COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -10 : நீதிநெறி பாதை
அத்தியாயம் 30
அரியணையில் அலர்கன்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா தன் சீடன் தீபக்கிடம் தொடர்ந்து கூறினார் ‘இவ்விதம், மன்னர் தன் மனைவி மதாலஸாவுடன் மிகக் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்; அவர் மேலும் தன் மனக் குமுறலை வெளிப்படுத்தினார் ‘நம் மூத்த மூன்று மகன்களும் உரிய காலத்திற்கு முன்னரே சமூக வாழ்க்கையிலிருந்து விலகிச் சென்றது, உனது முட்டாள்தனமான அறிவுரையினாலேயே நிகழ்ந்தது’ ||1||
தன் கணவன் கூறிய கடுமையான சொற்களைக் கேட்ட பத்தினி மனைவியான மதாலஸா, அவளது கணவர் அவரது மனக் குமுறலை முழுமையாக வெளிப்படுத்தி முடிக்கும் வரை அமைதியாக இருந்தார்; பின்னர் அவர் கூறினார் ‘தாங்கள் கூறிய அனைத்தையும் நான் மிகக் கவனமாகக் கேட்டேன்; அதே விஷயம் தொடர்பாக நான் கூறப் போகும் கருத்துகளையும் நீங்கள் சற்று அமைதியாக கேட்க வேண்டும் என்று வேண்டுகிறேன்||2||
நீங்கள் என்னிடம் கூறிய அனைத்துமே நிச்சயமான உண்மையே; நம் மறைந்த முன்னோர்கள் அனைவரும் நிச்சயமாக முக்தி அடைவார்கள்; ஏனெனில், வேத நூல்களும் அத்தகைய அறிவுரையையே வழங்குகின்றன ||3||
அதற்கு வேத சாஸ்திரங்கள் விதித்துள்ள கர்மங்களைச் செய்வதை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை; ஆயினும், ஒருவன் உயிருடன் இருக்கும்போதே ஞானம் அடைவதற்கு தேர்ந்து எடுக்கும் பாதையானது சற்று மாறுபட்டது; எனவே, அந்தப் பாதையே சிறந்தது என்பதாக நான் நினைத்து, நம் மூத்த மூன்று பிள்ளைகளுக்கும் அதற்கேற்ற வகையிலான சாஸ்திரக் கல்வியையே நான் போதித்தேன் ||4||
மனிதரல்லாத பிற உயிரினங்கள் அனைத்தும், அவற்றின் சொந்தக் கர்ம வினைகளாலேயே பாதுகாக்கப்படுகின்றன; அவ்வாறிருக்க, வெறும் மனிதனான ஒருவன், தான் அந்த உயிரினங்களுக்கும் உதவ முடியும் என்று எப்படிக் கருத முடியும்? அது ஒரு தவறான கண்ணோட்டமாகும் ||5||
ஒரு பெண் உலகியல் வாழ்க்கையில் ஈடுபடுவது வெறும் புலனின்பங்களை நுகர்வதற்காக மட்டுமே என்றால், வேதங்கள் போதிக்கும் பற்றற்ற நிலையில் வாழ வேண்டும் என்ற அறிவுரையானது அவளுக்குச் அர்த்தமற்றவைகளாகவே தோன்றும்; மேலும், சமூகத்தில் அவள் மீது இரட்டை வேடம் போடுபவள் என்றும், வேத நெறிக்கு முரணாக நடப்பவள் என்றும் முத்திரைகள் குத்தப்படும்||6||
வேத சாஸ்திரங்கள் காட்டும் பாதையில் பயணிப்பவன், தெய்வங்களிடம் எவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ள முடியும்?; ஒருவன் உயிருடன் இருக்கும்போதே உலகப் பற்றுகளைக் கடந்து சென்றால் மட்டுமே கைவல்யம்* எனப்படும் முக்தி நிலையை அடைய முடியும்; அந்த நிலையில் அவன் எப்போதும் தன் ‘ஆத்மா ‘விலேயே (சுயத்தில்) நிலைத்திருப்பான்.
{*கைவல்யம் (Kaivalya) என்பது யோக மற்றும் வேதாந்த தத்துவங்களில், ஆத்ம மாயை அல்லது இயற்கையிலிருந்து (Prakriti) முற்றிலும் விடுபட்டு, தனது தூய சொரூபத்தில் நிலை பெறும் பற்றற்ற, தனிமையான முக்தி நிலையைக் குறிக்கிறது; இது பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை மற்றும் இறுதி சுதந்திரம் (மோட்சம்) பெறும் நிலை ஆகும்.} ||7||
அத்தகைய ஆன்மீகச் சாதகர்கள், உண்மையான பற்றின்மையுடன் இருந்து கொண்டு துறவற வாழ்க்கையை மேற் கொள்கின்றனர்; அவர்கள் பிறருடைய இல்லங்களுக்கு சென்று பிட்ஷை பெற்றுக் கொண்டு உணவருந்துகின்றனர்; அவ்வாறிருக்க, இத்தகைய நடத்தையைத் தாழ்வானதாகக் கருதுவது ஏன்?; ஒருவன் தன்னிடம் இருப்பதைக் கொண்டு மன நிறைவு அடைய, எத்தகைய முயற்சி தேவைப்படுகிறது?||8||
வாழும்போதே முக்தி பெறும் பாதை, தொடக்கத்தில் கடினமானதாகத் தோன்றினாலும், அதன் இறுதியில் அளவற்ற ஆனந்தத்தை தருகின்றது ; மாறாக, வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்வதால் கிடைக்கும் இன்பமானது, பிற்காலத்தில் பெரும் துயரத்திற்கு இட்டுச் செல்லக் கூடும்||9||
சுயத் தன்மையை (ஆத்மா வை) ஆள்வதே, ஆளுவதற்கு தகுதியான ஒரே பேரரசாகும். நமது புதல்வர்களில் எவரேனும் ஒருவர் இந்த உண்மையை உணர்ந்து விழிப்படைந்தால், அவர் நிச்சயமாக வெற்றியுடன் ஆட்சி செய்வார்||10||
ஆகவே, எனது சிந்தனைக்கு ஏற்ப நான் பொருத்தமாகவே செயல்பட்டுள்ளேன்; ஆயினும், இது போதுமானதல்ல என்று நீங்கள் கருதினால், நமது நான்காவது மகனான ‘அலர்க்கன்’ (Alarka), உங்கள் விருப்பப்படியே அனைத்தையும் நிறைவேற்றுவான்||11||
நான் அவனுக்குக் கலைகளின் அனைத்துப் பிரிவுகளையும் கற்றுக் கொடுக்கின்றேன்; நீங்கள் இன்னும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தால், அவனை என்னுடனேயே இருக்க அனுமதித்து, நான் அவனுக்குக் கல்வியைப் புகட்ட அனுமதியுங்கள்; இல்லையெனில், நீங்கள் அவனை அழைத்துச் சென்று, உங்கள் விருப்பப்படியே செய்து கொள்ளலாம்||12||
தன் மனைவியின் பதிலைக் கேட்ட மன்னன் இவ்வாறு கூறினான் ‘ நீயே அவனுக்குக் கல்வி அளிப்பதே சிறந்தது; நான் அவ்வப்போது வந்து அவனது முன்னேற்றத்தைச் சோதனை செய்து பார்த்த பின்னர், நீ கூறியவற்றின் உண்மையை உறுதிப்படுத்திக் கொள்கின்றேன்||13||
இவ்வாறு கூறி விட்டு சற்றே ஐயத்துடன் மன்னன் அங்கிருந்துவெளிப்புற ப்பட்டான்; அதன் பின் மதாலஸை தெய்வத்திடம் பிரார்த்திக்கத் தொடங்கினாள் ‘அலர்க்கன் என் மகன்; கண்ணுக்குப் புலப்படாத அதோக்ஷஜ *தெய்வமே பரம்பொருளே! முனிவர் அத்திரியின் திவ்யப் புதல்வனே, இவன் மேன்மை அடைய நீயே அருள் புரிய வேண்டும்; அலர்க்கனை உனது பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன்.
