COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம்-4 : ஆத்மாவின் பயணம்

அத்தியாயம் 13
மொழி அமைப்பு: விளக்கம் (Linguistic Explanation); அறிவாற்றலின் ஆய்வு
ஆறு லிங்கங்களின் பண்புகள்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

குரு வேத தர்மா தீபக்கிற்குத் தாம் கூறிக் கொண்டு இருந்ததை தொடர்ந்தார்; தெய்வமான ஸ்ரீமத் தத்தரின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் அர்ஜுனன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான்; அவன் தான் தேடி வந்த தெய்வத்தை மீண்டும் தலை வணங்கிப் பிரார்த்தித்தான்; மிகுந்த பக்தியுடன் மீண்டும் வேண்டிக் கொண்டான் ||1||

தெய்வமே, மகா வாக்கியங்கள்* என்று அழைக்கப்படும் வலிமை மிக்க வேதக் கோட்பாடுகள் எத்தகையவை;? அவற்றை எவ்விதம் தியானிக்க வேண்டும்?; எங்கும் நிறைந்திருக்கும் அந்தத் தெய்வீகத் தத்துவத்தை எவ்விதம் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும்?; தெய்வத் தாயே, அந்த முழு விவரத்தையும் எனக்குத் தெளிவாக எடுத்துரைப்பீர்களா’.
{*மகா வாக்கியங்கள் என்பன இந்து மதத்தின் முதன்மை மறை நூல்களான உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள, அத்வைத தத்துவத்தின் சாரமாக விளங்கும் நான்கு மேன்மையான உண்மை சொற்றொடர்களைக் குறிக்கும்; இவை ஜீவாத்மாவும் (மனித ஆத்மா) பரமாத்மாவும் (இறை நிலை/பிரம்மம்) ஒன்றே என்பதை உணர்த்துகின்றன; நான்கு வேதங்களின் பிரிவாக இந்த நான்கு வாக்கியங்கள் கருதப்படுகின்றன.
அத்வைத வேதாந்தத்தின் சாராம்சமான அந்த நான்கு மகா வாக்கியங்கள் மற்றும் அவற்றின் சுருக்கமான விளக்கம் இதோ:
(1) ரிக் வேதம் (ஐதரேய உபநிடதம்): – ‘பிரக்ஞானம் பிரம்ம (Ranjana Brahma)’
இதன் பொருள் ‘பிரம்மம்’ (இறைவன்) என்பது தூய அறிவாகவே இருக்கிறார்’; எல்லாவற்றையும் அறியும் பேரறிவே பிரம்மம்; உயரிய அறிவே பிரம்மம்.
(2) யஜுர் வேதம் (பிருஹதாரண்யக உபநிடதம்): -‘அஹம் பிரம்மாஸ்மி (Aham Brahmasmi)’
இதன் பொருள்: ‘நான் பிரம்மமாக இருக்கிறேன்’ ; ஜீவாத்மாவும் பரமாத்மாவும் அடிப்படையில் ஒன்றே.
(3) சாம வேதம் (சாந்தோக்ய உபநிடதம்): – ‘தத் த்வம் அஸி (Tat Tam Asi)’
இதன் பொருள்: ‘அதுவாக நீ இருக்கிறாய்.’ இந்த பிரபஞ்சத்தின் மூலமாகிய அந்த பரம்பொருள் நீயாகவே இருக்கிறாய் என குரு சீடனுக்கு உபதேசிப்பது.
(4) அதர்வண வேதம் (மாண்டூக்ய உபநிடதம்): – ‘அயமாத்மா பிரம்ம (Ayam Atma Brahma)’
இதன் பொருள்: ‘இந்த ஆத்மா பிரம்மமே ஆகும்.’; மனிதனுக்குள் இருக்கும் ஆத்மா , எல்லையற்ற இறை நிலைக்கு சமமானது.
இவை அனைத்துமே வெறும் தத்துவ வார்த்தைகள் மட்டுமல்லாமல், மனிதன் தனது சுயத்தை உணர்ந்து (சுய அறிவை அடைந்து) இறை நிலையை அடைவதற்கான மிக உயர்ந்த வழி காட்டுதல்களாக விளங்குகின்றன. (இவற்றின் ஆதாரம்: https://www.google.com/)} ||2||

அர்ஜுனன் கேட்ட கேள்விக்கான பதில்களை தர ஸ்ரீமத் தத்தர் தயார் ஆனார்; அவனிடம் மிகுந்த கருணை கொண்ட அவர் இவ்வாறு கூறலானார் ‘அருண முனிவர் என்பவர் தனது சீடனான சுவேதகேதுவிற்கு அந்தத் தெய்வீகத் தத்துவத்தை உபதேசித்தார்; இந்த செய்தி சாம வேதத்தில் கூறப்பட்டு உள்ளது ||3||

அருண முனிவர் தமது சீடனை நோக்கி தொடர்ந்து ஒன்பது முறை, தத் த்வம் அஸி* (Tat Tam Asi) என்ற வாக்கியத்தை மீண்டும் மீண்டும் கூறிய பின்னர் அதே வாக்கியத்தை மிகவும் நுட்பமான முறையில் தனது சீடனான சீடன் சுவேதகேதுவிற்கு போதித்தார்; அவ்வாறு பலமுறை திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாலேயே, அது ‘மகா வாக்கியம்’ அல்லது ‘வேதக் கொள்கை அல்லது கோட்பாடு ‘ என்று அழைக்கப்படுகிறது.
(*நீயே அதுவாக இருக்கிறாய் என்பது அர்த்தம்) ||4||

இந்த மந்திரத்தை ஆழ்ந்த சிந்தனையோடும் மரியாதையுடனும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்; அது உனக்கு மெய் ஞான* உணர்வைக் கொடுக்கும்; அதன் மூலம், நீ விரும்பியபடியே இந்த உலக பந்தம் எனும் பெரும் கடலைக் கடந்து விடுவாய்; எதன் மீதும் எவ்விதப் பற்றுதலும் கொள்ளாமல், இதை உன் மனதிலே ஆழமாக பதிய வைத்துக் கொள்.
{* மெய் ஞான உணர்வு என்பது உண்மையான அறிவை உணர்தல் அல்லது ஆன்மீக அனுபவம் என்பதாக பொருள் படும்; ஆங்கிலத்தில் அதை Realization of True Knowledge or Spiritual Experience என்பார்கள்} ||5||

முதலில் நிலையான பொருள் எது, நிலையற்ற பொருள் எது என்பதைப் பற்றிச் சிந்திப்பாயாக; அதுவே ஆன்மீகப் பயணத்தின் முதல் படி எனும் படகு மட்டும் அல்ல அதுவே மிகச் சிறந்த வழிகாட்டி ஆகும்; கால வரம்புகளுக்கு உட்படாத பொருள் எதுவாக இருக்கும் என்று நீ யோஜனை செய்து பார்த்தால், உடனடியாக ஒரு பேருண்மையை உன்னால் உணர முடியும்; ஐம்புலன்கள்* சார்ந்த இன்பங்கள் சில மணி நேர மகிழ்ச்சியை மட்டுமே தர வல்லவை ஆகும்; அவை நிலையானவை அல்ல, கால வரம்புகளுக்கு உட்பட்டவை; இதனால் அவற்றுக்கு கட்டுப்பட்டு இருப்பது தகுதியற்ற செயல் என்பதையும் நீ உணர்ந்து கொள்வாய்
{*மெய், வாய், கண், மூக்கு, செவி} ||6||

அதை போலவேதான் இவ்வுலக இன்பங்கள் மீது எப்படி பட்டற்று இருப்பாயோ, அதே பட்டற்ற மன நிலையை மேல் உலக லோகங்களில் இருப்பதாக கூறப்படும் பேரின்பங்கள் மீதும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அடுத்த கட்ட நிலைப்பாடாக இருக்க வேண்டும்; ஐம்புலன்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியா விட்டால், அமைதியின்றியும் சலனத்துடனும் உள்ள அவனால் எவ்வாறு தியானத்தில் அமர முடியும்? ||7||

சலன மிக்க மன எண்ணங்களை விவேகத்தால் அடக்க வேண்டும்; உடல் சார்ந்த புலன்களின் விருப்பங்களை கட்டுப்பாட்டோடு இருந்து அழிக்க வேண்டும்; தேவையற்ற பேச்சு, சிந்தனை மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகள் மீதான ஈடுபாடுகளைத் துறக்க வேண்டும்; பெரும் வெப்பம் மற்றும் கடும் குளிரைத் தாங்கிக் கொள்ளும் மன வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்||8||

