ஜீவாத்மாவின் பயணம்-1
ஜீவாத்மா, ஸ்தூல சரீரம், சூஷ்ம சரீரம், பித்ருக்கள், ஆதித்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள்
1) கண்களுக்கு தெரியாமல் உடலுக்குள் உள்ள ஜீவாத்மாவை ஜீவாத்மா அல்லது சூஷ்ம சரீரம் என்றும், உடலை ஸ்தூல சரீரம் என்றும் கூறுவார்கள். எப்போது அந்த சூஷ்ம சரீரம் அது குடி இருந்த ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியேறிச் செல்கின்றதோ அந்த நிலையையே மரணம் என்கின்றோம். ஜீவாத்மாவுக்கு அழிவில்லை. ஒரு உடலில் வாழும் ஜீவாத்மாவிற்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த கால அளவு முடிந்தவுடன், தான் வாழ்ந்து கொண்டிருந்த ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியேறி மேலுலகிற்கு சென்று அதன் பாவ புண்ணிய கர்ம வினைக்கேற்ப தண்டனைகளை அனுபவித்த பின்னர் மீண்டும் இன்னொரு பிறவியின் ஜீவாத்மாவாக வெளி வருகிறது என்பதே உயிர் தத்துவம் ஆகும்.
2) எனவே ஒவ்வொரு ஜீவாத்மாவும் பரபிரும்மனிடத்தில் இருந்து பிரும்மா மூலம் வெளிப்பட்ட தெய்வீக சக்திக் கதிர்கள் ஆகும். அந்த ஜீவாத்மாக்களே மானிடர்களாக, மிருகங்களாக பறவைகளாக பிறப்பை எடுக்கின்றன
3) ஜீவாத்மா என்கிற உருவமற்ற ஜீவன் வாழும் ஸ்தூல சரீரத்தில் (அதையே ஜடமான உடல் என்கின்றோம்) கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் போன்றவை உள்ளடக்கிய பதினைந்து தெய்வீக ஆற்றல்கள் உள்ளன. ஜடமான உடலையே பதினாறாவது தெய்வ அம்சம் என்கின்றோம். பதினைந்து தெய்வீக சக்திகளும் ஞானேந்திரியங்கள் எனப்படும் ஐந்து புலன் உறுப்புகள், கர்மேந்திரியங்கள் எனப்படும் ஐந்து செயல் உறுப்புகள் மற்றும் பிராணங்கள் எனப்படும் ஐந்து சுவாசங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் ஜடமான உடலில் இருந்து ஜீவன் வெளியேறிய பின்னர், தெய்வாம்சம் மிக்க அந்த உடலை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காக பிரேத ஸம்ஸ்காரங்களை செய்கின்றார்கள்.
4) யாகத் தீயில் போடப்படும் தானியங்கள், நெய் , சந்தனக் கட்டை மற்றும் பிற பொருட்களை போன்றே யாகத் தீயைப் போன்று சிதையில் எரியும் நெருப்பின் வழியே தெய்வாம்சங்களைக் கொண்ட பதினைந்து ஆற்றல்களையும், பதினாறாவது தெய்வ அம்சமான ஸ்தூல சரீரத்துடன் மேலுலகிற்கு திருப்பி அனுப்பி வைக்கின்றோம். இதனால்தான் சாஸ்திரங்களில் தகனம் செய்வதை ‘அந்த்யேஷ்டி’ அதாவது ‘இறுதி வேள்வி’ என்றே மிக உயர்வாக சொல்லப்பட்டு உள்ளது.
5) பித்ரு கர்மாவில் செய்யப்படும் கர்மாக்கள் மூலம்தான் மரணம் அடைந்தவரது ஜீவாத்மாவையும், சரீரத்தில் இருந்த பதினைந்து ஆற்றல்களையும் அதனதன் ஸ்தானத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கிறோம் என்பது அந்த பன்னிரண்டு நாட்கள் கூறப்படும் மந்திர உச்சாடனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
6) மரணம் அடைந்தவருக்கு முதல் பன்னிரண்டு நாட்கள் செய்யப்படும் கர்மாக்கள் பித்ரு கர்மா எனப்படும். ஆனால் பதிமூன்றாம் நாளன்று நடைபெறும் சுபஸ்வீகாரம் எனும் சுப நிகழ்வில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு இறந்து போனவர்களின் உறவினர்களோடு சேர்ந்து உணவு அருந்தி, தான தர்மங்களில் பங்கேற்கிறார்கள்.
7) பின்னர் ஒவ்வொரு வருடமும் அதே திதியில் செய்யப்படும் சடங்கிற்கு சிரார்த்தம் அல்லது திவசம் என்பது பெயர்.
8) மரணம் அடையும் சூஷ்ம சரீரமான ஜீவாத்மாவானது (ஜீவாத்மா) பிரும்ம தேவரால் படைக்கப்பட்டுள்ள வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர் என்கின்ற துவாதசாதித்யர் போன்றவர்களின் பாதுகாப்பில் இருப்பார்கள்.
9) பூவுலக வாழ்க்கைக்கு எப்படி பூதேவி, இந்திரன், அக்னி, வாயு மற்றும் வருணன் போன்றவர்கள் முக்கியமோ அப்படித்தான் மரணம் அடைந்து விட்டவர்களின் ஜீவாத்மாக்களை காப்பாற்ற பிரும்மனால் படைக்கப்பட்ட எட்டு வசுக்கள், 11 ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர் என்கின்ற துவாதசாதித்யர் போன்றவர்களின் பாதுகாப்பில், 12 ஆம் நாள் சடங்கு முடியும்வரை மரணம் அடைந்து விட்டவர்களின் ஜீவாத்மாக்கள் இருப்பார்கள்.
10) பல்லாயிரக்கணக்கான கோடி பித்ருக்கள் தேவலோகத்தில் உள்ளார்கள். அவர்கள் வம்சாவளியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளார்கள். ஒவ்வொருவருடைய பித்ருக்களின் மரணம் அடைந்து விட்ட ஆறு வம்சாவளியினரும் தேவலோகத்தில் உள்ளார்கள் (ஒருவரது குடும்பத்தினரோடு ஆறு வம்சாவளியினரும் சேர்ந்து மொத்தம் ஏழு வம்சங்கள்). அவர்களது ஏழாவது அல்லது எட்டாவது அல்லது ஒன்பதாம் வம்சாவளியினர் மரணம் அடைந்து அவர்களின் ஜீவாத்மாக்கள் தேவலோகத்தை சென்றைடையும்போது, முதல் மூன்று நிலைகளில் உள்ள பித்ருக்கள் அடுத்த பிறவியை எடுக்கும் முன்னர் பிரும்மாவினால் தெய்வ அம்சம் மிக்க வசுக்கள், ஆதித்யர்கள் மற்றும் ருத்திரர்களுக்கு உதவி புரிய அவர்களது உதவியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். சில காலம் பொறுத்து அவரவர்களின் கர்ம விதிக்கேற்ப மானிடர்கள், விலங்குகள், பூச்சிகள் என ஏதாவது ஒரு பிறப்பை எடுக்கின்றார்கள்.
11) இந்த நிலை சுழன்று கொண்டே இருக்கும் சக்கரத்தைப் போன்றது என்பதினால் எப்போதும் தேவலோகத்தில் நமது ஆறு வம்ச பித்ருக்கள் நமது பித்ருக்களோடு (ஒருவரது குடும்பத்தினரோடு ஆறு வம்சாவளியினரும் சேர்ந்து மொத்தம் ஏழு வம்சங்கள்) தங்கி இருப்பார்கள் என்பதாக கூறப்படுகின்றது. ஆகவேதான் தேவலோகத்தில் உள்ள பித்ருக்கள் அங்கு தங்கி உள்ள காலம் நிலையானது அல்ல என்பது புரிகின்றது.
12) இந்த உலகில் பல கோடி ருத்திரர்கள் உள்ளதாகவும் அதில் இந்த 11 ஏகாதச ருத்ரர்களே முக்கியமானவர்கள் என்றும் கூறப்படுகின்றது. ருத்ரர்கள் பயங்கர முகத் தோற்றம் உடையவர்கள். கண்களுக்கு தெரியாமல் பிரேதமாகவும், பிசாசுகளையும் மற்றும் பூதமாக விண்வெளியில் அலைந்து திரியும் தீய ஜீவாத்மாக்களை கட்டுப்படுத்தி வைக்கும் அதிபதிகள் அவர்கள்.
13) ருத்திரர்களுக்கு உருவம் இல்லை என்பதாகவும், அவர்கள் பதினோரு லிங்க உருவில்தான் பூஜிக்கப்படுகின்றார்கள் என்று கூறப்பட்டாலும் காஞ்சி கைலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ரர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன என்பதாகவும் கூறுகின்றார்கள்.
14) ருத்ரர்கள் படைக்கப்பட்டதில் புராணங்களில் இரு கதைகள் உள்ளன. முதலாவது கதையின்படி அவர்களை சிவபெருமான் படைத்ததாகவும், இரண்டாம் கதையின்படி அவர்களை பிரம்மன் படைத்ததாகவும் உள்ளது. முதலில் பிரும்மா படைத்த நான்கு சனத் குமாரர்களும் ஞான மார்கத்தில் சென்று விட்டதினால், வசுக்களுடன் சேர்ந்து உடலில் இருந்து வெளியேறிய ஜீவாத்மாக்களை காப்பாற்ற பகவான் பிரும்மாவே பதினோரு ருத்ரர்களை படைத்தாராம். சிவபெருமான் மூலம் அவதரித்த ருத்ரர் வேறு, இந்த ருத்ரர்கள் வேறு ஆகும்.
15) மானிடர்கள் பிரம்மாவினால் படைக்கப்பட்டவர்கள் என்பதினால் அனைவரது ஜீவாத்மாக்களும் அவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. ஆகவே மரணம் அடைந்து விட்டவர்களின் ஜீவாத்மாக்கள் யமலோகத்திற்கு செல்லும்வரை அந்த ஜீவாத்மாக்களை காப்பாற்ற வேண்டியது பிரம்மனின் கடமை. உடலில் இருந்து வெளியேறும் ஜீவாத்மாவை, அகண்ட வெளியில் சுற்றித் திரியும் பேய், பிசாசு மற்றும் பூதகணங்கள் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு விடக் கூடாது என்பதற்காக, யமலோகத்திற்கு பயணிக்கும் ஜீவாத்மாக்களின் பாதுகாப்பிற்காக பிரும்மாவினால் ருத்ரர்கள், வசுக்கள் மற்றும் ஆதித்யர்கள் படைக்கப்பட்டார்கள்.
16) அஷ்ட வசுக்கள் யார்? அஷ்ட வசுக்கள் என்பவர்கள் மனுவின் மைந்தனான பிரஜாபதியின் எட்டு மகன்கள் என்கின்றார்கள். புராணங்களின் கூற்றின்படி அஷ்ட வசுக்கள் எனப்படும் தேவதைகள் இந்திரனின் காவல் தெய்வங்கள். வசு எனும் சொல்லுக்கு வெளி (Space) என்று பொருள். இவர்கள் குறிப்பிட்ட இயற்கை தன்மைகளை உள்ளடக்கியவர்கள்.
