டுப் பார்க்க இயலும்?||73||
எதிர்பாராததும், உயிரையே பறிக்க வல்லதுமான அந்தச் செய்தி மன்னனைத் தாக்கி, அடுத்து என்ன செய்வதென்றே அறியாததொரு திகைப்பு நிலைக்குத் தள்ளியது; அவனும் மிகுந்த மயக்கத்திற்கும் சோர்விற்கும் ஆளாக, இனி உயிர் வாழவே விரும்பாத அரசியின் மன நிலை போல அவனுக்கும் மன நிலை ஏற்பட்டது ||74||
மழைக் கால மேகங்கள், அந்த அரச தம்பதியினர் சிந்திய கண்ணீரைக் கண்டு நாணமுற்றன; ‘இது எவ்வாறு சாத்தியம்?’ என்று வியந்து நின்றன||75||
அவன் தன் கண்களைச் சற்றுத் திறந்த போது, அந்த துயரத்தால் சிவந்திருந்த அவனது விழிகளின் நிறம் , காலை வானில் உதித்துக் கொண்டிருந்த சூரியனையே நாணமுறச் செய்தது ||76||
அச்சத்தால் உறைந்து போனவனைப் போல, மன்னன் தன் அரசியைப் பார்த்தான்; தன் மகனைப் பிரிந்து அவள் துடித்துக் கொண்டிருந்தாள்; கன்று ஈன்ற பசு ஒன்று தன் கன்றுக்காக ஏங்கிப் பெரிதும் கதறுவது போல, அரசியும் கதறினாள்; அவளது அந்த நிலையைக் கண்ட மன்னன் பெரிதும் புலம்பினான் ||77||
அவன் இறைவனை குறை கூறி புலம்பினார் ‘ஓ இறைவா, நீயே எனக்கு அச்சமின்மையை அருளினாய்; ஆனால் இப்பொழுது நான் துயரக் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்; ஏன் எங்களை இத்தகைய துயரத்தில் ஆழ்த்தினாய்? துன்பங்களை அகற்றும் ‘ஹரன்’ (Hara) என்று உனக்குப் பெயர் இருக்க, ஏன் இப்படிச் செய்தாய்? ||78||
எங்களைப் பெற்றோராக்கியதும் நீயே; ஆனால் இப்பொழுது, பிள்ளையை இழந்து தவிக்கும் இந்த அவல நிலையில் எங்களை வைத்து உள்ளாய்; நாங்கள் ஏன் இன்னும் இப்பூவுலகில் உயிரோடு இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?; ஓ இறைவா! உன் மனதில் என்னதான் உள்ளது ? எங்களிடமிருந்து நீ எதை எதிர்பார்க்கிறாய்?|79||
இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்ற ஞானம் எங்களுக்கு இருந்தாலும், இப்பொழுது நாங்கள் அனுபவிக்கும் இந்தத் துயரத்தைப் பாராய்; எங்கள் மகன் எங்களுக்குப் பிறந்ததே உன் அருளாலும் ஆசியாலும்தான்; அப்படியிருக்க, இப்பொழுது அவனை ஏன் எங்களிடமிருந்து பறித்துக் கொண்டாய்?; ஓ இறைவா, உன் மனதில் என்னதான் இருக்கிறது?||80||
நான் செய்த நற் செயல்கள் அனைத்தும், அவற்றின் பயன்களும் நீரில் மூழ்கி மறைந்து விட்டதைப் போலவே தோன்றுகிறது; எங்கள் விதி (ஊழ் வினை) முறிந்து போய் விட்டது போலிருக்கிறது; ஏதோ ஒரு காரணத்தினால், அந்தச் சர்வ வல்லமையுள்ள இறைவனே எங்கள் மீது கோபம் கொண்டிருக்கிறான் போலும் ||81||
சில கணங்களுக்கு முன்பு நாங்கள் அனுபவித்த அந்தப் பேரானந்தம், இப்பொழுது திடீரென நீரில் மூழ்கி மறைந்து போனது போலக் காணாமல் போய் விட்டது; இனி நாங்கள் அனுபவிக்கப் போகும் கடைசி இன்பம், மரணம் மட்டுமேயாக இருக்கட்டும்; இந்த நிலையில், நாங்கள் மட்டும் உயிரோடு இருப்பதினால் என்ன பயன்? ||82||