{*அதோக்ஷஜ (Hoshana) என்பது பகவான் விஷ்ணு அல்லது கிருஷ்ணரைக் குறிக்கும் ஒரு திருநாமம். இந்த வார்த்தை அதா (கீழே/அப்பாற்பட்ட) மற்றும் அக்ஷஜ (புலன் அறிவு) என்பதிலிருந்து உருவானது, அதாவது ஜட உணர்வுகளுக்கு எட்டாத இறைவன் என்று பொருள்படும்} ||14||
இவனது ஜாதகத்தில் உள்ள ஐந்து கிரகங்கள் உச்ச நிலையில் அமைந்துள்ளன; அதனாலேயே இவனது பாதையில் தடை ஏற்பட்டுள்ளது; இனி என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை; இவனது பூர்வ கர்ம வினையே இவனது பயணத்தைத் தடுத்து நிறுத்தியது போலத் தோன்றுகிறது||15||
கிரகங்களின் நிலை உணர்த்தும் பலன்களை யாரால் மறுக்க இயலும்?; அலர்க்கன் அறுபத்து ஆறாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வான்; அரச போகங்களை அனுபவித்த பிறகு, அவன் பற்றுதல்களைக் கடந்து உயர்வடைவான்; ஆனால் அதுவரை அவனுக்குத் துறவு மனப் பான்மை வாய்க்காது ||16||
இதுதான் அவனது விதி எனும் உண்மையை உணர்ந்த மதாலஸா தெய்வத்திடம் பிராத்தனை செய்து கூறினாள் ‘இவனை உனது திருவடிகளில் அர்ப்பணித்து விட்டேன்; ஓ ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமானே, இவன் மெய் ஞானத்தை அறியும் அளவில் இவனுக்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் ||17||
இவ்வாறு அவள் தெய்வங்களை வேண்டிப் பிரார்த்தித்தாள்; அதன் பின் அலர்க்கனை தினமும் தன்னிடம் அழைத்து, அன்றாட நிர்வாகச் செயல்பாடுகளில் அவன் வல்லமை பெறும் வகையில், அவனுக்கு வேத சாஸ்திரங்களைக் கற்பித்தாள்||18||
மனித வாழ்வின் நான்கு முக்கியப் புருஷார்த்தங்களான அறம் (தர்மம்), பொருள் ஈட்டல், இன்ப நுகர்தல் மற்றும் வீடு பேறு ஆகியவற்றை அடைவதற்கான வழிகளை அவள் அவனுக்குக் கற்பித்தாள்; மேலும், ஒருவன் தான் சார்ந்த வர்ணம் மற்றும் ஆசிரம நிலைக்கு ஏற்றவாறு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், மன்னர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஆறு விதமான ராஜ தந்திரங்களையும், குடி மக்களை எவ்வாறு மகிழ்ச்சியாகவும் ஆக்கப் பூர்வமான பணிகளிலும் ஈடுபடுத்தி வைத்திருக்க வேண்டும் என்பதையும் அவள் அவனுக்குப் போதித்தாள்.
{* மன்னர்கள் தங்கள் நாட்டின் நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்தப் பின்பற்றிய ஆறு வகையான ராஜ தந்திரங்கள் ‘ஷட்குணம்’ (Sadguna) என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு கொள்கைகளும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் மற்றும் பண்டைய அரசியல் தத்துவங்களின் அடிப்படையில் அமைந்தவை; அவை (i) சமாதானம் :-எதிரிகளுடன் போர் செய்வதைத் தவிர்த்து, இணக்கமான ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது; (ii)போர் :- எதிரியின் பலம் குறைவாக இருக்கும்போது அல்லது தன் நாட்டுக்கு நேரடி ஆபத்து ஏற்படும்போது, போரிட்டு எதிரியை வீழ்த்துவது; (iii) படையெடுப்பு :-எதிரி நாட்டை நோக்கிப் படையெடுத்துச் செல்லத் தொடங்குவது; இது எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தவும், போருக்கான ஆயத்தங்களைச் செய்யவும் பயன்படும்; (iv) நிலைத்து நிற்றல் :-எந்தவித ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், நடுநிலை வகித்து, சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து காத்திருக்கும் தந்திரம்; (v)கூட்டு தந்திரம் :-ஒரு பெரிய எதிரியை வெல்ல, மற்றொரு வலிமையான மன்னனுடன் தற்காலிகமாக கூட்டு சேர்ந்து கொள்ளுதல்; எதிரிகளின் ஒற்றுமையைக் குலைக்கவும் இது பயன்படுகிறது; முடிவாக பாதுகாப்பு நாடுதல் :- :தன்னை விட வலிமையான ஒரு பேரரசின் ஆதரவை நாடி, தன் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளுதல்}||19||
வில் வித்தையைப் பற்றிய ‘தனுர்வேத’ சாஸ்திரத்தை அவள் அவனுக்குக் கற்பித்தாள்; அவனது தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள அவனுக்கு வழிகாட்டினாள்; மன்னனும் அவ்வப்போது வந்து அவனது பெற்று வந்திருந்த கல்வி ராஜாங்கத்திற்கு தேவையான அளவில் உள்ளதா என்பதை சோதித்து வந்தான்; தன் மகனின் வளர்ச்சியைக் கண்டு அவன் மிகுந்த மன நிறைவும் மகிழ்ச்சியும் அடைந்தான் ||20||
அதன் பின்னர் நடைபெற்ற சுயம் வரத் திருமண வைபவங்களில், அலர்க்கன் பல பெண்களை மணந்து கொண்டான்; அற நெறியைக் காப்பவனாகவும், வில் வித்தையில் வல்லவனாகவும் பூவுலகில் அவன் பெரும் புகழைப் பெற்றான் ||21||
மன்னர் மிகுந்த மன நிறைவு அடைந்தார்; அவரது மன இறுக்கம் மகிழ்ச்சியாக மாறியது; அவர் அலர்க்கனுக்கு முடி சூட்டி மன்னராக்கினார்; தாமும் ‘வானப்பிரஸ்தத்தை’ (துறவறத்தை) முறைப்படித் தேர்ந்தெடுத்து அதில் இணைந்தார் ||22||
மன்னரின் அப்படிப்பட்ட முடிவை அறிந்த மதாலஸை தானும் அவரோடு இணைந்தே வாழ வாழ அனுமதித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் என்று மன்னனிடம் கூறினாள் ||23||
