COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION
பாகம் -10
நீதிநெறி பாதை

அத்தியாயம் 29
மகன் மந்த புத்தி மகன்; மன்னனின் துயரம்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா தீபக்கிற்குத் தொடர்ந்து கூறினார் ‘அதே போலவே மதாலஸாவும் தன் குழந்தைக்குக் கல்வி அறிவை புகட்டி வந்தாள்; குழந்தை பிறந்த நாளன்று அவள் அறிவுறுத்தியபடியே, ஒரு பணிப் பெண் சென்று, அந்தக் குழந்தையின் மங்கல வருகையை குறித்து மன்னன் ரிதுத்வஜனுக்குத் தெரிவித்தாள் ||1||
அதைக் கேட்ட மன்னன் ‘நாம் இந்த நிகழ்ச்சியை இனிமையாக கொண்டாடுவோம்; சிறந்த அந்தணர்களை அழைத்து வாருங்கள்’ என்று கூறினான்; அந்தப் பணிப் பெண்ணும் மன்னனின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டாள் ||2||
அதன்படி மன்னன் குழந்தைக்குரிய ஜாதகர்மா* (பிறப்புச் சடங்குகள்) அனைத்தையும் நிறைவு செய்தான்; பலருக்கும் தாராளமாகப் பரிசுகள் வழங்கப்பட்டன; சம்பந்தப்பட்ட அனைவரும் முன்னிலையில், அந்தக் ஆண் குழந்தைக்கு ‘விக்ராந்தவர்மன்’ என்று பெயரிடப்பட்டது.
{* ஜாதகர்மா (Jatakarma) என்பது இந்து சாஸ்திரங்களின்படி, குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு முன் அல்லது பிறந்த சில நிமிடங்களில் செய்யப்படும் முதல் முக்கியமான சம்ஸ்காரம் ஆகும். இது குழந்தையின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், அறிவாற்றல் மற்றும் நற்பண்புகளை வேண்டி, தந்தையால் தேன் மற்றும் நெய் கலந்து குழந்தையின் நாக்கில் தடவி செய்யப்படும் ஒரு மங்கலச் சடங்காகும} ||3||
பெயர் சூட்டும் விழாவில் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் இருந்த போதிலும், அந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில், மதாலஸா மட்டும் ஏதோ அறிந்தவள் போலவும், ஒரு புதிரான பாவனையுடனும் புன்னகைத்தாள் ||4||
அவளது அந்த முக பாவனையை பார்த்த மன்னன் மனதிற்குள் கலங்கினான்; ‘இவனுக்குப் பெயரிடுவதற்கு முன் நான் அவளது கருத்தைக் கேட்காததால்தான் அவள் இப்படிச் சிரிக்கிறாளோ?; இந்தப் பெயரைப் பற்றி அவளுக்கு வேறு என்ன தெரியும்? ஏன் இப்படிப் புரியாத புதிராகச் சிரிக்கிறாள்?’ என்று அவன் சிந்தித்தான் ||5||
இப்போது நான் அவளிடம் இதற்கான காரணத்தைக் கேட்டால், இந்த முழு அவையிலும் நான் நகைப்புக்குரியவன் ஆகி விடுவேன்’ என்று எண்ணிய மன்னன், தான் சிக்கிக் கொண்ட அந்த இக்கட்டான நிலையை நினைத்து வியந்தவாறே, மௌனம் காக்கவே தீர்மானித்தான் ||6||
மகன் வளர்ந்து வந்தான்; அவனது தாய் அவனுக்குப் புகட்டிய ஞான மொழிகள் அவனது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது; அவன் பெரிய கல்வி அறிவு பெற்று இருந்த போதிலும், வெளித் தோற்றத்திற்கு மட்டும் மந்த புத்தி கொண்டவனைப் போலவே காணப்பட்டான் ||7||
இது அவனது தந்தைக்குப் பெரும் கவலையை அளித்தது ‘இவன் மிகுந்த அறிவு கூர்மை கொண்டவனாக இருந்தும், ஏன் இவ்வளவு பொலிவிழந்து காணப்படுகிறான்?; இவன் ஏன் மந்த புத்தி உள்ளவன் போல மாறி விட்டான்?’ என்று அவன் மனம் வருந்தியது ||8||
என் அன்பிற்குரிய, பக்தி மிக்க மனைவி சிறந்தவள்; நற்பண்புகள் நிறைந்தவள்; தர்ம நெறியில் உறுதியாய் நிற்பவள்; நானும் நீதி நெறி வழுவாதவன்; அப்படியிருக்க, எங்கள் மகன் மட்டும் ஏன் எப்போதும் சூனியமான மன நிலையில், உணர்ச்சியற்ற முக பாவனை கொண்டவனாகவே இருக்கிறான்? ||9||
ரிதுத்வஜன் இவ்வாறு வருந்தினார்; ஆனால் தன் மகன் ஏற்கனவே பேரானந்த நிலையான ஞான நிலையை அடைந்து விட்டான் என்பதை அவரால் உணர முடியவில்லை; அவருக்கு அந்தப் பகுத்தறிவு தெளிவு இல்லாததால், அவர் வருத்தத்திலேயே மூழ்கி இருந்தார் ||10||
அவர் மகன் தன் உள்ளத்தில் உறையும் ஆத்மா வில் உறுதியாக நிலை பெற்றான்; இதுவே பேச்சு வழக்கில் பிரம்மவித்வாரிஷ்டர்* நிலை என்று போற்றப்படுகிறது; அசைக்க முடியாத அந்த மையப் புள்ளியில் அவன் நிலை பெற்றிருக்கையில், சாதாரண மக்களைப் போல உலகியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று எப்படி அவனிடம் எதிர் பார்க்க முடியும் அல்லது யாரால் அவனை அதற்கு தூண்ட முடியும்?