குருவின் போதனைகள் மீது நம்பிக்கை கொள்ளுதல், அவர் கூறிய அனைத்தையும் முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுதல் போன்ற முன்னர் கூறப்பட்ட ஆறு பண்புகளான சாதன-சம்பத்தி* என்பவைகளே ஆன்மீகத் தேடுதலுக்கான முறையான சாதனங்கள் ஆகும் என்று கூறப்படுகின்றன.
{*சாதன-சம்பத்தி (Saadhan-Sampatti) என்பது ஆறு மடங்கு ஆன்மீக செல்வம் அல்லது ஆறு நற்பண்புகள் என்பதாகும்; இந்த ஆறு நற்பண்புகளும், மனதைச் செம்மையானதாகவும், ஒரு முகப்படுத்தப்பட்டதாகவும், நிலையானதாகவும் வளர்த்து, அதனைத் தியானத்திற்கு தயார் படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன; அந்த ஆறு மடங்கு நற்பண்புகள் (i) மனதைக் கட்டுப்படுத்துதல் (ii) புலன்களைக் கட்டுப்படுத்துதல் (iii) உலக இன்பங்கள் மீதான ஆசைகளையும் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு மனதை உள் நோக்கித் திருப்புதல் (iv) சாஸ்திரங்கள் மீதும், குருவின் அறிவுரைகள் மீதும் முழுமையான நம்பிக்கை கொள்ளுதல் (v) வெப்பமோ, குளிரோ இயற்கையின் சீற்றங்கள் அனைத்தையும் தாங்கும் மன வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளுதல்(vi) மனதை ஒருமுகப்படுத்தி வைத்துக் கொண்டு இறுதி இலக்கண முக்தி அடைய வேண்டும் எனும் எண்ணத்தை வலிமையாக்கிக் கொள்ளுதல்}||9||

தாம் முக்தி அடைய வேண்டும்* என்ற உண்மையான பேராவலை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அத்தகைய ஆவல் அசைக்க முடியாத உறுதியான ஒன்றாக இருக்க வேண்டும்; இதுவே இந்த ஆன்மீகப் பாதையின் நான்காவது படியாகும்; முக்தி குறித்துப் பேசும் சாஸ்திரங்கள் அனைத்திற்கும் இதுவே அடிப்படையாகும்.
{*வேதாந்தத்தில், ஆத்ம ஞானம் அல்லது மோட்சத்தை அடைவதற்கு ஒரு சாதகர் தகுதியுடையவராக மாற வேண்டும் என்றால் சாதன சதுஷ்டயம் எனப்படும் நான்கு தகுதிகள் கொண்டிருக்க வேண்டும் என்று அழைக்கிறோம்; இது ஆதி சங்கரரின் ‘தத்துவ போதம்’ என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. அவை :
(i) விவேகம் (Viveka) – பாகுபாடு அதாவது நிரந்தரமான உண்மை (ஆத்மா/பிரம்மம்) எது, நிரந்தரமற்றவை, அழியக் கூடியவை (உலகப் பொருட்கள்) எது என்பதைப் பிரித்தறிந்து காணும் அறிவாற்றல்
(ii) வைராக்யம் (Vairagya) – பற்றின்மை அதாவது தமது அறிவாற்றலினால் இந்த உலகம் நிரந்தரமற்றது என்பதை புரிந்து கொண்டு புலன் இன்பங்கள் மற்றும் பிற ஆசைகளை அழித்துக் கொள்ளுதல்.
(iii) ஷட் சம்பத் (Shat Sampat) – மனதையும் புலன்களையும் சம நிலைப் படுத்துவதற்கான ஆறு உள் ஒழுக்கங்கள்; அவை கீழுள்ளவை
(a) சமம் (Shama): மனதை அமைதிப்படுத்துதல் (மனக் கட்டுப்பாடு).
(b)தமம் (Dama): புலன்களைக் கட்டுப்படுத்துதல் (உணர்வு உறுப்புகளின் கட்டுப்பாடு).
(c)உபராதி (Uprate): உலகியல் விவகாரங்களிலிருந்து மனதைத் திரும்பப் பெறுதல்.
(d)திதிக்ஷா (Titiksha): சகிப்புத்தன்மை (உடல் மற்றும் மன வேதனைகளை சகித்தல்).
(e)சிரத்தா (Shraddha): குரு மற்றும் வேதாந்த சாஸ்திரங்களின் மீது ஆழ்ந்த நம்பிக்கை.
(f) சமாதானம் (Samhadana): லட்சியத்தில் (ஆத்மாவில்) மனதை ஒருமுகப்படுத்துதல்.
(iv) முமுக்ஷுத்வம் (Munukutla) – மோட்ச ஆசை அதாவது பிறப்பு-இறப்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, விடுதலை (மோட்சம்) அடைய வேண்டும் என்ற வைராக்கியம்
இந்த நான்கு தகுதிகளும் ஒருவரை ஆன்மீக ஞானத்திற்குத் தயார் படுத்தும் அடித்தளமாகக் கருதப்படுகிறது}||10||

ஒருவன் இந்த நான்கு படிகளையும் எச்சரிக்கையுடன் கடந்து முன்னேறிய பிறகு, மேலான ஞான நிலை பெற்ற குருவை நாடிச் சென்று அவரிடம் அடைக்கலம் புக வேண்டும்; உரிய பக்தியுடன் அவருக்குப் பணிந்து, வணங்கி, அவர் வழங்கும் போதனைகளை மீண்டும், மீண்டும் மனதில் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்||11||

வேத, சாஸ்திர ஞானங்களை, அடி முதல் மேல் வரை, நன்கு அறிந்தவர்; ஆன்மீக அனுபவத்தின் மூலம் மெய் ஞானத்தை பெற்று இருந்தவர் என்ற இந்த இரண்டு இன்றியமையாத முக்கிய பண்புகளைக் கொண்ட ஞான குருவை தேடிக் கண்டு பிடித்து அவரிடம் சரண் அடைவது மிகவும் சவாலானது மற்றும் மிகவும் மேன்மையான செயலாகும் ||12||

அனைத்து வகையான ஒழுங்கற்ற நடத்தைகளையும் முற்றிலுமாகத் துறந்து விட்டு, குருவிடம் தன்னிடம் உள்ள அனைத்தையும் சமர்ப்பித்து விட்டு, அவருக்கு பக்தி பூர்வமாக சேவை செய்ய வேண்டும் ; அவர் அவ்வப்போது தரும் போதனைகள் அனைத்தையும் கவனமாக கேட்டு அறிந்து கொண்டு அவற்றின் அர்த்தங்களை மனதிலேயே ஆராய வேண்டும்; இப்படிப்பட்ட வாழ்க்கை முறைதான் தெளிவான முடிவுகளை எடுக்க உதவும்; ஆன்மீகத்தின் மீதான தவறான கண்ணோட்டங்களையும், மாயையினால் எழும் அறியாமைகளையும் அழித்துக் கொள்ள துணை புரியும் ||13||

குரு மூலம் கேட்டவற்றின் சாராம்சத்தை எவ்வித உள் ஐயங்களும் இன்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாரம்பரியமாக கூறப்படுகின்றது; அத்தகைய நிலையை எட்ட ஆறு இலக்கியப் படிகள் உதவுகின்றன; அவற்றில் முதலாவது படி என்ன என்றால் ஒரு நூலின் முன்னுரையையும் பின்னுரையையும் தொடர்பு படுத்துவதாகும்||14||

ஒரு நூலின் சாராம்சத்தையும், அதன் உள்ளடக்கத்தையும் புரிந்து கொள்ள உதவும் ஆறு இலக்கியப் படிகள் இவ்வாறு கூறப்பட்டு உள்ளன; கற்பதற்கான தேவை, முன்னெப்போதும் கேட்டிராத பலன்கள்; புரிதலின் பயன்; ஆத்ம விடுதலைக்கான பாதையை தேடுவோரை நல்வழியில் பயணிக்கத் தூண்டும் ஈர்ப்பு; பிழை அற்ற சான்றுகள் மற்றும் ஆறு இலக்கிய* வழிமுறைகள் ஆகும்

{*ஆறு இலக்கிய வழிமுறைகள் கீழே விளக்கப்பட்டு உள்ளன.
{(i) கற்பதற்கான தேவை அதாவது ஒரு நூலை கற்றறிவதற்குத் தேவையான தகுதி அல்லது பின்னணி அறிவு.
(ii) முன்னெப்போதும் கேட்டிராத பலன்கள் (அபூர்வ பலம்): – மற்றெந்த வழிமுறைகளினாலும் அடைய முடியாத பலன்களை அந்த நூலை படிப்பதின் மூலம் புரிந்து கொள்ள முடியும்
(iii) புரிதலின் பயன் (பலம்): அந்த நூலில் கூறப்பட்டு உள்ளவற்றில் சாரங்களை நன்கு புரிந்து கொள்வதன் மூலம் கிடைக்கும் உடனடி பலன்கள், அறிவாற்றல், அமைதி மற்றும் முக்தி போன்றவை ஆகும்.
(iv) ஆத்ம விடுதலைக்கான பாதையை தேடுவோரை நல்வழியில் பயணிக்கத் தூண்டும் ஈர்ப்பு (அர்த்த வாதம்/அர்த்த பதம்): – அந்த நூலில் கூறப்பட்டு உள்ளவற்றை நடை முறைப் படுத்தத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட செய்திகள் அல்லது சாராம்சங்கள்
(v) சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளவற்றுக்கான பிழை அற்ற சான்றுகள் (உப பத்தி): – அந்த நூலின் கூற்றை ஆதரிக்கும், குற்றமற்ற, தர்க்க ரீதியான அல்லது சுயம் பிரமாணமான ஒரு நியாயப்படுத்தல்.
(vi) ஆறு இலக்கிய வழிமுறைகள் (தாற்பரிய லிங்கங்கள்): அந்த நூலின் இறுதி மற்றும் உட் கருத்தான பொருளைத் (சாராம்சத்தை) தீர்மானிக்க பயன்படும் வழிமுறை.
பாரம்பரிய வேதாந்தத்தில், இவை பொதுவாகப் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:-
உபக்கிரம-உபசம்ஹாரம்:- தொடக்கத்திற்கும் முடிவுக்கும் இடையிலான ஒத்திசைவு.
அப்யாசம்:- முதன்மைக் கருத்தின் மறு நிகழ்வு (மீண்டும் மீண்டும் வருதல்).
அபூர்வதா:- போதனையின் தனித்துவம் அல்லது புதுமை.
பலம்:- பயன் அல்லது விளைவு.
அர்த்தவாதம்:- புகழ்ச்சி அல்லது பாராட்டுரை.
உப பத்தி:- தர்க்கம் அல்லது நிரூபணம்} ||15||

