COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION
பாகம் –11
அஷ்டாங்க யோக தத்துவம்

அத்தியாயம் 32
அலர்கனுக்கு தெய்வீக தத்துவத்தை போதித்தல்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
சீடன் தீபக் தன் குருவான வேத தர்மாவிடம் வினவினான் ‘அலர்கன் இறைவனின் அருளைப் பெற்று, உண்மையான நிறைவை அனுபவித்தான்; அதன் பின் என்ன நிகழ்ந்தது?; அவன் எத்தகைய நிலையை அடைந்தான் என்பதை எனக்கு விரிவாகக் கூறுங்கள் ||1||
குரு வேத தர்மா பதிலளித்தார் ‘தீபக், இறைவன் ஸ்ரீமத் தத்தாத்ரேயர், அலர்கனிடம் ஒரே ஒரு கூர்மையான கேள்வியை மட்டும் கேட்டு, அவனுக்குத் தேவையான ஞானத்தைப் பெறச் செய்தார்; அது அவனுக்கு ஞான சூரியன் உதித்தது போலிருந்தது ||2||
அலர்கன் மேலும் வினவினான் ‘இறைவா, இன்று தாங்கள் என்னை முழுமையாக ஆசீர்வதித்துள்ளீர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை; நான் மிகுந்த மன நிறைவு அடைந்துள்ளேன்; என் உணர்வு நிலைகளை இனியும் எந்தத் துன்பமும் அண்டாதவாறு இருக்கும் வகையில் முழுமையான ஆனந்தத்தை அடைந்துள்ளேன் ||3||
எனது உண்மையான, களங்கமற்ற சுய ரூபத்தை மெய்யாகவே உணர்ந்ததால்தான், பிரிவினையையும் மயக்கத்தையும் ஏற்படுத்தும் எனது அகங்காரத்திலிருந்து அந்தச் சுய ரூபத்தைப் பிரித்தறிய என்னால் முடிந்தது; இந்த அகப் பார்வையையும் அனுபவத்தையும் பெறுவதற்காகவே, தொன்று தொட்டு முனிவர்கள் கடும் தவம் இயற்றி வருகின்றனர் ||4||
யுகங்கள் பல கடந்தாலும், அந்த உயர்ந்த அனுபவம் ஞானமற்றவர்களை ஏமாற்றியே வருகிறது; ஓ இறைவா, அத்தகைய அந்தரங்கமான ஆத்மா வை பேதமற்ற தூய நிலையில் இருந்தவாறு நான் உணர்வு பூர்வமாக அனுபவிக்க தாங்களே அருள் புரிந்து உள்ளீர்கள்||5||
போற்றி, போற்றி, உலகத்தின் நாயகனே போற்றி, போற்றி; நான் என் சிரத்தைத் தங்கள் திவ்ய பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்; இப்போது நான் வேண்டுவதெல்லாம் இதுவேதான், ஓ சர்வ வல்லமை படைத்த இறைவா, என் பிரார்த்தனையைக் கேட்டருள்வீராக ||6||
நான் இப்போது உணர்ந்துள்ள இந்த உயர்ந்த ஞான நிலையை, நான் எவ்வாறு நிலை நிறுத்திக் கொள்வது?; ஏனெனில், இன்னும் முளை விடாத ஆசைகள் மற்றும் விருப்பங்கள் என்னும் காடு மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது; அதிலிருந்து வீசும் காற்று, எனது உணர்வு நிலைகளைத் தன் வயப்படுத்தி தன்னை நோக்கி இழுத்துச் செல்கிறது ||7||
அந்த உலகியல் காற்றுகளின் வேகம் எத்துணை வலிமையானதென்றால், நாம் சற்றும் எதிர்பாராத வேளையில், எங்கும் நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருளைப் பற்றிய ஞானம் நம்மிடமிருந்து விலகிச் சென்று விடுகிறது; இந்த ஞான நிலையை நான் எக்காலமும் விடாமல் என்னுள் பற்றி வைத்துக் கொள்ள என்ன செய்வது ||8||
சிற்றறிவு கொண்டவர்களுடனும், இழிந்தவர்களுடனும் நான் பழக நேர்ந்தாலும் கூட, அவர்களால் நான் சற்றும் பாதிக்கப்படாமல், எவ்வாறு அந்த ஞான நிலையிலேயே நிலைத்திருக்க முடியும்?; பிறருடைய சகவாசத்தால் சற்றும் தீண்டப்படாமலும், பாதிக்கப்படாமலும் நான் எவ்வாறு இருக்க இயலும்?; அந்த ‘விழிப்புணர்வுடன் கூடிய ஒருமைப்பாடு’ நிலையை அடைவதற்கான வழியை எனக்குக் கருணை கூர்ந்து போதித்தருளும்||9||
மானிடப் பிறவியை அடைந்ததாலேயே, அந்த ‘விழிப்புணர்வுடன் கூடிய ஒருமைப்பாடு’ நிலையை அடைவதும், அதை அனுபவிப்பதுமே மனித குலம் அனைத்திற்கும் உரிய தலையாய குறிக்கோளாகும்; இல்லையேல், இந்த மனிதப் பிறவி வீணாகி விடும்; வெறும் புலன் இச்சைகளில் சிக்கித் தவித்து, பயனற்றுப் போய் விடும்||10||
பல்வேறு உயிரினங்களில், பல பிறவிகள் எடுத்து அலைந்து திரிந்த பிறகே, நற் கர்மங்களின் பயனாகவோ அல்லது நல் விதியின் துணையாலோ ஒருவன் மானிடப் பிறவியை அடைகிறான்; அப்படியிருக்க, நாம் செய்யும் அனைத்துச் செயல்களும் அந்த ‘ஆத்மா வை’ உணர்வதற்குப் பதிலாக, அதை மேலும் களங்கப்படுத்துவதாக அமைவது ஏன்? ||11||
நரக லோகத்தில் ஒருவன் அனுபவிக்கக் கூடிய இன்பங்கள் அனைத்தும், இந்த மனிதப் பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்பங்களைப் போன்றவையே ஆகும்; எனவே, அந்த இன்பங்கள் அனைத்தின் மீதும் ஒருவன் பற்றற்று இருக்க முடியா விட்டால், அவற்றுக்குத் தேவையான துறவு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள முடியாவிட்டால் என்ன செய்வது ||12||
ஒருவன் எதனாலும் பாதிக்கப்படாத அந்த ‘சமநிலை’யை அடைய முடியா விட்டால், அவனது வாழ்வு அனைத்தும் வீணாகி விடும்; அது தூய ஆத்ம நிலையின் சிதைவாகவே அது அமைந்து விடும்; உலகியல் மீதான பற்று எனும் நோய் எங்கும் பரவியுள்ளது; அதுவே அனைத்தையும் ஆட் கொள்ளும் வல்லமை படைத்ததாகவும், எவராலும் தடுக்க முடியாததாகவும் திகழ்கிறது||13||
இதுவே உண்மை என்று நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், ஒவ்வொருவரும் இதைத் தங்கள் நனவு நிலையிலோ அல்லது ஆழ் மனத்திலோ ஏற்றுக் கொண்டிருந்தாலும், மற்றவர்களைப் போலவே நானும் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண இயலாதவனாகவே உள்ளேன் என்பதாகவே உணர்கின்றேன்; எனவே, இறைவா, தாங்கள் என் மீது கருணை கொண்டு, இதற்குரிய விளக்கத்தை எனக்கு அருளுமாறு வேண்டுகிறேன் ||14||
மனித குலம் அனைத்திற்கும் பொருந்தக் கூடிய இந்த கேள்வியை அலர்கன் எழுப்ப அத்ரி முனிவரின் திரு மகனான இறைவன் பின்வருமாறு பதிலளித்தார் ‘அலர்கா, நீ எழுப்பிய கேள்வி மிகவும் முக்கியமானது ; உண்மையை விரிவாக, விரைவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற உனது ஆர்வத்தைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன்||15||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘ஸ்ருணுஷ்வாவஹிதோ-அலார்க்க முக்தயே காரண த்ரயம்; தத் ஞானம் மனோபங்கோ வாஸனாக்ஷய ஏவ ச’;
இதன் அர்த்தம், ‘அலர்கனே! கவனமுடன் கேட்பாயாக; முக்தி அடைவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. அவை: தத்துவ ஞானம், மனதை அடக்குதல் (மன அழிவு) மற்றும் வாசனைகளை (ஆசைகளின் பதிவுகளை) ஒழித்தல் ஆகும்
{இந்த தத்துவம் பல முக்கிய உபநிடதங்களில் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது; இந்த ஸ்லோகம் நேரடியாக மார்க்கண்டேய புராணம் அல்லது வித்யாரண்யரின் ஜீவன் முக்தி விவேகம் போன்ற நூல்களில் அலர்க்க மன்னனின் கதையோடு வந்தாலும், இதன் மையக் கருத்தான தத்துவ ஞானம், மனோ நாசம், வாஸனாக்ஷயம் ஆகிய மூன்றும் முக்திக்கு அவசியம் என்ற கோட்பாடு பல உபநிடதங்களின் சாரமாக விளங்குகிறது} ||16||
ஸ்ரீமத் தத்தர் தொடர்ந்து கூறினார் ‘ஓ அலர்கா, பின்வரும் வழிகளின் மூலமாகவே முக்தி எனும் விடுதலை அடையப்படுகிறது; முதலாவதாக, எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மனை பற்றிய ஞானத்தைப் பெறுதல்; இரண்டாவதாக, மனதின் சஞ்சலத் தன்மையைக் கட்டுப்படுத்துதல்; மூன்றாவதாக, எண்ணற்ற விருப்பங்கள், மனம் போன போக்கில் எழும் எண்ணங்கள் மற்றும் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆசைகளின் குவியலை வென்று கடந்து செல்லுதல் ||17||
ஒருவன் தனது வாழ்வின் நிலைக்கு (ஆசிரம தர்மத்திற்கு*) ஏற்றவாறும், தனது சமூக நிலைக்கு (வர்ண தர்மத்திற்கு**) ஏற்றவாறும் உரிய கடமைகளைச் செய்து வரும் போது, அவற்றுக்கான பலனைச் சிறிதும் எதிர்பார்க்காமல், மிகுந்த பக்தியுடனும் சிரத்தையுடனும் அவற்றை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து எவன் ஒருவன் கடைப் பிடித்து வருகிறானோ அத்தகைய மனிதன், தேவையான ஆன்மீகத் தூய்மையை அடைவதாகக் கூறப்படுகிறது.
