COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION


பாகம் -11 : அஷ்டாங்க யோக தத்துவம்

அத்தியாயம் 41
நஹுஷன் கடத்தப்பட்டான்; வசிஷ்ட முனிவரிடம் அடைக்கலம்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

வாரணாசியில் வசித்து வந்த குரு வேத தர்மா தன் சீடன் தீபக்கிற்குத் தொடர்ந்து இவ்வாறு விளக்கினார் ‘அசுரன் ஹுண்டாசுரன் அந்த இளவரசனைக் கண்டான்; அவனுக்குள் சொல்லொணா ஒரு அச்சம் குடி கொண்டது ||1||

அந்த அசுரன் தன் மேனி பொலிவிழந்து, தான் பலவீனமடைவதை உணர்ந்தான்; அவன் இவ்வாறு கூறினான் ‘பாருங்கள், என் உயிர் என்னிலிருந்து விலகிச் செல்வது போல் தோன்றுகிறது; இந்த மன்னனின் மகன் மிகுந்த தேஜஸுடன் விளங்குகிறான்; விதியின்படி, எதிர்காலத்தில் இவனே என்னைக் கொல்லக் கூடும் ||2||

இவன் வாலிபப் பருவத்தை அடைந்து விட்டால், இவனை என் பிடிக்குள் கொண்டு வருவது இயலாது போய்விடும்; மாறாக, இப்போதே இவனை நான் சிறைப் பிடித்துவிட்டால், ஏதேனும் ஒரு வழியைச் செய்து விடலாம். ஆயினும், என் மனதிற்குள் ஒருவித அச்சம் சூழ்ந்து கொள்கிறது’||3||

இவனது உயிரை ஏதோ ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் பாதுகாத்து வருவதாகத் தோன்றுகிறது. அதனால்தான், எனது அறிவுக் கூர்மையும், அசுர சக்திகளும் இவனுக்கு எந்தவொரு தீங்கையும் விளைவிக்க முடியாமல் தோற்றுப் போனது போல் தெரிகிறது||4||

அது சுவர்க்கமாக இருக்கட்டும், பூமியாக இருக்கட்டும் அல்லது பாதாள உலகமாக இருக்கட்டும், இவனுக்குக் கிடைக்கும் அந்தப் பலமான பாதுகாப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை; இவ்வளவு வலிமை வாய்ந்த அந்தச் சக்தி எதுவாக இருக்கும்?; இவனிடம் குடி கொண்டிருக்கும் அந்த விசேஷமான ஆற்றல் என்ன?||5||

வேறொருவராக இருந்திருந்தால், நிச்சயமாக எனது மாயா ஜால சக்திகள் அவர்களைப் பாதித்திருக்கும்; அவர்கள் என் வலையில் சிக்கியிருப்பார்கள்; எனவே, இவன் அசுரர்களுக்கு ஒரு எதிரியாகவே இருக்கிறான் என்பது தெளிவாகிறது ||6||

இவன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; என்னால் இவனைத் துல்லியமாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்றாலும் அந்தத் தெய்வீக சக்தியான ‘மகா மாயை’ (Mahamaya) எல்லாவற்றிற்கும் மேலாகப் பேராற்றல் கொண்டவள் ஆவாள்; நான் அவளையே சரணடைகிறேன்; எனக்குத் தேவையான வலிமையை அவளே எனக்கு அருளுவாள்||7||

இவ்வாறு தன் மனதிற்குள் தீர்மானித்துக் கொண்ட அந்த அசுரன் ஹுண்டாசுரன், கைகளைக் கூப்பித் தொழுது இவ்வாறு பிரார்த்தித்தான் ‘ஓ தேவி மகா மாயையே, விரைந்து வந்து எனக்குத் துணையாக நில்லுங்கள்; எனக்குத் தேவையான மன அமைதியையும் பாதுகாப்பையும் எனக்கு அருளி, எனக்கு உதவுங்கள்||8||

என் அகக் கரணங்கள் அனைத்தும், உன்னுடைய திருவடிகளிலேயே நிலைத்திருக்க ஏங்குகின்றன; நான் சுமந்து செல்லும் இந்தத் துயரச் சுமையை நீக்கி, முன்பிருந்தது போலவே என்னை கஷ்டமும் கவலையும் இல்லாதவனாக செய்வாயாக||9||

உன்னுடைய திருவருளை நான் பெற்று விட்டால், அதன் பிறகு என்னுடன் யார் பகை கொள்ளத் துணிவார்கள்?; உன் அருள் பெற்ற பின்பே, நான் அனைவரின் மீதும் ஆதிக்கம் செலுத்தி வீற்றிருப்பேன்; ஓ அன்னையே, இதனை நீ உறுதியாக அறிவாய்||10||

நான் இங்கு உன்னுடைய ஒரு குழந்தையாகவே வந்துள்ளேன்; என் மீது கருணை கொண்டு என்னைக் காப்பாயாக; அந்தக் குழந்தையை என் கைகளில் ஒப்படைத்து, அவனை அபகரிக்கும் எனது முயற்சியில் எனக்கு வெற்றி தருவாயாக ||11||

இதற்காகவே நான் உணவையும் நீரையும் துறந்து, இரவும் பகலும் தக்க தருணத்திற்காகக் காத்திருக்கிறேன் என்பதை நீ அறிய மாட்டாயோ?; உன்னுடைய திரு அருள் இருந்தால் மட்டுமே எனது காரியம் கை கூடும்; எனவே, இம் முறையாவது என் மீது ஒரு கருணைப் பார்வை வீசுவாயாக ||12||

என் எதிரி எத்துணை வலிமை வாய்ந்தவனாக இருப்பினும் சரி, அல்லது அவனுக்குத் திருமாலே (ஹரி) துணையாக நின்றாலும் சரி; உன்னுடைய திருவருள் எனக்கு துணையாக இருந்தால் எனக்கு எவராலும் எந்த விதமான தொல்லையும் நேராது||13||

