குபேர யந்திர பூஜை
சாந்திப்பிரியா

இந்த கட்டுரையை நான் 2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வெளியிட்டேன். இந்த எளிய முறையிலான பூஜையை எனக்கு ஒரு பண்டிதர் கூறினார். அதன் பிறகு பலர் என்னிடம் சில விளக்கங்களை கேட்டு கடிதம் அனுப்ப நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் தந்தேன். ஆகவே மீண்டும் விளக்கங்களுடன் கூடிய அதே கட்டுரையை, புதிய பட விளக்கங்களுடன் அனைவருக்கும் பயன் அளிக்கும் விதத்தில் வெளியிட்டு உள்ளேன். ஆனால் அடிப்படை கட்டுரை சாராம்சத்தில் எந்த மாற்றமும் இல்லை. 2010 ஆம் ஆண்டு வெளியான முந்தைய கட்டுரை விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.
இந்த யந்திரத்தை பூஜிப்பதின் மூலம் பகவான் குபேரரின் அருளை பெறலாம். செல்வத்தின் அதிபதியான குபேரனின் அருளால், குபேர யந்திரத்தை உரிய முறையில் வழிபடுவது செல்வத்தை பெருக்கும், நஷ்டங்களை லாபங்களாக மாற்றும், இது செல்வத்தின் அதிபதி குபேரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் அனைத்தையும் இழந்து நின்றபோது மஹாலஷ்மி தேவியை வணங்கி பெற்றதாம். ஆகவே நாமும் அந்த எளிய குபேர பூஜையை செய்ய நமக்கு செல்வம் கிட்டும். செல்வத்தை தற்காலிகமாக அடைய மட்டுமே இந்த பூஜையை செய்ய வேண்டும் என்பது இல்லை. குடும்ப அமைதி, மகிழ்ச்சி மற்றும் பணப் பற்றாக்குறை நீங்க வேண்டும் என்பதற்காக இதை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறை கூட செய்வதினால் நிச்சயமான பலனை எதிர்பார்க்கலாம்.
இந்த பூஜையை செய்ய சமிஸ்கிருத மந்திரங்களை ஓத வேண்டிய அவசியம் இல்லை. ஸ்லோகங்கள் தெரியாதவர்கள் செய்யக் கூடிய மிக எளிய பூஜை இது. இந்த பூஜை முறை மீது மனதார நம்பிக்கை, பூஜை செய்வதில் நேர்மை, பூஜையில் ஆழ்ந்த ஈடுபாடு என்ற மூன்றும் மட்டுமே தேவை.
இந்த பூஜையை துவக்கும் முன் நமக்குத் தேவை ஒரு ஒரே மாதிரியான நாணயங்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப எத்தனை மதிப்பிலான நாணயங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பூஜைக்கு இன்ன மதிப்பிலான நாணயத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கின்ற நியதி கிடையாது. அது நம் உபயோகத்தில் உள்ள நாணையமாக இருக்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் விளையாட்டு நாணயங்களை பயன்படுத்தக் கூடாது. உபயோகத்தில் இல்லாத நாணயங்களையும் பயன்படுத்தக் கூடாது.
இது ஒன்பது நாளைய பூஜை முறை ஆகும். பூஜையை எந்த கிழமைகளில் இருந்து ஆரம்பிக்க உள்ளோம் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். அதை வெள்ளிக் கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில்தான் துவக்க வேண்டும். எந்த கிழமையில் பூஜையை துவக்குகின்றீர்களோ, ஒவ்வொரு வாரமும் அதே தினத்தில், ஒன்பது வாரம் பூஜை செய்ய வேண்டும். இடையில் பூஜையை நிறுத்தி வைக்கக் கூடாது, அதுவே முக்கியம். வெள்ளிக் கிழமை துவக்கினால் அடுத்த எட்டு வார பூஜையையும் அடுத்த எட்டு வெள்ளிக் கிழமையில்தான் செய்ய வேண்டும். அதை போல பௌர்ணமி அன்று துவக்கினால் அடுத்த எட்டு பௌர்ணமி தினத்தில் பூஜையை செய்ய வேண்டும். நாட்களை மாற்றி செய்யக் கூடாது. ஏதாவது ஒரு காரணத்தினால் இடையில் பூஜையை செய்ய முடியவில்லை என்றால், உங்கள் குடும்பத்தில் உள்ள அடுத்த நபர் -அது மனைவி, கணவர், மகன்கள், மருமகள்கள் அல்லது மகள் என எவராவது அந்த பூஜையை தொடர்ந்து செய்து முடிக்கலாம், ஆனால் உங்கள் வீட்டு மாப்பிள்ளை உங்களுக்காக பூஜையை செய்யக் கூடாது.
பூஜை செய்யும் முறை
1. பூஜையை துவக்கும் அன்று காலையில் குளித்து விட்டு தெய்வப் படங்களின் முன்னால் கோலம் போட வேண்டும். பூஜை அறை இல்லை என்றால் எந்த அலமாரியில் ஸ்வாமி படங்களை வைத்து வழிபடுகின்றோமோ, அதில், அல்லது அதன் கீழே கோலம் போட வேண்டும். அடுத்து குபேர யந்திரக் கோலத்தை நாம் எங்கு அமர்ந்து கொண்டு பூஜை செய்ய உள்ளோமோ அந்த இடத்தில் போட வேண்டும்.
2. குபேர யந்திரத்தை தரையில் அல்லது ஏதாவது ஒரு மரப் பலகையில் போடலாம். கடைகளில் கிடைக்கும் ஸ்டென்சிலை பயன்படுத்தி போடக் கூடாது. யார் பூஜை செய்கின்றார்களோ அவர்களே தமது கையினால் போட வேண்டும். அச்சு அடித்தது போல யந்திரத்தின் வடிவம் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோணலாக இருந்தாலும் சரி, எழுத்துக்கள் மற்றும் எண்கள் அதாவது 27, 25, 20 மற்றும் ஸ்ரீ போன்றவை படிக்கப்படும் முறையில் இருக்க வேண்டும் அவ்வளவே.
Model-1

