
-சாந்திப்பிரியா-
அஸ்வாரூடா தேவி பார்வதியின் சக்தியான திரிபுரசுந்தரி தேவியின் கையில் வைத்து இருந்த சுருக்குக் கயிற்றிலிருந்து (Noose) படைக்கப்பட்டாள் என்கின்றது அஸ்வாரூடா தேவியின் வரலாறு. அஸ்வாரூடா தேவி எதற்காக படைக்கப்பட்டாள்? அஸ்வாரூடா தேவி தோற்றத்தைக் குறித்த கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒன்றின் பின் ஒன்றின் பின்னணியில் உள்ள அடிப்படை கதைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருமுறை தனது தந்தை தக்ஷன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட சதி தேவி என்ற அவதாரத்தில் இருந்த பார்வதி தேவியும் அவரது கணவர் சிவபெருமானும் தக்ஷனால் அவமதிக்கப்பட்டார்கள். அதனால் மனமுடைந்து போன சதி தேவி (பார்வதி) தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். இறந்து விட்ட மனைவியின் உடலை தனது தோளில் சுமந்து கொண்டு உக்ரஹமாக நடனமாடத் துவங்கிய சிவபெருமானின் கோபத்தை தணிக்க எண்ணிய மகாவிஷ்ணு, தனது சக்ராயுதத்தினால் சிவபெருமானின் தோளில் இறந்து கிடந்த சதி தேவியின் உடலை 51 துண்டாக வெட்டி வீழ்த்த, அவள் உடலின் பாகங்கள் உலகெங்கிலும் பல இடங்களில் விழுந்தது. பின்னர் அவள் உடலின் பாகங்கள் விழுந்த இடங்களில் பார்வதி தேவிக்கு (சதி தேவி) ஆலயங்கள் எழும்ப, அந்த ஆலயங்கள் சக்தி பீடங்களாயிற்று. அதனால் கோபம் தணிந்த சிவபெருமான் மீண்டும் தவத்தில் அமர்ந்து விட்டார். அதே நேரத்தில் விதியினால் ஏற்பட்டு இருந்த இந்த நிலை முடிவுற்றதும் தனது கணவருடன் மீண்டும் சேர வேண்டும் என்று எண்ணிய பார்வதியின் ஆத்மாவும் ஹிமயமலையில் சென்று தவத்தில் அமர்ந்து கொண்டது. அனைத்து நாடகங்களும் இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பரமாத்மாவினால் விதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட விதியின் காரணமாக நடந்தது.
இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டு இருந்தபோது தேவலோகத்தில் இருந்த சூரபத்மன் எனும் அசுரனின் அராஜகம் எல்லை மீறி சென்று கொண்டு இருந்தது. அந்த அசுரன் கடும் தவம் புரிந்து சிவபெருமானிடமிருந்து ஒரு அறிய வரத்தைப் பெற்று இருந்தான். அதன்படி அவனையும், அவனது சகோதரர்களையும் சிவபெருமானுக்கு பிறக்கும் சந்ததியினரால் மட்டுமே கொல்ல முடியும், அந்த சந்ததியும் ஆண் மற்றும் பெண் உறவு இன்றி பிறந்து இருக்க வேண்டும்.
சூரபத்மனுக்கு கிடைத்து இருந்த அந்த அபூர்வ வரங்களினால் தலகனமுற்ற சூரபத்மன், தேவர்கள் அனைவரையும் சொல்லொண்ணா துன்பத்தில் ஆழ்த்தி அவர்களுக்கு கொடுமைகளை செய்து வந்தான். தேவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆகவே அவனால் துன்பமுற்ற தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று முறையிட அவரை தேடி அலைந்தார்கள். ஆனால் அவரை எங்குமே கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே, தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட முடிவு செய்தனர். அந்த நேரத்தில் சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.
