தென் இந்தியாவில் மாரியம்மனைப் போற்றி வணங்குவதை போல காலரா, அம்மை போன்ற நோய்களை குணப்படுத்துபவள் மற்றும் பஞ்சகாலத்தில் மழையை பொழிய வைக்கும் தேவி என்ற நம்பிக்கையில் வடநாட்டில் ஷீதல் மாதா எனும் தேவியை வணங்கித் துதிக்கின்றார்கள். ஷீதல் என்றால் குளுமையானவள் என்ற அர்த்தம் உண்டு. வடநாட்டில் டெல்லி, மத்திய பிரதேசம், ஒரிஸா, மேற்கு வங்கம் போன்ற இடங்களிலும், நேபாளம் மற்றும் பாகிஸ்தானின் சில இடங்களிலும் கூட ஷீதல் மாதாவை பூஜிக்கிறார்கள். பல்வேறு தோற்றங்களில் உள்ள ஷீதல் மாதாவை மகாமாயீ மற்றும் மஹா அன்னம்மா என்று வடநாட்டில் அழைக்க தென் இந்தியாவிலோ அவளை மாரியம்மன், ரேணுகா, எல்லம்மா, குளிர்ந்த நாயகி, முண்டகண்ணி அம்மன், கெம்பம்மா, தொட்டம்மா, சகஜம்மா மற்றும் கங்கம்மா என்றும் அழைக்கின்றார்கள். பொதுவாகவே இந்த தேவியை பஞ்ச காலங்களில் மழையை பொழிவிப்பவள், அம்மை, காலரா போன்ற கொடிய நோய்களை குணப்படுத்துபவள், கிராமத்தைக் காப்பாற்றுபவள், குழந்தை வரம் தருபவள், தன்னை வேண்டி நிற்கும் பக்தர்களின் குறைகளைக் களைபவள் என்பதாக நம்புகின்றார்கள் என்பதின் காரணமும் அவள் பார்வதி தேவியின் அவதாரம் என்பதுதான்.

நெருப்பின் மீது நடப்பது, உடம்பில் ஆடைக்கு பதில் (நிர்வாணம்) உடலே தெரியாதவாறு முழுமையாக வேப்பிலையை துணிபோல உடலை சுற்றி கட்டிக் கொண்டு கோவிலுக்குள் வலம் வருவது மற்றும் பொங்கல் படைத்து தானம் செய்வது போன்ற வழிபாட்டு முறைகளை வடநாட்டில் உள்ளவர்கள் கடைபிடிப்பது இல்லை. ஆலயத்தில் சென்று அவளை வணங்கித் துதிக்கின்றார்கள். மேலும் வடநாட்டில் குர்கான் எனும் இடத்தில் உள்ள ஆலயத்தைத் தவிர்த்து ஷீதல் மாதாவிற்கு பெரிய ஆலயங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சிறிய வழிபாட்டுத் தலங்களே நிறைய காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் வேப்பிலை மரங்களுக்கு அடியே உள்ளன. சிவப்பு வண்ண சேலை மற்றும் பச்சை நிற மேலாடையுடன் காட்சி தரும் இந்த தேவிக்கு நான்கு கைகள் உள்ளன. அதில் ஒரு கையில் முறமும், இன்னோர் கையில் துடைப்பமும் காணப்படுகின்றது. அவளது வழிபாட்டிலும் பூஜையிலும் எலுமிச்சை பழம் மற்றும் வேப்பிலை போன்றவையே பிரதானமான பொருட்களாக உள்ளன. அவளை பார்வதி தேவியின் அவதாரமான துர்கை தேவியின் சிறு அவதாரம் என்றும் நம்பிக்கை உள்ளது.

