COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -10 : நீதிநெறி பாதை
அத்தியாயம் 31
அலர்கன் தோல்வி; ஸ்ரீமத் தத்தரிடம் சரணடைதல்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா தன் சீடன் தீபக்கிடம் தொடர்ந்து விவரித்தார் ‘தான் அனைத்து வகைகளிலும் தோல்வியடைந்து விட்டதை உணர்ந்த அலர்கன், சோர்ந்து போய் ‘நான் சிறிது காலம் காடுகளுக்குச் சென்று தங்கியிருக்கிறேன்’ என்று கூறினான் ||1||
அலர்கனின் உள்ளத்தில் எழுந்த பற்றின்மையை உள்ளுணர்வால் அறிந்து கொண்டு விட்ட சுபாஹு, அவன் மீது பரிவு கொண்டு கூறினான் ‘அலர்கன் காடுகளுக்குச் செல்வதை கண்டால், நம் வீரர்களில் எவரும் அவனைத் தடுக்க வேண்டாம்; அவன் விரும்பும் இடத்திற்குச் செல்லட்டும்’ ||2||
அந்த கட்டளையை அனைவருக்கும் அறிவித்த பிறகு, காடுகளுக்குச் செல்லும் பாதையானது காவலாளிகள் இல்லாத நிலையில் திறந்து வைக்கப்பட்டது; இரவில், ஒரு குதிரையின் மீது ஏறிய அலர்கன், தன் தலை நகரை விட்டு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வெளியேறினான் ||3||
மனதில் பெரும் துயரங்களை ஏந்திக் கொண்டு, அவன் தனித்து காடுகளுக்குள் சென்றான்; சிறிது நேரத்தில், கண்ணுக்கினிய ஓர் ஆசிரமத்தை அவன் கண்டான்; அங்கே சென்று சிறிது நேரம் இளைப்பாற அவன் முடிவு செய்தான் ||4||
எனினும், அவனது சிந்தனை முழுமையும் கடந்த கால அரச சுகங்களிலும் பெருமைகளிலும் லயித்திருந்தது; தனிமையிலும் சோர்விலும் ஆழ்ந்த அவன், இழந்த அந்த அரச இன்பங்களை நினைத்துத் தன் உள்ளத்தில் பலவாறாகப் புலம்பினான் ‘விதியின் போக்கை புரிந்து கொள்ள முடியாது; இந்தச் சூழ்நிலையை எதிர் கொள்வதில் என் அறிவாற்றலின் எல்லை பகுதியை அடைந்து விட்டேன். இதற்கு மேல் யோஜனை செய்ய அதனிடம் சக்தி இல்லை போலும் ‘ ||5||
இவ்வாறு தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டாலும், மன்னன் தொடர்ந்து தனக்குத் தானே பரிதாபப்பட்டுக் கொண்டு கிடந்தான்; எத்தகைய பாவங்களைச் செய்திருந்தால் இத்தகைய விளைவை நான் சந்திக்க நேர்ந்திருக்கும் ? என்னை வாட்டும் இந்த வேதனையிலிருந்து நான் எவ்வாறு விடுபட முடியும்? என்று அவன் எண்ணி வருந்தினான் ||6||
என் தாய் ஒரு பக்தி மிக்க கற்புக்கரசியாக இல்லாமல் இருந்திருந்தால், இத்தகைய விதியை நான் ஏற்றுக் கொண்டிருக்கலாம்; ஆனால் அவள் அத்தகையவள் அல்லவே; அப்படியிருக்கையில், இப்போது என்னைச் சூழ்ந்துள்ள இந்தப் பேரழிவு எனக்கு ஏன் நேர்ந்தது?; இனி நான் அனுபவிக்க வேண்டிய அவமானங்கள் வேறு என்ன மீதம் உள்ளது||7||
கடந்த கால நாட்களையும் தன் தாயையும் அவர் நினைவு கூர்ந்தபோது, அவளது இறுதி அறிவுரைகள் அவருக்கு நினைவுக்கு வந்தன; அவள் எதிர் காலத்தை முன்னரே கணித்து, அதற்கேற்பத் தன் தந்தையுடன் புறப்படுவதற்கு முன்பே அவருக்கு அறிவுரை வழங்கியிருந்தது நினைவிற்கு வந்தது ||8||
அப்போது அவள் கொடுத்து இருந்த கடிதம் அவருக்கு நினைவுக்கு வந்தது; மறுநாள் காலையில் நீராடிய பிறகு தான் என்ன செய்ய வேண்டும் என்பதும் அவருக்கு நினைவில் எழுந்தது; அவர் உறுதியாகத் தீர்மானித்தார் ‘நான் புறப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது; பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள அந்தப் புதையலைக் எடுத்து, என் தாயின் இறுதி அறிவுரையைப் படித்து அறிய வேண்டும் ||9||
சிறிதளவு ஆறுதல் பெற்றவராயினும், உறுதியான மனதுடன் அவர் சிந்தித்திருந்தார்; சூரியன் உதிப்பதற்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?; அந்த கடிதம் என்னிடமிருந்து இன்னும் எவ்வளவு நேரம் மறைந்திருக்கும்?; இந்த இரவு இன்னும் எவ்வளவு நேரம் நீடித்திருக்கும்? ||10||
இன்னும் கவலையுற்றிருந்தாலும், லேசான நம்பிக்கையுடன் அவர் அந்த இரவை ஆசிரமத்திலேயே கழித்தார்; சூரியன் உதித்ததும், அரசர் முந்தைய இரவில் தான் மேற் கொண்ட உறுதி மொழியை நினைவு கூர்ந்தார்; மனதிற்குள்ளேயே தன் புனிதத் தாயின் திருவடிகளை வணங்கினார் ||11||
காலையில் நீராடி, செய்ய வேண்டிய தினசரி கடமைகளை முடித்த பிறகு, அரசர் தன் தாயின் இறுதி அறிவுரை அடங்கிய அந்தப் பேழையை வெளியே எடுத்து வணங்கினார்; பின்னர் அவர் அந்தப் பேழையைத் திறந்து, அதிலிருந்த கடிதத்தை எடுத்தார்; தன் மனதை ஒருமுகப்படுத்தி, முழு கவனத்துடனும் அதைப் படித்தார் ||12||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘த்யாஜ்ய: ஸர்வாத்மனா சங்க: ஸ சேத் த்யக்தும் ந ஶக்யதே, ஸத்பி: ஸஹ கர்தவ்ய: சந்தோ து:ஸங்கபேஷஜம்’*;
இதன் அர்த்தம் என்ன என்றால் ”எல்லாவிதமான பற்றுகளையும் (ஆசைகளையும்) முழுமையாகத் துறக்க வேண்டும்; ஒருவேளை அவற்றை விட முடியவில்லை என்றால், நல்லவர்களுடன் (சான்றோர்களுடன்) தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; ஏனெனில் நல்லோர் சேர்க்கை தீய சேர்க்கையினால் ஏற்படும் துன்பத்திற்கு மிகச் சிறந்த மருந்தாகும்