{* (i) ஒரு மனிதனின் ஆயுள் காலம் நூறு ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால் , முதல் 25 ஆண்டுகளில் மாணவனுக்குரிய நடத்தையையும், அடுத்த 25 ஆண்டுகளில் குடும்ப வாழ்க்கையில் உள்ளவனின் நடத்தையையும், 51 முதல் 75 வயது வரை துறவிக்குரிய நடத்தையையும், கடைசி கால் பகுதியில் (76-100) சன்யாசிகளுக்கு உட்பட்ட நடத்தையையும் கடை பிடிப்பதே ஒருவரின் ‘ஆசிரம தர்மம்’ என்று கூறப்படுகிறது; **(ii)அதேபோல, ஆசிரியர்கள், போர் வீரர்கள், வணிகர்கள் எனப்படும் மூன்று பிரிவினரும் அவரவர்களுக்கு உரிய கடமைகளைச் செய்வதே ஒருவரின் ‘வர்ண தர்மம்’ என்பதாகும்} ||18||
ஒரு வேளை உங்கள் மனம் ‘இத்தகைய செயல்களால் என்ன பயன்?’ என்று கேள்வி எழுப்புமானால், தவறான, அடிப்படை உண்மை அற்ற வாதங்களுக்கு அழைத்துச் செல்லும் அத்தகைய தடைகளைத் தகர்த்து ஏறிய வேண்டும் ; இதுவே நான் உனக்கு கூறும் உண்மையாகும்’ ||19||
சமஸ்கிருத செய்யுள்: ‘மஹா-பாப-வதாம் ந்ருணாம் ஞான-யக்ஞோ ந ரோசதே,
ப்ரத்யுத ஞான-யக்ஞஸ்து த்வேஷ்யோ பாஸதே ஸ்வத’
இதன் அர்த்தம் என்ன என்றால் ‘மகா பாவங்களைச் செய்த மனிதர்களுக்கு ஆத்ம ஞானம் பற்றிய விளக்கத்தைக் கேட்கவோ அல்லது கேட்டதை பகிர்ந்து கொள்வதோ பிடிப்பதில்லை; அதற்கு மாறாக அவர்களுக்கு ஆன்மீக ஞானம் தேவையற்ற ஒன்றாகவும், தங்களுக்கு எதிரான ஒன்றாகவும் தோன்றும்’
{இந்த ஸ்லோகம் பத்ம புராணம் (Padma Purana) மற்றும் ஸ்கந்த புராணம் (Skanda Purana) ஆகியவற்றின் சில பகுதிகளில், குறிப்பாக ‘கீதா மகாத்மியம்’ (Gita Mahatma) என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது} ||20||
ஒருவன் பாவக் குவியல்களால் சூழப்பட்டிருக்கும் போது, அறம் சார்ந்த அறிவுரைகளையோ அல்லது நன்மை பயக்கும் அறிவையோ பெறுவதில் அவனுக்குச் சிறிதும் விருப்பம் இருப்பதில்லை; மாறாக, அத்தகைய மக்கள் மனதளவில் ஆன்மீக அறிவுரைகள் மீது தீவிரமான வெறுப்பையே கொண்டிருப்பார்கள் ||21||
ஒருவன் தன் வயதுக்கும் வாழ்க்கையின் நிலைக்கும் ஏற்றவாறு விதிக்கப்பட்ட தர்ம நெறிகளின்படி செயல்பட்டு, அச் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் போது, அவனது அறிவாற்றல் தேவையான தகுதியை அடைகின்றன; அதன் பிறகு, ஆன்மீகச் சொற் பொழிவுகளைக் கேட்பதில் அவனுக்குத் தொடர்ச்சியான விருப்பம் உண்டாகிறது||22||
சமஸ்கிருத செய்யுள்: ருச்சி-த்வாரோப்-குர்வந்திகர்மாந்யாத்மா விமுக்தயே, அக்ஜ்யான்சாயாவிரோதி த்வான்ன ஸாக்ஷாத்-ஆத்மபோத்வத்’
இதன் அர்த்தம் என்ன என்றால் ‘மனிதர்கள் தங்களின் விருப்பத்தின் காரணமாக (மோட்சத்தை அடைவதற்காக) பல்வேறு ஆன்மீக மற்றும் உலகியல் கடமைகளைச் (கர்மாக்களை) செய்கிறார்கள்; ஆனால், இந்த கர்மாக்கள் அறியாமையை நேரடியாக அழிக்க முடியாது, ஏனென்றால் அவை அறியாமைக்கு எதிரானவை அல்ல; ஆத்ம ஞானம் (தன்னை அறிதல்) மட்டுமே அறியாமையை நேரடியாக அழித்து முழுமையான விடுதலையைத் தரும்||23||
அவித்யாயா ந யோச்சித்தௌ ஞானாத்-அன்யத்-அபேக்ஷதே, ஞானோத்பத்தௌ து நைவான்யத்-சமாதிப்யோ ஹி-அபேக்ஷதே’
இதன் அர்த்தம் என்ன என்றால் அறியாமையை (அவித்யையை) அழிப்பதற்கு, ஞானத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. ஆனால், அந்த ஞானம் நமக்குள்ளே தோன்றுவதற்கு, தியான நிலையைத் (சமாதியைத்) தவிர வேறு எதுவும் தேவையில்லை; சுருக்கமாகச் சொன்னால், அறியாமை நீங்க ஞானம் வேண்டும்; அந்த ஞானம் சித்திக்க ஆழமான தியானம் (சமாதி) வேண்டும்.
{இந்த ஸ்லோகம் ஆதி சங்கராச்சாரியாரின் ‘உபதேச சாஹஸ்ரி’ (Upadeshasahasri – Prose section 1.5) அல்லது அத்வைத வேதாந்த நெறிமுறைகளில் இருந்து நேரடியாக வருகிறது.} ||24||
‘சமாதி-உத்பத்தயே நாந்ய சித்-சித்தர்-அபேக்ஷதே; சித்த-சுத்தி ச நித்யாதி-கர்மப்யோ நாந்யதிஷ்யதே’*
இதன் அர்த்தம் சமாதி நிலையை அடைவதற்கு மனத் தெளிவை (சித்த நிலை) தவிர வேறு எதுவும் தேவையில்லை; அந்தச் சித்தத் தூய்மையானது (மனத் தூய்மை) நித்திய கர்மங்கள் (தினசரி கடமைகள், நற்செயல்கள்) செய்வதன் மூலமே உண்டாகிறதே தவிர, வேறு வழிகளில் உண்டாவதில்லை.
