COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION
பாகம் -11 : அஷ்டாங்க யோக தத்துவம்
அத்தியாயம் 36
மரணம்; பிறப்பு-இறப்பு சுழற்சி
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா தன் சீடரான தீபக்கிடம் தொடர்ந்து கூறினார் ‘மன்னன் அலர்க்கனுக்கு இப்படியாக ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் அறிவுரை வழங்கினார் ; இந்த உபதேசம் அனைவரும் ஆன்மீக மேன்மை அடைய வேண்டும் என்பதற்காகவே வழங்கப்பட்டது; அலர்கனின் கேள்வியை ஒரு சாக்காகக் கொண்டு, அந்தப் பேரருள் கொண்ட சத்குரு, கருணையுடன் அனைவருக்கும் யோகா வழி முறையின் போதனையை அளித்தார்’ ||1||
தெய்வமான ஸ்ரீமத் தத்தரின் அறிவுரையைக் கேட்ட அலர்க்கன், தன் மனத்தில் ஆழ்ந்த மன நிறைவை அடைந்தார்; தான் தேடி வந்த தெய்வத்தையும், தன் குருவையும் நோக்கி, தன் உள்ள உணர்வுகள் அனைத்தையும் வெளிப்படுத்தி, மீண்டும் இவ்வாறு வினவினார் ||2||
‘போற்றி, போற்றி, ஓ எளியவரின் தோழனே, போற்றி; ஓ கருணைக் கடலே, போற்றி; புகழ் பெற்ற சாதகப் பறவை* நீருக்கு ஏங்கி நிற்பதை போல, ஞானத்தைத் தேடும் சாதகர்களின் உணர்வுகளுக்கு குளிர்ச்சி அளிப்பவரே, ஓ புனிதர்களுள் சிறந்தவரே, உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்
{*சாதகப் பறவை (Jacobin Cuckoo) என்பது வானிலிருந்து பொழியும் மழை நீரை மட்டுமே பருகும் என்று தொன்மவியலில் கூறப்படும் ஒரு குயில் இனப் பறவையாகும்; மிகுந்த தாக உணர்வோடு இருக்கும் நிலையில், அந்த பறவை, மழையை எதிர்பார்த்துக் காத்திருக்குமாம்} ||3||
போற்றி, போற்றி, ஓ கருணை நிறைந்தவரே, போற்றி; உங்கள் அறிவுரையின் மூலமாகவே என் மனம் நான் தேடி வந்த தெளிவைப் பெற்றுள்ளது; இனிமேல், நிறைவேறாத ஆசைகள் எதுவும் என் மனதில் நிச்சயமாகத் தலை தூக்காது||4||
மரணத்திற்கான நேரத்தை முன்னரே அறிந்து கொள்வதன் மூலமும், அதன் பின் ‘ஓம்’ (AUM) எனும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமும், இந்த உடலை துறப்பவர்கள் நற் பயனை அடைகிறார்கள் என்று தாங்கள் எனக்குக் கற்பித்தீர்கள்||5||
ஆனால், ஓ குருவே, மரணம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் திடீரென்று வருவதாகவே அறியப்படுகிறது; அப்படியிருக்கையில், ஒருவன் தன் மரண நேரத்தை முன்னரே அறிந்து கொள்வது எப்படி?; அவ்வாறு அறிந்து கொள்ள முடியுமென்றால், தயவு செய்து அதை எனக்குக் கற்பியுங்கள்; அதன் மூலம் நானும் அதை எதிர்நோக்கி தயாராகி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள முடியும்||6||
அலர்கனின் அந்த கேள்வியை கேட்ட , அத்ரி முனிவரின் தெய்வத் திருமகனாக ஸ்ரீமத் தத்த பகவான் இவ்வாறு பதிலளித்தார் ‘இப்போது கவனத்துடன் கேள்; மரணத்தின் தன்மைகளையும் அறிகுறிகளையும் நான் இப்போது உனக்கு விவரிக்கிறேன்||7||
ஒருவரின் ஜாதகத்தில், லக்னத்திலிருந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலும், அதே போன்று ஏழாம் மற்றும் எட்டாம் இடங்களிலும் அமைந்திருக்கும் கிரக நிலைகளே, ஒருவருக்கு வரவிருக்கும் மரணத்தைச் சுட்டிக் காட்டும் இடங்களாகும்||8||
அந்த குறிப்பிட்ட இடங்களுக்கு அதிபதியாகத் திகழும் கிரகங்கள் எவையோ, அவை அந்தந்த இடங்களிலேயே நிரந்தரமாக வீற்றிருப்பதாகக் கருதப்படுகின்றன; இவற்றுள் எந்த கிரகம் மிகுந்த வலிமையுடன் திகழ்கிறதோ, அந்த கிரகத்தின் ஆதிக்கம் செலுத்தும் காலம் வரும்போது, ஒருவருக்கு மரணம் நிச்சயமாக நிகழும்||9||
அல்லது, மரணத்தைச் சுட்டிக் காட்டும் ஜாதக நிலைகளுடன் இணைந்து, கடுமையான துரதிர்ஷ்டத்தை தரக் கூடிய தீய கிரக நிலைகளும் ஒரே சமயத்தில் அமைந்திருந்தால், அத்தகைய நிலைகளும் ஒருவரின் உயிரைப் பறித்து விடும்; ஜோதிட சாஸ்திரங்கள் வெளிப்படுத்தும் உண்மை இதுவேயாகும்||10||