Model-2
3. மேலே காணும் யந்திரக் கோலத்தைப் அரிசி மாவு, குங்குமம் மற்றும் மஞ்சள் பொடியைக் கொண்டு போட வேண்டும். கட்டங்கள் குங்குமத்திலும், எண்கள் அரிசி மாவினால் மற்றும் ஸ்ரீ எனும் எழுத்து மஞ்சள் பொடி அல்லது சந்தன பொடி அல்லது தண்ணீரில் குழைத்த சந்தனத்தினால் போட வேண்டும். அதன் பின் ஒவ்வொரு கட்டத்தின் எண்களின் பக்கத்திலும் ஒவ்வொரு நாணயத்தை வைக்க வேண்டும். அதற்கேற்ப யந்திரத்தின் கோலத்தைப் போட வேண்டும்.

இதுதான் பூஜிக்க உள்ள முழுமையான
யந்திர வடிவம் ஆகும்.
4. முதல் நாள் பூஜையில் எந்த நாணயத்தை பயன் படுத்தினீர்களோ, அதே நாணயங்களைத்தான் ஒன்பது நாள் பூஜையிலும் பயன்படுத்த வேண்டும். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயம் என எந்த மதிப்பிலான நாணயங்களை வேண்டுமானாலும் பயன் படுத்தலாம். ஆனால் ஒன்பது நாணயங்களும் ஒரே மதிப்பிலான நாணயமாக இருக்க வேண்டும்.
5. யந்திரக் கோலம் போட்டு முடித்த பின் நாணயங்களையும் வைத்த பின்னர் அதன் எதிரில் ஒரு குத்து விளக்கையோ அல்லது வேறு ஏதாவது எண்ணெய் தீப விளக்கையோ ஏற்றி வைக்க வேண்டும். நல்ல எண்ணெய் அல்லது நெய் விளக்கு ஏற்றலாம். வேறு எந்த எண்ணையையும் பயன்படுத்தாதீர்கள்.

