தீராத வியாதிகளை குணப்படுத்தும்

வைத்யனாதீஸ்வரர்

ஆலயம், மத்தூர்

எழுதியவர் : சாந்திப்பிரியா

கர்னாடகா மானிலத்தில் மத்தூர் எனும் தாலுக்காவில் காவேரி ஆற்றின் உப நதியான ஷிம்ஷா எனும் ஆற்றின் கரையில் ஒரு பழமையான சிவாலயம் உள்ளது. வைத்யனாதபுரா பஞ்சாயத்தில் உள்ள அந்த ஆலயத்தை மருத்துவர் ‘வைத்யனாதீஸ்வரர் ஆலயம்’ என அழைக்கின்றார்கள். அங்குள்ள ஆலயத்தில் ஸ்வயம்புவாக எழுந்தருளி உள்ள சிவபெருமான் பல நோய்களையும், முக்கியமாக தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளை குணமாக்குவதாக நம்புகின்றார்கள். மழை போதுமான அளவில் பெய்யாததினால் அந்த ஆற்றின் நீர் சுத்தமாக இல்லை.

இந்த ஆலய வரலாறு ஹோய்சாலா மன்னர்கள் காலத்துடன் இணைந்தது. இங்குள்ள சிவபெருமான் நாக உருவைக் கொண்டவர் என்றும் கற்பகிரகத்தில் உள்ள பாம்புப் புற்றில் இருந்து சிவலிங்க உருவில் வெளி வந்ததாகவும் கூறுகின்றார்கள். ஆலய பண்டிதரின் கூற்றின்படி நான்கு திங்கட் கிழமைகளில் அங்கு வந்து ஷிம்ஷா நதியில் குளித்து விட்டு ஈரத் துணியுடன் ஸ்வாமிக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்தால்  தீராத நோய்கள் விலகுவதாகக் கூறினார். மேலும் அங்கு பிரசாதம் மற்றும் மருந்தாக பாம்புப் புற்றின் மண்ணையே தருகின்றார்கள். அந்த மண்ணை நீரில் கரைத்துக் குடித்தால் நோய்கள் விலகுமாம். அந்த மண் தெய்வீக சக்தி கொண்டது என்பதினால் குடிக்கும் நீரை தெய்வீக நீராக மாற்றி நோய்களை விலக்குமாம்.

அந்த ஆலயம் காலை 7.30 மணி முதல் 01.30 வரையும் மாலை 04.00 முதல் 08.00 மணி வரை திறந்துள்ளதாம். அபிஷேகமும், அர்ச்சனையும் செய்ய வேண்டும் எனில் முதலில் அந்த பண்டிதரிடம் முன் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும், இல்லை எனில் அந்த ஆலயத்தில் காலை 7மணிக்கு இருக்க வேண்டும். ஆலயத்துக்கு செல்ல மத்தூரில் இருந்து நல்ல சாலை உள்ளது.

ஆலயம் சிறிதே என்றாலும் அதில் நவரங்க மண்டபம், சபா மண்டபம் , முக்த மண்டபம், மற்றும் கர்ப்பக்கிரகம் என ஒன்றன் பின் ஒன்றான சிறிய அளவிலான அரங்கங்கள் உள்ளன. கர்ப்பக்கிரகத்தில் எழு தலை நாகத்தின் தலைக்கு கீழே சிவலிங்கம் காணப்பட, அதன் முன் மண்டபத்தில் நந்தி தேவர் சிவலிங்கத்தை நோக்கியபடி நேரடியாக அமர்ந்து இல்லாமல் சிவலிங்கத்தின் இடப்புறத்தில் அமர்ந்து உள்ளார். சிவபெருமானின் தரிசனத்தை பக்தர்கள் இடையூறு இன்றி காண வேண்டும் என்பதற்காக நந்தி தேவர்  ஒதுங்கி அமர்ந்து இருக்கின்றார் என்பது ஐதீகம். அந்த கர்ப்பக்கிரகத்தில் ஒரு நாகம் உள்ளதாகவும், அது பக்தர்களை காப்பாற்றி வருவதாகவும் நம்புகின்றார்கள்.

நவரங்க மண்டபத்தில் லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி, ஷண்முகா எனும் பெயரில் முருகன், பைரவர், பரசுராமர் போன்ற தெய்வங்களுடன் இரண்டு சிவலிங்கங்கள் காட்சி அளிக்கின்றன. அவை இடப்புறத்தை நோக்கி ஆவுடையார் உள்ள மற்றும் வலப்புறத்தை நோக்கி ஆவுடையார் உள்ள சிவலிங்கங்கள் என்றும், அவற்றை அங்கு பரசுராம  கடவுளே ஸ்தாபித்து இருக்கலாம் என்பதாகவும் நம்பிக்கை உள்ளது. இவற்றைத் தவிர மஹிஷாசுரமர்தினி தேவி மற்றும் உமா மகேஸ்வரி தேவியின் உருவச் சிலைகளும் காணப்படுகின்றன. அவை அனைத்துமே கங்கா மற்றும் சோழர்கள் கால கட்டிடக் கலையை பிரதிபலிக்கின்றனவாம்.