நான் இடை விடாமல் விழிப்புடன் காத்திருக்கிறேன்; என் முகமோ பணிவின் சாயலை வெளிப்படுத்துகிறது; ஆஹா, எப்படியாவது உள்ளே சென்று அந்தக் குழந்தையைச் சிறைப் பிடித்து விட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்; அதற்கான பல்வேறு வழிகளை நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்||14||

ஓ அன்னையே, எனக்கு விரைந்து அருள் புரிவாயா; நீ அருள் புரிந்த பிறகு, சாதிக்க முடியாத காரியம் என்று ஏதேனும் உண்டோ?; அதன் பிறகு, நிச்சயமாக எவராலும் எனக்கு எந்த விதத் தடையோ இடையூறோ ஏற்பட முடியாது ||15||

திவ்ய லோகமான வைகுண்டத்தின் அதிபதியான திருமால் எல்லாம் அறிந்தவராக இருப்பினும், பிரளய காலத்தில் அவர் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே; அந்த நேரத்தில் , நீயும் அவருடன் ஒன்றிணைந்து, அவரை முழுமையாக ஆட் கொண்டு விளங்குகிறாய்; அப்படியிருக்கையில், வேறு எந்தத் தெய்வத்தைப் பற்றி எவர் கவலைப்படப் போகிறார்கள்?||16||

நான் உணவும் நீரும் இன்றி விரதம் இருக்கிறேன்; ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச் செல்ல, என் உடல் வலிமை குறைந்து கொண்டே வருகிறது; நீ என் மீது கருணை கொண்டு பார்க்கவில்லை என்றால், நிச்சயமாக என் உயிர் பிரிந்து விடும்||17||

ஓ பக்தர்களிடம் பேரன்பு கொண்ட அன்னையே, என் முன் பிரசன்னமாகி எனக்கு அருள் புரிவாயாக; நீ விரும்பும் அளவு மதுவையும் மாமிசத்தையும் பலியாகப் படைத்து உன்னை வழிபடுவேன்; ஓ தேவி மஹாமாயா, உன்னைச் சிரம் பணிந்து வணங்குகிறேன்; ஓ மயக்கும் சக்தியான மோகினி தேவியே, நான் கேட்ட வரத்தை எனக்கு கொடுத்து அருள் புரிவாயாக ||18||

இவ்வாறு அசுரன், ஓய்வின்றி இயங்கும் தன்மையுடன் தொடர்புடைய ரஜோ குணமுடைய பக்தியுடன் தேவியை வழிபட்டான்; தொடர்ந்து அவளிடம் பிரார்த்தனை செய்தான்; அதனால் அவள் அவன் மீது கருணை மிக்க தேவியாக மாறினாள்||19||

அப்போது, குழந்தையைப் பராமரித்து வந்த ஒரு பணிப் பெண் உள் அறையில் இருந்து வெளியே வந்தாள்; அவள் அசுரன் இருந்த இடத்திற்கு அருகில் சென்று அமர்ந்தபோது, அசுரன் உள்ளுக்குள் பெருமிதம் கொண்டான் ||20||

அவன் தீர்மானித்தான் ‘இப்போது நான் அவளது உடலுக்குள் நுழைந்து, உள் அறைக்குள் எளிதாக நுழைந்து விடுவேன்; அப்படிக் கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவ விடாமல் அவன் சூட்சமமாக அந்தப் பணிப் பெண்ணின் உடலுக்குள் புகுந்து கொண்டான் ||21||

அவளுக்குள் நுழைந்ததும், அசுரன் அந்தப் பணிப் பெண்ணிடம் இருந்த ஞானத்தின் சக்தியை முழுவதுமாகப் பிடுங்கி, அதற்குப் பதிலாக அவளுடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தனது சக்தியைப் புகுத்தினான் ||22||

இவ்வாறு அரசியின் நம்பிக்கைக்குரிய பணிப் பெண்ணுக்குள் மறைந்திருந்து, அவனால் அரசியின் அறைக்குள் நுழைய முடிந்தது; அவன் அப்படி வந்ததால், அவனை யாரால் அடையாளம் காண முடியும்? ||23||

அவன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்; தேவி என்மீது மகிழ்ந்திருக்கிறாள், அதனால்தான் என்னால் இங்கு உள்ளே நுழைய முடிந்தது; இப்போது நான் ஒரு மந்திரத்தை ஓதி, அதன் மூலம் அவர்களை மாயையில் ஆழ்த்துவேன் ||24||

அந்த மந்திரமானது, அறிஞர்களின் மற்றும் உயர் குடியினரின் அறிவையும் கூட மயக்கும் வல்லமை கொண்டது; எனவே, அவன் அந்த மந்திரத்திற்குரிய தேவதையை நோக்கி ‘இம் மண்டபங்களில் உள்ள அனைவரையும் உறங்கச் செய்வாயாக’ என்று கூறி அழைத்தான் ||25||

அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்வார்களாக; எவருமே என்னைக் பார்க்க இயலாதவாறு இருந்தபடி உறங்கட்டும்; விடியற் காலையில் மட்டுமே அவர்கள் விழித்தெழட்டும் ||26||

அந்த தேவியின் அருளாலும், அந்த மந்திரங்களின் சக்தியாலும், அந்தப்புர அறைகளுக்குள் இருந்த அனைவரும் மயக்கமுற்று, விரைவில் உறக்கத்தில் ஆழ்ந்தனர் ||27||

ஹுண்டாசுரன் (Hundasur) மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்; அவன் மிக எளிதாகச் சென்று அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டான்; பின்னர் அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு, தன் சொந்தத் தலை நகருக்குத் திரும்பினான்||28||

