மாயவரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் காவேரி ஆற்றின் வடக்கு பகுதியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் ஒரு சிவபெருமான் ஆலயம் உள்ளது. அங்குதான் தேவலோகத்தை சார்ந்த ஒரு தேவதை நண்டாக வந்து சாப விமோசனம் பெற்றது. அந்த ஆலயத்தை கற்கடேஸ்வரர் ஆலயம் என்று அழைக்கின்றார்கள். கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு கிராமமான திருவிசைநல்லூரில் இருந்து சற்று தள்ளி உள்ள குக்கிராமமான திருந்துதேவன்குடி என்ற இடத்தில் உள்ள ஆலயம் இது. இந்த ஆலயம் குறித்த பல ஆச்சர்யமான கதைகள் உள்ளன.
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் மாமுனிவரான துர்வாச முனிவர் ஒரு காட்டில் சிவபெருமானுக்கு பூஜைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வனப்பகுதிக்கு வந்த ஒரு தேவதை அவர் யார் என்பதை அறிந்திடாமல் அவர் செய்த பூஜையை விமர்சனம் செய்து கொண்டு ஒரு நண்டு போல தன்னை உருமாற்றிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து அவரை கேலி செய்தவண்ணம் இருந்தது. தனது பூஜையை அவமதிக்கும் விதத்தில் நண்டு போல உருமாற்றம் செய்து கொண்டு கேலி செய்த அந்த தேவதை பூமியிலே ஒரு நண்டாக பிறக்கட்டும் என முனிவர் சாபமிட்டார்.
அப்போதுதான் தன் சுயநினைவுக்கு வந்த தேவதை அந்த மாமுனிவர் யார் என்பதை தெரிந்து கொண்டு அவர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்ட பின் அறியாமையினால் தான் செய்த பிழையை மன்னித்து சாபத்தை விலக்குமாறு வேண்டிக் கொண்டது. ஆனால் கொடுத்த சாபத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்பதினால் அந்த நண்டு பூமியிலே சென்று வாழ்ந்து கொண்டு தினமும் ஒரு தாமரை மலரை கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்தால் அவர் அந்த நண்டுக்கு காட்சி தந்து சாப விமோசனமும் தருவார் என்று கூறினார். அடுத்தகணம் அந்த தேவதை நண்டாக மாறியது. பூலோகமும் சென்றது.
நண்டு பூலோகம் சென்ற இடம் தற்போது கற்கடேஸ்வரர் ஆலயம் உள்ள இடம் ஆகும். அந்த ஆலய பகுதி வெற்று இடமாக இருந்தது அதை சுற்றி நாலுபக்கமும் அகழி இருக்க அதன் நடுவில் ஒரு தாமரை குளமும் இருந்தது. அந்த குளம் முழுவதும் தாமரை மலர்கள் பூத்து இருந்தன. அந்த வெற்றுப் பகுதியில் சிவபெருமான் ஒரு சில காரணங்களுக்காக ஒரு சிவலிங்க உருவில் அமர்ந்திருந்தார். ஆகவே அங்கு சென்ற நண்டுக்கும் மன மகிழ்ச்சி கிடைத்தது. சிவபெருமானுக்கு தினமும் ஒரு தாமரை மலரைப் போட்டு பூஜை செய்து சாபவிமோசனம் பெற நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்து இருந்தது.
இப்படியாக ஒருபக்கத்தில் சில நிகழ்சிகள் நடந்து கொண்டு இருக்கையில் இன்னொருபுறம் தேவலோக அதிபதியான இந்திர பகவானும் அதே இடத்தில் சிவபெருமானுக்கு தினமும் 1008 தாமரை மலர்களை போட்டு பூஜை செய்து வந்தார். அசுரர்களுடன் பலமுறை போரிட்டு பலத்தை இழந்து நின்ற இந்திர பகவானை 48 நாட்கள் தினமும் 1008 தாமரை மலர்களை போட்டு சிவபெருமானை ஆராதித்து பூஜித்தால் சிவபெருமானின் அருள் கிடைத்து தேவேந்திரனுக்கு இழந்த பலன்கள் மீண்டும் திரும்பக் கிடைக்கும் என வியாழ பகவான் அறிவுறுத்தி இருந்ததினால் இந்திரா பகவானும் அங்கு தினமும் பூஜை செய்து வந்தார். அதற்கு உதவியாக இருக்க தினமும் 1008 தாமரை மலர்கள் அந்த தாடகத்தில் பூக்க வருண பகவான் ஏற்பாடு செய்து இருந்தார்.
இவை எதுவுமே நண்டு உருவில் இருந்த தேவதைக்கு தெரியாது. தாடகத்தில் ஆயிரக்கணக்கான பூக்கள் உள்ளதே என மகிழ்ந்த நண்டும், தினமும் அதில் இருந்து ஒரு பூவை எடுத்துக் கொண்டு போய் சிவபெருமானுக்கு பூஜை செய்து வந்தது.