6. கீழே கொடுக்கப்பட்டு உள்ள ஒன்பது எண்ணிக்கையிலான வாசகங்களை ஒரு சுலோகம் படிப்பதை போல ஒன்பது முறை படிக்க வேண்டும். தடைகளை முறியடிக்கும் வினாயகப் பெருமானை முதல் வாசகத்தில் துதித்த பிறகு, மற்ற எட்டு வாசகங்களை கூறவும். ஒன்பது வாசகங்களையும் படித்தால் ஒருமுறை படித்த எண்ணிக்கை ஆகும். அப்படியாக ஒன்பது முறை படிக்க வேண்டும்.
7. பிரார்த்தனை
i. வினாயகப் பெருமானே, குபேர யந்திர வடிவில் உள்ள குபேரர் மூலம் அன்னை மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்காக நான் செய்யும் இந்த பூஜையில், எனது பிரார்த்தனைகள் நிறைவேறவும், நான் மேற் கொண்டுள்ள பூஜை நல்ல முறையில் நிறைவடையவும் நீங்கள் அருள் புரிய வேண்டும்.
ii. அன்னை மகாலட்சுமியே, இந்த நாணய வடிவில் உள்ள குபேரர் மூலம் உன்னை வணங்குகிறேன். என் கடன்களைத் தீர்க்கப் போதுமான செல்வத்தை நீங்கள் இருவரும் எனக்கு வழங்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.
iii. அன்னை மகாலட்சுமியே, இந்த நாணய வடிவில் உள்ள குபேரர் மூலம் உன்னை வணங்குகிறேன். என் குடும்பத்தை நடத்தப் போதுமான செல்வத்தை நீங்கள் இருவரும் எனக்கு வழங்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.
iv. அன்னை மகாலட்சுமியே, இந்த நாணய வடிவில் உள்ள குபேரர் மூலம் உன்னை வணங்குகிறேன். என் குழந்தைகளுக்குக் கல்வி அறிவு தரப் போதுமான செல்வத்தை நீங்கள் இருவரும் எனக்கு வழங்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.
v. அன்னை மகாலட்சுமியே, இந்த நாணய வடிவில் உள்ள குபேரர் மூலம் உன்னை வணங்குகிறேன். தேவையற்ற முறையில் விரயமாகும் எனது செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள நீங்கள் இருவரும் அருள் புரிய வேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.
vi. அன்னை மகாலட்சுமியே, இந்த நாணய வடிவில் உள்ள குபேரர் மூலம் உன்னை வணங்குகிறேன். என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்ய நீங்கள் இருவரும் அருள் புரிய வேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.
vii. அன்னை மகாலட்சுமியே, இந்த நாணய வடிவில் உள்ள குபேரர் மூலம் உன்னை வணங்குகிறேன். நீங்கள் இருவரும் என்னுடன் என்றென்றும் தங்கியிருந்து எனக்கு வாழ்க்கையில் செழிப்பை வழங்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.
viii. அன்னை மகாலட்சுமியே, இந்த நாணய வடிவில் உள்ள குபேரர் மூலம் உன்னை வணங்குகிறேன். நீங்கள் இருவரும் எனக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.
ix. அன்னை மகாலட்சுமியே, இந்த நாணய வடிவில் உள்ள குபேரர் மூலம் உன்னை வணங்குகிறேன். எனது பிரார்த்தனையை நீங்கள் இருவரும் நிறைவேற்ற வேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.
8. இப்படியாக ஒவ்வொரு முறையும் பிரார்த்தனை செய்த பின் ஒரு நாணயத்தின் மீது ஒரு பூவை வைக்கவும், இடது பக்க மேல் புறத்தில் இருந்து, அதாவது 27 எனும் எண்ணில் இருந்து துவக்கி 20, 25, 22, 24, 26, 23, 28, மற்றும் 21 என்ற எண்ணின் மீது உள்ள நாணயத்தின் மீது பூவை வைக்கவும். ஒன்பது நாணயங்கள் மீதும் பூ வைக்கப்பட்டு இருக்கும் வகையில் ஒன்பது முறை பிரார்த்தனை செய்யவும்.

9. பூ வைக்க முடியவில்லை எனில், கவலை வேண்டாம், குங்குமம் மற்றும் சந்தனத் தூள் கலந்த பொடியை சிறிது நாணயத்தின் மீது தூவலாம். பூக்களைப் வைக்கும்போது போடப்பட்டு உள்ள எழுத்துக்கள் அழிந்து விடாமல் இருக்குமாறு கட்டத்தில் வைத்துள்ள நாணயத்தின் மீதே பூக்களை வைக்க வேண்டும்.