மன்னரும் அவளது விருப்பத்திற்கு இசைந்தார்; அவர்கள் புறப்படத் தயாரானபோது, மதாலஸை அலர்க்கனை நோக்கி ‘நீ தர்மத்திற்கு உண்மையாக நடந்து, ஒரு நல்ல மன்னனாக ஆட்சி செய்வாயாக; உன் குடி மக்களை உன் சொந்தக் குழந்தைகளைப் போலவே கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பாயாக’ என்று அறிவுறுத்தினாள் ||24||
நீ அறுபத்து ஆறாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வாய்; இவ்வுலகில் தர்மத்தை நிலை நாட்டுவாய்; அதன் பிறகு, நீ ஒரு பயங்கரமான எதிரியை எதிர் கொள்ள நேரிடும்; அவன் உனக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே விளங்குவான்||25||
எதிர்காலத்தில் நீ நிச்சயமாகச் சந்திக்கப் போகும் அந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உன் நன்மைக்காகவே நான் சில குறிப்புகளை எழுதி வைத்துள்ளேன்; அந்தத் தொல்லை தரும் எதிரியை நீ எதிர் கொள்ளும் காலம் வரும்வரை, அந்த குறிப்புகளை ஒரு பாதுகாப்பான பெட்டகத்தில் பத்திரமாக வைத்துக்கொள் ||26||
குறிப்பு: டெம்பே ஸ்வாமிகள் எழுதி உள்ள மூல நூலில் 27-ஆம் பாடல் விடுபட்டுள்ளது; அதனால் அதை மொழி பெயர்க்க இயலவில்லை ||27||
அந்தக் காலம் வரும்வரை, நீ உன் அன்றாட வழிபாட்டுச் சடங்குகளில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; எதிரிகள் உன்னை எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொள்வதை நீ உணரும்போது, அந்த குறிப்புக்களை படித்து, அதிலுள்ள வழி காட்டுதலைப் பின்பற்றுவாயாக||28||
கடிதத்தில் உள்ள செய்திகளை நன்கு புரிந்துகொண்டு, அதற்கேற்ப உன் நடத்தையை நீ மாற்றிக் கொண்டால், உன் எதிரிகள் அனைவரும் உனக்கு நண்பர்களாக மாறி விடுவர்; நீ இழந்த உன் பேரரசை மீண்டும் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ்வாய் ||29||
மதாலஸா விடை பெறும் போது ‘வாழ்க்கையில் எத்தகைய சூழலையும் எதிர் கொள்ளத் தயாராக இரு; நான் என் கணவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடப்பேன்; அதுவே ஒரு கற்புடைய மனைவிக்கு உரிய கடமையாகும்; அதன் மூலம் நான் மன நிறைவை அடைவேன்’ என்று கூறினாள் ||30||
மேலும் கூறினால் ‘எவரும் எவருடனும் என்றென்றும் இணைந்தே வாழ முடியாது; குறிப்பாக, மானிட பிறவி எடுத்து பிறந்த உயிர்களுக்கு இது நிச்சயம் பொருந்தும்; ஒவ்வொரு பிறப்பும் ஒரு தற்காலிகமான நிகழ்வாகவே இருக்கும்; நாம் அனைவரும் நம் கடந்த கால கர்ம வினைகளின் கையில் இயங்கும் பொம்மைகளே ஆவோம்; அத்தகைய உண்மைகளை நாம் மனப் பக்குவத்துடன் ஏற்றுக் கொண்டு ஆகவேண்டும்||31||
இப்போது, நீ வெளிப்படையாகப் புலப்படும் அந்தத் தெய்வீக சக்தியுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்து வாழ்ந்த காலம் முடிவடைந்து விட்டது; இனி, அதிலிருந்து பிரிந்திருப்பதன் விளைவுகளை நீ தாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும்; இதற்கு வேறு என்னதான் செய்ய முடியும்? உன் மனதை மட்டும் எப்போதும் ஆரோக்கியத்துடனும் அமைதியுடனும் வைத்துக் கொள்வாயாக’ ||32||
அலர்க்கனுக்கு இவ்வாறு அறிவுரை கூறிய பின்னர் மதாலஸா மன்னனுடன் காட்டிற்கு சென்று தவத்தில் இருக்க முடிவு செய்தாள்; அங்கு அவர்கள் இருவரும் தேடிய அமைதியை அடைந்தனர்||33||
ஒரு பொருத்தமான தருணத்தில், அவள் தன் மூத்த மூன்று மகன்களுக்கு அறிவுரை கூறியது போலவே தன் கணவனுக்கும் அறிவுரை கூறினாள்; அவன் அவளுடைய ஆன்மீக போதனைகளை ஏற்றுக் கொண்டு விட்டான் என்று அவள் உறுதியாக அறிந்தபோது, அவள் தான் பிறந்ததின் பயனை அடைந்து விட்டதை போல கருதினாள் ||34||
அந்த பக்தியுள்ள மனைவி மதாலஸா தனித்துவம் வாய்ந்த ஒரு அரசியாகவும், சிறந்த ஞானியாகவும் போற்றப்பட வேண்டியவள்தான்; அவள் ஒரு மனைவியாக மட்டுமல்லாமல், மன்னனுக்கு மெய் ஞானத்தைப் போதனை செய்த குருவாகவும் இருந்து அவர் உயர்ந்த நிலையை அடைய வகை செய்தாள்; அவளும் பௌதிக உடலின் மீதான பற்றைத் துறந்து, வாழ்ந்த காலத்திலேயே ஞானியாகி இறுதியில் பிறப்பற்ற நிலையான விதேக முக்தி அடைந்தாள் ; அவள் சாதித்ததைக் கண்டு அனைத்து தேவர்களும் பிரமித்துப் போனார்கள் ||35||
அவர்கள் கூறினார்கள்: உண்மையில் மதாலஸா அவளது புனிதத் தன்மைக்காகப் புகழ் பெற்றவள்; அவள் பூமியில் வாழும் ஞான நிலையில் இருந்தபோது, அவள் தன் மகன்களுக்கு உயர் உலகங்களை அடையக் கற்றுக் கொடுத்து இருந்தாள்; மேலும் தன் கணவனையும் ஆன்மீக சிகரங்களை அடைய வகை செய்தாள் ||36||
மற்றொரு கற்புக்கரசியான சூடாலை* எவ்வாறு தன் கணவனை நல்வழிப்படுத்தி, அவனுக்குத் துணையாக நின்றாளோ, அவ்வாறே மதாலஸாவும் தன் கணவனை உயர்த்தினாள்; இத்தகைய புனிதப் பெண்களைக் காண்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.