பிரம்மவித்வாரிஷ்டர் (Brahmavidvarishtha) என்பது அத்வைத வேதாந்தத்தில் பிரம்ம ஞானத்தின் மிக உயர்ந்த நிலையை அடைந்த ஜீவன் முக்தரைக் குறிக்கும்; அப்படிப்பட்ட இறை நிலையை அடைந்த ஞானிகளை அவர்களின் நிலைக்கு ஏற்ப நான்கு வகையாக இந்து சாஸ்திரங்கள் பிரிக்கின்றன; அவை (i)பிரம்மவித்:- பிரம்மத்தை உணர்ந்தவர்; (ii)பிரம்மவித்வரன்:- ஞானிகளில் சிறந்தவர்; (iii)பிரம்மவித்வர்யன்: ஞானிகளில் மிகச் சிறந்தவர்; (iv)பிரம்மவித்வாரிஷ்டர்: ஞானிகளிலேயே மிக உயர்ந்த, தலைசிறந்த நிலையில் இருப்பவர் ||11||
அவன் இந்த உயர்ந்த ஞான நிலையை அடைந்தற்குக் காரணம், தாய் மதாலஸா அவனுக்குத் தொடர்ந்து போதித்து வந்திருந்த ஆன்மீக அறிவே ஆகும்; அதன் விளைவாக, அவன் அனைத்து விதங்களிலுமான உலகியல் செயல்பாடுகளையும் துறந்தான்; அத்தகைய நிலைக்கு சென்று விட்டவர்களை பொறுத்தவரை, துறவு மனப்பான்மை வியப்புக்குரிய ஒன்றல்ல’ ||12||
தெய்வத்தின் கருணைப் பார்வை இருந்தால் மட்டுமே, தவறான உலகியல் பார்வைகளை ஞானிகளால் தடுத்து நிறுத்த முடியும்; அப்படியிருக்க, அவனது சொந்தத் தாயே அவனுக்கு அன்புடன் ஆன்மீக அறிவை போதித்தபோது, அவன் மிக விரைவிலேயே ஒரு முழுமையான ஞானியாக மாறியதில் எப்படி ஆச்சரியப்பட முடியும் ?||13||
விதிப்படி மீண்டும் ஒரு முறை, மதாலஸா கருவுற்றாள்; இம்முறையும் அவள் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தாள்; இது மன்னருக்கும், குடிமக்கள் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது||14||
மன்னர் மிகுந்த பாசத்துடன் அந்த இரண்டாவது மகனுக்கு ‘சுபாகு’ என்று பெயரிட்டார்; ஆனால், மதாலஸா அந்தச் செய்தியைக் கேட்டதும், முன்பைப் போலவே அதே மர்மமான, அர்த்தம் பொதிந்த புன்னகையுடன் சிரித்தாள்||15||
அவளது அதே போன்ற முந்தைய நிலையிலான புன்னகையை கண்ட மன்னர் மீண்டும் வருத்தமடைந்தார்; அவளிடம் அது பற்றி விசாரிப்பதற்கும் கூச்சப்பட்டார்; அவர் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்; அதன் பிறகு, அந்தப் பாச மிக்கத் தாய் தன் மகனைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, அவனது காதுகளில் அன்புடன் இவ்வாறு மெல்ல உரைக்கத் துவங்கினாள் ||16||
எலும்புக் கூட்டையே அடிப்படையாகக் கொண்ட இந்த உடல், நரம்புகளாலும் இரத்த நாளங்களாலும் பின்னப்பட்டிருக்கும் இந்த உடல், தசைகளால் நிறப்பப்பட்டு இருக்கும் இந்த உடல், உள்ளே நிணநீர்* மற்றும் பிற திரவங்களால் நிறைந்திருக்கும் இந்த உடல்…
{*நிணநீர் (Lymph) என்பது வெள்ளை அணுக்களைக் கொண்ட ஒரு நிறமற்ற, தெளிவான திரவமாகும்; இது திசுக்களில் இருந்து கழிவு நீரைச் சேகரித்து, இரத்தத்தில் கலந்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரிக்கவும், திரவ சம நிலையை நிலை நிறுத்தவும் உதவுகிறது.} ||17||
தோலால் மூடப்பட்டிருப்பதால்தான், காகங்களும் நாய்களும் வந்து தசைகளைக் கொத்தித் தின்று விடாமல் இருக்கின்றன; இயற்கையின் அற்புதமான படைப்பின் அமைப்பைப் பார்; எல்லாச் சூழ்நிலைகளிலும் அது நம்மை எப்படிக் காத்து நிற்கிறது என்பதைப் பார் ||18||
சிறுநீரும், மலமும் நிறைந்திருக்கும் இந்த உடலை, எப்படி தூய்மையானதாக கருத முடியும்?; ஆகவே இதனை சிறந்ததல்ல என்ற உண்மையை உணர்ந்து கொண்டு , இதன் மீது அளவுக்கதிகமாக பற்று கொள்ளாதே ||19||
இதன் மீது மோகம் கொள்ளாதே; நீ வெறும் உடல் மட்டுமல்ல; இந்த உடல் உனக்கு நிரந்தரமானதும் அல்ல; ஆகவே எப்போதும் இந்த உடலைப் பற்றியே கற்பனையிலேயே இருந்து கொண்டு பற்று என்பதிலும் உடலின் மீதான மோகத்திலும் சிக்கிக் கொள்ளாதே||20||
உடல், ஐம்புலன்கள், மனம், உயிர் மூச்சு, அறிவு மற்றும் அகங்காரம் ஆகியவற்றை உள்ளே உறையும் ‘ஆத்மா ’ என்று எப்படிக் கூற முடியும்?; அதை சற்று சிந்தித்துப் பார் ||21||
அனைத்தையும் காண்பவன், அவன் காணும் காட்சியிலிருந்து நிச்சயமாக வேறுபட்டவன்; எனவே, சாட்சியாகத் திகழும் நீ, உனக்குள் ஒளிரும் அந்த ‘ஆத்மா வுடன் உணர்வு பூர்வமாக ஒன்றிணைந்து இருக்க வேண்டும் ||22||
நீ இதுவரை பிறக்காதவன் என்றால், நீ எப்படி இறக்க முடியும்?; உனது ஆத்மா வானது உடலுக்கு ஏற்படும் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது, அதற்கும் அவற்றுக்கும் சம்மந்தம் கிடையாது; எனவே, ‘வர்ண-ஆசிரம தர்மம்’* என்று அறியப்படும் வாழ்க்கை நெறிகள், அந்த ஆத்மாவிற்கு எப்படி பொருந்த முடியும்.