{*இந்த ஸ்லோகம் ’சதுர்வர்க்க சிந்தாமணி’ போன்ற நீதி நூல்களில் இடம் பெற்றுள்ளது; நீதி நெறிகளைப் போதிக்கும் இந்த ஸ்லோகம் நாரத புராணத்திலும் (Narada Purana) இடம் பெற்றுள்ளது} ||13||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘காமம்ஸர்வாத்மனாஹேயோஹாதும் சேத் த்யாக்யதே ந ச:, முமுக்ஷாம் ப்ரதி கர்தவ்ய: ச ஏவ காமார்திபேஷஜம்’*;
இதன் அர்த்தம் என்ன என்றால் ‘காமம் என்பது முற்றிலுமாகத் துறக்கப் பட வேண்டிய ஒன்று; ஒருவேளை அந்த ஆசையை முழுமையாக விட முடியவில்லை ஒருவேளை அவன் அந்த ஆசையை ‘முமுக்ஷுத்வம்’ எனப்படும் விடுதலை அடைய வேண்டும் (மோட்சம்) என்ற ஆசையாக மாற்றிக் கொள்ள வேண்டும்; அந்த ஒரு ஆசைதான், மற்ற அனைத்து ஆசைகளும் தரும் துன்பங்களுக்கு மருந்தாக அமையும்
{* இந்த ஸ்லோகம் 18 மகா புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில், தத்தாத்ரேயரின் உபதேசங்கள் மற்றும் ஆன்மீக முக்திக்கான வழிகளை விவரிக்கும் பகுதியில் இடம் பெற்றுள்ளது; இது 37-வது அத்தியாயத்தில் 24-வது ஸ்லோகமாக (Verse 24) காணப்படுகிறது;} ||14||
கூட்டத்தை விட்டுப் பிரிவதும், சூட்சும உலகங்களில் உடலெடுத்து வாழும் வரை இருப்பதும் கடினமாகத் தோன்றினால், உடல் அடையாளத்தைக் கடந்த மகான்களுடன் தொடர்பு கொள்வதே சிறந்தது; ஏனெனில் அப்போதுதான் உலகப் பற்றுடன் தொடர்புடைய துன்பம் நீக்கப்படுகிறது||15||
ஒருவரின் ஆசைகளை விடுவது கடினமாகத் தோன்றினால், இந்த இலட்சியத்திற்குத் தகுதியான ஒரு உதாரணத்தைக் கூடக் காண முடியாமல் தவித்தால், உண்மையான தேடலைத் தூண்டும் ஆத்ம விருப்பத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அந்த நிலையில் எண்ணியதை விரைவாக அடையலாம்’ ||16||
மேல் கூறிய அறிவுரைதான் அந்த கடிதத்தில் இருந்தது; அதை அலர்கன் படித்தான்; இதைத்தான் அவன் முழுமையாக உள் வாங்க வேண்டும் என்று அவனது தாய் விரும்பி இருந்தாள்; அதை முழுமையாக உள் வாங்கிய பிறகு அவன் அதை உள் நோக்கிப் பார்த்தான் அத்தகைய மகான்கள் எங்கே வாழ்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு என்னிடம் உடனடி பதில் இல்லை’ என்று எழுதி இருந்தது ||17||
எனவே அலர்கன் மீண்டும் ஒரு ஆசிரமத்திற்குச் சென்றார்; அங்கு ஒரு முனிவர் இருந்தார், அவருக்கு அவர் மரியாதையுடன் தலை வணங்கினார்; பின்னர் கை கூப்பிக் கேட்டார் ‘தயவு செய்து எனக்கு ஒரு மேன்மையான, ஞானம் பெற்ற துறவியைக் காட்டுங்கள்’ ||18||
நான் அவருக்குச் சேவை செய்ய விரும்புகிறேன்; என்னைத் துன்புறுத்தும் இந்தத் துயரங்களை நான் வெல்ல விரும்புகிறேன்’; மன்னனின் வார்த்தைகளில் இருந்த நேர்மையைக் கண்டறிந்த அந்த மகான், ஆசுவாசப்படுத்திக் கொண்டு இவ்வாறு பதிலளித்தார் ||19||
இந்தியாவின் தென் பகுதிகளில் புனிதமான சஹ்யாத்ரி எனும் மலை உள்ளது, அங்கு பகவான் ஸ்ரீமத் தத்தரே வசிக்கிறார்; நீங்கள் சென்று அவருடைய மகிமையைக் கண்டு அவருடைய அருளை அனுபவியுங்கள்; அவர் நிச்சயமாக உங்கள் மீது எல்லா நன்மைகளையும் பொழிவார்||20||
அங்குள்ள புனிதப் பகுதி, புனித அன்னையர்களுடன் தொடர்புடைய மாதாபூர் என்று கூறப்படப்பிடுகின்றது; ஜமதக்னி முனிவரின் மனைவியான அன்னை ரேணுகாவின் ஆசிரமம் அங்கேயே உள்ளது; மேலும் அந்தப் புனித இருப்பிடத்திற்கு நேர் எதிரே, பகவான் ஸ்ரீமத் தத்தர் வசிக்கும் புண்ணிய மலை உள்ளது|21||
அன்னை அனுசுயாவின் புனிதப் புதல்வர், உலகில் பகவான் ஸ்ரீமத் தத்தாத்ரேயர் என்று புகழ் பெற்றவர், யோகிகளால் தேடப்படும் தெய்வம், மகான்களால் வணங்கப்படும் இறைவன் ||22||
உன்னால் அவரைக் காண முடிந்தால், உனக்கு இந்தத் துன்பத்தை ஏற்படுத்திய உலகப் பற்றுகளெல்லாம் நீங்கி விடும்’; அவர் கூறிய அறிவுரையை கேட்ட அலர்கனின் உள்ளமும் மனமும் உருகின; ஸ்ரீமத் தத்தரை காண உள்ளம் ஏங்கியது ||23||
அவன் உடனடியாகப் புறப்பட்டு, சஹ்யாத்ரி மலையை அடைந்து அங்கு நின்றான்; அங்கே, அவன் தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் ஆசிரமத்தைக் கண்டான். தனியாக இருந்தபோதிலும், அவன் மேலும் முன்னேறிச் சென்றான் ||24||
அவனால் ஆசிரமத்தைக் கண்டு பிடித்து உள்ளே நுழைய முடிந்தது; அவனுக்குப் பெரும் ஆச்சரியமாக, அங்கே ஸ்ரீமத் தத்தாத்ரேயர் இருப்பதை நேரிலேயே பார்த்தான்; அவன் மரியாதையுடன் இறைவனை வணங்கி, அந்த மகான் அளித்த அறிவுரைக்கு மனதார நன்றி தெரிவித்த பின் ஸ்ரீமத் தத்தாத்ரேயரிடம் கேட்டான் ||25||
‘பக்தர்களை நேசிக்கும் இறைவா, நான் இப்போது அனுபவிக்கும் எல்லையற்ற வலிக்கான காரணம் என்னவாக உள்ளது என்று கூறுவீர்களா? உங்களது அருளால்தான், நான் என்னுடைய செயல்களில் சரியான வழி முறையில் சென்று மன அமைதியைக் காண்பேன் ||26||
நீங்கள் உங்களது கருணை நிறைந்த பார்வையை என் மீது செலுத்தினால் எந்த துன்பமும் என்னை துயரப்படுத்தாது; படைப்பில் உள்ள அனைவரின் செருக்கு நிறைந்த நடத்தையையும் நீங்கள் அகற்றி, இறுதியில் அவர்களை உமது புனித பாதங்களில் சரண் அடைய வைக்கின்றீர்கள் என்று சொல்லப்படுகிறது ||27||
அலர்கன் அவ்வாறு கூறியதைக் கேட்டதும், ஸ்ரீமத் தத்த பகவான் மனதிற்குள் இவ்வாறு எண்ணினார் ‘இவன் புனிதவதியான மதாலஸாவின் சிறந்த புதல்வன்; ஆதலால் இவனுக்காக நான் அதிக முயற்சி எடுக்க வேண்டியதில்லை; இவன் விஷயங்களை மிக விரைவாகவே கிரகித்துக் கொள்வான் ||28||