பொதுவாகவே இந்த தேவியின் அவதாரம் குறித்த செய்திகள் அனைத்துமே வாய்மொழிக் கதைகளாகவும் மற்றும் கிராமியக் கதைகளுமாகவே உள்ளன. ஒரு கிராமியக் கதையின்படி கிரேதா யுகத்தில் வாழ்ந்து வந்த கால்கேயா எனும் அசுரர்களின் பிரிவை சேர்ந்த விருத்தாசுரன் எனும் அரக்கன் உலகெங்கும் இருந்த தேவர்களையும் பிற மக்களையும் தொல்லைபடுத்தி வந்தான். தேவதைகளினால் உலகின் எந்த பகுதிக்கும் பயமின்றி செல்ல முடியவில்லை. அதனால் ஏற்பட்ட பெரும் யுத்தத்தில் விருத்தாசுரனின் படையில் இருந்த கால்கேயா பிரிவினர் தப்பி ஓடி கடலுக்குள் ஒளிந்து கொண்டார்கள். அவர்கள் நாள் முழுவதும் கடலுக்குள் மறைந்து வாழ்ந்திருந்தபடி இருந்து இரவு நேரத்தில் வெளியில் வந்து சாது, சந்யாசிகள், ரிஷி மற்றும் முனிவர்களின் தவங்களைக் கலைத்தும் மக்களை கொடுமைப்படுத்தியும் வந்தார்கள். அவர்களை எதிர்த்து எவராலும் வெற்றி பெற முடியாத நிலையில் சாது, சந்யாசிகள், ரிஷி மற்றும் தேவர்கள் விஷ்ணு பகவானிடம் சென்று தங்களை அந்த அசுரர் கூட்டத்தின் தொல்லைகளில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிய விஷ்ணு பகவான் துர்கா தேவியை பூமியிலே சென்று காத்யானி எனும் ரிஷியின் மகளாக பிறக்குமாறும், அந்த மாற்று உருவில் அசுரர்களையும் அரக்கர்களையும் அழிக்குமாறு கூறினார். துர்கா தேவியும் பூமிக்கு சென்று காத்தயானி எனும் பெயரில் காத்யானி முனிவருக்கு மகளாகப் பிறந்தாள். விரைவில் வளர்ந்ததும் பல்வேறு அசுரர்களையும் அரக்கர்களையும் யுத்தம் செய்து அழித்தாள். அவளுடன் நேரடியாக சண்டையிட்டு வெல்ல முடியாமல் போன கால்கேயா அசுரர்கள் வஞ்சத்தினால் அவளை வீழ்த்தி வெற்றி பெற முடிவு செய்தார்கள். அதற்காக அவர்கள் தமது சக பிரிவை சேர்ந்த ஜ்வராசுரன் எனும் அசுரனின் உதவியை நாடினார்கள்.

கால்கேயாவிற்கு உதவி செய்வதற்காக ஜ்வராசுரன் தன்னுடைய சக்தியை பிரயோகித்து உலகெங்கும் தீராத நோயான சின்ன அம்மை, பெரிய அம்மை மற்றும் காலரா போன்றவற்றை பரப்ப பல மக்கள் மடிந்தார்கள். ஷீதல் மாதாவும் தன்னுடைய சக்தியை பிரயோகித்து சின்ன அம்மை, பெரிய அம்மை மற்றும் காலரா போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டு இருந்த மக்களை இறப்பில் இருந்து காப்பாற்றினாள். அதனால் ஆத்திரம் அடைந்த ஜ்வராசுரன் மேலும் பல இடங்களில் அந்த நோயைப் பரப்பத் துவங்க அவனை உடனடியாக அழிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த ஷீதல் மாதா பைரவ தேவரின் உதவியை நாடினாள்.