யோக மார்க்கத்தின் ஆறாவது படியாகிய ‘தாரணை’ (மனதை ஒருமுகப்படுத்தி நிறுத்தும் கலை) எனும் பயிற்சியின் வாயிலாக, ஒருவர் தனது எதிர் கால மரணம் குறித்த அறிவைப் பெற முடியும்; யோகக் கலையில் தேர்ச்சி பெற்ற சாதகர்கள், மரண காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து, அதற்கேற்ற தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்வர் ||11||
ஒருவேளை, ஒருவருக்கு ஜோதிடச் சாஸ்திரங்களில் போதிய தேர்ச்சியோ அல்லது யோக மார்க்கத்தில் போதிய பயிற்சியோ இல்லையெனில், அவர்கள் மரணத்தை உணர்த்தும் உடல் சார்ந்த சில அறிகுறிகளை மிகுந்த கவனத்துடனும் பார்த்து, மரண நிலையை புரிந்து கொள்ள வேண்டும் ||12||
மரணத்தை உணர்த்தும் அறிகுறிகள் அனைத்தும், ஒருவரின் மரணம் நிகழ்வதற்கு முந்தைய ஓராண்டு காலத்திற்குள் வெளிப்படத் தொடங்கும்; அந்த அறிகுறிகள் அனைத்தையும் நான் இப்போது உங்களுக்கு விவரிக்கிறேன்; ஜோதிட மற்றும் யோக ஞானம் பெற்ற அறிஞர்கள் பலரும் இந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை அனுபவபூர்வமாக அறிந்து இருப்பார்கள்||13||
ஒருவர் தனது மூக்குத் துவாரத்திற்கு நேர் எதிரே, தனது கையைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடிக்க வேண்டும்; அவ்வாறு பிடிக்கும் போது, பொதுவாக தென்படக் கூடிய ஒரு நுட்பமான காட்சி (ஒளி அல்லது பிம்பம்) அவருக்குத் தென்படவில்லை எனில், இன்னும் ஓராண்டு காலத்திற்குள் அவர் மரணமடையக் கூடும் என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும் ||14||
ஒருவர் தனது மூக்குத் துவாரத்தின் முன் பகுதியையோ, அல்லது தனது நாக்கின் முன் பகுதியையோ, ஏன் தனது இரு புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியையோ கூட அவரால் தெளிவாகப் பார்க்க இயலவில்லை எனில், அத்தகைய நபர் ஓராண்டு காலத்திற்குள் மரணமடைவார் என்பது உறுதியாகும்||15||
வான் வெளியில், கங்கை நதியின் ஓட்டம் போலத் தொடர்ந்து நீண்டு செல்லும் ஒரு ஒளிப் பாதை தென்படும்; ஞானியர்கள் அந்தப் பாதையை ‘தெய்வீகப் பாதை’ (தேவ மார்க்கம்) என்று போற்றுவர்; ஒருவேளை, ஒருவரால் அந்தத் தெய்வீகப் பாதையைத் தெளிவாகப் பார்க்க இயலவில்லை என்றால் …||16||
ஒருவர் சுக்கிரன் எனப்படும் வெள்ளி கிரகத்தையோ, அல்லது ‘துருவ’ நட்சத்திரத்தையோ, அல்லது வசிஷ்ட முனிவராகக் கருதப்படும் ‘மிசார்’ நட்சத்திரத்துடன் இணைந்து, முனிவர் தம்பதியைப் போல இரட்டை நட்சத்திரமாகத் திகழும் ‘அருந்ததி’ நட்சத்திரத்தையோ காண இயலவில்லை என்றால் …..||17||
அத்தகைய நபரின் ஆயுட் காலம், சாஸ்திரத்தின்படி, ஒரு வருடம் மட்டுமே ஆகும்; அதாவது, பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு அத்தகைய நபர்கள் பூவுலகில் உயிருடன் இருக்க மாட்டார்கள்||18||
சூரியன் தன் கிரணங்களை இழந்து ஒளி குன்றியதாகவும், நெருப்பு தன் சுடர் விடும் பிரகாசத்தை இழந்து மங்கியதாக தோன்றினால், அத்தகைய நபரின் ஆயுட் காலம் நிச்சயமாக இன்னும் பதினொரு மாதங்களே இருக்கும் ||19||
ஒருவர் தன் கனவில் தங்கம், வெள்ளி, மலம், சிறுநீர் அல்லது யாரேனும் வாந்தி எடுப்பது போன்ற காட்சிகளைக் கண்டால், அந்த நபர் இந்த பூமியில் பத்து மாதங்களுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டார் என்பதாக உணரலாம் ||20||
ஒருவர் விழிப்பு நிலையில் இருக்கும்போதே பேய், பூதங்களைக் காண முடிந்தாலும், கந்தர்வ நகரம்* எனப்படும் மாய நகரங்களைக் காணும் ஆற்றலைப் பெற்றிருந்தாலும், அத்தகைய நபரின் ஆயுட் காலம் ஒன்பது மாதங்களே என்று கூறப்படுகிறது.
