COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -8 : ஸ்ரீமத் பரசுராமனின் புனிதப் பயணம்
அத்தியாயம் 25
ரிதுத்வஜன் பாதாளகேது போர்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
‘குரு வேத தர்மா, தன் சீடனான தீபக்கிற்கு மேலும் கூறினார் ‘மகன் தனது தந்தைக்கு* பக்தனான சஹஸ்ரார்ஜுனனின் வாழ்க்கையையும், பரம்பொருளான தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரைப் பற்றி போற்றிப் பேசியதை, மிகுந்த கவனத்துடன் செவிமடுத்தாரோ, அதே போன்ற நிலையே மேலும் தொடர்ந்தது.
{*அத்தியாயம் – இரண்டில் (2) கூறியது போல மகன் தனது தந்தைக்கு, பல்வேறு கதைகள் மூலம் ஆன்மீக போதனை கொடுத்துக் கொண்டிருந்தது தொடர்கின்றது} ||1||
தந்தைக்குக் கீழ் படிந்த மகன் தனது தந்தைக்கு தொடர்ந்து விளக்கினான் ‘இந்த பூவுலகில் ‘அலர்க்கன்’ எனும் பெயருடைய ஒரு மாமன்னர் வாழ்ந்து வந்தார்; அவரும் ஸ்ரீமத் தத்தப் பெருமானைச் சரணடைந்து, யோகக் கலையை பயின்று, அதன் வாயிலாக யோக வல்லமையின் உச்ச கட்டத்தை அடைந்திருந்தார் ||2||
ஆர்வம் மேலிட்ட தந்தை வினவினார்: ஸ்ரீமத் தத்தரின் பக்தனான அந்த மன்னன் அலர்க்கன் யார்? அவன் எந்த வகையில் ஸ்ரீமத் தத்தப் பெருமானிடம் சரண் அடைந்தான்? மேலும், அவன் ஏன் யோக வல்லமையை அடைய விரும்பினான்? ||3||
ஸ்ரீமத் தத்தப் பெருமானின் அற்புதமான பெருமைகளை நீ விரிவாக எடுத்துரைப்பதைக் கேட்க, என் மனமும் செவிகளும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றன; அவரைப் பற்றிக் கேட்டதில் எனக்கு இன்னும் முழுத் திருப்தி ஏற்படவில்லை; ஆகையால், உன்னால் இயன்றவரை விரிவாகத் தொடர்ந்து எடுத்துரைப்பாயாக ||4||
தெய்வீகப் பேரொளி வடிவாகத் திகழும் அப் பரம்பொருள், யோக மார்க்கத்தை உலகிற்கு கற்பித்து, பக்தர்களைத் தன் தெய்வீகப் பேரொளியில் ஒன்றிணையச் செய்ய விரும்பியே அவர் மானிட வடிவில் உரு எடுத்தார்||5||
ஸ்ரீமத் தத்தப் பெருமானைப் பற்றிய இப்படிப்பட்ட அமுதமயமான உபதேசத்தைச் கேட்கும் எவருமே ‘எனக்குப் போதுமானது’ என்று கூறவே மாட்டான்; அவர்கள் ஸ்ரீமத் தத்தப் பெருமானின் கதைகளை எத்துணை முறை கேட்டாலும், மீண்டும் மீண்டும் கேட்கவே விரும்புவார்கள் ||6||
தன் தந்தையின் உள்ளம் நெகிழச் செய்யும் அத்தகைய உணர்வு பூர்வமான சொற்களைக் கேட்ட மகன் மன்னன் அலர்க்கனின் தூய வாழ்க்கையையும், அதனோடு இணைந்த ஸ்ரீமத் தத்தப் பெருமானின் பெருமைகளையும் விவரிக்கத் தொடங்கினான்; அந்த மேன்மையான வரலாற்றை கேட்பவர் எவராயினும், அவர்கள் உள்ளம் தூய்மை அடைவது உறுதி ||7||
ஆகவே, எப்படி ஒரு தந்தை மற்றும் மகனுக்கு இடையே ஸ்ரீமத் தத்தரின் வாழ்க்கை கதை பரிமாறிக் கொள்ளப்பட்டதோ, அவ்வாறே ஓ, தீபக், நானும் உன்னிடம் தெய்வமான ஸ்ரீமத் தத்தரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறேன்* என்று குரு வேத தர்மா கூறினார்; நான் கூறுவதை கவனத்துடன் கேள்; ‘வலிமை மிக்க மன்னர்கள் நிறைந்த சந்திர வம்சத்தில், ‘சத்ருஜித்’ (பகைவரை வெல்பவன்) என்ற பெயருடைய ஒரு மன்னர் வாழ்ந்து வந்தார்.