ஒரு பரிசோதனை ஆய்வாக பிரபஞ்சத்தை தோற்றுவித்து, அதன் விளைவுகளையும் பலன்களையும் அனைவரும் தெரிந்து கொள்ள அதை வெளிக் கொண்டு வந்த தெய்வீகம் எனப்படும் பரபிரும்மன் இருந்துள்ளார்; அதுவே முன்னுரை அல்லது தொடக்கப் பகுதியாகும் ||16||

இந்த முழுப் பிரபஞ்சமும் பரமாத்மனிடம் இருந்து வேறுபட்டதல்ல; மேலும் நாமும் உணர்வு பூர்வமாக இணைந்து கொள்ள விரும்பும் ஒரே வடிவம் அவர்தான்; ஒவ்வொருவரின் உள்ளிருக்கும் தெய்வீகமும் ஆத்மாவும் வேறல்ல போன்றவற்றை புத்திசாலித்தனத்துடன் எடுத்துரைப்பதே அந்த நூல்களின் பிற் பகுதி ஆகும் ||17||

முன்னுரையும் பிற் பகுதிகளும் ஒரே விஷயத்தை தெளிவு படுத்தும்போது, ஆறு இலக்கியப் படிகளில் முதல் படி நிறைவடைகிறது; அர்ஜுனா, அடுத்தடுத்த படிகளை நான் இனி உனக்கு விளக்கமாகச் சொல்கின்றேன், கேள் ||18||

நமது உடலுக்கு உணவு தேவை; அந்த உணவைத் தரும் தானியங்களோ நீரைச் நம்பி உள்ளன; அந்த நீரோ சூரியனின் ஒளியையும் வெப்பத்தையும் நம்பி உள்ளது; அந்த சூரியனோ, சத்தியத்தின் (உண்மை) உருவமான அந்த தெய்வத்தால் (பரபிரும்மன்) தோற்றுவிக்கப்பட்டுள்ளது||19||

ஆகவே, நாம் காணும் இந்த முழுப் பிரபஞ்சமும் சத்தியம் எனும் அந்த பரபிரும்மனை தனது அடித்தளமாகக் கொண்டுள்ளது; நாம் அந்த சத்தியத்திற்குள்ளேயே வாழ்கிறோம்; சத்தியத்தாலேயே தாங்கப்படுகிறோம்; இந்த உண்மையைச் சிறிதும் ஐயமின்றிப் புரிந்து கொள்வதற்காகவே, மீண்டும், மீண்டும் அப்யாசம் அதாவது மனக் கட்டுப்பாட்டுக்காகத் தொடர்ந்து செய்யப்படும் ஆன்மீகப் பயிற்சி தேவைப் படுகின்றது ; இதுவே இரண்டாவது இலக்கியப் படியாகும் ||20||

உலகிலுள்ள அனைத்து நதிகளையும் பாருங்கள்; அவை ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய பெயர்களாலும், தன்மைகளினாலும் புகழ் பெற்று விளங்குகின்றன; நதிகளை கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா, கங்கை என்று பெயரிட்டு மக்கள் போற்றுகிறார்கள்; அகில உலகிலும் கூட அந்த நதிகள் இவ்வாறாகவே போற்றப்படுகின்றன||21||

ஆனால், அந்த நதிகள் அனைத்தும் கடலோடு சங்கமித்து ஒன்றிணையும்போது, அந்த கடலில் உள்ள தண்ணீரில் அந்த நதிகள் எவை, எவை என்று பிரித்து அவற்றை அடையாளம் காட்ட முடியுமா?; அதேபோல, ஒருவன் ஆன்மீக ஞானத்தின் துணையோடு, தெய்வத்துடன் ஒன்றிணைந்து விடும் நிலையில் அவனது ஆத்மா தெய்வத்தின் ஆத்மாவில் இருந்து எப்படி பிரித்துப் பார்க்க முடிந்ததாக இருக்கும்?||22||

மேற்கூறிய உதாரணமானது, இரண்டாவது இலக்கியப் படியை மேலும் தெளிவுபடுத்த உதவுகிறது; இனி மூன்றாவது படியைக் காண்போம்; ஒரு தேனீயானது பல்வேறு மரங்களிலும் செடிகளிலும் பூத்திருக்கும் மலர்களிலிருந்து, எதில் தேன் இருக்கும் என்பதைக் கண்டறிந்து பெரும் முயற்சியுடன் தேனைச் சேகரிக்கிறது ||23||

தேனி சேகரித்த தேன் அனைத்தையும் எடுத்து ஒன்றாக கலந்து தனித்துவமான இனிமை கொண்ட தேன் என்ற திரவமாக்கி தரப்படுகின்றது; பல்வேறு பூக்களில் இருந்தும் எடுக்கப்பட்ட தேன் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று முழுமையாகக் கலந்து விட்ட நிலையில், எந்த மலரிலிருந்து எடுத்த தேன் எதில் உள்ளது என்பதை அந்த தேன் எனும் திரவத்தில் இருந்து தனித் தனியே பிரித்துக் காட்ட முடியுமா? ||24||

அதை போலவேதான் ஒரு ஆத்மா வானது தெய்வத்துடன் ஒன்றிணைந்து விடும் (அத்வைத நிலை) நிலையில் அங்குள்ள ஆத்மாக்களை பிரித்துக் காட்ட முடியுமா?; அத்தகையதே, ஆன்மீகப் பயணத்தின் பலனாக அல்லது கனியாக அமையும் மூன்றாவது இலக்கியப் படியாகும்; இனி நான்காவது படியைக் காண்போம்||25||

ஒரு ஆலமர பழத்திற்குள் ஆலமர விதை உள்ளது; அந்த விதை கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய வடிவத்தில் பழத்தின் உள்ளே இருக்கிறது; அந்த விதைக்குத் தேவையான தண்ணீர், சூரிய ஒளி, வளமான மண் மற்றும் தகுந்த பருவநிலை ஆகியவை கிடைத்தால், பூமியில் விதைக்கப்படும் அந்த விதை வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமாகவும், நிழல் தரும் மரமாகவும் உருவெடுக்கும் ||26||

இதே நியதிதான் இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும், உயிரற்ற பொருட்களுக்கும் பொருந்தும்; இவை அனைத்துமே உண்மை எனும் கண்களால் காண முடியாத மிக நுண்ணிய விதையிலிருந்தே* வெளிப்படுகின்றன; காலத்தின் போக்கினாலும் விதியினாலும் வெளிப்படும் அவை அனைத்துமே நம் கண் முன்னே உண்மையாக காணப்படும் நிலையிலும், நிகழ்வுகளாகவும் காட்சி அளிக்கின்றன.
{*அதாவது ஒரு ஆத்மாவில் இருந்தே வெளியாகின்றன} ||27||

இப்போது தெய்வீகத்திலிருந்து நீ வேறுபடவில்லை என்பதால், அடுத்த நான்காவது இலக்கியப் படியில் செல்ல தேவைப்படும் ஆய்வு இதுவேயாகும்; இதற்கான உதாரணமாக உப்பை எடுத்துக் கொள்ளலாம் ||28||

கடலில் இருந்து உப்பு கிடைக்கின்றது; அதற்குப் பின் அந்த உப்பு குறிப்பிட்ட பெயரிலும் வடிவத்திலும் கிடைக்கின்றது; அதே உப்பை நாம் மீண்டும் கடலில் கொட்டி விட்டால் அது தன் பெயரையும் வடிவத்தையும் துறந்து மீண்டும் தன் மூலத்துடன் இணைகிறது ||29||

அது போலவே, ஒருவரது ஆத்மா தெய்வத்திடம் இணைந்து விடும்போது, அது தனது பெயர் மற்றும் உருவம் போன்ற அங்க அடையாளங்களையும் கைவிட்டு விடுகின்றது; அந்த நிலையில் அது அந்த தெய்வத்தை தூய சாராம்சத்தில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கும்; அதுவே ஆர்வத்துடனும் கவனத்துடனும் (studious) ஆழமாகக் கற்கும் குணத்தைக் குறிக்கும் ஐந்தாவது இலக்கியப் படியாகும் ||30||