{*வர்ணாஸ்ரம தர்மம் என்பது பொதுவாக நான்கு முக்கிய பிரிவுகளுக்குப் பொருந்தும்: பிராமணர்களாகிய ஆசிரியர்கள், ஷத்ரியர்கள் எனும் போர் வீரர்கள், வைசியர்களாகிய வணிகர்கள், விவசாயிகள் போன்றோர் மற்றும் சூத்திரர் எனப்படும் பணிவிடை செய்பவர்கள்; ஆஸ்ரம தர்மம் என்பது பொதுவாக வயதின் அடிப்படையில் அமையும் நான்கு நிலைகளுக்குப் பொருந்தும்; (i)பிரம்மச்சரியம்: கல்வி மற்றும் ஒழுக்கத்தைக் கற்கும் மாணவர் பருவம்; (ii) கிருஹஸ்தம்: திருமணம் செய்து குடும்பம் மற்றும் சமூகக் கடமைகளை ஆற்றும் இல்லற வாழ்க்கை; (iii) வானப்பிரஸ்தம்: உலக பற்றுகளைக் குறைத்து, ஆன்மீகத்தில் கவனம் செலுத்தும் ஓய்வு நிலை; இறுதியாக, (iv) சந்நியாசம்: முழுமையான பற்றற்ற நிலையில், முக்திக்கு முயற்சிக்கும் துறவற நிலை; எனினும், இவையனைத்தும் ஒருவன் பிறந்த சூழலைப் பொறுத்தே அமைகின்றன; எனவே, இவை முதன்மையாக இந்த உடலுக்கே உரியவை ஆகும்}||23||
மதாலஸா தொடர்ந்து கூறினாள்: உனக்கென்று தனிப்பட்ட முறையில் பெற்றோர்கள் எவரும் இல்லை; நீ எப்போதும் அந்தத் தெய்வத்துடன் ஒன்றிணைந்தது இருக்கிறாய்; நீ அதனை அறியாமல் இருந்தாலும் கூட நீ தெய்வத்துடன் தான் ஒன்றிணைந்து உள்ளாய்; அந்த ஆனந்தத்தை அனுபவிக்க, உனக்குத் துணையோ அல்லது ஒரு வாழ்க்கைத் துணைவியோ எதற்காக தேவை?; இதனையும் சற்றுச் சிந்தித்துப் பார்||24||
ஆத்மா வாகத் திகழும் நீ, அனைத்துத் தேவர்களாலும் போற்றப்படுபவன், பிறரால் அறிந்து கொள்ள முடியாத அந்த பரமானந்தத்தை அறிந்தவன் ஆவாய்; அறியாமையில் உழலும் மக்களின் மரியாதையினால் உனக்கு என்ன பயன் கிடைக்கும் ||25||
ஆத்மாவாகிய நீயே தனித்துவமானவன்; உன் இருப்பிடம் ஆத்மாவின் பரந்த வெளியில் உள்ளது; அர்த்தமற்ற கட்டமைப்புகள் உனக்கு எப்படி கவர்ச்சி அளிக்க முடியும், அவை உனக்கு என்ன மகிழ்ச்சியைத் தர முடியும்? ||26||
நீ ஆத்மாவுடன் உணர்வு பூர்வமாகத் தொடர்பு கொள்ள முடிந்தால், விதிக்கப்பட்ட நடத்தை முறைகளுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை; மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருப்பதைத் தவிர, நீ அனைத்திற்கும் அப்பால் உள்ளவன்; இதை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும் ||27||
அவனும் சமூகத்தில் மந்த புத்தியுள்ளவனைப் போல நடந்து கொண்டான்; அடிக்கடி தரையில் சாய்ந்து கிடப்பதைக் காண முடிந்தது; ஆனாலும் என்ன ஞான நிலைகளுக்கான போதனைகளை பெற்ற மதாலஸாவின் இரண்டாவது மகனும் ஞானியாகி விட்டார்||28||
தனது இரண்டாவது மகனைக் கண்டதும், அவனும் ஆர்வமற்றவனாகவும் உயிரற்றவனாகவும் இருப்பதை மன்னன் உணர்ந்தான்; இது மன்னனை மேலும் வேதனைப்படுத்தியது; இரவும் பகலும் தன் இரு மகன்களின் நடத்தை அவர் மனதை வாட்டியது ||29||
மீண்டும் மதாலஸா கர்ப்பமுற்றாள்; இம்முறையும் அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அரசன் அதை அறிந்து கொண்டதும், பிரசவ அறைக்கு வந்து சேர்ந்தான்||30||
அவன் ஜோதிடர்களிடம் கலந்து ஆலோசனை செய்தான்; தயவு செய்து காலத்தின்படி இவனுடைய ஜாதகத்தைப் பார்த்து எனக்கு ஆலோசனை கூறுங்கள்; இவனால் ஒரு ராஜ்ஜியத்தை ஆள முடியுமா; கிரகங்கள் என்ன முன்னறிவிக்கின்றன||31||
அவர்களில் ஒருவர் பதிலளித்தார்: அவன் புத்திசாலியாகவும் மிகுந்த அறிவாளியாகவும் இருப்பான்; அவன் பெறும் அறிவை சாதாரண மனிதர்களால் பெறவோ, அனுபவிக்கவோ முடியாது ||32||
அவன் எவ்வளவு காலம் வாழ்வான் என்று நம்மால் கணிக்க முடியா விட்டாலும், சில கிரகங்கள் உயர் நிலையில் உள்ளன’ என்றார்; அரசன் குறுக்கிட்டு கேட்டார்; இந்த அளவு யோகமே போதுமானதாக இருக்காதா||33||
அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும், ஒருவனுக்கு உயர்ந்த திறமைகள் தேவை; அவனது புத்திசாலித்தனமும் நீண்ட ஆயுளும், இரண்டும் அவர்கள் சொல்வது போல் இருந்தால், ஒரு ராஜ்ஜியத்தை ஆள்வது கடினமாக இருக்காது ||34||
அரசர் அவர்களிடம் அதோடு ஜாதக பலன்கள் கூறியது போதும் என்று கூறி விட்டார்; அடுத்து ஜாத்கர்மா சடங்குகளைச் செய்ய ஏற்பாடு செய்தார்; பெயர் சூட்டும் விழாவிற்குப் பிறகு பிறந்த இந்த புதிய மகன் சத்ருமர்தன் என்று அழைக்கப்பட்டான்||35||
தனது முந்தைய இரு மகன்களுக்கும் பெயரிட்டபோது, தன் மனைவியின் சிரிப்பைக் கண்டு கூச்சமுற்றிருந்த அவன் இந்த மூன்றாவது மகனுக்குப் பெயரிடுவதற்கு முன் தன் அரசியிடம் கலந்தாலோசிக்க முடிவெடுத்திருந்தான்; ஆயினும், அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த கொண்டாட்டங்களின் ஆரவாரத்தில், அவன் அந்த எண்ணத்தையே மறந்து விட்டான்||36||
அவன் மதாலஸாவை சந்தித்தபோது, அவள் முன்பைப் போலவே மீண்டும் அர்த்தம் நிறைந்த சிரிப்பு சிரித்தாள்; மீண்டும், அதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் மன்னன் திகைத்துப் போனான்; இவள் ஏன் மீண்டும் மீண்டும் இப்படி நடந்து கொள்கின்றாள் என்று வியந்து கொண்டே இருந்தான் ||37||
அவள் மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்தாள்; அவளிடம் முதலில் கேட்காமல் நான் அவனுக்குப் பெயர் சூட்ட மாட்டேன் என்று தீர்மானித்து விட்டு , மன்னன் தன் சொந்தக் காரியங்களில் ஈடுபட்டான் ||38||
இந்த மகனிடமும், அவனுடைய சகோதரர்களிடம் அவள் அளித்த அதே ஆன்மீக அறிவை அவனது தாய் அவனுக்குக் கற்பித்து, அவனிடம் இவ்வாறு கேட்டாள் ‘ஓ குழந்தாய் , நீ எங்கிருந்து வந்தாய் என்று சொல்?||39||