{*’கற்புக்கரசி சூடாலை’ என்பது யோக வாசிஷ்டம் (Yoga Vasistha) என்ற நூலில் வரும் புகழ் பெற்ற கதையாகும்; மால்வா தேசத்து மன்னன் சிகீத்துவஜன் என்பவரின் மனைவியே சூடாலை என்பவர் ஆவார்; சூடாலையின் உதவியுடன் சிகீத்துவஜன் உண்மையான ஆத்ம ஞானத்தைப் பெற்றான்; கற்பு நெறி தவறாமல் தன் கணவனுக்கு ஆன்மீகப் பாதையில் வழி காட்டியதால், சூடாலை கற்புக்கரசி மற்றும் ஞானத்தாய் என அழைக்கப்படுகிறாள்} ||37||
எவர் தூங்கி எழுந்ததும் காலையில் இத்தகைய கற்புக்கரசிகளை நினைவு கூர்ந்து, அவர்களின் தூய்மையையும் வீரத்தையும் போற்றிப் புகழ்கிறார்களோ, அவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்; மேலும் அவர்களின் உள்ளுணர்வுகளும் உள்ளமும் புனிதமடையும் ||38||
உண்மை இவ்வாறிருக்க, இனி அரசன் அலர்க்கன் கதையை தொடர்வோம்; அவன் தன் கம்பீரமான செயல்களால் ஒரு சூரியனைப் போலப் பிரகாசித்தான்; அவனைப் புகழ்ந்துரைக்க எத்துணைச் சொற்களைப் பயன்படுத்தினாலும் அது போதாது; அவன் அறநெறி தவறிய பாதையை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை ||39||
அவன் தன் குடி மக்கள் மீது பெறும் அளவிலான அக்கறை கொண்டிருந்தான்; அவர்களின் மனம் தேவையற்ற காரணங்களால் துன்பப் படுவதை அவன் ஒரு போதும் அனுமதிக்கவில்லை; அதன் விளைவாக, அவனது குடி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்; தினமும் அவன் சிறந்த அந்தணர்களுக்குத் தாராளமாகத் தானங்களை வழங்கினான் ||40||
அவனது பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே, பகைவர்கள் நடு நடுங்கிப் போவார்கள்; அவனது ஆட்சியையும் எல்லைகளையும் எவராலும் மீற இயலவில்லை; இதன் மூலம் பல தீயவர்கள் தண்டிக்கப்பட்டுத் திருத்தப்பட்டனர் ||41||
குற்றம் செய்தவர்களைத் தண்டிக்க அவன் தர்ம நெறிகளையே வழி காட்டியாக அமைத்துக் கொண்டிருந்தான் ; நிரபராதிகளுக்கு அவன் ஒருபோதும் துன்பம் இழைத்ததில்லை; அரசனின் கோபத்தினாலோ அல்லது பேராசையினாலோ அவன் பிறரின் செல்வத்தைப் பறிக்கவில்லை; மாறாக, அவன் தன் குடி மக்களை அறநெறி வழுவாமல் ஆட்சி செய்து வந்தான் ||42||
சிறந்த நற் பண்புகளைக் கொண்டவர்களை அவன் ஊக்குவித்தான்; ஏழை எளியவர்களுக்கும் பிழைப்பிற்காக வழிமுறைகளை போதனை செய்தும் செல்வத்தை தந்தும் ஊக்குவித்தான்; பார்வையற்றவர்களையும், ஊனமுற்றவர்களையும் அவன் பாதுகாத்தான்; எக் காலத்திலும் அவனிடம் கொடுமையின் சாயல் சற்று கூட தென்பட்டதில்லை||43||
அதன் விளைவாக, அவனது செல்வமும் நற் பேறும் பெருகின; அவனது அறநெறி அவனுக்குப் பெரும் செல்வத்தை ஈட்டித் தந்தது; அவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தான்; தன்னை நம்பித் தங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டவர்களின் அந்தரங்கங்களை அவன் ஒரு போதும் வெளியே சொல்லவில்லை ||44||
அவனது திருமணங்களும், அவனது மனைவியரும் கூட, தர்ம நெறிகளுக்கும் அறத்திற்கும் உட்பட்டே அமைந்திருந்தன; இதனால் அவன் மன நிறைவு அடைந்தான்; அவனது மனம் ஒருபோதும் துன்பத்திற்கோ கவலைக்கோ ஆட்பட்டதில்லை||45||
அவன் பல வேத யாகங்களைச் சிறப்பாக நடத்தினான்; அவை அனைத்தும் வெற்றிகரமாக நிறைவுற்றன; ஆயினும், அவனிடம் பற்றற்ற துறவு மனப்பான்மை முழுமையாக மலரவில்லை; மாறாக, உலக பற்றுக்களே அவனிடம் மேலோங்கி நின்றன||46||
அவன் தன் மனைவியரை எல்லா வகையிலும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டான்; வேத யாகங்களில் படைக்கப்பட்ட நெய்வேதியங்களில் எஞ்சியிருந்த மதுவையும் இறைச்சியையும் அவன் உண்டான்; அதுவே சரியான முறை என்றும், வேத நூல்களும் அதையே அங்கீகரிக்கின்றன என்றும் அவன் உறுதியாக நம்பினான் ||47||
அலர்க்கன் எனும் அந்த அரசன் விதி என்பதின் தாக்கம் என்ன என்பதை அவன் அறிந்திருக்கவில்லை; அரசன் எனும் பெருமையை விண்ணுலக இன்பத்திற்கு நிகராக அவன் கருதினான்; எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் அவன் எவ்வித விவேக சிந்தனையும் செலுத்தவில்லை ||48||
மது, மாமிசம் மற்றும் தன் பட்டத்து ராணிகளுடன் கொள்ளும் உடல் ரீதியான உறவு ஆகியவற்றின் மீது அவனுக்கு இருந்த அதீத பற்று அனைத்தும், பல பிறவிகளாக அவனது சூட்சும உடலில் பதிந்து, திரண்டு கிடந்த பூர்வ ஜென்மத்தின் வாசனைப் பதிவுகளாலேயே ஏற்பட்டவையாகும்||49||
அதனால்தான் பற்றின்மையை (வைராக்கியத்தை) வளர்க்கும் பொருட்டு, வாழ்வின் நான்காம் நிலையில் துறவறத்தை மேற்கொள்ளுமாறு வேதங்கள் அறிவுறுத்துகின்றன; மனிதர்களின் இயல்பைக் கருதி, தயக்கத்துடனேயே இம்முறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது; உயிரினங்கள் பரம்பொருளாகிய உண்மையை உணரும்படித் தூண்டுவதே இதன் ஒரே நோக்கமாகும் ||50||
எடுத்துக்காட்டாக, எல்லா நேரங்களிலும், எல்லாப் பெண்களுடனும் உடல் ரீதியாக இணையவே எதிர் பாலினத்தவர் விரும்புவர்; எனவேதான், தன் சொந்தத் துணையுடன் மட்டுமே இணையுமாறு வேதங்கள் அறிவுறுத்துகின்றன; அவ்வாறு இணைவதற்குரிய காலங்களையும், நாட்களையும் அவை மிகத் துல்லியமாக வரையறுத்துக் கூறியுள்ளன ||51||
ஒருவன் பிற பெண்களை நாடாமல், தன் சொந்த மனைவியுடன் மட்டுமே இல்லற இன்பத்தை அனுபவிப்பானாயின், அச் செயல் அறம் சார்ந்ததாகவே கருதப்படுகிறது; வேதங்களும் அதையே திட்டவட்டமாக பரிந்துரைக்கின்றன ||52||
மனைவியின் விஷயத்திலும் கூட, வேதங்கள் வகுத்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், ஒருவன் இரவும் பகலும் இடைவிடாமல் அவளுடன் உடல் ரீதியான உறவு வைத்துக் கொள்வானாயின், அச் செயலின் விளைவாக, அவன் நரகத்தில் வீழ்ந்து, அங்குத் தன் பாவங்களுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும்||54||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘ஏ பி கச்சந்தி ராகாந்தா: நாரீணாம் ரஜஸ்வலாம் |
பர்வணீக்ஷு திவா ஸுப்தா: தே வை நரககாமின’
இதன் அர்த்தம் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்களிடம் உறவு கொள்பவர்கள் புனிதமான பண்டிகை மற்றும் பர்வ காலங்களிலும் பகல் பொழுதிலும் உறங்குபவர்கள் போன்றவர்கள் நிச்சயம் நரகத்தை அடைவார்கள்.