10. பிரார்த்தனை முடிவில் கற்பூரத்தை ஒரு தட்டில் ஏற்றி குபேர யந்திரத்தை சுற்றி மூன்று முறை கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும்.

11. கற்பூர ஆரத்தியை யந்திரத்தின் நான்கு முனைகளையும் தொடுமாறு சுற்றிக் காட்டுவதின் தாத்பர்யம் என்ன என்றால் அந்த தீயானது வீட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள எதிர்மறை விளைவுகளின் ஆதிக்கத்தையும் பொசுக்கி, வீட்டிற்குள் நுழையும் லக்ஷ்மி தேவியும் பகவான் குபேரரும் மகிழ்ச்சியோடு அங்கு இருக்க வகை செய்வதாகவும் கூறுகிறார்கள்.
12. கற்பூர ஆரத்தியை காட்டிய பின்னர் குபேர யந்திரத்தின் முன்னால் நமஸ்கரித்த பின்னர் பூஜை முடிவடையும். பூஜை முடிந்தப் பின் கோலத்தை உடனே அழித்து விடக்கூடாது. மறுநாள் வரை அந்த கோலம் நாணயத்துடன் அப்படியே இருக்க வேண்டும்.
13. மறுநாள் குளித்த பின்னர் குபேர யந்திரத்தில் வைக்கப்பட்டு உள்ள நாணயங்களை எடுத்து துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் அடுத்த எட்டு நாட்களுக்கான பூஜையிலும் அதே நாணயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
14. கோலத்தை ஒரு துணியினால் துடைத்து எடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளைய பூஜையிலும் புதியதாக யந்திரக் கோலம் போட வேண்டும்.
15. உங்கள் பிரார்த்தனையை ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டு ஒரு புத்தகத்தை படிப்பதை போல படிக்க வேண்டும். ஏன் என்றால் ஒன்பது நாட்களும் அதே வாசகத்தை மட்டுமே கூற வேண்டும். வெவ்வேறு பிரார்த்தனை வாசகங்களைக் கூறக் கூடாது.
16. அந்த யந்திரத்தில் உள்ள நாணயங்களை பத்திரமாக எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பணத்துடன் சேர்த்து வைத்துக் கொள்ளாதீர்கள். அதை எந்த காரணத்தைக் கொண்டும் வேறு வகைக்கு செலவு செய்யக் கூடாது. அது லக்ஷ்மி தேவி மற்றும் பகவான் குபேரருடைய செல்வம் ஆகும். எப்போதெல்லாம் அந்த ஒன்பது நாட்கள் பிரார்த்தனை பூஜையை செய்ய நினைக்கின்றீர்களா அப்போதெல்லாம் பூஜையில் மீண்டும் மீண்டும் அதே நாணயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
17. யந்திரத்தைச் சுத்தம் செய்யத் துடப்பத்தைப் பயன்படுத்த வேண்டாம். யந்திரத்தை ஒரு துணியால் துடைத்து விட்டு, பிறகு ஈரத் துணியால் அந்தப் இடத்தை சுத்தம் செய்யவும். அது காய்ந்த பிறகு, வீட்டை சுத்தம் செய்ய நீங்கள் துடப்பத்தைப் பயன்படுத்தலாம்.
18. இந்த பூஜை முறையை ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கூட தவறாமல் கடைப் பிடித்து வந்தால் அந்த குடும்பத்தில் காரணம் இன்றி ஏற்படும் பண விரயங்கள் குறையும், செல்வம் நிலைத்து நிற்கும், குடும்பத்தில் ஏற்படும் பதட்டங்களும், அமைதி இன்மையும் பெருமளவில் குறையும், மன மகிழ்ச்சி நிலவும் போன்ற அற்புதமாக சூழ்நிலை அமைவதை காண முடியும் .