நீ உண்மையில் யார், நீ உண்மையில் எங்கு இருக்கிறாய்?; இப்போது ஏன் அழுகிறாய்?; உன்னை இப்படி மயக்கியது யார்?; இந்தக் கேள்விகளைப் பற்றி உண்மையாகச் சிந்தனை செய் ||40||
நீ இதற்கு முன் குழந்தையாக இருந்ததில்லை; இப்போதுதான் புதிதாகப் பிறந்திருக்கிறாய் என்றால், என் மார்பகத்தை உறிஞ்ச வேண்டும் என்று உனக்கு எப்படித் தெரியும்?; உனக்குத் தாய்ப் பால் தேவை என்று உனக்கு எப்படித் தெரியும்? ||41||
உனக்கு ஏற்கெனவே அவற்றைக் கற்பித்தது யார்?; உன்னுடைய இந்தச் செயல் உங்களுக்கு ஏன் ஆச்சரியமளிக்கவில்லை?; நீ உன்னுடன் கொண்டு வந்துள்ள உன் மனதில் சேமிக்கப்பட்ட பதிவுகளின் காரணமாகவே, உன்னால் சிரமமின்றி இப்படி செயல்பட முடிகிறது||42||
உன் கடந்த காலச் செயல்கள் பலனளித்ததன் காரணமாகவே, இங்கே, எங்கள் வீட்டில் இந்த உடலில் உனக்கு இந்தப் பிறப்பு வழங்கப்பட்டுள்ளது; இது கர்மாவின் பலனாகும், அதைத்தான் நீ இப்போது காண வேண்டும்; அதன் மூலம் காணுபவராகவும் , காணப்படுவதிலிருந்து வேறுபட்டவராகவும் மாறுகிறீர்கள்||43||
ஒருவேளை நீ தவறான அடையாளத்திற்கும் தவறான பற்றுக்கும் அடி பணிந்து, பின்னர் மேற் கூறியவற்றால் தூண்டப்பட்ட மனம், பேச்சு அல்லது உடலுடன் செயல்பட்டால், குறைந்த பட்சம் 8.4 மில்லியன் முறையாவது இந்த பிறப்பு-இறப்புச் சுழற்சி மீண்டும் மீண்டும் தொடரும் ||44||
ஒற்றை சாராம்சமான ஆத்மனை எந்த விதமான உருவ மாற்றங்களும் செய்ய முடியாது; மாற்றங்கள், எண்ணங்கள் மற்றும் எந்த விதமான உணர்ச்சிகளாலும் பாதிக்கப்படாமல், அவற்றை வேடிக்கை பார்க்கும் ஒரு அமைதியான சாட்சியாக மட்டுமே அது விளங்குகிறது; ‘நான் அந்த ஆத்மா, மனதிற்கு அப்பால் உள்ள அமைதியான சாட்சி’ என்று தொடர்ந்து தியானிப்பதன் மூலமும், அனுபவபூர்வமாக உணர்வதன் மூலமும், ஆத்மாவின் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள முடியும் ||45||
நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன், எல்லாம் என்னுள் இருக்கிறது என்பதைத்தான் தவறாமல் தியானிக்க வேண்டும், உணர்வு பூர்வமாக அனுபவிக்க வேண்டும்;எல்லா விதமான முரண்பாடுகளையும் கடக்க வேண்டும்||46||
தனது உண்மையான சுய வடிவத்தை மறந்து, காமம், சினம் மற்றும் பேராசை ஆகியவற்றின் தாக்குதல்களுக்கு ஆட்பட்டு, இரவும் பகலும் புலனின்பங்களையே நாடி அலைந்து கொண்டிருந்தவாறு தொடர்ந்து உயிர் வாழ்வது தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமாகும் ||47||
காமம், சினம் மற்றும் பேராசை ஆகியவற்றை, உனது சுயக் கட்டுப்பாட்டைக் கொள்ளையடிக்கும் திருடர்களாக அறிந்து கொள்; இவையே நரகத்திற்கான வாயில்கள் என்று அழைக்கப்படுகின்றன; ஒருவேளை நீ இம் மூன்றிலும் சிக்கிக் கொண்டால், தாங்க முடியாத துயரத்தை அனுபவிக்க நேரிடும்||48||
புலன்களின் தொடர்புகளும், அவற்றைப் பற்றியே இடை விடாமல் சிந்தித்து அலைவதும் கானல் நீரைப் போன்ற மாயையே ஆகும்; அவற்றைப் பற்றியே இரவும் பகலும் பேசிக் கொண்டிருக்காதே; அது தினமும் விஷத்தை உட் கொள்வதற்குச் சமமானது; அது உடலைச் சிதைத்து, அதன் தீய விளைவுகளை மட்டுமே பெருக்கும் ||49||
நீ மேற்கொள்ள வேண்டிய ஒரே சபதம், உனக்குள் இருக்கும் ஆத்மாவின் மீது உன் பார்வையை நிலை நிறுத்துவதுதான்; ஒருவேளை நீ இந்தச் சபதத்தை மீறினால், பெரும் துன்பங்கள் உனக்காகக் காத்திருக்கின்றன||50||
எதிர்பாலினத்தவரைப் பார்ப்பதும், அவர்களைப் பற்றியே வெறித்தனமாக சிந்திப்பதும், இவ்வுலகிலேயே ஒரு வகையான நரகம் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது; அவர்களை ஒருமுறை கண்ணால் நோக்கினால் கூட, அது துயரத்திற்கு விடுக்கப்படும் அழைப்பாகும்; எனவே, உன் இலக்கிலிருந்து வழுவி விலகிச் செல்லாதே ||51||
மரம் அல்லது பிற பொருட்களால் செய்யப்பட்ட ஒரு பெண் சிலையோ, அல்லது மிக நேர்த்தியாக வரையப்பட்ட ஒரு ஓவியமோ கூட, விழிப்புணர்வற்ற ஒருவனைப் பகற் கனவுகளின் பாதையில் இழுத்துச் சென்று விடும்; எனவே, ஏற்கனவே துன்பம் விளைவிக்கும் என்று உனக்குத் தெரிந்த விஷயங்களைத் தவிர்த்து விடுமாறு அறிவுறுத்துகின்றேன் ||52||
வேட்டைக்காரர்கள் அமைத்து வைத்துள்ள செயற்கையான பெண் யானைகளைக் கண்டு மயங்கி, வலிமை மிக்க யானைகளே வலையில் சிக்கிக் கொள்கின்றன. நிலைமை இவ்வாறிருக்கையில், தசைநார் இரத்தம் நிறைந்த உயிருள்ள ஒரு பெண்ணை நீ கண்டால் என்னவாகும்?; அது நிச்சயமாக உன் வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்||53||
சிவப்பு, மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்திலுள்ள சாதாரண மண்ணை, முறையே செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி என்று தவறாகக் கருதி, அதை உன் மணிக்கட்டில் அணிந்து கொண்டு பெருமையாகப் பறை சாற்றினால், நிச்சயமாகத் தீய விளைவுகள் உன்னை நிரந்தரமாகப் பற்றிக் கொள்ளும்||54||
ஆகவே, நீ உன் சபதத்தைக் கடைப் பிடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்; யாரிடமும் எதையும் யாசிக்காமல், உனக்குக் கிடைக்கும் உணவை உண்டு வாழ வேண்டும்; தேவையற்ற உறக்கத்திற்கு ஆட்படாமல், தரையிலேயே படுத்து ஓய்வெடுக்க வேண்டும்; மேலும், உன் அந்தரங்க உறுப்புகளை மட்டும் போதுமான அளவு மறைத்து* வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.