இவ்வாறு மனதிற்குள் தீர்மானித்த ஸ்ரீமத் தத்த பகவான், புன்னகைத்து அலர்கனை நோக்கி ‘இந்தத் தருணத்தில், உனக்கு எங்கு வலி அல்லது துன்பம் தோன்றுகிறதோ, அந்த இடத்தைச் சுட்டிக் காட்டு’ என்று கேட்டார் ||29||
உன்னை எது துயரப்படுத்துகின்றதோ, அந்த இடத்தை முதலில் காட்டு; நான் அதை முழுமையாகக் குணப்படுத்தி விடுகிறேன்; அதற்கு முன், நீ உண்மையில் யார் என்பதை எனக்குச் சொல்; அதன்பின், கண் இமைக்கும் நேரத்தில் உன் துன்பங்களை நான் நீக்கி விடுகிறேன் ||30||
ஸ்ரீமத் தத்தாத்ரேயர் அவ்வாறு கேட்ட அதே கணத்தில், அலர்கனின் மனதில் ஒரு தெளிவான விழிப்புணர்வு தோன்றியது; அவன், பகவான் கேட்ட கேள்வியான ‘நான் உண்மையில் யார்?’ என்பது குறித்து ஆழ்ந்து சிந்திக்கத் துவங்கினான்||31||
மன்னன் தனக்குள்ளேயே இவ்வாறு எண்ணினான் ‘இந்தத் தூல உடல் உயிரற்றது ; இது உண்மையில் நிலம், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் சேர்க்கை மட்டுமே ஆகும்; மேலும் இது பல்வேறு மாற்றங்களுக்கு உட்படும் ஒரு பானையாகவும் திகழ்கிறது; இதுவே உண்மை என்பதை யாரால் மறுக்க இயலும்? ||32||
ஆனால், எக்காலத்திலும் மாற்றமடையாத என்ற ஒன்று உள்ளது; அதுவே உடலுக்குள் உறையும் ஆத்மா ஆகும்; அது ஏதோ வரம்பிற்குட்பட்டது போலவோ அல்லது மறைக்கப்பட்டிருப்பது போலவோ தோன்றினாலும், உணர்வு வடிவமாகத் திகழும் ‘நான்’ என்பவன், நான் உணரும் அந்தப் பொருளிடமிருந்தோ, உடலிடமிருந்தோ நிச்சயமாக மாறுபட்டவன் ||33||
எனது வலிமை மிக்க ஐம்புலன்களான கண்கள், காதுகள், கைகள் மற்றும் கால்கள் ஆகியவை என்னை இடை விடாமல் அலைக் கழிக்கின்றன; உறக்க நிலையில், மரணத்திற்கு ஒப்பான ஒரு ஜடத் தன்மை என்னை ஆட்கொள்கிறது; ஆகையால், நான் இந்தத் தூல உடலோ, ஐம்புலன்களோ அல்லது மூச்சுக் காற்றோ அல்ல என்றால், இவை அனைத்தின் கூட்டுச் செயல்பாடுகளுக்கும் சாட்சியாக இருப்பவன் ‘நான்’ ஒருவனே என்பது தெளிவாகிறது ||34||
ஒவ்வொரு கணமும் மனம் நிலையற்ற தன்மையால் அலை பாய்கிறது; ஆயினும், அந்த மனதின் சஞ்சலத்தை நான் சாட்சியாக நின்று நோக்கும்போது, அதனோடு ஒப்பிடுகையில் நான் நிலையானவனாகவே தோன்றுகிறேன்; எனவே, மனம் உருவாக்கும் சலனங்களுக்கு நான் ஆட்படாமல் இருந்தால், அந்த செயல்பாடுகள் அனைத்தையும் அறிபவனாகவும்’ (Knower) , காண்பவனாகவும்’ (Seer) இருக்க முடியும் ||35||
விழிப்பு நிலையில் உள்ள ஒவ்வொரு கணமும், அனைத்திற்கும் சாட்சியாகத் திகழும் அந்த சக்தி, உடலின் அனைத்துச் செயல்பாடுகளிலும் ஊடுருவி நிற்கிறது; அதே வேளையில் உறக்க நிலையில் இது மறைந்து விடுகிறது; நான் ‘நான்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வது, இந்த அறிவாற்றலைத்தானோ?; நுட்பமான சிந்தனையின் மூலம், நான் புத்தியோடு தொடர்புடைய செயல்களிலிருந்து வேறுபட்டவன் என்பதை உணர்கிறேன்||36||
இயற்கையின் குணங்களான சத்துவம் (தூய்மை), ரஜஸ் (செயல்பாடு) மற்றும் தமஸ் ஆகிய சுழற்சிகளுக்கு ஏற்ப ஆடுவதே எனது அகங்காரம் ஆகும்; இந்த நிகழ்வை நான் உண்மையாகவே உணர்ந்தால், நான் அதிலிருந்து வேறுபட்டவன் என்பது தெளிவாகும்; நான் இந்த உடல் அல்ல; புலன்கள் அல்ல; மூச்சுக் காற்று அல்ல; சஞ்சல மிக்க மனம் அல்ல; தடுமாறும் புத்தி அல்ல; கண் முன் தோன்றும் எந்த பொருளுடனும் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் சித்தம் அல்ல; அடங்கியிருக்கும் அகங்காரமும் அல்ல ||37||
ஆகவே, நான் அந்த தூய, காலத்தால் அழியாத, அறிவே வடிவான சாரப் பொருள் ஆவேன்; நான் மானிட ஆண் வடிவம் அல்ல; எனது பகுத்தறிவு சார்ந்த ஆழ்ந்த சிந்தனையின் விளைவு இதுவே ஆகும்; இப்போது, எனது துன்பத்தைப் பற்றிச் சிந்திப்பேன்; உண்மையான ஆர்வத்துடன் அதை முழுமையாக ஆராய்ந்து அறிய முயற்சிக்கின்றேன்; ஏனெனில், அவ்வாறு செய்வதன் மூலமே நான் எனது அச்சங்கள் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகள் அனைத்திலிருந்தும் விடுபட முடியும் ||38||
தலை முதல் பாதம் வரை, தலை முடி முதல் நகங்கள் வரை, இந்த பௌதிக உடலின் உள்ளும்வெளிப்புற மும் என எங்கும், அலர்கன் தனது துன்பத்தின் இருப்பிடத்தைத் தேடினான்; ஆனால் அவனால் அதைக் கண்டறிய இயலவில்லை; இதை உணர்ந்த அவன், மீண்டும் தனது அகத்திற்குள்ளேயே தேடத் தொடங்கினான் ||39||
மூச்சுக் காற்று இல்லாத நிலையில், பசி, தாகம் மற்றும் பிற உடல் சார்ந்த தேவைகள் எவையும் ‘துன்பம்’ என்றால் என்ன என்பதை ஒரு போதும் அறியாது; அனைத்துப் புலன்களையும் வெறும் சேவகர்களாக நாம் கருதினால், அதில் எந்தத் தவறும் இல்லை; ஏனெனில், அவை அனைத்திற்கும் ஆற்றலை அளித்து இயக்குவது, உள்ளே உறையும் அந்த ‘நான்’ (ஆத்மா ) மட்டுமே ஆகும்||40||
உலகப் பற்றின் மூல காரணம், விருப்பு அல்லது வெறுப்புகளுக்கும் அடி பணிவதே ஆகும்; மனமானது தனது நிலையற்ற இயல்பினால் ஒரு பொருளை விட்டு மற்றொரு பொருளை நாடி அலைகிறது; மனதின் இந்த இயல்பே அதை இன்பம் மற்றும் துன்பங்களில் மூழ்கடித்து வைத்திருக்கிறது; விழிப்புடன் இருக்கும் நேரமெல்லாம் மனதின் நிலை இவ்வாறே நீடிக்கிறது ||41||