அசுரன் என்றாலும் ஜ்வராசுரன் பல அரிய வரங்களை பெற்று இருந்தவன். அவனை கருவில் இருந்து வெளிவராத சின்ன ஆண் குழந்தையால் மட்டுமே அழிக்க முடியும் என்பது விதியாக இருந்ததினால் ஷீதல் மாதா பகவான் பைரவரை அதற்கேற்ற உரு எடுத்து வந்து அவனை அழிக்குமாறு கூறினாள். பகவான் பைரவரும் தன்னை படுக் (சிறு பையன்) பைரவராக உருவாக்கிக் கொண்டு பூமிக்கு சென்று ஜ்வராசுரனுடன் யுத்தம் செய்யலானார். யுத்தத்தின் நடுவில் அவனை ஏமாற்ற தான் தோற்றுப் போய் இறந்து விழுந்ததை போல பூமியில் விழுந்தார். ஆகவே இறந்து கிடைத்தவரை எடுத்துக் பார்க்க அவர் அருகில் சென்றதும் பகவான் படுக் பைரவர் திடீரென மாயமாகி புழுதியில் மறைந்தார்.  இறந்து கிடந்தவர் எங்கு மாயமாகி விட்டார் என திடுக்கித்து நின்ற ஜ்வராசுரன் முன்பாக மீண்டும் பகவான் படுக் பைரவர் பயங்கரமான தோற்றத்தில் காட்சி தந்தார். கன்னம் கரிய நிறம், முகத்தில் மூன்று கண்கள், உடலில் நான்கு கைகள், அந்த நான்கு கைகளிலும் திரிசூலம், வாள், கோடாலி மற்றும் துண்டிக்கப்பட்ட ஒரு அசுரனின் தலை என இருக்க கழுத்தில் மனித ஓடுகள் கோர்த்த மாலை தொங்கியது.

ஜ்வராசுரன் பார்வதி தேவியின் பக்தன் என்பதினால் பகவான் படுக் பைரவர் அவனை உடனடியாக ஷீதல் மாதாவிடம் சரணடைந்து விடுமாறும், மற்றவர்களை துன்புறுத்தமாட்டேன் என்ற உறுதி மொழி தருமாறும் கூறினார். ஆனாலும் அந்த அசுரன் அந்த கட்டளையை ஏற்க மறுத்ததினால் பகவான் படுக் பைரவர்  திரிசூலத்தை எய்து அவனைக் கொன்றார். இப்படியாக அந்த அசுரனின் மரணம் நிகழ அதற்கு காரணமான காத்யாயனி எனும் பெண் பார்வதி தேவியின் அவதாரமான ஷீதல் மாதா என்பவரே என்று தெரியாத மக்கள் அவளுக்கு நன்றி கூறினார்கள். ஆகவே இனியும் தாமதிக்கலாகாது எனக் கருதிய காத்யாயனி அவர்கள் முன் தன்னுடைய சுய ரூபத்தை வெளிப்படுத்தி இனி தன்னை யார் சிரத்தையுடன் வணங்கித் துதிப்பார்களோ அவர்களுக்கு ஏற்படும் நோய் நொடிகளை விலக்குவதுடன் அவர்களை வாழ்வின் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுவேன் என உறுதி அளித்தாள். ஷீதல் மாதாவின் உண்மை அவதாரத்தை உணர்ந்த பின் மக்கள் ஷீதல் மாதாவின் சிலைகளை பல இடங்களிலும் நிறுவி பஞ்ச காலத்தில் மழை பொழிவிக்கவும், நோய்களை விலக்குமாறும் வேண்டிக் கொண்டு அவளை வழிபடலானார்கள்.

 

 

ஷீதல் மாதாவின் ஆலயம் எழுந்த கதை

ஷீதல் மாதாவிற்கு ஒரு சிறப்பான ஆலயம் ஹரியானா மாநிலத்தின் குர்கான் கிராமத்தில் உள்ளது. இந்த இடத்தில்தான் மஹாபாரத ஹீரோவான துரோணாச்சார்யா வசித்து வந்ததாக கிராமியக் கதை உள்ளது. அவர் அங்கு தனது மனைவி க்ருபை என்பவருடன் வசித்து வந்தாராம். பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருடம்தோறும் இந்த ஆலயத்துக்கு வருகை தருகின்றார்கள். அம்மனின் அருளை வேண்டிக் கொண்டு தமது குழந்தைகளின் முதல் முடி இறக்கு விழாவை இங்கு கொண்டாடுகின்றார்கள் .

