-9-

160) தற்கால கணினியைப் போலவே, பிரும்மாவிடமும் சூப்பர் (மிக நேர்த்தியான) கம்யூட்டர் இருந்திருக்க வேண்டும் என்பதினால்தான் பரந்து விரிந்துள்ள இந்த பிரபஞ்சத்தில் எந்தெந்த இடத்தில் என்னென்ன தெய்வம், குலதெய்வம், மற்றும் தேவதைகள் அவதரிக்க வேண்டும் என்பதையும், அவர்கள் எந்தெந்த குடும்ப மக்களை நல் வழிப்படுத்தி பாதுகாத்து வர வேண்டும் என்பதையும் மிக நுணுக்கமாக பதிவு செய்து வைத்துள்ளார். எந்த தெய்வங்கள் அவரவர்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்த இடங்களில் அவதரித்து அவர்களுக்கு தரப்பட்டுள்ள பணிகளை செய்யாமல் பிற இடங்களில் ஊடுருவ முயற்சிக்குமோ அவர்களுடைய தெய்வ சக்திகள் பறிக்கப்பட்டன.
161) அனைத்து தெய்வங்களும், குலதெய்வங்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே சென்று அவதரிக்க வேண்டும் என்பது நியதி. அதனால் எந்த இடத்தில் அவர்கள் அவதரிக்க வேண்டுமோ அவற்றைக் குறித்து குழப்பமடையக் கூடாது என்பதற்காக பிரம்மா இந்த விதிமுறையை நிறுவி உள்ளார். தெய்வங்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பில் சென்று தமது உருவில் அவதரித்தப் பின்னர் அந்த பூமியில் உள்ள ஆலயம் அல்லது வேறு எந்த இடத்தில் தாம் குடிகொள்ள வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்த பின் அங்கு தமது தெய்வ சக்திகளை இறக்கி வைத்துவிட்டு , அந்த ஊரில் உள்ள யாராவது கனவில் தோன்றியோ அல்லது சாமியாடிகள் மூலமோ தாம் இன்ன இடத்தில் இருப்பதாக தெரிவிப்பார்கள். அவர்களது கட்டளைகளுக்கு ஏற்ப உள்ளூர் ஜனங்களும் அந்த தெய்வம் கனவில் கூறிய அதே இடங்களில் அந்த தெய்வத்திற்கு ஆலயம் எழுப்பி அவர்களை அங்கேயே வழிபடுவார்கள்.
162) பிரம்மாவின் தெளிவான நியதியின்படி, தெய்வங்கள் எங்கு வெளிப்படுகிறார்களோ, அந்த இடத்தை புனிதமாகி, தமது தெய்வ சக்திகள் சிலவற்றை அங்கு இறக்கி வைக்க வேண்டும் . அப்போதுதான் அங்கு அவர்களின் வழிபாட்டு தலம் அல்லது ஆலயம் எழும்பும். அந்த இடத்தில் சென்று பிரார்த்தனை செய்பவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாத தெய்வீக ஆற்றல் மிக்க அங்குள்ள தெய்வங்களின் சக்திகள் அவர்களது உடலை சூழ்ந்து கொண்டு ஒரு பாதுகாப்பு கவசத்தை போல அவர்களை பாதுகாக்கும். மேலும் அவர்களது வாழ்க்கையில் அந்த தெய்வம் அவர்களோடு இருந்து கொண்டு அவர்களை பாதுகாத்து வழி நடத்தி வருவார்கள். தெய்வங்கள் தாம் எங்கு வெளிப்பட வேண்டுமோ அந்த இடங்களில் இருந்த கற்கள் அல்லது பாறைகளின் உள்ளுக்குள் சென்று அதை தன்னுடைய வடிவமாக மாற்றிய பின்னர், அதை பூமிக்குள் மறைத்து வைத்துவிட்டு அதற்குள் தமது தெய்வீக சக்தியையும் செலுத்திய பின்னர் கண்ணுக்குத் தெரியாத வடிவத்தில் அங்கேயே தங்கி இருந்தார்கள். உள்ளூர்வாசிகள் தமக்கு கனவுகளில் தோன்றிய அதே இடங்களுக்குச் சென்று பூமிக்குள் புதைந்து இருந்த அந்த சிலைகளை தோண்டி எடுத்து அதே இடத்தில் சிறிய ஆலயம் அல்லது வழிபாட்டு எழுப்பி அதற்குள் அந்த சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். அப்படி ஸ்தாபிக்கப்பட்ட ஆலயங்களுக்கு தவறாமல் சென்று அங்கு பிரதிக்ஷை செய்யப்பட்டு இருந்த தெய்வத்தை வழிபட்டவர்கள் காலபோக்கில் அந்த தெய்வத்தையே தமது குலதெய்வமாக ஏற்றுக் கொண்டார்கள்.
163) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முதலில் வெளிப்பட்ட தெய்வம் மீண்டும் இன்னொரு இடத்தில் சென்று வெளிப்பட முடியுமா? இந்த கேள்வி எழக் காரணம் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட உருவத்தில் தோன்றிய அதே தெய்வங்களின் சிலைகள் பல இடங்களில் உள்ள ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதினால் பண்டிதர்கள், அந்த தெய்வத்தை எந்த ஆலயத்தில் சென்று ஆராதித்தாலும் தவறில்லை என்பார்கள். ஆனால் அந்த கூற்று குலதெய்வத்தை வணங்குவதற்கும், குறிப்பிட்ட ஆலயங்களில் குறிப்பிட்ட முறையில் விசேஷ மந்திரங்களுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள தெய்வங்களை வணங்குபவர்களுக்கும் பொருந்தாது. பொதுவாக வெவ்வேறு இடங்களில் பரந்து விரிந்து கிடக்கும் நிலங்களில் காணப்படும் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள தெய்வத்திற்கு பூஜை செய்வதையோ அல்லது வழிபடுவதையோ பிரும்ம நியதி தடை செய்யவில்லை. அப்படி செய்தால் நிச்சயமாக அந்தந்த தெய்வங்களின் அனுகிரகம் பக்தர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஆனால் அதே சமயத்தில் மூல ஆலயத்தில் அதாவது எங்கு அந்த தெய்வம் முதலில் தோன்றி பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்ததோ அந்த ஆலயத்தில் சென்று அந்த தெய்வத்தை வணங்கித் துதிக்கும்போது கிடைக்கும் பலன்கள் பிற ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள அதே தெய்வத்தை சென்று வணங்கும்போது கிடைக்காது. அங்கு வெளிப்படும் தெய்வீகக் கதிர்களின் தன்மைகள் மூல ஆலயத்தில் வெளிப்படும் தெய்வீகக் கதிர்களின் அளவில் இருக்காது.
164) இதை கீழே தரப்பட்ட உள்ள உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம் . நிலம் 1(ஒன்று) என்ற இடத்தில் ‘x’ என்ற ஒரு தெய்வம் அவதரித்து தனது சிலையை அங்கேயே + பிரதிஷ்டை செய்யுமாறு ஆணையிட, அங்கு நிறுவப்பட்ட ஆலயத்தில் அந்த தெய்வம் அமர்ந்துள்ளார் என நம்புவோம். அதுவே அந்த தெய்வத்தின் மூல ஆலயமாகி விடும். அங்கு அந்த தெய்வத்தை பல குடும்பங்கள் தமது குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட்டு வந்துள்ளார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். சில வருடங்களில் அதே ‘x’ தெய்வம் வெவ்வேறு இடங்களில் உள்ள ஆலயங்களில் முற்றிலும் மூல விக்கிரஹ உருவத்தைப் போலவே செய்யப்பட்டு, முறைப்படியான வேத சடங்குகள் மற்றும் பிரதிஷ்டை செய்வதற்கான சடங்குகளைச் செய்த பின் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்துள்ளன என்று நம்புவோம். எழும் கேள்வி என்னவென்றால், ஒரு கால கட்டத்தில் அதாவது அந்த ‘X’ தெய்வத்தை குலதெய்வமாக கொண்டிருந்த சில குடும்பங்களுக்கு வேறு ஊர்களில் குடியமற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அதனாலும் மற்றும் வேறு சில காரணங்களினாலும் அந்த மூல ஆலயத்திற்கு அவர்களால் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது என்றும் நினைப்போம். அந்த தவிர்க்க முடியாத நிலையில் அந்த குடும்பங்கள் குடிபெயர்ந்து சென்று விட்ட இடங்களில் இருந்த ஆலயங்களில், அதே ‘x’ தெய்வம், அதே வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது எனும்போது, மூல ஆலயத்துக்கு செல்ல முடியாதவர்கள் தாம் குடியுள்ள இடங்களில் உள்ள ஆலயத்தில் அதே தெய்வத்தைவழிபட்டார்கள் எனும் சூழ்நிலைகளில் அவர்களது பிரார்த்தனைகளை அவர்கள் வணங்கி வந்திருந்த குலதெய்வம் ஏற்குமா? அவர்களுக்கு அதே விதத்திலான அருளாசி கிடைக்குமா?
165) இதில் இரண்டு முக்கியமான உண்மைகள் அடங்கியுள்ளன. ஒன்று தெய்வங்கள் வெளிப்படுத்தும் தெய்வீக சக்திக் கதிர்களினால் கிடைக்கும் பலன்கள். மற்றொன்று தெய்வம் ஒருவரை வழிநடத்தி பாதுகாக்கும் நிலை. தொலை தூரத்தில் உள்ளவர்களால் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்போதும் மற்றும் பிற காரணங்களால், பக்தர்கள் தமது குலதெய்வத்தை வழிபட அதன் மூல ஆலயத்திற்கு செல்ல முடியாத போதும் அதே தெய்வத்தை அருகில் உள்ள ஆலயத்தில் வழிபட்டால் குலதெய்வங்கள் அவர்களை கைவிட்டு விடாது. அவர்களின் நிலையைப் புரிந்துகொண்டு அவர்களை கைவிடாமல், அவர்களது வம்சத்தினரை அவர்களது குலதெய்வங்கள் தொடர்ந்து வழி நடத்தி பாதுகாத்து வரும். ஆனால் அவர்களுடைய குலதெய்வ மூல ஆலயத்துக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்யும்போது அங்கு அவர்கள் மனமும் உடலும் பெறும் தெய்வ சக்தி பலன்களின் அளவு நிச்சயமாக பிற ஆலயங்களில் அதே குலதெய்வங்களை வணங்கும்போது கிடைக்கும் பலன்களை விட மிகவும் அதிகமானதாகவே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதன் காரணம் ‘x’ தெய்வத்தின் அனைத்து தெய்வீக சக்திகளும் அவர்கள் முதலில் வெளிப்பட்ட மூல ஆலயத்தில் மட்டுமே குடி கொண்டு இருப்பதினால் அதன் தெய்வீக அலைகளின் வீரியம் அந்த ஆலயத்தில் அனைத்து பகுதியிலும் மிதந்து கொண்டிருக்கும். அதன் விளைவாக மூல ஆலயத்தில் சென்று வழிபடும்போது தெய்வீக ஆற்றல் மிக்க சக்தி அலைகள் பிரார்த்தனை செய்பவர்களின் உடலில் ஊடுருவி அவர்களுக்கு அதிக அளவிலான பலன்களை தருகின்றன. பிற ஆலயங்களில் அந்த தெய்வம் வெளிப்படுத்தும் தெய்வீக சக்திகளின் ஆற்றல் மூல ஆலயத்தில் வெளிப்படும் தெய்வீக சக்திகளை விட வெகு குறைவாகவே இருக்கும் என்பதினால் குறிப்பிட்ட இடத்தில் சென்று பிரார்த்தனை செய்யும் போது கிடைக்கும் பலன்கள் நிச்சயமாக மற்ற ஆலயங்களில் சென்று வழிபடும்போது கிடைக்காது.