மனதிற்கு ஊட்டமளிக்கும் ஆதாரம் உணவே ஆகும்; உட்கொள்ளும் உணவின் தன்மைகேற்பவே மனம், மாற்றத்திற்கு உட்பட்ட பல்வேறு பொருட்களின் மீது பற்றுக் கொண்டு அலை பாய்கிறது; அனைத்திற்கும் சக்தியளிக்கும், உள்ளே உறையும் அந்த மெய்யான ‘நான்’ (ஆத்மா ) எவ்வாறு துன்பத்திற்கு ஆளாக முடியும்?; எந்தவொரு துயரமும் அதை எவ்வாறு நெருங்க முடியும்? ||42||
தனது சிந்தனை ஓட்டத்தை நிறைவு செய்தவனாய், தனது துன்பத்திற்கான காரணத்தையும் கண்டறிந்தவனாய், அலர்கன் புன்னகைத்து கொண்டு தெய்வமான ஸ்ரீமத் தத்தரிடம் இவ்வாறு கூறினான் ‘எனது துயரத்திற்கான காரணத்தை நான் மிக விரைவாகவே ஆழ்ந்து சிந்தித்து உணர்ந்து விட்டேன்||43||
ஆகாயம், காற்று, ஒளி (நெருப்பு), நீர் மற்றும் நிலம் ஆகிய இந்த ஐந்து பூதங்களும் தம்மளவில் ஜடப் பொருட்களே ஆகும்; இவற்றுக்கெல்லாம் சக்தியளிக்கும் மூலமான அந்த ‘நான்’ (ஆத்மா ) களங்கமற்றது; ‘சத்-சித்-ஆனந்தம்’ (இருப்பு-அறிவு-பேரின்பம்) எனும் தன்மையுடன் முழுமையாக அசைக்க முடியாததாக அது திகழ்கிறது ||44||
உயிர் மூச்சு, ஐம்புலன்கள் மற்றும் கர்மேந்திரியங்கள் (செயல் உறுப்புகள்), மற்றும் அந்தக்கரணம் எனப்படும் அகக் கருவியின் நான்கு கூறுகள் கூட, வெளித் தெரியும் உடல் என்பதின் நுட்பமான மாறுபாடுகளே ஆகும்; இவற்றுக்கெல்லாம் சக்தியளிக்கும் மூலமானது, சத்துவ, ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டதாய் விளங்குகிறது ||45||
அனைத்திற்கும் சக்தியளிக்கும் அந்த மூலமானது, எந்த விதமான பூதங்களின் தொகுப்பும் நிச்சயமாக அல்ல; இவ்வாறு தெளிவு பெற்று நான் இப்போது உண்மையை உணர்கிறேன்; மயக்கம், தவறான அடையாளப்படுத்தல் மற்றும் பொய் கர்வம் ஆகியவற்றைத் தூண்டும் அந்தப் பூதங்களின் தொகுப்பே, படைப்பில் உயிரினங்களை துன்பத்திற்கு ஆளாக்குகிறது ||46||
ஓ குரு ஸ்ரீமத் தத்தாத்திரேயா, எனது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு இதுவே ஆகும்; அனைத்திற்கும் சக்தியளிக்கும் அந்த மூலமானது, மெய்யாகவே ‘நான்’ யார் என்பதிலிருந்து வேறுபட்டது அல்ல; எனது மனம் இந்த நொடி வரை சுமந்து வந்த துயரங்கள் அனைத்தும், எனது கடந்த கால அனுபவத்தின் வெறும் சொற்களே என்பதை உணர்ந்து, நான் இப்போது அவற்றையெல்லாம் கடந்து சென்று விட்டேன் ||47||
ஆனால் இத்தகைய சிந்தனைத் தெளிவும், மெய்யான அடையாள உணர்வும், ஆன்மீக ஒருமைப்பாடும் கிடைப்பது மிகவும் அரிது; தொன்று தொட்டு ஞானியர் அனைவரும் தேடி வந்த அந்த ஆன்மீக ஒருமைப்பாட்டை, தாங்கள் கேட்ட ஆழமான மற்றும் அர்த்தமுள்ள கேள்விகளின் வாயிலாக, மிகக் குறுகிய நேரத்திலேயே எனக்கு அருளியுள்ளீர்கள், ஓ இறைவா ||48||
காலத்தால் அழியாத ஒன்று, எவ்வாறு வளர்ச்சிக்கும் தளர்ச்சிக்கும் ஆட்பட முடியும்?; மனம் உணரும் துன்பத்தை, உண்மையான மூலப் பொருளுடன் ஐக்கியப்படுத்திக் கொண்ட நான், எவ்வாறு அந்தப் புலன் மயக்கப் பிழைக்கு ஆளாக முடியும்? ||49||
உடல், ஐம்புலன்கள் போன்ற, பௌதிகமான தன்மையிலிருந்து தோன்றியவை எவையோ; அவற்றின் சேர்க்கையாலும் உதவியாலும் அனுபவிக்கப்படும் இன்பங்கள் எவையோ; அவை அனைத்தும், அதனதன் இயல்பின்படியே, காலப் போக்கில் வளரவும், பின்னர் தளர்ச்சியடையக் கூடியவை ஆகும் ||50||
காலத்தால் அழியாத அந்த உண்மையான ‘நான்’ (ஆத்மா ), நிலையற்ற பொருட்களுடன் எவ்வாறு தொடர்புபடுத்தப்பட முடியும்?; அந்த ‘நான்’ என்பது தனித்துவமானது; பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டது; நித்தியமானது; பௌதிக உடலின் வாயிலாக நிகழும் செயல்களுடன், இந்த உண்மையான ‘நான்’ என்பதற்கு எப்படி, என்ன தொடர்பு இருக்க முடியும்? ; புகை, மாசு ஆகிய எவைகளுமே அற்ற அந்த ஒளிமயமான ‘நான்’, எதைக் கொண்டு, எவ்வாறு களங்கப்படுத்தப்பட முடியும்?’ ||51||
பௌதிகப் புலன்களின் வாயிலாக நிகழும் செயல்களின் விளைவுகளுக்கு அப்பாற்பட்டது அந்த உண்மையான ‘நான்’; அந்த உண்மையான ‘நான்’ மட்டுமே நித்தியமாக உள்ளது; அது எவ்விதத் துணையும் தேடாதது; தூய்மையானது, எல்லையற்றது, ஞான மயமானது, ஆனந்த மயமானது;அத்தகைய அது, தவறான அடையாளப்படுத்தலின் காரணமாக, இவ்வுலகின் அற்பமான இன்ப துன்பங்களுக்கு எவ்வாறு ஆட்பட முடியும்? ||52||
ஐம்பூதங்களின் திறமையான சேர்க்கையே, அனைத்துப் பொருட்களுக்கும் உரிய வளர்ச்சி அடைந்த உடலையும், வடிவத்தையும் உருவாக்குகிறது; அதே போன்று, உடலுக்குள் இருக்கும் நுண்ணுடலை உருவாக்கும் சூட்சுமப் பூதங்களும் உள்ளன; ஆயினும், அந்த நுண்ணுடல், இன்னும் நுட்பமான பொருளில், பௌதிகமான தன்மையையே கொண்டதாகும் ||53||
மண்ணால் செய்யப்பட்ட பானைகளை, அந்த மண் தானே நேரடியாக எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?; அந்த மண்ணின் பல்வேறு உரு மாற்றங்களை அது எவ்வாறு அறிய முடியும்?; ஆகையால், அதே மண், வளர்ச்சி அடைந்த உடலையும் நுண்ணுடலையும் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?; அல்லது ‘இது நான்’ என்றும், ‘இது நான் அல்ல’ என்றும் அது எவ்வாறு பிரித்து பார்த்துக் கொள்ள முடியும்?||54||