{*சிறு விளக்கம்: – வேத தர்மா தனது சீடர் தீபக்கிற்கு கூறிய அனைத்து கதைகளுமே, இரண்டாம் அத்தியாயத்தில் கூறப்பட்டு இருந்த தந்தைக்கு மகன் கூறிக் கொண்டு இருந்த ஆன்மீக கதைகளே ஆகும்} ||8||
சிவபெருமானின் திருவருளால், அந்த மன்னர் தாம் பெரிதும் விரும்பியதை போலவே ஒரு மகனைப் பெற்றெடுத்தார்; அனைத்து நற்பண்புகளும் நிறைந்த அந்த மகனின் அழகு, எட்டுத் திசைகளுக்கும் பரவியது ||9||
அத்தகைய நற் பண்புகள் நிறைந்த அந்த மகனுக்கு ‘ரிதுத்வஜன்’ என்று பெயரிட்டார்கள்; அவர் புண்ணியத்தின் வடிவமாகவே உருவெடுத்து வந்ததைப் போல இருந்தார்; அவர் எங்கு சென்றாலும், அவரைச் சுற்றி ஒரு தெய்வீகப் பேரொளி சூழ்ந்திருந்தது ||10||
அந்த மகன் உரிய வயது அடைந்ததும் அவருக்கு உபநயனச் சடங்கு (பூணூல் அணிவிக்கும் விழா) நடத்தப்பட்டது; இளவரசர் விரைவில் ஆட்சி செய்வதற்குத் தேவையான அனைத்து கலைகளையும் திறன்களையும் கற்றுத் தேர்ந்தார்; வில் வித்தையை விரிவாகக் கூறும் ‘தனுர் வேதத்தில்’ அவர் வல்லமை பெற்றார்; அனைவரும் அவரை வீரமும் ஞானமும் ஒருங்கே அமையப் பெற்றவர் என்று போற்றி புகழ்ந்தார்கள் ||11||
இளவரசர் உண்மையில் மிகுந்த துணிச்சல் மிக்கவராகத் திகழ்ந்தார்; அவரிடம் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அவர் ஒரு அடைக்கலம் தருபவராகவே விளங்கினார்; அவரது ராஜ்யத்தில் தர்மத்தைக் காப்பவராக அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்; அவரிடம் இருந்த பயன் கருதாமல், தேவையுள்ளோருக்கு மனமுவந்து வழங்கும் கொடை குணமும் அவருக்குப் பெரும் புகழை பெற்றுத் தந்தது ||12||
அத்தகைய வீரம் மிக்க இளவரசர், மன்னராக முடி சூடப்பட இருந்த அந்தத் தருணத்தில், ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்தது; அந்தத் தனித்துவமான நிகழ்வைப் பற்றி இப்போது நான் உனக்கு கூறப் போகின்றேன்’ என்று குரு வேத தர்மா கூறினார்||13||
நர்மதை நதிக் கரையில், காலவ முனிவர் (Gaalav) என்பவர் தனது ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார்; அவர் பல்வேறு வகைகளிலான தவ முறைகளில் ஆழ்ந்து ஈடுபட்டு, தினமும் தனது தியானப் பயிற்சிகளை செய்து வந்தார்||14||
ஒருமுறை, ஒரு மங்களகரமான நேரத்தில், அந்த முனிவர் பெரும் நம்பிக்கையுடன் ஒரு வேத யாகத்தைத் தொடங்கினார்; ஆனால், அதே சமயத்தில், பாதாள லோகத்தைச் சேர்ந்த தன் கொடுமைக்குப் பெயர் பெற்ற ‘பாதாளகேது’ (Paataalketu) என்ற அரக்கன் அந்த யாகம் நிறைவு பெறுவதற்குப் பல்வேறு வகைகளிலான இடையூறுகளை செய்து வரலானான்||15||
யாக குண்டத்தில் ஆகுதிப் பொருட்கள் (படையல்கள்) போடப்பட்டபோது, அதிலிருந்து எழுந்த புகை மண்டலம் வளி மண்டலம்* முழுவதும் பரவியது; அதைக் கண்ட அந்த வலிமை மிக்க அரக்கன், முனிவரின் ஆசிரமத்தை நோக்கி விரைந்து வந்து, அந்த யாக குண்டத்தையும், அந்த இடத்தையும் முற்றிலுமாக அழித்து நாசப்படுத்தினான்.
{*வளி மண்டலம் (Atmosphere) என்பது புவி ஈர்ப்பு விசையினால் பூமியைச் சூழ்ந்துள்ள, நைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் பிற வாயுக்கள் நிறைந்த காற்றுப் படலமாகும்} ||16||
மேலும் அவன் அந்தப் புனிதத் யாக குண்டலத்தில் எலும்புகள், இரத்தம், இறைச்சி போன்ற அசுத்தப் பொருட்களை வீசினான்; அதன் விளைவாக, யாக சாலை மாசு அடைந்தது; யாகமும் பாதியிலேயே நின்று போனது; அந்த நிகழ்வு அந்த முனிவருக்குப் பெருத்த மனத் துயரத்தை ஏற்படுத்தியது ||17||
ஆகவே, அவர் யோஜனை செய்தார் ‘இப்போது என்ன செய்வது? அந்த அரக்கன் செய்யும் இடையூறை கடந்து எப்படி யாகத்தை நடத்துவது?; அதற்குரிய தீர்வு ஏதும் தோன்றாத நிலையில் , அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி கரை சேருவது என்று அவர் திகைத்தார் ||18||
ஒருவேளை நான் சினத்திற்கு ஆளாகி, அந்த அரக்கனைச் சபித்து விட்டால், என் தவ வலிமை அனைத்தையும் இழந்து விடுவேன்; மேலும், விவேகமின்றிச் செயல்பட்டதற்கான பாவத்தையும் சுமக்க நேரிடும் என்று மனதில் தோன்றியது ||19||
அவர் இவ்வாறு வேண்டினார் ‘ஓ இறைவா, சர்வ வல்லமை உள்ள தெய்வமே, தர்மத்தைக் காப்பவனாகிய உனது அருளை என் மீது பொழிவாயாக; ஓ வள்ளலே, நீ ஏன் என் மீது இவ்வளவு பாராமுகமாக இருக்கிறாய்?; பக்தர்களுக்குப் புகலிடமாகவும், எளியவர்களுக்குத் தோழனாகவும் இருப்பவன் நீ ஒருவனே அல்லவா? ||20||
அந்த அரக்கனின் செயல்களினால் நாங்கள் துயரம் அடைகின்றோம்; என் யாகங்கள் எவ்விதத் தடையுமின்றி நிறைவேறுவதில்லை; எனது வேதச் சடங்குகள் அனைத்தும் தேவையின்றிக் கால தாமதமாகின்றன; எங்கள் அவல நிலை கண்டு நீ ஏன் இரக்கமற்று இருக்கிறாய்?’ ||21||
நாங்கள் அனைவரும் உன்னை முழுமையாக நம்பியிருக்கிறோம்; ஆயினும், பாதாள உலகத்தைச் சேர்ந்த இந்த அரக்கனால் நாங்கள் துன்புறுத்தப்படுகிறோம்; எங்கள் பரிதாபகரமான நிலையை நீ அலட்சியத்துடன் நோக்காதே; எங்களுக்குத் தேவையற்ற இடையூறுகளை விளைவிக்கும் அந்த அரக்கனை அழித்தருள்வாயாக ||22||