{*இசையிலும், கலைகளிலும் சிறந்து விளங்கும் கந்தர்வர்கள் வாழும் இடம் என்று இது புராணங்களில் குறிப்பிடப்படுகிறது; வானில் மேகக் கூட்டங்கள் ஒன்று திரண்டு, கோபுரங்கள் மற்றும் வீடுகள் நிறைந்த ஒரு பெரிய நகரம் போலத் தோற்றமளித்து, பின்னர் மறைந்து போகும் இயற்கையான நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் சொல்} ||21||
அல்லது, ஒருவர் மரங்கள் தங்க நிறத்தில் காட்சியளிப்பதாகக் கண்டால், அத்தகைய நபரும் வரவிருக்கும் ஒன்பது மாதங்களுக்குள் இவ்வுலகை விட்டு மறைந்து விடுவார் எனக் கூறலாம் ||22||
ஒருவரின் இயல்பான உடல் தோற்றம் மாறி, ஒல்லியானவர் பருத்தவராகவும், பருத்தவர் ஒல்லியானவராகவும் ஒருவருக்குத் தோன்றினால், அடுத்த எட்டு மாதங்களுக்குள் அவர் நிச்சயமாக மரணத்தைச் சந்திப்பார்||23||
ஒரு இடம் சேறாகவோ, சாம்பலாகவோ அல்லது மணலாகவோ இருக்கட்டும்; அதன் மீது நடந்து செல்லும் ஒருவர், தன் கால் தடங்களை முழுமையாகக் காண இயலாமல், அவற்றின் சிறு பகுதிகளை அல்லது துண்டுகளை மட்டுமே காண முடிந்தால் ஆயுள் எத்தனை நாட்கள்? ||24||
அல்லது, ஒருவரால் தனது குதி காலையோ அல்லது கால் விரல்களையோ பார்க்க இயலா விட்டாலோ, அல்லது அவற்றை முழுமையாகப் பார்க்க முடியா விட்டாலோ, அவரை மரணம் நிச்சயமாகத் துரத்திக் கொண்டிருக்கிறது என்று அறியலாம்; அவர் இன்னும் ஏழு மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் ||25||
ஒரு கழுகு ஒருவரின் தலையைத் தொட்டாலோ, அல்லது ஒரு காகமோ, புறாவோ, அல்லது கருமையான நிறம் கொண்ட வேறு ஏதேனும் பறவையோ தனது நகங்களால் ஒருவரின் தலையைக் குத்தினால், அத்தகையோரின் ஆயுட் காலம் மிகக் குறைவாகவே இருக்கும் ||26||
ஏதேனும் ஒரு பிணந் தின்னும் பறவை வந்து ஒருவரின் தலையைத் தொட்டால் அத்தகைய நபரின் ஆயுட் காலம் ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்காது||27||
அதே போன்று, ஒருவர் ஆடையின்றி இருக்கும் நிலையில், ஒரு காகம் வந்து அவர் தலையில் அமர்ந்து, தனது நகங்களால் அல்லது அலகால் குத்தினால், அந்த நபர் அடுத்த ஐந்து மாதங்களுக்குள் மரணமடைவார்||28||
சூரிய ஒளியில் நிற்கும்போது, ஒருவரின் நிழல் உருக் குலைந்து காணப்பட்டாலோ, அல்லது காரணமற்ற அச்சம் மனதை ஆட் கொண்டால், அந்த அறிகுறிகள் அவருக்கு அடுத்த நான்கு மாதங்களுக்குள் மரணம் நிகழப் போவதை உணர்த்துகின்றன||29||
ஒருவர் தெற்கு திசையை நோக்கிப் பார்க்கும்போது, அங்கே மேகங்கள் ஏதும் தென்படாமல், மாறாக மின்னல் மட்டும் தென்பட்டால், அந்த நபர் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மரணமடைவார்||30||
மன்னா, எந்த விதக் காரணமும் இன்றி, நீரில் வானவில்லோ அல்லது வானவில் போன்றதொரு பிம்பமோ தென்பட்டால், அத்தகைய நபர் இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் இவ்வுலகில் உயிர் வாழ மாட்டார் என்பது நிச்சயம்||31||
கண்ணாடியில் பார்க்கும்போது, அல்லது நீரில் தெரியும் தனது பிம்பத்தைப் பார்க்கும் போதும், அந்தப் பிம்பம் தலையற்றது போலத் தோன்றினால், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மரணம் சம்பவிக்கும் ||32||
பிணங்களிலிருந்து வீசும் துர்நாற்றம் போன்றதொரு நாற்றம் ஒருவரின் உடலிலிருந்து வீசத் தொடங்கினாலோ, அல்லது அவர் நீர் அருந்தினாலும் கூட, அவரது வாய் தொடர்ந்து வறண்டு போனது போலவே தோன்றினால்…. ||33||
அத்தகைய நபர் இன்னும் ஒரு பதினைந்து நாட்கள் (ஒரு பட்சம்) மட்டுமே உயிர் வாழ்வார் என்று அறியலாம். மரணம் நிச்சயமாக அவரைப் பற்றிக் கொள்ளும்; வரவிருக்கும் மரணத்தை உணர்த்தும் இந்த அறிகுறிகளின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் ||34||
குளிக்கும் போது, ஒருவரின் நெஞ்சுப் பகுதி உடனடியாக உலர்ந்து போனால் அத்தகைய நபரின் ஆயுட் காலம் பத்து நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்று அறியலாம் ||35||
ஒருவர் தனது உடலின் உணர் திறன் மிக்க பகுதிகளில் காற்று தாக்குவது போல உணர்ந்தாலும், நிலவொளியை ரசிக்க முயலும்போது அது தனது மூச்சுக்கும் உடலுக்கும் வெப்பமாகத் தோன்றும் பட்சத்தில், அவருக்கு வாழ்வதற்கு இன்னும் பத்து நாட்களே எஞ்சியுள்ளன என்பதை அறிய வேண்டும்||36||
ஒருவர் கனவு நிலையில் இருக்கும்போது, கருப்பு அல்லது சிவப்பு நிற ஆடை அணிந்த ஒரு பெண் இடைவிடாமல் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாலோ, அல்லது அதே பெண் கனவு காண்பவரின் கைகளைப் பற்றிக் கொண்டு பாடத் தொடங்கினாலோ….||37||