‘இருமல், வாதம், கபம் ஆகிய மூன்றும் வளர்ச்சி அடையும் உடலுக்குள்ளேதான் குடியிருக்கின்றன; இந்த மூன்று உடல் கூறுகளும் சம நிலையில் இல்லாதபோது, அவை வளர்ச்சி அடைந்த உடலுக்கு நோயையும் தளர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன ||55||
நான் நோய் வாய்ப்பட்டிருக்கிறேன் என்றோ, எனக்குக் காய்ச்சல் அடித்திருக்கிறது என்றோ நாம் கூறும்போது, உண்மையில் நோய் வாய்ப்பட்டிருப்பதோ அல்லது காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதோ எதுவோ அதுவே தனது ஆரோக்கியமான நிலையைத் தானே அறிந்து கொள்ள இயலாமல் இருப்பது விசித்திரமாக உள்ளதல்லவா?; நோயை அறிந்து கொள்வது எதுவோ, அதுவே உடலின் செயல்பாடுகளுக்கும் மாற்றங்களுக்கும் சாட்சியாகத் திகழ்கிறது ||56||
அதேபோல, ஒருவன் காமம், கோபம் அல்லது பேராசை ஆகியவற்றிற்கு ஆட்படும்போது, அது சூட்சும உடல் நல்ல ஆரோக்கிய நிலையில் இருப்பதற்குப் பதிலாக, தான் ஒரு ஒரு நோயுற்ற உடல் என்பதை பறை சாற்றிக் கொள்ளும் நிலை போன்றதாகும்; இந்த நுட்பமான நோயை உணர்கின்ற அந்தச் ஆத்மா, சூட்சும உடலின் செயல்பாடுகளுக்கும் அதில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சாட்சியாகவே விளங்குகிறது ||57||
ஆகவே, அனைவரையும் வாட்டி வதைக்கும் துன்பத்திற்கோ அல்லது துயரத்திற்கோ காரணம் வேறெதுவும் இல்லை; அறியாமைக்கு அடி பணிவதும், உண்மையை அறிய விருப்பமின்மையுமே அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது; ஆனால், மெய் ஞானத்தை அடைய முயலும் மேன்மையான மக்கள் அறியாமை எனும் ‘கட்டப்பட்டுள்ள கை விலங்கில்’ இருந்து விடுபட்டவர்கள் போன்றவர்கள் ||58||
மேற் கூறியவாறு ஆழ்ந்து சிந்தித்த பிறகு, துன்பமும் துயரமும் மனம் மற்றும் இதயத்தில் குடி கொண்டிருந்தாலும், என்றும் மாறாத சாட்சியாகத் திகழும் என்னை அவை எவ்வாறு தீண்ட முடியும்? துன்பங்களை என்னுடன் தவறாக அடையாளப்படுத்திக் கொண்டு, நான் ஏன் அதற்கு அடிபணிய வேண்டும்?||59||
மனதையும் இதயத்தையும் ‘நான்’ என்று தவறாகக் கருதியதாலேயே நான் துன்பத்தில் உழன்றேன்; அதனால்தான் உம்மிடம் வந்து வினவினேன்; ஆனால் இப்போது அந்த முழு செயல் முறையையும் தெளிவாகப் புரிந்து கொண்டதால், அந்தத் துயரமான நிலைக்கு நான் இனி கட்டுப்பட்டவனல்ல ||60||
இயல்பாகவே எனக்குச் சொந்தமில்லாத துயரத்திற்கோ அல்லது மனச் சோர்விற்கோ நான் ஏன் அடி பணிய வேண்டும்? எனக்குச் சொந்தமில்லாத வலியை நான் ஏன் சுமக்க வேண்டும்? முன்னொரு காலத்தில் நான் உங்களிடம் கேட்ட இந்தக் கேள்விகளுக்கு, உங்கள் அருளால் தூண்டப்பட்ட ஆத்ம விசாரணையின் மூலம், நானே விடையை அறிந்து கொண்டேன் ||61||
இன்பமும் துன்பமும் கனவு உலக பொருட்களைப் போன்றவை; மனம் ஒன்றே அவற்றின் பிறப்பிடமாகும்; ஆனால், நான் எப்போதும் எனது ஆத்மா வோடு இணைந்து உள்ளவன் ; அதன் மூலமே முற்றிலும் மகிழ்ச்சியுடன் உள்ளவன்; எங்கும் நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருளே நான் என்பது தெரிகின்றது ||62||
அலர்கன் மேற் கொண்ட தீவிரமான சிந்தனையின் விளைவாகக் கண்டறிந்த இத்தகைய முடிவுகள் அனைத்தையும் கேட்ட பிறகு, ஸ்ரீமத் தத்தர் பெருமான் அவனிடம் கேட்டார் ‘இனி நீ என்ன செய்ய முடிவெடுத்துள்ளாய்? அனைத்தையும் எனக்கு விரிவாக எடுத்துரைப்பாயாக’ ||63||
இப்போது நீ எதை விரும்புகிறாய்?; வெற்றியை விரும்புகிறாயா?; அல்லது ஒரு பேரரசை விரும்புகிறாயா?; அல்லது மீண்டும் துன்பமும் துயரமும் நிறைந்த உலகிற்குள் நுழைய விரும்புகிறாயா?; எதையும் மறைக்காமல் உண்மையான பதிலை எனக்குப் கூறு ||64||
அதற்கு அந்த மன்னன் பதிலளித்தான் ‘ஓ, அனைத்துக்கும் அதிபதியான இறைவா, இனி என்னை வருத்தம் அடைய வைக்கக் கூடிய விஷயம் வேறெதுவும் இல்லை; இப்போது நான் உறுதியாகக் கூறுகிறேன், அரச செல்வங்கள் மீதும் அதிகாரத்திலும் இனி எனக்கு ஈடுபாடு இருக்க முடியாது; அவற்றின் மீது எனக்கு இருந்த மிகச் சிறிய பற்றுதலும் இப்போது முழுமையாக மறைந்து விட்டது ||65||
என் சகோதரன் எங்கள் தந்தையின் ராஜ்யத்தை ஆண்டாலும், தூய அத்வைத (இரண்டற்ற) நிலையில், நானே அதை ஆண்டதற்குச் சமமாகும்; ஓ இறைவா, இனி நான் ஒரு மன்னனாக ஆட்சி செய்ய விரும்பவில்லை; ஓ தத்தப் பிரபுவே, இதை நான் உங்களுக்கு உறுதியாகக் கூறுகின்றேன் ||66||
என் உடல் என் சகோதரனின் உடலிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும், எங்கள் ஆத்மா வும், அனைவருக்குள்ளும் உறையும் அந்தர்யாமியான தெய்வமும் ஒன்றேதான் என்பதை நன்கு அறிவேன்; எனவே, அவன் அந்த ராஜ்யத்தை ஆண்டாலும், இறுதியில் நானே அதை ஆளவில்லை என்று எப்படிக் கூற முடியும்?||67||
ஸ்ரீமத் தத்த தேவர் அந்த மன்னனிடம் கூறினார் ‘உன் உறுதியான நிலை இவ்வளவு வலிமையாக இருக்குமானால், உலகம் உன்னை எப்படிப் பார்க்கும் என்று தெரியுமா?; உலகின் முன் நீ ஒரு ஆதரவற்ற பிச்சைக்காரனைப் போலவே தோன்றுவாய்||68||
