சித்தாடி காத்தாயி அம்மன் 

வள்ளி தேவியாக

அவதரித்த கதை

முன் பாகங்களில் கூறிய காரணங்களினால் சித்தாடி  காத்தாயி அம்மன் வள்ளி தேவியாக முதலில் அவதரித்தாள். தேவலோகத்தில் சூரசிம்மன் அழிவை எதிர்நோக்கி தேவர்கள் காத்திருந்த வேளையில் அந்த செயலுக்கான சில முன்னேற்பாடுகள்  நடைபெற்றுக் கொண்டு இருந்தன. சூரசிம்மன் சூரன் என்ற பெயரில் ஒரு பிறப்பை எடுக்க உடனடியாக பகவான் பிரம்மாவிடம் சென்ற தேவர்கள் மீண்டும் அவரிடம்  சூரசிம்மனை அழிக்குமாறு வேண்டினார்கள். பகவான் பிரும்மாவும்   அதற்கான செயல்கள் துவங்கி விட்டன என்பதாக மட்டும் கூறி அவர்களை சாந்தப்படுத்தி அனுப்பினார். 

தேவர்கள் பிரம்மாவிடம் சென்று சூரனை அழிக்க என்ன செய்யப் போகின்றீர்கள் என வினவிக் கொண்டு இருந்த அதே நேரத்தில் பூமியில் கடலில் ஆதிசேஷன் மீது படுத்துக் கொண்டு இருந்த பகவான் விஷ்ணு, முன் ஒரு காலத்தில் தான் ரசித்து மகிழ்ந்த சிவபெருமானுடைய அதி அற்புதமான, மேன்மையான நடன காட்சியை மீண்டும் மனத் திரையில் கொண்டு வந்து இன்பத்தில் ஆழ்ந்து  இருந்தபோது அவரை அறியாமலேயே அவரது  கண்களில் இருந்து  ஆனந்தக் கண்ணீர் கீழே விழுந்தது. கீழே விழுந்த அந்த ஆனந்தக் கண்ணீரில் இருந்து சுந்தரவல்லி மற்றும் ஆனந்தவல்லி எனும் இரண்டு பெண்கள் தோன்றினார்கள். இப்படியாக பகவான் பிரும்மாவின் வரத்தின்படி சூரசிம்மனை அழிக்கும் முதல் கட்டத்தில் பராசக்தியின் ஆண் பாகத்தில் இருந்து தோன்றிய பகவான்  விஷ்ணுவின்  மூலம் சுந்தரவல்லி மற்றும் ஆனந்தவல்லி எனும் இரு சக்தி தேவிகள் வெளிவந்தார்கள். 

அதே நேரத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின்  சக்தி கணங்கள் திடீர் என ஒன்றிணைந்து பூமியில் விழ அதுவும் ஒரு குழந்தையாக மாறியது. பிரும்ம நியதிப்படி கீழே விழுந்த ஒன்றிணைந்த சக்தி கணங்கள் ஒரு  குழந்தையாக மாறியவுடன்   தேவ கன்னிகைகள் அங்கு வந்து  குழந்தையை எடுத்து வளர்க்க  அதுவே பகவான் வரத்தின்படி சூரசிம்மனை அழிக்க தோன்றிய சுந்தரவல்லி மற்றும் ஆனந்தவல்லி எனும் சக்திகளை மணக்க இருந்த மூன்றாவது சக்தியான முருகப் பெருமானாக ஆகியது.  இனி பகவான் பிரும்மாவின் வரத்தின்படி அடுத்த கட்டமாக  சுந்தரவல்லி மற்றும் ஆனந்தவல்லி இருவரும் மறுபிறப்பு எடுக்க வேண்டி இருந்தது.