நாம் ஒரு மரத்திலிருந்து ஒரு கிளையை ஒடித்து விட்டால், அது வாடி உலர்ந்து விடுகிறது; அந்த மரத்தின் தன்மை அதனிடம் இருக்காது; ஆனால் எந்த மரத்தில் இருந்து அதை உடைத்தோமோ அதன் ஒரு கிளையை ஒடித்து விட்டதினால் வாடுவதில்லை; அப்படியேதான் மரமாக இருக்கும்; அது போலவே ஆத்மா தனது பூத உடலை விட்டுப் பிரியும் போது, உடல் வாடி விடுகிறது (மரணம்) ஆனால் அதில் இருந்து வெளியில் சென்ற ஆத்மா மரணம் அடைவதில்லை ||31||

நமது உள்ளிருக்கும் ஆத்மா , தெய்வத்திடம் இருந்து வேறுபட்டதல்ல; அது பிறப்பு மற்றும் இறப்பு எனும் நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டது; ஆயினும், அந்த ஆத்மாவை நாம் உடலோடு அடையாள படுத்திக் கொள்வதினால்தான் தவறாக அதை சித்தரிக்கின்றோம்; உண்மை என்னவென்றால், ஆத்மா என்பது பல்வேறு தன்மைகளினால் ஆன பூத உடல் போன்றதல்ல; அதற்கு வடிவமும் இல்லை, பல்வேறு தன்மைகளும் கிடையாது||32||

மேற் கூறியவற்றை மெய்ப்பிப்பதே ஆறாவது இலக்கியப் படியாகும்; இப்போது, அடுத்த கட்டத்திற்கு செல்வோம்; கண்கள் கட்டப்பட்டு, திருடர்களால் கடத்தப்பட்ட ஒரு மனிதனின் நிலையை எடுத்துக் கொள்வோம் ||33||

அவனை கடத்திச் சென்றவர்கள் அவனது பணத்தையும், நகைகளையும் எடுத்துக் கொண்டு அவனை வேறொரு இடத்திலோ அல்லது வேறு நாட்டிலோ விட்டு விட்டுச் சென்று விடுகின்றார்கள்; அப்படி நிற்கதியாக விடப்பட்டவனின் கதறல் சப்தத்தைக் கேட்ட ஒரு தாராள மனத்துடையவர் அவனுக்கு உதவ முடிவு செய்கிறார்||34||

கட்டப்பட்டு இருந்தவனின் கட்டுக்களை அவிழ்த்து அவனை விடுவித்த பின்னர் அவன் வசித்து வந்திருந்த இடம் அல்லது பிராந்தியத்தை அடையாளம் காட்டுவதற்காக நிலக் குறிகளைக் போட்டுக் காட்டி, வீட்டிற்குத் திரும்பும் பாதையை அவனுக்கு தெரியப்படுத்தினார் ||35||

உன்னதமான அறிவார்ந்த நபரின் வழிகாட்டுதலில் விடுவிக்கப்பட்டவர், தனக்கு காட்டப்பட்ட பாதையில் பயணம் செய்து தனது சொந்த நாடு, கிராமம் மற்றும் வீட்டை சென்று அடைந்தார்; அதை போலவேதான் ஆன்மீக முன்னேற்றம் பெறுவதற்கு குருவிடம் செல்வார்கள் ||36||

உடலாலும், மனதாலும் ஆன்மீக எண்ணங்களை அறிந்து கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் கூட, ஞான நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் மெய் ஞான நிலையை அடைந்து விட்ட குருவிடம் கருணையை நாடும் போது, அவனால் சத்தியம் எனும் உண்மையை நெருங்க முடிகிறது||37||

அப்படியாக தம்மிடம் சரண் அடைந்த சீடனின் மாயை எனும் அறியாமையின் திரையைக் கிழித்து எறிந்து விட்டு, ‘இப்போது நீ செல்ல வேண்டிய உண்மையான இல்லத்திற்கு செல்லும் இந்தப் பாதையை உறுதியாக மனதில் ஏந்திக் கொண்டு, எச்சரிக்கையுடன் முன்னேறு’ என்று கூறி, சீடனின் கையைப் பிடித்து அவனை அந்தப் பாதையில் பயணிக்க வைப்பவர் அந்த குருவே ஆகும்||38||

அதன் பிறகு, சீடன் தன் குருவின் அருளால், எந்த விதத்திலுமான கட்டாயமின்றி, தன் இலக்கை மறக்காமல் அதை நோக்கி முன்னேறி, தனக்குரிய இடமான ஆதி பரமனிடம் சென்றடைகின்றான்; இவ்வாறு வேதங்கள் தனி ஆத்மாவின் ஆத்ம பயணத்தை குறித்து சித்தரிக்கின்றன||39||

ஆன்மீக பயணத்தின் பாதை இவ்வாறுதான் சித்தரிக்கப்படுகின்றன; மெய் ஞான நிலையை பெறாத குரு மூல அத்தகைய முக்தி அடைவது கடினம்; இப்போது அடுத்த கட்டத்தை விவரிக்கிறேன் கவனமாகக் கேள் அர்ஜுனா’ என்று தெய்வமான ஸ்ரீமத் தத்தர் கூறிவிட்டு போதனையை தொடர்ந்தார் ||40||

மரண உடலை விட்டு நீங்கும் நேரம் வரும்போது, உடலின் மூன்று தோஷங்களும்* சீர் குலைந்து விடுகின்றன, அதன் விளைவாகக் கடுமையான துன்பத்தை அனுபவிக்க நேரிடுகிறது; அனைத்துமே எதிர்மாறாக நடப்பது போல் தெரிகிறது

{*மனித உடலை இயக்கும் அடிப்படை உயிரியல் ஆற்றல்கள் (Biological energies) மூன்று தோஷங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை வாதம், பித்தம், கபம் ஆகும். ஒவ்வொரு மனிதரின் உடலிலும் இந்த மூன்று தோஷங்களும் வெவ்வேறு விகிதத்தில் கலந்துள்ளன; அதுவே ஒருவரின் தனித்துவமான ஆரோக்கிய நிலை (Prakriti) ஆகும்}||41||

அதன் பிறகு அனைத்து புலன்களின் வலிமைகளை சீர் குலைந்து அவை மனதிற்குள் உள் வாங்கப்படுகின்றன; பின்னர் அந்த அனைத்து தன்மைகளையும் உள்ளடக்கிய மனம் பின்வாங்கி மூச்சுடன் ஒன்றி விடுகிறது||42||

பின்னர் பிராண வாயு ஒளியுடன் (சுழிமுனை நாடி/ஞான ஒளி) ஒன்றி, அந்த ஒளி பரமாத்மனுடன் (Universal Consciousness) இணையும் போது, அங்கே தனிப்பட்ட நான் (Ego/Jivita) இருப்பதில்லை; அந்த நிலையை அடைந்த பின், அறிபவன், அறியப்படும் பொருள், அறிவு ஆகிய மூன்றும் ஒன்றாகின்றன; ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாகி விடுவதால் அவை அனைத்தையும் அடையாளம் காண அங்கே வேறு யார் இருக்கிறார்கள் ||43||

மரணப் படுக்கையில், ஒருவரைச் சுற்றி மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் உள்ளனர்; ஒவ்வொருவரும் என்னைப் பார், என்னைப் பார் என்று மனதில் கதறுகிறார்கள்; ஆயினும், பார்வையின் வீச்சும் மிகவும் சுருங்கி, பின் வாங்கி, திரும்பி வர முடியாத இடத்திற்கு சென்று விடுகின்றது ||44||

இவ்வாறு ஒருவர் மீண்டும், மீண்டும் போதனைகளை பெற்றுக் கொண்டு இருக்கும்போது, ஒரு நபர் தனது உடலை மட்டுமே நான் என்று நினைக்கும் நிலையிலிருந்து விடுபடுகிறார்; இந்த உயர் நிலையில், புலன் உறுப்புகள் மனதின் ஆழ்ந்த விழிப்புணர்வுடன் ஒன்றிணைகின்றன; அதாவது மனதை அலைபாய வைக்காமல், அக விழிப்புணர்வோடு (Inner awareness) இணைகிறது என்பதை ஒருவன் உணர்கிறான் ||45||

அப்போது வெளிப்புற உலகத்தை உணரும் கண், காது, மூக்கு, நாக்கு, மெய் ஆகிய ஐம்புலன்களும் தத்தம் கடமைகளை நிறுத்தி, பிராணனுடன் (breath) ஒன்றி விடுகின்றன; மூச்சானது அக ஒளியில் (inner light)* ஒன்றி விடுகிறது; அந்த ஒளியும் தனது மூலமான பரமாத்மனுடன் ஒன்றி விடுகிறது; இப்படிப்பட்ட அனுபவத்தை உயிரோடு உள்ள ஒரு சாதகனால் கூட பெற முடியும்
{*அக ஒளி என்பது மனதின் தெளிவு, ஞானம் அல்லது உள்ளொளியைக் குறிக்கிறது} ||46||

அந்த ஏகத்துவ(ஒற்றுமை நிலை) நிலை அடையப் படும்போது, யார் யாரை எதைக் கொண்டு அறிந்துகொள்ள முடியும்?; ஒருவேளை மரணத் தருவாயில் மறதி ஆத்மா வை ஆட்கொண்டு விட்டால், நாம் மீண்டும் பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியில் வீழ்ந்து விடுவோம் ||47||