அழகாக அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், யானைகள் மற்றும் வீரர்கள் அடங்கிய பரிவாரங்கள், இனி உன் முன்னும் பின்னும் எப்படி அணிவகுத்துச் செல்லும்?; உன் வருகையை அறிவிக்கவும், உன் புகழைப் பாடவும், உனக்கு நன்கு தெரிந்தவர்கள் கூட இனி வர மாட்டார்களே?||69||
அரச போகங்களை அனுபவிக்க நீ கொண்ட அனைத்து விருப்பங்களும் வீணாகி விடும்; இனி நீ பயணம் செய்வதற்கு ஒரு தேரைக் கூட உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல முடியாதே’; அதற்கு அலர்கன் பதிலளித்தான் ‘நான் உங்களிடம் மீண்டும் உறுதியாகக் கூறுகிறேன்; நான் அனுபவிக்க வேண்டிய அரச சுகங்களை ஏற்கனவே அனுபவித்தாகி விட்டது||70||
‘மேலும், இந்தக் கைகளையும் கால்களையும் ‘நான்’ என்று இனியும் நான் கருதாதபோது, தூல உடலின் மற்ற பாகங்களுக்கும் இதே நிலையே பொருந்தும் போது, பிறகு குதிரை மாட்டிய தேர் யாரை சுமந்து செல்லும்? அவற்றுக்கும் எனக்கும் இடையே இனி என்ன தொடர்பு இருக்க முடியும்? ||71||
நான் உண்மையில் எத்தகையவனோ, அந்த நிலையில் எனக்கு இனி எவருடைய துணையும் தேவையில்லை; அது இந்தத் தூல உடலாக இருந்தாலும் சரி, அல்லது குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களாக இருந்தாலும் சரி; ஆகவே இந்த உடலும் உறுப்புகளும் உண்மையில் யாருக்குச் சொந்தமானவை என்று ஆராய்ந்து அறிந்து கொள்வது உண்மையில் சிறந்த நிலை அல்லவா? ||72||
நான் எனது உண்மை இயல்பில், அடையத் வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே அடைந்து விட்டேன்; இனி எனக்குக் குதிரைப் படை, காலாட் படை மற்றும் தேர் படைகள் எதற்கு தேவையாக இருக்கும் ?; இறைவா, என்னுள் அத்தகைய ஆசைகள் எதுவும் இப்போது இல்லை; இதை நான் உங்களிடம் சத்தியமான உண்மையுடன் கூறுகிறேன் ||73||
ஒருவேளை ஒருவரது நாக்கு பற்களுக்கு இடையில் அகப்பட்டுக் கொண்டால், அந்தப் பற்களைத் தண்டிப்பதற்கு யார் தங்கள் பலத்தைப் பயன்படுத்துவார்கள்? ஒரு கை தவறுதலாக மற்றொன்றின் மீது மோதிக் கொண்டால், அடித்த அந்தக் கையைத் தண்டிப்பதற்கு யார் தங்கள் பலத்தைப் பயன்படுத்துவார்கள்?||74|| ‘
இது எனது கை, இது எனது வாய் என்று உணரும்போது, தவறு செய்த அந்தக் கையையோ அல்லது பற்களையோ யாரும் கடுமையாகத் தண்டிப்பதில்லை; அது போலவே, எங்கும் நிறைந்த அந்தத் தூய அத்வைத (இரண்டற்ற) தத்துவத்தை ஒருவன் அறிந்து அனுபவிக்கும்போது, அவன் யார் மீது பகை கொள்ள முடியும்? யார் மீது தனது கோபத்தை காட்ட முடியும்?’ ||75||
இனி எனக்குப் பகைவர்கள் எவரும் இல்லை; இனி அரசாட்சியை தொடர்ந்து ஆளவும் நான் விரும்பவில்லை; இப்போது நான் துன்பத்தின் பிடியில் சிக்கியிருக்கவில்லை; மயக்கத்தினால் விளையும் வீழ்ச்சியை இனியும் அனுபவிக்க விரும்பவில்லை||76||
நமது அறிவுசார் புலன்கள் மயக்கத்திற்கு ஆளாகும்போது, தவறாமல் ஏதேனும் ஒரு ஆசை முளைத்தெழுகிறது; ஆனால், ‘தான்’ (Self) எனும் ஆத்மாவின் ஆனந்தத்தை, தனது சுயத்தின் வாயிலாக உணர்ந்து அனுபவித்த பின்னரே, ஒருவனால் தன்னைத்தானே ஆனந்தத்தின் இருப்பிடமாக மாற்றிக் கொள்ள முடிகிறது ||77||
இறைவா, இனி நான் மயக்கத்திற்கு ஆட்பட்டவனல்ல; இதோ அல்லது அதோ என்று பின் தொடரும் எண்ணற்ற ஆசைகளின் கூட்டத்தால் இனி நான் துன்புறுத்தப்படப் போவது இல்லை ; உங்கள் அருளால், நான் இப்போது அந்த ‘தான்’ (Self) எனும் ஆத்மாவில் நிலை பெற்றுள்ளேன்; உங்கள் அருளால், நான் அனைத்து வகையிலும் முழுமை பெற்றவனாக இருப்பதாக உணர்கிறேன் ||78||
ஒரு சல்லடையின் வழியாகப் பார்க்கும்போது, எங்கும் பரவியுள்ள ஒரே வானம் பல துண்டுகளாகப் பிரிந்து தோன்றுவது போலவே, இறைவா, இவ்வுலகில் உள்ள பல்வேறு உடல்களின் வாயிலாகப் பார்க்கும்போது, எங்கும் நிறைந்த அந்த அத்வைத தத்துவம் (இரண்டற்ற மெய்ப்பொருள்) பல விதமாகத் தோன்றுகிறது||79||
எனினும், அந்த வானம் ஒன்றே என்றும், அதைப் பிரிக்க இயலாது என்றும் கூறுவதில் எவ்வித ஐயமும் இல்லை; அது போலவே, பல்வேறு உயிரினங்களிடம் காணப்படும் வேற்றுமைகளும் உண்மையில் இல்லை; அவை தம்மை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதினால் ஏற்படுவது ஆகும் ||80||
ஆனால், இந்த உண்மை முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்டு, உணர்வு பூர்வமாக அனுபவிக்கப்படும் வரை, துன்பம் நீடித்துக் கொண்டுதான் இருக்கும்; இறைவா, நீங்கள் அருளும் அந்த ஞானத்தை ஒருவன் முழுமையாகத் தன் மனதில் ஏற்றுக் கொண்டால், அவனுக்குத் துன்பமோ அல்லது துயரமோ ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு இருக்கவே இருக்காது ||81||
ஒருவன் தன்னை ‘நான் இன்னான்’ என்றோ, ‘நான் அத்தகையவன்’ என்றோ அடையாளப்படுத்திக் கொள்ளும் காலம் வரை அறியாமை எனும் திரையின் பிடியில் அவன் இருக்கும் காலம் வரை, அவன் ஏதேனும் ஒன்றின் மீது பற்று அல்லது வெறுப்பு எனும் உணர்வுகளைக் கொண்டிருப்பான் என்பது உறுதி; அந்த பற்றும் வெறுப்பும் இருக்கும்வரை அவன் பொருட்கள், மனிதர்கள் அல்லது பல்வேறு நிலைகளின் மீதான பேராசையின் பிடியிலேயே சிக்கிக் கிடப்பான் ||82||