இறைவன் ஸ்ரீமத் தத்தாத்ரேயர்(Datta) வேண்டும் என்றுதான் அந்த சம்பவத்தை நிகழ அனுமதித்தார்; அவன் ஓதிய மந்திரத்திற்கும் அதன் வலிமைக்கும் உரிய மதிப்பை அளிக்கும் பொருட்டே அவர் அவ்வாறு செய்தார்; அனைவரும் அந்த மந்திரத்தின் மயக்கத்திற்கு ஆட்பட்டிருந்ததால், இது அந்த அரக்கனின் செயல் என்பதை எவராலும் அறிந்து கொள்ள இயலவில்லை||29||

அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்; அந்த அரக்கனின் கள்ளத்தனமான செயல்களைப் பற்றி எவருக்கும் தெரியவில்லை ; பின்னர், அவன் ஆகாய மார்க்கமாகப் பயணித்து, அந்த இளவரசனைத் தன் நகரத்திற்குத் தூக்கிச் சென்றான்||30||

இறைவன் சர்வ ஞானி ஆவான்; அவனது லீலைகள் (திருவிளையாடல்கள்) ஆனந்தம் நிறைந்தவை மற்றும் அளவிட முடியாதவை; அடியார்கள் நன்மை அடையும் வகையிலேயே அவன் அனைத்தையும் செய்கிறான்; அதுவே அவனது முதன்மையான நோக்கமாகும் ||31||

அவனது திருநாமத்தை நினைத்தாலே அல்லது உச்சரித்தாலே அவன் அடியார்களை வாழ வைக்கின்றான் என்றால், அவனை நாள்தோறும் வழிபட்டுப் பணி விடை செய்வோரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?; ஏற்கனவே அவரோடு உணர்வு பூர்வமாக ஒன்றிணைந்து விட்டவர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?||32||

இவ்வாறு அந்த இளவரசன் அந்த அரக்கனின் நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டான்; அவன் அந்தக் குழந்தையைத் தன் மனைவியிடம் ஒப்படைத்து, அவளிடம் குறிப்பாக இவ்வாறு கட்டளையிட்டான்; இந்த குழந்தையை வெட்டிச் சமைத்து, எனக்கு ஒரு சுவையான உணவாகப் பரிமாறுவாயாக||33||

மன்னன் ஆயு (Aayu) ஒரு குழந்தையைப் பெறுவதற்காக எத்தகைய தவங்களைச் செய்திருந்தாலும், எத்தகைய வேத யாகங்களை இயற்றியிருந்தாலும், அந்தக் குழந்தைதான் இறுதியில் என்னைக் கொல்லப் போகிறது என்று விதி நிர்ணயித்துள்ளது; அந்த நாள் வருவதற்கு முன்பாகவே, நான் இந்த குழந்தையை உண்டு விடப் போகிறேன் ||34||

இந்த குழந்தையைக் கடத்தி, இங்கு கொண்டு வருவதற்காக நான் பெரும் முயற்சி எடுத்துள்ளேன்; எனவே, இந்த செயலில் எவ்வித தாமதமும் செய்யாதே; விரைவாக இந்த குழந்தையைச் சமைத்து, எனக்குக் காலை உணவாகப் பரிமாறுவாயாக||35||

விதி எனக்குத் துணையாக நின்றதால்தான், என்னால் இந்தக் குழந்தையை இங்கு கொண்டு வர முடிந்தது; ஒருவேளை நாம் இவனிடம் கருணை காட்டினால், இவன் என்னையும், என்னிடம் உள்ள அனைத்தையும் வேரோடு பிடுங்கி எறிந்து விடுவான்’ ||36||

நமக்கு எந்தப் பேரழிவும் நேராமல் இருக்கவே, இவனை உணவாகக் கொள்ளும் பொருட்டு நான் இவனை இங்கு தூக்கி வந்துள்ளேன்’; அவளது கணவனின் வார்த்தைகளைக் கேட்ட மனைவி அச்சத்தில் ஆழ்ந்தாள் ||37||

அவள் அவனிடம் கூறினாள் ‘ஏன் இவனைக் கொல்ல விரும்புகிறீர்கள்? இந்தக் குழந்தைப் பருவத்தில் இருக்கும் இவன், உங்களுக்கு விதியால் அமைந்த எதிரியாக இருக்கக் கூடும் என்பது நம்பக் கூடிய ஒன்றா? ||38||

இவனைக் கொல்ல வேண்டும் என்ற உங்கள் ஆசை வீணானது; சாஸ்திரங்களில் இது கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது; இந்த செயல் நமது முழு வம்சத்தையே அழித்து விடும்; குழந்தையைக் கொல்வது ஒரு கொடிய பாவமாகும்||39||

இத்தகைய துணிவு உங்களுக்குப் பொருத்தமானதல்ல; மக்கள் உங்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பார்கள்.’ அதைக் கேட்ட ஹுண்டாசுரன் சினமுற்று ‘என்ன இது? திடீரென்று உனது மனம் ஏன் மாறி விட்டது?; அதுவும் எனக்கா நீ அறிவுரை கூறுகிறாய்?’ என்று கோபமாக கேட்டான்’ ||40||

விதியின் காரணமாகவே இவன் பிறந்துள்ளான்; இறுதியில் இவன் என்னைக் கொல்வது உறுதி; இவனை இங்கு அழைத்து வர நான் எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறேன் என்பதை நம்பு; இவன் மீது உனது இரக்கத்தை காட்டாதே ||41||

நமது குருவான விரோசனன் மிகவும் புகழ் பெற்றவர்; அவரது வார்த்தைகளை நான் உனக்கு எடுத்துரைக்கிறேன் ‘ஒரு செயல் எவ்வளவுதான் இழிவானதாக இருந்தாலும், உங்கள் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், உங்களுக்குள் இருக்கும் ‘ஆத்மா வைக் காப்பாற்றிக் கொள்ளவும், அந்த செயலைச் செய்யலாம்’ ||42||

அவரது கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்; எனது உடலே எனது ‘ ஆத்மா ஆகும்; இது அனைவரும் காணக் கூடிய, புலன்களுக்கு எட்டும் ஒரு பூத பொருளாகும்; ‘பரம்பொருள்’ என்று போற்றப்படும் பிரம்மத்தை போல, இது கண்ணுக்குப் புலப்படாத ஒன்றல்ல||43||