தொடர் பயிற்சி மற்றும் வைராகியத்தின் மூலமாக மட்டுமே ஒருவரால் புலன்களின் ஆதிக்கத்தை வென்று முழு உணர்வுடன் பரமாத்மனுடன் ஒன்றிணைய முடியும்; இத்தகையவர்கள் ஜன்ம மரண சம்சார பந்தத்தில் இருந்து விடுபடுகிறார்கள் ||48||

இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது; இந்த நிலைக்குப் பிறகு எவ்வாறு முன்னேறிச் செல்வது என்பதை மிகக் கவனமாகக் கேள்; ஒருவன் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டால், அவன் அதிகாரிகளால் என்றாவது ஒரு நாள் நிச்சயம் பிடிக்கப்படுவான்’ ||49||

ஒருவேளை அவன் தன் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்தால், அவன் சூடேற்றப்பட்ட இரும்புக் கம்பியைப் பிடிக்குமாறு கட்டளை இடப்படுகின்றான் ; அதன் விளைவாக அவனது கையில் தீக்காயம் ஏற்படுகின்றது ; இது பாவச் செயலின் விளைவாகும்||50||

ஒருவேளை அவன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை பெறுகிறான்; ஆனால் ஒரு நிரபராதியின் கையில் அந்தச் சூடான இரும்புக் கம்பியைப் பிடித்த பிறகும் தீக்காயம் ஏற்படவில்லை என்றால், அவன் நிரபராதி என்பது வெளிப்பட்டு அனைவரும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்; அப்போது, வீணாகக் குற்றம் சாட்டப்பட்டவனின் கையை தீயும் கூடச் சுடுவதில்லை என்று கூறப்படுகிறது ||51||

கையில் தீயினால் காயம் ஏற்படாததை கண்ட பின் அவன் நிரபராதி என்பதை உணர்ந்த அதிகாரிகள் அவனை விடுதலை செய்து விடுவார்கள்; இதுவே அடுத்த நிலையாகச் சித்தரிக்கப்படுகிறது; இதை மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்||53||

இப்படியாக ஒவ்வொரு படி நிலையின் மூலமும் உணர்த்தப்படும் கருத்து மிகவும் எளிமையானது; இது மாணவருக்கு, ‘தத் த்வம் அஸி’ (நீயே அதுவாக இருக்கிறாய்) எனும் மகா வாக்கியத்தை மீண்டும் வலியுறுத்தி கூறும் வகையில் அமைந்து உள்ளது; இது சாம வேதத்தை சார்ந்த சாந்தோக்ய உபநிஷதத்தின் 6.8.7-ஆம் மந்திரத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்; அந்த உண்மையை முழு உணர்வுடன் அனுபவிப்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்; அதுவே நமக்கான அடுத்த சவாலாகும்||54||

அப்படிப்பட்ட தெய்வீக நிலை* என்பது மனம் மற்றும் ஐம்புலன்களின் வரம்பிற்கு அப்பாற்பட்டது; ஆகவே, நிகழ் காலத்தில் இது வெளிப்படையான சான்றிற்கு உட்பட்ட ஒரு பொருளாக இல்லை; தெய்வம் என்பது எந்தப் பகுதிகளும் அற்றது என்று கூறப்படுகிறது; அப்படியெனில், தர்க்க ரீதியான அனுமானத்தின்படி அது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
{*தெய்வ நிலை பிரும்ம நிலையை விளக்கும் வாக்கியங்கள் ஆகும்; உணர்வு அல்லது ஆத்மா என்பது சாதாரணமாக நம் கண்களால் பார்க்கக் கூடிய, காதுகளால் கேட்கக் கூடிய, அல்லது மனதால் கற்பனை செய்யக்கூடிய ஒரு பொருள் அல்ல; ஐம்புலன்களும் மனமும் வரையறுக்கப்பட்டவை (limited); ஆனால் தெய்வ நிலை எல்லையற்றது (infinite); அதற்கு நான்கு பக்கங்களிலும் எந்த எல்லையும் கிடையாது; எனவே, புலன்களின் மூலம் அதை நேரடியாக அனுபவிக்க முடியாது; இது அறிவியல் பூர்வமாகவோ, ஆய்வக சோதனைகள் மூலமாகவோ, அல்லது சாதாரண தர்க்க விவாதங்கள் மூலமாகவோ நிரூபிக்கக் கூடிய ஒரு பொருளும் அல்ல } ||55||

மேலும், வேத நூல்கள் மூலம் பிரம்மம் என்று அறியப்படும் பரம்பொருள், அனைத்திற்கும் அப்பாற்பட்டதாகவே உள்ளது; மூன்று உலகங்களிலும் அதனுடன் ஒப்பிடக் கூடிய எதுவும் கிடையாது; ஆகவே வேத நூல்களில் காணப்படும் கூற்றுக்களை ஆழமாக படிப்பதின் மூலமோ அல்லது ஆழ்ந்த தியான நிலை மூலமோ மட்டுமே அந்த தெய்வத்தை அறிந்து கொள்ள முடியும் ||56||

ஞானம் எனும் உண்மையை தேடி அலைபவர்களுக்கு வேத நூல்களின் கூற்றுகள் பெருமளவு உதவுகின்றன; வேதங்கள் பிரும்மன்* எனும் நிலையை உணர்வதற்கு தேவையான சான்றுகளாகவோ அல்லது ஆதார நூல்களாகவோ உள்ளன என்பதினால் அவற்றின் மூலம் சாதகன் தான் தேடுவதை அறிந்து கொள்கிறான்; முன்னர் விவரிக்கப்பட்ட மூன்றாவது படியின் தன்மை இதுவே.
{*பிரிக்கப்பட முடியாத ஒன்று} ||57||

இவ்வாறு அனுபவபூர்வமான உணருதல் எனும் நிலை தொடரும்போது, அவனுடைய விதியின்படி அவன் வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்து முடித்த பின்னர் அவன் மரணம் அடைகின்றான்; மரணத்திற்குப் பின் விதேக-கைவல்யம்* எனப்படும் விடுதலையை அவனால் அடைய முடியும், அதுவே நான்காவது படியின் பண்பாகும். {*விதேக-கைவல்யம் (Videha Kaivalya) என்பது மரணத்திற்குப் பின் ஆத்மா உடல் பந்தத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, பிரம்மத்துடன் ஐக்கியமாகும் உச்சக் கட்ட நிலையாகும். உயிருடன் இருக்கும்போது ஞானம் பெற்ற ஜீவன் முக்தன், உடலைத் துறந்த பிறகு ஆத்ம ஞானத்தில் நிலை பெற்று பிரம்மத்தில் இரண்டறக் கலந்து விடுகின்றார்}||58||

பிரபஞ்சத்தின் சிருஷ்டி, ஸ்திதி, பிரளயம் (Srishti, Sthit, Pralaya) என்பது, என்பது காரண-காரியக் கொள்கையின் (Law of Cause and Effect / Karma) அடிப்படையில் இயங்கும் ஒரு தொடர்ச்சியான சுழற்சி ஆகும்; இது பிரபஞ்ச விதியின்படி நிகழ்கிறது; இந்த சுழற்சியை உணர்ந்து, அதன் விதிகளுக்கு உட்பட்டு, பற்றின்றி வாழ்வது ஒரு பெரிய ஞானம்; இதுவே தெய்வம் நமக்கு அளித்துள்ள விழிப்புணர்வு என்ற பரிசு என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் சாதகர்களால் மட்டுமே ஆத்ம விடுதலைக்கான பாதையில் பயணிக்க முடியும்||59||

இத்தகைய பலதரப்பட்ட விளைவுகளும் அல்லது வெகுமதிகளும் கூட, வேதத்திற்கு எதிரான எண்ணங்களையும், செயல்களையும் தடுத்து நிறுத்துவதற்கான வழி முறைகளாகவே கருதப்படுகின்றன; பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் வெளிக் கொண்டு வருவது பரமாத்மனே; அந்த பரமாத்மாவின் உள்ளேதான் அனைவரும் நிலைத்திருக்கின்றனர்||60||

பரமாத்மன் பல்வேறு படைப்புக்கள் நிறைந்த பிரபஞ்சத்தை படைத்த பின்னர் அதில் தனிப்பட்ட ஆத்மாக்களாக தானே பிரவேசித்து பன்முகத் தன்மை, இன்பம் மற்றும் துன்பத்தை அனைத்தையும் ஆராய்ந்து பார்க்க வைத்த பின்னர், பிரளய காலத்தில் (அழிவு காலத்தில்) தான் படைத்த அனைத்தையுமே தன்னுள் உள்வாங்கி கொண்டு விடுகின்றார்||61||

ஒரு பிம்பம் என்பது ஏதோ ஒன்றின் பிரதிபலிப்பாகவே இருக்க முடியும்; பரமாத்மன் எந்த மாறுதல்களுக்கும் உட்படாதவர், சிதைவற்றவர், மற்றும் பேரொளி மிக்கவர் என்று கூறப்படுகையில் அவரிடமிருந்து பன்முகத் தன்மை கொண்ட ஆத்மாக்கள் வெளிப்பட்டது என்பது முரணாக உள்ளதே என சிலர் வாதிடலாம்||62||