166) சில சமயங்களில் பிற தெய்வங்கள் மற்றும் குடும்ப தெய்வங்கள் தமது தவக்காலம் பூமியில் முடிந்த பின் பாறைகள் அல்லது பிற ஜடப் பொருட்களுக்குள் ஊடுருவுகின்றன (ஒவ்வொருவருக்கும் கண்ணுக்குத் தெரியாத உயிர்கள் இருந்தாலும் வெளித் தோற்றத்தில் ஜடத் தன்மை கொண்டவை). மேலும் சில தெய்வங்கள் எறும்புப் புற்றுக்களிலும் சென்று அமர்ந்து கொண்டு தவம் செய்துள்ளன. தெய்வங்கள் பாறைகள் அல்லது ஜடப் பொருட்களுக்குள் நுழைந்தவுடன் அவற்றில் அந்த தெய்வங்களின் தெய்வீக ஆற்றல்கள் செலுத்தப்படும்போது அவை அனைத்துமே அவர்கள் விரும்பும் தோற்றத்துடன் வடிவம் பெற்றுவிடும், மற்றும் புனிதமாகிவிடும். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அந்தந்த தெய்வங்களின் கட்டளையிட்டபடி மறைந்திருந்த அந்த சிலைகள் தோண்டியெடுக்கப்பட்டடு அங்கு அமையும் ஆலய சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டன. அதனால்தான் மூல விக்கிரகங்கள் நிறுவப்பட்டுள்ள அந்த ஆலயங்களில் சக்தி வாய்ந்த தெய்வீக அலைகள் மிதந்து கொண்டிருப்பதை அங்கு செல்பவர்களால் உணர முடியும். தெய்வங்களிடம் நேரடியாக வெளியிடப்படும் சக்தி வாய்ந்த தெய்வீக ஆற்றல் அலைகள் அந்த தெய்வத்தைப் போன்ற தெய்வீக சிலைகள் நிறுவப்பட்ட மற்ற ஆலயங்களில் கிடைக்காது.


167) அதை போலவேதான் சாபம் பெற்ற தெய்வங்கள் ஏதோ ஒரு வடிவில் எறும்புப் புற்றுக்களில் மறைந்திருந்து தவத்தில் இருக்கும்போது அவர்கள் உடலில் இருந்து வெளிப்பட்ட தெய்வ சக்திகளினால் அந்த புற்றும் புனிதப்படுத்தப்பட்டு விடும். பிற்காலத்தில் அதே எறும்பு புற்றை உள்ளடக்கி அந்த இடங்களில் ஆலயங்கள் எழுந்தபோது, அந்த தெய்வங்களின் சக்திக் கதிர்கள் ஆலய வளாகத்திற்குள் நிறம்பி அலைபாயும்போது அங்கு செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கவசத்தை தரும். இப்படியாகவே தெய்வங்களிடம் இருந்து நேரடியாக வெளி வரும் சக்தி வாய்ந்த தெய்வ சக்திக் கதிர்களின் தன்மை பிற ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள அதே தெய்வ சிலைகள் மூலம் வெளிப்படாது.
168) சில தெய்வங்கள் பூமியில் தவம் முடித்து தேவலோகத்துக்கு திரும்பிச் செல்லும் வரை தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துவதில்லை. தவம் முடிந்ததும் தமது மானிட உடலை பூமிக்கு அடியில் புதைத்து விட்டோ அல்லது நதிகளில் மூழ்க வைத்த பின்னரோ சாபம் விலகி மீண்டும் தேவலோகத்திற்கு திரும்பிச் சென்றன. பல ஆண்டுகளாக அப்படியே கிடந்த அந்த உடல்கள் இயற்கையின் செயல்களால் பாறைகள் அல்லது கற்களாக மாறின. அதன் பின்னரே அந்தந்த தெய்வங்கள் தாம் புதைந்து இருந்த இடங்களை ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு வெளிப்படுத்தியபோது அந்த சிலைகள் பக்தர்களால் வெளியில் எடுக்கப்பட்டு ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இப்படியாக வெளிப்பட்ட பல தெய்வங்களும் மெல்ல மெல்ல குலதெய்வங்கள் ஆயினர்.