{இந்த இரண்டு வரிகளும் சாணக்கிய நீதியில் அல்லது பொதுவான தர்ம சாஸ்திரங்களில் வரும் ஒரு பிரபலமான ஸ்லோகத்தின் ஒரு பகுதியாகும்} || ||55||
மேலே கூறப்பட்டுள்ள செய்யுளின் விளக்கம் : காமவெறி பெற்ற ஒருவன், தன் மனைவி மாத விடாய் நிலையில் இருக்கும்போது, அல்லது முன்னோர்களுக்கான சிராத்தம் சடங்குகள் மற்றும் பிற புண்ய திதிகளிலும் பண்டிகை நாட்களிலும் அவளுடன் உடல் ரீதியாக இணைவானாயின், அவன் நிச்சயமாக நரக லோகத்தில் சென்று உழல நேரிடும் ||56||
ஒரு கணவன் தன் மனைவியின் மீதுள்ள வெறுப்பு அல்லது துவேஷத்தின் காரணமாக அவளுடன் உடல் ரீதியாக இணையாமல், அவளைத் திருப்தியற்ற நிலையில் விட்டு விடுவானாயின், அக் கணவனின் அச் செயலும் ஒரு குற்றமாகப் (குறையுடையதாகவே) கருதப்படுகிறது ||56||
சமஸ்கிருதச் செய்யுள்: ருதுஸ்நாதா து யோ பார்யா, சன்னிதௌ நாதிகச்சதி; கோராயாம் ப்ரூணஹத்யாயாம் பச்யதே, ஸ ந சம்சயஃ ||
விளக்கம்: ஒரு கணவன், வேத வழிகாட்டுதலின்படி மாதவிடாய் காலம் முடிந்த பின் நீராடி விட்ட தன் மனைவியுடன் (சம்பந்தம்) கொள்ளாவிடில், அவன் கருக்கலைப்பு எனும் கொடிய பாவத்திற்குத் துணை போனவனாகவே கருதப்படுவான்; இக்கூற்றில் எவ்வித ஐயமும் இல்லை ||57||
குடும்பஸ்தர்களைப் பொறுத்தவரை இத்தகைய ஒழுங்கு முறை இதற்கு முன் போதிக்கப்படாத ஒன்றல்ல; ஆயினும் மந்த புத்தியினர் இவ்வுண்மையின் சாரத்தை அறியாமல், தங்கள் காம இச்சைக்கு அடிமையாகித் தொடர்ந்து நெறி தவறிய நடத்தையிலேயே ஈடுபடுகின்றனர்|58||
உடலுறவு, மாமிசம் மற்றும் மது அருந்துதல் ஆகிய விஷயங்களில் வேத வழி காட்டுதலைப் பின்பற்றும் எவரும், அலர்க்க மன்னரைப் போலவே, வேத நூல்களின் மறைமுகமான உட் கருத்தை அறியவில்லை; விதி முறைகளின் உண்மையான நோக்கம், ஒருவனைப் பற்றற்ற நிலையை நோக்கித் தூண்டுவதே ஆகும். ||59||
ஆகவே மன்னன் அலர்க்கன், தம்மால் இயன்றவரைப் பல பெண்களை மணந்து கொண்டார்; வேத விதிகளின்படி அவர்களுடன் உடல் ரீதியான உறவு கொண்டார்; அதே போலவே, மாமிசம் மற்றும் மது அருந்துதல் சார்ந்த விஷயங்களிலும் அவர் வேத நெறி முறைகளில் கூறப்பட்டு உள்ள விதிகளை தழுவியே நடந்து கொண்டார் ||60||
அவன் அந்தணர்களைக் கொண்டு அக்னிஷ்டோம* யாகத்தைச் செய்வித்தான்; அதிலிருந்து கிடைத்த சோம பானத்தை** அருந்தினான். பின்னர் அவன் ‘நான் ஒரு நித்திய ஜீவியாக (சாகா வரம் பெற்றவனாக) மாறுவேன்; விண்ணுலக இன்பங்களை இடைவிடாமல் அனுபவிப்பேன்’ என்று பிரகடனம் செய்தான்
{* அக்னிஷ்டோமம் என்பது இந்து மத வேத சடங்குகளில் மிக முக்கியமான, அடிப்படைச் சோம யாகமாகும்; இது அக்னியின் புகழ் அல்லது அக்னியைத் துதிக்கும் சடங்கு எனப்படும்; இதில் சோம ரசத்தை தேவர்களுக்கு அர்ப்பணித்து, இந்திராதி தேவதைகளை ஆராதிப்பார்கள்.
** சோம பானம் என்பது வேத காலத்தில், குறிப்பாக ரிக் வேதத்தில், இந்திரன் போன்ற தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான, போதை தரும் பானமாகும்; இது ‘சோம’ எனும் தாவரத்தின் சாறிலிருந்து தயாரிக்கப்பட்டு, யாகங்களில் அர்ச்சிக்கப்பட்டது; இது அமிர்தத்திற்கு நிகரானதாகவும், நீண்ட ஆயுள், ஞானம் மற்றும் ஆற்றலைத் தருவதாகவும் நம்பப்பட்டது} ||61||
இவ்வாறு தூய்மையின்மையாலும், சீர் கெட்ட அறிவாலும் உந்தப்பட்டு, அளவு கடந்த பேராசைக்கு அவன் அடிமையானது, தேவையற்ற துன்பங்களை வரவழைத்துக் கொள்ளும் மற்றொரு வழியாகவே அமைந்தது; அலர்கனின் ஞானம் பெற்ற மூத்த சகோதரனான சுபாஹு, இச் செய்தியை அறிந்து கொண்டான் ||62||
அப்போது சுபாஹு இவ்வாறு சிந்தித்தான் ‘என் சகோதரன் உலகப் பற்று எனும் சேற்றில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறான்; அந்தப் பிணைப்பிலிருந்து வெளி வருவது மிகவும் கடினம்; நான் அவனை இந்தச் சேற்றிலிருந்து வெளியே இழுத்து விடா விட்டால், சகோதர பாசம் எனும் நற்பண்பு வேறு எவ்வாறு வெளிப்படும்? ||63||
அலர்கன் ஒரு நீதி தவறாத ஆட்சியாளனாகத் திகழ்ந்தாலும், தாராளமாக தானங்கள் அளிப்பதிலும், வேத சடங்குகளையும், யாகங்களையும் செய்வதிலும் ஈடுபட்டிருந்தாலும், இயல்பிலேயே அவன் அறநெறி சார்ந்தவனாக இருந்தாலும், அவனது மனம் இன்னும் நிலையற்றதாக இருந்து வருகிறது||64||
உணவு, பானம் மற்றும் சிற்றின்பங்கள் சார்ந்த இத்தகைய இன்பங்கள் விலங்குகளுக்கும் கூடத் தெரிந்தவையே; இவை எவ்வாறு ஒருவனுக்கு நிரந்தரமான மகிழ்ச்சியை அளிக்க முடியும்?; தன் வாழ்நாள் முழுவதும் இத்தகைய இன்பங்களையே வேண்டி அலைவது, ஒரு தவறான கண்ணோட்டமே ஆகும்; அது நிச்சயம் திருத்திக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்||65||
செல்வத்தின் மீதான பேராசை ஒருவனை அறநெறி தவறிச் செயல் படத் தயங்காதவனாக மாற்றுகிறது; புலனின்பங்களில் பேராசை ஒருவனை ஒழுக்கம் கெட்டவனாக சீரழிக்கிறது; செல்வமானது பெரும்பாலும் வீண் பெருமைக்கும் அகங்காரத்திற்கும் இட்டுச் செல்கிறது; பேராசையும் செல்வமும் தனி மனிதர்களை எத்தனையோ வழிகளில் காயப்படுத்துகின்றன என்பதை நீங்களே பாருங்கள்||66||