ஆனால் வேத நூல்களை நன்கு கற்றறிந்த வல்லுநர்கள் ‘எல்லைகள் அந்தப் பரமாத்மனுக்கு எந்த வித வரம்புகளும் இருக்க முடியாது; அந்த சக்தியால் எதை வேண்டுமானாலும் செய்ய இயலும்; அந்த சக்தி அனைத்திலும் வியாபித்து உள்ளது; அனைத்து உயிரினங்களின் ஆழமான உட்கருவாகவும் அதுவே திகழ்கிறது’ என்று பிரகடனம் செய்கிறார்கள்||63||

ஒருவரின் செயல்பாடுகளாக கேட்டல், நுகர்தல், சுவைத்தல், பேசுதல், கொடுத்தல், வாங்குதல், செல்லுதல், திரும்புதல், கழிவு நீக்கம் செய்தல், இனப்பெருக்கம் செய்தல் போன்ற அனைத்தும் புலன்களின் தூண்டுதலால் ஏற்படுகின்றன ||64||

உயிரினங்களின் அத்தகைய செயல்பாடுகள் அனைத்தும், ஒருவரது உடலில் உள்ள புலன்களால் மட்டுமே நடைபெறுவதில்லை; அவை சாதாரணப் புலன்களுக்கு எட்டாத ஒரு சக்தியான பரமாத்மனால் நிகழ்த்தப்படுகின்றன; அந்த சக்தியே தனிப்பட்ட ஆத்மா க்களாக நுழைந்து இயக்குகின்றதாக நம்பப்படுகின்றது ||65||

அனைத்தையும் ஆளும் அந்த பரமாத்மனே, உள்ளத்தின் சாரமான, நுணுக்கமான தத்துவத்தைத் தேடினால், இறுதி இலக்காக வந்து சேரும் பரமாத்மனாகவும் உள்ளது ||66||

ஒரு முறை அனுபவ பூர்வமான ஞானம் வெளிப்பட்டு விட்டால், அவனது அனைத்து ஆசைகளும் மிகச் சிறந்த முறையில் நிறைவேறியதாகக் கருதப்படுகின்றன; இதுவே ஆத்ம ஞானத்தின் பயனாகும்; மேலும், இது அசைக்க முடியாத, தூய்மையான பேரின்ப நிலையை (நிர்வாண நிலையை) ஒருவனுக்கு அளிக்கின்றது ||67||

வேத நூல்களில் எப்படி ஒவ்வொரு செயல்களுக்கும் அதனதன் தகுதிக்கேற்ப பலன்கள் கிடைக்கும் என்பதை தீவிவாக எடுத்துக் காட்டி ஒருவரை ஆன்மீகப் பாதையில் ஈர்க்க வைப்பதும் ஆன்மீகப் பாதையின் ஒரு வழி முறையே ஆகும்; இது வேத நெறிக்கு முரணான செயல்களைத் தடுத்து நிறுத்துகிறது; அடுத்ததாக, வேத நூல்களில் கூறப்பட்டுள்ள சாஸ்திரங்களை வழி காட்டியாகக் கொண்டு செயல்படும் முறையைப் பற்றி விளக்கவுள்ளேன்; ஓ அர்ஜுனா, அதையும் கவனத்துடன் கேட்பாயாக’ என்று ஸ்ரீமத் தத்தர் கூறினார் ||68||

ஒரு குயவன் பூமியில் இருந்து எடுத்த மண்ணிலிருந்து ஒரு பானையைச் செய்வதற்கு முன்னரும் மண் இருந்தது; பானையாக வடிவமைக்கப்பட்ட பின்னரும் அந்த மண் அங்கேதான் இருக்கிறது; ஒரு வேளை பானை உடைந்தாலும், அதிலுள்ள மண் அழிவதில்லை, அது மண்ணாகவே நீடிக்கிறது; ஆகவே இங்கு மண் என்பதே நிலையான உண்மை ஆகும் ||69||

ஆகவே, ஒரு பானையைப்* பற்றிய இந்த உண்மையை நாம் அறிந்து கொண்டால், மண்ணால் செய்யப்பட்ட அனைத்து வகையான பாண்டங்களை பற்றியும் அறிந்து கொள்ள முடியும்; எங்கே ஒரு உருவமோ அல்லது வடிவமோ தோன்றுகிறதோ, அங்கே அதற்கான பெயரும் அதனுடன் இணைந்தே வரும் என்பதை அறிந்து கொள்வாயாக {*பானை என்பது வெறும் பெயர் மற்றும் வடிவம்; மண் என்பதே உண்மை; அதை போலவேதான் எந்த பண்டம் செய்வதற்கு எது மூலமாக பயன்பட்டதோ, அந்த பண்டம் உடைந்தாலும் அதன் மூலப் பொருள் அப்படியேதான் இருக்கும் }||70||

வேத சாஸ்திரங்கள் கூறும் பிரம்மம் என்ற பரமாத்மனின் உண்மை இயல்பை ஒருவன் முழுமையாக அறிந்து கொண்டால், அவன் இப் பிரபஞ்சம் முழுவதையும் முழுமையாகப் புரிந்து கொள்கிறான்; அத்தகைய புரிதல் ஏற்பட்டு விட்டால் அதுவே ஆன்மீக முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக அமைகிறது ||71||

அந்தப் புரிதல் உள்ளத்தில் ஆழமாகப் பதியும் வரை, ஒருவன் சான்றோர்களிடம் இருந்தும், ஆன்மீக செம்மல்களிடம் இருந்தும் போதனைகளை கேட்டு அவற்றின் சாரத்தை அறிய முயல வேண்டும்; அந்த உபதேசங்களின் சாரம் அவன் உள்ளத்தில் ஆழப் பதிய வேண்டும்; அதன்பின், அவன் தனக்குள் தானே வினவிக் கொண்டு, எழும் ஐயங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்; ஆயினும், இப்படிப்பட்ட முயற்சிகள் அனைத்தும், அவன் பெரும் போதனைகளை ஆழ்ந்த கவனத்துடனும் கேட்டவாறு இருப்பதின் மூலமே தொடங்குகின்றன||72||

முன்னர் குறிப்பிடப்பட்ட வேதக் கோட்பாடான ‘தத்-த்வம்-அஸி’ (Tat-Tam-Asi) என்பதன் உட்கருத்தை இப்பொழுது கேள்; தத் (Tat) அல்லது அது என்பது பர பிரம்மம் என்று போற்றப்படும் பரமாத்மனை குறிக்கிறது; த்வம் (Tam) என்றால் நீ அதாவது தனி நபர் ஆத்மா ; அஸி (Asi) என்றால் இருக்கிறாய் என்பது அர்த்தம் ஆகும் ||73||

மனம், புத்தி, அகங்காரம் மற்றும் சித்தம் ஆகிய நான்கு அந்தக் கரணங்களின் (உள் கருவிகள்) செயல்பாடுகளைக் கடந்து, அவற்றிற்கு தானும் சாட்சியாக நின்று, அவற்றை காண்பவன் (Seer) அதாவது ஆத்மா எனப் போற்றப்படுகிறார்; இவன் அந்தக் காட்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, தூய உணர்வு வடிவமாகத் திகழ்கிறான். நீ அதுவாக இருக்கிறாய் (That thou art) என்ற வாக்கியத்தில் வரும் த்வம் என்பதன் பொருளும் இதுவேயாகும்||74||

ஒரு பானையைக் காண்பவன் அந்தப் பானையிலிருந்து எவ்வாறு வேறுபட்டு நிற்கிறானோ, அதே போன்று உடலையும் அதன் செயல்களையும் சாட்சி போல இருந்து காண்பவன் அந்த உடலிலிருந்து வேறுபட்டவன் என்றே ஊகிக்கலாம் (அதாவது அந்த சாட்சியை ஆத்மா என்பதாக கூறலாம்); அவ்வாறு வேறுபட்டு நிற்கும் அந்தப் பொருளே, ‘த்வம்’ அல்லது ‘நீ’ என்பதன் ஆழமான உட் கருத்தாக விளங்குகிறது’ ||75||

எந்த ஒருவர் தங்கள் வீடு, மனைவி, மக்கள் போன்ற வெளிப் பொருட்களின் மீது மட்டுமே பற்றுக் கொண்டிருப்பார்களோ அவர்களால் அந்த பரபிரும்மனை காண முடிவதில்லை; மாறாக, தங்கள் மனதிற்குள் குடியிருக்கும் ஆத்மா வை பேரன்போடு தேடுபவர்கள், அகத்திற்குள் உள்ள ஆத்மா தரும் பேரின்பத்தை நிச்சயமாக உணர்வு பூர்வமாக புரிந்து கொள்வார்கள்’ ||76||