{*இந்த சமஸ்கிருத ஸ்லோகம் அத்வைத வேதாந்த தத்துவங்களை விளக்கும் மிக முக்கிய நூலான “வேதாந்த சாரம்” (Vedanta Sara) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூலை இயற்றியவர் சதானந்த யோகிந்திரர் (Sadananda Yogindra) ஆவார்}||25||
‘பாரம்பரியேண கர்ம ஏவம் ஞானாயைவ உபயுஜ்யதே; சித்த-சுத்தர்-அனுதையே சமாதிர்-ந விமுச்யதே’*
இதன் அர்த்தம் பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்வது; இது மனதிலுள்ள காம, குரோத, லோப, மோக போன்ற அழுக்குகளை நீக்கி மனதை தூய்மைப்படுத்துகிறது ; தூய்மையான மனதில் தான் ஞானம் (ஆத்ம ஞானம்) நிலை பெறும்; ஞானம் நிலை பெற்றவுடன், சமாதி (பரமாத்மாவுடன் ஒன்றிணைந்த நிலை) நிலைக்கின்றது
{*இந்த சமஸ்கிருத ஸ்லோகம் அத்வைத வேதாந்தத்தின் (Advaita Vedanta) முக்கியக் கொள்கையை விளக்குகிறது} ||26||
ஆகவே, ஞானத்தைப் பெறுவதற்கான ஆசையை துளிர்க்கச் செய்யும் நற்செயல்களின் மீது பற்றுதல் கொள்வதே சிறந்தது; மாறாக, அத்தகைய நற்செயல்கள் அறியாமையை வளர்க்கும் மனம் போன போக்கிலான செயல்களுக்கு முரணாக அமையவில்லை எனில், தூய ஞானம் அருளும் அந்த ஆத்ம விடுதலையை ஒருவன் ஒரு போதும் அனுபவிக்க மாட்டான்||27||
ஒருவன் அறியாமையை வெல்லும் போது மட்டுமே அவனால் ஆத்ம விடுதலையைப் பெற முடியும்; தூய ஞானத்தின் துணையோடு மட்டுமே அறியாமையை வெல்ல முடியும்; இந்த கோட்பாடுகள் அனைத்தும் எவ்வித ஐயத்திற்கு இடமின்றி உண்மையானவையே ||28||
மேலும், மனதின் இச்சைகளையும் புலன்களின் விருப்பங்களையும் ஒழுக்கத்துடன் கட்டுப்படுத்துவதன் மூலம் சம நிலை என்ற அனுபவத்திற்கு வழி வகுக்கும் ஞானத்தை ஒருவரால் பெற முடியும்; ஏனெனில் ஒருவரின் உணர்வுத் திறன்கள் தூய்மையாக இருக்கும்போது அத்தகைய கட்டுப்பாடு சிரமமின்றி அமைகிறது ||29||
அத்தகைய தூய்மையான உணர்வுத் திறன்களை ஒருவர் எவ்வாறு பெற முடியும்? ஒருவரின் வயதுக்கும் வாழ்க்கை நிலைக்கும் ஏற்றவாறு விதிக்கப்பட்ட செயல்களை பின்பற்றி நடப்பதின் மூலமே அதை அடைய முடியும்; பண்டை காலம் முதலே அத்தகைய செயல்பாடுகள் மட்டுமே வெற்றி தரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது; எனவே ஒருவர் அவ்வாறு செயல்பட வேண்டும், ஏனெனில் அவை ஒருவர் தேடும் ஞானத்தைப் பெற உதவுகின்றன’ ||30||
ஒருவர் தமது அகத்துக்குள் தூய்மை அடைந்து விட்டால், எளிதாக பற்றின்மை நிலையை அடைந்து பெற்று, தான் விரும்பியதை பெற முடியும்; இந்த நோக்கத்திற்காக உறுதியான, தீர்மானமான, உணர்வு பூர்வமான உறுதியுடன், ஞானம் பெற்ற குருவிடம் அடைக்கலம் ஆகா வேண்டும் ||31||
அத்தகைய குருவைத் தேடிக் கண்டறிந்த பின், அவருக்குச் சேவை செய்ய வேண்டும்; அவர் வேத அறிவின் கோட்பாடுகளை போற்றுவதைக் கேட்க வேண்டும்; அதன் பின், தான் கேட்டவற்றைப் பற்றி, குறிப்பாக அன்வயம்* அதாவது ஒற்றுமை அல்லது ஒத்த கருத்து நிலை மற்றும் வ்யாதிரேகம்** அதாவது முரண்பட்ட கருத்துகளை குறித்து தொடர்ந்து சிந்திக்க வேண்டும்.
{*(i) அன்வயம் என்ற சொல் ஒரு பொருள் இருக்கும்போது மற்றொரு பொருள் இருக்கும் என்ற நிலையை குறிக்கிறது – மணிகளைப் பிணைக்கும் நூல் இருந்தால் மட்டுமே மணிமாலை இருக்கும்; நூல் இல்லாமல், மணிமாலை இல்லை என்பதே அன்வயம்;
**(ii) வ்யாதிரேகம் என்ற சொல் முரண்பாட்டைக் குறிக்கிறது, உதாரணமாக, கடவுளின் புகழை சூரிய/சந்திரனுடன் ஒப்பிடும்போது, சூரியன் ஒளியற்றதாகவும் சந்திரன் கறையுடையதாகவும் தோன்றுவது வ்யாதிரேகம் எனும் நிலை ஆகும்} ||32||
ஒருவன் தன் நாவின் நுனியில் அறிவைப் பெறக் கூறியதற்கு, தொடர்ச்சியான படிப்பும் தியானமும் தேவைப்படுகிறது; அது நிலை பெற்று விடும்போது, அலை பாயும் மனம் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை; மேலும் தேவை அற்ற ஆசைகள் அனைத்தும் வேரோடு பிடுங்கி எறியப்படும் ||33||
யோகாவின் ஒரே நோக்கம் என்ன என்றால் மூன்று இயற்கை குணங்களால் தீண்டப்படாமல் இருப்பதும், அதன் மூலம் தெய்வீகத்தை உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ளும் நிலையை அடைவது ஆகும்; பற்றற்று இருப்பதும், வேறு எந்த விதத்திலான துணையும் இன்றி இருப்பது இந்தச் செயலுக்கு உதவுகிறது||34||
தேவை அற்ற சகவாசத்திலிருந்து விடுபட துறவு உதவுகிறது; அத்தகைய பற்றின்மையை அடைய அறிவாற்றல் உதவுகின்றது ; விவேகம் அறிவாற்றலையும் அனுபவப் பூர்வமான ஞானத்தையும் பெற உதவுகிறது; உண்மையையும் பொய்யையும் அடையாளம் காணும் திறனைத் தருகின்றது ||35||
உடல், புலன்கள், மனம் மற்றும் சுவாசம், வெளித் தெரியாத அகங்காரம், புத்தி மற்றும் உணர்வு பூர்வமான சிந்தனைகள் , அவை அனைத்தும் பூத உடலில் உள்ளவை; அவை அனைத்தும் தூய்மை, செயல்பாடு மற்றும் சோம்பல் ஆகிய மூன்று இயற்கை குணங்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகக் கூடியவை ||36||
எதன் மூலம் ஒருவர் அறிவைப் பெற முடியுமோ அது உண்மை; ஆத்மாவைப் போலவே தோற்றமளிக்கும் வெளித் தோற்றம் எவ்வளவுதான் கவர்ச்சிகரமாக தோன்றினாலும் அது நிச்சயமாக உண்மையற்றதே ஆகும்; உண்மையில் ஆத்மா வாக இல்லாத அந்த வெறும் உடல் மற்றும் அதன் உணர்வுகள் அனைத்தும், இறுதியில் உண்மையானவை என்பது புலப்படும் ||37||
அதற்கு காரணம் என்னவென்றால், அவை தாமாகவே ஜடத் தன்மை வாய்ந்தவையாகவும், ஒன்றையொன்று சார்ந்தும், ஒன்றுக்கொன்று உதவியாகவும் இருப்பதால்* ஒருவன் தனது உயர்ந்த ஞான நிலையால் அவற்றை இனம் கண்டு கொள்கிறான்; அதாவது ஒரு இரும்பு உருண்டை கறுப்பாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்; ஆனால் அதை நெருப்பில் போட்டால், அது சிவந்து நெருப்பைப் போலவே வெப்பத்தையும் ஒளியையும் தரும்.