19. பூஜை முடிந்த ஒன்பதாம் நாளன்று கண்டிப்பாக பூஜை செய்தவர் ஏதாவது ஒரு லஷ்மி தேவியின் ஆலயத்துக்குச் சென்று தம்முடைய அதே பிரார்த்தனையை லஷ்மி தேவி ஒரு முறை கூறிவிட்டு, அவளது அருளை வேண்டிக் கொண்டு வர வேண்டும். எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் சென்று லட்சுமி தேவி சன்னதியில் வேண்டலாம். தனியாக லட்சுமி தேவி சன்னதி இல்லை என்றாலும் அம்பாள் சன்னதிக்கு சென்று அவளையே லட்சுமி தேவியாக பாவித்து வேண்டிக் கொள்ளலாம். ஏன் என்றால் லட்சுமி தேவியும் அம்பாளின் ஒரு அம்சமே ஆவாள்.
எந்த திசையை நோக்கி அமர்ந்து கொண்டு குபேர யந்திர பூஜை செய்ய வேண்டும் ?
குபேரரின் திசை வடக்கு என்பதினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டுதான் பூஜை செய்ய வேண்டும்.
மஹாலக்ஷ்மி செல்வத்தை தருபவள் எனும்போது எதனால் குபேர யந்திரம் மூலம் மஹாலக்ஷ்மியை ஆராதிக்க வேண்டும்?
சிவபெருமான் தன அதிபதியாக லக்ஷ்மி தேவியையும், அவளுடைய கஜானாவை கண்காணித்து வரவும், கணக்கு, வழக்குகளை கண்காணித்து வரவும் அவளுக்கு கீழ் பணி புரியும் வகையில் குபேரனையும் நியமித்தார். செல்வத்தின் அதிபதி குபேரன் தேவலோகத்தில் உள்ள குபேர பட்டிணத்தில் இருக்கும் அழகாபுரி அரண்மனையில் குடி உள்ளார். ஒருவருக்கு செல்வத்தை தர லக்ஷ்மி தேவி முன் வந்தாலும், சில சமயம் ‘அம்மா இவர் தகுதியானவர் இல்லை’ என குபேரர் கூறி அவருக்கு லக்ஷ்மி தேவி தரும் செல்வத்தை தடுத்து நிறுத்தி விட முடியுமாம். ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லை என்பதினால் லக்ஷ்மி தேவியே செல்வத்தை அருள்பவள் என்றாலும், எதையாவது கூறி அதை தடுத்து நிறுத்த குபேரனால் முடியும் என்பதினால் செல்வம் வேண்டும் என்றால் குபேரர் மூலமே லட்சுமி தேவியை வேண்டிக் கொள்ள வேண்டும்.
சிவபெருமான் செல்வத்தின் அதிபதியாக லட்சுமி தேவியையும், அவளது கருவூல காப்பாளராக குபேரனை நியமித்தபோது, தேவலோகச் செல்வங்கள் எனப்படும் நவ நிதிகளுக்கும் அதிபதியாக இருக்குமாறு குபேரனை நியமித்தார். நவ நிதி என்பவை பத்ம நிதி, மகாபத்ம நிதி, மகரபத்ம நிதி, கச்சபபத்ம நிதி, குமுத நிதி, நந்த நிதி, சங்க நிதி, நீல நிதி மற்றும் யோக நிதி என்பனவாகும்.
இருப்பினும், சில புராணங்களில் யோக நிதியைத் தவிர்த்து, பத்ம, மகாபத்ம, மகர, கச்சப, முகுந்த, நந்தக, நீல மற்றும் சங்க என எட்டு நிதிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன; இவை தனி நபர்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தும் செல்வங்களைக் குறிக்கின்றன. இந்த நவ நிதிகள் குபேரனின் உதவியாளர்களாக உருவகப்படுத்தப்பட்டு, ஒன்பது வகையான வளம் தரும் வாழ்க்கை முறையிலான செல்வங்கள் மற்றும் ஆன்மீக செல்வங்களாக விவரிக்கப்படுகின்றன. நவ நிதி என்பவை ஒரு செழிப்பான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு வகைகளிலான செல்வங்களைக் குறிக்கின்றன என்பதினால்தான் இந்த ஒன்பது நிதிகளையும் குபேர யந்திரத்தின் ஒன்பது கட்டங்களில் அமர்ந்து கொண்டு குபேரர் வழங்குகின்றார்.