ஆகவே அவர்கள் வேறு வழி இன்றி தவத்தில் அமர்ந்து இருந்த சிவபெருமானை எழுப்ப முயன்றார்கள். ஆனால் அவர் தவத்தையும் அவர்களால் கலைக்க முடியவில்லை என்பதினால் காதல் கடவுளான காமதேவன் எனும் மன்மதனை அனுப்பி அவர் தவத்தைக் கலைக்க வைக்க, அதனால் கோபமுற்ற சிவபெருமான் தனது தவத்தை கலைத்த மன்மதனை தனது மூன்றாம் கண்களினால் எரித்து விட்டார். அதைக் கண்டு பயந்து போன தேவர்கள் தாங்கள் செய்த தவறுக்கு அநியாயமாக மன்மதன் பலியாகி விட்டானே என வருத்தம் அடைந்து சிவபெருமானிடம் சென்று தங்களுடைய தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எரிந்து சாம்பலாகி விட்ட மன்மதனுக்கு மீண்டும் உயிர் பிச்சைக் கொடுக்குமாறு அவரிடம் வேண்டினார்கள். கருணைக் கொண்டு அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் எரிந்து சாம்பலாகி விட்ட மன்மதனை மீண்டும் உயிர் பிழைக்க வைத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக மன்மதனுடன் அந்த சாம்பலில் இருந்து பண்டாசுரன் என்ற இன்னுமொரு அசுரனும் வெளி வந்தான்.
அதுவும் பரமாத்மனின் விதியால் விளைந்த ஒன்றாகும். அவன் சூரபத்மனின் வம்சத்தை சேர்ந்தவன். எந்த ஒரு தாயின் கருவில் இருந்தும் வெளி வராத ஒரு பெண்ணால் மட்டுமே அவனுக்கு அழிவு ஏற்படும் என்ற வரத்தை பெற்று இருந்தவன். சாம்பலில் இருந்து வெளி வந்த அந்த அசுரனோ சூரபத்மனை விட அதிக துன்பங்களை தேவர்களுக்கு தந்து அவர்களை பல தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். சூரபத்மன் போதாதென்று பண்டாசுரனின் அட்டகாசத்தினால் அவதிப்பட்ட தேவர்கள் மீண்டும் விஷ்ணுவை தேடிச் சென்று அவரிடம் பண்டாசுரனின் கொடுமைகளைக் கூறி தம்மை அவன் பிடியில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினார்கள்.
சூரபத்மன் அழிய வேண்டும் என்றால் அதற்கு முன் பண்டாசுரன் மரணம் வேண்டும் என்ற விதி உள்ளது என்பதையும், பண்டாசுரனை ஒரு பெண்ணால் மட்டுமே அழிக்க முடியும் என்ற விதி இருந்தது என்பதையும் மஹாவிஷ்ணு உணர்ந்தார். பராசக்தியே படைப்பவள் மற்றும் தானே படைத்ததை அழிப்பவளும் ஆவாள் என்பதே பிரபஞ்ச தத்துவமாக இருந்தது (அவளே படைப்புக் கடவுள் பிரும்மனையும், அழிக்கும் கடவுளான சிவபெருமானையும் படைத்தவள் என்பதினால் இப்படியாகக் கூறப்பட்டது) என்பதினால், தேவர்களை அக்னி ஹோமம் வளர்த்து பார்வதியை தோன்ற வைத்து அவளிடம் முறையிடுமாறு அறிவுரைக் கூறி அனுப்பினார்.
அவர் கூறிய அறிவுரையின்படி அவர்களும் அக்னி வளர்த்து பண்டாசுரனை வதைக்க பார்வதி தேவியை வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்ய, தக்ஷ யாகத்தில் அவமானமுற்று தற்கொலை செய்து கொண்டு குறிப்பிட்ட காலம்வரை தவத்தில் இருந்த பார்வதி தேவியின் ஆத்மாவும் பழைய நிலையை அடைந்து விட, பார்வதி தேவியும் அவர்கள் முன் தோன்றினாள். தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னையை அவளிடம் தேவர்கள் கூறியபோது அவளும் பண்டாசுரனை அழிக்க அதே அக்னி குண்டத்தில் தனது சக்தியை இறக்கி அதில் இருந்து இருந்து அதி அற்புத சுந்தரியும், அழகில் நிகரற்றவளும், ஆறு சக்திகளை உள்ளடக்கியவுளுமான திரிபுரசுந்தரி எனும் ஒரு தேவியை வெளிப்பட வைத்தாள். திரிபுர என்பது ஆறு என்ற எண்ணைக் குறிக்கும் என்பதினால் ஆறு அபார சக்திகளை உள்ளடக்கிய அவளுக்கு திரிபுரசுந்தரி என்ற பெயர் வந்தது.