17) அஷ்ட வசுக்களில் தரா எனும் வசு புவியையும், அனலன் எனும் வசு நெருப்பையும், ஆப எனும் வசு நீரையும், அனிலன் எனும் வசு காற்றையும், துருவன் எனும் வசு துருவ நட்சத்திரத்தையும், சோமன் எனும் வசு சந்திரனையும், பிரபாசன் எனும் வசு கதிரவன் எழும் முன் உள்ள விடியற் காலைப் பொழுதையும், பிரத்யூசன் எனும் வசு ஒளியையும் குறிப்பவர்கள். அப்படிப்பட்ட புண்ணியமும் சக்தியும் கொண்ட அஷ்ட வசுக்கள் வசுக்களின் ருத்ரர்கள், மற்றும் ஆதித்யர்கள் பாதுகாப்பில்தான் இறந்தவர்களது ஜீவாத்மாக்கள் அவர்களுக்காக செய்யப்படும் கர்மாக்கள் முடியும்வரை தங்கி இருக்கும் என்பது ஐதீகம்.
18) மூல வசுக்களின் கடமைகளை நிறைவேற்ற அவர்களுக்கு துணையாக பல்லாயிரக்கணக்கான துணை வசுக்கள் பிரும்மாவினால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். அவர்களில் நமது வம்சத்தை சேர்ந்த பல பித்ருக்கள் அடங்கி உள்ளார்கள். அந்த வசுக்களே தத்தமது வம்சத்தை சேர்ந்த இறந்தவர்களின் ஜீவாத்மாவை மூல வசுக்களுக்கு அடையாளம் காட்டுவார்கள்.
19) சூரிய பகவான் தேவர்களின் தலைவர். அவர் தனது ஒளிக்கிரணங்களில் பன்னிரண்டு தன்மைகளைக் கொண்ட ஆதித்யர்களை வைத்து உள்ளாராம். ஆதித்யர்களை துவாதசாதித்யர் (துவாத + ஆதித்யர்) என்ற பெயரிலும் குறிப்பிடுகின்றார்கள். அந்த பன்னிரண்டு ஆதித்யர்களே உயிர் வாழத் தேவையான தன்மைகளை வைத்து உள்ளவர்கள்.
20) இறந்தவரின் உடலில் இருந்து வெளியேறும் ஜீவாத்மாக்களின் கர்ம காலம் முடியும்வரை ஆதித்யர்களின் உயிர் வாழத் தேவையான தன்மையினால்தான் ஜீவாத்மாக்கள் யமலோகம் செல்லும்வரை அழிவின்றி இருப்பார்கள்.
21) மூல ஆதித்யர்களின் கடமைகளை நிறைவேற்ற அவர்களுக்கு துணையாக பல்லாயிரக்கணக்கான துணை ஆதித்யர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். அவர்களிலும் ஒவ்வொருவருடைய வம்சத்தை சேர்ந்த பல பித்ருக்கள் அடங்கி உள்ளார்கள்.
22) மறைந்து விட்ட நம் முன்னோர்களான பித்ருக்களே ஆதித்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள் ஆகிய மூன்று உருவில் இருக்கிறார்கள் என்பதினால்தான் அவரவர் குடும்பத்தைச் சேர்ந்த இறந்தவர்களது ஜீவாத்மாவை, அடையாளம் காட்டுவார்கள் என்பது ஐதீகம்.
23) இந்து மதத்தின் முக்கியமான நூல்கள் ரிக்வேதம், ‘இறந்தவர் உடலில் இருந்து வெளியேறிச் செல்லும் ஜீவாத்மாவானது தன் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் இந்த பிரபஞ்சத்தில் தான் தோன்றக் காரணமான பரமாத்மாவுடன் மீண்டும் கலந்து விடுகிறது அல்லது பித்ருக்களாக மாறி விடுகின்றன என்கின்றது’ என்று கூறுகிறது.
24) ‘ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு, வேறு அல்ல; இரண்டும் ஒன்றே. மாயையின் சேர்க்கையினால், அந்த ஒன்றே பலவாறாக காட்சித் தருகின்றது’ என்று அத்வைதம் கூறுகிறது.
25) ‘எப்படி சரீரத்தின் செயல்பாடுகளுக்கும் ஜீவாத்மா அவசியமோ, எப்படி ஜீவாத்மா சரீரத்தில் இருந்து வெளியேறி விட்டால் உடல் அழிந்து விடுமோ, அதே போலவேதான் ஜீவாத்மா என்பது, பரமாத்மாவின் உடல் போன்றது. ஜீவாத்மா இல்லாத பரமாத்மாவும், பரமாத்மன் இல்லாத ஜீவாத்மாவும் கிடையாது’ என்பதாக துவைதம் கூறுகின்றது.
26) ஒவ்வொரு ஜீவாத்மாவிற்கும் பிறப்பும் இறப்பும் ஒரு சக்கரம் போல உள்ளது. அவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜனன மரண காலம்வரை அவை ஒரு உடலில் வாழ்கின்றன. அந்த காலம் முடிந்த பின் யமலோகத்திற்கு சென்று தமது கர்மாக்களுக்கு ஏற்ப தண்டனைகளை அனுபவித்த பின்னர் வெவ்வெறு உடல்களில் சென்று தங்குகின்றன.
27) ‘எப்படி ஒருவன் பயன்படுத்த முடியாத துணிகளை தூக்கி எறிந்து விடுவானோ, அதை போலவேதான், ஜீவாத்மாவும் ஒவ்வொரு உடலிலும் தங்க வேண்டிய காலம் முடிவடைந்ததும், அந்த உடலில் இருந்து வெளியேறி இன்னொரு உடலில் குடி கொள்ளும். ஜீவாத்மாவை எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது; தண்ணீர் விட்டு துவைக்கவோ, உலர வைக்கவோ முடியாது; காரணம் மானிடர்களின் கண்களுக்கு புலப்படாத ஜீவாத்மாவிற்கு, எந்த ரூபமும் கிடையாது’ என்று பகவத் கீதை கூறுகின்றது.
28) பிரகதாரண்யக உபநிடம் ஜீவாத்மாவைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘ஜீவாத்மா என்பது ‘பார்க்கப்படாமல் பார்க்கும், கேட்கப்படாமல் கேட்கும், நினைக்கப்படாமல் நினைக்கும், அறியப்படாமல் அறியும். ஒருவனது உடலுக்குள் உள்ளுறைவது, அழிவற்றது என்பதே ஜீவாத்மா’ என்பதாக கூறுகின்றது.
29) முற்றிலும் சுதந்திரமான ஜீவாத்மா ஒருவர் உடலை விட்டு வெளியேறும் போது மற்றவர் துக்கப்படக் கூடாது. மாறாக, அது நல்ல முறையில் அதன் அடுத்த கட்ட பயணத்தை தொடர வேண்டும் என்பதற்காக, அதற்கான கிரியைகளை முன்னோர்கள் கூறி உள்ள முறையில் உணர்ச்சி பூர்வமாக செய்ய வேண்டும் என புரோஹிதர்கள் கூறுகின்றார்கள்.
30) மானிடர்களின் சரீரத்தில் குடி இருக்கும் ஜீவாத்மாக்கள் சுதந்திரமானவை, எதற்கும் கட்டுப்பட்டவை அல்ல, அவை உடலின் எந்த செயல்பாட்டையும் இயக்குவது இல்லை என்பதாக புராணங்களிலும், சாஸ்திரங்களிலும் கூறப்பட்டாலும், அவை தங்கி உள்ள உடல்களில் ஐம்புலன்களின் செயல்பாடுகளினால் ஏற்படும் பாவ புண்ணியங்களை வேறு வழி இன்றி அவைகளும் சுமந்து கொண்டு கர்மாக்களை பெறுகின்றன. அதனால்தான் அந்த ஜீவாத்மாக்களும் வெவ்வெறு பிறப்புகள் எடுத்து கர்மாக்களை அழிக்க வேண்டி உள்ளது.
31) யாராக இருந்தாலும் சரி, அவர்கள் பூமியில் வாழ்ந்து இருந்தபோது செய்த பாவ புண்ணியங்களின் கர்மாக்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது இறைவனின் நியதி என்பதினால், மரணம் அடைந்தவருக்காக செய்யும் மரணச் சடங்குகள் அல்லது கிரியைகள் மூலம் அந்த ஜீவாத்மாக்கள் மன சாந்தி பெற்று எதையும் எதிர் கொள்ளும் மன நிலையில் இயற்கையோடு வாழத் துவங்கும்.
32) கர்மாக்கள், பிறப்பு, இறப்பு, பாவ புண்ணியம், கிரியைகள் மற்றும் சடங்குகள் போன்ற அனைத்துமே இறைவன் நிர்ணயித்து உள்ள நாடகத்தின் வடிவங்களே. அதன் கதாநாயகனே ஜீவாத்மா என்பது என பல ஆன்மீக அமைப்புகள் கருத்துக்களை தெரிவிக்கின்றன.
33) பூலோகத்திற்கும் யமலோகத்திற்கும் இடையே சுமார் 86,000 காத தூரம் (சுமார் 1,100,000 கிலோமீட்டர்) இருப்பதாகவும், அந்த அளவிலான பாதையை கடந்து செல்வதற்கு ஆன்மாக்களுக்கு ஒரு வருடம் வரை ஆகும் என்று கருட புராணத்தில் கூறப்பட்டு உள்ளது என்பதினால் ஒருவர் மரணமடைந்த ஒரு வருடத்திற்குப் பின்னரே அவரது ஜீவாத்மா (ஜீவாத்மா) எமபுரிக்குள் நுழைய முடியும்.
34) ஒரு வருட பயண முடிவில், யம தூதர்களினால் அழைத்து செல்லப்படும் ஜீவாத்மா யமபுரியில் யமதர்மன் முன் விசாரணைக்கு நிறுத்தப்படும். அங்கு அந்த ஜீவாத்மாவின் முன்னிலையில் 12 எம கணங்கள், அந்த ஜீவாத்மா மீதுள்ள பாவ புண்ணிய கணக்குகளைப் யமதர்மனிடம் தெரிவிப்பார்கள். அவற்றின் அடிப்படையில் யமதர்மன் அவற்றுக்கு தண்டனை தருகின்றார் என்பதாக கருட புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.
35) ஜீவாத்மா உருவமற்றது எனக் கூறப்படுகையில் எம தர்மன் முன்னால் எப்படி ஜீவாத்மா கொண்டு சென்று நிறுத்தப்படுகிறது? அது முரண்பாடாக உள்ளதே என நினைக்கலாம். ஆனால் அது முரண்பாடு அல்ல.
36) மரணம் அடைந்தவர் உடலில் இருந்து வெளியேறும் ஜீவாத்மா, பூமியில் உள்ள மானிடர்களின் கண்களுக்கு புலப்படாத, ஆனால் தேவலோகத்தினருக்கு மட்டுமே தெரியும் வகையிலான, மரணம் அடைந்தவரது தோற்றத்தை மட்டும் அல்ல, அவரது மன எண்ணங்களின் தன்மையையும் கொண்ட சூஷ்ம உருவிலான கணமாக வான்வெளியில் பெற்று விடுவதினால், அந்த சூட்சும உருவிலான ஜீவாத்மாவை வசுக்கள், ஆதித்யர்கள் மற்றும் ருத்திரர்களும், யம லோக தூதுவர்களும் பித்ரு தேவதைகளும் அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது. ஜீவாத்மா தேவலோகத்துக்கு பித்ரு கணமாக செல்லும் வரை அந்த சூட்சும உருவிலான தோற்றமும் தன்மைகளும் நீடிக்கும்.