நான் அனைத்து விஷயங்களையும் இப்படித்தான் பார்க்கிறேன்; எனக்குள் இருக்கும் ஆத்மாவே அழிந்து விட்டால், இந்தச் செல்வங்கள் அனைத்தையும் அனுபவிக்கப் போவது யார்?; இத்தகைய செல்வங்கள் ஒவ்வொரு முறையும் அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடுமா?||44||

வேத நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ள மறைமுகமான உட்கருத்து இதுவேயாகும்; மனைவி, மக்கள், வீடு, செல்வம் என எதுவாக இருந்தாலும், இவை அனைத்தும் நமக்கு விருப்பமானவையாகத் தோன்றுவதற்குக் காரணம், ஆத்மா தங்கியிருக்கும் உடல் மட்டுமேயாகும்||45||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘தேகமாத்ரம் ஸதா ரக்ஷேத் தாரைரபி தனைரபி; புனர் தாரா புனர் வித்தம், ந தேஹாத்மா புனஃ புனஃ’;
இதன் அர்த்தம் என்ன என்றால் ‘ஒருவர் தன்னுடைய உடல் நலனை (உயிரை), தனது மனைவி மற்றும் செல்வம் ஆகியவற்றைத் தியாகம் செய்தாவது எப்போதும் பாதுகாக்க வேண்டும்; ஏனெனில், மனைவியையும் செல்வத்தையும் நாம் மீண்டும் பெற்று விட முடியும்; ஆனால், இந்தப் பிறவியில் போனால் மீண்டும் கிடைக்காத ஒன்று இந்த உயிர் மட்டுமே’. ||46||

இந்த நோக்கத்தை மனதிற் கொண்டே, மேலும் எங்கள் குருவின் கட்டளைக்கு இணங்கவே, நீ அந்தச் குழந்தையைக் கொன்று, சமைத்து, விரைவாக எனக்குப் பரிமாற வேண்டும் என்று நான் உன்னிடம் கேட்கிறேன் ||47||

இந்த குழந்தை சமைக்கப்படும் நேரம் முழுவதும் நீ அங்கேயே உடனிருக்க வேண்டும்’; இவ்வாறு கட்டளையிட்டவாறே, அவன் மீண்டும் அந்த குழந்தையை அவளிடம் ஒப்படைத்தான்; அந்த அரக்கனைக் கண்டு மரண அச்சம் கொண்டவளாய், அவள் குழந்தையைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டாள்; மேலும், அவன் இட்ட கட்டளையை இயன்றவரை விரைவாக நிறைவேற்ற முற்பட்டாள்||48||

அவள் அந்த குழந்தையின் கால்களை நன்கு பிடித்துக் கொண்டு, தன் பணிப் பெண்ணிடம் கொடுத்து ‘சுவையான உணவுகளைச் சமைப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றவளே, இந்தக் குழந்தையைக் கொன்று உணவாக்குவாயாக’ என்று கட்டளை இட்டாள் ||49||

இவன் என் கணவனின் எதிரி என்று சொல்லப்படுகிறான்; இவனை விரைவாகக் கொன்று இன்னும் விரைவாகச் அறுசுவை உணவாக்கி விடு; என் பிரபு காலை உணவாக இந்தக் குழந்தையையின் உணவைத்தான் கேட்டு உள்ளார்; அவரை அவரது கவலையில் இருந்து விடுதலை பெறச் செய் ||50||

அதன் விளைவாக அவர் இனி மரணத்தைப் பற்றி அஞ்ச மாட்டார்; அவர் நித்தியமானவர் ஆவான்’ என்று கூறிய பின் அவள் மேலும் ‘அது தனக்குத்தானே மூச்சுத் திணறிக் கொள்ளும்படியான எதையாவது அதற்கு ஏன் கொடுக்கக் கூடாது?’என்றும் கேட்டாள்||51||

பணிப்பெண் ஆச்சரியப்பட்டாலும், குழந்தையை எடுத்துக் கொண்டு நேராக சமையலறைக்குச் சென்றாள்; அவள் கசாப்புக் கடைக்காரனை அழைத்து, இளவரசனை அவனிடம் ஒப்படைத்தாள் ||52||

அவள் கூறினாள் ‘ஒரு பெரிய ஆயுதத்தை எடுத்து, இந்தக் குழந்தையை இந்த நொடியே கொன்று விடு; பிறகு நான் அதை ஹுண்டாசுரனுக்கு உணவாக சமைக்க வேண்டும்; அவன் தன் காலை உணவாக இந்த குழந்தையின் உணவை உண்டு மகிழ்வான் ||53||

கசாப்புக்குகாரன் மேற்கொண்டு கேள்வி கேட்காமல், குழந்தையையும் தன் இடது கையில் இருந்த வாளையும் பிடித்துக் கொண்டு, ஒரு குழந்தையின் தலையைத் துண்டிக்கத் தேவையான முழு பலத்துடன், அதன் கழுத்தை இரண்டு முறை முறிக்க முயன்றான் ||54||

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வாள் குறி தவறாமல் தாக்கிய போதிலும், அது உடைந்து போனது; குழப்பமடைந்த அந்த கசாப்புக்காரன், பிறகு குழந்தையைத் தரையில் கிடத்தி அதை அடிக்கத் தொடங்கினான்||55||

தெய்வமான ஸ்ரீமத் தத்தரோ தனது தெய்வ சக்கரத்தைக் கொண்டு குழந்தையை அனைத்து நேரங்களிலும் பாதுகாக்கக் கட்டளையிட்டிருந்தார்; அதனால்தான் அவர்கள் அதை கொல்ல முயன்றும் இரண்டு வாள்கள் உடைந்ததுதான் மிச்சம்; ஆனால், அதை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை ||56||