மேலும் சில புராணக் கதையின்படி செல்வத்தின் அதிபதி குபேரன் அனைத்து செல்வங்களையும் ராவணனிடம் இழந்து விட்டு வந்தபோது அவளுக்கு லக்ஷ்மி தேவியே தன்னிடம் இருந்து செல்வத்தைத் தந்து, அருள் புரிந்து, அவரை தன்னிடத்தில் உள்ள செல்வத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டதாகவும், ஆகவே மஹாலக்ஷ்மியின் செல்வத்தை தன் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைத்து உள்ள குபேரர் பெட்டியை திறந்தால்தான் செல்வம் கிடைக்கும் என்பதினால் குபேரனையும் லட்சுமி தேவியுடன் சேர்த்து பூஜிக்க வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
குபேரர் பாதுகாத்து வரும் நிதிகளில் மூன்று முக்கிய நிதிகளாக கருதப்படுபவை:
• கடல் சங்கின் உள் இருந்து தொடர்ந்து வெளி வந்து கொண்டு இருக்கும் நீரைப் போல தொடர்ந்து செல்வத்தை தருவது சங்கு நிதியாகும்.
• பதுமம் என்றால் தாமரை என்ற பொருள் உண்டு. ஆகவே தாமரை மலரில் உள்ள அடுக்கடுக்கான தாமரை இதழ்களை போல அடுக்கடுக்கான செல்வத்தை தரும் நிலையே பத்ம நிதியாகும்.
• அதை போலவே எதிர்பாராமல் செல்வத்தைப் பெறும் நிலையே யோக நிதியாகும்.
இந்த மூன்று முக்கியமான நிதிகளையும் -பாதாளம், பூலோகம் மற்றும் தேவ லோகம் என மூன்று லோகங்களிலும் இருந்தவாறு செல்வத்தின் அதிபதி குபேரன் வெளிப்படுத்துகின்றார். அவை குபேர யந்திரத்தின் ஒன்பது கட்டங்களில் உள்ளன.
அதை போலவே தேவி மஹாலக்ஷ்மி படைக்கப்பட்டவுடன் அவளும் மேலும் எட்டு குணங்களுடன் கூடிய அஷ்டலக்ஷ்மிகளின் உருவங்களை பெற்றாள். எதற்கு அத்தனை ரூபங்கள் தேவை என்றால் செல்வமே அனைத்தையும் தரும் நிலை அல்ல. அந்த செல்வத்தை முழுமையாக அனுபவிக்க வாழ்க்கையில் மேலும் சில சுகங்களை பெற வேண்டும். அஷ்டலக்ஷ்மிகளின் அவதாரத்தில் இருந்தவாறு ஆன்மீகச் செல்வம்; மன அமைதி; முக்தி; மென்மையான செல்வம்; மன உறுதி, நற்குணங்கள்; விவசாயச் செழிப்பு; உணவு; நல்ல ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரம்; கால் நடை செல்வம்; அரசாங்க அதிகாரம்; கண்ணியம்; சமூகத்தில் அந்தஸ்து; சந்ததி மற்றும் குடும்ப வளம்; குடும்ப நல்லிணக்கம்; தைரியம்; தடைகளை உடைப்பது மற்றும் போர்களில் வெல்வதற்கான ஆற்றலைப் பெறுவது; கல்வி; கலை மற்றும் அறிவியல் ஞானம்; அறிவுசார் வளர்ச்சி; அனைத்து முயற்சிகளிலும் வெற்றி போன்றவற்றை வழங்குகிறார். அவை அனைத்தையும் உள்ளடக்கியதே ‘வளமான வாழ்க்கை’ என்பது. ஆகவே அவை அனைத்தையும் லட்சுமி தேவியிடம் இருந்து ‘வளமான வாழ்க்கை’ என்ற பெயரில் அடைய, குபேர யந்திர பிரார்த்தனை வழி செய்கின்றது.
குபேர யந்திரம் மற்ற யந்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மற்றும் தனித்துவமானது. இந்த சக்தி வாய்ந்த யந்திரம் ஒன்பது கட்டங்களைக் கொண்டது. ஒன்பது கட்டங்களின் முக்கியத்துவம் என்ன?
மூன்று கட்டங்களில் உள்ள எண்களைப் பக்கவாட்டில், மேலிருந்து கீழாக அல்லது குறுக்கு வசமாக எப்படி கூட்டினாலும், அதன் மொத்த கூட்டுத் தொகை 9 என்ற எண்ணிலேயே முடியும். ஒன்பது கட்டங்களில் உள்ள அனைத்து எண்களை கூட்டினாலும், அதன் கூட்டுத் தொகை 9 என்ற எண்ணில்தான் முடியும். அவற்றை கீழே உள்ள கணக்கின் மூலம் பார்க்கவும்:
ஒவ்வொரு வரிசைகளின் கூட்டுத் தொகை: இடது பக்கத்தில் இருந்து வலது பக்க வரிசை