இவ்வாறு, மிகுந்த பணிவுடன் காலவ முனிவர் பரமாத்மனை பிரார்த்தித்தார்; அதனால் மகிழ்வுற்ற இறைவன், பதிலுரைக்கும் விதமாக ஒரு அசரீரி (வானில் இருந்து குரல்) மூலம் முனிவருக்கு ஆறுதல் கூறினார்; அவரது பிரச்சனைக்குத் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்தார் ||23||
ஒருநாள் தற்செயலாக, வானத்தில் இருந்து ஒரு குதிரை காலவ முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் வந்து இறங்கியது; அதைக் கண்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்; அப்போது மீண்டும் ஒரு அசரீரி ஒலித்தது ||24||
இது ஒரு தெய்வீக குதிரை; இதை அழைத்துக் கொண்டு, சத்ருஜித் மன்னனின் நாட்டிற்குச் செல்வாயாக.; ஓ முனிவரே, நீரே நேரில் சென்று, உமது வேத யாகங்களைப் பாதுகாப்பதற்கு அந்த மன்னனின் இளவரசனே தகுதியுடையவன் என்று கருதுவதால் அந்த இளவரசனை யாகத்தைக் காக்க உமக்கு துணையாக அனுப்புமாறு மன்னரிடம் கோர வேண்டும்||25||
இளவரசன் ரிதுத்வஜன் இந்தக் குதிரையின் மீது ஏறிச் செல்வான்; அவனே அந்த அரக்கனை வதம் செய்வான்; அதன் பிறகு, அந்தப் பூமியைப் புனிதப்படுத்தி விட்டு, உமது வேதச் சடங்குகள் அனைத்தையும் மீண்டும் தொடங்கலாம் ||26||
அந்த முனிவர் இத்தகைய தெய்வீக வழிகாட்டுதலைச் கேட்ட அடுத்த கணமே, அளவற்ற நன்றியுணர்வால் மனம் நெகிழ்ந்து போனார்; உடனே அந்தக் குதிரையை அழைத்துக் கொண்டு, சத்ருஜித் மன்னனின் தலை நகரை நோக்கிப்வெளிப்புற ப்பட்டார் ||27||
மன்னர் முன்னிலையில் முனிவர் கூறினார் ‘மன்னா , என் பெயர் காலவன்; நான் நர்மதை நதிக்கரையில் வேத யாகங்களில் ஈடுபட்டு வாழ்கிறேன்; சமீப காலமாக ஒரு வலிமை மிக்க அசுரனின் செயல்களால் நான் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகி வந்தேன்; இருப்பினும், இன்று விதி எனக்கு கருணை காட்டியுள்ளது ||28||
இந்த தெய்வீக குதிரை வானில் இருந்து என் ஆசிரமத்தில் வந்து இறங்கியது; மேலும் நான் ஒரு அசரீரி மூலம் தெய்வீக வழிகாட்டுதலை கேட்டேன்; அது கூறியது இந்தக் குதிரையை இளவரசர் ரிதுத்வஜனிடம் கொடுங்கள், காஷ்யப முனிவரின் மனைவியான மற்றும் திதி* அன்னையின் வம்சாவளியைச் சேர்ந்த அசுரனைக் அவனால் மட்டுமே கொல்ல முடியும்.
{*இந்து புராணங்களின்படி, திதி (Diti) என்பவர் அசுரர்களின் ஒரு பிரிவான தைத்தியர்களின் (Daityas) தாய் ஆவார்; இவர் பிரஜாபதி தக்ஷனின் மகள் மற்றும் காஷ்யப முனிவரின் மனைவி; அதிதியின் சகோதரியான திதி, ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் போன்ற வலிமை மிக்க அசுரர்களைப் பெற்றெடுத்தார்} ||29||
அத்தகைய தெய்வ குரலைக் கேட்டவுடன், இந்தக் குதிரையுடன் உங்களிடம் வந்துள்ளேன்; தயவுசெய்து உங்கள் மகனை சிறிது காலத்திற்கு எனக்கு அன்பளிப்பாகக் கொடுங்கள், அதன் மூலம் அனைவருக்கும் நன்மை பயக்கும் அனைத்தும் நடக்கும்||30||
நீ வீர ஷத்திரிய குலத்தைச் சேர்ந்தவன்; மற்றவர்களைத் துக்கத்திலிருந்து மீட்பவனே உண்மையான வீரன்; நீ அந்த மாண்பு மிக்க வம்சத்தைச் சேர்ந்தவன், எனவே உன் தர்மத்திற்கு ஏற்றவாறு செயல்பட்டு எங்கள் பாதுகாப்பை உறுதி செய்’ என்று விண்ணப்பம் செய்தார் ||31||
முனிவரின் வேண்டுகோளைக் கேட்ட மன்னன், மனம் மகிழ்ந்து தன் மகனிடம் கூறினான் ‘ஓ இளவரசே, இந்த தெய்வீகக் குதிரையின் மீது ஏறிச் சென்று , தொல்லை தரும் அசுரனைக் கொன்று விடு ||32||
உயர்ந்த ஞானிகளின் அருளால்தான், படைக்கப்பட்டவை அனைத்திற்கும் மங்களகரமாக எல்லாம் அமைகிறது; அத்தகைய கருணையுள்ள முனிவர்களை யார் துன்புறுத்த விரும்புவார்கள்?; அந்த அசுரனின் புத்தி களங்கமடைந்துள்ளது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்று தனது மகனிடம் மன்னன் கூறினான் ||33||
தன் தந்தையின் அறிவுறுத்தல்களைக் கேட்டதும், ரிதுத்வஜன் உடனடியாக அவருடைய ஆணைக்கு கீழ்ப்படிந்தான்; தன் அன்புப் பெற்றோரிடம் விடை பெற்றுக் கொண்டு , அவர்களின் ஆசீர்வாதங்களுடன் முனிவருடன் சென்றான் ||34||
தெய்வீகக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடி, இளவரசன் அந்த தூய்மை மிக்க முனிவருடன் நடந்து சென்றான்; விரைவில் அவர்கள் ரேவா* நதிக்கரையில் இருந்த அவரது ஆசிரமத்தை அடைந்தனர்; அங்கிருந்து இளவரசன் ‘முனிவரே, உங்களுக்குப் எப்போது பொருத்தம் என்று தோன்றுகிறதோ அப்போது உங்கள் யாகங்களைத் தொடங்குங்கள்
{*ரேவா என்பது நர்மதா நதியின் மற்றொரு பெயர்} ||35||
வேத யாகங்களைக் கெடுக்கும் அந்தப் பிசாசு எங்கே இருக்கிறான் என்று எனக்குக் காட்டுங்கள்; நான் அவனை அழித்து விடுகிறேன்’ என்று கூறினான்; அதன் பிறகு முனிவர் இளவரசனிடம் ‘நான் அந்த யாகத்தை இப்போதே தொடங்குகிறேன்’ என்றார்; மேலும் ‘ஹோமப் பொருட்களின் அர்ப்பணிப்பால் எழும் புகையைக் கண்டதும், அந்த அரக்கன் இவ்விடத்தை களங்கப்படுத்த மீண்டும் ஓடி வருவான்; அந்த கணமே நான் அவனை உனக்குச் சுட்டிக் காட்டுவேன்; நீ சிறிதும் தாமதிக்காமல் அவனை எதிர் கொண்டு அழிக்க வேண்டும் ||37||