169) பூமியில் புதைந்து இருந்த தெய்வச் சிலைகளில் சில மட்டுமே ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மற்றும் சில தெய்வங்களின் சிலைகள் கிராமப்புறங்களில் இருந்த திறந்தவெளி மற்றும் மரங்களுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்தன. அந்த தெய்வங்கள் பல நூற்றாண்டுகளாக பல குடும்பத்தினரால் வழிபடப்பட்டு வந்துள்ளார்கள். காலப்போக்கில் அந்த கிராமங்கள் நகரங்களாக மாறியபோது அந்த தெய்வங்களின் தெய்வ சக்திகளைக் கேள்விப்பட்ட மன்னர்கள் சிலர் தமது ஆட்சியின் போது அந்த சிறிய கிராம ஆலயங்கள் சிலவற்றை பெரிய ஆலயங்களாக மாற்றி அமைத்தார்கள். பண்டைய காலங்களில் பூமியில் கிடைத்த தெய்வங்களை பிரதிஷ்டை செய்த சிறிய கிராம ஆலயங்களில் இருந்த தெய்வங்களை சில குடும்பத்தினர் குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட்டார்கள். இதனால்தான் பெரும்பாலான குடும்பங்கள் குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபடப்பட்டு வந்திருந்த தெய்வங்களின் ஆலயங்கள் இன்றும் தொலைதூர கிராமங்களிலும், வனப்பகுதிகள், மலைகள், வயல்வெளிகள் நிறைந்த இடங்களில், எளிதில் செல்ல முடியாத இடங்களில் உள்ளன.
170) ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டன என்பது உறுதியாக தெரியாத நிலையில் உள்ளன. வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, வேத காலத்தில் ஆலயங்களோ வழிபாட்டு தலங்களோ காணப்படவில்லை. ஆனால் AD 1500 ஆண்டு முதல் AD 1600 வரையிலான காலகட்டத்தில் முதன் முதலில் ஆப்கானிஸ்தானில் சில ஆலயங்கள் இருந்ததை கண்டு பிடித்தார்களாம். அதை போலவே கம்போடியா, தாய்லாந்து, ஈரான், பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற ஆசியாவின் பல பகுதிகளிலும் ஆலயங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டாலும், ஆச்சரியப்படும் விதமாக, அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் அவற்றைப் போன்ற ஆலயங்கள் காணப்படவில்லை அல்லது சிலை வழிபாடு இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், வேத கால பிற்பகுதியில், நகரங்களில் இருந்து மிகத் தொலைதூரத்தில் உள்ளடக்கி இருந்த இருந்த கிராம ஆலயங்களில் சமிஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டு சிலை வழிபாடு நடைபெற்று வந்ததாக கூறுகின்றார்கள். அப்படி வழிபடப்பட்ட தெய்வங்களை கிராம தேவதைகள் அல்லது காவல் தெய்வங்கள் எனக் கூறினார்கள். அத்தகைய வழிபாட்டுத் தலங்களில் வழிபடப்பட்டு வந்திருந்த தெய்வங்கள் பெரும்பாலானவை மேல் கூரையின்றி மூன்று பக்கமும் சேற்றால் கட்டப்பட்ட சுவர்களுடன் காணப்பட்டன அல்லது ஆங்காங்கே இருந்த சிறிய குகை போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன .
171) குலதெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த ஆலயங்களில் மிதந்து கொண்டு இருக்கும் தெய்வங்களின் தெய்வீக சக்திக் கதிர்கள் பக்தர்களின் உடல் மீது ஒரு கவசம் போல சுற்றிக் கொண்டு விடும். அந்த பாதுகாப்பு கவசம் சில காலம் நீடிப்பதினால் (அந்த தற்காலிகப் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை) எதிர்மறை ஆற்றல்கள் சக்திகள் அவர்களது உடலில் சென்று ஊடுருவுவதைத் தடுக்கின்றன. அதனால்தான் அந்த காலத்தில் அப்படி ஒரு பாதுகாப்பு கவசத்தை பெற்றுக் கொள்ள மூதையோர்கள் அவர்களது வீட்டின் அருகில் இருந்திருந்த குலதெய்வ ஆலயத்திற்கு தினமும் சென்றார்கள். வெளியூரில் இருந்தால் வருடத்திற்கு ஒரு முறையாவது அந்த ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்வதை ஒரு நடைமுறையாகவே வைத்து இருந்தார்கள். அதை மற்றவர்களுக்கும் அறிவுறுத்தினார்கள். ஆலயத்திற்கு செல்லாத மற்ற பக்தர்களுக்கு அந்த தெய்வத்தின் பாதுகாப்பு கவசம் கிடைக்காது என்பது இதன் அர்த்தம் அல்ல. அவர்களுக்கும் அப்படிப்பட்ட பாதுகாப்பு கவசம் கிடைக்கும் என்றாலும் அந்த தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் அளவைவிட்டு குறைவான அளவிலேயே இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
172) ஒரு சிலருக்கு ஒரு ஐயம் உண்டாகலாம், ஒவ்வொரு குலதெய்வத்திற்கும் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் உள்ள நிலையில் ஒவ்வொருவரிடமும் நேரடியாக சென்று அவர்களை எப்படி பாதுகாத்து வர முடியும்? ஒவ்வொரு குலதெய்வமும் நேரடியாக எவரிடமும் சென்று அவர்களை வழிநடத்தி பாதுகாக்க முடியாது. அவர்கள் அதை கண்களுக்குத் தெரியாமல் தம்மிடம் உள்ள தமது கணங்களின் மூலம் செய்வார்கள். அந்த கணங்கள் என்பவை யார் ? ஒவ்வொரு குடும்பத்திலும் அடைந்து விட்டவர்களது ஆத்மாக்கள் பித்ரு லோகத்தில் வசித்து வரும். பித்தரு லோகத்தில் சென்றுவிட்ட அந்த தெய்வ கணங்களாக மாறிவிடும். ஒரு குடும்பத்தினர் குறிப்பிட்ட குலதெய்வத்திடம் சரண் அடைந்து விடும்போது அந்த குடும்பங்களை சேர்ந்த கணங்கள், அந்த குலதெய்வங்களினால் அழைக்கப்பட்டு, தமது சக்திகளை தந்து அந்த சக்திகளைக் கொண்ட தெய்வ கணங்களை தமது சார்ப்பில் அவர்களது குடும்பத்தினரை பாதுகாத்து வழிநடத்தி வரும். இப்படியாக குலதெய்வங்கள் மட்டும் அல்ல பிற தெய்வங்களும் ஒவ்வொரு குடும்பங்களின் பித்ரு கணங்கள் மூலமே தமது அருளாசிகளை தம்மை வேண்டித் துதிப்போர்க்கு தருகின்றன. அதன் காரணம் ஒரு குடும்பத்தின் பித்ருக்களால் மட்டுமே அந்தந்த குடும்பத்தினரை அடையாளம் காண முடியும் என்பதாகும்.