சில நாட்கள் கழிந்தன, முதல் பிறப்பை எடுத்து விட்டு அடுத்த பிறப்பை எடுக்கும் கட்டத்தை நோக்கி போய்க் கொண்டு  இருந்த சுந்தரவல்லி மற்றும் ஆனந்தவல்லி இருவரும் எதேர்ச்சையாக ஒரு வீரரைப் போல காட்சி தந்து வந்த முருகப் பெருமானை சந்தித்த பின் சில நாட்களில்  அவர் மீது காதல் கொண்டார்கள். ஒருநாள் பகவான் விஷ்ணுவிடம் சென்ற அவர்கள்  தாம் இருவரும் முருகப்  பெருமானைக் காதலிப்பதாகவும்  அவரை மணக்க ஆசைக் கொண்டுள்ளோம் என்று கூறினார்கள். ஆனால் முன்பின் தெரியாத வீரரை மணக்க எதிர்ப்பு தெரிவிப்பது போல முதலில் பாசாங்கு காட்டிய  பின், சூரசிம்மனை அழிக்கத் தோன்றி இருந்த முருகப் பெருமானை மணக்க வேண்டும் என்ற அவர்களது ஆசையை  பகவான் விஷ்ணு  ஏற்றுக் கொண்டார்.

பகவான் விஷ்ணுவும் அதைக் குறித்து முருகப் பெருமானிடம் கேட்க அவரோ  தான் முதலில்  சூரசிம்மனை வதம் செய்த பின்னரே அவர்களை மணக்க முடியும் என்றும், அப்படி அவர்கள்  தன்னை மணக்க வேண்டும் எனில் இரு சகோதரிகளும் வெவ்வேறு  பிறப்பு எடுத்து ஒருவர் பூலோகத்திலும் இன்னொருவர் தேவலோகத்தில் தங்கி இருந்தால் தன்னுடைய கடமை முடிந்ததும் தானே அவர்களை தேடித் சென்று திருமணம் செய்து கொள்வேன்  என்று உறுதி கூறினார். அதற்கேற்ப அமுதவல்லியை தேவலோகத்திலும், சுந்தரவல்லியை பூலோகத்திலும் சென்று பிறப்பு எடுக்குமாறு கூறினார். அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் அவர்கள்  தன்னை மானசீக கணவராக உடனடியாக ஏற்றுக் கொள்ள தான் சம்மதிப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.

உடனடியாக அவர்களும் முருகப் பெருமானை மனதார கணவனாக ஏற்றுக் கொண்டு வேறு பிறப்பு எடுக்கச் செல்கையில் சூரனை அழிப்பதற்குத் தேவையான சக்தியை முருகப் பெருமானுக்கு அளிப்பதற்காக பராசக்தியானவர் அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களது சக்திகளை முருகப் பெருமானின் சக்தியுடன் இணைத்து விட்டார். அந்த விஷயம் முருகப் பெருமானுக்கு கூட தெரியாது. அதற்கு முன்பாகவே வேல் ரூபத்தில் இருந்த ஜ்யோதி எனும் சக்தியையும் முருகப் பெருமானுடன் அவர் ஏற்கனவே இணைத்து இருந்தார். இப்படியாக சூரனை அழிக்க தேவையான மூன்று சக்திகளும் முருகப் பெருமானுடன் இணைந்து விட்டன.

முருகப் பெருமான் ஆனந்தவல்லி மற்றும் சுந்தரவல்லி எனும்  இருவரையும் மனதார மணந்து  கொண்டதுமே அவர்கள் மறுபிறப்பு எடுக்க தேவலோகம் மற்றும் பூலோகத்துக்கு கிளம்பிச் சென்றார்கள். தேவலோகத்தில் பிறந்த அமுதவல்லி பகவான் இந்திரனிடம் சென்று தன்னை காப்பாற்றி வளர்குமாறு வேண்டிக் கொள்ள அவரும் தனது பட்டத்து யானை ஐராவத்திடம் அவளை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தார். இப்படியாக தேவலோக யானையின் கீழ் வளர்ந்தவள் என்ற பொருள் வருமாறு தேவ யானை என அழைக்கப்பட  துவங்க  பின் நாளில் அதுவே தெய்வானை என்ற பெயரை அமுதவல்லிக்கு தந்தது.