அவன் மாய வித்தைகளில் வல்லவன்; உருமாறும் ஆற்றல் கொண்டவன்; பல வடிவங்களை எடுக்கக் கூடியவன்;பல்வேறு கற்பனைச் சூழல்களை உருவாக்கி அவன் உன்னை நிலை குலையச் செய்வான்; எனவே, நீ விழிப்புணர்வுடன் கவனத்துடனும் இருப்பது மிகச் சிறந்தது’ என்றார் ||38||
அதற்கு அந்த இளவரசன் பதிலளித்தான் ‘தாங்களே எங்களைப் பாதுகாக்கும் குடை போன்றவர்; தங்களைக் கண்ணால் காண்பதாலேயே நாங்கள் தூய்மையடைகிறோம்; தங்கள் அருளாலேயே நாங்கள் ஆற்றல் பெறுகிறோம்; அந்த அரக்கன் வரட்டும்; நான் அவனைத் துணிவுடன் எதிர் கொள்வேன் ||39||
தங்கள் திருவருளைப் பெறும் பாத்திரங்களாக நாங்கள் திகழ்வதாலேயே, நாங்கள் வெற்றிக் கனியைப் பறிப்போம்; இவ்வுலகிலும் மறுவுலகிலும் கிடைக்க கூடிய மிகச் சிறந்த நன்மைகளை நாங்கள் அடைவோம்; எங்கள் வெற்றி குறித்து எள்ளளவும் ஐயமில்லை’ ||40||
இளவரசனின் அப்படிப்பட்ட உறுதி மொழிகளைக் கேட்டதும், காலவ முனிவர் தனது யாகத்தைத் தொடங்கினார்; வேத விதி முறைகளுக்கு ஏற்பத் தக்க சங்கல்பம் செய்து கொண்ட பிறகு, அவர் யாக சடங்குகளை விதிமுறைப்படி ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கினார் ||41||
ஒவ்வொரு முறை ஹோமப் பொருட்களை அர்பணித்த போதும் யாக குண்டத்திலிருந்து புகை மேலே எழுந்து சென்றது; அந்தப் புகையை அந்த அரக்கன் விரைவில் கண்டு விட்டான்; உடனே அவன் ஒரு காட்டுப் பன்றியின் உருவத்தை எடுத்துக் கொண்டு, அந்த இடத்தை நோக்கி வேகமாக ஓடி வந்தான் ||42||
அதன் கோரைப் பற்கள் வெளியே துருத்திக் கொண்டு தெரிந்தன; அது ‘குர்… குர்…’ என்று உறுமும் ஒலியை எழுப்பியது; உடல் முழுவதும் உள்ள மயிர்கள் சிலிர்த்து நிற்க, அந்த அரக்கன் திடீரென்று முனிவரின் ஆசிரமத்தில் நுழைந்தான் ||43||
முனிவர் அந்த இளவரசனை நோக்கி ‘அதோ பார், காட்டுப் பன்றியின் உருவில் வந்திருப்பது அந்த அரக்கனேதான்; இப்போது நீ மிகுந்த எச்சரிக்கையுடன் அவனை எதிர் கொண்டு அழித்து, துணிவு மிக்க வெற்றியை விரைந்து அடைவாயாக’ என்று கூறினார் ||44||
முனிவரின் அந்த வார்த்தைகளைக் கேட்டதும், காட்டுப் பன்றியின் உருவில் வந்த அரக்கனை பார்த்தான்; அந்த இளவரசன் தெய்வ குதிரையின் மீது ஏறினான்; தனது எதிரியை எதிர் கொள்வதற்குத் தன்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டான்||45||
பின்னர், அந்தப் பன்றியின் இதயப் பகுதியை இலக்காக வைத்துக் கொண்டு, அவன் ஒரு கூர்மையான அம்பை எய்தான்; அந்த அம்பு குறி தவறாமல் பன்றியின் உடலைத் துளைத்த போதிலும், அந்த அரக்கன் உயிரிழக்கவில்லை ||46||
அவனுக்கென விதிக்கப்பட்ட ஆயுட்காலம் முடியும் வரை, அவனை யாரால் தான் கொல்ல இயலும்?; அவனது உயிரின் சாரம் (உயிர் சக்தி) இன்னும் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருப்பதால், அவனால் எத்தகைய கொடிய காயங்களையும் தாங்கிக் கொண்டு பிழைத்திருக்க முடிந்தது ||47||
அந்தப் பன்றி காயமடைந்திருந்த போதிலும் மிக விரைவாக ஓடி மறைந்தது; குதிரை மீதமர்ந்திருந்த இளவரசன், அந்த முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதைத் துரத்திச் சென்றான் ||48||
அந்தப் பன்றி நேராகக் காட்டிற்குள் மிக ஆழமான பகுதிக்குச் சென்று, ஒரு குகைக்குள் இருந்த வழி மூலம் பாதாள உலகில் நுழைந்து ஒளிந்து கொண்டது; இளவரசன் ரிதுத்வஜனும் அது அந்த இடத்திற்குள் நுழைவதைக் கண்டு, தன் குதிரையுடன் விரைந்து சென்று அதைத் துரத்தினான் ||49||
அந்தத் தெய்வ குதிரையின் சிறப்பு எத்தகையதென்றால், எங்கு அடர்ந்த இருள் சூழ்ந்திருந்தாலும், அங்கும் அது நுழைந்து, பாதாள உலகங்களுக்கான பாதையைக் கண்டறியும் ஆற்றல் பெற்றிருந்தது ||50||
பாதாள உலகில் நுழைந்த இளவரசன், நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஓர் இருப்பிடத்தைக் காண நேர்ந்தது; இது இளவரசனைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது; அவன் தன் குதிரையை அங்கே கட்டிவிட்டு ‘அந்த பன்றி எங்கு சென்று ஒளிந்து கொண்டு விட்டது என்பதைக் கண்டறிய நான் இந்த இடத்தை முழுமையாகச் சுற்றிப் பார்வையிடுவேன்’ என்று எண்ணினான்||51||
அவன் உள்ளே இருந்த அறைகளையும், வாயில்களையும் கண்டபோது, அவை அனைத்தும் சமமான மதிப்பும், மிகுந்த பொலிவும் கொண்டவையாகத் திகழ்ந்தன; மேலும் வியப்பு மேலிட, அந்தப் பாதாள லோகத்திலும் வானுயர எழுந்து நின்று இருந்த பொன் சிகரங்களை அவன் தொடர்ந்து கண்டு களித்தான் ||52||
அவன் விலை மதிப்பற்ற கற்களால் அமைக்கப்பட்ட படிக்கட்டுகளையும், அவற்றைச் சூழ்ந்திருந்த நந்த வனங்களையும் கண்டான்; அந்தப் பாதாள உலகத்திற்குள் சூரிய ஒளி நுழைவதற்கே சாத்தியமில்லாத சூழல் நிலவியது||53||
அவன் முத்துக்களால் தொடுக்கப்பட்ட தோரணங்களையும், இந்திர நீல* ரத்தினங்களால் கட்டப்பட்ட சுவர்களையும் கண்டான்; கண் கூடாகத் தெரிந்த அந்தப் பிரம்மாண்டத்தைக் கண்ட மாத்திரத்திலேயே, இளவரசனின் மனம் வியப்பால் திகைத்து நின்றது.