பார்வதி தேவியின் சக்தியில் இருந்து வெளியான தேவி திரிபுரசுந்தரியை, சிவபெருமான் காமேஸ்வரன் உருவில் தோன்றி மணந்து கொண்டார். தேவி திரிபுரசுந்தரி காமேஸ்வரன் உருவில் இருந்த சிவபெருமானை மணந்து கொண்டதும் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் பண்டாசுரனை அழிக்குமாறு வேண்டிக் கொள்ள, அவரும் தனது மனைவியான தேவி திரிபுரசுந்தரியிடம் அவர்களது வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்ள, தேவி திரிபுரசுந்தரி அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதி தந்தாள். ஆனால் பண்டாசுரனை கருவில் இருந்து வெளி வராத பெண் மூலமே கொல்ல முடியும் என்பதினால் என்ன செய்யலாம் என யோஜனை செய்தாள்.
பண்டாசுரனை எப்படி வதம் செய்யலாம் என அவள் யோசனை செய்தபோது அவளுக்கு முன்னொரு காலத்தில் நடைபெற்ற யுத்தம் ஒன்று நினைவுக்கு வந்தது. அந்த யுத்தத்தில் சிவபெருமானுக்கு துணையாக பூமாதேவி அவருக்கு தேராக மாற, சந்திர சூரியர்கள் அந்த தேரின் சக்ரங்களாகவும், மேரு மலை வில்லாகவும், விஷ்ணு அதன் அம்பாகவும் மாறிக் கொள்ள, பிரும்மாவும் தேரோட்டியாக அமர்ந்து கொண்டார். நான்கு வேதங்களும் மந்திர சக்தி வாய்ந்த வெல்ல முடியாத குதிரைகள் ஆயின. சிவபெருமானும் தமது உடலின் இருந்து வெளி வந்த சக்தியில் இருந்து பெரும் சேனையை வெளி வரச் செய்து அவர்களுடன் சேர்ந்து, தேவர்கள் மற்றும் அனைத்து கடவுட்களின் துணையுடன் அந்த யுத்தத்தில் வெற்றி பெற்ற ரகசியம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.
உடனடியாக திரிபுரசுந்தரி தேவி தனது உடலில் இருந்து லட்ஷக்கணக்கான பெண் தேவதைகளையும், லட்ஷக்கணக்கான யோகினிகள், மோகினிகள் என்ற துணை தேவதைகள் மற்றும் பெண்கள் மட்டுமே இருந்த சேனைகளையும் வெளி வரச் செய்தாள். அப்படி வெளி வந்த தேவதைகளில் அனிமா, மகிமா, பிராம்மி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, மகிந்தரி, சாமுண்டி மற்றும் மகாலஷ்மி போன்றவர்கள் அடங்குவார்கள். அவர்களுக்கு அந்தப் பெயர்கள் வரக் காரணமான கதைகள் தனியானது. அவர்களைத் தவிர தனக்குத் துணையாக பெண் ஆவர்ண தேவதைகளையும் படைத்தாள். ஒரு சக்கர ராஜ தேரில் அமர்ந்து கொண்டவளை சுற்றி (சக்ர ராஜ தேர் என்பதையே ஸ்ரீ சக்ர வாஹனம் என்பார்கள்), அணிவகுத்து இருந்த, முற்றிலும் பெண்களேயான தேவதை படையின் துணைக்கு, யானை, குதிரை போன்றவைகள் இருந்த காலட் படைகளையும் தனது சக்தியினால் வெளிக் கொண்டு வந்தாள். இந்த செய்தியை பிரும்மாண்ட புராணத்தில் லலிதோபாக்யானம் என்பதிலும் , ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமாவளியிலும் காணலாம்.