{*ஆடையின்றி, முற்றிலும் நிர்வாணமாகவே இருத்தல் வேண்டும் என்ற அறிவுரை, தனிமையில் வாழும் பல துறவிகளுக்கு இன்றும் பொருந்தும்} ||55||
மற்ற அனைவருக்கும் இரவாகக் தோன்றுவது எதுவோ, அதுவே விழிப்புணர்வு பெற்றவர்கள் (ஆத்ம ஞானம்) விழித்திருக்கும் நேரமாகும்; சாதாரண மனிதர்கள் எதில் அதிக ஆர்வம் காட்டி விழித்திருக்கிறார்களோ (பொருள் ஈட்டுதல், சிற்றின்பங்கள், உலகியல் ஆசைகள்) அந்த விஷயங்களை ஒரு ஞானி ஒரு கனவாகவோ அல்லது தேவையற்ற ஒன்றாகவோ கருதி போதுமான உறக்கத்தைப் பெற வேண்டும்.
{விளக்கம்: இதில் என்ன கூறப்பட்டு உள்ளது என்பதை சுருக்கமாகச் சொன்னால், உலகம் எதைப் போற்றுகிறதோ அதை ஞானி பொருட்படுத்துவதில்லை; உலகம் எதை அறியாமல் இருக்கிறதோ அதை ஞானி உணர்ந்திருக்கிறார்} ||56||
இவ்விதம் நீயே தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால்,தேவையற்ற மனக் கலக்கங்களைத் தவிர்க்க உன்னால் இயலும்’; இவ்வாறு மதாலஸா தன் குழந்தைக்குத் தொடர்ந்து போதனை செய்து வந்தாள்; அந்த குழந்தையும் கூர்மையான அறிவு பெற்று இருந்ததினால் , அன்னை கற்பித்தவற்றை மிக விரைவாகவே கற்றுத் தேர்ந்தது||57||
அந்த குழந்தையும் பிற்காலத்தில் ஞான நிலை பெற்ற மேதையாகத் மாறியது; உலகியல் சார்ந்த விஷயங்களை முற்றிலும் தள்ளி வைத்து விட்டு விடுத்து, தனிமையை தேர்ந்தெடுத்துக் கொண்டது; ஆனால் வெளித் தோற்றத்திற்கு மந்த புத்தி கொண்டவனைப் போலவும், உணர்ச்சியற்றவனைப் போலவும் அது நடந்து கொண்டது; பெரும்பாலும் தரையிலேயே படுத்து ஓய்வெடுப்பதும் அதன் பழக்கமாக இருந்தது ||58||
காலப்போக்கில் உலகியல் விவகாரங்கள் யாவும் கானல் நீரைப் போல நிலையற்றவை என்பதை உணர்ந்து கொண்ட இளவரசன், தனக்கென ஒரு பற்றற்ற வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; பரம்பொருள் குறித்த தனது ஆழ்ந்த ஞானம் எவ்விதக் களங்கமும் இல்லாமல் இருக்கும் வகையிலும், இன்றியமையாத விஷயத்தின் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தியவாறு, அந்த இளவரசன் உலக பற்றின்றி வாழ்ந்து வந்தான் ||59||
அதன் பிறகு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்து சேர்ந்தது; மதாலஸா மீண்டும் கருவுற்றிருந்தாள்; ஐந்து கோள்கள் மிகச் சிறந்த நிலையில் அமைந்திருந்த ஒரு மங்களகரமான வேளையில், அவள் தன் நான்காவது மகனைப் பெற்றெடுத்தாள் ||60||
ஜோதிடர்கள் அரசருக்கு அறிவுரை கூறினர் ‘இனி கவலைப் படத் தேவையில்லை, இந்த மகன் நிச்சயமாக உயர்ந்த அரசு பதவிகளை அடைவான் என்று கிரகங்கள் முன்னறிவிக்கின்றன ||61||
இதற்கு முன்பு உங்களால் பெற்றெடுக்கப்பட்ட மகன்கள் அனைவரும் எப்படி மாறி விட்டார்களோ அவர்களை போன்ற கிரக நிலைகள் எதுவும் இவனுக்கு அமைந்திருக்கவில்லை; நிச்சயமாக இனி நீங்கள் கவலை இன்றி இருக்கலாம் ||62||
இந்த மகன் அதிர்ஷ்டசாலி; அவன் புகழ் பெற்ற அரசனாவான்; அது மட்டுமின்றி ஆன்மீக உயர்வையும் பெறுவான்; அவனது ஜாதகங்களின்படி இதை உறுதியாக கூற முடியும் ||63||
சகுனங்கள் அனைத்தும் சாதகமாக உள்ளன’ என்றனர்; அரசர் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார்;அவர் தனது இளைய மகனுக்காக வேத ஜாதகர்மா சடங்குகளைச் செய்து, தாராளமான மனதுடன் தானங்களைக் கொடுத்தார் ||64||
அரசர் தனது அன்புக்குரிய மனைவியிடம் கேட்டார் ‘இளவரசனுக்குப் பெயர் சூட்டும் நேரம் வந்து விட்டது, ஆனால் முதலில் சொல், நமது முதல் மூன்று மகன்களுக்கும் பெயர் சூட்டிய பிறகு நீ ஏன் மூன்று முறை சிரித்தாய்?; ஆகவே இந்த முறை நீயே நமது இளம் இளவரசனுக்குப் பெயர் சூட்டு ||65||
மதாலஸா அதையெல்லாம் கேட்ட பின்னர் மெதுவாகச் சிரித்தபடி பதிலளித்தாள்; தயவு செய்து நான் கூறுவதை கவனமாகக் கேளுங்கள், எனது அர்த்தம் பொதிந்த சிரிப்பின் நோக்கம் என்னவென்று பின்னர் தெரியும் ||66||
விக்ராந்த் என்ற பெயரைப் பொறுத்தவரை ‘கிராந்தி’ என்ற சொல் இயக்கத்தைக் குறிக்கிறது; ஆனால் இயக்கம் என்பதும் வரம்புக்கு உட்பட்டது; எங்கும் வியாபித்து உள்ள ஆத்மாவுடன் ஒப்பிடும்போது, மற்ற இயக்கங்களால் நாம் என்ன பெறப் போகிறோம்? ||67||
ஆத்மாவை எங்கும் நிறைந்தது என்ற உண்மையை புரிந்து கொண்டால், வருவதும் போவதும் அதன் இயல்பில் இல்லை என்பதும் புரியும்; எனவே நிலையற்றதை நோக்கிய இயக்கத்தைக் குறிக்கும் நமது முதல் குழந்தையின் பெயரை குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் சிரித்தேன் ||68||
ஆத்மாவை அதன் இயல்பில் இருந்து பிரிக்க முடியாது; புனிதமான ஒளியான அதற்கு வடிவம் இல்லை; அந்தப் பிரகாசத்தில் ஒருவரால் எப்படி கைகளையும் கால்களையும் கண்டறிய முடியும்? எனவே நல்ல கைகளும் செயலும் உள்ளவனைக் குறிக்கும் பெயரான சுபாகு என்பது என்னைச் சிரிக்க வைத்தது ||69||