{*இந்திர நீல ரத்தினம் (Indranila / Blue Sapphire) என்பது நவமணிகளில் மிகவும் சக்திவாய்ந்த, பிரகாசமான ஊதா-நீல நிறக் கல் ஆகும். இது சனி கிரகத்தின் ஆற்றலைக் கொண்டுள்ளதால், ஜோதிட ரீதியாக தொழிலில் திடீர் வெற்றி, புகழ், மற்றும் மன அமைதியைத் தரும் என்று நம்பப்படுகிறது} ||54||
அவன் மேலும் முன்னேறிச் சென்றபோது, திடீரென ஒரு மங்கையைக் காண நேர்ந்தது; அவள் ஒரு தேவதையைப் போலவே பேரழகுடன் திகழ்ந்தாள்; அவள் தன் கையில் ‘கந்துகம்’ (Kanuk)* எனப்படும் ஒரு கோள வடிவப் பந்தினை வைத்திருந்தாள்; மேலும், ஒரு வாயிலுக்கு அருகே அவள் தனிமையாக அமர்ந்திருந்தாள்.
{*கந்துகா (कन्दुक) என்பது தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பந்து (Ball) விளையாட்டைக் குறிக்கும் ஒரு தூய கலைச்சொல் ஆகும்; இது தமிழ் மற்றும் வடமொழி இலக்கியங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு பழமையான சொல்லாகும்} ||55||
இளவரசன் அவளை நெருங்கிச் சென்றான்; உடனே அவள் இருக்கையிலிருந்து எழுந்து, மேல் தளத்திற்கு ஏறிச் சென்றாள்; இளவரசனும் அவளைப் பின் தொடர்ந்து சென்றான்; எனினும், அவளுக்குச் சற்றுத் தள்ளி, ஒரு கண்ணியமான இடைவெளியை கடைப் பிடித்தபடியே அவன் சென்றான்||56||
இளவரசன் அந்த அரண்மனையின் உள்ளே இருந்த அறைகளை கண்டான்; அதில் ஒன்றில் விலை மதிப்பற்ற நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு படுக்கை இருந்தது; ஒரு மங்கை அங்கே தனிமையாக அமர்ந்திருந்தாள்; அவள் மிகுந்த மனக் கலக்கத்துடனும், கவலையுடனும் காணப்பட்டாள் ||57||
மேலும், அவள் இளவரசனை நேரில் கண்ட மாத்திரத்தில், அங்கேயே மயங்கி விழுந்தாள்; அவள் தரையில் சாய்ந்த அந்தத் தருணத்திலேயே, அவளுடைய தோழி அவளுக்குத் துணையாக அங்கே வந்து, அவளைப் பரிவுடன் உபசரிக்கத் தொடங்கினாள் ||58||
அவள் தன் சுற்றுப்புறம் குறித்த எவ்வித உணர்வுமின்றி இருந்தாள்; தரையில் மயங்கிய நிலையில் கிடந்த அவளுக்குத் துணையாக, அவளை மீண்டும் உணர்வு பெறச் செய்ய முயன்று கொண்டிருந்த அவளது தோழி ஒருத்தி உடனிருந்தாள்; இத்தகைய விசித்திரமான காட்சியைக் கண்ட இளவரசன், அடுத்து என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றான் ||59||
என்னை வெறும் கண்ணால் கண்ட மாத்திரத்திலேயே அவள் ஏன் தரையில் மயங்கி விழுந்தாள் என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்ட அவன், இதற்கு என்ன காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று சிந்தித்தவாறே, அடுத்து என்ன நிகழப் போகிறது என்பதை அறிய அங்கேயே நின்று கொண்டிருந்தான் ||60||
அவர் மேலும் சிந்தித்தான் ‘வாழ்வதற்கு இது மிக அழகான, உண்மையிலேயே மனதை மயக்கும் ஓர் இடமாக இருக்கிறது; ஆயினும், இங்கு எங்கும் ஆண்களே தென்படவில்லையே, அப்படியிருக்க, இந்த இரு அழகிகளும் இங்கு தனிமையில் எப்படி வசிக்கின்றார்கள் ||61||
பெண்கள் தனித்திருக்கும் இடத்தில், முன்னறிவிப்போ அனுமதியோ இன்றி நுழைவது ஒழுக்கக் குறைபாடாகும்; எனவே, இங்கிருந்து திரும்பிச் செல்வதே சிறந்தது; ஏனெனில், உன்னத அறநெறிகள் போதிக்கும் அறிவுரை அதுவாகும் ||62||
ஆகவே, அவர் வந்த வழியே திரும்பிச் செல்லத் தொடங்கினார்; அவர் அவ்வாறு திரும்புகையில், மயங்கிக் கிடந்த அந்தப் பெண் விழித்தெழுந்து அழத் தொடங்கினாள்; அவர் கண்ணில் பட்டதும், அவள் மீண்டும் மயங்கிச் சாய்ந்தாள்; அதைக் கண்ட அவளது தோழி, நிலைமையைச் சமாளிக்கும் நோக்கில் குறுக்கிட்டு இவ்வாறு கூறினாள் ||63||
நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்?; இப்போது ஏன் திரும்பிச் செல்கிறீர்? ; தயவுசெய்து அமைதியுடன் சற்று நேரம் அமருங்கள் ||64||
அதற்கு அந்த இளவரசன் ‘இந்த இடத்தில் ஏன் எந்த ஆணும் தென்படவில்லை; நான் இங்கு எப்படி இளைப்பாற முடியும்?; மேலும், இவள் ஏன் மீண்டும் மீண்டும் மயங்கி விழுகிறாள்?’ என்று கேட்டான்.’ ||65||
இங்குள்ள நீங்கள் இருவரும் யார்?; உங்கள் குடும்பத்தினர் எங்கே?; ஏன் இங்கு தனிமையில் வசிக்கிறீர்கள்?; இங்கு உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை எனக்கு விரிவாகக் கூறுங்கள்; அப்போதுதான் என் மனம் அமைதி கொள்ளும்’ என்றான் ||66||