173) பொதுவான தத்துவம் என்ன என்றால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் அவர்களது குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபட்டுவிட்டு திரும்பினாலும் அவர்கள் உடல் கண்ணுக்குத் புலப்படாத குலதெய்வ பாதுகாப்புக் கவசத்தை அவர்களை அறியாமலேயே உள்வாங்கி கொண்டு வந்து பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் அவற்றை அறியாமலேயே கொடுப்பார்கள் . அந்த குடும்பத்தை சேர்ந்தவர் எத்தனை தூரத்தில் இருந்தாலும், அங்கெல்லாம் செல்லக் கூடிய சக்தி கொண்டவை அந்த தெய்வங்களின் கதிரலைகள். அதனால்தான் அந்த குடும்ப உறுப்பினர் கொண்டு வந்திருந்த பாதுகாப்பு கவச சக்தி அலைகள் அவர்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் எங்கிருந்தாலும் அவர்களை சென்றடையும். இதுதான் குலதெய்வ சக்தி ஆகும்.


174) குலதெய்வ ஆலயங்களுக்கு செல்லும் அந்த தெய்வ பக்தர்களுக்கு மட்டுமே அந்த தெய்வங்களின் அருளாசிகளால் ஆனா தெய்வீக அலை என்பது இல்லை. அங்கு செல்லும் பிற பக்தர்களுக்கும் அந்தந்த ஆலய தெய்வங்களின் தெய்வீக ஆசிகள் தெய்வீக கதிரலைகளாக கிடைக்கும், அவர்களுக்கு துணை புரியும். ஆனால் அவை அந்த தெய்வங்களை குலதெய்வமாக ஏற்றுள்ளவர்களுக்கு கிடைக்கும் குறைவானதாகவே இருக்கும்.
175) ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை தங்கள் குலதெய்வமாக வைத்திருந்து வழிபட்ட குடும்பம் எதோ ஒரு காரணத்திற்காக குலதெய்வ வழிபாட்டைப் புறக்கணிக்கத் துவங்கினால் அந்தச் செயல் தெய்வ குற்றமாக கருதப்படும். அப்படி குலதெய்வ வழிபாட்டை உதாசீனம் செய்த குடும்பத்தின் ஏழு தலைமுறைகளும் தெய்வ சாபத்தை பெறுவார்கள். அந்த சாபத்தை விலக்கிக் கொள்ள அடுத்தடுத்த தலைமுறையை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் பல சிறப்பு வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளை செய்து, குலதெய்வத்தின் கோபத்தை அடக்கி அதன் அருளுடன் சாபத்தை விலக்கிக் கொள்ள வேண்டி வரும்.
176) 90% க்கும் அதிகமான குலதெய்வங்கள் கிராமப்புறங்களில் காணப்படுகின்றன என்பதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. முன்பு கூறியது போல், அந்த தெய்வங்களின் தெய்வ சக்திகள் பிரதான தெய்வங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. அவர்களது பக்தர்களுக்கு நேரடியாக அருள் புரியும் அளவிலான சக்திகளைக் கொண்டவை. அது மட்டும் அல்ல அதே தெய்வங்கள் எந்த ஒருவருக்கு குலதெய்வம் இல்லையோ, எவர் ஒருவர் அந்த தெய்வத்தை தமது இஷ்ட தேவதையாக கொண்டு வழிபடுவார்களோ அவர்களது பிரார்த்தனைகளுக்கும் பதிலளிக்கும் விதத்திலான அதிகாரமும் பெற்றுள்ளன. ஆனால் அதே சமயத்தில் அப்படிப்பட்ட பக்தர்களுடைய பிரார்த்தனைகளுக்கு அருள் புரியும்போது தம்மை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபடும் குடும்பத்தினருக்கு எந்த வகையிலான பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் நியதி ஆகும்.
177) முதல் மூன்று யுகங்களில் வெளிப்பட்ட தெய்வங்களின் எண்ணிக்கை, கலிகாலத்தில் தோன்றிய தெய்வ எண்ணிக்கையை விட மிக குறைவாகவே உள்ளது. வேத சாஸ்திரங்கள், ராமாயணம் மற்றும் மகாபாரதம் மற்றும் இந்து மதத்தில் உள்ள பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட தற்போதைய கலியுகத்தில் காணப்படும் தெய்வங்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது .
178) இந்த உலகை செயல்படுத்த வைக்கும் முன்பாகவே பிரும்ம தேவர் ஒவ்வொரு நிலத்திற்குமான தன்மைகளையும், தாம் குலதெய்வங்கள் உட்பட என்னென்ன தெய்வங்களை படைக்க வேண்டும், அவர்கள் எங்கெங்கு தோன்ற வேண்டும் என்பவற்றையும் மிக நேர்த்தியாக கணக்கிட்டு வைத்திருக்கின்றார் என்றே தெரிகின்றது.