ஆகவே, நான் இப்போது சிறிது காலம் என் தியானத்தை ஒதுக்கி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது; நான் அலர்கன் இருக்கும் இடத்திற்குச் செல்வேன்; அவன் தன் அரச செல்வங்களை இழக்கச் செய்யும் ஒரு வழியை நான் சிந்திப்பேன்; அந்த இழப்பு அல்லது பின்னடைவு, அவன் பற்றற்ற நிலையை அடைவதற்கான ஒரு தூண்டு கோலாக அமையட்டும் ||67||
இவ்வாறு தீர்மானித்த மூத்த சகோதரனான சுபாஹு, பற்றற்றவனாகவும் உயிரற்றவனாகவும் தோன்றும் தன் பழைய பாவனையை விடுத்தான்; அவன் மன்னன் அலர்கனின் தலை நகருக்குச் சென்றான்; அங்கே அவன் பின் வருமாறு கோரிக்கை விடுத்தான் ||68||
நான் உன்னுடைய மூத்த சகோதரன் ஆவேன்; இப்போது நம்முடைய இந்த ராஜ்ஜியத்தை நானே ஆள விரும்புகிறேன்; இது உனக்கு ஏற்புடையதாக இல்லையென்றால், அரச செல்வங்களில் எனக்குரிய பங்கை மட்டும் எனக்கு அளித்து விடு||69||
அலர்கன் பதிலளித்தான் ‘நம் தந்தை இராஜ்ஜியத்தை என்னிடம் ஒப்படைத்துள்ளார்; அவர் எனக்கே முடி சூட்டி மன்னனாக்கியுள்ளார்; எனவே, நான் இதை உனக்கு அவ்வளவு எளிதாகத் தந்து விடமாட்டேன்; நீ ஏன் மீண்டும் காட்டிற்குச் சென்று, உன் தவத்தை மேற் கொள்ளக் கூடாது?||70||
தற்போதைய நிலையில், இப்பூவுலகிற்கே நான்தான் ஒரே மன்னன்; பிச்சைக்காரனான உனக்கு நான் எதையாவது ஏன் கொடுக்க வேண்டும்?; ஏறக்குறைய அனைவரும் உன்னை ஒரு செயலற்ற, பற்றற்ற சோம்பேறி என்றே அழைக்கின்றனர்; நீ ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவன்||71||
உன் நரம்புகளில் உண்மையான போர் வீரனின் இரத்தம் ஓடிக் கொண்டிருக்குமானால், என்னுடன் போரிடு; பின்னர் உனக்குரிய பங்கைத் தகுந்த முறையில் பெற்றுக் கொள்; இல்லையெனில், நான் முன்பே கூறியது போல, உன் தவத்தை மேற் கொள்ளக் காட்டிற்குச் செல் ||72||
இப்போதுதான் உன் வஞ்சகத்தை நான் முழுமையாகப் புரிந்து கொண்டேன்; இதை நான் முன்னரே அறிந்து இருந்தால், உன் இரட்டை வேடத்தை எனக்குத் திருப்தியளிக்கும் வகையில் நிச்சயம் கையாண்டிருப்பேன் ||73||
இதுவரையிலும், நீ ஒரு பணிவான, பற்றற்ற எளியவன் என்றே நான் கருதியிருந்தேன்; அதனால்தான் உன் பராமரிப்பையும் தேவைகளையும் நான் கவனித்துக் கொண்டேன்; ஆனால் இன்றைக்குத்தான் உன் முகத்தின் மறு பக்கத்தை நான் காண்கிறேன்; உன் முழுச் சதியையும் இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன் ||74||
நீ இங்கிருந்து எவ்வளவு விரைவாக செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாக வெளியேறுவதே உனக்கு நல்லது; இவ்வாறு அவன் மீது கடும் சொற்களைப் பொழிந்த அலர்கன் பின்னர் மௌனமானான்; இவையனைத்தையும் கேட்ட சுபாஹு, அவனது அரசவையை விட்டு வெளியேறினான்||75||
அதன்பின் அவன் காசி மன்னனிடம் சென்றான்; நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அந்த மன்னனிடம் விவரித்துக் கூறி, தன் நியாயமான கோரிக்கை நிறைவேற அவனது உதவியை நாடினான்; தனக்குரிய உரிமையை மீண்டும் பெறுவதற்கு, அந்த மன்னனிடம் அவன் உதவி கோரினான் ||76||
அவன் கூறினான் ‘எங்கள் அன்னை மதாலஸா நான்கு மகன்களை பெற்றெடுத்தாள்; நான்கும் இப்படியாக நான்கு சகோதரர்களாக இருந்தோம்; ஆனால் எங்களில் இளையவன் அலர்கன் என்பவன், மற்ற மூவரையும் வஞ்சித்து விட்டு, இப்போது எங்கள் தந்தையின் ராஜ்ஜியத்தைத் தானே தனித்து ஆட்சி செய்து வருகிறான்||77||
நாங்கள் எங்கள் பங்கை மிகவும் பணிவுடன் கோரிய போதிலும், அவன் எங்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க மறுக்கிறான்; எனவே, அவனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்; உங்களின் உதவி இருந்தால், எனக்கு நியாயமாக உரிமையானதைப் என்னால் மீண்டும் பெற முடியும் ||78||
ஆகவே, நீங்கள் எனக்குத் துணையாக வாருங்கள்; நான் போர்க் களத்தில் முன்னின்று செயல்படுவேன்; இதில் உங்களுக்கு ஏதேனும் ஐயமோ அல்லது தயக்கமோ வேண்டாம்; இந்த முயற்சியின் மூலம் உங்களுக்கும் நிச்சயம் நன்மையே விளையும் ||79||
நான் ஒரு யோகி; என் தவ வலிமையால், என் மனம் விரும்பியபடியே எதையும் சாதித்துக் கொள்ள என்னால் இயலும்; இப்போது, நான் வெற்றிக் கொடி நாட்டி ஆள விரும்புகிறேன் ||80||
அதற்கு காசி மன்னன் பதிலளித்தான் ‘நான் இம் மண்ணின் ஒரு சிற்றரசன் மட்டுமே; சக்கரவர்த்தி பட்டம் பூண்டவன் உன் சகோதரனான அரசன் அலர்கனே ஆவான்; அவனது வலிமைக்கும் பெரும் படைக்கும் எதிராக என்னால் எவ்வாறு எதிர்த்து நிற்க இயலும்?||81||
அதற்கு சுபாஹு பணிவுடன் பதிலளித்தான் ‘எப்போதும் எளியவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் துணை நிற்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன; இதுவே தர்மத்தின் வழி காட்டுதலாகும்; இறைவனாலும் அவனது பிரதிநிதிகளாலும் இவ் விதி அனைவருக்கும் போதிக்கப்படவில்லையா?||82||
நீ அந்தத் தர்ம நெறியை ஏற்றுக் கொண்டு, அதற்கிணங்கப் போர் புரிவாயானால் அப்போரில் நீ உன் உயிரை இழந்தாலும் கூட சந்தேகமின்றி நீ முக்தியை அடைவாய் ||83||
மாறாக, நீ உன் பகைவர்களை வென்று வெற்றி வாகை சூடினால், அரியதொரு பேரரசு உனக்குக் கிட்டும்; ஆகையால், நீ போரில் உயிர் துறந்தால் உனக்குச் சுவர்க்கம் உறுதி; நீ வெற்றி பெற்றால் தடையற்ற ஆட்சி உனக்குச் சொந்தம்; இவ்விரு விளைவுகளிலும் உனக்கு எவ்வித இழப்பும் இல்லை ||84||