ஆனால் நான் இப்போது இருக்கும் இந்த நிலை, தாங்கள் என் மீது பொழிந்த கருணையின் விளைவே ஆகும்; எனது தவறான சுய-அடையாளப்படுத்தல்களும், பிழையான பற்றுதல்களும் என்னிடமிருந்து விலகி விட்டன; என் உள்ளத்தினுள்ளே ஞானம் எனும் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருப்பதைப் நான் உணர்கிறேன் ||83||
ஒருவன் எவராலும் தள்ளி விடப்பட்டாலோ, அவமதிக்கப்பட்டாலோ, அல்லது கடுஞ் சொற்களால் நிந்திக்கப் பட்டாலோ, அவனுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவனது அறிவுத் திறன்கள் உள்ளுக்குள்ளேயே கொந்தளிப்பதை நாம் சாதாரணமாகக் காண்கிறோமல்லவா?; அந்த உணர்வே, தனி மனிதர்களிடத்தில் எழும் ‘நான்’ எனும் அடையாள உணர்வின் வெளிப்பாடாகும் ||84||
ஒரு பூனை, தனக்கு உணவாக அமைந்த ஒரு எலியைத் தின்று பசியாறிய பிறகு, அதற்காக வருத்தமோ அல்லது வேதனையோ கொள்கிறதா?; ஆனால், அதே பூனை தன் வாயில் ஒரு கிளியைக் கவ்விக் கொண்டு செல்வதை நாம் காணும்போது, நமக்கு வருத்தம் ஏற்படுகிறதல்லவா?||85||
சமூகத்தில் நாம் காணும் ஒரு காட்சி இது; பெற்றோர்கள் தங்கள் உடன்பிறப்புகள் காய்ச்சல் அல்லது நோயின் பிடியில் சிக்கியிருப்பதை தெரிந்து கொள்ளும் போதும், காணும் போதும் பெரிதும் வேதனைப் படுகிறார்கள்; ஆனால், அதே பெற்றோர்கள் தங்கள் எதிரிகளின் குழந்தைகள் இறந்து போனால், அத்தகைய துயரத்திற்கு ஆளாவதில்லை ||86||
மேற்கூறிய நிகழ்வுகள் அனைத்தும், நாம் தவறான இடங்களில் செலுத்தும் பற்று மற்றும் வெறுப்பு எனும் உணர்வுகளின் விளைவுகளே ஆகும்; எனவே, ‘நான்’ எனும் அடையாள உணர்வும், ‘விருப்பு-வெறுப்பு’ எனும் உணர்வும், இவ்வுலக வாழ்வில் ஏற்படும் அனைத்துத் தீமைகளுக்கும் வேர்களாக அமைகின்றன; தங்கள் கருணையினால், நான் இவ்விரண்டு வேர்களையும் அடியோடு பிடுங்கி எறிந்து விட்டேன் ||87||
இப்போதுதான் என் உள்ளத்தினுள்ளே ஆராய்ந்து பார்க்கும் திறன் விழித்தெழுந்துள்ளது; இனிமேல் எந்த விதமான அற்ப இன்பங்களோ அல்லது துன்பங்களோ என்னைத் தடுத்து நிறுத்த முடியாது; சமூகத்தில் உள்ள எவருடைய அல்லது அனைவருடைய கருத்துக்களும் என்னைப் பாதிக்கப் போவதும் இல்லை; பிறர் கூறும் சொற்கள், அவை வாய் மொழியாக இருந்தாலும் சரி, எழுத்து வடிவில் இருந்தாலும் சரி,என் உள்ளத்தில் பதிந்து விட நான் அனுமதிக்கப் போவது இல்லை ||88||
அனைத்து மாசுக்களிலிருந்தும் விடுபட்டு, தவறான அடையாள உணர்வுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, அத்தனை ஏன், மூன்று குணங்களைக் கொண்ட இயற்கையானது உயிரினங்கள் மீது செலுத்தும் பிணைப்புகளிலிருந்தும் கூட விடுபட்டு நான் ‘இருக்கிறேன்’ என்பதை உணர்ந்துள்ளேன்; தங்கள் கருணையினால், அந்த ‘இருப்பு’ (Existence) என்பதன் உண்மையான பொருளை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது’ ||89||
தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் பதிலளித்தார் ‘ஓ அரசனே,உனக்கு நான் தந்த அருளை நீ ஏற்றுக் கொண்டபோது, நீ உண்மையில் யார் என்பதை உன்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது; இதுவே, புண்ணியச் செயல்களோ அல்லது பாவச் செயல்களோ உருவாக்கும் பந்தங்களையும் கடந்து செல்ல உனக்கு வழி வகுத்தது ||90||
ஒருவன் தவறுதலாக ‘நான்’ என்று உரைத்த அடுத்த கணமே ஏதோ ஒரு பிணைப்பு அவனிடம் உருவாகி விடுகிறது; அதுவே இடை விடாத துயரத்திற்கு காரணமாக அமைகிறது; ஏனெனில், அந்தப் பிணைப்பு அவனது இதயத்தைப் பிளந்து சிதைத்து விடுகிறது||91||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘யாவத: குருதே ஜந்து: சம்பந்தான் மனச: ப்ரியான், தாவந்தோ அஸ்ய நிகன்யந்தே ஹ்ருதயே சோக சங்கவ’*;
இதன் அர்த்தம் என்ன என்றால் ”ஒரு மனிதன் தன் மனதிற்கு இனியவர்களிடம் எவ்வளவு அதிகமாக உறவுகளையும் பற்றுதலையும் வளர்த்துக் கொள்கிறானோ, அந்த அளவுக்கு அவனுடைய இதயத்தில் துக்கம் எனும் ஆணிகள் தைக்கப்படுகின்றன”; {*இந்த அழகான ஸ்லோகம் மகாபாரதத்தில் (சாந்தி பருவம்) மற்றும் ஸ்ரீமத்மத் பாகவதத்திலும் (9.19.28) காணப்படுகிறது}||92||
தவறான இடத்தில் கொள்ளும் பற்றும் வெறுப்பும் பந்தத்தை உருவாக்குகின்றன; அந்தப் பற்று வெல்லப் படும்போது, அதனால் ஏற்பட்ட பந்தங்களும் அகன்று விடும்; அதன் பிறகு உருவாகும் உறவுகள் அனைத்தும், எவ்விதப் பிணைப்பையும் ஏற்படுத்தாத, தெளிவான பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்தவையாக இருக்கும் ||93||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘த்வே பதே பந்த மோக்ஷாய ந மமேதி மமேதி ச, மமேதி பத்யதே ஜந்து: ந மமேதி விமுச்யதே’* ;
இதன் அர்த்தம் என்ன என்றால் ‘மனிதனின் பந்தத்திற்கும், மோக்ஷத்திற்கும் (விடுதலை) இரண்டு சொற்களே காரணமாகின்றன; அவை இது என்னுடையது மற்றும் இது என்னுடையது அல்ல என்ற இரண்டு சொற்களே ஆகும் அவை இது என்னுடையது மற்றும் இது என்னுடையது அல்ல என்ற இரண்டு சொற்களே ஆகும்; இது என்னுடையது என்று நினைக்கும் போது மனிதன் பந்தப்படுகிறான்; இது என்னுடையது அல்ல என்று உணரும்போது அவன் விடுதலை பெறுகிறான்.