இந்த பிரம்மாண்டமான மாளிகைகளும், அரசுக் கருவூலமும், இவை அனைத்தும் வீண்; இனி தேவை அற்றவை; இந்த ஆடம்பரமான செல்வங்களும், சுக போகங்களும் வீண்; மதிப்பற்று போய் விட்டன ||83||
போர்க் களத்தில் வியூகமாக அணி வகுத்து நிற்கும் இந்தச் சேனைகளும் இந்தத் துறவு மனநிலையில் உள்ள எனக்கு வீணானவை போலவே தோன்றுகின்றது; இந்த அரசைப் பாதுகாப்பதற்காகவே ஆயுதமேந்தி நிற்கும் அந்த வீரர்களும் இப்பொழுது எனக்கு வீணானவர்களே||84||
இங்கே எதிரி என்று யார் இருக்கிறார்கள்?; அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? ; ஏன் ஒரு நிராதரவான குழந்தையைக் கடத்திச் சென்றார்கள்? அவர்கள் இப்பொழுது எங்கே சென்றிருக்கிறார்கள்?; ஏன் இங்கே சுற்றிலும் யாரும் சற்றும் விழிப்புடன் இல்லை? ||85||
அந்தப்புரத்தை முற்றுகையிட்டு, எப்பாடுபட்டாவது குழந்தையை பாதுகாத்திடுங்கள்’ என்று என் காவலர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேனே; அப்படியிருக்க, அவர்கள் எப்படி இரவு முழுவதும் சும்மா உறங்கிக் கொண்டிருந்தார்கள்?; இத்தகைய கடமை தவறிய அதிகாரிகளும் கேவலமானவர்கள்||86||
மனிதனோ, தேவனோ, அல்லது அரக்கனோ, யாராக இருந்தாலும் சரி, மந்திர சக்தியையோ, மாயா ஜால வித்தைகளையோ பயன்படுத்தி, இளவரசனைக் கடத்திச் சென்றவர்கள் யாராக இருந்தாலும்; அவர்கள் அனைவரும் கேவலமானவர்கள் ||87||
என் வம்சம் (பரம்பரை) இதோடு நின்று விட்டது போலத் தோன்றுகிறது; சந்திர குலத்தின் குல தெய்வமே எங்கள் மீது கோபம் கொண்டிருக்கிறது போலும்; நான் செய்த தவத்தின் வலிமை அனைத்தும் வீணாகி விட்டது; தர்மத்தின் ஆற்றல் அனைத்தும் அழிந்து, வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது ||88||
தர்மமே வலுவிழந்ததாகத் தோன்றினால், அதன் விளைவாகத் தவமும் பயன் தராமல் போனால், தாராளமான தான தர்மங்களும் பயனற்றதாகவே அமைந்தால், தங்கள் பிள்ளைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட பெற்றோர்கள் அவர்களை எப்படிக் காக்க இயலும் ||89||
முன்னோர்கள் நற்கதி அடையாத துயர நிலையில் இருக்க, நானும் வீழ்ச்சியடையப் போகிறேன்; என் பல பிறவிகளிலும் என்னைப் பின் தொடர்ந்து வந்துள்ள துரதிர்ஷ்டமே, இப்போது இத்தகைய கொடிய வடிவில் தன் விளைவைக் காட்டியுள்ளது போல் தோன்றுகிறது ||90||
எனக்குச் சந்ததி ஏதும் பிறக்காது என்று ஜோதிடர்கள் முன்னரே கணித்துக் கூறியிருந்தனர்; அதைக் கேட்டும், ஒரு மூடனைப் போல வீண் நம்பிக்கையுடன், பயனற்றவை என்று தெரிந்தும் பல பரிகார முறைகளை நான் தேடிச் சென்று கடைப் பிடித்தேன் ||91||
என் மந்த புத்தியின் செயல்களைப் பார்த்து எனக்கே வெட்கமாக உள்ளது; என் உழைப்பு அத்தனையும் வீணாகி விட்டது; என் பிடிவாதத்தின் காரணமாகவே நான் தவத்தில் ஈடுபட்டேன்; ஆனால் அதன் மூலம் எனக்குக் கிடைத்த பலன் என்ன? ||92||