இளவரசனின் அந்த வார்த்தைகளைக் கேட்டதும், அதற்குள் மயக்கம் தெளிந்து எழுந்திருந்த அந்தப் பெண், தன் தோழியை நோக்கிச் சைகை செய்தாள்; தாங்கள் இங்கு வந்து சேர்ந்ததற்கான முழு வரலாற்றையும் இளவரசனிடம் எடுத்துரைக்குமாறு அவளைத் தூண்டினாள் ||67||
அவ்வாறு சில வார்த்தைகளைச் சைகை மூலம் வெளிப்படுத்தியவுடனேயே, அடிக்கடி மயங்கி விழும் இயல்புடைய அந்தப் பெண் ஒரு பெருமூச்சு விட்டாள்; மீண்டும் ஒருமுறை அந்த இளவரசனை ஏறிட்டுப் பார்த்தாள்; அடுத்த கணமே அவள் மீண்டும் சுய நினைவை இழந்து மயங்கி விழுந்தாள்||68||
மீண்டும் அவளது தோழி அவளுக்குத் துணையாக ஓடி வந்தாள்; மெதுவாக அவளுக்கு விசிறி வீசி, மயக்கம் தெளியச் செய்து, அவளைச் சௌகரியமாக அமர வைத்த பிறகு, அந்த இளவரசனை நோக்கி இவ்வாறு கூறினாள்||69|| ‘
உங்கள் மூலம் எங்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என்று தோன்றுகிறது; நீர் தானாகவே இங்கு வந்திருக்கிறீர்; அதனால்தான் எங்களால் உம்மை நேரில் காண முடிந்தது; உம்முடைய தோற்றத்தால் என் தோழி பெரிதும் கவரப்பட்டு விட்டாள்; அதனால்தான் உம்மைப் பார்க்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் மயங்கி விழுகிறாள் ||70||
அவளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைக்குக் காரணமானவர் வேறு யாருமல்ல; அது நீங்கள்தான்; அவள் உங்கள் மீது கொண்ட ஆசையாலும் ஈர்ப்பாலும் பெரிதும் ஆட் கொள்ளப்பட்டு விட்டதால், மீண்டும் மீண்டும் மயங்கி விழுந்து விடுகிறாள்||71||
இவள், விஸ்வாவசு என்னும் கந்தர்வனான தேவ இசைக் கலைஞனின் அழகிய மகளாவாள்; பாதாளகேது என்னும் அரக்கன் இவளைக் கடத்தி, இங்கு கொண்டு வந்து வைத்துள்ளான்||72||
இவள் பெயர் மதாலஸா; இவள் பேரழகுக்கும் மென்மைக்கும் இருப்பிடமாய் திகழ்பவள்; விதியின் அருளாலேயே தாங்கள் இங்கு வந்தடைந்துள்ளீர்கள்; அதன் விளைவாகவே நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நற்பேறு பெற்றோம் ||73||
அந்த அரக்கன் இவளை மணக்க விரும்புகிறான்; ஆனால் இவளோ அவனது விருப்பத்தை அறவே ஏற்க மறுக்கிறாள்; இவன் இவளை இங்கு கொண்டுவந்த கணமே, இவளைச் சூறையாட (கற்பழிக்க) முயன்றான் ||74||
அத் தருணத்தில், அவனைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு மதாலஸா இவ்வாறு கூறினாள் ‘எங்கள் கந்தர்வ இனத்தில் பிறந்த பெண்கள், முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் எந்த ஆணுடனும் உறவு வைத்துக் கொள்வதில்ல||75||
மேலும், முறைப்படியான திருமணச் சடங்குகள் ஏதுமின்றி, நீ என் உடலைத் தீண்டினால், நான் அந்த கணமே என் உயிரைத் துறப்பேன்; என் வார்த்தைகள் சத்தியமானவை என்பதை உன் இதயத்தின் ஆழத்தில் உறுதியாக நம்புவாயாக’ ||76||
ஆகவே அந்த அரக்கன், இவள் விதித்த திருமண நிபந்தனையை ஏற்றுக் கொண்டு, திருமணம் செய்து கொள்வதே ஒரே வழி என்று முடிவு செய்தான்; உடனே அவன், அரக்கர்களின் குருவான சுக்ராச்சாரியாரை வரவழைத்து, அவருடன் இணைந்து பஞ்சாங்கத்தைப் பார்த்து, திருமணத்திற்கு ஏற்ற ஒரு நல்ல நாளை நிச்சயித்தான்||77||
நாளை பதிமூன்றாம் திதி (திரயோதசி); அதுவே இவர்களின் திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட நாளாகும்; ஆனால், அந்த அரக்கனை மணந்து கொள்வதில் இவளுக்குச் சிறிதும் விருப்பமில்லை என்பதைத் தாங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்; அதனாலேயே, இவள் தன் உயிரைத் துறக்கத் துணிந்துள்ளாள்||78||
அந்த அரக்கன் நேற்று இங்கு வந்திருந்தான்; எங்களைச் சந்தித்து விட்டு, திருமண நாளைக் குறித்துத் தெரிவித்து விட்டுச் சென்றான்; அவன் அங்கிருந்து அகலும் தருணத்தையே இவள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள்; ஏனெனில், அவன் இல்லாத சமயத்தில், தான் விரும்பியவாறே தன் உயிரைத் துறந்து விடலாம் என்று இவள் எண்ணியிருந்தாள்||79||
அத் தருமணத்தில்தான், நினைத்ததை அருளும் காமதேனு என்னும் தெய்வப் பசு திடீரென அங்குத் தோன்றியது; அது மதலஸாவைப் பார்த்து அறிவுறுத்தியது ‘நீ உன் உயிரைத் துறக்க வேண்டாம்; நாளை ஒரு வீரன் இங்கு வருவான்; அவன் அந்த அரக்கனைக் கொன்று வீழ்த்தி விட்டு, உன்னை நேரில் சந்திப்பான்||80||
அவன் மிகவும் அழகான ஒரு இளவரசன்; உனக்கு மிகவும் பொருத்தமான கணவனாகவும் அமைவான்; எனவே, வீணாக உன் உயிரைத் துறக்காமல், அவனது கையைப் பற்றிக்கொண்டு அவனை மணந்து கொள்வாயாக ||81||