37) ஜீவாத்மா எதற்காக அப்படி சூஷ்ம உருவிலான தோற்றத்தையும், தன்மைகளையும் பெறுகின்றன என்றால் அப்போதுதான் ஜீவாத்மாவிற்கு கொடுக்கப்படும் தண்டனைகளின் இன்ப துன்பங்கள் அதற்கு புரியும். அந்த ஜீவாத்மாவின் மனத் துயரின் தாக்கங்கள் அந்த ஜீவாத்மாவின் குடும்பங்களை பாதிக்கும் பொழுது அந்த குடும்பத்தினர் அப்படிப்பட்ட தவறுகளை செய்யாமல் இருக்கக் கூடும் என்ற எண்ணமே காரணம் ஆகும்.
38) பித்ரு லோகத்தை அடையும் வரை ஆன்மாக்களுக்கு உரிய சடங்குகளைச் செய்யத் தவறினால், குடும்ப உறுப்பினர்கள் கடுமையான மன அழுத்தம், உடல்நலப் பிரச்சினைகள், நிதிச் சிக்கல்கள், மலட்டுத்தன்மை அல்லது அமைதி மற்றும் செழிப்பு இல்லாமை போன்ற துரதிர்ஷ்டங்களைப் பெறுவார்கள். எனவே, கர்த்தாக்கள் சடங்குகளை முறைப்படி செய்ய வேண்டும் என்பதற்காகவே அத்தகைய விதிமுறைகள் அமைக்கப்பட்டு உள்ளன
ஜீவாத்மாவின் பயணம் -2
உடலில் இருந்து வெளியேறும் பாதை எது?
39) ஒருவர் இறக்கும் போது ஜீவாத்மாவானது உடம்பில் உள்ள பத்து வாசல்களில் ஏதாவது ஒரு வாசல் மூலம் வெளியேறுவதாகவும் இறந்தவுடன் அந்த வாசல் பகுதி சற்று ஈரப்பதமாக காணப்படும் என்றும் அதன் மூலம் ஜீவாத்மா வெளியேறிய பாதையை அனுபவஸ்தர்களினால் உணர முடியும் என்றும் கூறுகின்றார்கள்.
40) சாஸ்திரங்களின்படி இறந்தவர்களது ஜீவாத்மா இரண்டு கண்களின் வழியாகவோ, இல்லை வாயின் வழியாகவோ, உச்சி மண்டை வழியாகவோ, ஆசன துவாரத்தின் வழியாகவோ, மூத்திர வாசல் அல்லது இரண்டு காதின் வழியாகவோ அல்லது இரண்டு நாசி துவாரத்தின் வழியாகவோ வெளியேறும் என்பார்கள். இதுவே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியாகும்.
41) தாயின் வயிற்றில் செல்லும் ஜீவனானது அங்கு வளரும் கருவின் உச்சி மண்டையின் வழியாகவே அதனுள் உள்ளே நுழைகிறது என்பது ஆன்மீக நம்பிக்கையாகும். அந்த உச்சி மண்டையைக் கபாலம் என்பா். உச்சி மண்டையில் புகுந்த அந்த உயிர் உச்சந் தலை வழியாக வெளியேறுவதுதான் சிறப்பு. அதுவே சரியான மரணம், அது புண்ணிய ஜீவாத்மாக்களுக்கு மட்டுமே கிடைக்கும், அதன் பின் ஜீவாத்மா வேறு எந்த பிறவியும் எடுப்பதில்லை என்று புராணங்களில் கூறப்படுவதினால் ஜீவன் வெளியேறும் இடங்கள் பொதுவான பத்து இடங்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது.
42) கபாலம் வழியே வெளியேறும் ஜீவனானது பூமியிலே பிறப்பு எடுக்காமல் அவர்கள் வாழ்ந்திருந்த இடத்தின் வான் வெளியிலேயே தெய்வ ஜீவாத்மாவாக தங்கி இருந்து விடுகிறது என்பதும் நம்பிக்கை ஆகும். அதனால்தான் அப்படிப்பட்ட புண்ணிய ஜீவாத்மாக்களை உண்மையான தெய்வம் எனக் கருதி அவர்களுடைய உடலை எரிக்காமல் புதைத்து வைத்து அதன் மீது சமாதியும் கட்டி வைத்து பூஜிக்கிறார்கள்.
43) ஆனால் புலிப் பாணி முனிவர் மற்றும் போக முனிவருக்கு உயிர் எந்த விதங்களில் மனித உடல்களில் இருந்து வெளியேறுகிறது என்பதை குறித்து விளக்கிய அகஸ்திய முனிவர் இந்த பத்து மண்டலங்களைத் தவிர ஜீவன்கள் வெளியேற உடலில் ஆயிரக்கணக்கான ஓட்டைகள் உள்ளன என்றும், அந்த இடங்கள் கை, கால் விரல்கள், மற்றும் அவற்றின் இடைப் பகுதியில் உள்ள ஓட்டைகள் என்றும், அவற்றைத் தவிர உடலில் உள்ள பல்லாயிரக்கணக்கான மயிர் கால்களின் அடியில் உள்ள ஓட்டைகளின் வழியாகவும் ஜீவன் வெளியேறும் என்றும், அந்த வழிகளில் வெளியேறும் ஜீவன் என்னென்ன பிறவிகள் எடுக்கின்றன என்பதையும் அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
44) அந்தந்த உடல்களின் விதிக்கேற்ப எந்த வாசல் வழியே ஜீவாத்மாவானது வெளியேற வேண்டுமோ, அந்த வாசலில் இருந்து ஜீவாத்மா வெளியேறும்போது உடலின் அனைத்து இயக்கங்களும் நின்று விடும். அப்போது அந்த உடலை சுற்றிக் கொண்டிருக்கும் எம கணங்கள் மூன்றரை மணி நேரம் ஜீவாத்மாவை அங்கேயே தங்க வைத்துக் கொண்டும், கண்காணித்துக் கொண்டும் இருந்த பின்னர், தம்மோடு அழைத்துச் சென்று அந்த ஜீவாத்மாவை வஸுக்களிடம் சமர்ப்பித்து விட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள்.
45) மூன்றரை மணி நேர கணக்கை ஜீவாத்மாவின் இரண்டாம் கட்ட பயணத்தில் படிக்கலாம் .
ஜீவாத்மாவின் பயணம் – 3
மரணம் அடைய உள்ளவரை சுற்றி அமர்ந்து கொண்டு எதற்காக தெய்வீக பாராயணங்களை ஓதுகிறார்கள் ?
46) நோயினால் பீடிக்கப்பட்டு, அல்லது வேறு காரணங்களினால் படுத்த படுக்கையாக, சுய நினைவற்று மெல்ல மெல்ல சுவாசம் நிற்கும் நிலையில் வந்து விட்டவர்களையும், மருத்துவர்கள் கை விட்டப் பின், இன்னும் சில மணி நேரத்திலேயே மரணம் அடைய உள்ளவரையும் சுற்றி உள்ளவர்கள், அவர்களுடைய மூச்சு நிற்கும் வரை விஷ்ணு சஹஸ்ரநாமம், நாராயணீயம் போன்றவற்றை பாராயணம் செய்தபடி இருப்பார்கள். சிலர் ராம நாமத்தை ஜெபித்தபடியும் இருப்பார்கள். புனித மந்திரங்களின் ஒலி அதிர்வுகள், வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருப்பவர்களுக்கு மரண பயத்தையும் அதன் வலியையும் குறைத்து, ஒரு அமைதியான, சூழ்நிலையை அவர்கள் மனதில் ஏற்படுத்துகின்றன.
47) மரணத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களின் குடும்பத்தில் மூத்த மகன் இருந்தால், அவர் மரணம் அடைய உள்ளவரின் தலையை தன் தொடையில் வைத்துக் கொண்டு வலது காதில் பஞ்சாக்ஷரி, மற்றும் ராம ராமா, சிவாய நமஹ போன்ற மந்திரங்களை சற்று நேரம் ஓதிக் கொண்டு இருக்க வேண்டும். மரணம் அடையும் முன்னர் மரணம் அடைபவரின் காதுகள்தான் முதலில் செயல் இழந்து விடும்.
48) ஒரு சிலர் மரணம் அடையும் தறுவாயில் உள்ளவர் காதில் கர்ண மந்திரத்தைக் கூற வேண்டும் என்பார்கள். கர்ண மந்திரம் என்ன என்பதைக் குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. ‘உனது அனைத்து கர்மங்களையும் விட்டு விடு; செயல்களின் பலனைத் துறந்து விடு; உன் செயல்களின் விளைவுகளையும் ஆராயாமல் இரு’ என்பதாக கூறியதே கர்ண மந்திரம் என்கின்றார்கள்.
49) சில குடும்பங்களில் சமய தீட்சை பெற்ற ஒருவர் மூலம் வலது காதில் பஞ்சாக்ஷரி, மற்றும் ராம ராமா, சிவாய நமஹ போன்ற மந்திரங்களை ஓதுவார்கள், அது தவறல்ல. ஆனால் கர்மா செய்ய பாத்யதை உள்ள இளைய அல்லது மூத்த மகன் அதை செய்வதின் மூலம் மரணம் அடைய உள்ளவர் மனம் மேலும் அமைதி அடையும் என்பது நம்பிக்கை.
50) இது சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள விதி முறை என்றாலும் தற்காலத்தில் இதை கடை பிடிக்க முடியவில்லை என்பதினால், இறந்து போக உள்ளவரின் தலையின் அடியில் தன் கையை ஒரு நிமிட நேரம் வைத்துக் கொண்டு அவரது காதில் இரு முறை ராம ராமா, சிவாய நமஹ போன்ற மந்திரங்களை கூறினால் கூடப் போதும் என்பதாகவும் கூறப்படுகின்றது.
51) சில குடும்பங்களில் மரணம் அடையும் தருவாயில் உள்ளவர்களை சூழ்ந்து கொண்டு பஜனை பாடல்களை பாடுவார்கள். அந்த பக்திப் பாடல்களின் ஒலி அலைகளும் தியான நிலையில் பெறும் மன அமைதியைப் போன்ற நிலையை அந்த ஜீவாத்மாவிற்கு தரும். கர்மா செய்ய உள்ளவன் உச்சரிக்கும் ராம ராமா, சிவாய நமஹ போன்ற மந்திர அலைகள், மரணம் அடைய உள்ளவரின் எண்ண அலைகளை சூழ்ந்து கொண்டு அமைதியை தரும். அது தியான நிலையில் பெறும் மன அமைதியைப் போன்ற நிலையை அந்த ஜீவாத்மாவிற்கு தரும் என்பது ஐதீகம்.