ஆத்மா இயல்பாகவே முழுமையான ஒன்றாகும் ; அதற்கு கை, கால், முகம் போன்ற உடல் உறுப்புக்கள் கிடையாது; எனவே, நம்முடைய இரண்டாவது மகனுக்கு சுபாஹு என்று பெயரிடுவது, அடைய முடியாத ஆத்மா வை அடைவதே தேவையான ஒரே செயலாக இருக்கும்போது, எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றியது ||70||
மூன்றாவது மகனையும் அவனது பெயரையும் பொறுத்தவரை, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்; ஆத்மா என்பது இயல்பாகவே ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, வேறு எந்தப் பாலினமும் அல்ல; அது அனைத்திலும் ஊடுருவி, அனைத்துமாக விளங்கி, சமநிலை கொண்டதாகத் திகழ்கிறது; அப்படியிருக்க, அதற்கு எதிரிகள் எங்கிருந்து இருக்க முடியும்? எங்கும் நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருளின் மீது எவரேனும் பகைமை கொள்ள முடியுமா? ||71||
ஒவ்வொருவரும் காமம், கோபம், சீற்றம் போன்ற அக எதிரிகளுடன் போராட வேண்டியுள்ளது என்று நீங்கள் வாதிடலாம்; ஆனால், ஆத்மா வே பரம்பொருள் என்று ஒருவன் உறுதியாக ஏற்றுக் கொண்டால், நான் கூறுவதைக் கவனமாகக் கேளுங்கள் ||72||
காமமும் அக எதிரிகளின் தாக்குதல்களும் என்பவை, குறையுடைய புத்தியின் தூண்டுதலுக்கு அடிபணிவது ஆகும்; ஆத்மா புத்திக்கு அப்பாற்பட்டது; மனம் செயல்படும் விதத்தை அது ஒரு சாட்சியாகவே நின்று பார்த்துக் கொண்டு இருக்கின்றது; இயல்பாகவே அதற்கு என்று எதிரிகள் எவரும் இருந்ததில்லை||73||
ஆத்மா விற்கு எதிரிகளே இல்லாதபோது குழந்தைக்கு ‘சத்ருஜித்’ (எதிரிகளை வென்றவன்) என்ற பெயரைச் சூட்டுவது கேட்பதற்கே சங்கடமாக இருந்தது; ஆகவே விருப்பு-வெறுப்புகளுக்கும், அன்பு-பகைமைகளுக்கும் அப்பாற்பட்ட அந்த ஆத்மா வுடன் ஒப்பிடுகையில், அப் பெயர் உண்மையற்றதாகவே தோன்றுகிறது; அதனால்தான், மூன்றாவது முறையாக நான் சிரித்தேன் ||74||
அந்த விளக்கத்தைக் கேட்டதும் மன்னன் கடும் சினம் கொண்டான்; தன் மூன்று மகன்களுக்கும் நேர்ந்த கதியைக் கண்ணுற்ற அவன், தன் மனைவி உண்மையில் எதை உணர்த்த முயல்கிறாள் என்று வியப்புடன் சிந்தித்தான், அவளிடமே கேட்டான்||75||
அதற்கு அவள் இவ்வாறு விளக்கினாள் ‘எந்தவிதமான இருக்கைகளோ, அமரும் இடங்களோ தேவைப்படாத அந்தப் பரம்பொருள் தத்துவம், ஓரிடத்திலிருந்து எழுந்து வேறெங்கும் செல்வது இல்லை; ஒருவன் அந்தத் தத்துவத்தில் முழுமையாக நம்பிக்கைக் கொண்டு இருந்தபோது ‘விக்ராந்த்’ (வெற்றியை நோக்கிச் செல்பவன்) என்ற பெயர் அவனுக்குப் பொருத்தமானதாகவோ, அர்த்தமுள்ளதாகவோ எப்படி இருக்க முடியும்? ஏனெனில், அப்பெயர் ‘வெற்றியை நோக்கிய இயக்கம்’ என்பதையே குறிக்கிறது ||76||
அதேபோல, தன் சொந்த வலிமையாலும் திறமையாலும் மற்றொருவரை வென்று வாகை சூடுபவனை ‘சுபாஹு’ (வலிமை மிக்கக் கரங்களை உடையவன்) என்று அழைப்பது பொருத்தமாக இருக்கலாம்; ஆனால், இங்கு நாம் அடைய வேண்டிய அந்தப் பரம்பொருள் தத்துவமோ, நிலையற்ற வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டதாகத் திகழ்கிறது ||77||
அவ்வாறே, ஒருவன் உண்மையாகவே ஆத்மா வில் நிலை பெற்று, அமைதியில் திளைத்திருக்கும்போது, தற்செயலாக ஒரு ஈ வந்து அவன் உடலில் அமர்ந்தாலும் அவன் அதை விரட்டாமல், எவ்விதச் சலனமோ, அமைதியின்மையோடு இன்றி அமைதியாகவே இருந்தால், ‘சத்ருஜித்’ (எதிரிகளை வென்றவன்) என்ற பெயர் அவனுக்குப் பொருந்தாததாகவே, உண்மையற்றதாகவே தோன்றும்; அதனால்தான் நான் சிரித்தேன் ||78||
நம்முடைய மூன்று மூத்த மகன்களின் எதிர்காலத்தை முன்னரே அறிந்திருந்ததால், அவர்களுக்குச் சூட்டப்பட்ட அந்தப் பொருத்தமற்ற பெயர்களைக் கண்டு சிரிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இருக்கவில்லை; மதாலஸாவின் கணவனான அந்த மன்னன், அவள் கூறிய விளக்கங்களை அமைதியாகச் கேட்டான்; பின்னர் அவளை நோக்கி இவ்வாறு கூறினான் ||79||
நீர் எதிர்காலத்தை அறிந்தவள்; அதனால்தான் என் மகன்களுக்கு நாங்கள் இட்ட பெயர்களைக் கண்டு நீ சிரித்தாய் ; சரி அப்படியென்றால், எனது இளைய மகனுக்கு — உமக்கு ஏற்புடையதாகத் தோன்றும் ஒரு பெயரைச் சூட்டி நீ ஏன் எனக்கு உதவக் கூடாது? ||80||
அதற்கு அவள் பதிலளித்தாள் ‘சமூகத்தில் அன்றாடப் பரிமாற்றங்களை மேற் கொள்வதற்காகவே பெயர்கள் சூட்டப்படுகின்றன; நீர் இவனது உடலுக்கு ஒரு பெயரைச் சூட்ட விரும்பினால், இவனை ‘அலர்க்கன்’ (Alarka) என்ற பெயரால் அழைக்கலாம் ||81||
இப்பெயர் வெறி நாயை குறிப்பதாகும்; விதி வசத்தால் வெறி நாய் எவ்வாறு ஒரு கொடிய நோயால் துன்புற வேண்டுமோ, அவ்வாறே இந்த மகனும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அற்பமான புலனின்பங்களில் மூழ்கித் திளைப்பான்; ஆகையால், ‘அலர்க்கன்’ என்ற பெயரே இவனுக்குப் பொருத்தமானதாகும் ||82||