கோலாகலம் என்னும் திவ்ய லோகத்திலிருந்து, உன் மீது கொண்ட கருணையினால், உனக்காகவே நான் இங்குத் தேடி வந்துள்ளேன்’ இவ்வாறு அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றிய பிறகு, அந்தத் தெய்வப் பசு மீண்டும் மறைந்து போனது ||82||
மேலும் இன்றே, முன்னரே முன்னறிவிக்கப்பட்ட நிகழ்வு நடந்தேறியது; அந்த அரக்கன் ஒரு காட்டுப் பன்றியின் உருவை மேற் கொண்டான்; ஒருவன் அவன் மீது அம்பு எய்து உள்ளான்; அதனால் அந்த அரக்கன் தற்போது வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் ||83||
ஆகவே, அவன் இன்னும் ஆழமான பாதாள உலகங்களுக்குள் சென்று மறைந்து விட்டான்; இந்த நிலையில் திடீரென நீங்கள் இங்குத் தோன்றியுள்ளீர்கள்; இதனால் எங்கள் மனம் அமைதி அடைந்துள்ளது; நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்றே எங்களுக்குப் பேரமைதி கிட்டியுள்ளது ||84||
அந்த அரக்கனை காயப்படுத்தியவர் நீங்களே என்று நான் ஊகிக்கிறேன்; நீங்கள் நித்தியர்களில் (தேவர்களில்) ஒருவராகத் தோன்றுகிறீர்கள்; சரியான நேரத்தில் இங்கு தோன்றி, பொறுமையுடன் எங்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறீர்கள் ||85||
என் பெயர் குண்டலா; நான் ஒரு தவசியின் மகள்; இந்தியாவின் வடக்கே உள்ள இமயமலைத் தொடரில் வசித்துக் கொண்டு, யோக நெறியைக் கற்று வருகிறேன் ||86||
அங்குதான் மதாலஸா விளையாட வருவாள்; விரைவில் எங்கள் இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது; அந்த துரதிர்ஷ்ட வசமான நாளில், அந்த அரக்கன் மதாலஸாவை கடத்திச் சென்று கொண்டிருந்தபோது, நான் தற்செயலாக அவர்கள் இருவரையும் பார்த்து விட்டேன் ||87||
அவளுடைய பரிதாபகரமான அழு குரலை நான் அடையாளம் கண்டு கொண்டேன்; அவளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்று நினைத்தேன். எனவே, அந்த அரக்கனிடம் பின் வருமாறு வேண்டிக் கொண்டேன் ||88||
நீ கடத்திச் செல்லும் இவள் என் தோழி ஆவாள்; நான் அருகில் இல்லாதபோது அவள் இன்னும் அதிகமாகத் துயருறுவாள்; நீ என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தால் மட்டுமே, அவளால் மகிழ்ச்சியாக இருக்கவும், விதி அவளுக்கு அளித்த வாழ்வை ஏற்றுக் கொள்ளவும் இயலும் ||89||
அந்த அரக்கனும் அதற்கு ஒப்புக் கொண்டான்; அதன் விளைவாக, நானும் இப்போது பாதாள லோகத்தில் இருக்கிறேன். எங்கள் நட்பு எத்தகைய நற் பயனை அளித்துள்ளது என்பதைப் பாருங்கள்; நாங்கள் இருவரும் உங்களைக் காணும் பேறு பெற்றோம்; மேலும், நான் ஆன்மீக ஞானத்தையும் அடைந்தேன்||90||
எங்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் நான் உங்களிடம் கூறி விட்டேன்; உங்களைக் கண்டதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைகிறோம்; இனி எங்கள் வாழ்க்கை முழுமை பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்; தயவுசெய்து உங்கள் திருப் பெயரை எங்களுக்குக் கூறுங்கள்||91||
குண்டலா இவ்வாறு கூறியதைக் கேட்டதும், அந்த இளவரசன் உண்மையை வெளிப்படுத்தும் விதமாக கூறினான் ‘நான் தேவனோ, தெய்வமோ அல்லது தேவர் போன்ற சக்தியோ அல்ல; நான் இந்த பூவுலகத்தைத் சேர்ந்த ஒரு சாதாரண இளவரசன் மட்டுமே ||92||
என் தந்தை சத்ருஜித் என்னும் மன்னர் ஆவார்; நான் அவருடைய மகன்; என் பெயர் ரிதுத்வஜன்; நான் என் தந்தைக்குக் கடமையாற்றும் ஒரு நற் புதல்வன் ஆவேன்’ ||93||
காலவ முனிவர் நடத்தும் வேத யாகத்தைப் பாதுகாப்பதற்காகவே நான் இங்கு வர நேர்ந்தது; என் தந்தை அந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்; நாங்கள் அந்த முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றோம்; அங்கு காட்டுப் பன்றியின் உருவத்தில் வந்த அந்த அரக்கனை காயப்படுத்தியவன் நானே ||94||
அவன் இறக்கவில்லை; ஓடி விட்டான்; அவனைத் துரத்திக் கொண்டே நான் இங்கு வந்தேன்; அவன் இந்தக் குகைக்குள் நுழைந்தான்; அவனைத் தேடுவதற்காக நானும் அவனைப் பின் தொடர்ந்து வந்தேன் ||95||
ஆகவே, அவனை வதம் செய்வதே அந்த முனிவரின் கட்டளையாகும்; அவர் தனது யாகம் எவ்வித இடையூறுமின்றி நிறைவு பெற வேண்டும் என்று விரும்புகிறார்; இங்கு நான் உங்கள் இருவரையும் கண்டேன்; இப்போது இந்த இங்குள்ள நிலை முழுவதையும் நான் நன்கு அறிந்து கொண்டேன் ||96||