இந்த ஆலயம் குறித்த கதை சுவையானது. ஒரு காலத்தில் காடாக இருந்த இந்த பகுதியில் ஸ்ராவண் எனும் ரிஷியும் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகள்செய்யும் சேஷ்டைகளினால்தனது தவம் கலைவதைக் கண்ட ரிஷி ஒருநாள் கோபத்தில் அந்த குழந்தைகளை காட்டுக்குள் சென்று விட்டு விட்டு வந்தார். குழந்தைகள் அங்கும் இங்கும் இடம் தெரியாமல் அலைந்தபோது அந்தப் பகுதியில் வேட்டை ஆடிக் கொண்டு இருந்த ஹஸ்தினாபுரத்தை சேர்ந்த மன்னன் ஷாந்தனு அவர்களைக் கண்டார். அவர்கள் ரிஷியின் குழந்தைகளாக இருக்கும் என நினைத்தவர் தனது அரண்மனைக்கு அவர்களை அழைத்துச் சென்று வளர்த்து வரலானார்.

மன்னன் ஷாந்தனு யார் என்றால் பிதாமகன் எனப்படும் பீஷ்மரின் தந்தை ஆவார். தமது குழந்தைகளைக் காணாமல் காட்டில் சென்று தேடிய ஸ்ராவண் ரிஷி அவர்களை மன்னன் அழைத்துச் சென்று விட்ட விவரத்தைக் கேட்டு அறிந்த பின்னர் அவர்களை அழைத்து வர அரண்மனைக்கு சென்றார். மன்னனும் அவரை வரவேற்று அந்தக் குழந்தைகளில் ஒன்றான க்ருபீ என்பவளை பாரதிவாஜா மஹரிஷியின் மகனான துரோணாச்சாரியாருக்கு மணம் செய்யலாமே என்று யோஜனைக் கூற, அதை அந்த ரிஷியும் ஏற்றுக் கொள்ள, க்ருபீ மற்றும் துரோணாச்சார்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. க்ருபீ யார் என்றால் அவள் பார்வதி தேவியின் ஒரு அவதாரமாக சில கடமைகளை செய்து முடிக்க பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தவள். தக்க நேரத்தில் அவள் அம்மை, காலரா போன்ற கொடிய நோய்களை தீர்ப்பவளாகவும், பஞ்ச காலத்தில் மழை பொழிவிப்பவளாகவும் இருக்கும் தெய்வமான ஷீதல் மாதாவாக தனது சுய ரூபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது விதியாக இருந்தது. ஆகவே அந்த வேளை வரவில்லை என்பதினால் அவள் கடவுளின் அவதாரம் என்பது அவளது தந்தையையும் சேர்த்து எவருக்கும் தெரியாது.