52) அனுபவம் மிக்கவர்கள் நாடி பிடித்து பார்த்து ஜீவன் பிரியும் நிலையை உணர்ந்தால் ‘யாரும் அழக் கூடாது, ஜீவன் போகப் போகுது, ராம ராம ராமா என்று கூறத் துவங்குங்கள்’ என்பார். ராம ராமா, சிவாய நமஹ போன்றவற்றை உச்சரிக்கும்போது எழும் மந்திர அலைகள் அந்த அறையை தெய்வீக அலைகள் சூழ்ந்த இடமாக மாற்றி விடுகின்றது.
53) பஜனை பாடல்களை பாடும் மன நிலையில் இல்லாதவர்கள் வீட்டில் தொடர்ந்து சஹஸ்ரநாமம் அல்லது நாராயணீயம், சுந்தர காண்டம், ராம ராமா, கோவிந்த நமஹா, கோவிந்த நமஹா போன்றவற்றை உச்சரித்துக் கொண்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் ஒலி நாடாவில் போட்டு அதை அமைதியான சூழ்நிலையில் ஒலி பரப்பினால் அதுவும் நல்லதற்கே. இது சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டதா என்ற தயக்கம் தேவை இல்லை.
54) எதற்காக இவ்வாறான பழக்க முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன? இறக்கும் தருவாயில் உள்ளவரின் மனது தனது குடும்பத்தினரின் ஆதரவு தனக்கு முழுமையாக உள்ளது என்ற உணர்வை சுமந்துகொண்டு நிம்மதியாக தூங்கும், பித்ரு லோகத்தில் தன்னை அமைதியுடன் வைத்திருக்க தனக்கு செய்ய வேண்டிய கர்மங்களை முறையாக செய்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்படும். ராம ராம மற்றும் சிவாய நமஹ போன்ற மந்திர அலைகள் – இறக்கும் நபரின் சிந்தனை அலைகளுடன் கலந்து, தியானத்தால் மட்டுமே கிடைக்கும் அமைதி சூழ்நிலையை உருவாக்குகின்றன.
55) மந்திர அலைகள், இறக்க உள்ளவரின் உடலில் உள்ள ஐந்து முக்கிய உயிர் சக்திகளான பிராணன், அபானா, உதானா, வியனா போன்ற உயிர் சக்திகளை தட்டி எழுப்பி, வெளியேறும் ஜீவாத்மா, உடலின் நாசித் துவாரங்கள் வழியாக அமைதியாக வெளியேற உதவுகிறது. அவற்றில், பிராணன் சூரியன் என்றும், அபானன் சந்திரன் என்றும் கூறப்படுகிறது.
56) உடலைச் சுற்றிக் கொண்டே உள்ள ஜீவாத்மாவுடன் பிராணன்கள் எனப்படும் ஐந்து முக்கிய சக்திகளும் இணைந்து செயல்படுகின்றன; அவை உடலைச் செயல் படுத்த வைக்கும் உயிர் சக்தியாகும்; அதனால்தான் ஜீவாத்மா உடலில் இருந்து வெளியேறும் நேரத்தில் எழுப்பப்படும் மந்திர ஒலிகளை முறையான சப்தத்துடன் எழுப்ப வேண்டியது அவசியம் ஆகும்.
57) எதற்காக தெய்வீக பாராயணங்களை ஓத வேண்டும் என்றால் அந்த இடத்தின் சூழ்நிலையை முதலில் தெய்வீகத் தன்மைக் கொண்டதாக மாற்ற வேண்டும் என்பதே. மந்திர உச்சாடனைகளின் தெய்வீக அதிர்வலைகள் மரணம் அடைய உள்ளவர் உள்ள அறையின் வெற்றிடத்தை நிரப்பி விடுகின்றன. தீய கணங்களினால் தெய்வீக மந்திர சக்தி ஒலிகளை தாங்க முடியாது என்பதினால், தெய்வீக மந்திர ஒலி அலைகள் தீய கணங்களை அங்கிருந்து துரத்தி அடித்து விடுகின்றன.
58) சாதாரணமாகவே பல்வேறு தன்மைகளைக் கொண்ட நல்ல மற்றும் தீய கணங்கள் வான் வெளியில் அங்காங்கே சுற்றிக் கொண்டு உள்ளன. வான் வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கும் தீய கணங்கள் மரணம் அடையும் தறுவாயில் உள்ளவர் அறைக்குள் நுழைந்து மரணம் அடைய உள்ளவரது ஜீவாத்மா வசுக்களின் கட்டுப்பாட்டில் செல்வதற்கு முன் அந்த ஜீவாத்மாவை தம்முடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு முயலும்.
59) உடலில் இருந்து வெளியேறும் ஜீவாத்மாவை தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால், அந்த ஜீவாத்மாக்களுக்கு செய்யப்படும் கர்மாக்களின் பலன்கள் தனக்கும் கிடைக்கும், தமக்கும் நல்ல கதி கிடைக்கும் என அவை நம்புகின்றனவாம். அதே சமயத்தில் அந்த தீய கணங்களினால் தெய்வீக மந்திர சக்தி ஒலிகளை தாங்க முடியாது என்பதினால், தெய்வீக மந்திர ஒலி அலைகள் தீய கணங்களை அங்கிருந்து துரத்தி அடித்து விடுகின்றன.
60) மந்திர உச்சாடனைகளின் தெய்வீக அதிர்வலைகள் மரணம் அடைய உள்ளவர் உள்ள அறையின் வெற்றிடத்தை நிரப்பி விடுகின்றன என்பதினால் உடலில் இருந்து வெளியேறும் ஜீவாத்மாவின் மேலுலகப் பயணத்திற்கு முன்பாக அந்த தெய்வீக அதிர்வலைகளில் மூழ்கி மிதக்கிறது என்பதினால் அதற்கு நற்கதி கிடைக்கின்றது என்பது புராணங்கள் மற்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள ஆன்மீக கூற்றுக்கள் ஆகும்.
ஜீவாத்மாவின் பயணம் -4
இறந்தவர் உடலை எத்தனை மணி நேரத்திற்குள் தகனம் செய்ய வேண்டும்?
61) ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்த அடுத்த பத்து மணி நேரத்துக்குள் தகனம் செய்து விட வேண்டும் என்பதே சாஸ்திர விதி முறை. அதே சமயம் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் மூன்றரை மணி நேரத்துக்கு முன் அவருக்கு தகன காரியங்களை செய்து முடித்து விடக் கூடாது என்பது சாஸ்திர விதியாகும். இரண்டில் எது சரி? இரண்டுமே சரியாகும்.
62) ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்த அடுத்த பத்து மணி நேரத்துக்குள் தகனம் செய்து விட வேண்டும் என்பதே சாஸ்திர விதி முறை. அதன் ஆன்மீகக் காரணம் பத்து மணி நேரம்வரை அந்த குறிப்பிட்ட ஜீவாத்மாவை சுற்றி உள்ள குறிப்பிட்ட காற்று மண்டலத்துக்குள் வேறு எந்த ஆவிகளாலும் நுழைய முடியாது. பத்து மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால் அந்த காற்று மண்டலத்தில் சில தீய ஆவிகளால் நுழைய முடியுமாம், இறந்து விட்டவர் உடலில் புகுந்து கொண்டு அவருக்கு செய்யப்படும் கர்மாக்களின் பலனை தாம் அடைய முயலும். அப்படி நடந்து விட்டால் அது குடும்பத்தினரை பாதிப்புகளுக்கு உள்ளாக்கும்
63) அதே சமயத்தில் இறந்தவர் உடலை அடுத்த பத்து மணி நேரத்துக்குள் தகனம் செய்து விட வேண்டும் என்கின்ற சாஸ்திர விதி எதற்காக உள்ளது என்பதற்கு விஞ்ஞான ரீதியில் ஒரு காரணம் உள்ளது. பத்து மணி நேரத்துக்கும் அதிகமாக உடலை வைத்திருந்தால் இயற்கையின் விளைவாக அதன் உடலில் தீய கிருமிகள் தோன்ற வாய்ப்பு உள்ளது, அது நோய்களை பரப்பும், அது மட்டும் அல்லாமல் அந்த இடத்தில் நாற்றம் வீசத் துவங்கும் என்பதினால்தான் கர்மாவைத் துவக்க பத்து மணி நேர அவகாசம் மட்டுமே கொடுத்துள்ளார்கள் என்பது விஞ்ஞான அடிப்படையின் ஒரு உண்மையாகும்.
64) தகனம் செய்ய பத்து மணி நேரத்துக்கும் அதிகமாகி விட்டது என்ற நிலையில் உள்ளவர்கள் தகனம் செய்யக் கிளம்பும் முன் அந்த சவத்தை பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து புனித திரவியங்களைக் கொண்டு தயாரிக்கும் பஞ்சகவ்யம் எனும் கலவையைக் கொண்ட தண்ணீரால் குளிப்பாட்டி அதன் பின்னரே தகனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதி இருந்தது. பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணம், பசுவின் மூத்திரம், பசுவின் பால், பசுவின் பாலில் எடுத்த நெய், பசுவின் பாலில் செய்த தயிர் – போன்றவற்றைக் கொண்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலவை ஆகும்.
65) பஞ்சகவ்யம் எனும் கலவையைக் கொண்டு குளிப்பாட்டிய பின்னரே தகனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. விஞ்ஞான ஆராய்வில் பஞ்சகவ்யம் கிருமி நாசினி என்றும், இறந்தவர் உடலில் உள்ள கிருமிகளை அவை நாசம் செய்து விடும் என்றும் கூறுகிறார்கள்.
66) பசு என்பது காமதேனுப் பசுவின் சந்ததி என்பதினால் பசுக்கள் தெய்வத்துக்கு சமமானவை., அதன் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு தேவர்கள் அமர்ந்துள்ளனர் என சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளது.
67) பசுவின் மூத்திரத்தில் வருணன் வசிக்கிறார், சாணத்தில் அக்னி வசிக்கிறார், தயிரில் வாயுவும், பாலின் சந்திரனும் மற்றும் நெய்யில் சூரியனும் வசிக்கிறார்கள். அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பஞ்சகவ்யம் செய்யப்படும்போது காயத்ரி மந்திரத்தை ஓதி ஒன்று சேர்ப்பார்கள். ஆகவே அத்தனை சக்தி வாய்ந்த பஞ்சகவ்யம் கலந்த நீரைக் கொண்டு சவத்தைக் குளிப்பாட்டும்போது அதில் இருந்து வெளிவரும் அந்தந்த தெய்வங்களின் கணங்கள் அங்குள்ள தீய ஜீவாத்மாக்களை விரட்டி அடிக்கும் என்று சாஸ்திரங்கள் அந்த சடங்கை நியாயப்படுத்தி உள்ளார்கள்.
68) உதாரணத்திற்கு இறந்து போனவர்களின் வெளியூர்களில் உள்ள புத்திரன் அல்லது முக்கிய உறவினர்கள் வந்தே ஆக வேண்டும், வெளி ஊர்களில் வசிக்கும் அவர்கள் வந்து சேர இருபது மணி நேரம் ஆகும்; அதற்கு முன் காரியங்களை துவக்கக் கூடாது என்ற நிலையில் அந்த பூத உடலை உரிய மருந்துகள் இட்டு அல்லது ஐஸ் கட்டிகள் மீது பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். பூச்சிகள், ஈக்களிடம் இருந்து இறந்தவர் உடலைப் பாதுகாக்க கண்ணாடிப் பெட்டியால் மூடி வைத்து இருக்க வேண்டி உள்ளது.