மேற்கூறிய சொல்லுக்கு மற்றொரு பொருளும் உண்டு; காலப்போக்கில் இவன் பக்குவமடைந்து, ஆன்மீக அறிவைத் தேடிப் பயணிப்பான்; இறுதியில் மெய்ஞானம் பெற்ற மேலோரின் வரிசையில் இவனும் இணைவான்;ஆகையால், இவனை ‘அலர்க்கன்’ என்றே அழைப்பது சாலப் பொருத்தமாகும் ||83||
அரசன் அவளது ஆலோசனையை ஏற்றுக் கொண்டான்; அவன் தனது இளைய மகனுக்கு ‘அலர்க்கன்’ என்று பெயரிட்டான்; பெயர் சூட்டு விழா முடிந்ததும், தகுதியுடைய அந்தணர்களுக்கு அவன் பெருஞ் செல்வத்தை தானமாக வழங்கினான் ||84||
இதற்கிடையில், தனது மூத்த மூன்று மகன்களும் பெரும்பாலான நேரம் தங்கள் சொந்த உலகில் இருப்பதைக் கண்ட மன்னன் மிகவும் கலக்கமடைந்தான்; அவர்களை மீண்டும் சமூகத்திற்கும் அரச விவகாரங்களுக்கும் இழுக்க அவன் பல வழிகளில் முயன்றான்; ஆனால் அவர்கள் தமக்கு கிடைத்த போதனைகளில் உறுதியாகவும் கலங்காமலும் இருந்தனர் ||85||
மன்னன் புலம்பினான் ‘ஓ, என் மூன்று மகன்களும் போதையில் இருப்பது போல் நடந்து கொள்கிறார்கள்; நான் என்ன கர்ம வினையினால் சூழப்பட்டுள்ளேன் ; என் வம்சத்திற்கு என்ன நேருமோ?; இவ்வாறு அறியாமையினால் அவன் முற்றிலும் துக்கம் அடைந்தான்’ ||86||
குரு வேத தர்மா கூறினார் ‘மங்களகரமான அதிர்ஷ்டம் பொழிந்து, குடும்பத்தில் ஒருவராவது ஞான நிலை பெற்று இருந்தால், அந்த நபரால் மற்ற அனைவரையும் ‘பிரம்மலோகம்’ எனப்படும் தேவலோகத்தை அடையச் செய்ய முடியும்; ஆயினும், பெரும்பாலானோர் இதை அறியாமல் இருக்கிறார்கள் ||87||
பிறரிடம் உள்ள புனிதத் தன்மையை அடையாளம் காண, ஒருவர் துறவியாக இருக்க வேண்டும்; துறவிகளின் மறைக்கப்பட்ட சாராம்சத்தை, அறியாமையில் தங்கள் நேரத்தைச் செலவிடும் சாதாரண மனிதர்களால் எப்படிப் பாராட்ட முடியும்? ||88||
அதேபோல், அரசனும் வருந்தினான்; துரதிர்ஷ்டவசமாக, ஒருமுறை அவன் தன் ராஜ்ஜியத்திற்கு வெளியே சென்று இருந்தபோது, தன் மூத்த மகன் விக்ராந்த் சேற்றிலும், குப்பையிலும் புரண்டு கொண்டிருப்பதைக் கண்டான்; அவன் தனக்குள்ளேயே பேசிக் கொண்டான் ‘பரிதாபம், விதியின் கொடுமையைப் பார், இதை நான் பார்க்க நேரிடுகிறதே||89||
அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அரச செல்வங்கள் மற்றும் வசதிகள் அனைத்தும் கையில் இருந்தாலும், இந்தத் தோல்வியுற்ற ஆத்மா , தேவையில்லாமல் தன் தாய்க்குப் பிரசவ வலியைக் கொடுத்ததாகத் தெரிகிறது||90||
இதற்கிடையில் விக்ராந்த் அந்த வார்த்தைகளைக் கேட்டு உரக்கச் சிரித்தான்; அரசன் சிறிது நேரம் ஆச்சரியப்பட்டுத் திகைத்துப் போய் ‘நிச்சயமாக நான் பேசியதைக் கேட்டுத்தான் சிரித்துள்ளான்’ என்று நினைத்தான்||91||
ஆகவே அவர்வெளிப்புற ப்பட்டுச் சென்று, தன் மகனை அந்தச் சேற்றிலிருந்து எழுப்பி நிற்க வைத்து தாங்கிப் பிடித்து, கடிந்து கொண்டார் ‘பைத்தியம் பிடித்தவனைப் போல எப்படி நடந்து கொள்கிறாய்?; ஏன் இங்கே வந்து புத்தி அற்றவனைப் போல நடந்து கொண்டிருக்கிறாய்; ஏன் வேண்டுமென்றே பைத்தியமாக இருப்பவனைப் போல காட்டிக் கொள்கிறாய்? ||92||
ஒரு ராஜ்ஜியத்தை நடத்துவதற்குத் தேவையான அறிவைப் பெறு, சுயம்வர* விழாக்களில் கலந்து கொண்டு உனக்கு ஒரு நல்ல மணமகளைத் தேர்ந்தெடுத்துக் கொள், அரச குடும்ப வாழ்க்கையை அனுபவி, மேலும் முக்தியை அடைய வேத யாகங்களில் ஈடுபடு;
{*ஸ்வயம்வரம் என்பது பெற்றோர்களால் நடத்தப்படுகின்றன; அதில் தகுதியான மணமகன்கள் கலந்து கொள்ளும்போது மணமகள் அவர்களுக்கு தனக்கு தகுதியூயானவனை தான் தேர்ந்து எடுப்பாள்; பெரும்பாலும், பெற்றோர்களால் நிர்ணயிக்கப்பட்ட பல்வேறு பணிகள் அல்லது சோதனைகள் வாயிலாகவே அவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டியுள்ளது} ||93||
மன்னர் தொடர்ந்து கூறினார்: நீ அவ்வாறு செய்தால், சமூகத்தில் உனக்கு அங்கீகாரம் கிடைக்கும்; அனைவரும் உன்னை, நம்பிக்கைக்குரிய ஒருவனாகப் பாராட்டுவார்கள். மக்கள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவார்கள்; தங்கள் வாழ்வின் தடைகளைத் தாண்டிச் செல்ல உன்னையே சார்ந்திருப்பார்கள் ||94||
தன் தந்தையின் அறிவுரையைக் கேட்ட விக்ராந்த் சிரித்துக் கொண்டே கூறினான் ‘நானும் கல்வி பயின்றுள்ளேன்; என் தாயார் எனக்கு மிகச் சிறப்பாகக் கற்பித்துள்ளார்’ ||95||
பற்றின்மை (வைராக்கியம்) என்னும் மணப் பெண்ணை நான் மணந்துள்ளேன்; ‘ஆத்மா ’ என்னும் சாம்ராஜ்யத்தை நான் ஆண்டு வருகிறேன்; அதன் விளைவாக கிடைத்த ஆனந்தத்தால் நான் முழுமையாகத் திருப்தியடைந்துள்ளேன்; அதன் பிறகு வேறு ஏதன் மீதும் ஈர்ப்பு கொள்ளத் தோன்றவில்லை||96||