{*அதாவது நமது உடல், புலன்கள் மற்றும் மனம் ஆகியவை இயற்கையிலேயே ஜடமானவை; அவற்றுக்குத் தானாக இயங்கும் திறன் இல்லை} ||38||
உடலும் அதன் பிற கூறுகளும் ஜடத் தன்மை வாய்ந்தவையே; ஆயினும், உள்ளிருக்கும் ஆத்மா விற்கு மிக அருகில் இருப்பதால், அவையும் ஒருவனது உணர்வு நிலையால் அறியப்படுகின்றன; ஆனால், அறிவாற்றல் இல்லாதவர்களினால் அந்த இரண்டின் வேறுபாட்டைப் கண்டறிய முடிவதில்லை||39||
உள்ளிருக்கும் ஆத்மா வானது, உடலின் அனைத்துக் கூறுகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டது; அது எதனாலும் தீண்டப்படாததாகவும், ஒரு கண்ணாடி போல சாட்சியாகவே நின்று கொண்டு உள்ளது; ஆயினும், உடலையும் ஆத்மா வையும் ஒன்று என தவறாக எண்ணுபவன் உலகியல் வாழ்விலும் அதன் விவகாரங்களிலும் இணைந்து கொண்டு செல்கின்றான் ||40||
இத்தகைய உலகியல் ஈடுபாடு, விருப்பங்களாலும் மனம் போன போக்காலும் தூண்டப்படும் நுண்மையான அகங்காரத்தால் வளர்க்கப்படுகிறது; ஆசைகள் மனதை அமைதியற்ற, நிலையற்ற நிலைக்குத் தள்ளுகின்றன; இதனால் மனிதன் ஓயாத, தீவிரமான செயல்களில் (Action) ஈடுபடுகிறான்; அந்த செயல்களின் விளைவுகள் அவனை உலகியல் சுழற்சியில் சிறைப்படுத்துகின்றன; இதன் விளைவாக, அந்த உயிர் பல்வேறு உயிரினங்களில் பிறப்புகளையும் இறப்புகளையும் கடந்து செல்ல நேரிடுகிறது ||41||
அறியாமையானது பகுத்தறிவின்மையை வளர்க்கிறது; அதுவோ, பிரிவினை ஏற்படுத்தும் அகங்காரத்தை மேலும் மெருகேற்றி வளர்க்கிறது; அதனால் விருப்பு மற்றும் வெறுப்பு எனும் தீவிரமான உணர்வுகள் தோன்றுகின்றன; அவைகளே ஒருவனை நன்னெறியுடனோ, நேர்மையற்ற முறையிலோ அல்லது இவ்விரண்டும் கலந்த வகையிலோ செயல்படத் தூண்டுகின்றன ||42||
அப்படி செயல்படும்போது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன; அவ்விளைவுகள் ஜனன மரண சுழற்சிகளுக்கு அழைத்துச் செல்கின்றன; அப் பிறப்புகளில் ஒருவன் இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அனுபவிக்கிறான்; இத்தகையதே இப் பிறப்பு-இறப்புச் சுழற்சியின் தொடர் ஓட்டம்; இது ஒரு மரபு போல, இடை விடாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது||43||
எங்கும் நிறைந்திருக்கும் அந்த மெய்ப் பொருளைப் பற்றிய அறிவை ஒருவன் பெறும் போது, அவனது அறியாமை அனைத்தும் அழிந்து போகின்றன; அறியாமை விலகிய நிலையில், பகுத்தறிவின்மை எனும் குறையையும் அவன் வெற்றி கொண்டு கடந்து விடுகிறான்||44||
பகுத்தறிவின்மை என்ற நிலை அவனுக்குள் இருந்து விலகியவுடன், தற்பெருமை அல்லது ஆணவம் என்பவைகளை தானாகவே அகன்று விடுகின்றன; அந்த நிலையை எட்டுபவன் விருப்பு-வெறுப்புகளுக்கு (பற்று-வெறுப்பு உணர்வுகளுக்கு) அடிமையாகி செயல்படுவதில்லை ||45||
ஆகவே, மேலே குறிப்பிடப்பட்ட இருமை உணர்வால் தூண்டப்படும் எந்த செயல்களும் நிகழ்வதில்லை; இதன் விளைவாக, இன்பத்தையும் துன்பத்தையும் அறிந்து கொள்வதற்காக ஒருவன் உடலைச் சுமக்க வேண்டிய அவசியமில்லை; இத்தகைய உபதேசம் ஒருவனுக்குள் ஆழமாக நிலை பெற்று விட்ட பிறகு, அவன் முக்தி எனும் பாதையில் பயணிக்கத் தொடங்குகிறான் ||46||
நம்மிடம் அறிவு எனும் ஆயுதத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை; அதைக் கொண்டே மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தையும் வெல்ல முடியும்; அலை பாயும் மனப் போக்குகளும், நிலையற்ற மன விருப்பங்களும் வெல்லப்பட்ட பிறகு, அந்த நிலையில் சென்று விட்டவனை ஆன்மீக அறிவு முற்றிலும் ஆட் கொண்டு விடுகின்றது||47||
மெய்ப் பொருளை உணர வேண்டும் எனில் தனது மனதை முற்றிலும் கட்டுப்படுத்திக் கொண்டு யோகப் பயிற்சிகளைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்; அதன் மூலம் மட்டுமே மனதிற்குள் மறைந்து கிடக்கும், வெளிப்படுத்தப்படாத எண்ணற்ற ஆசைகளை ஒருவனால் அழித்துக் கொண்டு தனது உடலையே ‘நான்’ என்று தவறாக அடையாளப்படுத்திக் கொள்ளாத முக்தி நிலையை அவனால் அடைய முடியும் ||48||
ஆகவே, நீ யோகப் பாதையை ஆழ்ந்து பயிலுமாறு நான் உனக்கு அறிவுறுத்துகிறேன்; அதன் அனைத்துப் படிகளையும், பிரிவுகளையும் நான் உனக்கு விரிவாக எடுத்துரைப்பேன்; அவற்றை முழு கவனத்துடன் கேட்க வேண்டும்; உனது அறிவுத் திறன் முழுவதையும் இந்த வழிகாட்டுதலின் மீது ஒருமுகப்படுத்த முயற்சி செய்; அதன் பிறகு, இதுவரை நீ கண்டிராத மன அமைதியை நீ உணர்வாய் ||49||
மனதிலே சமநிலை தோன்றி, அது அசைவின்றி நிலை பெறும் போது, ஒருவன் யோகப் பாதையை முழுமையாகக் கற்று அறிந்து விட்டான் என்று கூறலாம்; இதனைத் தொடர்ந்து, வாழும்போதே அடையும் ஞானம் அல்லது ஜீவன் முக்தி (Living Enlightenment) எனும் நிலை இயல்பாகவே அடுத்த கட்ட வளர்ச்சியாக அவனுக்குக் கை கொடுக்கும் ||50||
அரசன் அலர்கன் குரு ஸ்ரீமத் தத்தாத்திரேயரிடம் இவ்வாறு வினவினான் ‘மனம் மிகவும் அமைதியற்றதாகவும் அலை பாயும் தன்மையுடனும் உள்ளதே; அத்தகைய இயல்புடைய ஒரு மனத்தால், நிலையான சம நிலையை அடைந்து விட்டதை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? அது சாத்தியமா ?’ ||51||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘யுஜ்யதேவேஷ்டாநாம் வரு-ஆகாசாஷஸ்ய ச கந்தனம், க்ரந்தனம் ச தராங்கந்நாம்நாஸ்தா மநஸி யுஜ்யதே’
இதன் விளக்கம் :- ‘காற்றைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாகலாம்; வானத்தைப் பிரிப்பது அல்லது கட்டிப் போடுவது கூட சாத்தியமாகலாம்; ஏன், கடல் அலைகளின் இயக்கத்தை கட்டிப் போடுவது அல்லது எண்ணுவது கூட சாத்தியமாகலாம்; ஆயினும், இவை அனைத்தையும் விட மனதை வெல்வது என்பது மிகக் கடினமான ஒரு செயலாகும் ||52||
அலர்கனின் கூறியவற்றைக் கேட்டதும், அத்ரி முனிவரின் தெய்வ திரு மகனான இறைவன் இவ்வாறு பதிலளித்தார் ‘நீ கூறியது முற்றிலும் உண்மையே, அமைதியற்று அலை பாயும் இந்த மனம், உண்மையில் ஒரு மிகக் கொடிய எதிரியே ஆகும்||53||
பற்றின்மை அல்லது இடை விடாத பயிற்சி இவைகளே வெற்றியை உறுதி செய்யும் வழிகளாகும்; ஆயினும், துறவு நெறி இதில் சிறப்பான பயன் தருவதாகும்; ஏனெனில், அது மனதை ஒருமுகப்பட பெரிதும் துணை புரிகிறது ||54||
நம்முடைய புலன்கள் (கண், காது, மூக்கு போன்றவை) எப்போதும் வெளிப்படையான இன்பங்களையே தேடுகின்றன; அவை நிலையற்றவை மற்றும் மாயை என்பதை முதலில் உணர்ந்து கொள்; சிற்றின்பங்களும், தேவையில்லாத பற்றுகளும் நம்மை உண்மையான அமைதியிலிருந்து தள்ளி வைக்கின்றன என்பதை உணர்ந்து கொள்; அவற்றிலிருந்து விடுபட வேண்டும் எனும் பேராவலை வளர்த்துக் கொள்; அவ்வாறு விடுபடப் போராடும்போது எழும் மனக் கலக்கத்தைத் தணிக்க, தெய்வ நினைவு எனும் கருவியை பயன்படுத்து; அப்படிப்பட்ட செயல் முழுமையாக நிறைவேறி, மனக் கலக்கம் வெல்லப்பட்ட பிறகு, உறுதியான பற்றின்மை நிலை தானாகவே கைகூடும் ||55||