69) இன்னொரு உதாரணம். காலை ஆறு மணி அளவில் ஒருவர் மரணம் அடைந்து விட்டாலும் முக்கியமானவர்கள் வந்து சேரும் வரை இறந்தவர் உடலை தகனம் செய்ய முடியாமல் நேரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. மாலை ஐந்து மணிக்கு மேல், அல்லது மறுநாள் காலையில்தான் தகனம் செய்ய முடியும் என்ற நிலைமை. ஒருவர் இறந்து போனதும் அடுத்த பத்து மணி நேரத்துக்குள் கர்மாக்களை துவங்க முடியவில்லை. அது பத்து மணி நேரத்துக்கும் அதிகமாகி விடுகிறது. பத்து மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டால் சாஸ்திர நம்பிக்கையின்படி உடலில் இருந்து வெளியேறிய ஜீவாத்மாவை தீய ஜீவாத்மாக்கள் சூழ்ந்து கொள்ளாதா என்ற கேள்வி எழலாம்.
70) இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைகளில் காரிய தாமதம் ஏற்பட்டதினால் வரும் தோஷங்களை களைந்து கொண்டு கர்மாக்களை நடத்த சாஸ்திரங்களில் சில பரிகாரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
71) அப்படி செய்யப்படும் பரிகார சடங்குகளில் தீய சக்திகளை விரட்டும் திறன் கொண்ட சில குறிப்பிட்ட தேவதைகளை மந்திரங்கள் ஓதி அழைக்கிறார்கள். அப்படி ஓதப்படும் மந்திர அழைப்பை ஏற்று அங்கு தோன்றும், அசாதாரண மந்திர சக்திகளைக் கொண்ட அந்த தேவதைகள் ஜீவாத்மாவை வளைத்துக் கொள்ள முயலும் தீய ஆவிகளை அடித்துத் துரத்தி விரட்டுகின்றன.
72) ஒருவர் மரணம் அடைந்து விட்ட பத்து மணி நேரத்திற்கு முன்னால் அதே சடங்கை செய்து, அதே மந்திர உச்சாடனைகளை செய்தாலும் கூட, அந்த மந்திர உச்சாடனைகளுக்கு செவி சாய்த்து அந்த தேவதைகள் அங்கு வர முடியாது, காரணம் ஒருவர் மரணம் அடைந்து விட்ட பத்து மணி நேரத்திற்கு பிறகே குறிப்பிட்ட சக்தி தேவதைகளினால் அந்த காற்று மண்டலத்தில் நுழைய முடியும். இந்த செய்திகள் அனைத்துமே சாஸ்திரங்களின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கேட்டு அறிகின்றோம்.
73) ஒருவேளை மரணம் அடைந்தவரது ஜீவாத்மா, சடங்குகளின் கால தாமதத்தினால் தீய ஆவிகளிடம் பிடிபட்டு இருந்தாலும், பரிகார சடங்குகளில் ஓதப்படும் மந்திரங்களின் அதிபதி தேவதைகள் உடனடியாக சென்று தீய ஆவிகளிடம் இருந்து அந்த ஜீவாத்மாவை மீட்டுக் கொண்டு வந்து அந்த ஜீவாத்மா வசுக்கள் கட்டுப்பாட்டில் செல்லும்வரை பாதுகாப்பாக வைத்திருக்குமாம்.
74) மூன்றரை மணி நேர கால அவகாசத்திற்கான காரணம் என்ன? ஒருவர் இறந்தப் பின் அவருடைய ஜீவாத்மா உடனடியாக யம தூதர்களால் கொண்டு செல்லப்படாதாம். ஒருவரது மூச்சு நின்று விட்டதாக சமிக்கை கிடைத்ததும் உடனடியாக யம கணங்கள் பூமிக்கு வந்து விட்டாலும் இறந்தவரது உடலில் இருந்து வெளியேறிய ஜீவாத்மாவை தம்முடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள அவர்கள் கண் சிமிட்டும் நேர அளவில் காத்திருப்பார்களாம்.
75) அதன் காரணம் இறந்தவருடைய வாழ்க்கையின் கால அளவை ஆராய்ந்து பார்க்கும் சித்ரகுப்தரிடம் இருந்து அவர்களுக்கு அந்த ஜீவாத்மாவின் காலம் முடிந்து விட்டது என்ற ஒப்புதல் கிடைக்க கண் சிமிட்டும் நேரம் ஆகுமாம். அவர்களுக்கு கண் சிமிட்டும் நேரம் என்பது பூமியின் கணக்கின்படி மூன்றரை மணி நேரம் என்பதினால்தான் மூன்றரை மணி நேரத்துக்கு முன்னதாக தகன காரியங்களை செய்யத் துவங்கி தகனமும் செய்து முடிக்க மாட்டார்கள்.
76) மூன்றரை மணி நேர காலம் முடிந்த பின்னர் அந்த ஜீவாத்மா உண்மையில் இறந்தவர் உடலில் இருந்து வெளியேறி விட்டது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் அந்த ஜீவாத்மாவை முதலில் வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர் போன்றவர்களின் கட்டுப்பாட்டில் விட்டு விடுவார்கள்.
77) யமதூதர்களுக்கு தரப்பட்டு உள்ள மூணரை மணி நேர அவகாசத்திற்கு இன்னும் சில அடிப்படை காரணங்கள் உள்ளன. உலகில் பல்வேறு மலைகள், குகைகள் மற்றும் யாருமே செல்ல முடியாத நதிக் கரைகளில் தவம் செய்யும் பல சாதுக்களும் சன்யாசிகளும், சித்தர்களும், ராஜ ரிஷிகளும், முனிவர்களும், யோகக் கலையை கைக்கொண்ட ஆன்மீகவாதிகளும் சித்திகளைப் பெற மூச்சை நிறுத்தி வைத்துக் கொண்டு சமாதி நிலையில் இருப்பார்களாம். அந்த நேரத்தில் அவர்கள் உடலில் இருந்து தமது ஜீவனை தாமே வான் வெளியில் மிதக்க வைத்து விட்டு தவ நிலையில் இருப்பார்களாம். அந்த நிலையில் அவர்கள் இறந்து விட்டதாகக் கருதி யமகணங்கள் அந்த ஜீவாத்மாவை பிடித்துச் சென்று தவறு இழைத்து விடக் கூடாது என்பதற்காக யமபெருமானின் இந்த நியதி, சாஸ்திர விதிகளில் வைக்கப்பட்டு உள்ளதாம்.
78) சில நேரங்களில் இறந்து விட்டதாக கருதப்பட்டு தகனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட சவங்கள் நடு வழியில் உயிர் பிழைத்து எழுந்தான உண்மைக் செய்திகள் உள்ளன. அது போல மருத்துவர்கள் நின்று போன மூச்சை உடனடியாக செயற்கை ஸ்வாசம் செலுத்தி மீண்டும் உயிர் பிழைக்க வைத்த சம்பவங்களும் நிறையவே உள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள், அவர்கள் உடல் நிலையின் ஒத்துழைப்பைப் பொறுத்து அதை செய்ய வேண்டி இருந்தது.
79) மரணம் அடைந்தவரின் தகனத்தை துவக்கும் முன், மரணம் அடைந்த கால நேரத்தைக் கணக்கிட்டு சில சடங்குகள் செய்யப்படுகின்றன. ஒருவர் தக்ஷிணாயனத்தில், க்ருஷ்ண பக்ஷத்தில், இரவில் இறந்தால் அந்த தோஷங்களுக்கு நிவர்த்தி கிடைக்க ஒவ்வொன்றுக்கும் அதற்கென தரப்பட்டு உள்ள குறிப்பிட்ட ஹோமங்களை செய்தாக வேண்டும். அதற்கான பரிகார ஹோமம் என்பது என்ன என்பதை வீட்டு ப்ரோஹிதர் கூறுவார் ஒருவர் உத்திராயணத்தில், சுக்ல பக்ஷத்தில், பகலில் இறந்தால் பரிகார ஹோமம் கிடையாது.
80) பூரட்டாதி, உத்திரட்டாதி போன்ற நக்ஷத்திரங்களில் இறந்தால் பூமி தானம் செய்யவேண்டும்.
81) புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நக்ஷத்திரங்களில் இறந்தால் ஹிரண்யதானம் செய்யவேண்டும்.
82) பூமி தானம், ஹிரண்ய தானங்கள் போன்றவை இந்த காலங்களில் அனைவராலும் செய்யக் கூடிய காரியம் இல்லை என்பதினால், அதற்கு பதில் புரோகிதர்களுக்கு தட்க்ஷணை பணம் தந்து விடுகின்றார்கள்.
83) செவ்வாய், வியாழன், வெள்ளிகளில் இறந்தால் அந்தந்த க்ரஹத்திற்கு உகந்தவற்றை தானம் செய்யவேண்டும். இவற்றை அந்தந்த வீட்டு புரோகிதர்களை கலந்து ஆலோசனை செய்து செய்ய வேண்டும்.
84) ஒருவர் இறந்த 6 மணி நேரத்திற்கு பிறகு உடலை தஹனம் செய்ய வேண்டுமானால் பர்யுஷித ஹோமம் என்பதை செய்ய வேண்டும். ஆனால் இறந்த 4 மணி நேரத்திற்குள் (3.30 மணிக்குப் பிறகு, ஆனால் 4.00 மணிக்கு முன்) உடலை தஹனம் செய்தால் பர்யுஷித ஹோமம் செய்யத் தேவையில்லை.
85) பர்யுஷிதம் என்றால் பழையதானது என்பது பொருள். இதன் தாத்பர்யம் என்ன என்றால் இறந்தவர்களை ஆறு மணி நேரத்துக்குள் தகனம் செய்யவில்லை என்றால் அந்த உடல் பழையதாகி விட்ட உடல் என்ற ஆன்மீக நிலையை அடைந்து விடுமாம்.
86) சாஸ்திரங்களில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்ன என்றால் மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குள் தகன காரியங்களை செய்யத் துவங்கி அக்கினிக்கு சமர்ப்பணம் செய்து விட வேண்டும் (தகனம்). எப்படி நாம் ஹோமத்திற்கென்றே சில மணி நேரங்களுக்கு முன்னர் சமைத்து இருந்த உணவை ஹோமங்களில் அக்னிக்கு சமர்ப்பித்து விடுகின்றோமோ, அதை போலவேதான் மரணம் அடைந்து விட்டவர் சடலத்தையும் வெகு நேரம் வைத்திருக்காமல் சில மணி நேரங்களிலேயே அக்னிக்கு கொடுத்து விட வேண்டும். ஆறின கஞ்சி பழைய கஞ்சி என்பதை போல பழதாகி விட்ட அதாவது மரித்து பல மணி நேரம் ஆகி விட்ட சரீரத்தையும் அக்கினிக்கு கொடுக்கலாகாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவாம்.
ஜீவாத்மாவின் பயணம் -5
இறுதிக் கிரியைகளை யார் செய்வார்கள்?