மேலும், உமது உதவியால் நான் என் அரசை மீட்டெடுத்தால், உங்களையே அல்லது நீங்கள் எனக்குச் செய்த பேருதவியையோ நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்’; இவ்வாறு சுபாஹு மன்னரிடம் பல வகைகளில் பேசி, தனக்குத் தேவையான உதவியைச் செய்யுமாறு அவரை இணங்க வைக்க முயன்றான். அவனது பேச்சை முழுமையாகக் கேட்டறிந்த மன்னர் பின்வருமாறு பதிலளித்தார்||85||
முதலில் நான் அலர்கனின் நாட்டிற்குச் செல்ல அனுமதியுங்கள்; நான் நேரில் சென்று அவனைச் சந்திக்கிறேன்; உங்கள் சகோதரர்கள் அனைவருக்கும் உரிமையான பங்கை விட்டுக் கொடுக்குமாறு, என் அறிவுத் திறன் கொண்டவரை அவனுக்கு அறிவுரை கூறி, அவனை இணங்க வைக்க முயல்கிறேன் ||86||
ஒருவேளை அவன் என் பேச்சைக் கேட்க மறுத்து, என் ஆலோசனையின்படி நடக்க மறுப்பானேயானால், அப்போது நிச்சயமாக ஒரு போர் தொடுக்கப்படும்; இந்த யோசனைக்கு, எவ்வித ஐயமுமின்றி நீங்கள் முழுமையாக உடன்படுகிறீர்களா?||87||
அதற்குச் சுபாஹு ‘நான் உமது நிபந்தனைகளை முழுமையாகப் புரிந்து கொண்டேன், அவற்றுக்கு உடன்படுகிறேன்’ என்று பதிலளித்தான்; இவ்வாறு அவர்கள் இருவரும் அனைத்து விவரங்களிலும் ஒருமித்த முடிவுக்கு வந்த பின், ஒரு பெரும் படையுடன் மன்னர் அலர்கனின் தலை நகரை நோக்கி புறப்பட்டனர் ||88||
முன்னரே திட்டமிட்டிருந்தபடி, காசி மன்னர் அலர்கனைத் தனிமையில் சந்திக்க விரும்பினார்; சண்டையிட்டுக் கொண்டிருந்த அந்தச் சகோதரர்களுக்கு இடையே ஒரு சமரசத் தூதுவராகச் செயல்பட அவர் முயன்றார்; அலர்கனுக்குச் சொந்தமில்லாத பங்கை அவன் விட்டுக் கொடுக்குமாறு, அந்த மன்னரிடம் அவர் மிகவும் பணிவுடன் வேண்டிக் கொண்டார்||89||
அதற்கு அலர்கன் ‘நான் கூறுவதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்; போர் செய்யாமல், என் உடைமைகளிலிருந்து எதையும் நான் ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று பதிலளித்தான்; காசி மன்னர் அந்தப் பதிலைக் கேட்டதும், கனத்த இதயத்துடன், இறுதியில் போர் நிகழ்வது தவிர்க்க இயலாதது என்பதை மனதளவில் ஏற்றுக் கொண்டு, தன் பாசறைக்குத் திரும்பினார்||90||
நடந்த விவரங்களை அவர் சுபாஹுவிடம் தெரிவித்தார்; போர் தொடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்று அவர்கள் இருவரும் முடிவெடுத்தனர்; பெரும் படையுடன் சென்று, மன்னர் அலர்கனின் தலைநகர் முழுவதையும் அவர்கள் முற்றுகையிட்டனர் ||91||
தன் நாட்டைப் பகைவர்கள் முற்றுகையிட்டிருப்பதைக் கண்ட அலர்கன் வியப்படைந்தான்; உடனே அவன் தன் படையைத் திரட்டி, அப்படைக்குத் தானே தலைமை தாங்கிப் போர்க் களத்திற்குச் சென்றான்; அங்கு நின்றிருந்த தன் எதிரிகள் இருவரையும் நோக்கிச் சவால் விடுத்து ‘இன்னும் சற்றுப் நேரத்திற்குள் உங்கள் இருவரையும் நான் சிறை பிடித்து விடுவேன்’ என்று முழக்கமிட்டான் ||92||
எனினும், காசி மன்னரின் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்த படைக்குத் துணையாக நின்று கொண்டிருந்த, ஒரு தேர்ந்த யோகியின் அளவிடற்கரிய ஆற்றலுக்கு முன்னால், போர்க் களத்தில் எப்போதும் அனைத்து விஷயத்திலும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் திகழும் மன்னர் அலர்கன், இம்முறை மனதளவில் பின் வாங்குவதைப் போல உணர்ந்தான்; அவனது மனம் சோர்வடைந்து, நம்பிக்கையிழந்த நிலையை அடைந்தது ||93||
கடலின் அலைகள் தங்கள் இயல்பான எல்லைகளை மீறிப் பொங்கி எழுந்தது போலிருந்தது அந்த நிலை; மன்னன் அலர்கன், விவரிக்க முடியாத ஒரு தயக்கம் தன் அனைத்துச் செயல்களையும் மந்தப்படுத்துவதை உணர்ந்தான்; அவன் தனக்குள்ளேயே இவ்வாறு கூறிக் கொண்டான் ‘ஒரு அம்பு கூட எய்யாமல், இந்தப் படையை என்னால் வெல்ல இயலாது என்றே தோன்றுகிறது’; அத்தகையதொரு உள்ளுணர்வு அவனுக்குள் மிகத் தீவிரமாக எழுந்தது||94||
இத்தனை நாட்கள் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, போர்க் களத்தில் நிற்கும் இந்தத் தருணத்தில் நான் பின் வாங்கிப் புகலிடம் தேடினால், நான் ஈட்டிய பெருமைகள் அனைத்தையும் நிச்சயமாக இழப்பேன்; மேலும் இவ்வுலகில் ஏளனத்திற்கும் நகைப்பிற்கும் உரியவனாக மாறி விடுவேன் ||95||
ஆகவே, பின் வாங்குவது உசிதமல்ல; என்னிடம் உள்ள முழு வலிமையையும் திரட்டி எதிரியின் மீது பாய்ந்து தாக்குவேன்; அவர்களது படையில் இயன்றவரை பலரை அழிப்பேன்; அந்த இருவரையும் சிறை பிடிக்க முயல்வேன் ||96||
எவ்வித ஐயமும் இன்றி இவ்வாறு முடிவு செய்த மன்னன் அலர்கன், தன் படை வீரர்கள் பயங்கரமான போர்க் குரல்களை எழுப்ப, அவர்களைப் போருக்கு அனுப்பினான்; அதைத் தொடர்ந்து ஒரு பயங்கரமான போர் மூண்டது; அலர்கனும் தன் முழு வலிமையையும் திரட்டிப் போரிட்டான்||97||
சுபாஹு போர்க் களத்திற்குள் நுழைந்ததும், காசி மன்னனின் படைகளைத் தன் யோக சக்தியால் ஒரு முறை கூர்ந்து நோக்கினான்; அதன் விளைவாக, எதிரியின் வலிமையைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல், தங்கள் மீது பாய்ந்து வரும் அம்பு மழையைக் கூடப் பொருட்படுத்தாமல், காசி மன்னனின் படைகள் எதிரியின் மீது பாய்ந்து தாக்கின ||98||
மன்னன் அலர்கனின் குதிரைப் படையும் காலாட் படையும் பெரும்பான்மையாக, வெகு விரைவிலேயே எம தர்மனின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றன; மிகச் சிறிய காயம் பட்டால் கூட, அவர்கள் தங்கள் உணர்வு நிலையை இழந்து, அடுத்த கணமே உயிரையும் துறப்பது போலிருந்தது அந்த நிலை ||99||