செய்ய வேண்டியதை நான் செய்து விட்டேன்; அடைய வேண்டியதை நான் அடைந்து விட்டேன்; நாங்கள் மூவரும் ஒரு குறிக்கோளுடனும் வெற்றியுடன் கூடிய வாழ்வை வாழ்ந்துள்ளோம்; எங்கள் இளைய சகோதரனும் காலப்போக்கில் எங்கள் பாதையையே பின்பற்றுவான் ||97||
மன்னர் தன் மகனின் பதிலைக் கேட்டார்; ஆனால் அது அவரைச் சிறிதும் பாதிக்கவில்லை; எவ்வாறெனில், தன் தர்மத்தில் உறுதியாக நின்று அன்பு செலுத்தும் ஒரு கற்புள்ள மனைவியின் புனிதமான நடத்தையை, ஒரு விலை மகளால் ஒருபோதும் பாராட்ட இயலாது அல்லவா?; அதே போன்ற நிலைதான் மன்னனுக்கும் இருந்தது ||98||
ஏமாற்றமடைந்த மன்னர், தன் மனைவி மதாலஸாவிடம் தன் கோபத்தை முழுமையாகக் கொட்டித் தீர்த்தார் ‘நம் வம்சத்தின் அழிவுக்குக் காரணமானவள் நீயே; நம் மூத்த மூன்று மகன்களுக்கும் காலத்திற்குப் பொருந்தாத அறிவுரைகளை வழங்கியவளும் நீயே; என்னிடம் கலந்தாலோசிக்காமலேயே, இத்தகைய அறிவீனமான செயலை நீ ஏன் செய்தாய்? ||99||
தெய்வங்கள், முன்னோர் மற்றும் மனிதர்களுக்காக விதிக்கப்பட்ட கடமைகளின் பாதையை உற்று நோக்கு ; மக்கள் அதற்கேற்ப செயல்பட்டால், இவ்வுலகிலும் மறுவுலகிலும் இன்பங்களை அடைவார்கள்; மற்ற பாதையோ, மிகுந்த போராட்டங்களும் துன்பங்களும் நிறைந்ததாகும் ||100||
ஒரு ராஜ்ஜியம், யானைகள், பெண்கள், செல்வம் ஆகியவற்றை அனுபவிக்கும் திறமை என்ற அனைத்துமே ஒருவனுக்கு மகிழ்ச்சி அடைந்த தெய்வங்களால் அருளப்படுபவையே; ஒருவன் இவையனைத்தும் பெறும் நற் பேற்றைப் பெற்றிருந்தால், வாய்ப்பிருக்கும்போதே அவற்றை முழுமையாக அனுபவிக்க வேண்டும் ||101||
ஒருவன் இவ்வாறு அறிவுறுத்தப்பட்ட வழியில் செயல்படவில்லை என்றால், அது தெய்வங்களுக்குச் செய்யும் துரோகமாகும்; அத்தகையோரிடம் எதுவுமே போதுமான அளவில் இருப்பதில்லை; இதுவே துரதிர்ஷ்டமாகப் கருதப்படுகிறத; அத்தகைய பயனற்றவர்களுக்கே, உலகப் பற்றுகளைத் துறந்து விலகிச் செல்லும் பாதையானது பொருத்தமானதாக அமையும்||102||
ஒருவன் இவ்வளவு பற்றற்றவனாக இருப்பானாயின், அவன் ஏன் தன் சொந்த வீட்டிலேயே தங்கியிருக்கக் கூடாது?; ஆன்மீக அறிவைத் தேடி வீட்டைத் துறந்து செல்வது, அத்தகைய துறவிகளுக்கு என்ன பயனை அளிக்கப் போகிறது? ||103||
உமது அறிவுரையைப் பின்பற்றியே, என் மகன்கள் அடையத் தகுதியான ஒன்றை அடைவோம் என்று நம்புகிறார்கள்; ஆனால் இது தர்மம் வகுத்த நெறி முறைகளை மீறுவதாகும் என்றும், இது அவர்களை வீழ்ச்சிக்கே இட்டுச் செல்லும் என்றும் நான் கருதுகிறேன் ||104||
எங்கள் மறைந்த முன்னோர்கள் அனைவரும், அவர்கள் தற்போது வசிக்கும் அந்தந்த உலகங்களில், இழிந்த உயிரினங்களாகவோ அல்லது எப்போதும் பசியுடனும் அமைதியின்றி அலையும் பேய், பிசாசுகளாகவோ மீண்டும் பிறக்க நேரிடும்.
||105||
அவர்கள் பாவிகளாகவோ அல்லது புண்ணியவான்களாகவோ இருப்பினும், உரிய சடங்குகளின் மூலம் அவர்களுக்குப் படைக்கப்படும் உணவால் முன்னோர்கள் திருப்தி அடைகிறார்கள்; இந்த நியதியை படைப்புக் கடவுளான பிரம்ம தேவனே வரையுறுத்தி உள்ளார்; எனது மூத்த மூன்று மகன்களுக்கும் போதனை செய்வதற்கு முன், இந்த உண்மையை நீ அறிந்திருக்கவில்லையா? ||106||
மனிதர்கள், முன்னோர்கள், தேவர்கள், பேய்-பிசாசுகள், விலங்குகள், புழுக்கள் மற்றும் பிற உடல் தாங்கிய ஆத்மா க்கள் என அனைவரும், இல்லறத்தாரிடமிருந்து கிடைக்கும் உதவியை நம்பியே உயிர் வாழ்கின்றனர்; மேலும் அவர்கள் இல்லறத்தாரால் நிச்சயமாகப் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறார்கள் ||107||
இதுவே தலைமுறை, தலை முறையாக அருளப்பட்ட நித்திய சனாதன நெறியாகும் ;நாராயண பகவானே இதை ஒப்புக் கொள்கிறார், இது யுகங்கள் தோறும் உண்மையாக இருந்து வருகிறது, இப்போது இதில் யார் குறை காண முடியும்? ||108||
ஒரு மகன் இல்லாத நிலையில், பித்ருக்கள் மேல் உலகங்களில் நிம்மதியாக உறங்க மாட்டார்கள் என்று சில சாஸ்திரங்கள் கூட கூறுகின்றன; ஓ அறிவற்ற பெண்ணே, நீ இதையெல்லாம் இதற்கு முன் கேட்டதில்லை என்றால், கவனமாக இரு; இந்த இளைய மகனாவது நமது ராஜ்ஜியத்தை பொறுப்புடன் ஆளத் தகுதியானவனாக இருக்கட்டும். ||109||
உன்னால்தான் நமது மூத்த மூவரும் பாதையிலிருந்து தடுமாறி சென்று விட்டார்கள்; அவர்களின் அன்றாடச் செயல்களைப் பார்ப்பதே வருத்தமளிக்கிறது; இப்போதாவது இவனிடம் விழிப்புடன் இரு; அலர்க்கன் தனது மூத்த சகோதரர்களின் பாதையில் செல்லாதபடி பார்த்துக்கொள்||110||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் இருபத்தொன்பதாவது (29) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை:110
முதலாவது அத்தியாயம் முதல் இருபத்தொன்பதாவது (29) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
110+3028=3138
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -10, அத்தியாயம் -29 முடிவடைந்தது
அத்தியாயம் -30 தொடர்கின்றது