யானைப் படையின் தலைவியாக சம்பத்காரி தேவி என்ற தேவியைப் படைக்க, திரிபுரசுந்தரியின் கையில் இருந்த பாசபாணம் எனும் பாசக் கயிற்றில் இருந்து திரிபுரசுந்தரிக்கு யுத்தத்தில் பெரும் துணையாக இருந்து வெற்றியை தரக்கூடிய மிகப் பெரிய, கம்பீரமான, தூய வெள்ளைக் குதிரை மீது அமர்ந்து கொண்டு அஸ்வரூடா தேவி வெளி வர, அவளை தொடர்ந்து கோடிக்கணக்கான யுத்த குதிரைகளைக் கொண்ட குதிரைப் படையும் வெளி வந்தது. திரிபுரசுந்தரியின் உடலில் இருந்த சக்தியினால் வெளி வந்த அஸ்வரூடா எனும் தேவி சிவப்பு நிற சேலையில் இருக்க, அவள் கையில் தங்க நிறத்திலான சிறிய தண்டம் (அங்குசம்) ஒன்றும் காணப்பட, சூரியனை விட அதிக பிரகாசம் கொண்டவளாக தோன்றினாள். அஸ்வாரூடா தேவியின் கையில் இருந்த தண்டம் (அங்குசம்) ஐம்புலன்களை மட்டும் அல்லாமல் அனைத்து எண்ணங்களையும், ஆற்றல்களையும் அடக்கும் சக்தி கொண்டது அஸ்வாரூடா தேவியின் கையில் இருந்த தண்டம் (அங்குசம்) ஆகும். வெள்ளை வெளீர் என பளிச்சிட்ட அவளது குதிரை யாராலும் என்றுமே வெல்ல முடியாத சக்தி மிக்க குதிரையாக இருந்ததினால், அந்த சக்தியை குறிக்கும் சொல்லான அபராஜிதா என்ற பெயரை அந்தக் குதிரை பெற்றது.
யுத்தமும் துவங்கியது. முதலில் பண்டாசுரன் யுத்தத்தில் பங்கேற்கவில்லை. மாறாக அவனது சகோதரன் துர்மதன் என்பவனை அனுப்பினான். பண்டாசுரனின் சகோதரன் துர்மதனை சம்பத்காரி தேவி கொன்றதும், கோபமடைந்த பண்டாசுரன் அடுத்து தனது மூத்த சகோதரர் குருந்தன் என்பவனை போர்க்களத்திற்கு அனுப்பினான். குருந்தன் மாயா ஜால வித்தைகளில் தேர்ச்சி பெற்றவன். மாயைகள் செய்து எதிரிகளை வீழ்த்தும் நிபுணத்துவம் பெற்றவன். அதைக் கண்ட திரிபுரசுந்தரி தேவியும் உடனடியாக அவனுடைய மாயா ஜாலங்களை முடியடிக்க தனது குதிரைப் படையின் தளபதியான அஸ்வரூடா தேவியை அனுப்பினாள். அஸ்வரூடா தேவியும் உடனடியாக தனது வெள்ளை குதிரை அபராஜிதா மீது அமர்ந்து சென்று, அந்த அரக்கனைத் தாக்கினாள். அவளது நான்கு கைகளிலும் சுருக்கு கயிறு, அங்குசம், சிறிய பிரம்பு மற்றும் கடிவாளங்கள் காணப்பட்டன. அவளது குதிரைப் படைகளில் இருந்த குதிரைகள் வனயுஜா, கம்போஜா மற்றும் கைராதா போன்ற பல்வேறு உயர்ந்த இனங்களைச் சேர்ந்தவை. அவை தேவலோகக் குதிரைகள் என்பதினால் அனைத்தும் அஸ்வரூடா தேவியின் கட்டளைக்கு முழுமையாக கட்டுப்பட்டவாறு இருந்தன; யுத்த குதிரைக்கு தேவையான அனைத்து அடையாளங்களையும் கவசங்களையும் அணிந்து இருந்தவாறு, உரத்த சத்தம் எழுப்பியவாறு யுத்த களத்தில் பாய்ந்து சென்றன. குருந்தன் வேக வேகமாக தனது வடிவத்தை மாற்றிக் கொண்டே இருந்ததினால் அஸ்வரூடா தேவியும் மின்னல் வேகத்தில் தனது வலிமை மிக்க சக்திகளை எல்லாம் பயன்படுத்தி அவனது திட்டங்களை முறியடித்து, அவனது சக்திகளை எல்லாம் தனது தண்டத்தில் (அங்குசம்) உறுஞ்சிக் கொண்டு, அவனை ஜடமாக்கிய பின்னர், தனது கையில் இருந்த அதே தண்டத்தினால் (அங்குசம்) அசுரனின் மார்பைத் துளைத்து அவனை முற்றிலுமாக அழித்தாள். அவளுடைய குதிரைப் படையினரும் குருந்தனின் அனைத்து படையினரையும் அடியோடு அழித்தார்கள் .