அந்தச் சக்கரம் இவரது கண்களுக்கும் தெரியாத நிலையில் இருந்தது என்பதினால் அதன் மீது வாள் இரண்டு முறை அடித்தும், அந்த இரண்டு முறையும் அந்த ஆயுதம் மட்டுமே உடைந்தது; குழந்தையோ தன்னிலும் அதன் அப்பாவித்தனமாக சிரிப்பில் மூழ்கியிருந்தது||57||

ஆட்டை அறுப்பது போல, கசாப்புக்காரன் குழந்தையை அறுக்க முயன்றான்; ஆனால் அவனது முயற்சிகள் அனைத்தும் வீணாயின; இறுதியில் அவன் சுய நினைவுக்கு வந்து, இது எப்படி சாத்தியம் என்று வியக்கத் தொடங்கினான் ||58||

பின்னர் மற்றொரு பணிப்பெண் தரையில் கிடந்த குழந்தையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள் ‘ஓ கசாப்புக்காரனே, இதற்கு மேலும் தீங்கு செய்யாதே, எந்த ஆயுதமும் இதற்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது; இது இப்போது உனக்குத் தெளிவாகத் தெரியவில்லையா?; அதன் உயிரை ஏதோ ஒரு பெரும் சக்தி பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது||59||

அந்தக் குழந்தை யாருடைய வடிவத்தை எடுத்திருக்கிறது, யாருக்குத் தெரியும்? அதை எது பாதுகாக்கின்றது என்ற ரகசியம் யாருக்குத் தெரியும்?; இந்த உண்மைகளை நம்மால் தீர்மானிக்க முடியாத போது, நாம் ஏன் வீணான முயற்சி செய்ய வேண்டும்?||60||

விதி வலிமையானது, அதனால் அது நம் மனதையும் உலுக்கியுள்ளது, இல்லையென்றால், அதன் உயிரை ஒரேயடியாகப் பறிப்பதற்கு பதிலாக அதன் உயிரைக் காப்பாற்றுவது பற்றி நாம் எப்படி நினைக்கிறோம்? ||61||

ஹுண்டாசுரன் ஏன் அவன் சாக வேண்டும் என்று விரும்புகிறான்?; அதற்கான காரணம் நமக்குத் தெரியாது; ஆனால் அவன் உடலில் உள்ள அரச அடையாளங்களைப் பாருங்கள்; அவன் எனக்கு ஒரு தெய்வீகக் குழந்தை போல் தெரிகிறான்||62||

குழந்தைகளுக்கு மத்தியில் அவன் ஒரு ரத்தினம் போன்றவன்; எந்த ஒழுக்கமற்றவன் அவனைக் கொல்ல விரும்புவான்?; அதன் குணாதிசயங்கள் அனைத்தும், எதோ ஒரு உடன்பிறந்தவன் போல அல்லவா உள்ளது ||63||

கசாப்புக்காரன் அவள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டான்; அவள் சொன்னதை ஏற்றுக் கொண்டு, தன் தோல்வியால் கொந்தளிப்பதற்குப் பதிலாக அவனும் அமைதியடைந்தான்; பிறகு அவளிடம் சொன்னான் ||64||

ஓ மங்கையே, நான் இனி அந்தக் குழந்தைக்குத் தீங்கு செய்ய மாட்டேன், உண்மையிலேயே அவன் மீது ஒளி வீசுகின்றது; நான் ஒவ்வொரு நாளும் பலரைக் கொன்றாலும், இன்று அவ்வாறு செய்ய மனம் வரவில்லை ||65||

விதி எவ்வளவு வலிமையானது பார், நமது வாள்கள் இருமுறை உடைந்தன; அவன் உடலில் ஒரு மயிர் கூட சேதமடையவில்லை; மின்னல் வலிமை கொண்ட ஒரு கவசம் அவன் உடலைப் பாதுகாப்பது போல் தெரிகிறது||66||

நமது ஆயுதங்கள் அனைத்தும் வீணாகி விட்டன; அந்த இழிவான ஹுண்டாசுரன் ஏன் இவன் சாக வேண்டும் என்று விரும்புகிறான்?; ஏன் நம் வலிமையை வீணடிக்கச் செய்கிறான்?; இந்தச் சிறுவனைச் சூழ்ந்துள்ள விதியையும், அந்த விதி இவனுக்கு அளிக்கும் பாதுகாப்பையும் பார் ||67||

இவன் காப்பாற்றப்பட்டதை எண்ணிச் சிரிக்கிறான் போல உள்ளது; இவனுடைய தெய்வங்கள் இவனுக்குத் துணை நிற்கின்றன; இவன் கடந்த காலத்தில் செய்த நற் செயல்கள் இவனை காக்கின்றன; இத்தகைய ஒருவனுக்குத் தீங்கு விளைவிக்க யாரால் இயலும்?||68||

துன்பங்கள் சூழ்ந்திருப்பவனையும், அடர்ந்த காடுகளில் வழி தவறி சென்று விட்டவனையும் , ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுபவனையும், மிகக் கடினமான இக்கட்டான சூழ்நிலைகளில் இருப்பவனையும்||69||

தெய்வங்கள் சிறப்பாக காக்கின்றன; நாம் ஏன் இவனுடைய உயிரைப் பறிக்க முயல வேண்டும்?; ஆயுதங்கள், நெருப்பு அல்லது விஷம் என எதைக் கொண்டு முயன்றாலும், ஒருவனின் இறப்புக்கான காலம் வராதபோது, அவனைக் கொல்ல முடியாது ||70||

நமது விதி கீழ் நோக்கிச் செல்கிறது, வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது என்பதை உணர்ந்து, நான் எனது ஆயுதங்கள் அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டேன்; வேட்டைக்காரன் இவ்வாறு கூறுவதைக் கேட்டதும், அந்தப் பணிப்பெண் அவனிடம் இவ்வாறு கூறினாள்||71||