அல்லது, யோக நெறியை இடைவிடாமல் பயின்று வா; எட்டு அங்கங்கள் அல்லது படிகளைக் கொண்ட யோக நெறியானது, தீயோர் சேர்க்கையிலிருந்து ஒருவரை விடுவித்த பிறகு, துயரங்களிலிருந்தும் பிரித்து, முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும்||56||
யமம் மற்றும் நியமம் ஆகிய படிகளைக் கொண்டு உடலைத் தூய்மைப்படுத்தியும், ஆசனப் பயிற்சிகளின் மூலம் உடல் உறுதியைப் பெற்றும், பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சிகளால் அனைத்துக் குறைகளையும் எரித்துச் சாம்பலாக்கியும், யோகப் பாதையில் முன்னேறுவதற்கு ஏற்ற தகுதியுடைய உடலை ஒருவர் உருவாக்கிக் கொள்ள வேண்டும்||57||
பிரத்யாஹாரம் என்பது ஒரு ‘ஆமை’ தன் ஓட்டிற்குள் சுருங்கிக் கொள்ளும் நிலை ஆகும்; அதை போன்று மனதின் புலன்களை சுருக்கிக் கொண்டே இருப்பதின் மூலம் புலன்கள் வெல்லப்படுகின்றன; சிதறிக் கிடக்கும் மனதை ஒரு புள்ளியில் நிலை நிறுத்துவது தாரணை எனப்படும்; அந்த நிலைக்கு சென்று விட்டால் கர்மா நீங்கி விடும்; தியானத்தின் மூலம் மனம் நிலையடைகிறது; இறுதியாக, சமாதி எனும் ஆழ்ந்த பக்தி மயமான சிந்தனை நிலையில், இங்கே ‘நான்’, ‘எனது’ என்ற பேதங்கள் மறைந்து, ஆத்மா இறை உணர்வுடன் இரண்டறக் கலக்கிறது ||58||
தங்கம் மாசு படும்போது, அதை சுத்தப்படுத்த தீயில் போட்டு எடுப்பது வழக்கம்; அவ்வாறு வெப்பத்தால் பக்குவப்படுத்தப்பட்ட தங்கம், மாசுகள் நீங்கி தூய்மையான, ஈடு இணையற்ற பொன்னாக மிளிர்கிறது ||59||
அதைப் போலவே, யோக நெறிகளைப் பயிலும் போது, மனத்தில் குடி கொண்டிருக்கும் அனைத்து மாசுகளும் முற்றிலுமாக சுட்டெரிக்கப்படுகின்றன; மனம் தனது இயல்பான, களங்கமற்ற வடிவத்தை மீண்டும் பெறுகிறது; இதுவே வேத சாஸ்திரங்கள் வெளிப்படுத்தும் உண்மையாகும் ||60||
உள்ளே இழுக்கப்படும் பிராண வாயுவும், கீழே செல்லும் அபான வாயுவும் ஒன்றிணையும்போது, அதுவே பிராணாயாமம் பயிற்சியின் வெற்றியாகக் கருதப்படுகிறது; இப்பயிற்சி முறையின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, ‘நல்ல’, ‘சிறந்த’ மற்றும் ‘மிகச் சிறந்த’ என மூன்று நிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன ||61||
மிகக் குறைந்த அல்லது ‘நல்ல’ தரத்திலான பயிற்சியைச் செய்யும்போது உடல் முழுவதும் வியர்வையில் நனைகிறது; இடைப்பட்ட தரத்திலான பயிற்சியைச் செய்யும் போது உடலில் நடுக்கம் ஏற்படுகிறது; பயிற்சியின் உச்ச கட்டமாக, மூச்சானது தலையின் உச்சிப் பகுதியை (பிரம்மரந்திரத்தை) அடையும்போது, அதுவே ‘மிகச் சிறந்த’ தர்மமாகக் கருதப்படுகிறது; அந்த நிலையிலிருந்து மூச்சோட்டம் நிலையாக தொடரும்||62||
இடது கையால் தாளம் (கைதட்டல்) எழுப்பி, அதை ஒரு முழுச் சுற்றாகச் சுழற்றுவதற்கு (கண் இமைக்கும் நேரம் எனப்படுகின்றது) ஆகும் நேரத்தையே பிராணாயாமத்தின் கால அளவாகக் கொள்ள வேண்டும்; அல்லது, உறக்கத்தின் போது இயல்பாக நிகழும் மூச்சு உள்ளிழுத்தல் மற்றும் வெளியிடுதலின் கால அளவை அடிப்படையாகக் கொள்ளலாம் ||63||
அல்லது, ஆட்காட்டி விரலால் முழங் கால்களை ஒரு முழுச் சுற்றாகச் சுழற்றி, விரல்களால் ஒரு ‘கிளிக்’ (click) ஓசையை எழுப்புவதற்கு ஆகும் நேரத்தையே, இப்பயிற்சி முறையின் கால அளவாகக் கொள்ள வேண்டும்*.
{*ஆள்காட்டி விரலால் முழங்காலைச் சுற்றி வந்து ஒரு சொடுக்கு போடுவது ஒரு தாள கதியைக் குறிக்கிறது; இது மூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) அல்லது தியானத்தின் போது ஒரு சுழற்சியை (Cycle) கணக்கிடப் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய முறையாகும்} ||64||
பிராணாயாமம் பயிற்சியைப் பொறுத்தவரை, பன்னிரண்டு கால அளவுகளைக் (counts) கொண்டிருப்பது ‘மிகக் குறைந்த’ தரத்திலான பயிற்சியாகும்; இருபத்து நான்கு கால அளவுகளைக் கொண்டிருப்பது ‘இடைப்பட்ட’ தரத்திலான பயிற்சியாகும்; நாற்பத்து எட்டு கால அளவுகளைக் கொண்டிருப்பது ‘மிகச் சிறந்த’ தரத்திலான பயிற்சியாகும் ||65||
மூச்சை ஆழமாக உள்ளே இழுப்பது ‘பூரகம்’ எனப்படும்; அவ்வாறு உள்ளிழுத்த மூச்சை உள்ளேயே நிறுத்தி வைப்பது ‘கும்பகம்’ எனப்படும்; நுரையீரலை முழுமையாகக் காலி செய்யும் வகையில் மூச்சை வெளியே விடுவது ‘ரேசகம்’ எனப்படும்; இந்த முழுமையான சுழற்சியே ‘ஒரு பிராணாயாமம்’ என்று அழைக்கப்படுகிறது||66||
மாசு படிந்த தங்கத்தை, தீயில் இட்டு உருக்கித் தூய்மைப்படுத்துவது போலவே மேற் கூறியவற்றிற்கான வழக்கமான விகிதம் 1:4:2 ஆகும்; இதில் மூச்சை உள்ளிழுத்தல் ஒரு அலகாகவும், மூச்சை உள்ளே நிறுத்தி வைத்தல் நான்கு அலகுகளாகவும், நிறுத்திய மூச்சை வெளியே விடுதல் இரண்டு அலகுகளாகவும் கணக்கிடப்படுகிறது; இந்த கால அளவுகள் படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும்||67||
ஒருவர் மூச்சை இயல்பாக வெளியிடாமல், மிக வேகமாக அல்லது வன்மையாக வெளியேற்றினால், அவர் விரைவில் உடல் பலவீனத்தை உணரத் தொடங்குவார்; எனவே, மூச்சை மெதுவாக வெளியேற்ற வேண்டும்; இதுவே உடல் ஆரோக்கியத்தையும் உடற் தகுதியையும் அதிகரிக்க வழிவகுக்கும்||68||
தொடர்ச்சியான மற்றும் படிப்படியான பயிற்சியின் மூலம், ஒருவர் தனது சுவாச ஆற்றலை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்; சிங்கங்களை அடக்கி, அவை தங்கள் எஜமானரின் கட்டளைக்கு கீழ்ப்படியுமாறு பயிற்றுவிப்பவர்கள் கையாளும் முறையும் இதுவே ஆகும்||69||
ஒருவர் மூச்சை வலுக் கட்டாயமாக அடக்க முயன்றால், அது ஒரு போதும் அவருக்குக் கட்டுப்படாது; மெதுவான மற்றும் சீரான பயிற்சியின் மூலமாக மட்டுமே, சுவாசத்தை ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்பச் செயல்பட வைக்க முடியும் ||70||
அடக்கி வைக்கப்பட்ட சிங்கங்கள் எப்படி தங்கள் பயிற்சியாளர்களின் உடலுக்கு எவ்விதத் தீங்கும் விளைவிப்பதில்லையோ, அதேபோல சுவாச ஆற்றல் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் வரும்போது, அது உடலில் குடியிருக்கும் அனைத்து அசுத்தங்களையும் எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது ||71||
அடக்கி வைக்கப்பட்ட சிங்கங்கள் எப்படி தங்கள் பயிற்றுவிப்பாளரின் உடலுக்கு எவ்விதத் தீங்கும் விளைவிப்பதில்லையோ, அதேபோல சுவாச ஆற்றல் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் வரும்போது, உடல் நோய் வாய்ப்படுவதோ அல்லது தனது செயல்பாடுகளை நிறுத்தி விடுவதோ இல்லை ||72||
சீரான பயிற்சியும் ஆழ்ந்த ஆய்வும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது, நற்செயல்கள் மற்றும் தீய செயல்களால் ஏற்படும் கர்ம பந்தங்கள் (வினைத் தொடர்புகள்) விலகிச் செல்கின்றன; அத்தகைய கர்ம விளைவுகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விலக்கும் நிலையே த்வஸ்தி* (Dasti) என்று அழைக்கப்படுகிறது; இது யோகப் பாதையில் பயணிக்கும் சாதகருக்கு ஈடு இணையற்ற மன அமைதியை வழங்குகிறது.