அடுத்து பண்டாசுரன் 40 தளபதிகள் மற்றும் கோடிக்கணக்கான அசுர வீரர்களைக் கொண்ட ஒரு பெரிய படையுடன், குதிரைகளுக்குப் பதிலாக 1000 சிங்கங்களால் இழுக்கப்பட்ட தேரில் அமர்ந்து கொண்டு போர் களத்தில் வந்து நின்றான். முன்பு கூறியது போல, கோடிக்கணக்கான பெண் யுத்த தேவதைகளின் படையோடு அன்னை திரிபுரசுந்தரி தேவி ஸ்ரீ சக்கர தேரில் ஏறிக் கொண்டு யுத்த காலத்தில் வர, அவளுக்கு துணையாக சம்பத்காரி தேவி யானை மற்றும் பிற விலங்குப் படைகளை வழி நடத்திக் கொண்டு வர, அஸ்வாரூடா தேவியோ கோடிக்கணக்கான குதிரைப் படைகளுடன் வந்தாள். திரிபுரசுந்தரி தேவியின் படைகளைத் தடுக்க அசுரர்கள் தொடர்ந்து தடுப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்தனர், இருப்பினும், திரிபுரசுந்தரி தேவி காமேஸ்வரரின் (சிவன்) உதவியுடன் விநாயகரை உருவாக்கி, அவரைக் கொண்டு அனைத்து தடைகளையும் சிக்கல்களையும் தவிடு பொடியாக்கினாள்.
திரிபுரசுந்தரி தேவி விஷ்ணுவின் பத்து அவதாரங்களை உருவாக்கி, பண்டாசுரனால் மீண்டும் உயிர்பிக்கப்பட்ட, மரணம் அடைந்து போன பல்வேறு அசுர சூரர்களையும் அவர்களது தனித்துவமான சக்தியால் அழித்தார். இனி நேரத்தை வீணடிக்கக் கூடாது என நினைத்த திரிபுரசுந்தரி தேவி, அஸ்வாரூடா தேவிக்கு ஒரு சமிக்ஞையை வழங்க, அதிக நேரத்தை வீணாக்காமல், மின்னல் வேகத்தில் செயல்பட்ட அஸ்வாரூடா தேவி, பண்டாசுரன் மற்றும் அவனது படையினரின் அனைத்து சக்திகளையும் தனது விஷேச தண்டத்தில் (அங்குசம்) உள் வாங்கிக் கொண்டாள், அவ்வளவுதான், அனைத்து சக்திகளையும் சிந்திக்கும் திறன்களையும் இழந்து போன அசுரர்களினால் மேலும் போராட முடியவில்லை. அனைத்து சக்தியையும் இழந்து போன அசுரர்கள் ஜடம் போன்ற நிலைக்கு சென்று விட அஸ்வாரூடா தேவியின் கோடிக்கணக்கான குதிரை வீரர் படைகளால் கொல்லப்பட்டார்கள். அடுத்து திரிபுரசுந்தரி தேவியும் பண்டாசுரனைக் கொல்வதில் நேரத்தை வீணாக்காமல் அவனை வதம் செய்தாள்.
இந்த கதை எடுத்துக் காட்டும் தத்துவம் என்ன?
இதில் உள்ள தத்துவம் என்ன? அஸ்வாரூடா தேவியின் கையில் இருந்த தண்டம், பண்டாசுரன் மற்றும் அசுர சக்திகளின் அனைத்து புலன்களையும், சக்திகளையும், எண்ணங்களையும் உள்வாங்கி விட்டதினால்தான் சிந்திக்கும் திறனும் உடல் வலிமையையும் அழிந்து போய் ஜடமாக நின்ற அசுரர்களை திரிபுரசுந்தரி தேவியினால் எளிதில் வெல்ல முடிந்தது. பண்டாசுரனை அழித்தது என்பது அவன் உடலை அழித்த நிலை ஆகும். அவன் ஆத்மாவை அல்ல. ஏன் எனில் அவனது அனைத்து புலன்களையும் உள்ளடக்கிய ஆத்மாவை தன் தண்டத்தில் முதலிலேயே இழுத்துக் கொண்டு விட்டதின் மூலம் அவனை தன் வசம் இழுத்துக் கொண்டு விட்டாள். ஒரு ஆத்மாவின் ஜனனமும், மரணமும் ஒரே இடத்தில்தான் அதாவது பராசக்தியிடம் உற்பத்தி ஆகி பராசக்தியிடமே முடிவையும் அடைகின்றது என்பதை எடுத்துக் காட்டவே ஐம்புலன்களையும், சக்திகளையும், எண்ணங்களையும் கொடுத்து பண்டாசுரனை படைத்த அந்த பராசக்தியே முதலில் அவனுடைய ஐம்புலன்களையும், சக்திகளையும், எண்ணங்களையும் தன்னுடைய இன்னொரு அவதாரமான அஸ்வாரூடா தேவி மூலம் தன்னிடம் திரும்ப எடுத்துக் கொண்டு தன்னுடைய இன்னொரு அவதாரமான திரிபுரசுந்தரி தேவி மூலம் அவன் உடலை அழித்து தன்னிடமே அழைத்துக் கொண்டு விட்ட நிலை ஆகும்.