‘உன் மனம் இப்போது அமைதியடைந்திருந்தால், நான் சொல்வதைக் கேள்: நாம் இந்தச் சிறுவனை வேறொரு இடத்தில் கொண்டுபோய் வைத்து விடுவோம்; அங்கே இவன் பாதுகாப்பாக இருக்கட்டும்; இந்த விஷயம் ஹுண்டாசுரனுக்கு தெரியாமலேயே இருக்கட்டும் ||72||

எது எப்படியாயினும், இவன் யாருடைய குழந்தை? இவனுடைய உயிரைக் காப்பதில் அவள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாள்?’; வேட்டைக்காரன் இவ்வாறு எண்ணி முடிப்பதற்குள், அந்தப் பணிப் பெண் அவனிடம் ‘இவனைக் காப்பாற்றுவதற்கு நீ அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்ள வேண்டும்’ என்று கூறினாள் ||73||

வேட்டைக்காரனுக்கும் அந்தப் பணிப் பெண்ணுக்கும் திடீரென்று இந்த மன மாற்றம் எப்படி ஏற்பட்டது?; அது ஸ்ரீமத் தத்த பகவானின் திருவருளால் மட்டுமே நிகழ்ந்தது; அவரே அனைத்து உயிர்களுக்குள்ளும் அந்தர்யாமியாக (உறை தெய்வமாக) வீற்றிருப்பவர்; அவர் ஒரு மனிதனின் இயல்பையே மாற்றியமைக்காமல் இருப்பாரோ?||74||

அவர்கள் அந்தச் சிறுவனை வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்றனர்; அங்கே அவனைப் பத்திரமாக விட்டு விட்டுத் திரும்புகையில், அவர்கள் ஒரு மான் குட்டையை வேட்டையாடினர்; அந்த மான் குட்டியை வெட்டி சமைத்து, அந்தச் சிறுவனுக்குப் பதிலாக ஹுண்டாசுரனிடம் கொண்டு போய் கொடுத்தனர் ||75||

ஹுண்டாசுரன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்; தனது எதிரியை அவன் குழந்தைப் பருவத்திலேயே விழுங்கி விட்டதாக அவன் எண்ணினான்; அவன் தன் மனைவி, சமையல்காரன் மற்றும் பணிப்பெண் ஆகியோரை முழுமையாக நம்பினான்; தனது எதிரியை ஒழித்துக் கட்டியதற்காகத் தன்னைத்தானே பாராட்டிக் கொண்டான் ||76||

நான் இப்போது என் எதிரியின் சதையை உண்கிறேன்; அது இப்போது என் உடலில் செரித்து விடும்; இதன் மூலம் நான் மரணத்தையே வென்று விட்டேன்; இப்போது நான் அழிவு அற்ற தேவர்களின் வரிசையில் இணைந்து விட்டேன்||77||

உயிரானது இயல்பாகவே நிலையற்ற தன்மையைக் கொண்டது; வீண் பெருமைகளைப் பேசுபவர்கள் மந்த புத்தியும், செருக்கும் கொண்டவர்களே ஆவர்; மரணம் ஒருவனது வாசலைத் தட்டும்போது, அதைத் தடுத்து நிறுத்தி, அந்த உயிரைப் பறிக்கும் கொடிய தருணத்தைத் தவிர்க்கச் செய்ய, இதுவரை யாரால் தான் முடிந்தது? ||78||

இதற்கிடையில், மாபெரும் முனிவரான வசிஷ்டர், சூரிய உதயத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே உறங்கி எழுந்தார்; அவர் தனது ஆசிரம வளாகத்திற்குள் வெளியே வந்தபோது, அங்கே தனது வாசலருகே ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதை அவர் கண்டார்||79||

இந்த நிகழ்வைக் கண்டு வியப்புற்ற அவர், தனது சக முனிவர்களை அழைத்தார்; அவர்கள் அனைவரும் அந்தக் குழந்தையை கையில் ஏந்தி உற்று நோக்கினர்; அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சற்றும் சளைக்காத வகையில் மிகுந்த வியப்பிற்கு உள்ளாயினர்||80||

எந்தக் காரணத்திற்காக, யார் நேற்று இரவு நமது ஆசிரமத்திற்கு வந்தார்கள்?; ஏன் அவர்கள் இந்தக் குழந்தையை இங்கே விட்டுச் சென்றார்கள்?; வாருங்கள், நாம் இப்போது தியானத்தில் அமர்ந்து, இந்த வியத்தக்க நிகழ்வின் பின்னணியில் உள்ள வரலாற்றை அறிந்து கொள்வோம்||81||

தேவர்கள் அருளினால் முனிவர் தனது தியான நிலையில் அந்த நிகழ்வுகள் அனைத்தையும் தெளிவாகக் காண முடிந்தது; அதன்பின் அவர் தனது சக முனிவர்களை நோக்கி ‘வாருங்கள், இந்தக் குழந்தையின் வரலாற்றை நான் உங்களுக்கு விவரிக்கிறேன்’ என்று கூறினார் ||82||

மிகவும் போற்றப்படும் தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர், ஆயு என்னும் மன்னன் வேண்டிய வரத்தை அருளினார்; அதன் விளைவாக, இந்துமதி அன்னையின் கருப்பையிலிருந்து இந்தக் குழந்தை அவர்களுக்குப் பிறந்தது||83||

அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் சீடனான ஹுண்டாசுரன் என்பவன் இந்தக் குழந்தையைத் தனது பரம எதிரியாகக் கருதினான்; எனவே அவன் குழந்தையைக் கடத்திச் சென்று, தனது அரண்மனையில் வைத்து அதைக் கொல்ல முயன்றான்; ஆனால் விதியின் அருளாலேயே, இந்தக் குழந்தை இப்போது நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது||84||

இந்த குழந்தையின் உடலில் பதிந்து உள்ள தெய்வீகத் தன்மைகளைக் காணுங்கள்; பௌர்ணமி நிலவைப் போன்ற இவனது முகத்தைப் பாருங்கள்; மன்னர்களுக்கெல்லாம் ஒரு மாணிக்கமாகத் திகழும் இவனிடம் பிரதிபலிக்கும் அரச லட்ஷணங்களைக் காணுங்கள்; மேலும் இவனது அகலமான, உணர்ச்சி மிகுந்த கண்களைப் பாருங்கள் ||85||