அதே நேரத்தில் பகவான் தேவேந்திரன் மூலம் பெற்று இருந்த சாபத்தைக் களைந்து கொள்ள (அது உண்மையில் வள்ளி தேவி அவதரிப்பிற்கான  காரணம் ஆகும்) பகவான் மஹாவிஷ்ணுவும் பூமியிலே ஒரு முனிவராக பிறந்து தவத்தில் இருந்தார்.  அவருக்கு துணை இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்குத் தெரியாமலேயே  லட்சுமி தேவியும் அவர் தவம் இருந்த இடத்தில் மான் உருவில் சுற்றித் திரிந்தாள்.  ஒருநாள் தவத்தில் இருந்து சற்றே கண் விழித்துப் பார்த்த  சாது உருவில் இருந்த பகவான் விஷ்ணு  தனது எதிரில்  அமர்ந்திருந்த மானை  கண்டார். அதன் அழகில் மயங்கியவரின் சக்தி அவரை அறியாமலேயே அந்த மான் உருவில் இருந்த லட்சுமி தேவியின்  உடலில் புகுந்து கொள்ள, அப்போது அவர்கள் கண்களுக்கு தெரியாமல் அங்கிருந்த சுந்தரவல்லி விஷ்ணு பகவானின் சக்தியுடன் புகுந்து கொண்டு லட்சுமி தேவியின் உடலில் புகுந்து அதனுடன் சேர, அது ஒரு குழந்தையாக மாற, உடனடியாக அதை அருகிலிருந்த ஒரு குழியில் தள்ளி விட்டாள். அடுத்த கணம் பகவான் விஷ்ணுவின் சாபம் தீர்ந்து அவர் சுய ரூபம் பெற, லட்சுமி தேவியும் தனது சுய உருவை அடைந்தார். அந்த குழியில் தள்ளி விட்ட குழந்தையே பிரும்ம நியதியின்படி வள்ளி தேவியாக மாறியது.

வள்ளி தேவி பூமியிலே அவதரித்தப் பின்னர் பகவான் மஹாவிஷ்ணு சாப விமோசனம் பெற்று சுய உருவை அடைய, லட்சுமி தேவியும் தனது சுய உருவை எடுத்துக் கொள்ள இருவரும் வைகுண்டத்துக்கு கிளம்பிச் சென்று விட்டார்கள்.  சற்று நேரத்தில் எதிர்பாராமல்   அங்கு வந்த வேடர்களின் தலைவரான நம்பிராஜன் குழியில் அழுது கொண்டு இருந்த குழந்தை  வள்ளி தேவி என்பதை அறியாமல் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு சென்று அவளை   தனது மகளாகவே வளர்க்கலானார். காலபோக்கில் வள்ளி தேவியும் வள்ளி ஆயி  என்ற பெயரில் வளரத்  துவங்க அவளை வேடர்குல பழக்கத்தின்படி தினை பயிர் பயிரிடப்பட்டு இருந்த வயலை பாதுகாக்கும் பணியில் அமர்த்தினார். ஆயி என்பது வயதுக்கு வந்த பெண்களைக்  குறிப்பிட்டது என்பதினால் அவளை வயலைக் காத்த ஆயி  என்பதைக் குறிக்கும் வகையில் காத்த ஆயி  என அழைக்கலானார்கள்.  அதுவே பிற்காலத்தில் அவளுக்கு காத்தாயி அம்மன் என்ற பெயரை தந்தது.

இப்படியாக வள்ளி தேவியும் தெய்வானையும் மறு  பிறப்பு எடுத்ததும் முருகப் பெருமான் சூரசிம்மனை ஒழிக்கும் பணியில் முமூரமாக ஈடுபட்டு அவனை அழித்தார். அதன் பின் நடந்தேறிய சில நாடகங்களுக்குப் பிறகு முருகப் பெருமான் விரைவிலேயே  வள்ளி மற்றும் தெய்வானையை மணந்து கொண்டார்.