ஒருவர் நான் இருக்கிறேன் (I Am) என்ற இருப்பைப் பற்றிய முழு உணர்வோடு, தற்பெருமை கொள்ளாமல், அகங்காரம் அழிந்து, ஆத்ம உணர்வோடு வாழும்போது, பௌதிக உடலை விட்டுப் பிரிந்தாலும், ஆத்மாவுடன் கொண்ட அந்த பேரன்பு பிணைப்பு, ஆன்மீக விழிப்புணர்வுடன் வாழும் சாதகர்களுக்கு நிரந்தரமானது||77||

ஒருவர் தன் மனதின் ஆற்றலை மட்டுமே கொண்டு மனத்தால் எங்கும் பயணம் செய்ய இயலும்; ஒவ்வொரு கணமும் எழும் உணர்ச்சிகள் நமது அறிவு பூர்வமான சிந்தனையைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கின்றன; விழிப்பு நிலை, கனவு நிலை, மற்றும் உறக்க நிலை ஆகிய மூன்றையும் கடந்து நின்று, அவற்றை ஒரு சாட்சியாகக் காண்பவரே த்வம் (Tam)—அதாவது உண்மையான நீ எனும் ஆத்ம தத்துவத்தை—அறிந்தவர் ஆவார்’ ||78||

யார் தன்னை ஒழுக்கத்திற்கு மாறான செயலில் அல்லது உண்மைகளை மாற்றி திரித்து கூறுதல் போன்றவற்றில் ஈடுபட மாட்டாரோ, மனதில் எழும் எண்ணங்களை ஒரு விளையாட்டைப் போல பார்ப்பாரோ, ஒரு காந்தம் அருகில் இருக்கும்போது மட்டுமே இரும்பு ஊசிகள் இழுக்கப்படும் என்பதை போலவே ஆத்மா உள்ளவரைதான் உடலும் செயல்படுகிறது என்பதை உணர்பவரோ அவரே உள்ளிருக்கும் ஆத்மாவை உணர்ந்தவர்||79||

‘ஓ அர்ஜுனா, உடல் அதன் பஞ்ச பூதங்களினால் ஆன தன்மைகளுடனும் இருந்தாலும் அதற்குத் தானாகச் சிந்திக்கும், உணரும் அல்லது செயல்படும் திறன் இல்லை என்பதை நீ நன்கு அறிவாய். உடலுக்குள் இருக்கும் உயிர் சக்தியான ஆத்மா, உணர்வு நிலை உடையது; முழு உடலையும் செயல்பட வைப்பதற்கு உள்ளிருக்கும் அந்த ஜீவாத்மாவே மூல காரணம் ||80||

ஜீவாத்மா என்பது உடலில் உள்ள சாட்சியாக பார்க்கப்படுகின்றது. அது உடலையும், மனதையும் கடந்து, அனைத்தையும் கவனித்துக் கொண்டு, அறிவாற்றல் வடிவில் விளங்குகின்றது; அது தூய்மையான, பழுதடையாத நிலையில் எப்படி இருந்ததோ, அப்படியே உள்ளது ||81||

உடல், புலன்கள், மனம், அகங்காரம் ஆகியவற்றைத் தாண்டி, சாஸ்திரங்களில் கூறப்படும் சத்-சித்-ஆனந்தம் எனும் நிலையில் இருப்பதும், நமக்குள்ளே சாட்சியாக, அழியாத, தூய அறிவாக, பேரானந்தமாக இருக்கும், உண்மை தன்மை மாறாமல் உள்ளதே (True Existence) தூய ஆத்மா எனப்படும்||82||

வேத சாஸ்திர கோட்பாட்டின் ‘த்வம்’ அல்லது ‘நீ’ என்ற பகுதி இவ்வாறுதான் சித்தரிக்கப்படுகிறது; இப்போது நான் உனக்கு பரம சாராம்சம் அல்லது ‘அது’ பற்றி விவரிக்கிறேன்; அதை அறிய வேண்டிய விதத்தில் ஒருவர் அறியும்போது, தீங்கு அல்லது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் அழிக்கப்படுகின்றன ||83||

‘அது’ என்பது ஒருமை எனும் பரப் பிரும்மனை குறிக்கிறது, அதன் எதிர்ச் சொல் இருமையில் உள்ள பன்மையைக் குறிக்கிறது; தூய அத்வைதத்தை உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ளும் நிலையை எப்படி அடைவது? இதற்கு குருவின் அறிவுரை உதவும் ||84||

பரபிரும்மன் என்பது என்னவெல்லாம் அல்ல என்பதை விவேகத்துடன் அறிந்து கொண்டு, அது இருக்கிறது, அது தூய்மையானது, அது அறிவாற்றலுக்கு தகுதியானது என்று சாஸ்திரங்கள் கூறுவதை முற்றிலும் உணர்ந்து கொண்டு , ‘அது’ அதாவது ஆத்மா எனப்படுவதின் சாராம்சம் என்ன என்பதை அடையாளம் கண்டு கொண்டு, உள்ளத்தாலும் உணர்வு பூர்வமாகவும் அத்வைதத்தில் இருக்க முயற்சி செய்||85||

நிர்குண பிரம்மன் (Nirguna Brahman) அல்லது பரமாத்மன் என்று அழைக்கப்படும் விஷ்ணுவின் அருவ நிலையில் உள்ள ‘அது’ உலகப் பற்றுகள் ஏதுமற்ற, குணங்களைக் கடந்த (Nirguna) நிலையில் உள்ளது; சாதாரண புலன்கள் (கண், காது, மனம்) மற்றும் தர்க்க அறிவால் அதை அறிய முடியாது; அதுவே ‘அது’ எனப்படும் சாராம்சம் ஆகும் ||86||

‘அது’வும் அதன் ஆனந்தமும் எல்லையற்றது, அதுவே சச்சிதானந்தம்* எனும் நிலை ஆகும்; அது பரமாத்மா அல்லது உன்னத ஆத்மா அல்லது உயிர் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது; எங்கும் நிறைந்த, எல்லையற்ற நிலையில் உள்ள சாரமே ‘அது’ ஆகும்.
{*இருப்பு-அறிவு-பேரின்பத்தின் முழுமையான நிலை} ||87||

பரமாத்மன் அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளார்; காலங்களைக் கடந்தவர், கடந்த, நிகழ்கால மற்றும் எதிர்கால நிகழ்வுகளை அறிந்தவர்; அனைத்து தெய்வீக வலிமை சக்திகளும் இந்தப் பரம்பொருளுக்கே உரியவை, மேலும் எப்போதும் சம நிலையுடன் உள்ள அதுவே ‘அது’ ஆகும் ||88||

அது என்பதின் சாரம் அறியப் பட்டால், மற்ற அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்; அனைத்து அம்சங்களிலும் உள்ள அதன் எல்லையின்மையை மறுக்கவோ, எதிர்க்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது; இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தோன்றியதற்கும், அதில் உள்ள உயிரினங்கள் இயங்குவதற்கும் மூல காரணம் அந்தப் பேராற்றல்தான்; அதுவே ‘அது’ என்பதின் சாரம் ஆகும் ||89||

தனது தனித் தன்மையை மாற்றிக் கொள்ளாமல், அனைத்து உயிரினங்களிலும் ஆத்மா க்களாக பிரவேசிப்பவராகவும், அதன் மூலம் அனைத்தின் மீதும் ஆதிக்கம் கொண்டவராகவும் இருக்கின்றார்; ‘அது’ என்பதின் சாரம் அதுவே ஆகும்||90||

உலகில் பிறப்பெடுத்துள்ள அனைவருமே கர்மாவினால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கத்தான் வேண்டும்; ஆனால் இது ஒருவரின் உள்ளே உள்ள உண்மை எனும் ஆத்மாவின் தன்மையை மாற்றுவதில்லை; ஞான நிலை அடைந்தவர்களுக்கு அது ஒரு அமிர்த ஊற்றாக காணப்படுகின்றது; ‘அது’ என்பதின் சாராம்சம் இதுதான்.
{இதன் பொருள் என்ன என்றால் கர்மா என்பது உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளுடன் தொடர்புடையது; எப்படி பசி, தாகம், இன்பம், துன்பத்தை என்பவற்றை அனுபவித்தாலும், அவை அவனது உடலைத்தான் பாதிக்குமே தவிர, அவனது ஆத்மா வை அல்ல என்பதினால் கர்மாவினால் ஏற்படும் அனுபவங்கள் ஆத்மாவின் தூய்மையான தன்மையை மாற்றுவதில்லை; ஆத்மா என்பது அழியாத, நித்தியமான, தெய்வீக ஒளியாகிய சச்சிதானந்தம்; இது கர்மாவின் விளைவுகளால் ஆத்மா மாறாது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது} ||91||

வெளிப் பார்வைக்கு புலப்படாத, சர்வ ஞானம் கொண்டது ‘அது’ என்பது ஆகும்; தெளிவற்றதாக இல்லாமல் வரையறுக்கப்பட்ட அறிவுடன் இருப்பதே ‘நீ’ என்பதின் சாராம்சம், இவ்வாறு வேத நூல்கள் கூறுகின்றன; இத்தகைய வெளிப்படையான வேறுபாடுகளில் எப்படி ஒருமை இருக்க முடியும்? ||92||