179) ஒரு இடத்தில் எத்தனை குலதெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் வெளிப்பட வேண்டும் என்பதற்கு விதிமுறை உள்ளதா? பிரும்மா தெய்வங்களை பூமிக்கு அனுப்பியபோது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு இத்தனை, இத்தனை குலதெய்வங்கள, கிராம தெய்வங்கள் மற்றும் காவல் தெய்வங்கள் தேவை என்பதை கணக்கிட்டே அவர்களை பூமிக்கு அனுப்பி அவதரிக்கச் செய்தார். ஆனால் அது குறித்து விரிவான விளக்கத்தை பண்டிதர்களால் தர முடியவில்லை. பொதுவாக ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் (கிராமத்திற்கும்) ஒன்று அல்லது இரண்டு கிராம தேவதைகள், ஒரு காவல் தெய்வம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு குலதெய்வங்கள் இருக்க வேண்டும் என்ற அளவிலேயே பிரும்மா கணக்கிட்டு அவர்களை அனுப்பி இருக்க வேண்டும் என்பதாக பொதுவாக நம்பப்படுகிறது. இதுகுறித்து பின்னர் விவரிக்கப்பட உள்ளது.
180) குலதெய்வ வரலாற்றில், மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், பிரதான தெய்வங்களான சிவபெருமான், விஷ்ணு மற்றும் பார்வதி தேவி போன்ற தெய்வங்கள் குலதெய்வமாக வழிபடபடவில்லை. ஆனால் காலப் போக்கில் அவர்களுடைய வெவ்வேறு துணை அவதார வடிவங்கள் வெளிப்பட்டு அந்த வடிவங்களில் தோன்றிய சில தெய்வங்களை குலதெய்வங்களாக வழிபடப்பட்டார்கள். அதற்கான காரணங்கள் என்ன என்பதைக் குறித்த தெளிவான செய்திகளும் இல்லை.
181) பிரதான தெய்வங்களான,சிவபெருமான் பார்வதி தேவி, விஷ்ணு பகவான் , மஹாலக்ஷ்மி பிரும்மதேவர், சரஸ்வதி போன்றவர்கள் நேரடியாக குலதெய்வங்களாக வணங்கப்படவில்லை. ஆனால் அவர்களின் நிழல் அவதாரங்கள் அல்லது நிழல் தெய்வங்கள் சில அந்த அந்தஸ்த்தைப் பெற்றன.
182) குலதெய்வங்கள் எவ்வாறு தமது பக்தர்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு அருள் புரிகிறார்கள்?. உதாரணமாக, பார்வதி தேவியிலிருந்து வெளிப்பட்ட காஞ்சி காமாக்ஷி தேவி சிலரது குலதெய்வம் என்பதாக எண்ணிக் கொள்வோம். அவர்கள் அவரை வம்சாவளியாக வழிபட்டு வருகிறார்கள். அந்த நிலையில் காஞ்சி காமாக்ஷி தேவி தன்னிடம் உள்ள தெய்வீக சக்தியைக் கொண்டு தன்னை குலதெய்வமாக வழிபடும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நேரடியாக நிறைவேற்றி வர முடியும் என்பதின் காரணம் அவளை பார்வதி தேவி தமது சார்ப்பில் அவர்களுடைய குலதெய்வமாக அனுப்பி வைத்து இருக்கிறார் என்பதே.
183) ஒரு சில குடும்பத்தினர் காஞ்சி காமாக்ஷி தேவியை இஷ்ட தேவதையாக வழிபட வேறு சிலர் அவரை பொது தெய்வமாக போற்றி அவரிடம் வரம் வேண்டி பிரார்த்தனை செய்யும்போது தனிப்பட்ட பக்தர்களின் விஷயத்தில் அந்த தெய்வமான காஞ்சி காமாட்சி தேவி நேரடியாகச் செயல்பட முடியும் என்றாலும் அதுவே பொதுமக்கள் சம்மந்தப்பட்ட பொதுப் பிரச்சனையாக உள்ளது, அவர்களில் பலருக்கும் சில குலதெய்வங்கள் உள்ளது எனும்போது நேரடியாக வரம் கொடுக்க காஞ்சி காமாக்ஷி தேவி உடனடியாக அந்த பக்தருக்கு வரம் கொடுக்காமல் முதலில் தன்னை வெளிப்படுத்திய பார்வதி தேவியை கலந்தாலோஜித்த பின்னரே எடுப்பாராம் .