இந்திர பகவானுக்கும் தினமும் அவர் போடும் தாமரையில் ஒன்று குறைவாக உள்ளதே என்ற செய்தி தெரியாது. வருண பகவான் தினமும் சரியாக 1008 பூக்கள் பூக்க ஏற்பாடு செய்து இருந்ததினால் அவர் பூக்களை எண்ணி எடுத்துக் கொண்டு செல்லவில்லை. தாடகத்தில் இருந்த அத்தனை பூக்களையும் பறித்துக் கொண்டு சென்று பூஜித்து வந்தார். ஆகவே அவர் 1008 பூக்களுக்கு பதிலாக 1007 பூக்களைக் கொண்டு பூஜை செய்து வந்திருந்தார். ஒருவருக்கொருவர் அறியாமல் இருந்த அந்த நிலையில் நண்டும் தனது கடமையை தவறாமல் செய்து வந்தது.
சில நாட்கள் சென்றது. ஒருநாள் வியாழ பகவான் மனதில் 1008 பூக்களுக்கு பதிலாக 1007 பூக்களைக் கொண்டு இந்திர பகவான் பூஜை செய்து வந்ததினால் இந்திர பகவான் செய்து வந்த பூஜையை சிவபெருமான் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற உண்மை தெரிந்தது. உடனே சென்று இந்திர பாவானிடம் சென்று அதை பற்றிக் கூறினார். அதைக் கேட்ட இந்திர பகவான் அதிர்ந்து போனார். வருணனோ தினமும் தான் பூக்க வைத்த மலர்கள் 1008 உள்ளது என்பதை சரி பார்த்து விட்டு சென்று கொண்டு இருந்ததாகக் கூறினார். ஆகவே யார் ஒரு பூவை தினமும் திருடுகிறார்கள் என்பதை ரகசியமாக இந்திர பகவான் கண்காணிக்க முடிவு செய்தார். மறுநாள் விடியற்காலை நண்டும் எப்போதும்போல ஒரு பூவை பறித்துக் கொண்டு சென்று சிவபெருமான் தலையில் போட்டு பூஜை செய்வதை பார்த்து விட்டார்.
அதனால் கோபம் அடைந்த இந்திர பகவானும் அந்த நண்டைக் கொல்ல வாளினை உருவ, நண்டும் தப்பிக்க முயன்றபோது சிவலிங்கத்தின் தலையில் ஒரு பள்ளம் தோன்றியது. உடனே நண்டு அந்த பள்ளத்தில் சென்று மறைந்து கொள்ள உருவிய வாளைக் கொண்டு சிவலிங்கத்தை எப்படி வெட்ட முடியும் என இந்திர பகவான் திகைத்து நிற்க அடுத்தகணம் அந்த நண்டு தேவதையாக உருமாறியது. இருவர் முன்னும் சிவபெருமான் காட்சி அளித்து அருள் புரிந்தார். நடந்தவை இருவருக்கும் தெரிந்தது. மீண்டும் அதே இடத்தில் 48 நாட்கள் 1008 தாமரை மலர்களைக் கொண்டு பூஜித்தால் மட்டுமே இந்திர பகவான் இழந்த பலத்தை மீண்டும் பெற முடியும் என்பது விதியானதால், இந்திர பகவானும் மீண்டும் 1008 பூக்களைக் கொண்டு 48 நாட்கள் பூஜை செய்து இழந்த அனைத்து பலத்தையும் பெற்றார். அதன் பின் அவரவர் ஆகவே தத்தம் இடங்களுக்கு சென்றுவிட சிவபெருமான் சில காரணத்துக்காக அங்கேயே பூமிக்குள் சிவலிங்க உருவில் மறைந்து கொண்டார்.
சில ஆயிரம் வருடங்கள் உருண்டன. சோழ மன்னர் பரம்பரையை சேர்ந்த ஒரு மன்னன் அந்த பூமியை ஆண்டு வந்தார். அவருக்கு தீராத பக்கவாத நோய் ஏற்பட்டது. எழுந்திருக்க முடியவில்லை. அவருடைய நோயை யாராலும் தீர்க்கவும் முடியவில்லை. அந்த நிலையில் திடீர் என ஒருநாள் சிவபெருமானும் பார்வதி தேவியும் மருத்துவர் உருவில் அரண்மனைக்கு வந்து அவருடைய நோயை தீர்ப்பதாகக் கூறினார்கள். உள்ளெ வந்தவர்கள் மன்னனின் நெற்றியில் திருநீர் இட்டபின் ஒரு ருத்ராக்ஷ மாலையையும் அணிவித்து விட்டு அவர் வாயில் எதோ மூலிகை மருந்தையும் ஊற்றினார்கள். மறுநாள் மீண்டும் வருவதாக கூறிவிட்டு சென்றார்கள். என்ன அதிசயம், படுத்தப் படுக்கையாக வீழ்ந்து கிடந்த மன்னன் மறுநாள் காலையில் எழுந்து தாம் செய்து வந்த வேலைகளை தாமே செய்யத் துவங்கினார். அனைவரும் அதிசயித்து நின்றார்கள். எப்படி 24 மணி நேரத்துக்குள்ளாகவே வியாதி பூரண குணம் ஆயிற்று என எண்ணி, மருத்துவத்தின் சக்தியை வியந்தார்கள். காலையில் மீண்டும் மருத்துவர்கள் வந்தார்கள். அரசன் அவர்களை வெகு விமர்ச்சையாக வரவேற்று கௌரவித்து பல பரிசுகளையும் பொருட்களையும் தந்தார். அனால் அவர்கள் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தாம் தமது கடமையை மட்டுமே செய்ததாகக் கூறி, சன்மானத்துக்குப் பதிலாக குறிப்பிட்ட ஒரு இடத்தைக் கூறி அங்கு பூமியில் மறைந்துள்ள சிவலிங்கம் மற்றும் பார்வதி தேவியின் சிலையை வெளியில் எடுத்து அங்கேயே ஒரு ஆலயம் அமைக்குமாறு கூறினார்கள். அப்படி செய்தால் அந்த ராஜ்யமே வளம் பெரும் என்றும் கூறினார்கள். அதுவே தம்முடைய சன்மானம் என்றார்கள். ஆனால் அவர்கள் யார் என்பது எவருக்கும் தெரியவில்லை.