அல்லது அந்தப் பெண் ஆடையற்ற துறவி நிலையில் தெற்கு திசையை நோக்கிச் செல்வதாகக் காணப்பட்டாலோ, கனவு காண்பவர் கர்ம வினையின் அழிவுத் தன்மையை உணர்ந்து, தனக்கு வாழ்வதற்கு இன்னும் பத்து நாட்களே எஞ்சியுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் ||38||
ஒருவர் கனவு நிலையில் இருக்கும்போது, எண்ணெய் பூசிக் கொண்ட மற்றொரு ஆண் தன்னைத் திட்டமிட்டுப் பார்ப்பதாகக் கண்டால், கனவு காண்பவருக்கு மரணம் மிக அருகில் உள்ளது என்று பொருள் ||39||
அதேபோல, கனவு நிலையில் ஒருவர் தன்னைச் சேற்றிலோ அல்லது சாணத்திலோ மூழ்குவதாகக் கண்டால், அவர் அவரது இறுதித் தருணங்களை அடைவதற்கு எந்தத் தாமதமும் இருக்காது ||40||
ஒருவர் எலும்புகள், நெருப்பு, எரியும் நிலக்கரி, அடுப்புக் கரி போன்றவை, தலைமுடி, சாம்பல் குவியல்கள் அல்லது மிகவும் சீற்றத்துடன் இருக்கும் ஒரு பாம்பைப் பார்த்தால், மரணம் மிக அருகில் உள்ளது என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்’ ||41||
ஒருவர் கனவு நிலையில், வறண்டு போய், விரிசல் விட்டு, பிளந்து போகும் நிலையில் உள்ள நிலப் பகுதியைப் பார்த்தால், மரணம் தாக்குவதற்குத் தயாராகக் காத்திருக்கிறது என்றும், அது விரைவில் தாக்கும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் ||42||
ஒருவர் கனவில், தனக்கு மிக அருகில், ஆபத்தான மற்றும் பயங்கரமான தோற்றத்துடன் கூடிய ஒரு வலிமை மிக்க மனிதரைப் பார்த்தால், அவர் பற்களை நறநறவென கடித்துச் சத்தமிடுபவராகவோ, அல்லது கனவு காண்பவரை விடாப் பிடியாகத் தாக்குபவராகவோ இருந்தால்….||43||
அவர் கையில் ஆயுதத்துடனோ அல்லது கற்களுடனோ தாக்குவதாகக் காணப்பட்டால், மரணம் விரைவில் நிகழப் போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்||44||
சூரிய உதயத்தின்போது, ஒரு கரடி, நரி, ஓநாய் அல்லது வயதான, உருக்குலைந்த தோற்றமுடைய ஒரு பெண் உரக்க அழுவதைக் கேட்டாலோ, அல்லது அவர்கள் இடது வெளிப் புறத்திலிருந்து தொடங்கி வட்டமாகச் சுற்றி வருவதைக் கண்டாலோ, அதுவும் வரவிருக்கும் மரணத்தின் ஒரு அறிகுறியாகும் ||45||
உணவு உண்ட பிறகோ அல்லது உணவருந்திக் கொண்டிருக்கும் போதோ, ஒருவருக்குத் தாங்க முடியாத அளவிலான கடும் பசி ஏற்பட்டால், மரணம் அவருக்கு மிக அருகில் உள்ளது என்று பொருள்; அவர் தனது உடலுக்குள் ‘வ்ரண-தந்தா’ (Vrana-danta)* எனப்படும் பல புண்களால் அவதிப்படுவார்
{* பல் சம்பந்தப்பட்ட புண் அல்லது வாய் வழி புண் (Oral ulcer/Dental wound)} ||46||
ஒருவர் சமைத்த உணவின் நறுமணத்தை நுகர முடியவில்லை, அல்லது யாகத் தீயில் இருந்து எழும் புகையின் வாசனையை அறிய இயலாவிடில், மரணம் அவருக்கு மிக அருகில் வந்து விட்டது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்||47||
ஒருவர் மற்றொருவரின் கண்களை உற்று நோக்கும்போது, அந்த கண்களில் தன் சொந்தப் பிம்பத்தைக் காண இயலா விட்டால், மரணம் வெகு தொலைவில் இல்லை என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்||48||
ஒருவர் இரவில் வான வில்லைக் கண்டாலோ, அல்லது பகல் வேளையில் நட்சத்திரங்களைக் கண்டாலோ, அவர் விரைவில் மரணத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்||49||
எவ்வித வலியோ, நோயோ அற்ற, நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஒருவருக்கு, திடீரென அத்தகைய மரண அறிகுறிகள் தென்படத் தொடங்கினால், மரணம் வெகு தொலைவில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, அதைத் தன் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் ||50||
மேலும், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நோய், அதன் அனைத்து அறிகுறிகளுடனும் சேர்ந்தாற்போல் திடீரெனத் தாக்கினால், அத்தகைய நபரை விழுங்குவதற்கு மரண காலம் தயாராகி விட்டது என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும் ||51||
ஒருவர் ஏற்கனவே நோயுற்ற நிலையில் இருக்கும்போது, மேலே குறிப்பிடப்பட்ட மரண அறிகுறிகளும் கூடுதலாக தென்படத் தொடங்கினால், இறைவன் தலையிட்டு அந்த நோய்களை நீக்கினாலன்றி, மரணம் அவரை மிக விரைவாகத் தாக்கி விடும் ||52||
இடது கண் துடிக்கத் தொடங்கினாலோ, மூக்கின் முன் பகுதியின் இயல்பான மைய நிலை மாறினாலோ , காதுகளின் நுனிகளும் மடல்களும் தொடுவதற்குச் சில்லிட்டுப் போனாலோ, மரணம் நிச்சயமாக நெருங்கி விட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும் ||53||
நாக்கின் நுனி கருமை நிறமாக மாறினாலோ, வாய் மற்றும் முகம் சிவந்து போனாலோ, ஐம்புலன்களின் ஆற்றல் தளர்ச்சியடையத் தொடங்கினாலோ, மரணம் விரைவில் தாக்கப் போகிறது என்று அறிய வேண்டும் ||54||
