குரு சனீஸ்வர பகவான்

ஆலயம்

எழுதியவர்: சாந்திப்பிரியா

சமீபத்தில் நான் ஒரு அற்புதமான ஆலயத்துக்கு சென்று இருந்தேன். நான் பெங்களூரில் பார்த்த பகவான் சனீஸ்வரர் ஆலயத்தில் இதுவே அபூர்வமான ஆலயமாக எனக்கு தோன்றுகின்றது. இது காந்தி பஜார் எனும் இடத்தில் உள்ள ராமகிருஷ்ண வித்யார்த்தி மன்றம் அருகில் உள்ளது. இதை 1958 ஆம் ஆண்டுவாக்கில் சன்யாசத்தில் இணைந்திருந்த திரு H V ஸ்வாமி என்ற மகான் நிறுவியதாக கூறுகின்றார்கள். மிகச் சிறிய சாலை வழியே செல்ல வேண்டிய இந்த ஆலயத்தின் அருகில் வேறு சில ஆலயங்களும் காணப்படுகின்றன. 1958 ஆம் ஆண்டுவாக்கில்தான் இந்த ஆலயம் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்பட்டாலும் இந்த இடத்தில் 500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திறந்த வெளியில் சனி பகவான் வணங்கப்பட்டு வந்துள்ளதாக நம்பிக்கையின் அடிப்படையில் சிலர் கூறுகின்றார்கள். அவர்களுடைய பல உறவினர்களும் மூதையோர்களும் இன்று வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து போய் விட்டாலும், அவர்கள் முன் காலத்திலேயே அங்கு சனி பகவானை வழிபட்டு வந்துள்ளதாக சிலர் கூறினார்கள். உண்மை எதுவாக இருந்தாலும் ஒரு அபூர்வ காட்சியாக இந்த ஆலயத்தில் சனி பகவானுடன் இரு தனி சன்னதிகளில் நான்கு முகங்களைக் கொண்ட பகவான் சதுர்முக பிரும்மாவும், பகவான் யமராஜரும் குடி கொண்டு உள்ளனர் என்பது விசேஷம் ஆகும்.

சாஸ்திர நம்பிக்கையின்படி சனி பகவானை வணங்கிய பின் யமதர்மராஜரையும், பகவான் சதுர்முக பிரும்மாவையும் வணங்கி துதித்தப் பின் அதே வேளையில் பகவான் ஹனுமான் அல்லது பகவான் கால பைரவரையும் எவர் ஒருவர் வணங்கித் துதிப்பார்களோ அவர்களது சனி தோஷத்தின் தாக்கம் வெகுவாகக் குறைந்து விடும். ஏன் எனில் பகவான் சதுர்முக பிரும்மனே உலகை படைத்தவர் மற்றும் பகவான் யமராஜர், சனிபகவானின் குடும்பத்தை சேர்ந்தவர்.

புராணக் கதைகளில் கூறப்பட்டு உள்ள பல்வேறு காரணங்களினால் எவர் ஒருவர் தனது சனி தோஷங்களின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள பகவான் சனீஸ்வரரை வணங்கிய பின் பகவான் ஹனுமார் அல்லது சிவபெருமானின் அம்சமான பகவான் கால பைரவரை வணங்கி துதிப்பார்களோ அவர்களது சனி தோஷத்தின் தாக்கத்தை சனி பகவான் வெகுவாகக் குறைப்பார். அதன் காரணம் பகவான் ஹனுமார் மற்றும் சிவபெருமானின் அம்சமான பகவான் கால பைரவர் இருவருக்கும் அடங்கி நடப்பவர் பகவான் சனீஸ்வரர் என்பதே. இந்த புராண உண்மைகளை அங்குள்ள பண்டிதர் எவரும் ஏன் அறிந்திருக்கவில்லை என்பது நமக்கு வருத்தமாகவும், வியப்பாகவும் உள்ளது.