• 27+20+25=72 = 7+2= 9
• 22+24+26 =72 =7+2= 9
• 23+28+21=72 = 7+2= 9
ஒவ்வொரு வரிசைகளின் கூட்டுத் தொகை: இடது பக்க மேல் இடத்தில் இருந்து இடது பக்க கீழ் வரை

• 27+22+23 =72 =7+2= 9
• 20+24+28 =72 =7+2= 9
• 25+26+21 =72 =7+2= 9
இரண்டு பக்க குறுக்குவாட்டில் எண்ணினாலும் அதே எண்ணிக்கையாக இருக்கும்.

• 27+24+21 =72 =7+2= 9
• 23+24+25 =72=7+2= 9
யந்திரத்தில் உள்ள அனைத்து எண்களைக் கூட்டினாலும் அதே எண்ணிக்கையாக இருக்கும்.

27+20+25+22+24+26+23+28+21=216=2+1+6 = 9
யந்திரத்தில் உள்ள அனைத்து எண்களை பெருகினாலும் அதே எண்ணிக்கையாக இருக்கும்.27 x 20 x 25 x 22 x 24 x 26 x 23 x 28 x 21= 780832483200 = 45 = 9

இந்த யந்திரத்தில் உள்ள இன்னொரு அதிசயம் அதில் அனைத்து கட்டங்களையும் பார்த்தால் அதில் 0 முதல் 8 வரையிலான எண்களைக் காண முடியும். 0 என்பது மஹாலக்ஷ்மியைக் குறிக்க 1 முதல் 8 வரையிலான எண்கள் அஷ்டலட்சுமியைக் குறிக்கின்றது. ஆகவே அன்னை மஹாலக்ஷ்மி இந்த யந்திரத்தில் தனது எட்டு அஷ்டலக்ஷ்மி அவதாரங்களாக வாசம் செய்கின்றாள் என்பது புலனாகும்.
குபேர யந்திரத்தின் தத்துவம் என்ன
அனைத்து கட்டங்களிலும் உள்ள எண் 2 என்பது லக்ஷ்மி தேவியும், தெய்வம் குபேரரும் சேர்ந்து அருளும் நிலையைக் காட்டும். ஒன்பது கட்டத்தில் அமர்ந்து கொண்டே இருவரும் அவர்களை சுற்றி உள்ள எட்டு திசையிலும் (2 மூலைகள் x 4 பக்கங்கள் = மொத்தம் 8 திசைகள்) இருந்தும் செல்வத்தையும் வளத்தையும் தருகிறார்கள். அஷ்ட திக்குக்களில் இருந்தும் செல்வத்தை வாரி வழங்கும் லஷ்மி தேவியைக் குறிக்கும் தத்துவம் இது.

ஆகவேதான் இந்த குபேர யந்திரத்தை பூஜிப்பதின் மூலம் அனைத்து விதமான செல்வங்களையும் அஷ்ட லக்ஷ்மி மற்றும் குபேரர் மூலம் பெறலாம். இந்த தன்மைகளைக் கொண்டுதான் மந்திர தந்திர சாஸ்திரங்களின் அடிப்படையில் எந்த கட்டத்தில் எந்த எண் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இருந்திருக்க வேண்டும்.
ஒன்பது கட்டங்களையும் ஒன்றிணைத்து ஒவ்வொரு பக்கத்திலும் அவற்றின் மீது காணப்படும் ‘ஸ்ரீ’ எனும் எழுத்து குபேரனுடன் அஷ்ட லட்சுமியாக உள்ளவளை உருவாக்கியவளான சிவ-சக்தி தேவி வசிக்கும் ஸ்ரீபுரத்தைக் குறிக்கும். ஆகவே இந்த உலகையே படைத்து அதைக் காத்தருளும் பரமாத்மன் எனும் சிவசக்தியின் முழு அருளை பெற்று உள்ளதே இந்த யந்திரம் ஆகும்.
s article