காலப்போக்கில் இந்த வழிபாட்டு தலத்தின் பெருமை அனைத்து இடங்களுக்கும் பரவத் துவங்க அன்றைய கங்கா, சோழா, ஹோய்சாலா, மற்றும் விஜயநகர ஆட்சியாளர்கள் இந்த வழிபாட்டு தலத்தை ஆலயமாக மாற்றவும், சீரமைக்கவும் தத்தம்மால் ஆன சேவைகளையும் உதவிகளையும் செய்துள்ளார்கள். 1941 ஆம் ஆண்டில் மைசூரில் திவானாக இருந்த திரு மிர்சா இஸ்மாயில் என்பவர் இந்த ஆலயத்துக்கு வந்ததும் இல்லாமல் ஆலயத்தின் எதிரில் இருந்த ஆற்றின் கரையை சீரமைக்கவும் ஏற்பாடுகள் செய்தாராம். இந்த ஆலய பூஜாரி ஆலய வரலாற்றைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இந்த ஆலயம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறினார்.

இந்த ஆலய வரலாற்றைக் குறித்த வாய்மொழிக் கதை என்ன என்றால் முன் ஒரு காலத்தில் ஒரு மரத்தின் அடியில் ஒரு மண்புற்று இருந்ததாகவும், அங்கு தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பசு மாடு ஒன்று சென்று புற்றின் எதிரில் நின்று கொள்ள, அதன் மடியில் இருந்து அந்த புற்றின் மீது அபிஷேகம் செய்வது போல பால் சுரக்குமாம். அதை பல நாட்களாக கவனித்து வந்த ஒருவன் அந்த மாட்டின் செயலை கிராம மக்களிடம் கூற, தெய்வ பக்தி கொண்ட அந்த கிராமத்தினரும் அது முதல் அந்த மண்புற்றை தெய்வப் புற்றாக வணங்கி வரலானார்கள். ஒருநாள் அந்த கிராம மக்களில் ஒருவர் கனவில் சிவபெருமான் தோன்றி, தானே அந்த புற்றில் மறைந்து உள்ளதாகவும், அவர்களது வியாதிகளை தீர்க்கும் மருத்துவராக தக்க நேரத்தில் வெளிப்பட்டு அங்கு தங்கி இருப்பேன் என்றும் கூறினாராம். அதுவரை அந்த ஊரில் மருத்துவர்கள் எவருமே கிடையாது. கிராம முதியோர்களே வியாதிகளை மூலிகைகள் மற்றும் செடி கொடிகளின் சாற்றைக் கொண்டு குணப்படுத்தி வந்தனர். ஆனால் பல வியாதிகளை குணப்படுத்த முடியாமல் போனதினால் நோய் வாய்ப்பட்டவர்கள் மரணமும் அடைந்தார்கள்.

இந்த நிலையில்தான் ஒரு நாள் நல்ல மழை பெய்தபோது அந்த புற்று இரண்டாக பிளவு பட்டது. அதன் நடுவில் சிவலிங்கம் காணப்பட்டது. அந்த சிவலிங்கம் வெளிப்பட்ட இடத்தையே வழிபாட்டு தலமாக மாற்றி, அவரவர்களுக்கு வந்த வியாதிகளை குணப்படுத்துமாறு வேண்டிக் கொண்டு அந்த சிவலிங்கத்தை வழிபட்டு நலம் அடைந்து வந்தார்களாம். காலப்போக்கில் அந்த வழிபாட்டு தலமே ஒரு ஆலயமாக உருவாயிற்று. அந்த சிறு ஆலயத்தில் மூல கருவறையைத் தவிர வெளிப் பிராகாரத்தில் பார்வதி தேவி, நவகிரகங்கள் மற்றும் சூரிய பகவானுக்கும் தனித்  தனியான சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு பசுவின் மூலமே சிவபெருமான் தன்னை இந்த ஆலயத்தில் வெளிப்படுத்திக் கொண்டார் என்பதினால் ஆலயத்தில் ஒரு பசுமாட்டிற்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள். இங்கு வந்து வழிபட்டால் நாக தோஷமும் விலகும் என்பதாகவும் சிலர் நம்புகின்றார்கள்.