ஒருவர் ஏற்கனவே நோயுற்ற நிலையில் இருந்து, கனவில் தான் ஒட்டகம் அல்லது கழுதை பூட்டிய வண்டியில் ஏறித் தென் திசையை நோக்கிப் பயணம் செய்வதாகக் கண்டால், அவரும் விரைவில் உயிர் துறப்பார்||55||
அல்லது கனவில், பலரும் ஒரே நேரத்தில் ஒன்று கூடி, கனவு காண்பவரைத் தாக்கினால், அவரைக் கட்டிப் போட்டால், அல்லது தங்கள் திசையை நோக்கி இழுத்துச் சென்றால், மரணம் மிக விரைவில் நிகழும் என்பது அர்த்தம் ||56||
ஒருவர் தன் காதுகளை இறுக மூடிக் கொண்டு கூர்ந்து கவனிக்கும்போது கேட்கும் ஒலி, திடீரென்று கேட்காமல் போனால், மரணம் மிக அருகில் வந்து விட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும்||57||
ஒருவர் தன் கண்களை மூடுவதற்காக இமைகளின் மீது விரல்களை வைக்கும்போது, வழக்கமாகத் தென்படும் ஒளி அல்லது பிரகாசம் திடீரென்று மறைந்து போனால், மரணம் நெருங்கி விட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும்||58||
அல்லது முழுமையான ஒரு மாயத் தோற்றம் ஏற்பட்டு, அது தலை கீழாக மாறி, கண் குழிகள் வழியாக வயிற்றின் தொப்புள் பகுதியை நோக்கிச் செல்வது போலத் தோன்றினால், அத்தகைய நபர் இனி வேறொருவரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற மாட்டார் என்று அறிந்து கொள்ள வேண்டும்||59||
நோயுற்ற நிலையில் இருக்கும் ஒரு நோயாளி, தன் கனவில் வலிமை வாய்ந்த பேய்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டு, தன்னை மிகக் கடுமையாகத் தாக்குவதாகக் கண்டால், மரணம் நெருங்கி விட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும் ||60||
அல்லது அந்தக் கனவில், தான் ஆழமான நீரில், அல்லது சேற்றில், அல்லது கொழுந்து விட்டு எரியும் தீயில் விழுவது போன்ற, ஆபத்தான சூழல்களில் சிக்குவதாகக் கண்டால், மரணம் நெருங்கி விட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும் ||61||
அல்லது பலவிதமான துன்பங்களால் சூழப்பட்டு, அதனால் விழிப்பு நிலைக்குத் திரும்ப முடியாமல், அதாவது உறக்கத்திலிருந்து எழ முடியாமல் தவித்தால், அத்தகைய நபரின் ஆயுட் காலம் முடிவடைந்து விட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும்||62||
மேலே கூறியவைகளே மரணத்தின் அறிகுறிகளாகும்; அவற்றை அறிந்து கொண்டு அடையாளம் காணும் திறன் பெற்றவர்களே ஞானம் மிக்கவர்கள் ஆவர்; அத்தகைய சூழல்களில், அவர்கள் தங்கள் அச்சங்களையும் கவலைகளையும் துறந்து விட்டு, தங்கள் எஞ்சிய காலத்தை ஆழ்ந்த தியானத்தில் செலவிட வேண்டும்||63||
நிலையான வாழ்வில் உள்ளவர்கள் யார்?; எவரும் கிடையாது; அனைவரும் ஒருநாள் மரணம் அடையத்தான் வேண்டும்; எனவே, அழிவைப் பற்றிய அச்சம் ஏதுமின்றி, அத்தகையோர் தங்கள் காலத்தை தியானத்தில் செலவிட வேண்டும்||64||
தங்கள் வாழ்நாள் காலத்தின் பெரும் பகுதியை, தங்கள் உடலைச் சீராட்டுவதிலும், அதைப் பராமரிப்பதிலும் மட்டுமே இருந்தவாறு காலத்தை ஒட்டியவர்களைப் பார்த்து மரண தேவனான யமன் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறான் ‘மரணத்தை நீ எங்கும் காணவில்லையா? உன்னை நீ எப்படிக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறாய்? என்று கேட்கிறான்||65||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘வருதே ப்ராப்தம் ம்ருத்யம் ந ஜயதி பாலோவ்ருத்தோ யுவா-அபி வா, ம்ருத்யு: ஷரீர்கோப்தாரம்வஸுராக்ஷம் வசுந்தரா, துஷ்ச்சாரிண்ணீவ்ஹஸதிஸ்வபதிம் புத்ரவத்ஸலா’
கருட புராணத்திலிருந்து கூறப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தின் விளக்கம் என்ன என்றால் ‘மரணம் என்பது பிறக்கும்போதே ஒருவனுக்குத் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது; அது குழந்தையாக இருக்கும்போதோ, வாலிபத்திலோ அல்லது முதியவர் ஆன பிறகோ – எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதை யாராலும் வெல்ல முடியாது மரணம் உடல்களைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறது; பூமியானது தாவரங்களையும் உயிரினங்களையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறது; எவ்விதம் ஒரு துர்நடத்தையுள்ள மனைவி தன் கணவனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறாளோ, அவ்விதமே மரணமும் பூமியும் மரணம் அடைபவரைப் பார்த்து சிரிக்கின்றன ||66||
ஆகவே, மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்து கொண்டு, அனைத்து அச்சங்களையும் துறந்து, ஒருமுக சிந்தனையுடன் தியானத்தில் ஈடுபட வேண்டும் ||67||