184) குல தெய்வங்கள் தன்னிச்சையாக வெளிப்பட்டவை அல்ல . அவர்கள் பிரதான தெய்வங்களின் மாய பிம்பங்கள் ஆவர். தெய்வீக நாடகங்களை பூமியில் நடத்திட பிரதான தெய்வங்கள் தன்னுள் இருந்து பல தெய்வங்களை வெளிப்படுத்துவார்கள். அவர்களில் குலதெய்வமாக வேண்டிய சில தெய்வங்களும் அடங்கும். தற்போதைய நிர்வாக அமைப்பில், கோரிக்கைகளுக்கு ஒப்புதல் பெற கீழ்நிலை அதிகாரிகள் மூலமே மேல்நிலை அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் அனுப்பப்படுகின்றன . அதில் சிலர் அனுப்பிய விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும். சிலரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு விடும். அதே போன்ற நிர்வாக நிலைதான் பிரதான தெய்வங்களிடம் வைக்கும் வேண்டுதல்களுக்கும் கிடைக்கின்றது. பிரதான தெய்வங்களிடம் வைக்கப்படும் வேண்டுகோட்களை நமது எண்ணங்களுக்கு விளங்காத முறையில், அவரவர் குலதெய்வங்கள் மூலமோ அல்லது அந்த பிரதான தெய்வத்தின் பிரதிநிதிகளான முதல் மற்றும் இரண்டாம் நிலை தெய்வங்கள் மூலமே பிரதான தெய்வத்தை சென்றடைகின்றது. கோரிக்கை விடுப்பவர்களுடைய தெய்வ நம்பிக்கையின் உண்மை தன்மையை முதலில் அவர்கள் சோதிப்பார்கள். பல தடங்கல்கள் மற்றும் சில நெருக்கடிகளை கொடுத்து முதலில் அவர்களது கர்மாவை அழித்தப் பின் கோரிக்கைகள் நிறைவேற பிரதான தெய்வத்திடம் அனுப்புவார்கள். அதற்கு இடையிலேயே உண்மையை அறிந்து கொள்ளாமல் இந்த தெய்வம் நமது கோரிக்கையை ஏற்கவில்லை என்று தாமாகவே எண்ணிக் கொள்ளும் பக்தர்கள் விரக்தியில் அவர்கள் செய்து வந்த பிரார்த்தனையை இடையே நிறுத்தி விட்டால் அவர்களுக்கு கிடைக்க இருந்த பலனும் அழிந்து விடுகின்றன. இந்த நாடகத்தை நடத்திடவே பிரதான தெய்வங்கள் தமக்கு உதவியாக இருக்க பல தெய்வங்களை, பல்வேறு ரூபங்களில் தம்முடைய பிரதிநிதியாக அனுப்புகிறார்கள்.
185) ஒரு குடும்பத்தின் பரம்பரை அதே குடும்ப உறுப்பினர்களின் வாரிசுகளினால் தொடர்கின்றது. பல நூற்றாண்டுகள் முன் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த பழமையான பாரம்பரியம் என்னவென்றால், ஒவ்வொரு குடும்பமும் ஒரு குறிப்பிட்ட குலதெய்வத்தை வழிபட்டு வருவார்கள். அவர்களது வாரிசுகளும் அதையே தொடர்வார்கள். அதன் காரணம் பிற தெய்வங்களை விட ஒருவருடைய குலதெய்வமே வாழ்க்கை முழுவதும் கஷ்ட நஷ்ட நேரங்களில் தாமாகவே முன்வந்து அவர்களுக்கு அருள் புரிந்து கஷ்ட நஷ்ட பாதகங்களை குறைத்து பாதுகாத்து வரும் வலிமையான சக்தி கொண்டது என்ற நம்பிக்கையே. அது மட்டும் அல்ல அவர்களது முன்னோர்கள் வழிபட்டு வந்திருந்த குலதெய்வங்களின் அருளால்தான், மறைந்த குடும்ப உறுப்பினர்களின் ஆன்மா, அவர்கள் எங்கிருந்தாலும் அமைதியான சூழ்நிலையில் வசிக்கும் என்றும், அந்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கும்போது அவர்களது பரம்பரையில் உள்ள மக்களின் வாழ்க்கையையும் சிறப்பாக இருக்க அருள் புரிந்து கொண்டே இருப்பார்கள் என்றும் நம்பிக்கைகள் பரவலாக இருந்தன.
186) ஒரு குடும்பத்தின் ஏழேழு ஜென்ம பரம்பரையினரின் வாழ்க்கையில் துணை இருந்து கொண்டு அவர்களை குலதெய்வங்கள் பாதுகாத்து வரும் என்பதும் நம்பிக்கை ஆகும். ஏழேழு என்பதின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், ஒரு குடும்பத்தின் குல தெய்வம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 49 பரம்பரையின் நலனைப் பாதுகாக்கும் என்பதாகும். (அதாவது நமக்கு முன் உள்ள ஏழு பரம்பரையின் முதல் ஏழு மகன்கள் மூலம் வெளிவந்த ஏழேழு 7 x 7 =49 என்பதாகும் ) மேலும் 50வது தலைமுறையினர் மற்றொரு தெய்வத்தை தங்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபடத் துவங்கலாம் அல்லது தமது முந்தைய பரம்பரையினர் வணங்கி வந்திருந்த அதே குலதெய்வ வழிபாட்டை தொடரலாம். இல்லை எனில் குலதெய்வமே வைத்திராமல் பொது தெய்வங்களை இஷ்ட தெய்வங்களாக வணங்கி வரலாம். ஆனால் இதிலும் ஒரு நிபந்தனை உண்டு. 50 வது தலைமுறையினர் ஏதாவது ஒரு தெய்வத்தை தமது குலதெய்வமாக தேர்வு செய்தால், அவர்களின் பரம்பரையின் அடுத்த 49 தலைமுறையினரும் அதே தெய்வ வழிபாட்டைத் தொடர வேண்டும். ஆனால் இவை நடக்கவே நடக்காது என்கிறார்கள் பண்டிதர்கள். அதன் விஜித்திரமான காரணம் என்ன தெரியுமா?