க்ருபீ துரோணாச்சார்யாவை மணந்து கொண்ட நேரத்தில் துரோணாச்சார்யா பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு அதே காட்டுப் பகுதியில் யுத்தப் பயிற்சி அளித்து வந்தார். ஆகவே க்ருபீயும் அங்கு வசித்து வந்தாள். அவள் அங்கிருந்தபோது அம்மை வந்து அவதிப்பட்டுக் கொண்டு இருந்த குழந்தைகளை பாதுகாத்து வைத்தியம் செய்து வந்தாள். அதிசயமாக அவளது கைகளால் அவள் அந்த நோய் வந்த குழந்தைகளை தடவினால் அவர்கள் குணம் அடைந்தார்கள் என்பதினால் அவளுக்கு எதோ சக்தி உள்ளது என்பதாக நம்பிய மக்கள் பல இடங்களிலும் இருந்து அங்கு வந்துஅவளிடம் நிவாரணம் பெற்றுச் சென்றார்கள். அவளை அன்புடன் மாதா என அழைத்தார்கள். ஆனாலும் யாருக்குமே அவள் கடவுளின் அவதாரம் என்பது தெரியாது. காலம் ஓடியது. துரோணாச்சார்யா மறைந்த பின்னர் க்ருபீயும் யார் கண்களிலும் படாமல் மறைந்து விட்டாள் . அவள் எங்கு சென்று விட்டாள் என எவருக்கும் தெரியவில்லை என்பதினால் கிராமத்தினர் அவள் வசித்து வந்த இடத்தில் இந்தக் கல்லில் அமர்ந்து இருப்பாளோ அந்தக் கல்லையே க்ருபீ மாதா என வணங்கினார்கள். அங்கு வந்து அந்தக் கல்லையே க்ருபீ என வணங்கித் துதித்தவர்களின் துயரங்களும் மறையத் துவங்கியதை உணர்ந்தார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு பதார்த்த மற்றும் சிங்ஹா எனும் சகோதரர்கள் வசித்து வந்தார்கள். இருவரும் மிக்க ஒற்றுமையாக இருந்தார்கள். அவர்கள் க்ருபீ வாழ்ந்து வந்திருந்த அதே இடத்தில் இருந்த விளை நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்கள். அவர்களிடம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருந்தன. சிங்ஹா தமது ஒய்வு நேரத்தில் பஜனையும் பூஜையும் செய்து வந்தார். பின்னர் ஒருமுறை அந்த சகோதரர்கள் இடையே சச்சரவு ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள். நிலத்தையும் பங்கு போட்டுக் கொண்டார்கள். அதில் க்ருபீ வாழ்ந்து வந்த நிலப்பகுதி சிங்ஹாவிற்கு கிடைத்தது. அதில்தான் தற்போது உள்ள ஆலயமும் உள்ளது.

சிங்ஹா தொடர்ந்து தனது ஒய்வு நேரத்தில் பூஜை, பஜனை என செய்து வந்தார். ஒருநாள் ஷீதல் மாதா தேவி அவர் கனவில் வந்து அவருக்கு சில விஷேச சக்திகளை தந்துள்ளதாகவும், அவர் நோய்வாய்ப்பட்டு உள்ளவர் எவரையும் தான் அமர்ந்து இருந்த இடத்தில் உள்ள கல் மீது அமர்ந்து கொண்டு அவரது கையால் தொட்டால் அவர்கள் வியாதி குணமாகும் என்றும் கூறிவிட்டு மறைந்து போனாள். அதன் பின் நோய்வாய்பட்டு உள்ளவர் எவர் வந்தாலும் அவர்களை சிங்ஹா ஒருமுறை தொட்டால் அவர்கள் வியாதி மறையத் துவங்கியது.

பல வருடங்கள் கடந்தன. ஒருநாள் சிங்ஹா தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தபோது பூமிக்குள் மறைந்து கிடந்த ஷீதல் மாதாவின் சிலை கிடந்ததைக் கண்டு வெளியில் எடுத்தார். அந்த தேவியின் முகம் தனது கனவில் தோன்றிய அதே தேவியின் உருவத்தில் இருந்ததினால் அதை சிலைக்கு கிடைத்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து தற்காலிக வழிபாட்டுத் தலம் அமைத்தார். பிற்காலத்தில் தற்போது ஆலயம் உள்ள அதே இடத்தில் ஷீதல் மாதாவின் ஆலயம் பெரிய அளவில் கட்டப்பட்டது.

இதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பாக முகலாய மன்னர்கள் இந்தியாவில் படை எடுத்தபோது அப்போது க்ருபீ மாதாவின் சிறிய வழிபாட்டுத் தலமாக இருந்த இடம் நாசப்படுத்தப்பட்டு நகை மற்றும் பிற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையடிக்க வந்த மன்னன் அந்த சிறிய வழிபாட்டுத் தலத்தில் இருந்த சிலையை யும் எடுத்து அருகில் இருந்த குளத்தில் வீசி எறிந்தான். அதுவே பிற்காலத்தில் சிங்ஹாவினால் கண்டெடுக்கப்பட்ட, க்ருபீ மாதா உருவில் இருந்த ஷீதல் மாதாவின் சிலை என்பதாக கிராமியக் கதை கூறப்படுகின்றது.

தற்போது உள்ள ஆலயம் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிறிய வழிபாட்டுத் தலம் அங்கு இருந்தது என்று நம்புகின்றார்கள் இந்த ஆலயத்தின் மேன்மைக் குறித்து கூறப்படுவது என்ன என்றால் ஒருமுறை அந்தப் பகுதியில் இருந்த மன்னனின் குழந்தை பக்கவாதத்தினால் பீடிக்கப்பட்டு இருந்தபோது அந்தக் குழந்தையை மண்ணினால் மூடி(உடலை மண்ணால் சேறுபோல பூசி வைப்பது) இந்த ஆலயத்தில் பத்து நாட்கள் வைத்து இருந்ததாகவும் அதன் பின்னர் அந்த குழந்தை பூரணமாக குணம் அடைந்து விட்டதாகவும் கூறுகின்றார்கள். ஆனால் இதற்கான வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை.

இந்த ஆலயத்தின் மேன்மைக் குறித்து இன்னொரு கதையும் உள்ளது. பாரூக் எனப்பட்ட அந்த நாட்டில் (தற்போது ஆலயம் உள்ள பகுதியில் இருந்த ஊர்) ஒரு ஏழை டைலர் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு மகள் உண்டு, அவள் மிகவும் அழகாக இருந்ததைக் கேள்விப்பட்ட அடுத்த நாட்டை சேர்ந்த மன்னன் அவளை தனக்கு மணம் முடிக்குமாறு கேட்டார். ஆனால் அதை டைலர் மறுத்து விட அவளை பலவந்தமாக தூக்கிக்கொண்டு செல்ல அந்த மன்னன் முயன்றபோது பாரூக் நாட்டின் மன்னனிடம் சரண் அடைந்த டைலருக்கு உதவ பாரூக் நாட்டு மன்னன் முன்வந்ததும் இல்லாமல் அந்த மன்னனின் சேனையை தடுத்து நிறுத்தக் கிளம்பிச் சென்றபோது தற்போது இந்த ஆலயம் உள்ள இடத்தை அடைந்ததும் அவனது குதிரை மேலும் மேலே செல்ல மறுத்தது. சாதாரணமாக யுத்தத்துக்கு செல்லும் முன்னர் அந்த நாட்டு மன்னர்கள் துர்கை தேவியை வணங்கித் துதித்தப் பின்னர்தான் கிளம்பிச் செல்வார்கள். ஆனால் அன்று அந்த மன்னன் அதை செய்யத் தவறி விட்டதினால் அவனது குதிரை முரண்டு பிடித்தது என்பதை உடனடியாக உணர்ந்து கொண்ட மன்னன் அங்கேயே இறங்கி துர்கா தேவியை பிராத்தித்த பின்னர் அந்த மன்னனை துரத்தி அடித்து விட்டு தான் திரும்பி வந்தப் பின் அங்கேயே ஆலயம் அமைப்பதாக சத்தியம் செய்துவிட்டு கிளம்பினார். யுத்தத்தில் அந்த முகலாய மன்னனை துரத்தி அடித்து விட்டு வெற்றி பெற்று திரும்பியதும் அங்கேயே ஆலயம் அமைத்தாராம். அதுவே தற்போதைய ஆலயம் என்றும் கூறுகின்றார்கள்.