மன விடுதலையின் உச்ச நிலையை எவ்வாறு எட்டுவது என்பதை எடுத்துக் காட்டுவதே இதன் இரண்டாவது தத்துவம் ஆகும். அசுரன் பண்டாசுரன் தனது அனைத்து புலன்களையும் மன சக்தியையும் இழந்து, சிந்திக்கும் செயல்களையும் இழந்து விட்டதினால் அமைதியாக , கண் சிமிட்டும் நேரத்தில் ஒரு பிரேதமாக உள்ள நிலைக்கு சென்று, தன்னைப் படைத்த பராசக்தியின் கைகளில் மரணத்தை எதிர்கொண்டான். இது ஒருவரின் வாழ்க்கையின் முடிவில் தெய்வீகத்துடன் இணைவதற்கான ஒரு முன்மாதிரி ஆகும். பண்டாசுரன் தெய்வீகத்துடன் இணைந்ததை போன்று, தாமும் மன விடுதலை அல்லது ஆத்ம விடுதலை அடைய வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு சாதகனும், முதலில் தங்கள் ஐந்து புலன்களையும், கட்டுப்பாடற்ற குதிரை பாய்ந்து செல்வதை போல அலைபாயும் மனதின் எண்ணங்களையும் கட்டுப்படுத்தி வைத்து விடும்போது, நிதர்சனமான உண்மை என்ன என்பது அவனுக்கு புரியத் துவங்கும். அந்த நிலையில் சென்று விடுபவன் பண்டாசுரனின் நிலைக்கு ஒப்பான -ஜடம் போன்ற நிலையை அடைந்து, விடுதலையின் பாதையில் நுழைந்து விடுவான்; இறுதியில் அவன் முக்தியை அடைகிறான் அல்லது அவன் விரும்பிய முழுமையான ஞானத்தைப் பெறுகிறான். பண்டாசுரன் தனது உடல் அழிக்கப்பட்டு மரணத்தை சந்தித்து தெய்வத்துடன் இணைந்தான், இங்கே தனது அனைத்து எண்ணங்களையும், ஐம்புலன்களையும் அழித்துக் கொண்டு விடும் சாதகனோ பரிபூரணமான அமைதி உலகில் நுழைகிறான். இது மட்டுமே சாதகனின் நிலைக்கும் அசுரன் பண்டாசுரனின் நிலைக்குமான வித்தியாசம் ஆகும்.
இந்தக் கதையின் மூன்றாவது தத்துவம், ஒவ்வொருவர்களுடைய ஐம்புலன்கள் மற்றும் மன சக்தியைக் கட்டுப்படுத்தும் தேவியே அஸ்வாரூடை என்ற உண்மையை வெளிப்படுத்தியது ஆகும். தக்ஷ்ய யாகம் நடை பெறாவிடில், சிவபெருமானும் பார்வதியும் தவத்தில் அமர்ந்திருக்க மாட்டார்கள். சிவபெருமான் தவத்தில் அமர்ந்திருக்காவிட்டால், மன்மதன் அவரது தவத்தைக் கலைத்து இருக்க மாட்டான். சிவபெருமானின் தவத்தை மன்மதன் கலைக்காமல் இருந்திருந்தால், மன்மதன் எரிக்கப்பட்டு இருக்க மாட்டார், உயிர் இழந்த மன்மதன் சாம்பலில் இருந்து உயிர் பிறப்பிக்கப்படாமல் இருந்திருந்தால் அதே சாம்பலில் இருந்து அசுரன் பண்டாசுரன் பிறந்திருக்க மாட்டான். பண்டாசுரன் பிறக்காவிடில் திரிபுரசுந்தரி தோன்றி இருக்க மாட்டாள். தக்ஷய யாகத்தின் போது உயிரிழந்து ஆழ்ந்த தவத்தில் சென்று விட்ட பார்வதி தேவி, தவத்தை கலைத்துக் கொண்டு வந்திருக்காவிடில் திரிபுரசுந்தரி தேவி வெளிப்பட்டிருக்க மாட்டாள். பண்டாசுரனை அழிக்க திரிபுரசுந்தரி தேவி அனுப்பப்படாமல் இருந்திருந்தால், அஸ்வாரூடா தேவி வெளிப்பட்டிருக்க மாட்டாள். இதனால்தான் துவக்கத்திலேயே அஸ்வாரூடா தேவி எவ்வாறு வெளிப்பட்டாள் என்பதை கூறும் முன் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து உள்ள கதையைக் கூற வேண்டி உள்ளது எனக் கூறப்பட்டது.