இந்த குழந்தை இன்றைக்குத்தான் பிறந்ததோ என்று தோன்றும் வகையில் மிகவும் பிஞ்சு நிலையில் உள்ளது; இவன் ஒரு தெய்வ குழந்தையைப் போலவே காட்சியளிக்கிறான்; தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரே காத்து வருகிறார்; அப்படியிருக்க, வேறு யாரால் இவர்களுக்குத் தீங்கு விளைவிக்க முடியும்?||86||

இறைவன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரே பரம்பொருள்; அவர் இப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னுள் அடக்கியவர்; சுருதி நூல்களிலும் போற்றப்படுபவர்; அவரது அருளும் வரமும் ஒருபோதும் வீணாகாது; இந்த குழந்தை எவராலும் வெல்ல முடியாதவனாகவும், பெரும் வெற்றியாளனாகவும் திகழ்வான் ||87||

இந்தக் குழந்தையைக் கொன்று விட்டால், தன் துன்பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று கருதி, அந்த அரக்கன் இவனை விரைந்து கொல்லத் துடித்து இருக்கின்றான்; ஆனால், இந்த குழந்தையோ ஒரு பேரரசராகவும், மாவீரராகவும், சந்திர குலத்தின் தூணாகவும் திகழப் பிறந்தவன்||88||

அந்த முனிவர் அந்த குழந்தையின் எதிர் காலம் குறித்த குறிப்புகளையும் வழங்கினார்; அவர் அந்த விவரங்களை எடுத்துரைத்துக் கொண்டிருந்த வேளையில், அவரது சொற்களை ஆமோதிக்கும் வகையில் வானிலிருந்து ஒரு தெய்வீகக் குரல் ஒலித்தது; அந்த தருணத்தில் தேவர்கள் வானிலிருந்து மலர்களைப் பொழிந்தனர் ||89||

‘ஓ முனிவரே! எமது அறிவுரையைக் கேட்பீராக; நாங்கள் இந்த குழந்தையை மனதார ஆசீர்வதித்துள்ளோம்; இவன் இப்பூவுலகையே ஆட்சி செய்வான்; இறைவன் ஸ்ரீமத் தத்தரிடம் இருந்து வரமாகப் பெற்ற இந்த குழந்தையை, நீர் மிகுந்த அக்கறையுடன் வளர்த்துக் காப்பீராக ||90||

பால் அல்லது வெண்மையான நுரையைப் போல ஒளி வீசும் திருமேனி கொண்டவரான அந்தத் தெய்வமான ஸ்ரீமத் தத்தர், இந்தக் குழந்தையைக் காக்கட்டும்; அவர் எந்த காலத்திலும் ஆபத்துகளை நீக்குபவர் என்று அறியப்படுகிறார்; தீய ஆவிகளிடமிருந்தும், கிரகங்களின் தீய தாக்கங்களிலிருந்தும் காப்பவர் அவரே ||91||

அனைத்து உயிர்களுக்குள்ளும் உறைபவர் அவரே; துன்பங்களையும் இடர்களையும் விலக்குபவரும் அவரே; இவ்வாறு தேவர்கள் கூறி, அந்தக் குழந்தையின் நெற்றியில் புனிதமான திருநீற்றைப் பூசினர் ||92||

இந்த நிகழ்வுகளின் விளைவாக, அந்த முனிவரின் இதயம் நெகிழ்ந்தது; அவர் அந்தக் குழந்தையைத் தன் கையில் ஏந்தி, தன் கற்புக்கரசியான மனைவி அருந்ததியிடம் ஒப்படைத்தார்; அந்தத் தெய்வீகக் குழந்தையைப் பெற்றதும் அருந்ததி தேவியும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள்||93||

ஒரு தாய் தன் குழந்தையை வெறும் கண்ணால் நோக்கிய மாத்திரத்திலேயே அவளது மார்பிலிருந்து பால் சுரப்பது போல, அரசன் ஆயுவின் குழந்தையை அருந்ததி தேவி தன் கைகளில் ஏந்தித் தழுவியதும், அவளது மார்பிலிருந்தும் பால் சுரந்தது ||94||

அனைத்து உயிர்களிலும் அந்தராத்மாவாக விளங்கும் ஸ்ரீமத் தத்தப் பெருமான், முனிவர் அத்திரிக்குப் புதல்வனாக அவதரித்தவர்; அவரது ஆனந்தமயமான திருவிளையாடல்கள் பல சமயங்களில் விசித்திரமானவையாக இருக்கும்; அவர் இயல்பிலேயே எதற்கும் கட்டுப்படாதவராகவும், எதனாலும் தீண்டப்படாதவராகவும் (பற்றற்றவராகவும்) திகழ்கிறார்; ஆயினும், அனைத்து இடங்களிலும் உள்ள அனைத்து உயிர்களின் செயல்களும் விதிப்படி நடைபெறுவதை அவரே முன்னின்று நடத்துகிறார்’ ||95||

முனிவர் கூட்டத்திற்கெல்லாம் தலைவரான வசிஷ்ட முனிவர் தொடர்ந்து இவ்வாறு கூறினார் ‘இந்த இளவரசன் தன் எதிரிகள் அனைவரையும் அடக்கி ஆள்வான்; ஆகையால், இவன் ‘நகுஷன்’ (Nahusha) என்னும் பெயரால் புகழ் பெறுவான்; இவனுக்கு நான் சூட்டும் பெயர் இதுவேயாகும் ||96||

இவன் எப்போதும் சத்தியத்தின் பக்கமே நிற்பான்; தீயவர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்வான்; ‘நஹ்’ (Nah) என்னும் சொல் ‘கட்டுப்பாடு’ அல்லது ‘பந்தம்’ என்பதைக் குறிக்கும்; ஆகையால், தீய சக்திகளையும் கொடுமைகளையும் திறம்படக் கட்டுப் படுத்தி அடக்கி ஆள்பவன் என்னும் பொருளில் இவனுக்கு ‘நகுஷன்’ என்று பெயரிடுகிறேன்||97||