எனக்குச் சந்ததி பாக்கியம் இல்லை என்பது விதியால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது; அதனாலேயே நான் இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டேன்; உறுதியான பக்தி கொண்டவர்களுக்கு அடைக்கலம் அளிப்பவர் அவரே; தன் அடியவர்களைக் காப்பவரும் அவரே||93||
தவம் மற்றும் பிற வழி முறைகள் மூலம் இறைவனை திருப்தி படுத்த வைப்பது எளிதல்ல; ஆயினும், அத்ரி முனிவரின் தெய்வீகத் திருமகனாக அவர், என் மீது கருணை கொண்டு அருள் புரிந்தார் ||94||
அவர் தன் நற்பண்புகள் மிக்க அடியவர்களின் பக்கமே நிற்கிறார்; எனக்கு அந்தப் பலனை அருளியவரும் அவரே; அவர் அளித்த வாக்குறுதியின் மீதே நான் இன்னமும் என் நம்பிக்கையை இழக்காமல் உள்ளேன் ||95||
இறைவனின் அடியவர்கள் எவ்வாறு ஆதரவற்றவர்களாக இருக்க முடியும்?; இது எங்கும் பரவலாக அறியப்பட்ட உண்மையாயிற்றே; நானும் இறைவனின் சிறந்த அடியவன்தானே; அப்படியிருக்க, அவர் இப்போது எங்கள் மீது ஏன் இவ்வளவு பாராமுகமாக இருக்கிறார் ||96||
என் மனப் போக்கில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு, என் அறிவு சார்ந்த பக்தியில் குறை நேர்ந்து விட்டதோ?; நாங்கள் எந்த வகையிலாவது தவறு இழைத்து விட்டோமோ?; எங்கள் நடத்தையில் ஏதேனும் குறைபாடு இருந்திருக்குமோ?; இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே||97||
பல்வேறு வடிவங்களை எடுத்து அருள்பவர் அவர்; தேவர்களாலும், யோக சாஸ்திரங்களில் வல்லவர்களாலும் கூட முழுமையாக அறிந்து கொள்ள இயலாத பெருமைக்குரியவர் அவர்; அத்தகைய இறைவனின் முழுத் தன்மையையும் என்னால் எப்படி அறிந்து கொள்ள முடியும் ||98||
எப்போதும் புன்னகை தவழும் திரு முகத்தைக் கொண்டவர் அவர்; அந்தத் திருமுகத்தை தரிசித்த மாத்திரத்திலேயே உள்ளம் பேரின்பத்தால் நிரம்பி வழியும்; அனைத்துத் துன்பங்களையும் போக்கி, அடியவர்களுக்கு ஆனந்தத்தை அருள்பவர் அவரே ||99||
படைப்புக் கடவுளான பிரம்ம தேவராலும் முழுமையாக அறியப்படாத அந்தப் பரம்பொருளை நான் வணங்குகிறேன்; ஓ அந்தச் சர்வ வல்லமை பொருந்திய இறைவா, எங்களை நல் வழிப்படுத்தி, எங்கள் துன்பங்களைப் போக்கி அருள் புரியட்டும் ||100||
பிரம்மன் என்று போற்றப்படும் அந்தப் பரம்பொருளின் தாமரைத் திருவடிகளை நான் வணங்குகிறேன்; அந்தப் பரம்பொருள், எங்கள் குறைகளையும் பிழைகளையும் நீக்கி எங்களைக் காத்தருளட்டும்||101||
ஓ ஸ்ரீமத் தத்தப் பெருமானே, ஓ சர்வ வல்லமை பொருந்தியவரே, பிரபஞ்சத்தின் அதிபதியே, உம் அடியவர்களைக் காத்தருள்வீராக; ஓ அன்னையே, உம்மைத் தவிர, மனதில் துன்புறும் எங்களுக்கு உதவ வேறு யார் இருக்கிறார்கள்?||102||