{* கர்ம விளைவுகளை ஒரு சாதகர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அவற்றை முழுமையாக அழிக்கும் அல்லது விலக்கும் உன்னத நிலையே ‘த்வஸ்தி’ (Dhwasti) எனப்படுகிறது. ‘த்வஸ்தி’ என்ற சொல்லுக்கு ‘அழித்தல்’ அல்லது ‘முற்றிலுமாக நீக்குதல்’ என்று பொருள். கர்ம வினைகள் அழியும்போது, மனதில் எவ்வித அலைபாய்தல் இன்றி, சாதகர் ஈடு இணையற்ற, நிலையான பேரமைதியை (Param Shanti) உணர்கிறார்} ||73||
நாம் செய்யும் பெரும்பாலான உலகியல் சார்ந்த செயல்கள், பேராசை, பற்று அல்லது தவறான நம்பிக்கைகள் ஆகியவற்றின் காரணமாகவே எழுகின்றன; மறுவுலக செல்வங்களையும் இன்பங்களையும் தேடுபவர்களுக்கும் இதே நிலை பொருந்தும்; சுவாசப் பயிற்சியின் மூலம், அத்தகைய ஆசைகள் மற்றும் மனக் தூசுகள் அனைத்தும் முழுமையாக விலகிச் செல்கின்றன ||74||
மனதின் செயல்பாடுகளினால் ஏற்படும் அலைபாயும் தன்மைகளும் முழுமையாக அடங்கி அமைதி பெறுகின்றன; அப்போது ஒருவர் தனித்துவமான ஆனந்தத்தை அனுபவிக்கத் தொடங்குகிறார்; இந்நிலையே ப்ராப்தி* (Praapti) என்று அழைக்கப்படுகிறது; இந்நிலையில் யோகி களங்கமற்ற பேரானந்தத்தில் மிதப்பது போன்ற உணர்வைப் பெறுகிறார்.
{* மனதின் அலைபாயும் தன்மைகள் (சிந்தனைகள், அலைகள்) முழுமையாக அடங்கி, அமைதி பெற்று, பேரின்பத்தை உணரும் நிலையை ‘சமாதி’ (Samadhi) அல்லது ‘யோகம்’ என்று அழைப்பதே மரபு. அதையே பிராப்தி என்றும் அழைக்கின்றார்கள்} ||75||
தாரணை, தியானம், சமாதி எனும் மூன்று நிலைகளையும் ஒரே நேரத்தில் ஒரு பொருளின் மீதோ அல்லது கருத்தின் மீதோ செலுத்தும்போது ஞானத்தின் ஆழம் பெருகுகிறது; கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் என அனைத்துக் காலங்களிலும், ஒருவருக்கு உண்மையான செல்வம் எது என்பதை அவர் தெளிவாகப் புரிந்து கொள்கிறார்; சுவாசத்தை வெல்வதன் மூலமும், பிராணாயாம நுட்பங்களின் மூலமும் அடையப்படும் உயர்ந்த நிலையே சம்யமா* (Samyama) என்று அழைக்கப்படுகிறது.
{* சம்யமா (Samyama) என்பது பதஞ்சலி யோக சூத்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு மேம்பட்ட ஆன்மீக மற்றும் தியான நிலையைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்லாகும். இது தாரணை (கவனம்), தியானம் (ஒருமுகப்படு) மற்றும் சமாதி (பேரின்ப நிலை) ஆகிய மூன்று நிலைகளின் ஒருங்கிணைந்த நிலையாகும்.}||76||
ஐம்புலன்களும் அமைதியுற்று, மனம் ஓய்வு பெற்றிருக்கும் தெளிவான நிலையே பிரசாதம்* (Prasaad) என்று அழைக்கப்படுகிறது; விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் சாட்சியாக நின்று நோக்கும் நிலையே இதுவென்று அறிவாயாக.
{* பிரசாதம் என்பது வெறும் உணவுப் பொருள் அல்ல; அது தூய்மையான, அமைதியான மனது தெளிவு பெற்ற நிலை; இன்ப துன்பங்களை சமமாக ஏற்கும் பக்குவமே உண்மையான இறை பிரசாதம்
பிரசாதம் என்பது } ||77||
இந்த நான்கு நிலைகளையும் முழுமையாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற எந்தவொரு சாதகனும், யோக நெறியின் தலைவராக போற்றப்படுகிறார்; தெய்வத்துடன் அவர் இணையும் நிலை வெகு தொலைவில் இல்லை; சொல்லப் போனால், அவர்கள் இருவருமே கை கோர்த்து நடப்பதைப் போன்றே அது அமைகிறது ||78||
இந்த முழுமையான மாற்றத்தை அடைய விரும்புபவர், தகுந்த வழிகாட்டுதலின்படி அமைந்த பாதையிலேயே பயணிக்க வேண்டும்; அதற்கான வழி முறைகளையும், பயிலும் முறையையும் நான் இப்போது உனக்கு விரிவாக விளக்கப் போகிறேன்; இந்த உரையாடலில் உன் முழு கவனத்தையும் செலுத்துவாயாக; அவ்வாறு செய்தால், நீ தேடிக் கொண்டிருக்கும் அமைதியை நீ நிச்சயமாக அடைவாய்||79||
முதலில் ‘பத்மாசனம்’ (தாமரை நிலை) இட்டு அமர்வதைப் பழகிக்கொள்; அதன்பின், உன் உடல், கழுத்து மற்றும் தலை ஆகியவற்றை ஒரே நேர் கோட்டில் நிமிர்ந்து இருக்குமாறு வைத்துக்கொள்; உன் மேல் வாரிசைப் பற்கள் கீழ் வாரிசைப் பற்களைத் தொடாதவாறு பார்த்துக் கொள்; மேலும், உன் பார்வையை மூக்கின் நுனிப் பகுதியிலேயே நிலை நிறுத்தி வை ||80||
ஒருவர் தொடர்ந்து அமைதியற்று, சஞ்சலத்துடன் காணப்படுவாராயின், யோக நெறியின் பலன்களை அடைவதற்கு அவருக்கு அதிக காலம் தேவைப் படும்; உடல் அசைவற்ற நிலையில், நேராக நிமிர்ந்து நின்ற பிறகே, யோகப் பாதையின் அடுத்தடுத்த படிகளை நோக்கி ஒருவர் முன்னேற வேண்டும்||81||
சோம்பல், அதீத உறக்கம் மற்றும் தவறான புரிதல்கள் (மயக்க உணர்வுகள்) ஆகிய அனைத்தும், இயற்கையின் மூன்று குணங்களில் ஒன்றான ‘தாமச’ (Tamas) குணத்திலிருந்து தோன்றுகின்றன; யோகப் பாதையில் எவ்விதத் தடங்கலுமின்றி முன்னேற வேண்டுமாயின், தாமச குணங்களை* தொடக்கத்திலேயே அடக்கி வைக்க வேண்டும்.