ஆகவேதான் சனி தோஷம் குறைய இந்த ஆலயத்தில் உள்ள சனி பகவானை வணங்கியபின் அடுத்த சன்னதியில் அமர்ந்து இருக்கும் சதுர்முக பிரும்மாவை வணங்கித் துதித்தால் அவரவர் பக்தியின் தன்மைக்கு ஏற்ப அவர்களது விதியை பகவான் பிரும்மா சற்றே மாற்றி அமைக்க சனிதோஷத்தின் கடுமை குறையும். விதியை மாற்ற முடியாது எனக் கூறப்பட்டாலும் ஒவ்வொரு தெய்வ நியதிகளிலும் இப்படிப்பட்ட மாற்று விதி முறைகள் உள்ளத்தினால்தான் விதியை மதியால் வெல்லலாம் என்பதாகக் கூறுவார்கள். அவரவர் செய்த தீமைகளின் பலனை அனுபவிக்க வேண்டும் என்பது நியதி என்றாலும் அந்த தண்டனையின் தாக்கத்தை நிச்சயமாக வழிபாடுகள் மூலம் குறைத்துக் கொள்ள முடியும் என்பதும் உண்மையாகும். அதை போலவே சதுர்முக பிரும்மாவை வணங்கியபின் அடுத்த சன்னதியில் அமர்ந்து இருக்கும் பகவான் யமதர்மராஜரை வணங்கித் துதித்தால் அவரவர் பக்தியின் தன்மைக்கு ஏற்ப அவர்களது மன பயத்தையும், ஆயுள் குறைபாடு தரும் உடல் உபாதைகளினால் ஏற்படும் அவஸ்தைகளையும் எம தர்மராஜப் பெருமான் குறைப்பார். அவரவர் செய்த தீமைகளின் பலனை அனுபவிக்க வேண்டும் என்பது நியதி என்றாலும் அந்த தண்டனையின் தாக்கத்தை நிச்சயமாக இப்படிப்பட்ட வழிபாடுகள் மூலம் குறைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு தெய்வமும் படைக்கப்பட்டபோது அவரவர்களுக்கு சில விசேஷ தன்மைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றே ஆகும். ஆனால் அதே நேரத்தில் அந்த மாற்று தன்மைகளை அவர்கள் பிற தெய்வங்களின் சக்தியை குறை கூறும் விதத்தில் உபயோகிக்க முடியாது என்பதும், அவர்களுடைய சம்மதத்துடன்தான் அவற்றை செய்ய முடியும் என்பதும் நியதி ஆகும். சாஸ்திர அடிப்படையிலான இப்படிப்பட்ட உண்மைகளை இந்த ஆலயத்தின் பண்டிதர் உட்பட பலரும் அறிந்திடாமல் இருப்பதினால்தான் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள் இவற்றை செய்வதில்லை. அதன் காரணமும் அவரவர் விதியேதான். இந்த ஆலயத்தின் அருகிலேயே பகவான் ஹனுமானின் ஆலயமும் உள்ளது. சனி தோஷம் குறைய சனி பகவானை வணங்கியபின் இங்கு வந்து இங்குள்ள பகவான் ஹனுமாரை வணங்கித் துதிக்கலாம்.

இப்படிப்பட்ட மேன்மையான ஆலயம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது வருந்தவேண்டிய விஷயம் ஆகும். ஒருவேளை ஊரின் ஒரு ஒதுக்குப்புறத்தில், மிகச் சிறிய வீடுகளில் ஏழைகள் பலர் வசிக்கும் பகுதியின் உள்ளே இந்த ஆலயம் அமைந்து உள்ளதினால் இந்த மேன்மையான ஆலயம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

:ஆலய விலாசம் :
Sri Guru Shaneshwara Swamy Temple
(Near Ramakrishna Vidhyalaya Mandram,
Gandhi Bazaar Circle)
Kempambudhi Kere
Nanjamba Agrahara, Chamrajpet
Bengaluru, Karnataka 560019