187) பொதுவாக, ஒரு குடும்ப பரம்பரை என்பது 49 தலைமுறைகளுக்கு அப்பால் நீடிக்காது என்பது பிரும்ம விதியாக உள்ளது. ஏனெனில் பரம்பரைச் சங்கிலியில் சில உறுப்பினர்களுக்கு ஆண் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம், சிலருக்கு குழந்தைகளே கூட இருக்காது. சிலரது குடும்பங்களில் பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள். எனவே நடைமுறையில் பார்த்தால், 13வது தலைமுறையின் அல்லது அதற்குள்ளாகவே ஏதாவது ஒரு கட்டத்தில் குடும்ப பரம்பரை தொடர்ச்சி இன்றி துண்டிக்கப்பட்டு விடும் என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றனர். சராசரியாக பதின்மூன்று தலைமுறைகளுக்கு மேல் எந்த ஒரு குடும்பத்தினருக்கும் குல தெய்வம் அமைவதில்லை. ஏனெனில் ஒரு குடும்ப பரம்பரை என்பது அந்தந்த பரம்பரையின் நேரடியான ஆண் வாரிசுகள் மூலமே தொடர்கிறது. குடும்பங்களில் உள்ள பெண் உறுப்பினர்கள் திருமணத்திற்குப் பிறகு கணவனின் பக்க தெய்வத்தை ஏற்க வேண்டிய நியதியில் உள்ளனர்.
188) உதாரணமாக ஒரு குடும்பம் – தலைமுறை எனும் கணக்கை பார்ப்போம். தலைமுறைகளின் எண்ணிக்கை : 7

• ஒவ்வொரு தலைமுறையிலும் ஆண்கள்:7
• ஒவ்வொரு ஆணின் குடும்பத்திலும் உள்ள பரம்பரைகள் : 13
• மொத்த வாரிசுகளின் குடும்ப எண்ணிக்கை : 13 x 7 = 91


189) இவ்வாறு குலதெய்வங்களின் கீழ் உள்ள மொத்த பரம்பரையினரின் எண்ணிக்கை 91 +7 = 98 ஆகும். ஒவ்வொரு தலைமுறையின் குடும்பங்களிலும் சராசரியாக 50% க்கும் அதிகமான குழந்தைகள் ஆணாகப் பிறக்காததினால் குறைந்த பட்சம் 49 (98÷2 = 49) அளவிலான வம்சாவளியினருடைய தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டுமே குடும்ப தெய்வங்களின் பாதுகாப்பில் இருப்பார்கள். ஒரு பரம்பரை என்பது அந்தந்த வம்சத்தை சேர்ந்த குடும்ப ஆண் உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே விரிவடைகிறது என்பதினால் ஆண் உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே ஒரு குடும்பத்தின் வம்சாவளி பரம்பரை என்பது தொடர்கிறது.
190) பொதுவாக கூறப்படுவது என்ன என்றால் ஒரு குடும்பத்தின் குலதெய்வம் அவர்களது 49 வது வம்சத்தினருக்கு மேல் இருக்காதது என்பதின் காரணம் அவர்களது பரம்பரையில் ஏதாவது ஒரு வம்சத்தில் பிள்ளைகளே பிறந்திருக்காது அல்லது ஆண் குழந்தைகளே இருந்திருக்காது எனும்போது அந்த பரம்பரையின் குல தெய்வ வழிபாடு அங்கே முறிந்து விடும்.

தொடர்கிறது …..10அடிப்படை ஆதாரம் :- மேற்கண்ட கட்டுரையில் காணப்படும் சில செய்திகள் கீழ்கண்ட இணையதளங்கள், கிராமியக் கதைகள், ஆலய பண்டிதர்கள் மூலம் கிடைத்த செய்திகள் மற்றும் சில மூத்த குடிமகன்கள் மூலம் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும்.

(1) https://www.tirumala.org/MoreTemples.aspx
(2) https://www.thehindu.com/society/work-in-progress-to-restore-ancient-village-temples
(3) https://timesofindia.indiatimes.com/city/hubballi/temple-village-cries-for-attention
(4) https://timesofindia.indiatimes.com/city/mangaluru/villagers-unite-to-bring-800-year-
(5) https://www.newindianexpress.com/states/andhra-pradesh/2022/jan/10/only-men-
(6) https://unesdoc.unesco.org/in/documentViewer.xhtml?v=2.1.196&
(7) https://www.ndtv.com/world-news/lord-vishnus-1-300-year-old-temple-discovered-in-
(8) https://en.wikipedia.org/wiki/Hinduism_in_Afghanistan
(9) https://www.learnreligions.com/history-of-hindu-temples-1770625
(10) https://en.wikipedia.org/wiki/Historical_Vedic_religion
(11) https://karaikudiexpress.wordpress.com/2020/08/02/kula-deivam
(12) https://kaulapedia.com/en/kula-devta/
(13) https://sites.google.com/site/wwwkalibaburbarijanaicom/home/kuladevata-family-deity-of-the-family

———————————–
நன்றி: அமெரிக்க நாட்டில் வசிக்கும் எனது நண்பரானவரும், மருத்துவ தொழிலில் உள்ளவருமான திரு Dr V. சங்கர் குமார் என்பவர் எனது கட்டுரையை ஆய்வு செய்தபின் அதில் இருந்த தவறுகளை சரி செய்த பின் சில செய்திகளை திருத்தி அமைக்க ஆலோசனை வழங்கி உதவி செய்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன். அவர் பல இணைய தளங்களில், முக்கியமாக சீரடி ஸ்ரீ சாயிபாபா தளத்தில் தமிழ் கட்டுரைகளை எழுதி உள்ளார், ஆங்கில கட்டுரைகளை பெயர்த்து உள்ளார். (https://shirdisaibabatamilstories.blogspot.com/-) — N.R. Jayaraman