இச்செயல் மரணம் சம்பவிக்கும் நேரம் வரை தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட வேண்டும்; தியானத்தில் தளராத நிலைத் தன்மை அவசியமாகும்; தியானம் அல்லது ஆன்மீகப் பயிற்சி என்பது ஏதோ ஒரு சில நாட்கள் செய்துவிட்டு நிறுத்துவதல்ல; தியானத்தில் இடையீடு இல்லாமல், ஒருமித்த மனதோடு நிலைத்திருப்பது அவசியம் என்பதாக பதஞ்சலி அல்லது வியாசர் போன்ற ஞானிகளான சூத்ரகாரர்கள் கருகி உள்ளார்கள்||68||
அனைத்துத் தடைகளும் அழிக்கப்பட்டாலோ அல்லது வெற்றிகரமாக கடக்கப்பட்டாலோ, முக்தி (விடுதலை) கைகூடும்; ஆனால், தடைகள் தொடர்ந்து நீடிக்குமாயின், முக்தி அடைவது அடுத்த பிறவி வரை ஒத்தி வைக்கப்படும்||69||
எந்த வகையிலான கல்வியும் ஒருபோதும் வீணாவதில்லை; இதுவே வேத சாஸ்திரங்களின் அடிப்படைத் தத்துவமாகும்; எனவே, உண்மையான ஆன்மீகத் தேடலுடையோர், இரவும் பகலும் பாராமல், யோக மார்க்கத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வழி முறைகளைத் தீவிரமாக பின்பற்ற வேண்டும்||70||
விதிப்படி மரணம் சம்பவிக்கும் முன்னரே, ஒருவன் ஞானத்தை அடையா விட்டால், அவன் பாதையின் நடுவிலேயே தடுமாறி நழுவிய ஒரு சாதகனின் நிலையை அடைகிறான்; அதன் விளைவாக, நிர்வாணப் பேரின்பத்தை அனுபவிக்கும் வாய்ப்பு அடுத்த பிறவி வரை ஒத்தி வைக்கப்படுகிறது ||71||
தங்கள் ஆன்மீகச் சாதனைகளைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தவர்கள், துரதிர்ஷ்டவசமாக அகால மரணமடைய நேர்ந்தாலும், மரணத்திற்குப் பின் அவர்கள் இழிவான நிலைகளை அடைவதில்லை; மாறாக, தங்கள் வாழ்நாள் முழுவதையும் தேவர்களுக்கு யாகங்கள் செய்வதிலேயே அர்ப்பணித்தவர்கள் அடையும் உயர்ந்த நிலைகளையே அவர்களும் அடைகிறார்கள்||72||
பொதுவாக மன்னர்களால் மட்டுமே நடத்தப்படும் ‘அஸ்வமேத யாகத்தை’ (குதிரை வேள்வியை) தனி ஒரு மனிதன் ஒருவன் நடத்தினால், அந்த யாகத்தை ஏற்பாடு செய்தவன் அடையும் நிலையானது, யோகப் பாதையில் பயணிக்கும் போது இடையில் தவறிய ஒரு சாதகன் அடையும் நிலைக்கு ஒப்பானதாகும்; அவன் தனது கடும் உழைப்பிற்கான பலன்களை உயர்ந்த லோகங்களில் இன்பங்களாக அனுபவித்து விட்டு, மீண்டும் பூமிக்குத் திரும்புகிறான் ||73||
தங்கள் உள்ளத்தில் பதிந்துள்ள புண்ணியமான சூட்சுமச் சம்ஸ்காரங்களின் (பதிவுகளின்) காரணமாக, அத்தகைய சாதகர்கள் தங்கள் அடுத்த பிறவியில் யோகப் பாதையின் பயிற்சியை மீண்டும் தொடங்குகிறார்கள்; அவர்கள் தாங்கள் தேடிய ஞானத்தைப் பெற்று, அதன் வாயிலாக முக்தியையும் அடைகிறார்கள். ஓ அலர்கா இதை நான் உனக்கு உறுதியாகக் கூறுகிறேன் ||74||
ஆகவே, உடலை விட்டுப் பிரியும் காலம் நெருங்கி விட்டது என்பதை உணரும்போது, ஒருவன் உறுதியான ஆசன நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும்; உடலைச் சிறிதும் அசையாத நிலையில் வைத்திருக்க வேண்டும்; மேலும், மனம் தனது இயல்பான அலைபாயும் தன்மைக்கு ஆட்படாதவாறு அதைக் கட்டுப்படுத்த வேண்டும் ||75||
இடது பாதத்தின் குதி காலை ஆசன வாய்க்கும் பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பகுதியான ‘மூலாதாரம்’ பகுதியின் அருகே வைத்துக் கொண்டு, வலது பாதத்தை இடது தொடையின் மீது வைத்து, ஒருவன் தனது சுவாசத்தை (பிராணனை) படிப்படியாக மேல் நோக்கி உயர்த்த முயல வேண்டும்; ஒவ்வொரு முறை ‘அபான’ சுவாசத்தை உள்ளிழுக்கும் போதும், இச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்||76||
தாடையை மார்போடு நெருக்கமாக வைத்துக் கொண்டு, கண்கள், காதுகள், நாசித் துவாரங்கள் மற்றும் வாய் ஆகிய ஏழு துவாரங்களையும் விரல்களால் மூடி, முழு கவனத்தையும் அக முகப்படுத்தி, அலை பாயும் மனதை அடக்க ஒருவன் முயல வேண்டும்||77||
ஐம்புலன்களும் மனதிற்கு உட்பட்டவை என்பதை அறிந்துகொள்; அந்த மனதிலேயே அவற்றை ஒன்றாக செய்ய வேண்டும். பின்னர், ஒவ்வொரு மூச்சு உள்ளிழுத்தலிலும் வெளியிட்டலிலும் முழுமையான ஒன்றிப்பு ஏற்படும் வரை, மனதை மூச்சுக் காற்றுடன் இணையச் செய்ய வேண்டும்||78||
பிராணன், அபானன், சமானன், வியானன் மற்றும் உதானன் ஆகிய ஐவகை மூச்சுக் காற்றுகளையும் ஒன்றிணைத்து, அவற்றை மைய நரம்பான சுழு முனைப் பாதையின் வழியே ஈர்த்து, அந்தச் சிறந்த பாதையின் வழியாகவே உடலை விட்டு வெளியேற ஒருவன் முயல வேண்டும்; அவ்வாறு செய்யும்போது எவ்வித அச்சமும் கொள்ளக் கூடாது||79||
தெய்வீக மந்திரமான ‘ஓம்’ (AUM) என்பதை உச்சரித்து, பரம் பொருளைத் தியானித்தவாறே, உச்சந் தலையில் உள்ள உச்சித் துவாரத்தை பிளந்துகொண்டு வெளியேறி, தான் தேடிய முக்தியைப் பெறுவதற்கு ஒருவன் முயற்சி செய்ய வேண்டும் ||80||