தேவர்களுக்குத் துணையாக நின்று உதவுபவனும் இவனே ஆவான்; ஆகையாலும் இவன் ‘நகுஷன்’ என்னும் பெயரால் சிறப்புப் பெறுவான்’ இவ்வாறு கூறிய அந்த முனிவர், எதிர்பாராத விதமாகத் தங்களுக்குக் கிடைத்த அந்தக் குழந்தையை மனதார வாழ்த்தினார் ||98||

ஓம்’ (Aum) என்னும் பிரணவ மந்திரத்தை முதலாகவும், ‘ஸ்ரீமத் தத்தாத்ரேயாய’ என்னும் திருநாமத்தை நடுவாகவும், ‘நமஹ’ (Namah) அல்லது ‘வணங்குகிறேன்’ என்னும் சொல்லை இறுதியாகவும் கொண்ட ஒரு மந்திரம் உள்ளது; ‘ஓம் தத்தாத்ரேயாய நமஹ’ — இந்த மந்திரத்தை ஒரு ஏட்டில் எழுதி, அதை ஒரு தாயத்தாக செய்து, அனைத்து வகையான தீங்குகளும் அண்டாதிருக்க வேண்டும் என்பதற்காக நகுஷனின் கழுத்தில் அந்த முனிவர் கட்டினார் ||99||

அந்த முனிவர் தம்பதியினர் அந்த குழந்தையின் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தனர்; ஒரு கணம் கூட ஓய்வின்றி, சாத்தியமான அனைத்து வழிகளிலும் அக் குழந்தையை அவர்கள் பாதுகாத்து வந்தனர் ||100||

அக்குழந்தை அழும்போது, அன்னை அருந்ததி பாடல்கள் பாடி அதைத் தேற்றுவாள்; அதன் முதுகில் தட்டி, அடிக்கடி இவ்வாறு கூறுவாள் இந்த குழந்தைக்கு விதியே தலைவனாக அமைந்திருக்கிறது போலும்||101||

இறைவனுடன் ஒன்றிணையும் சமாதி நிலையின் பேரின்பத்தைக் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, அந்த முனிவர் அந்த குழந்தையை மிகுந்த அக்கறையுடன் வளர்த்தார்; அந்த குழந்தையும் தன்னை மிகுந்த பாசத்துடன் வளர்த்த அந்த வளர்ப்புப் பெற்றோரை நேசித்து, நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது ||102||

தனது உண்மையான தாய் யார் என்பதை அறியாத அந்த குழந்தை, அன்னை அருந்ததியையே தனது உண்மையான தாயாகவும், முனிவர் வசிஷ்டரையே தனது உண்மையான தந்தையாகவும் கருதியது; அத்தகைய சிறப்பு வாய்ந்த நகுஷன் எனும் அந்த மகன், தனது மழலை விளையாட்டுகளால் அந்தத் தம்பதியினரைத் தன் வசப்படுத்தி மகிழ்வித்தான் ||103||

தனது உண்மையான தாய் யார் என்பதை அந்த குழந்தையால் எவ்வாறு அறிய முடியும்? விதியின் நியதிப்படி அது விரைவாக வளர்ந்தது; விரைவில் அதற்கு உபநயனச் சடங்கு (பூணூல் அணியும் விழா) செய்யும் காலம் வந்தது; முனிவர் சாஸ்திர விதிப்படி அந்த சடங்கைச் சிறப்பாக நிறைவேற்றினார்||104||

ஒரு மன்னனின் மகனுக்கு எத்தகைய கல்வி முறை பொருந்துமோ, அத்தகைய உயர் கல்வியே அவனுக்கு வழங்கப்பட்டது; அந்த கல்வியில் நான்கு வேதங்களும், ஆறு முதன்மையான சாஸ்திரங்களும் அடங்கியிருந்தன ||105||

விரைவிலேயே அவன் பதினான்கு வகையான கலைகளிலும், அறுபத்து நான்கு வகையான திறன்களிலும் வல்லமை பெற்றான்; ஆயினும், வில் வித்தை எனும் தனுர் வேதத்தில்தான் அவன் தனிச் சிறப்பு வாய்ந்த தேர்ச்சி பெற்றிருந்தான்; மேலும் அவன் நீதி தவறாதவனாகவும், அறநெறி வழுவாதவனாகவும் வளர்ந்து வந்தான்||106||

அவன் தனது வளர்ப்புத் தந்தையாகிய முனிவருக்கு மிகுந்த பணிவுடனும் பக்தியுடனும் பணி விடை செய்தான்; அதன் விளைவாக மகிழ்வுற்ற அந்த முனிவர், அவனுக்குப் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் அஸ்திரங்களின் ரகசியங்களை உபதேசித்து அருளினார்’ ||107||

அந்த குழந்தை உண்மையில் சந்திர குலத்தைச் சேர்ந்ததாகும்; ஆயினும், பிறந்த நாள் முதலே அது முனிவர் வசிஷ்டரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தது; விதியின் நியதியே அதை இங்கு கொண்டு வந்து, இத்தகைய கல்வியைப் பெறச் செய்தது; அக்குழந்தை கடத்தப்பட்ட நாள் முதல், இத்தகைய நிகழ்வுகள் நடந்தேறி வருவது குறித்து மன்னன் ஆயுவுக்குச் சிறிதும் தெரிந்திருக்கவில்லை||108||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் நாற்பத்து ஒன்றாவது(41) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை108:
முதலாவது அத்தியாயம் முதல் நாற்பத்து ஒன்றாவது(41) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 4322 = 4430

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்} 

……இதோடு பாகம் -11, அத்தியாயம் 41 முடிவடைந்தது
அத்தியாயம் 42 தொடர்கின்றது