87) உடலுக்கு செய்யும் இறுதிக் கிரியைகள் இரண்டு வகைப்படும். ஒன்று சுபகிரியை மற்றது அபரக்கிரியை. இறந்த பின் ஒருவருக்கு செய்யப்படும் சடங்குகள் (இறுதிக் காரியங்கள்) அனைத்துமே அபரக்கிரியை என அழைக்கப்படுகின்றது.
88) இறந்தவர்களது இறுதிக் கிரியைகளை யார் செய்ய வேண்டும் என்பதற்கு சில விதி முறைகள் உள்ளன. மரணம் அடைந்து விட்டவரின் நெருங்கிய இரத்த உறவினர்கள் மட்டுமே இறுதிக் கிரியைகளை செய்ய உரிமை கொண்டவர்கள்.
89) குடும்பங்களில் இறந்து விட்ட தந்தைக்கு மூத்த மகனே காரியங்களை (கொள்ளி போடுவது) செய்ய உரிமைப்பட்டவர் ஆவார். குடும்பத்தில் மூத்த மகன் ஏற்கனவே இறந்து விட்டார் என்றால் அவருக்கு அடுத்த மகன் தந்தைக்கு சடங்குகளை செய்ய உரிமைப்பட்டவர் ஆகி விடுவார். அவரும் மரணம் அடைந்து விட்டவர் என்றால் அடுத்தவர், அதற்கு அடுத்தவர் என்று பட்டியல் நீளும்.
90) குடும்பங்களில் இறந்து விட்ட தாயாரின் இறுதிச் சடங்குகளை (கொள்ளி போடுவது) செய்ய உரிமைப்பட்டவர் இளைய மகன் ஆவார். இயற்கையாகவே மூத்த மகன் மீது தந்தைக்கும், இளைய மகன் மீது தாயாருக்கும் அதிக பாசம் உள்ளது என்பதினால் இந்த வழக்கம் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனாலும் அவரவர் குடும்ப பழக்கங்களின்படி அவரவர் குடும்ப புரோஹிதர்கள் கூறுவது போல மூத்தவரோ அல்லது இளையவரோ இறுதி காரியங்களை செய்வார்கள்.
91) மரணம் அடைந்து விட்டவர்களுக்கு ஈமக்கிரியைகள் செய்ய மகன்கள் யாருமே இல்லாத நிலையில் (இறந்து விட்டார்கள் அல்லது மகன்கள் பிறக்கவில்லை என்பது அர்த்தம்) இறந்து விட்ட மகன்களின் மகன்கள், இறந்து விட்ட மகன்களின் மகன்கள் (பேரன்கள்), தத்து பிள்ளை, தத்து பிள்ளையின் மகன்கள், தத்து பிள்ளையின் பேரன், சொத்தை அடைய உள்ள பெண் வயிற்று பேரன், மாப்பிள்ளை, உடன் பிறந்த மூத்த சகோதரன் அல்லது இளைய சகோதரன் அல்லது அவர்களின் புதல்வர்கள் அல்லது சக்களத்தி இருந்தால் அவளது மகன்கள்; நண்பர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பிராமண வேலைக்காரன் என்பவர்கள் இறுதிக் கடன்களை செய்யலாம் என சாஸ்திரங்களில் பட்டியல் நீளுகிறது.
92) அவர்களும் இல்லை என்றால், அல்லது அவர்கள் இருந்தும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக சடங்குகளை செய்ய மறுத்து விட்டால், இறந்தவர்களது மனைவியின் கையால் தர்ப்பைப் புல்லை வாங்கி பங்காளி உறவினர்கள் கர்மாவை செய்யலாம்.
93) மகன்கள் இல்லாத தாயார்கள் இறந்தால் அவர்களுக்கான கர்மங்களை அவர்களுடைய கணவர்களே செய்ய வேண்டும்.
94) மரணம் அடைந்து விட்டவர்களுக்கு ஈமக்கிரியைகள் செய்ய கீழுள்ள பட்டியல் இந்து மதத்திலேயே சமூகத்திற்கு சமூகம் மாறுபட்டு உள்ளது
95) சில சந்தர்பங்களில் மகன்கள் யாருமே இல்லை எனில், மூத்த பெண்ணின் கணவரும் ஈமக் கிரியைகளை செய்யலாம். ஆனால் அவரது தந்தை உயிரோடு இருந்தால் அவராலும் அதை செய்ய முடியாது.
96) அதற்கு சாஸ்திர விதிகள் இடம் தரவில்லை என்பதினால் தற்காலத்தில் சில வீடுகளில் அந்த வீட்டின் பெண்கள் கூட கிரியைகளை செய்யத் துவங்கி உள்ளார்கள்.
97) பெண்கள் இறுதிக் கிரியைகள் செய்யக் கூடாது என்று எந்த நூலிலும் குறிப்பிடவில்லை. ஆனால் சாஸ்திரப்படி பெண்கள் தங்களின் பெற்றோர்களுக்கு இறுதி சடங்கு, காரியம் செய்ய முழு உரிமை உண்டு. தர்ம சாஸ்திரத்திலும் ஆண் பெண் எனும் பாகுபாடு கூறப்படவில்லை. ஆனால் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்று விட்ட பெண்களால் தனது பெற்றோர்களுக்கு ஈமக் கிரியைகளை செய்ய முடியாது. அதற்கு சாஸ்திரங்கள் இடம் கொடுக்கவில்லை.
98) இறுதிக் கிரியைகளை பெண்கள் செய்யக் கூடாது என்பது ஒரு நடைமுறை வழக்கமாகவே இருந்து வந்துள்ளது என்பதினால் இதில் நாம் கருத்து கூற விரும்பவில்லை.
99) ஒருவேளை மரணம் அடைந்தவர்களுக்கு யாருமே இல்லாத அல்லது செய்ய மனம் இல்லாத உறவினர்கள் இருந்தால் கர்மாக்களை புரோகிதரே செய்து கொடுக்கலாம்.
100) அப்படிப்பட்ட நிலையில் அதற்கென சில சடங்குகளை புரோகிதர்கள் சொல்வதை போலவே செய்த பின்னரே இறுதிக் காரியங்களை செய்ய வேண்டும் என்பதாக சாஸ்திர விதி முறைகள் உள்ளன. ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் அபூர்வமாகவே நடைபெறுகின்றன.
101) தன் பெற்றோர்களின் விருப்பமில்லாமல் அவர்களுக்கு மன வேதனை அளித்து, தனக்கு பிடித்தவளுடன் வாழ்ந்து கொண்டு ஒரு புதல்வனையும் பெற்று விட்ட மகனுக்கு அவனுடைய பெற்றோர்களுக்கு கர்ம காரியங்களை செய்யும் உரிமை கிடையாது என்பதாக கருட புராணம் கூறுகின்றது. அதையே சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.
102) இறந்தவருடைய குடும்பத்தில் அவர்களுக்கு கர்மாக்களை செய்ய ஒருவரும் இல்லை, அவர்கள் அனாதை என்றால் அந்த ஜீவாத்மாக்கள் யமலோகத்தில் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை அனுபவித்தப் பின்னர் யம தர்மரின் எமகணங்களில் ஒருவராகி விடுகிறார்களாம். அதனால் பல அனாதை ஆசிரமங்கள் அவர்களுக்கு ஈமக்கிரியைகள் செய்கின்றார்கள்.
ஜீவாத்மாவின் பயணம் -6
தகனம் செய்ய கிளம்பும் வீட்டில் செய்யப்படும் சடங்குகள்
103) இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பொதுவான கர்மாக்களை அந்த குடும்பத்தினரின் சம்பிரதாயத்துக்கு ஏற்ப புரோஹிதர்கள் விவரமாகக் கூறுவார்கள். ஒவ்வொரு கோத்திரங்களுக்கும், ஒவ்வொரு கோத்திரங்களைக் கொண்டவர்களுக்கும் தனித்தனி சடங்கு முறைகள் மற்றும் மந்திரங்கள் உண்டு என்பதினால் அவற்றை இங்கு தனித்தனியே விவரிக்காமல் பொதுவாக கடைபிடிக்கப்படும் சடங்குகளை மட்டும் விவரித்து உள்ளேன்.
104) ஆகாயத்தில் தோன்றியதாக கூறப்படும் தர்பைப் புல்லின் அடிப் பகுதியில் பிரும்மாவும், நடுப் பகுதியில் திருமாலும், நுனிப் பகுதியில் சிவபெருமானும் வசிப்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளதினால் தர்பை புல் புனிதமானதாக கருதப்படுகிறது. அது வெற்றிடத்தில் சுற்றித் திரியும் தீய சக்திகளை நீக்கும் தன்மை கொண்டது, இறந்தவர்களின் சடலத்தில் இருந்து வெளிப்படும் கிருமிகளையும் அழித்து விடும் என்று நம்பப்படுவதினால் இறந்தவரது சடலத்தை தர்பை புல் மீது படுத்த நிலையில் வைத்து விடுவார்கள்.
105) தெற்கு திசையில் யமதர்மராஜர் அமர்ந்து இருப்பதினால், இறந்து போனவருடைய சடலத்தின் தலையை தெற்கு நோக்கி படுக்க வைப்பது ஐதீகம் ஆகும். பிணத்தின் தலையை தெற்கு பகுதியை நோக்கி வைப்பதின் முக்கியமான காரணம், மரணம் அடைந்தவரின் ஜீவாத்மா யமலோகத்திற்கு போகும் முன்னால், தனக்கு அருள் புரியுமாறு யமதர்மராஜனை வேண்டிக் கொண்டு அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும் என்பதான ஐதீகம் உள்ளது. அப்போதுதான் அவரை அழைத்துச் செல்லும் எம கிங்கர்கள் அந்த ஜீவாத்மாவை அதிக துன்பங்களுக்கு உட்படுத்தாமல் அழைத்துச் செல்வார்களாம்.
106) வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தால் அங்குள்ள ஸ்வாமி விளக்கை அணைத்து விட்டு அறையை மூடி வைத்து விடுவார்கள். அதை பன்னிரண்டு நாட்கள் காரியங்கள் முடியும்வரை திறக்க மாட்டார்கள்.
107) பல வீடுகளில் பூஜை அறை என்பது தனியாக இருக்காது. ஏதாவது ஒரு அறையில் அல்லது மூலையில் சுவற்றில் ஆணி அடித்து தெய்வங்களை மாட்டி வைத்து இருப்பார்கள். பொதுவாக தினமும் அந்த தெய்வங்களுக்கு முன்னால் விளக்கு ஏற்றி வைப்பார்கள். குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த விளக்கை ஏற்றக் கூடாது என்பது சாஸ்திரம்.