{* இந்த சமஸ்கிருத ஸ்லோகம், சமஸ்கிருத ஸ்லோகம் பைங்கலோபநிஷத் (Pingala Upanishad) மற்றும் மகாபாரதம் போன்ற ஆன்மீக நூல்களில் இடம் பெற்றுள்ளது; பந்தம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றிற்கான அடிப்படைக் காரணங்களை விளக்கும் ஒரு புகழ் பெற்ற உபநிஷத் வாக்கியமாகும்; இது உத்தர கீதையிலும் (45-வது ஸ்லோகம்) வருகின்றது; மகாபாரதப் போருக்குப் பிறகு அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் மீண்டும் உபதேசிக்கும் ஞானப் பகுதியில் இது ஒரு முக்கியமான ஸ்லோகமாக வருகிறது.} ||94||
உனது தாயார் தூய்மையானவள்; மிகவும் பாக்கியசாலி ஆவாள்; அவள் எக்காலத்திலும் தெய்வ மன நிலையுடனேயேதான் வாழ்ந்து வந்தாள்; யோக நெறியில் அவள் கொண்டிருந்த உறுதிக்காக அவள் போற்றப்படுகிறாள்; தவ வாழ்வில் அவள் கொண்டிருந்த அர்ப்பணிப்பிற்காக அவள் கௌரவிக்கப்படுகிறாள்||95||
அவளே உனக்குத் தாய்ப் பால் ஊட்டி வளர்த்தவள்; அதன் விளைவாகவே, உனது உள் மனமும் இதயமும் தூய்மையடைந்தன; அதன் காரணமாகவே, நீ எவ்விதத் தாமதமுமின்றி, மிகக் குறுகிய காலத்திலேயே ஞானத்தை அடைந்தாய் ||96||
நல்லோர் சேர்க்கை (சத்சங்கத்தின்) இப்படிப்பட்ட பலன்களையே தரும் ; அதன் நன்மைகளை வேறு எதனுடனும் ஒப்பிட இயலுமோ?; தூய்மையானவர்களுடன் கொள்ளும் நட்புணர்வு ஸ்வர்கத்தில் கிடைக்கும் இன்பத்தை விடப் பன்மடங்கு அதிகமான ஆனந்தத்தை அளிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன ||97||
அத்தகைய தூய்மையான உள்ளங்கள் இவருடன் பழகினாலும் அவர்கள் இடையே பற்றின்மை எனும் உணர்வும் கைகோர்த்து கொண்டு செல்கிறது என்பதை புரிந்து கொள்; உதாரணத்திற்கு உன்னையே பார்; நான் கேட்ட ஒரே ஒரு கேள்வியின் மூலம், உன்னுடைய அனைத்து உள்ளார்ந்த ஆற்றல்களையும் நீ உள்நோக்கிப் பார்த்து உள்ளாய் ||98||
தன்னை உணர்தலும் தன்னை அறிதலும் அதன் விளைவாகும்; நீ தவறான அடையாளத்தையும் பொய்யான பற்றையும் கைவிட்டு விட்டாய்; இந்த செயல் பலத்த காற்றில் பறந்து செல்லும் இலைகளைப் போன்றது ||99||
அறியாமையை வேராகக் கொண்டது, வீண் பெருமை அல்லது தவறான அடையாளம் ஆகும் ; அவை முளை விடும் போது மீண்டும் உணர்வுகளுக்கு வழி வகுக்கிறது; பின்னர் தவறான உடைமை மற்றும் பற்றுதல் எனும் கிளைகள் முளைக்கின்றன; அதன் பின்னர் செல்வம், நிலம் மற்றும் வீடுகள் மீது பற்றுதல் தொடர்கின்றன ||100||
அதன் பிறகு மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் எனும் புதிய இலைகள் உறவினர்களாக உருவாகின்றன; அதுவே புண்ணிய மற்றும் பாவச் செயல்களுக்கு வழி வகுக்கிறது; சித்தரிக்கப்பட்ட இந்த மரத்தின் விளைவு அல்லது கனிகள் உலக இன்பம் அல்லது துன்பம் ஆகும்||101||
உலகப் பற்று எனும் மரம் அத்தகையதுதான்; அது உண்மையில் என்ன என்பதையும் அதற்கான விடுதலைக்கான பாதையையும் பார்; அவை எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும், மனதை மயக்கும் அனைத்தையும் எவ்வாறு துறப்பது என்பதையும் பார்; ஏனெனில் எதோ ஒன்றின் மீதான மயக்கம் ஏற்பட்டு விட்டால் அது எப்படி உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டு தர முடியும் ?’ ||102||
அனைத்தின் மீதும் முழுமையான பற்றின்மை எனும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, உலகியல் எனும் மரத்தை அதன் அடிவாரத்திலிருந்தே வேரோடு பிடுங்கி எறியுங்கள்; அவ்வாறு வெற்றிகரமாகச் செய்தவர்கள் அனைவரும், மகிழ்ச்சி தரும் விடுதலை எனும் நேர்மையான பாதையில் செல்லாத துவங்குவார்கள் ||103||
அத்தகைய வீரர்களால்தான் பரம நிலையை அடைய முடியும்; அத்தகைய முயற்சியே மகிழ்ச்சியான ஓய்வை தரும்; அந்த நிகழ்வு தூய அத்வைதத்தை உணர்வு பூர்வமாக அறிவதில் இருந்து தொடங்குகிறது; பின்னர் அந்த நிலையில் தொடர்ந்து பயணிக்க உதவுகின்றது ||104||
இராஜ்யங்கள், கிராமங்கள் மற்றும் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிணைந்த பரமாத்மனால் தோற்றுவிக்கப் பட்டவைகளே; அவற்றில் அசைபவை அசையாதவை , உணர்வுள்ளவை மற்றும் உணர்வற்றவை போன்று எவை இருந்தாலும், அவை அனைத்தும், மாயை என அறியப்படும் முதன்மையான மறைக்கும் சக்தியின் செயலால் பிணைக்கப்பட்டுள்ளன ||105||
உடல், உறுப்புகள், புலன்கள் மற்றும் மனதை ஒன்றிணைத்து இயங்க வைக்கும் பிராண சக்தி அல்லது சூட்சும உடல் (Subtle Body) போன்றவை நிலையானவை அல்ல; அவை பிறப்பு, வளர்ச்சி, மாற்றம் மற்றும் இறப்பு எனும் காலவரையறைக்கு (Time-bound) உட்பட்டவை ஆகும்; மாற்றத்திற்கு உட்பட்ட உடலுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், உடல்கள் அனைத்தையும் அறியும் அழியாத ஆத்ம சாராம்சத்துடன் (Self) தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர், நித்தியமான அமைதியையும், உண்மையான மன நிறைவையும் (Bliss/Ananda) அடைகிறார்||106||
அத்தி மரத்தைச் சுற்றியுள்ள பூச்சிகளும், மீன்கள் தாங்கள் வாழும் நீரிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றனவோ, அவ்வாறே எல்லாவற்றிற்குள்ளும் இருக்கும் உள்ளார்ந்த ஆத்மாவும் வேறுபடுகிறது, இதை நீ உணர்வு பூர்வமாக அறிந்திருக்கிறாய் ||107||
அருளின் ஒரு சிறு பார்வையினாலேயே நிறைவை அடையக் கூடிய, விடா முயற்சியுள்ள சீடர்களுக்காக குருமார்கள் ஏங்குகிறார்கள்; இல்லையெனில், தற்கால குரு-சிஷ்ய உறவில் சேவை பெறும் விருப்பம் மட்டுமே வெளிப்படுகிறது ||108||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் முப்பத்தி ஒன்றாவது (31) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை:108
முதலாவது அத்தியாயம் முதல் முப்பத்தி ஒன்றாவது (31) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108+3248 = 3356
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -10, அத்தியாயம் -31 முடிவடைந்தது
பாகம் -11, அத்தியாயம் -32 தொடர்கின்றது