பாதுகாப்புத் தடைகள் உடைக்கப்பட்டு அனைத்துக் கோட்டைகளுக்குள்ளும் ஊடுருவப்பட்டது; தலை நகருக்குள் நுழையத் தடையாக இருந்த அனைத்துப் பள்ளத் தாக்குகளின் மீதும் பாலங்கள் அமைக்கப்பட்டன; அகழிகள் அனைத்தும் பலவந்தமாகத் தாண்டிச் செல்லப்பட்டன; கோட்டையின் பிரம்மாண்டமான வாயில்கள் அனைத்தும் செயலிழக்க வைக்கப்பட்டன ||100||
அரசின் பாதுகாவலர்கள் அனைவரும் போர்க் களத்தில் வீழ்த்தப்பட்டனர்; காவலாளிகள் அனைவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுச் சிதறடிக்கப்பட்டனர்; எஞ்சிய படைகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு கூறி விரட்டியடிக்கப்பட்டன; அவர்கள் பயந்து ஓடித் தீரும் வரை துரத்தப்பட்டனர்; மேலும், கோட்டையில் பறந்த அனைத்துக் கொடிகளும் தோரணங்களும் அந்தப் புழுதி நிறைந்த தரையில் வீசி எறியப்பட்டன ||101||
சிலர், தங்கள் அற்பச் செயல்கள் அம்பலப்படுத்தப்படும் என்ற மிரட்டலால் வசப்படுத்தப்பட்டனர்; சிலர், காசி மன்னருடன் இணையும்படி லஞ்சம் கொடுத்து வளைக்கப்பட்டனர்; சிலர், இராச்சியத்தைப் பிரித்துக் கொள்வதே தர்மம் என்று உணர்த்தப்பட்டு இணங்க வைக்கப்பட்டனர்; மற்றவர்களோ, போர்க் களத்தில் வெறுமனே அடித்து வீழ்த்தப்பட்டனர் அல்லது தாக்கப்பட்டனர் ||102||
யோக நெறி அருளும் ஆற்றல் அளப்பரியது; அலர்கனின் தலை நகரைச் சூழ்ந்திருந்த கோட்டைகளும் மதில்களும் தகர்க்கப்பட்டன; படையினரின் இருப்பிடங்கள், அரண்மனை கருவூலங்கள் மற்றும் பண்டக சாலைகள் அனைத்தும் இப்போது திறந்த நிலையில் கிடந்தன; முன்பு மிக கவனமாகப் பாதுகாக்கப் பட்டிருந்த பொருட்கள் அனைத்தையும் இப்போது அனைவராலும் எளிதாக அணுக முடிந்தது ||103||
மன்னன் அலர்கன் இவ்வாறு சிந்தித்தான் ‘நான் ‘எனது’ என்று கருதியிருந்த அனைவரும், ஏதோ ஒரு காரணத்தினால் இப்போது என்னுடன் இல்லை’; யுத்தத்தில் பெரும் அழிவைக் கண்ட மன்னன், அச்சத்தால் திகைத்துப் போய், ஆரம்பத்திலிருந்தே அனைத்தும் தலை கீழாக மாறி விட்டன’ என்று நினைத்தான் ||104||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘விபாகோ தருன்னோ ராக்ஞானம் சத்ருர்-அல்ப-அப்யுரந்துதா:, உத்வேஜயதி ஸூக்ஷ்மூ அபிசரணம்கண்டகாங்கூர்’*;
இதன் அர்த்தம் இதன் அர்த்தம் ‘ஒரு முள்ளின் சிறிய கூர்மையான முனை பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருந்தாலும், அது நம் காலில் குத்தும்போது எப்படி முழு உடலையும் பதற வைத்து பெருந் துன்பத்தை ஏற்படுத்துகிறதோ; அதேபோல, ஒரு எதிரி மிகச் சிறியவனாக இருந்தாலும் அவனால் வரும் பின் விளைவுகள் மிகவும் கொடியவை. அவன் தகுந்த சமயம் பார்த்து நம்முடைய பலவீனமான இடங்களைத் தாக்கி, நமக்குத் தீராத துன்பத்தைத் தருவான்'{*இது கிருஷ்ண மிஸ்ரர் எழுதிய பிரபோத சந்திரோதயம் (Prabodhacandrodaya) என்ற புகழ்பெற்ற சமஸ்கிருத நாடகத்தில் இடம் பெற்றுள்ளது} ||105||
என் சொந்தச் சகோதரனான சுபாஹூ, காசி மன்னனையே அதிக உண்மையானவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் கருதி விட்டான்’ என்று மன்னன் அலர்கன் வருத்தத்துடன் எண்ணினான்; ‘நான் கடந்த காலத்தில் தோற்கடித்த என் பகைவனுடன் அவன் இப்போது நட்பு பாராட்டி வருகிறான்; இது ஏதோ ஒரு வகையான வஞ்சகமான துரோகச் செயலாகவே தோன்றுகிறது ||106||
என் சொந்த அதிகாரிகளில் சிலரும் கூட, என்னை தனியே விட்டு விட்டு அந்தப் பகைவர்களுடன் சேர்ந்து விட்டனர்; என் சொந்த வலிமையே என்னைக் கை விட்டு விட்டது; அனைத்து எல்லைகளும் மீறப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது ||107||
என் அமைச்சர்கள் லஞ்சம் பெற்று விட்டனர்; என் கருவூலங்கள் சூறையாடப்பட்டு விட்டன; ஒரு ஆட்சியாளனுக்கு இருக்க வேண்டிய வலிமையின் அனைத்து அம்சங்களும் மிக வேகமாகச் சிதைந்து வருகின்றன; அடுத்து நான் என்ன செய்வது என்பது தெரியாமல் திகைத்து நிற்கிறேன் ||108||
கடந்த காலச் செயல்களின் விளைவாகக் கிடைத்த இந்தப் பயனை எண்ணி நான் மிகுந்த விரக்தியில் ஆழ்ந்துள்ளேன்; இது என் இதயத்தில் எத்தனை வேதனையை ஏற்படுத்தி விட்டது; பகைவர் தரப்பு இவ்வளவு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில், நான் எப்படி அவர்களை எதிர்த்துப் போரிட முடியும்? ||109||
நீதிமான்களுக்கும் வலிமை மிக்கவர்களுக்கும் ஏற்படும் அவப்பெயர், மரணத்திற்குச் சமமானது; இந்த நீதி கடந்த காலத்தில் இது கூறப்பட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டும் உள்ளது; அந்த எண்ணத்தால் நான் உள்ளுக்குள் அஞ்சி நடுங்குகிறேன்; அதே கதி தனக்கும் நேர்ந்த விடுமோ? என்று அஞ்சினான் ||110||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் முப்பதாவது (30) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை:110
முதலாவது அத்தியாயம் முதல் முப்பதாவது (30) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
110 + 3138 = 3248
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -10, அத்தியாயம் -30 முடிவடைந்தது
அத்தியாயம் -31 தொடர்கின்றது