108) வீட்டில் அனைவரும் நலமாக உள்ள நேரத்தில் குடும்ப மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்காக தெய்வங்களுக்கு முன்னால் ஏற்றப்படும் எண்ணை அல்லது நெய் தீப விளக்கின் மூலம் தெய்வங்களை நமது வீட்டிற்கு அழைத்து அருள் புரிய வேண்டும் என்று மானசீகமாக வேண்டுகோள் விடுகிறோம். வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து வைத்து தம்மை ஆராதிக்கும் பக்தர்களுக்கு அருள் செய்ய அந்த விளக்கு ஒளி மூலம் தெய்வங்களே பல சமயங்களில் நம்மை அறியாமல் வீட்டுக்குள் வந்து போகுமாம். ஆனால் மரணம் அடைந்த ஜீவன் உலவும் இடத்தில், அதனுடன் சேர்ந்து வேறு பல தீய ஜீவாத்மாக்களும் உலவும் என்பதினால் அந்த நேரத்தில் எந்த தெய்வங்களும் வீட்டிற்குள் நுழையாதாம்.
109) மரணம் அடைந்து விட்டவர் வீட்டில் விளக்கேற்றி வைத்து மந்திரங்களை உச்சரித்து தெய்வத்தை வேண்டும் போது, அங்கு சுற்றித் திரியும் தீய ஜீவாத்மாக்கள் வேண்டும் என்றே மந்திர உச்சாடனைகள் செய்பவரின் எண்ணத்தில் புகுந்து மந்திர உச்சாடனைகளை தவறாக உச்சரிக்க வைக்குமாம். அப்படி தவறாக உச்சரிக்கப்படும் மந்திரங்களினால் உச்சாடனம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் பல துன்பங்கள் வந்து சேரும். அதனால்தான் இறந்தவர்கள் வீட்டில் தீட்டு காலம் எனப்படும் முதல் பன்னிரண்டு நாட்களிலும் தெய்வங்களுக்கு முன் எண்ணை அல்லது நெய் தீப விளக்கேற்றி தெய்வங்களை வழிபடுவது ஆன்மீக ரீதியில் தடுக்கப்பட்டு உள்ளது. மன இருள் இல்லாமல் பூரண பக்தியோடு செய்ய வேண்டிய தெய்வ காரியம் எதையுமே துயரத்துடன் செய்யக் கூடாது என்பதினால் இந்த நியதி வைக்கப்பட்டு உள்ளது.
110) அடுத்து இறந்து போனவர் அறையில் தெற்குப் பகுதியில் ஒரு சின்ன எண்ணெய் விளக்கை விளக்கை அந்த பனிரண்டு நாட்களும் அணையாதபடி இருக்குமாறு ஏற்றி வைத்திருக்க வேண்டும் என்ற நியதி உள்ளது. அதை எம தீபம் என்று கூறுவார்கள்.
111) அடுத்த பன்னிரண்டு நாட்களும் யம தர்மனின் ஆதிக்கத்தில் உள்ள அந்த வீட்டில் யம தர்ம தேவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் நியதி அதுவாகும். தனது பாவங்களை மன்னித்து, தன்னை அழைத்துச் செல்ல வரும் யம கணங்கள் தன்னை துன்புறுத்தாமல் நல்ல முறையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக அந்த வீட்டில் சுற்றிக் கொண்டு இருக்கும் ஜீவாத்மா யம தேவனை ஆராதித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக அந்த திசையில் எண்ணெய் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
112) உடலில் இருந்து வெளியேறிய ஜீவாத்மாவானது வசுக்கள், ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்களின் தீவிரமான கண்காப்பில் இருந்தாலும், அந்த வீட்டில் சுற்றிக் கொண்டே இருக்கும். உயிருடன் இருந்த நாட்களில் தான் வாழ்ந்திருந்த அறையில் அடுத்த பன்னிரண்டு நாட்களும் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கும் ஜீவாத்மாவானது இருட்டில் தட்டுத் தடுமாறிக் கொண்டு இருக்கக் கூடாது என்பதினால் மரணம் அடைந்தவர் அறையில் விளக்கை ஏற்றி வைப்பதற்கு ஆன்மீக ரீதியாக கூறப்படும் இன்னொரு காரணம் ஆகும்.
113) இறந்து போனவர் உடலில் போடப்பட்டு உள்ள துணிகளை அகற்றி விட்டு வெள்ளைப் போர்வையினால் உடலைப் போர்த்தி வைக்க வேண்டும். பிரேதத்தை மூட வாங்கிய துணியிலேயே கொஞ்சம் கிழித்து வைத்து கொண்டு அதையே பத்து நாளும் வஸ்த்ரோதகம் விட உபயோகிக்க வேண்டும். வஸ்த்ரோதகம் என்பதற்கான சரியான விளக்கம் தெரியவில்லை.
114) அந்தணர்கள் அல்லாத சில குடும்பங்களில் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மேல் வெள்ளை துணியைக் கட்டி வைப்பார்கள். உடலை விட்டுப் வெளியேறும் ஜீவாத்மா அந்த உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லும்வரை அந்த வெள்ளைத் துணியில் தொங்கிக் கொண்டு நிற்கும் என்ற ஐதீகமே அதன் காரணம்.
115) கறுப்பு நிறம் யமதர்மருக்கு உகந்த நிறம் என்பதினால், மரணம் அடைந்தவர் உடலை விட்டு வெளியேறும் ஜீவாத்மா மனதில் யம பயத்தை ஏற்படுத்திக் கொள்ளும் என்பதினால் இறந்தவர் உடலுக்கு வெள்ளை துணி போர்த்தப்படுகின்றது என்பது ஆன்றோர் கூற்றாக உள்ளது.
116) இறந்து விட்டவர் சிறு பெண்ணாக இருந்தால், வெள்ளைத் தவிர மற்ற நிறத்தில் மேலாடை அல்லது உடலை மறைக்கும் வகையிலான வஸ்திரத்தை அணிவிக்க வேண்டும்.
117) இறந்து விட்டவர் சுமங்கலியாக இருந்தால் குங்கும பொட்டு வைத்து அலங்கரித்து புது பச்சைப் புடவையை அணிவிப்பார்கள். அதே போல பச்சை கண்ணாடி வளையல்களையும் தலையில் பூவையும் வைத்து விடுவார்கள்.
118) அங்கு கூடி இருக்கும் சுமங்கலி பெண்கள் இறந்த பெண்மணியின் நெற்றியில் மஞ்சள் திலகம் இட்டு, சிவப்பு குங்குமம் இடுவார்கள். இறந்து விட்ட சுமங்கலி பெண்ணின் நெற்றியில் மஞ்சள் மற்றும் குங்குமம் இடுவது இந்து இறுதிச் சடங்கில் ஒன்றாகும், அதன் மூலம் இறந்து விட்ட சுமங்கலி பெண்ணிற்கு மரியாதை காட்டப்படுகின்றதான ஐதீகம் உள்ளது. அவரது கணவர் இன்னும் உயிருடன் இருப்பதை வெளிப்படுத்துகின்றது.
119) இறந்து போனவர் விதவைகள் என்றால், அவர் உடல் மீது வெள்ளை துணி போர்த்தி, நெற்றியில் வீபூதியை இடுவார்கள்.
120) பொதுவாக அனைவரது வீடுகளிலும் இறந்தவர் நெற்றியில் வீபுதி பூசி வைப்பார்கள். அதன் மூலம் இறந்த பின் ஒருவர் சாம்பல் ஆகி விடுகிறார்கள் என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறார்கள்
121) இரு கை கட்டை விரல்களையும், இரு கால் கட்டை விரல்களையும் சேர்த்து சின்ன துணியினால் கட்டி வைத்து வைப்பார்கள். மூக்கின் இரண்டு நாசி துவாரங்களிலும் பஞ்சை வைத்து மூடி விடுவார்கள். கண்களையும் மூடி விடுவார்கள். அதிக நேரத்திற்கு பின் அவற்றை செய்வது கடினம், ஏன் எனில் உடல் விறைத்துக் கொண்டு விடும்.
122) குறிப்பிட்ட ஒரு சில சமூகத்தினர் இறந்த பிணத்திற்கு எட்டு இடங்களில் கட்டு போடுவார்கள். அதாவது இரண்டு கை பெரு விரல்களையும் இணைத்துக் கட்டுவதை கைக் கட்டு என்பார்கள். காலிலுள்ள பெரு விரல்களை இணைத்துக் கட்டுவதை கால்கட்டு என்றும், சீவலுடன் வெற்றிலையை கசக்கி வாயில் வைத்து வாயை துணியால் மூடுவதை வாய்க்கட்டு என்று கூறுவார்கள், தளர்ந்து வரும் தசைப் பிண்டங்களை வாயுடன் ஒருங்கிணைத்துக் கட்டுவதை நாடிக் கட்டு என்றும், தொப்புள் வழியாகக் காற்று புகுந்து வயிறு புடைத்து விடாமல் கட்டுவது தொப்புள் கட்டு என்றும், தலை முடியை மறைத்து முகம் மட்டும் தெரியும்படியாகக் கட்டுவதை தலைக் கட்டு என்றும், முழங்கால் இரண்டையும் இணைத்து உடல் நேர் கோட்டில் அமையும்படி கட்டுவது முழங்கால் கட்டு என்றும் ஆண்களின் பிறப்புறுப்பை மறைத்துக் கட்டுவதை கோவணக் கட்டு என்றும் கூறி அவற்றை செய்வதுண்டு. இவற்றை மரணம் அடைந்து விட்ட பெண்களுக்கும் செய்கின்றார்கள்.
123) எதற்காக கை மற்றும் காலில் உள்ள கட்டை விரல்களை ஒன்று சேர்த்துக் கட்டி வைக்கிறார்கள் என்பதை சாஸ்திரங்கள் விவரிக்காவிடிலும் அதை தர்ம சாஸ்திர விதியாக கூறி உள்ளார்கள்.
124) ஒருவர் இறந்தப் பின் அவர்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பன்னிரண்டு நாட்கள் அவை தங்கி இருந்த வீட்டிலேயே சுற்றிக் கொண்டு இருக்கும். அதே போல வான் வெளியில் சுற்றித் திரியும் பிறரது ஜீவாத்மாக்களும் எங்கெல்லாம் ஒருவர் இறந்து விடுகின்றாரோ அங்கெல்லாம் சென்று அங்கு இறந்தவரின் வீட்டிலேயே ஜீவாத்மாவோடு சேர்ந்து கொண்டு சுற்றித் திரிய முனையும்.
125) ஒருவர் இறந்தப் பின் இயற்கையாகவே அவரது கால்கள் இரண்டும் அகலமாக திறந்து கொண்டு ஒன்றை விட்டு ஒன்று விலகி நிற்கத் துவங்கும். அப்படி கால்கள் விலகி நிற்கும்போது பின்புறத்தில் உள்ள ஆசனவாயின் துவாரம் விரிவடைந்து விடும். அதையே மூலாதாரம் என்பார்கள். அதன் வழியே இறந்தவர் உடலில் இருந்து வெளியேறிய ஜீவாத்மாவும், அதோடு ஒட்டிக் கொண்டு வந்து விடும் ஜீவாத்மாக்களும் சடலத்தின் உடலுக்குள் நுழைந்து கொண்டு விடும். அப்படி அவை நுழைந்து விட்டால் அந்த உடலுக்கு செய்யப்படும் சடங்குகளின் பலன் அந்த சடலத்தில் இருந்து வெளியேறிய ஜீவாத்மாவிற்கு முழுமையாக கிடைக்காமல் அதோடு உடலின் உள்ளே புகுந்து கொள்ளும் மற்ற ஜீவாத்மாக்களுக்கு போய் சேர்ந்து விடும்.