அடுத்த நாள் காலையில் அந்த மன்னன் அந்த மருத்துவர்களுடன் அவர்கள் அழைத்துச் சென்ற இடத்துக்கு சென்று ஆட்களை விட்டு பூமியை தோண்டச் செய்தார். அங்கு சிவலிங்கம் மட்டுமே கிடைத்தது. ஆனால் பார்வதி தேவியின் சிலை கிடைக்கவில்லை என்பதினால் வேறு எங்கு தோண்டுவது என மருத்துவர்களைக் கேட்கலாம் என எண்ணிக் கொண்டு அவரைத் தேட அவர்கள் காணவில்லை. எவராலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே வந்திருந்தவர்கள் தெய்வங்களாகவே இருக்க வேண்டும் என்பதை மன்னன் புரிந்து கொண்டான். அதன் பின் சிவலிங்கத்தை வெளியில் எடுத்து பார்வதியின் சிலை ஒன்றை வடிவமைத்து அங்கேயே ஆலயம் எழுப்பினார். பல காலம் பொறுத்து அதே இடத்தின் வேறு மூலையில் தோண்டியபோது மருத்துவர்கள் கூறிய பார்வதி தேவியின் சிலை கிடைத்தது. அதையும் அங்கேயே பிரதிஷ்டை செய்தார்கள்.
அதற்குப் பிறகே மன்னனுக்கும் அந்த ஆலயத்தின் மேன்மைக் குறித்த அனைத்து விவரங்களும் துர்வாச முனிவரின் சீடர்களான பிற முனிவர்கள் மூலம் தெரிய வந்தது. இந்த மேன்மைகள் உலகத்துக்கு தெரிய வரத் துவங்க அந்த ஆலயத்து மூலவரை கற்கடேஸ்வர் (கர்கட் என்றால் நண்டு என்று அர்த்தம்) அதாவது நண்டின் சாபத்தை விலக்கியவர் என்ற பொருளில் அழைத்தார்கள். அதை போலவே மருத்துவ உருவில் பார்வதி தேவியும் வந்ததினால் அவளை அருமருந்துநாயகி என பெயரிட்டு அழைத்தார்கள். அதைப் போலவே பிறகு கிடைத்த பார்வதி தேவியின் அபூர்வ சிலைக்கு அபூர்வநாயகி என பெயரிட்டார்கள். நண்டுக்கு சாபம் விலக்கியதினால் நண்டை ராசியாகக் கொண்டவர்களுக்கும் கடக ராசிக்காரர்களுக்கும் இது பரிஹாரஸ்தலம் ஆயிற்று.
இந்த ஆலயத்தின் இன்னொரு மேன்மை என்ன என்றால் வேறெந்த சிவபெருமான் ஆலயத்திலும் இல்லாத நிலையில் பார்வதி தேவிக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. இரண்டிலும் அவள் வெவேறு தோற்றத்தில் காணப்படுகிறாள்.
இந்த ஆலயத்தில் சந்திர பகவான் யோக நிலையில் அமர்ந்தவண்ணம் காணப்படுகின்றார். மேலும் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி மருத்துவர்கள் உருவில் வந்து மன்னனின் நோயை குணப்படுத்தியதால் அவர்கள் செய்த பணியை தொடர அவர்கள் சார்ப்பில் தன்வந்தரி பகவானும் இந்த ஆலயத்தின் ஒரு சன்னதியில் காணப்படுகின்றார். சாதாரணமாக தன்வந்தரி பகவான் விஷ்ணு பெருமான் ஆலயத்தில் மட்டுமே காணப்படுவார். எந்த நோயாளின் நோயும் விலக இங்கு வந்து தன்வந்தரி பகவானை வேண்டினால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும்.