குண்டலா கூறினாள் ‘நான் சொல்வதைக் கேளுங்கள்; இங்கு இரண்டு அரக்கர்கள் உள்ளனர்; மூத்தவன் பாதாளகேது என்றும், இளையவன் தாளகேது என்றும் அழைக்கப்படுகிறார்கள்; இவர்கள் இருவருமே மக்களுக்குப் பெரும் துயரத்தை விளைவிப்பவர்கள்||97||
இவர்கள் இங்கு மறைந்து வாழ்ந்து வருகிறார்கள்; இன்று அந்த அரக்கன் அச்சங் கொண்டு ஓடி விட்டான்; அவன் பாதாள உலகத்தின் ஆழத்திற்குள் புகுந்திருக்கக் கூடும்; ஆயினும், உங்களால் அவனைப் பிடித்து விட முடியும் ||98||
எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது: என் தோழியான இந்தப் பெண் மிகவும் கற்புடைமை வாய்ந்தவள்; நீங்கள் அந்த அரக்கனைத் துரத்திச் செல்லும்போது இவளையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்; இவள் உங்கள் புகழை மேலும் பெருமைப்படுத்துவாள்||99||
இவள், தேவ லோகத்தைச் சேர்ந்த கந்தர்வ இசைக் கலைஞரின் மகள் ஆவாள்; இவள் ஞானம் வாய்ந்த யோகிகளின் மதிப்பைப் பெற்றவள்; இவளுக்கு இணையாக வேறு எவரும் இல்லை; நீங்கள் இவளைத் திருமணம் செய்து கொண்டால், இவள் மிகுந்த மனநிறைவு அடைவாள் ||100||
‘”க்ஷத்” (Ksha) என்றால் துயரம் என்று பொருள்; எவர் ஒருவர் துயரத்தைப் போக்கி மக்களைக் காக்கிறார்களோ, அவர்களே இவ்வுலகில் புகழ்பெற்ற க்ஷத்திரிய (வீரர்) எனப் போற்றப்படுகிறார்கள்; நீங்களும் அத்தகைய பெருமைக்கு முற்றிலும் தகுதியானவர் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்||101||
இவளுடைய துயரத்தைப் போக்கி நீங்கள் இவளைக் காப்பாற்றினால் , புகழ் பெற்ற க்ஷத்திரிய வீரர்களுக்குரிய பெயருக்கு நீங்கள் நிச்சயமாகப் பெருமை சேர்ப்பீர்கள்; உங்களைச் சரணடைந்து பாதுகாப்புத் தேடி வருபவர்களைக் காப்பதே, இப்போது உங்கள் முதன்மையான தா்மமாகும்||102||
நீங்கள் ஒரு மனிதராகப் பிறந்தவர்; ஒரு தேவதையின் மகளை நீங்கள் திருமணம் செய்து கொண்டால், இவ்வுலகில் உங்கள் புகழ் நிச்சயமாகப் பெருகும்; எனவே, இவளைத் திருமணம் செய்து கொள்ள நீங்கள் மனமுவந்து சம்மதிக்க வேண்டும்||103||
இவள் சிங்கம் போன்ற வலிமை மிக்க வீரர்களுக்கே உரியவள் ஆவாள்; சிங்கம் போன்ற வீரர்களின் பங்கை (உரிமையை) வேறு எவரும் அபகரித்துச் செல்லாதவாறு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்; அதனாலேயே நீங்கள் அனைவராலும் போற்றப்படுவீர்கள்; இந்த உண்மையை உங்கள் அறிவுத் திறனால் உறுதியாக உணர்ந்து கொள்ளுங்கள்||104||
இவள் தன் வாழ்வில் சந்தித்த துயரங்கள் அனைத்தையும் நான் இப்போது உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன்; இப்போது நான் உங்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறேன்; இந்தத் தருணத்தில் இவளை ஏற்றுக் கொள்வதற்கு மட்டும் நீங்கள் மறுத்து விடாதீர்கள்||105||
நான் அவளுக்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு, இமயமலைச் சிகரங்களில் அமைந்துள்ள எனது இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்று, மீண்டும் எனது தவத்தைத் தொடர்வேன் ||106||
ஒருவேளை நீங்கள் அவளைத் திருமணம் செய்து கொள்ளாவிட்டால், அவள் நிச்சயமாகத் தன் உயிரைத் துறந்து விடுவாள்; அவ்வாறாயின், நாம் செய்த இம் முழு முயற்சியும் வீணாகி விடும்; அத்துடன், தெய்வ பசுவான காமதேனுவின் முன்னறிவிப்பு பயனற்றதாகி விடும். ||107||
அவள் எவ்வித ஐயமுமின்றித் தன் உயிரை மாய்த்துக் கொள்வாளே தவிர, ஒருபோதும் அந்த அரக்கனுக்கு அடிமையாக மாட்டாள்; அவளது இந்தத் தீர்மானம் அசைக்க முடியாததாகவே நிலைத்திருக்கும்; தயவு செய்து நான் கூறுவதை நம்புங்கள் ||108||
இவ்வாறு, அந்த நற்பண்பு மிக்க தோழியான குண்டலா மிகவும் பணிவுடன் வேண்டிக் கொண்டாள் ‘இப்போதே அவளைத் திருமணம் செய்து கொண்டு, உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்; விதியே உங்களுக்கு இந்தப் பரிசை வழங்கியுள்ளது’ ; இவ்வாறு கூறியவள், மீண்டும் அந்த இளவரசரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினாள்||109||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் இரண்டாம் அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் இருபத்தி ஐந்தாம் (25) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 2597 = 2706
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -8, அத்தியாயம் -25 முடிவடைந்தது
பாகம் -9, அத்தியாயம் -26 தொடர்கின்றது