அது பகலாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி, ஒருவன் தற்செயலாக விழிப்புணர்வு பெற்றால், அவனது உணர்வு நிலையின் வாயில்கள் அவனை ஒருபோதும் மயக்காது என்பதை அவன் உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும் ||81||
யோகப் பாதையின் படிகளைத் தொடர்ந்து பயிற்சி செய்வதால், இந்த ஆன்மீக வாயில்கள் அனைத்தும் ஒளி வீசுவனவாகத் திகழும்; முக்தி தேடும் யோகி, மைய நரம்பான சுழு முனைப் பாதையைப் பற்றிக் கொள்ள வேண்டும்; அதுவே அவனுக்கு அவன் தேடிய மிக உயர்ந்த பலனை அருளும்||82||
ஆகவே, அனைத்து விதமான சோம்பல்களையும் விட்ட பின்னர் தினமும் தவறாமல் பயிற்சி செய்ய வேண்டும்; இதுவே முக்திக்கு அழைத்துச் செல்லும் பாதையாகும்; இந்தப் புள்ளியை நான் உனக்கு வலியுறுத்திக் கூறுகிறேன் ||83||
ஒரு வீடு நிலைத்திருக்கும் காலம் வரை, எறும்புகள், எலிகள் மற்றும் பிற ஊர்வனங்கள் பூமியில் வளைகளைத் தோண்டி, அந்த வீட்டின் அருகிலேயே தங்கியிருக்கும்; ஆனால், அந்த வீடு எப்போதேனும் இடிந்து விழுந்தால், அந்த உயிரினங்களும் அங்கிருந்து ஓடி மறைந்து விடும் ||84||
அதைப் போலவே, இவ்வுலக மக்களும் தங்கள் வாழ்க்கையிலும், மனைவி, மக்கள் போன்ற உறவுகளிலும் முழுமையாக மூழ்கி விடுகிறார்கள்; பல்வேறு நம்பிக்கைகளுக்கும் ஆசைகளுக்கும் அடிமையாகி, தங்கள் உறவினர்களையே சார்ந்திருக்கிறார்கள்; ஆனால், இறுதியில் மரணம் சம்பவிக்கும்போது, குடும்பமோ அல்லது செல்வமோ, எதுவுமே அவர்களுடன் கூட செல்வது இல்லை ||85||
ஆகவே, அத்தகைய உறவுகளுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள ஒருவனுக்கு என்ன அவசியம் இருக்கிறது?; அவர்கள் வீணாக ஒருவன் தேடி வைத்த செல்வத்தைக் கொள்ளையடித்து விடுகிறார்கள்; இறுதியில், பலவிதமான சாக்குப் போக்குகளைக் கூறி அவர்களும் விலகிச் சென்று விடுகிறார்கள்; ஒருவனின் இறுதித் தருணங்களில் அவனுக்குத் துணையாக வருவதற்கு யாருமே இருப்பதில்லை||86||
ஒருவர் மற்றவர்களுக்கு அவர்கள் விரும்புவதை அளிக்கும் வரை, அவர்கள் அவனை தமது தெய்வம் போலப் புகழ்ந்து போற்றுவார்கள்; ஆனால், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் சற்றே தயங்கினாலோ அல்லது தொடர்ந்து உதவி செய்ய இயலாத அளவு தான் உள்ளதாக கூறினாலோ, அத்தகைய உண்மைகளை கேட்கவே அவர்கள் மறுத்து விடுவார்கள் ||87||
நோயின் காரணமாக ஒருவர் பிறரைச் சார்ந்திருக்க நேரும் போது, அத்தகைய உறவினர்களே அவரை ஏளனம் செய்து ‘இப்போது இவனது நிலையைப் பாருங்கள், நமக்குச் சுமையாக இருப்பதை விட, இவன் இறந்து போவதே மேல் அல்லவா’ என்று இகழ்ந்து பேசுவார்கள்||88||
நோயுற்றுப் பிறரைச் சார்ந்திருப்பவர் அனைவராலும் வெறுக்கப்படுகிறார்; தெரு நாய்களுக்கு உணவிடுவதைப் போல, அத்தகைய உறவினருக்கு அவர்கள் உணவை கொடுப்பார்கள்; தங்கள் சொந்த வீட்டிலேயே எச்சில் துப்பி விட்டு அந்தத் துயர நிலையில் உள்ளவன் நம் வீட்டை அசுத்தப்படுத்தி விட்டான் என்று பிறரிடம் குறை கூறுபவர்களும் அப்படிப்பட்டவர்களே ஆவர்||89||
கருணையே அற்ற உறவினர்கள், ஒருவரின் வாழ்வின் இறுதி நாட்களில் எதிரிகளைப் போலவே நடந்து கொள்வார்கள்; எனவே அறிவுடையோர் அத்தகையோருடன் ஏன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்?; அவர்கள் தமக்கே உரிய சிறந்த மற்றும் உயர்ந்த ஆன்மீக நிலைகளை அடைவதிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் ||90||
ஆன்மீகப் பாதை கடினமானதாகத் தோன்றினால், தினமும் சிறிது நேரமாவது அதற்கான பயிற்சியில் ஈடுபட வேண்டும்; அப் பயிற்சியை ஒரு போதும் கை விட்டு விடக் கூடாது; கிடைக்கும் நேரத்திற்கு ஏற்பச் சிறிதளவேனும் பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்; ஆனால், அந்தச் சிறிதளவு பயிற்சியையும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் மேற் கொள்ள வேண்டும் ||91||
எறும்புகளும் பிற சிறிய உயிரினங்களும் தங்கள் சொந்த முயற்சியாலேயே, தாங்கள் வசிப்பதற்கான மிகப் பெரிய புற்றுக்களைக் கட்டிக் கொள்வது போலவே, யோகப் பாதையும் தனிப்பட்டவரின் விடா முயற்சியையே கோருகிறது; அத்தகைய விடா முயற்சி இருக்கும்போது மட்டுமே, அப்பாதையின் மூலம் கிடைக்கும் ஆன்மீகச் சாதனைகளை ஒருவரால் அனுபவித்து உணர முடியும் ||92||