வள்ளி தேவி சித்தாடி காத்தாயி அம்மனாக கதை

முன்னர் கூறியது போல  பூலோகத்தில் ஞான சக்தியான முருகப் பெருமான்  க்ரியா மற்றும் இச்சா சக்திகளுடன் ஒன்றிணைந்து கலியுகத்தில் மக்களின்  துயரங்களை துடைக்க வேண்டும் என்பது விதியானதினால்  சூரசிம்மன் வதம் முடிந்ததும் தெய்வானை தனது  தனி சக்தியோடு இயங்காமல், முருகப் பெருமானுடன்  அவருக்கு துணையாக இருக்க, வள்ளி தேவியோ   இச்சா சக்தியாக பல இடங்களுக்கும் சென்று கலியுகத்தில் இன்னல்களை அனுபவிக்க உள்ள பூலோகத்து மக்களின் அறியாமையை விலக்க வழி செய்யும் வகையில் அங்கங்கே இருந்த ஆலயங்களில் தனி சன்னிதானங்களில் அமர்ந்திருந்தபடி மக்களை ஞான சக்தியான முருகப் பெருமானிடம் சரணடையச்  செய்யும்   பணிகளை செய்து கொண்டு இருக்கலானாள். முருகப் பெருமானோ அங்கங்கே இருந்த ஆலயங்களில் ஞான சக்தியாக தனியாகவோ இல்லை வள்ளி தெய்வானைகளுடனோ சேர்ந்து  அமர்ந்து கொண்டு செயல்படத்   துவங்கினார்.  வள்ளி தேவியானவள் அப்படி தன்னை ஸ்தாபித்துக் கொண்டுள்ள இடமே சித்தாடி காத்தாயி அம்மன் ஆலயம் ஆனது. அறியாமையில் உழன்ற மக்களை காத்தாயி அம்மன் எனும் வள்ளி தேவி ஞான மார்க்கத்துக்கு கொண்டு வந்தால் மட்டுமே முருகப் பெருமானின் கருணையை அவர்கள் பெற்றுக் கொண்டு இன்னல்களை களைந்து கொள்ள முடியும். பல ஆலயங்களிலும் அமர்ந்து கொண்ட வள்ளி தேவியானவள் எந்த தோற்றத்தில் இருந்தாலும் அனைத்து இடங்களிலும் அவள் வள்ளி தேவி என்ற பெயரிலேயே வழிபடப்பட்டாள். மாறாக சித்தாடி ஆலயத்தில் மட்டுமே அவள் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தபடி தன்னை சித்தாடி காத்தாயி அம்மன் என்ற பெயரில் வழிபடும் நிலையை அமைத்து இருந்தாள்.

வள்ளி மலைப் பகுதியில் இருந்து சித்தாடிக்கு வந்த வள்ளி தேவி அங்கேயே பல காலம் முருகப் பெருமானுடன் தங்கி இருந்து தனது தெய்வீக சக்தி கணங்களை தான் குடியமர்ந்த ஆலயங்களில் செலுத்தி வைத்தப் பின் சித்தாடியில் தான் பிறந்து வளர்ந்த மானிட உருவை புதைத்து விட்டு தேவலோகத்துக்கு திரும்பிச் சென்று இருக்க வேண்டும். வள்ளி மலை வள்ளி தேவியின் தலை முடியும், வலது கையில் மலர் ஏந்தி உள்ள காட்சியும் சித்தாடி காத்தாயி அம்மனின் தோற்றத்துடன் ஓத்தே உள்ளது என்பதினால் இந்த இரு இடங்களிலும் உலாவிக் கொண்டு இருந்த வள்ளி தேவி எனும் சித்தாடி காத்தாயி அம்மன் சித்தாடிக்கு வந்தே தன் மனித உடலை துறந்து விட்டு சென்று இருக்க வேண்டும் என நம்பலாம். ஆகம வழிபாட்டு முறை, ஆகம வழிபாட்டு முறை இல்லாத எந்த ஆலயமானாலும் வள்ளி தேவியின் சன்னதிகளில் உள்ள வள்ளி தேவியின் உருவை பாருங்கள். அவை அனைத்துமே ஆகம வழிபாட்டுக்குறிய சில்ப சாஸ்திர முறையில் அமைக்கப்பட்ட ஒரே வகையிலான உருவமாகவே வடிவமைக்கப்பட்டு உள்ளதை காணலாம்.  மாறாக சித்தாடி ஆலயத்தில் மட்டுமே வள்ளி தேவி மானிட உருவில் தோன்றிய அதே கொண்டை முடியோடு, தலையில் கிரீடம் இல்லாமல் தனது இயற்கை தோற்றத்தில் காணப்படுகிறாள் என்பது மிகவும் வியப்புக்குரிய செய்தியாகும்.

………..continued -4