அஸ்வாரூடா தேவியின் மேன்மை
லலிதோபாக்யானம் என்பது பிரம்மாண்ட புராணத்தின் கடைசி 40 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு நூலாகும். இது திரிபுரசுந்தரி தேவியின் கதை மற்றும் மகிமைகளை விவரிக்கிறது, இதில் அவளுடைய அவதாரம், பண்டாசுரனுடனான போர் மற்றும் அவனை அழித்த நிகழ்வுகள் ஆகியவை அடங்கும். இந்த நூல், ஹயக்ரீவர் மற்றும் அகத்தியர் இடையே நடக்கும் உரையாடல் வடிவில் உள்ளது.
பண்டாசுரனை அழிப்பதற்கு முன்பு அவனது எண்ணங்களை செயல் அற்றதாக ஆக்கி விட்ட அஸ்வாரூடா தேவியின் செயல், ஒருவரது புலன்களையும் எண்ணங்களையும் முற்றிலும் கட்டுப்படுத்தும் தெய்வம் அஸ்வாரூடா தேவி என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டும்; மன எண்ணங்களையும், ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவது தொடர்பான வழிபாட்டு மையமாக அஸ்வரூடா தேவி காணப்படுகின்றார்.
எவன் ஒருவன் ஆத்ம விடுதலை அல்லது மன விடுதலை பெற ஆர்வம் கொண்டவனாக இருப்பானோ அவன் முதலில் ஆராதிக்க வேண்டிய தெய்வமே அஸ்வாரூடா தேவி என்பதாகும். ஏன் என்றால் முன்னரே கூறியபடி ஞான நிலை பெற விரும்பவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்களது ஐம்புலன்களையும், மனதின் எண்ணங்களையும் கட்டுப்படுத்தக் கூடிய தெய்வம் அஸ்வாரூடா தேவி மட்டுமே என்பதினால் ஞான நிலையை அடைய விரும்புபவர், சாதனாவை துவங்கும் முன்னர் அஷ்வாரூடா தேவியை பிரார்த்தனை செய்து விட்டு தியானத்தை தொடர்வது பெரிய பலனைத் தரும். அஸ்வரூடா தேவியின் பாதங்களில் சரணடைந்து, அவளுக்குரிய பீஜ மந்திரங்களால் அவளை ஆராதனை செய்யும் போது, நமது அலைபாயும் எண்ணங்களையும், ஐம்புலன்களையும் தமது தண்டத்தில் (அங்குசம்) உள் வாங்கிக் கொண்டு, வாழ்க்கை பயணத்தின் அமைதியான பாதையில் செல்ல அவள் அருள் புரிவாள். அவன் விரும்பிய மேலான ஞான நிலையை எட்டுவான்.
பண்டாசுரனை அழித்த நிலை என்பது எடுத்துக் காட்டுவது என்ன என்றால் ஒருவரது ஐம்புலன்களையும், எண்ணங்களையும் அழித்து விட்டால் ஒருவரது மனம் சிந்திக்கும் திறனை இழந்து ஜடமாகி ஆகி விடுகின்றது என்பதை வெளிப்படுத்தும் நிலை ஆகும். பண்டாசுரன் கட்டுப்பாடற்ற புலன் ஆசைகள் மற்றும் உலகப் பற்றுகளின் உருவம்; அப்படிப்பட்ட நிலையில் உள்ள எவருமே ஆன்மீக ரீதியிலான உயர்ந்த நிலைகளை அடைய முடியாது.