{* பிரபஞ்சமும் மனித மனமும் சத்துவம் (தூய்மை), ராஜசம் (தீவிரம்), தாமசம் (மந்த நிலை) ஆகிய முக் குணங்களால் ஆனது. இதில் தாமச குணம் கீழ் நிலையானதாகக் கருதப்படுகிறது; தாமச குணம் (அல்லது தமோ குணம்) என்பது மனிதனின் மனதில் இருள், அறியாமை, சோம்பல் மற்றும் மந்த நிலையை உருவாக்கும் ஒரு பண்பாகும்.
சோம்பல், அதிக நேரம் தூங்குவது, ஆர்வமின்மை, கவனமின்மை, தெளிவற்ற சிந்தனை, காரணமற்ற கோபம், பயம், கவலை மற்றும் தாழ்வு மனப்பான்மை இவை தாமச குணத்தின் தன்மைகள்; மேலும் தவறான வாழ்க்கை முறை, எதற்கும் சோர்ந்து போய் பிறரைச் சார்ந்திருத்தல் போன்றவையும் ஆகும் } ||82||
காமம், சீற்றம் (கோபம்), பேராசை, அர்த்தமற்ற செயல்கள் அல்லது பற்பல செயல்களில் ஈடுபடுதல் ஆகிய அனைத்தும், இயற்கையின் இரண்டாவது குணமான ‘ரஜஸ் ’ (Rajas) குணத்திலிருந்து தோன்றுகின்றன; அமைதியை நாடி நிற்கும் ஒரு சாதகரின் மனதை இவை பெரிதும் அலைக் கழிக்கின்றன; தியானம் தடையின்றி தொடர அவை தடையாக அமைகின்றன; ஆகையால், அந்த குணத்தையும் முழுமையாக அடக்கி வைக்க வேண்டும்’ ||83||
பற்றின்மை, மனதின் சஞ்சலங்களையும் ஐம்புலன்களின் இச்சைகளையும் கட்டுப்படுத்துதல் ஆகிய அனைத்தும், இயற்கையின் முதல் குணமான சாத்விக்*’ (Sattwa) குணத்திலிருந்து தோன்றுகின்றன; அந்த குணங்கள் ஒரு சாதகர் தன் பாதையில் முன்னேறத் துணை புரிகின்றன; மேலும், அப் பாதையின் ஒவ்வொரு அடியிலும் அவர் பேரின்பத்தை அனுபவிக்க அவை வழி வகுக்கின்றன.
{* சாத்விக் (Sattvic) என்பது தூய்மை, உண்மை, அமைதி மற்றும் ஆன்மீக உணர்வைக் குறிக்கும் ஒரு குணமாகும். இந்து தத்துவத்தில் கூறப்படும் மூன்று குணங்களில் (திரிகுணங்கள்) சாத்விக் முதன்மையானது; சாத்விக் குணத்தின் தன்மைகள் அமைதி, மகிழ்ச்சி, அன்பு, கருணை மற்றும் தெளிவான சிந்தனை, நல்ல உணவு முறைப் வழக்கங்கள், நேர்மை, அகிம்சை (தீங்கு செய்யாமை), தியானம் மற்றும் பிறருக்கு உதவுதல் போன்றவை}||84||
வழி காட்டுதலின்படி பயிலும் போது கேவல கும்பகம்* (Keval Kumbhaka) என்று அழைக்கப்படும், மூச்சை எவ்வித முயற்சியுமின்றி இயல்பாகவே நிறுத்தி வைக்கும் நிலையை ஒரு சாதகர் அடையும் வரையில் பிராணாயாமம் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற் கொள்வதற்கு, முன்னரே குறிப்பிடப்பட்டவாறு, ‘மூச்சு உள்ளிழுத்தல் – மூச்சு நிறுத்துதல் – மூச்சு வெளியிடுதல்’ ஆகிய மூச்சு முறைகளையே அவர் பின்பற்ற வேண்டும்.
{*கேவல கும்பகம் (Keval Kumbhaka) என்பது பிராணாயாமத்தின் மிக உயர்ந்த மற்றும் மேம்பட்ட நிலையாகும். இதில், மூச்சை உள்ளிழுக்கவோ அல்லது வெளியேற்றவோ தேவையின்றி, மூச்சு இயற்கையாகவே சில காலம் நின்று விடுகிறது; இதுவே யோகக் கலையின் உச்ச கட்ட ஆன்மீக நிலையான ‘சமாதி’ நிலைக்கு அழைத்துச் செல்லும் திறவு கோலாக கருதப்படுகிறது} ||85||
மூச்சு உள்ளிழுத்தலோ அல்லது வெளியிடுதலோ இன்றி, மற்ற அனைத்திற்கும் இறந்தவரைப் போன்று அமைதியாக அமர்ந்திருக்கையில், மூச்சானது வழக்கமாக நிகழ்வது போல கீழ் நோக்கியோ அல்லது மேல் நோக்கியோ ஓடுவதில்லை||86||
அந்த நிலை ஒரு சாதகனை அச்சுறுத்த வேண்டாம்; கேவல கும்பகம் (Kevala Kumbhaka) எனும் நிலையில் மூச்சு விடும் ஆற்றல் கட்டுப்படுத்தப் படுகிறது; இது அனுபவித்து உணரத் தகுந்த ஒன்றாகும்||87||
இவ்விதம் மூச்சுச் சார்ந்த செயல்பாடுகள் படிப்படியாகக் கடக்கப்பட வேண்டும்; அதன் பின்னரே ஒருவர் பிரத்யாஹாரம்* (Pratyahara) எனும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். அந்த நிலையில்தான், உடலுக்குள் உறையும் ஆத்மா வானது, தனித்துவமான உடலைத் தான் ஏற்றுக் கொண்டதை உணர்கிறது.