ஆலயத்தின் முதல் நுழை மண்டபத்தில் பரசுராம பகவானின் சிலை காணப்படுகின்றது. சாதாரணமாக எந்த சிவாலயத்திலும் பரசுராம பகவானின் சிலை இருக்காது. கன்னட நாட்டுப்புற பாடல் சிலவற்றில் பரசுராம பகவானின் புகழ் காணப்படுகின்றது. அவரை பார்வதி தேவியின் அவதாரமாக கருதப்படும் ரேணுகா தேவியின் புதல்வராக கூறப்பட்டு உள்ளது. நாட்டுப்புற கதையின்படி ஷத்ரியர்கள் பலரைக் கொன்று குவித்தப் பின் அவருக்கு வாழ்கையே வெறுத்துப் போயிற்று. ஆகவே மன அமைதி பெற்று சன்யாச வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்தவர் சிவபெருமானை துதித்தபடியும், அவர் அருளை வேண்டியபடியும் பல இடங்களுக்கும் சென்று தவமிருந்தார். அவருடைய குருவான தத்தாத்திரேயாருடைய மூல ரூபமே சிவபெருமான் என்பதினால் அவர் சிவபெருமானுடைய அருளை பெற ஹிமாலயத்தில் இருந்து கிளம்பி கேரளாவை நோக்கி சென்ற சமயத்தில் தென் இந்தியாவில் பல இடங்களில் தவமிருந்தார்.

பரசுராம பகவான் விஷ்ணு பகவானின் ஆறாவது அம்சம், அவருக்கு மரணமே கிடையாது என்பதினால் இன்றும் மகேந்திரகிரி எனும் மலை அடிவாரத்தில் தவத்தில் இருப்பதாக கருதப்படுகின்றது. கலிகாலம் துவங்கியதும், கல்கி அவதாரம் எடுத்து, தீயவர்களை அழித்து புது யுகம் பிறக்க வழி செய்ய இருந்த விஷ்ணு பகவானுக்கு, சிவபெருமான் மூலம் முக்கியமான ஆயுதம் கிடைக்க இருந்தது. அதற்கு உதவி செய்ய பரசுராம பகவான் ஒரு முக்கியமான அவதாரம் எடுக்க வேண்டும் என்பதினால், அதற்கு முன்னோடியாக தேவையான பலத்தையும் ஆயுதத்தையும் சிவபெருமானிடம் இருந்து பெற இந்த யுகத்திலேயே தவம் இருந்தாராம். அதில் ஒரு இடமே இந்த ஆலயம் ஆகும் என்பது நம்பிக்கை உள்ளது என்பதில் இருந்தே இந்த ஆலயத்தின் கீர்த்தி தெரிய வருகின்றது.

மேலும் துவாபர யுக காலத்தில் இந்த ஆலயம் உள்ள இடத்தில் இருந்து நிலமங்களா எனும் ஊர்வரை இருந்த அனைத்து இடங்களுமே அஞ்சனாபுரி என அழைக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் முக்கியமான மஹாபாரத யுத்தங்கள் நடந்துள்ளன என்பதாக சில ஆலய அர்ச்சகர்கள் கூறினார்கள். பாண்டவர்கள் முதல் கிருஷ்ண பகவான் வரை பலரும் அங்கு தங்கி இருந்துள்ளார்களாம். சில ஆலய வரலாற்றில் இது காணப்படுகின்றது. அப்போது பரசுராம பகவான் அவர்களில் பீஷ்மர், துரோணர், மற்றும் கர்ணனுக்கு ஆயுதப் பயிற்சி தந்ததும் அல்லாமல் யுத்த யுக்திகளையும் கற்றுக் கொடுத்தாராம். ஆகவே பரசுராம பெருமான் இங்கு இருந்துள்ளது இவற்றின் மூலம் தெளிவாகின்றது.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயம் உள்ள இடம் பிராமணர்கள் ஒன்றிணைந்து வாழ்ந்திருந்த ஒரு அக்ரஹாரமாகவே இருந்துள்ளது. அப்போது அது வேதங்கள் ஓதிய வேதபுரியாக பெருமையுடன் இருந்துள்ளதாம். அப்போது இருந்த வைத்தியநாதர் ஆலய இடம் மருத்துவ மையமாகவே விளங்கியதாம். பரசுராமர் பிராமணர்கள் எனப்படும் அந்தணர்களை பெரிதும் விரும்பி அவர்களை பாதுகாத்து வந்தவர் என்பதினால் எங்கெல்லாம் அந்தணர்கள் அதிகம் இருந்தார்களோ அங்கெல்லாம் இருந்த நதிக்கரையில் தங்கி தவத்தில் இருந்தபோது அங்குள்ளவர்கள் அவரை வணங்கி வந்துள்ளார்கள் என்பதாக சில புராணக் கதைகள் உள்ளன. அதனால்தான் அன்றைய அக்ராஹாரத்தில் இருந்த இந்த ஆலய பகுதியில் வந்து தங்கி சிவபெருமானை வழிபட்டு உள்ளார் என்பதற்கு ஆதாரமாகவே அவர் சிலையும் ஆலயத்தில் உள்ளது என்று நம்புகின்றார்கள். மேலும் சில கதைகளின்படி மாமுனிவரான கடம்ப முனிவரும் இங்கு ஆஸ்ரமம் அமைத்து தங்கி இருந்தாராம். அவர் மூலமே இந்த ஆலயத்தின் பெருமையும் பல இடங்களுக்கும் பரவியதாம்.

ஆலய முகவரி 

Vaidyanatheshwara Temple,
Vaidyanathapura,
Mandya District,
Karnataka,
India,
Pincode – 571 433.

Priest Phone: 9945100054