ஒரு அரிசி மணியையோ அல்லது சர்க்கரை துண்டையோ சுமந்து செல்லும் எறும்பை நீங்கள் பார்த்ததில்லையா? அந்தச் சுமை பலமுறை கீழே விழுந்தாலும், அந்த எறும்பு தன் முயற்சியைக் கை விடுவதில்லை; அது போலவே இங்கும், ஆன்மீகப் பாதை கடினமானதாகத் தோன்றினாலும், ஒருவர் நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் இருந்து, சான்றோர்கள் அறிவுறுத்திய வழியில் அந்த பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் ||93||
இயற்கையாலோ அல்லது விலங்குகளாலோ அழிக்கப்பட்டாலும், மரங்கள் மீண்டும் துளிர்த்து வளர்வது போலவே, ஒருவரின் ஆன்மீகப் பாதையில் தடைகள் ஏற்பட்டாலும், அசைக்க முடியாத மனவுறுதியுடனும், பொறுமையுடனும் அவர் யோகப் பாதையைத் தொடர்ந்து நாடிச் செல்ல வேண்டும் ||94||
பிறந்த கன்றுகளின் தலையில் கொம்புகள் மெல்ல மெல்ல வளர்வது போலவே, இந்த யோகப் பாதையின் மூலம் கிடைக்கும் ஆன்மீகச் சாதனைகளும், உண்மையான ஈடுபாட்டுடன் பயிற்சி செய்பவர்களுக்கு மெதுவாக கிடைத்தாலும், நிச்சயமாகக் கைகூடி வந்து அனுபவமாக அமையும் ||95||
எந்த ஒரு ஆற்றலின் துணையால் ஒருவன் விழிப்பு மற்றும் கனவு நிலைகளை அறிகிறானோ, எந்த ஒரு ஆற்றலால் நமது ஐம்புலன்களும் இயங்கத் தூண்டப்படுகின்றனவோ, அதுவே ஒப்பற்ற பரமாத்மாவாகும்; அதுவே ‘சத்-சித்-ஆனந்தம்’ (இருப்பு-அறிவு-பேரின்பம்) எனும் முழுமையான இருப்பாக நினைத்துக் கொண்டு தியானிக்கப்பட வேண்டும்’ ||96||
ஒரு பூச்சியானது அச்சத்தின் காரணமாகத் தொடர்ந்து ஒரு தேனீயையே நினைத்து, இறுதியில் அந்தத் தேனீயாகவே உருமாறி விடுகிறது என்று ஒரு பழமொழி கூறுவது போல, நாமும் இந்தப் பிறவியிலேயே, இந்த உடலிலேயே, மெய்வழிக்குரிய முழுமையான தலைவனாக (ஞானியாக) ஆக முடியும் ||97||
உடலில் உறைந்துள்ள ஜீவாத்மாவானது பரமாத்மாவிலிருந்து வேறானது அல்ல என்பதை உணர்; இத்தகைய உறுதியுடன் அந்தப் பரம் பொருளைத் தியானி; இம் முறையிலேயே ஒருவன் தெய்வீகத் தன்மையைப் பிரதிபலிக்க தொடங்கி, தான் தேடிய அந்த ஆனந்தமயமான ‘நிர்வாணப்’ பெரு நிலையை அடைய முடியும் ||98||
எவர் ஒருவர் விடியற்காலை, நண்பகல் மற்றும் அந்தி ஆகிய மூன்று வேளைகளிலும் தீவிரமாகப் பயில்கிறார்களோ, எவர் ஒருவர் தங்கள் வாழ்வைச் சுயக் கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் வாழ்கிறார்களோ, அவர்கள் முனிவர்களுக்குச் சமமானவர்களாவர்; அவர்கள் தங்கள் சம்சார பந்தத்தை வென்று விடுகிறார்கள் ||99||
போதனை பயிற்சியில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டுமாயின், சர்வ வல்லமை படைத்த இறைவனிடம் முழுமையான பக்தி செலுத்துவதே சாலச் சிறந்தது; இதன் மூலமாகவே ஒருவன் வாழ்வில் ஏற்படும் அதிகப்படியான தடைகளைச் சந்திக்காமல் அவற்றில் இருந்து தப்பிப்பான்; தொழிலாளர்கள் செய்யும் வேலையை மேற் பார்வையிடும் ஒரு கண்காணிப்பாளர் இருப்பது போலவே, புலன்களை நெறிப்படுத்தி வழி நடத்த மனதின் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்; அதன் மூலமே யோகப் பாதையில் முன்னேறும் பணியை ஒருவன் செவ்வனே நிறைவேற்றிக் கொள்ள முடியும்’ ||103||
சில சமயங்களில், வேலையை குறித்த நேரத்தில் முடிப்பதற்காகத் தொழிலாளர்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்குவது போலவே, ஒருவன் தன் மனதை எப்போதும் மகிழ்வுடன் வைத்திருக்க முயல வேண்டும்; ஏனெனில், மனம் மகிழ்வுடன் இருந்தால்தான், அது புலன்களைத் தொடர்ந்து யோகப் பாதையின் திசையில் அழைத்துச் செல்ல முடிந்தவையாக இருக்கும்||104||
மனமானது தனது இயல்புக்கேற்ப, மூவுலகங்களிலும் எவை மிகவும் கவர்ச்சிகரமானவையாகவும் அற்புதமாகவும் திகழ்கின்றனவோ, அவற்றையே தேடி அலைந்து ஏங்குகிறது; ஆனால் ஒன்றை உறுதியாக அறிந்து கொள்; எனது திவ்யமான வடிவத்தைத் தவிர, மனதை என்றென்றும் வசீகரித்துத் தன் வயப்படுத்தும் ஆற்றல் கொண்ட வேறெதுவும் இவ்வுலகில் கிடையாது||105||
ஆகவே, தெய்வீகப் பண்புகளுடன் உனக்குக் காட்சியளிக்கும் இந்தத் திருவுருவமே, அந்தப் பரம்பொருளின் பேரொளியைப் பிரதிபலிப்பதாகத் திகழ்கிறது; யோகப் பாதையில் பயணத்தைத் தொடங்கி, அதில் முன்னேறி, இறுதியில் முழுமை நிலையை அடைவதற்குத் துணையாக, உன் மனம் முழு உணர்வுடன் இந்தத் திருவுருவத்திலேயே ஒன்றிப் போகும் வகையில் நீ இடை விடாது முயல வேண்டும் ||106||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் முப்பத்தி ஆறாம் (36) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் முப்பத்தி ஆறாம் (36) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
106 + 3786 = 3892
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -11, அத்தியாயம் 36 முடிவடைந்தது
அத்தியாயம் 37 தொடர்கின்றது