செல்வச் செழிப்பு, கல்வி அறிவு, நற் குடியில் பிறத்தல் அல்லது பல மணி நேரம் தவம் இயற்றுதல் ஆகிய எவற்றையும் நீர் பொருட்படுத்துவதே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே; எவர் ஒருவர் தூய உள்ளத்துடன் உம் திருவடிகளைப் பற்றிக் கொள்கிறாரோ, அவருக்கு நீர் நிச்சயமாகப் புகலிடம் அளிப்பீர் ||103||
இவ்வுலகில் பலர் மேன்மையுடனும் புகழுடனும் விளங்கினாலும், அவர்களில் பலரும் தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தவறி விழுந்து விடுகின்றனர்; நான் மிகக் குறைந்த அறிவே கொண்டவன்; நான் எத்தனை பிழைகளைச் செய்திருக்கிறேன் என்பதை என்னால் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? ||104||
ஓ அடியவர் மீது அன்பு கொண்ட இறைவா, எங்களுக்கு உம் அடைக்கலத்தை அருளும்; துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் நாங்கள் உம்மை கூவி அழைக்கிறோம்; எங்களுக்கு எவ்வித அச்சமும் இல்லாத ஒரு நிலையை அருளியருள்வாயாக||105||
நீர் எல்லையற்ற பரம்பொருள் அல்லவா?; அப்படியிருக்க, நாங்கள் ஒரு பரிதாபகரமான முடிவை அடைவதை நீர் ஏன் காண விரும்புகிறீர்?; மிகுந்த துன்பத்தில் உழலும் மற்றவர்களைப் போலவே, நாங்களும் இவ்வாறு புலம்பி அழுகிறோம்; ஓ இறைவா ||106||
அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் என் அறிவு திகைத்து நிற்கிறது; என் உயிரினும் மேலான என் மகன் என்னிடமிருந்து பிரிக்கப்பட்டதிலிருந்து நான் தவிக்கிறேன்; ஓ இறைவா, எங்கள் மீது கருணைப் பார்வை வீசுவாயா ; ஓ ஸ்ரீமத் தத்தப் பெருமானே, ஓ கருணைக் கடலே, எங்கள் முறையீட்டைக் கேட்டருள்வாயாக||106||
என் ஆத்மா வாகிய என் மகன் கடத்தப்பட்டதிலிருந்து, அடுத்து என்ன செய்வதென்று என் மனம் திகைத்து நிற்கிறது; இறைவா, எங்கள் மீது உனது கருணைப் பார்வையை வீசுவாயா; ஓ ஸ்ரீமத் தத்தப் பெருமானே, கருணைக் கடலே, எங்கள் அவளை நிலையை பாருமையா ||107||
நாங்கள் நாடும் அச்சமின்மையை எங்களுக்கு அருளுவாயாக; எங்கள் பிழைகளைப் பொறுத்தருளி, எங்களை மன்னிப்பாயாக; இறைவா, இத்தகைய இக்கட்டான நிலையில், நாங்கள் வேறு யாரை நம்பிச் சரணடைவது?’ ||108||
இவ்வாறு, முழுமையான மன ஒருமைப்பாட்டுடன், ஸ்ரீமத் தத்தப் பெருமானின் நினைவிலேயே ஆழ்ந்து, மிகுந்த பணிவுடன், மன்னர் ஆயுவும் அரசியும் தங்களுக்கு அருள்பாலித்த அந்த இறைவனிடம் முறையிட்டு கதறினார்கள் ||109||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் நாற்பத்திரண்டாவது (42) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 109
முதலாவது அத்தியாயம் முதல் நாற்பத்திரண்டாவது (42) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
109 + 4430 = 4539
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -11, அத்தியாயம் 42 முடிவடைந்தது
அத்தியாயம் 43 தொடர்கின்றது