126) அது மட்டும் அல்ல, அந்த உடலை தகனம் செய்யும்போது அந்த ஜீவாத்மாக்கள் ஆசனவாயு பகுதியில் இருந்து வெளியில் வந்து மயானத்தில் சுற்றித் திரியத் துவங்கும். மயானத்தில் அதற்காகவே காத்திருக்கும் மந்திரவாதிகள் சடலத்தில் இருந்து வெளி வரும் ஜீவாத்மாக்களை தன் வயப்படுத்தி விடுவார்கள். அவற்றை மந்திர தந்திர வித்தைகளுக்கு பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்வார்கள். அது தகனம் செய்யப்பட்ட உடலின் குடும்பங்களை பாதிக்கும். ஆகவேதான் இறந்து கிடைக்கும் உடலின் மூலாதார துவாரம் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காக கட்டை விரல்களை இறுக்க கட்டி வைத்து விடுவார்கள்.
127) ஜீவாத்மாக்களினால் இறந்து விட்டவர்களின் உடலில் உள்ள மற்ற துவாரங்கள் வழியே உள்ளே நுழைய முடியாதாம். நாசித் துவாரம் அல்லது மூலாதாரம் வழியே மட்டுமே நுழைய இயலுமாம். அதனால்தான் நாசியின் துவாரங்களை பஞ்சு வைத்து மூடியும், கால் கட்டை விரல்களை ஒன்றாக சேர்த்துக் கட்டி வைத்து விடுவார்கள்.
128) உறவினர் அனைவரும் வந்து கூடிய பின், தகனக் கிரியை அல்லது கர்மாவை செய்யத் துவங்கும் புரோஹிதர் பொதுவாக தலைப் பகுதியில் செங்கல்லை அடுக்கி வைத்து சின்ன குண்டம் அமைத்து, அதன் பக்கத்தில் கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகளைத் துவக்குவார். கிரியைகள் செய்வதற்கு முன் கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகள் ஆரம்பமானதும், பூதவுடலை ஒரு பூணூல் மூலம் கும்பங்களுடன் இணைத்து வைத்து ஹோம குண்ட அக்கினியுடன் சங்கமிக்கச் செய்வார்கள். கும்ப பூசைகள் நிறைவு பெற்றதும் அக்கினி ஹோமம் வளர்க்கப்படுகின்றது.
129) தலைப் பகுதியில் சடங்குகளை செய்ய துவங்குவதின் காரணமும் யமதர்மராஜருக்கு மரியாதை தருவதற்காகத்தான். அதாவது இறந்தவர் உடலில் இருந்து வெளியேறிய ஜீவாத்மாவை அக்னி ஹோமத்தின் மூலம் வீட்டிற்குள்ளேயே தகனம் செய்து யமதர்ம தேவரிடம் அனுப்பி வைப்பதான ஐதீகம் அது.
130) அந்த சடங்கு முடிந்ததும் அக்கினி ஹோமம் வளர்க்கப்பட்டு பூத உடலை தண்ணீர் விட்டு அலம்புவார்கள். அந்த சடங்குகளை வீட்டில் உள்ளவர்கள் செய்கிறார்கள். அதை தெய்வீக நிலையை அடைய உள்ள உடலுக்கு செய்யும் முதல் அபிஷேக பூஜை என்பார்கள்.
131) அதற்கு இடையில் அங்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வீட்டில் வைக்கப்பட்டு உள்ள சடலத்திற்கு மலர் மாலைகளை அணிவிப்பார்கள். பூக்களையும் உடல் மீது தூவுவார்கள். எதற்காக இறந்தவர் உடலின் மீது மலர்களை போட வேண்டும் அல்லது, மலர் மாலைகளை வைக்க வேண்டும் என்பதற்கு சாஸ்திர நியதி இல்லை. தர்ம சாஸ்திர நம்பிக்கையின்படி இறந்தவர் தெய்வமாகி விட்டார் எனக் கருதுவதினால்தான் அதை செய்கிறார்கள்.
132) இறந்து போனவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்குப் பிறந்த பெண்கள் மற்றும் மருமகள்கள் (பிள்ளைகளின் மனைவிகள்) போன்றவர்கள் தாம் உடுத்திய புடவையுடன் தலைக்கு ஸ்நானம் செய்து விட்டு, தலையை முடியாமல், ஈரப் புடவையுடன் குடத்தில் தண்ணீர் ஏந்திக் கொண்டு வந்து ஆளுக்கொரு குடமாக அல்லது ஒரு குட ஜலத்தையே எல்லோரும் பிடித்துக் கொண்டோ சடலத்தின் கால் பாதத்தில் இருந்து தலை வரை உடம்பு முழுவதும் நன்றாக நனையும்படி தண்ணீர் விடுவார்கள்.
133) அதன் பின்னர் கர்மாவை செய்பவர் சடலத்தில் தலையில் சீக்காய் பொடி, எண்ணெய் முதலியவற்றை வைப்பார்கள். பின்னர் அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிஷேகம் செய்வார்கள். இந்த பழக்கமும் சமுதாயத்திற்கு சமுதாயம் மாறுபடும். சில வீடுகளில் மஞ்சள் கரைத்தும் அபிஷேகம் செய்வது உண்டு. அதன் பின் பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். கர்மாவை செய்பவர் மேற்கு முகமாக நின்றபடி சடலத்தின் கால் பகுதியில் இருந்து துவங்கி தலைவரை அவரின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இந்த அபிஷேகம் செய்வார். பூதவுடல் பழுதடைந்த அல்லது அபிஷேகம் செய்ய முடியாத நிலையில் இருந்தால் அபிஷேகத் திரவியங்களை பூதவுடல் மீது தெளித்து விடுவார்கள். பொதுவாக அந்தணர்கள் வீடுகளில் இவற்றை செய்யாமல் கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
134) உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றி உடலை நனைத்தப் பின், முடிவாக முகத்தில் தண்ணீரை ஊற்றியதும் தலை அருகே குடத்தைக் கவிழ்த்து வைத்து விட்டு அதில் இருந்து கீழே வடிந்த ஜலத்தை எடுத்து அதே குடத்தின் மீது தெளித்தப் பின் அந்தக் குடத்தை எடுத்து சடலத்தின் வடக்குப் பக்கத்தில் வைத்து விடுவார்கள். அப்படி செய்வது கங்கை நீரால் அந்த குடத்தை அலம்பியதற்கு சமம் என்பார்கள். இறந்தவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள் எனக் கருதப்படுவதினால் அந்த சடங்கை சில புரோஹிதர்கள் ஒரு விதத்தில் அஸ்வமேத யாகத்துக்கு இணையானது என்று கூறி உள்ளார்கள்.
135) அதன் பின் இறந்தவரது கர்த்தாக்கள் அனைவரும் சடலத்தை பிரதர்ஷணம் செய்த பின் அந்த இடத்தில் இருந்து வெளியில் சென்று விடுவார்கள். செல்லும் முன் அதற்கு நமஸ்கரிப்பது மெத்த சிறந்தது ஆகும். அங்குள்ள மற்றவர்கள் அந்த இடத்தை ஈரமின்றி நன்றாகத் துடைத்து விடுவார்கள்.
136) அதன் பின் மரணம் அடைந்தவர் பெண் என்றால் பெண்களும், ஆண் என்றால் ஆண்களும் ஈரமாக உள்ள சடலத்தின் உடலை நன்றாகத் துடைத்து விட்டு அந்த சடலத்துக்கு மாற்று உடை அணிவிப்பார்கள்.
137) அதன் பிறகு புது வஸ்திரத்தை (வேஷ்டி-அங்கவஸ்திரம் அல்லது புடவை) போர்த்துவார்கள். அந்த வஸ்திரத்தின் முன்பாக தூபம் காண்பித்து அல்லது கோமூத்ரம் அல்லது கங்கை தீர்த்தம் தெளித்து சுத்திகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
138) சடலத்தை அலம்பி விட்ட தண்ணீரை துடப்பத்தினால் தள்ளி அலம்பக் கூடாது. அந்த தண்ணீரை துணியால் துடைத்து எடுத்து ஒரு பாக்கெட்டில் பிழிய வேண்டும். அதன் காரணம் அந்த தண்ணீர் புனிதமான, அபிஷேகம் செய்யப்பட்ட நீருக்கு சமமான நீராகும் .
139) இறந்தவர்கள் உடலில் நகைகள் ஏதாவது அணிவிக்கப்பட்டு இருந்தால் அதை அந்த நேரத்தில் கழற்றி எடுத்து விடுவார்கள். அதன் பின்னர் அனைவரும் தெற்கு பக்கமாகப் பார்த்து சவத்தை நமஸ்கரித்தப் பின்னர் பிணத்தை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்வார்கள். இவை அனைத்தையும் அங்குள்ள புரோகிதர் மந்திரங்கள் ஓதி நடத்தி வைப்பார்.
140) சடலத்தின் மீது போர்த்தப்பட்ட துணியின் பாதப் பகுதியின் துணியில் இருந்து கால் பாகம் வெட்டி எடுத்து வைத்துக் கொண்டு சடங்குகளை செய்யும் கர்த்தா அதை அங்கவஸ்திரமாக 12 நாட்களுக்கு அணிய வேண்டும். அந்த அங்கவஸ்திரத்தை தொலைக்கக் கூடாது. 12-ம் நாள் அன்று அதே துணியை பிண்டம் போடும்போது பிண்டத்தோடு வைத்து அதையும் சேர்த்து தண்ணீரில் போட்டு விட வேண்டும் (விஸர்ஜனம்).
141) சடலத்திற்கு அபிஷேக பூஜை செய்து, புதிய வஸ்திரங்களை அணிவித்த பின்னர், அதை வீட்டிற்கு வெளியே எடுத்து வருவார்கள். அங்கு தயாராக வைக்கப்பட்டு உள்ள பாடையில் சடலத்தின் தலை பகுதி கிழக்காகவும், கால் மேற்கிலும் இருக்குமாறு வைத்ததும், உரிமைக்காரப் பெண்களும், வீட்டுப் பெண்களும் அதன் வாயில் வாய்க்கரிசி போடுவார்கள்.
142) அதன் பின்னரே இறந்தவர்களின் உடலை ஒரு போர்வையினால் நன்கு மூடி வைத்தப் பின், அதை பாடையுடன் சேர்த்து கட்டிய பின்னர் நான்கு பேர்கள் அந்தப் பாடையை தூக்கி தமது தோள் மீது வைத்துக் கொள்ள, நெருப்புச் சட்டியுடன் இறந்தவரது மகன்கள் முன்னே செல்ல, பிணத்தின் பின்புறத்தில் இறந்து போனவரின் பேரப் பிள்ளைகள் தீப்பந்தம் ஏந்தியபடி பிணத்துடன் செல்வார்கள். நெருப்புச் சட்டி என்பது இறந்தவரின் உடலை தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும்போது, கர்த்தா கையில் ஏந்தியிருக்கும் ஒரு சிறிய மண் சட்டியாகும். இதில், ஒரு விளக்கைப் போட்டு எரிய விட்டு எடுத்துச் செல்வார்கள்.
.…..6(a )தொடர்கின்றது