ஓ அர்ஜுனா, இந்தக் கேள்வி உன் மனதில் எழுந்திருந்தால், கேள், இங்கு அந்தப் பரம கடவுள் தத்தாத்ரேயப் பெருமானாக அங்கீகரிக்கப்படுகிறார்; எனவே தூய அத்வைதத்தில் ‘அந்த’ அல்லது ‘அது’ என்பதிலிருந்து ‘நீ’ என்ற வேறுபாடு பொருந்தாது, மேலும் அந்த உணர்வுப் பூர்வமான இணைப்பைப் பேணுவதற்குத் துணையாகச் செயல்படுவதும் அதே கடவுள்தான்||93||

‘அது’ என்ற சொல்லே கடந்த காலத்தைக் குறிக்கிறது; இங்கு ‘அந்த சாராம்சம் இதுதான்’ என்பது நிகழ் காலத்தைக் குறிக்கிறது, மேலும் ஒருவர் இந்த முரண்பாட்டையும், காலத்தையும் கடந்து மேலே செல்லும்போது, தேடப்படும் உணர்வுப் பூர்வமான இணைப்பைப் பேணுவதற்கு அதே கடவுள்தான் ஆதரவாகச் செயல்படுகிறார்’||94||

கடந்த காலத்தில் காசி நகரில் காணப்பட்டவர், இளமையில் ஒரு மன்னனாக ஆட்சி செய்த பின் இப்போது அரச பதவிகள் ஏதுமின்றி முதியவராக இருக்கும் அவரேதான் என்று கூறப்படும் அனைத்தும் அதே நபரைக் குறிக்கின்றன ||95||

ஒருவர் குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் ஆகிய இரு நிலைகளையும், அவற்றின் குறிப்பிட்ட காலத்தையும், மேற்கண்ட எடுத்துக் காட்டில் உள்ள இடங்களையும் கூடக் கடந்து செல்லும்போது, இப்போது முதுமையில் விவாதிக்கப்படுவது அதே நபர்தான் என்பதை நாம் உணர்கிறோம்; வாக்கியங்களின் மறைமுகப் பொருளின் மூலம் இதுவே புரிந்து கொள்ளப்படுகிறது’ ||96||

தெய்வங்களைக் குறித்து வரம்பிற்கு உரியவர், வரம்பிற்கு அப்பாற்பட்டவர், அறிந்தவர்-அறியாதவர் போன்ற இரட்டைத் தன்மைகளை (Dualities) கடந்து ஒருவன் பார்க்கும்போது, அங்கே எஞ்சியிருப்பது ஒரு உன்னதமான, பிரிக்க முடியாத தனித்துவமான பேரொளி மட்டுமே என்பதை புரிந்து கொள்ள முடியும்||97||

ஜடமான உடலுக்குள் உள்ள நாம், கர்ம வினைகளின்படி இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம்;மாறுதல்களுக்கு உள்ளாகின்றோம்; நமது அறிவாற்றல் வரம்பிற்கு உட்பட்டவை; ஆனால் நம்முள் உள்ள ஆத்மா அத்தகையது அல்ல; அதில் உள்ள நீ என்பதின் சாராம்சம் அதுவே ;அதன் முழுமையான விளக்கத்தை நான் உனக்கு சொல்கின்றேன்||98||

ஜடத் தன்மை வாய்ந்ததும், இன்ப-துன்பங்கள் நிறைந்த, மாற்றத்திற்கும் அழிவிற்கும் உட்பட்டது எதுவோ அதுவே உடலாகும்; நமது உள்ளே உள்ள ஆத்மா அதற்கு முற்றிலும் முரணானது; அனைத்து உயிரினங்களுக்கும் உள்ளே உறையும் ஆத்மா ஒளி மயமானது; அது சுயமாக பிரகாசிப்பதாக உள்ளது; இதுவே ‘நீ’ அல்லது ‘நீயே’ (You/Thou) எனும் சொல்லின் உட்கருத்து ஆகும் ||99||

இது பிரபஞ்சத்தின் அணுவிலும், அனைத்து உயிர்களிலும் வியாபித்து உள்ளது எதுவோ, எது சத்-சித்-ஆனந்தம் எனும் சச்சிதானந்தமானதோ அதுவே ‘அது’ (That) எனப்படும் தத்துவத்தின் சாரமாகும் ||100||

எனவே, காலத்தின் வரை முறைகளுக்கு உள்ளடங்கிய ஜடமான உடலில் உள்ளே உள்ள ஆத்மா , பேரின்ப நிலையில் இருக்கும்போது பரம்பொருளுடன் உணர்வு பூர்வமாக, ஒருமை எனும் நிலையில் ஒன்றிணைய முடியும்; இதுவே என்றும் நிலைத்திருக்கும், பிரிக்கப்பட முடியாத ஒருமையைப் போதிக்கிறது. ||101||

எடுத்துக்காட்டாக, கங்கை நதிக் கரையில் ஏதாவது செய்யுங்கள் என்பதில், நதிக் கரையே முக்கியத்துவத்தை குறிப்பதை போலவே, சில நேரங்களில் வாக்கியத்தின் அழகும், அர்த்தத்தின் ஆழமும் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்லாமல், அவற்றை எங்கு வைக்கிறோம் என்பதிலும் அடங்கியுள்ளது ||102||

ஒருமை குறித்த அனுமானம் வலுப்பெறும் நமது விஷயத்தில், இரண்டாம் நிலை முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வு கூட உண்மையாக இருப்பதில்லை. இலக்கணப்படி, ஒரே வாக்கியத்தின் மூலம் பல விஷயங்களைக் குறிக்க முடியும், எடுத்துக்காட்டாக: ||103||

காக்கையிடமிருந்து தயிரைக் காப்பாற்று, ஒரு வேளை காக்கைக்குப் பதிலாக ஒரு தெரு நாய் அதனிடம் வந்தால், அதுவும் விரட்டப்படுகிறது; இங்கு, தயிரைப் பாதுகாப்பதே முதன்மையான நோக்கம், பசியுடன் இருக்கும் பல மற்றவை இரண்டாம் நிலையே||104||

பரபிரும்மன் என்பவர் எல்லாவற்றையும் அறிந்தவர்; மனிதன் வரம்பிற்குட்பட்ட அறிவுடையவன்; ஆகவே அந்த இறைவனுக்கும் மனிதனுக்கும் (ஜீவன்) இடையில் வெளிப்படையாகத் தெரியும் வேறுபாடுகளை நீக்கினால் மட்டுமே, இருவருக்குள்ளும் இருக்கும் ஒரே ஆத்ம தத்துவத்தை உணர முடியும் ||105||

ஆகவே, ‘அதுவே நீ’ எனும் தத்துவக் கோட்பாட்டில், என்பதில் உள்ள சர்வ ஞானம் போன்ற இறைப் பண்புகளையும், அறியாமை போன்ற மனித வரம்புகளையும் புறக்கணிக்க வேண்டும்; இருவருக்குள்ளும் பொதுவாய் உறையும் ஒரே ஆத்ம பிரம்மத்தை மட்டும் ஏற்கும் போது இரண்டும் ஒன்றே என்பது விளங்கும்; இந்த உன்னத உண்மையை வெறும் அறிவுப் பூர்வமாக அல்லாமல், தன் சொந்த அனுபவமாக உணர்பவர் பிறவிப் பிணியில் இருந்து விடுபட்டு முக்தி அடைகிறார்||106||

ஆத்மாவாகிய நான், அந்தப் பரம்பொருளாகிய பிரம்மத்திலிருந்து வேறானவன் அல்ல; தூய ‘நான்’ எனும் உணர்வு கொண்ட நான், அந்தப் பரம்பொருளாகிய ‘நான்’ (Supreme Self) என்பதிலிருந்து வேறுபட்டவன் அல்ல; இதைத்தான் சீடர்கள் அறிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் வேண்டும். இச் செயல் முறையில் வழிகாட்டும் வேத வாக்கியங்களே, ‘மகா வாக்கியங்கள்’ (Maha-Vaanyas) எனப் போற்றப்படும் மகத்தான பேருரைகளாகும்||107||

‘யோக நெறியை முறையாகப் பயில்வதாலும், தியானத்தில் உறுதியான நிலைத் தன்மையை அடைவதாலும், நம்மைப் பிணைக்கும் அல்லது தடை செய்யும் அனைத்துக் கட்டுகளும் உடனடியாக அறுபட்டுப் போகின்றன; அதன் விளைவாக, எவராலும் அசைக்க முடியாத ஒரு நிலையான அமைதி நிச்சயமாகப் பெறப்படுகிறது’ ||108||

|| பி. தெம்பே மகாராஜ் அவர்களால் இயற்றப்பட்ட இந்த நூலின் பதிமூன்றாம் அத்தியாயம் இத்துடன் நிறைவு பெறுகிறது || இது கடவுள் தத்தாத்ரேயரின் திருவடிகளில் பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.
மொத்த ‘ஓவி’ (Ovi) செய்யுள்களின் எண்ணிக்கை: 108
13 அத்தியாயங்களில் உள்ள மொத்த ‘ஓவி’ செய்யுள்களின் எண்ணிக்கை:
108+1299 = 1407
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு  பாகம் -4, அத்தியாயம் -13 முடிவடைந்தது
பாகம் -5, அத்தியாயம் -14 தொடர்கின்றது