{*பிரத்யாஹாரம் என்பது பதஞ்சலி முனிவரின் அஷ்டாங்க யோகத்தில் (எட்டு நிலைகள்) ஐந்தாவது நிலையாகும்; இது வெளிப்புற உலகிலும் தூண்டுதல்களிலும் சிதறும் ஐந்து புலன்களை (பார்வை, கேட்பது, சுவை, தொடுதல், வாசனை) கட்டுப்படுத்தி, மனதை உள்நோக்கி திருப்புவதாகும்} ||88||
ஒரு ஆமை தனது உறுப்புகளைத் தன் ஓட்டிற்குள் எப்படி இழுத்துக் கொள்கிறதோ, அதே போல ஒரு சாதகன் தனது ஐம்புலன்களையும் தனக்குள்ளேயே இழுத்து அடக்கிக் கொள்ளும்போது, அவன் பிரத்யாஹாரம் அல்லது ‘விழிப்புணர்வுடன் கூடிய உள்ளடக்கம் எனும் நிலையில் இருப்பான்; ஆயினும், அந்த நிலையிலும் அவன் தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றியுள்ள சூழலைப் பற்றியும் விழிப்புணர்வுடனேயே இருக்கிறான்||89||
மேற்கூறிய படி நிலையானது அதன் உண்மையான நோக்கத்தின்படி முறையாகக் கடை பிடிக்கப்படுமாயின், ஒருவர் மற்ற எதையும் காது கொடுத்து கேட்காத நிலையில் சென்று விடுவார்; உடல் தொடு உணர்வைக் கூட பதிவு செய்வதில்லை; இவ்வாறு ஒருவர் முழுமையாகத் தனக்குள் மையமடைந்து, வெளிப்புறத்தில் நிகழும் எதைப் பற்றியும் அறியாத நிலையை அடைகிறார் ||90||
அப்போது சாதகர் எந்தப் புலன் தொடர்புகளையும் உணர்வதில்லை; எல்லா உறுப்புகளும் உள்ளே நிலை பெற்று விடும்; இதுவே பிரத்யாஹாரத்தின் நிலை; மேலும் ஆத்மாவை உறுதியாகத் தேடுபவர் அதைத் தானே அனுபவிக்கிறார் ||91||
மேற்கண்டவற்றில் வெற்றி பெற்ற பிறகு, சாதகர் தாரணை நிலைக்கு செல்ல வேண்டும்; அவர் தனது கவனத்தை தொப்புள் போன்ற வெவ்வேறு உடல் பாகங்களில் வரிசையாகக் குவிக்க முயற்சிக்க வேண்டும்; மேலும் உணர்வுத் திறன்கள் வேறு எங்கும் அலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்||92||
அந்த நிலையில் வெற்றி ஏற்படும்போது, எல்லா குறைகளும் விலகிச் செல்கின்றன, யோகி திடமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளதை உணர்கிறார்; கொந்தளிப்பான உணர்ச்சிகளுக்கு அடி பணிவதில்லை ||93||
அடுத்த நிலை தியானம்; ஒருமுகப்படுத்த பயிற்றுவிக்கப்பட்ட உணர்வு; உண்மையான ஓய்வை அறிய உள்ளிருக்கும் ஆத்மாவுடன் தொடர்பு கொள்கிறது; இதுவே அனைத்து வழிகளிலும் சிறந்தது என்று கூறப்படுகிறது||94||
ஒருவர் தான் தியானம் செய்வதை மறந்து, தான் தியானிக்கும் பொருளின் வடிவத்தை எடுக்கும்போது, அல்லது அந்த வடிவம் தானாகவே ஒருவரின் உணர்வில் நுழையும்போது, அதுவே சமாதி எனும் ஆழ்ந்த, ஓய்வான, பக்தி நிலை என்று அழைக்கப்படுகிறது ||95||
மனம் அசைவற்று, இங்குமங்கும் அலையாமல், தியானிக்கப்படும் பொருளுடன் முழுமையாக ஒன்றி விடுகிறது; இரவும் பகலும் அப்படியே நிலைத்திருக்கிறது; இதுவே சமாதி நிலையின் பண்பாகும்||96||
அப்போது சாதகர் எந்த விதமான புலன் சார்ந்த ஆட்டங்களையும் உணர்வதில்லை; அனைத்துப் புலனுறுப்புகளும் உள்ளுக்குள்ளேயே முழுமையாக நிலை பெற்று விடுகின்றன; இதுவே ‘பிரத்யாஹாரம்’ எனும் நிலையினால் விளையும் பயன் மிக்க நிலையாகும்; அப்போது தன் சுயத்தின் வாயிலாக, தனக்குள்ளேயே உறையும் பரம்பொருளை (Self) தரிசிக்கும் நிலையை அடைகிறான்; அத்தகைய உயர் நிலையை அடைந்த ஒரு சாதகன், அதிலிருந்து விலகிச் செல்லவோ அல்லது தான் வந்த இடத்திற்கே திரும்ப வேண்டும் என்ற எண்ணம் கூட எழாத நிலையில் இருப்பான் ||97||
உலகியல் சார்ந்த எவ்விதத் தாக்கங்களும் அற்ற நிலையே ‘சமாதி’ என்று போற்றப்படுகிறது; இதுவே என்றும் குன்றாத ஆனந்தத்தின் ஊற்றாகும்; ஒரு முறை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியப்பட்ட இந்த ஆனந்தத்திற்கு ஈடாக, மூவுலகங்களிலும் வேறெதுவும் இல்லை ||98||
மேற்கூறிய அந்த உயர்நிலை அருளும் பேரின்பத்தை, எவரால் தான் எழுத்து வடிவிலோ அல்லது வேறு வகையிலோ சித்தரித்துக் காட்ட இயலும்?; அந்த ஆத்ம ஆனந்தத்தை ஒருவன் தன் சுய முயற்சியாலேயே நேரடியாக அறிந்து கொள்வதே சிறந்தது; ஏனெனில், அவ்வாறு அறியும்போது மட்டுமே அதனை அவனால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்’ ||99||
அறிந்து கொள்ளத் தகுந்த அனைத்துப் பொருட்களின் சாரமாகத் திகழ்வது இதுவேயாகும்; அந்த சாரத்தை அறியாத நிலையில், மற்ற அனைத்தும் அற்பமானவையாகவே தோன்றும்; அற்பப் பொருட்களிலேயே இன்பம் தேடி அலைபவர்கள், அந்த உயர்ந்த சாரத்தை அறிந்து கொள்வதற்கான முயற்சியை மேற் கொள்ளாதவர்களாக ஆகி விடுவார்கள் ||100||
ஒரு மனிதனின் உள்ளத்தில் எழும் மற்ற உணர்வுகள் அனைத்தும், ஐம்புலன்களின் செயல்பாடுகளோடு தொடர்புடையவை என்பது அனைவரும் அறிந்ததே; ஆனால், இங்கு பேசப்படும் ஆத்ம ஆனந்தம் என்பது ஐம்புலன்களின் சாதாரண எல்லைகளுக்கு அப்பாற்பட்டது; நம்பிக்கையோடு கூடிய, பக்குவப்பட்ட அறிவின் வாயிலாகவே இதனை உணர்ந்து கொள்ள முடியும் ||101||
ஐம்புலன்களின் வாயிலாக கிடைக்கும் இன்பம் காலத்தால் வரையறுக்கப்பட்ட து; அது எளிதில் அழிந்து போகக் கூடியது; எனவே, அந்த இன்பம் எப்போதும் நிலையாகக் கிடைப்பதில்லை என்பதால், ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அதையே நாடி ஏங்கிக் கொண்டிருக்க நேரிடுகிறது ||102||
மேலும், இந்த உலகியல் இன்பம் வெளிப்புற பொருட்களைச் சார்ந்தே உள்ளது என்றும், அது பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது; ஆனால், ஆத்ம ஆனந்தம் என்பது அனைத்துப் பௌதிகப் பண்புகளுக்கும் அப்பாற்பட்டது; எனவே, தன் சுயத்தின் வாயிலாக அந்தப் பரம்பொருளை உணர்வு பூர்வமாகத் தரிசிப்பதின் மூலம் கிடைக்கும் ஆனந்தமே மிகச் சிறந்தது; அதற்கு ஈடாக வேறெதுவும் இருக்க முடியாது||103||
ஆத்ம ஆனந்தம் என்பது ஒருவருக்குள்ளேயே உறையும் அவனது சுயத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது; அதன் மூலம் அது மற்ற எவற்றையும் சாராத, முழுமையான சுதந்திரம் பெற்றதாகத் திகழ்கிறது; ஐம்புலன்களின் வாயிலாக கிடைக்கும் இன்பம் பிறவற்றைச் சார்ந்தே உள்ளது; ஒருவன் வெளிப்புற இன்பங்களிலேயே முழுமையாக மூழ்கிப் போனால், அது இறுதியில் துயரத்தையே காண்பான்; அவ்வாறு வெளிப்புற பொருட்களின் வடிவங்களிலேயே ஒருவன் மூழ்கி இருந்ததால், தன் வாழ்நாள் முழுவதும் அவன் மேற்கொண்டிருந்த ஆன்மீக முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடும் ||104||
ஓ அலர்கா, நான் இப்போதுதான் உனக்கு விவரித்ததைத் தவிர, முக்தி அடைவதற்கு இதை விட எளிமையான வேறு வழி ஏதும் இல்லை; மேலும், அவ்வழி அனைவராலும் எளிதில் எட்டக் கூடியதாகவும் இருக்காது; ஆகையால், நீ ‘யோக மார்க்கத்தை (யோக வழியை) நாடிச் செல்வதே சாலச் சிறந்தது ||105||
யோகப் பயிற்சி சார்ந்த சாதக பாதகங்களை, மிக விரிவாகத் தெரிந்து கொள்வது அவசியமாகும்; அவ்வாறு தெரிந்து கொண்டால் மட்டுமே, அந்த வழி எத்தகைய தன்மைகளைக் கொண்டது என்பதை உணர்ந்து, ஒருவன் மனநிறைவு அடைய முடியும்; இல்லையேல், அவன் மனச் சுமைக்கும் மனத் துயருக்கும் ஆளாக நேரிடும் ||106||
ஒருவன் தான் எடுத்து வைக்க இருக்கும் செயல்களின் நன்மை-தீமைகளை நன்கு உணர்ந்து கொண்டு, அதன் பின் யோக மார்க்கத்தின் விதி முறைகளின்படி தியானம் செய்யத் தொடங்கினால், அந்தச் சாதகன் தான் தேடிய மன அமைதியை நிச்சயம் அடைவான்; இல்லையேல், வழியில் எழும் பல்வேறு தடைகளால் அவன் முயற்சி தடைபடும்||107||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் முப்பத்திரண்டாவது (32) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 107
முதலாவது அத்தியாயம் முதல் முப்பத்திரண்டாவது (32) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
107 + 3356 =3463
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -11, அத்தியாயம் -32 முடிவடைந்தது
அத்தியாயம் -33 தொடர்கின்றது