ஆன்மீக விழிப்புணர்வு பெற்று அமைதியான வாழ்க்கை பயணத்தில் பயணிக்க, ஒருவர் முன் உள்ள முதல் நுழை வாயில் ஐம்புலன்கள் மற்றும் அலை பாயும் எண்ணங்கள் மீதான கட்டுப்பாடு என்றாலும், ஆன்மீக விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக குடும்ப வாழ்க்கை அல்லது உலக பந்தங்களில் இருந்து முற்றிலுமாக விலகி நிற்க வேண்டும் என்பது அவசியமில்லை. குடும்பம் மற்றும் சமுதாயத்தில் இருந்தவாறே ஆன்மீக வாழ்க்கையையும் நிச்சயமாகத் தொடரலாம். இரண்டையும் உள்ளடக்கிக் கொண்டு செல்வதே நல்ல ஒரு வாழ்க்கை நெறிமுறை ஆகும். குடும்ப வாழ்க்கையோடு சேர்ந்த ஆன்மீக பாதையை ஒருவர் பின்பற்ற விரும்பினால், புலன்களையும், அலைபாயும் மனதையும் கட்டுப்படுத்திக் கொள்ள அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அஸ்வாரூடையின் பாதங்களில் சரணடைய வேண்டும். குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் அஸ்வாரூடா தேவியின் வழிபாட்டில் தம்மை இணைத்துக் கொண்டிருந்தால் அவர்களது வாழ்க்கை அமைதியானதாக இருக்கும்.
பண்டாசுர யுத்தம் முடிந்தது முதல் உலகெங்கும் இருந்த மன்னர்கள் அடுத்த நாடுகள் மீது படையெடுத்து தம் ஆட்சியில் அந்த நாட்டை இணைத்துக் கொள்ள எண்ணியபோது முதல் படியாக அஸ்வமேத யாகத்தை செய்யலானார்கள். தாம் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அஸ்வமேத யாகம் செய்து, அந்த யாகத்தில் பிரதானமாக அஸ்வாரூடை தேவியை பிரார்த்தனை செய்து கொண்டு தனது நாட்டு கொடியுடன் கூடிய அஸ்வாரூட யாக தண்டத்தை (அங்குசம்), யாக குதிரை மீது கட்டி, அதை எந்த நாட்டைக் கைப்பற்ற எண்ணினார்களோ அடுத்த நாடுகளில் ஓட விடுவார்கள். அந்த குதிரை எந்த நாடுகளில் எல்லாம் தடை இன்றி ஓடிச் செல்லுமோ அந்த நாட்டு அரசர்கள் தாம் யுத்தம் செய்ய விரும்பவில்லை என சரண் அடைந்த நிலையை காட்டியது. ஆனால், எந்த நாட்டு மன்னன் அந்த குதிரையின் ஓட்டத்தை தடுத்து நிறுத்த முயல்வானோ அவர்கள் யுத்தம் செய்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள நேரிட்டது.
அஸ்வாரூடா தேவி எப்படி பண்டாசுரனின் புலன்களையும் சக்தியையும் தமது தண்டத்தில் (அங்குசம்) அடக்கிக் கொண்டு வெற்றி கொண்டாளோ, அதைப் போலவே அஸ்வமேத யாகத்தில் அஸ்வாரூடையின் அருளைப் பெற்ற மன்னர்களும், எதிரி நாட்டு மன்னர்களின் சக்தியையும் யாக குதிரையின் மீது வைத்துள்ள அஸ்வாரூட தண்டம் (அங்குசம்) தன்னுள் அடக்கிக் கொண்டு விடும், அப்போது அவர்கள் தமது பலத்தை இழந்து தம்மிடம் சரண் அடைந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை கொண்டார்கள். முதலில் அஸ்வாரூடா யாகம் என்றே அழைக்கப்பட்டு வந்திருந்த யாகம், காலப் போக்கில் இன்னும் பல மந்திரங்களை உள்ளடக்கிய யாகமாகி அஸ்வமேத யாகம் என மருவியது என்பதாக பண்டிதர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். அஸ்வா என்பது குதிரையைக் குறிப்பதாகும். அஸ்வரூடா தேவியை வழிபடுவதின் மூலம் செல்வம், வாழ்க்கையில் மேன்மை மற்றும் முயற்சிகளில் வெற்றி போன்ற நன்மைகளும், ஞானம் மற்றும் ஆத்ம விடுதலைக்கு வழி காட்டும் ஆன்மீகப் பாதையையும் காட்டுகின்றது என்பதாக நம்புகின்றார்கள்.
அஸ்வாரூடா தேவியின் தோற்றமும், தன்மைகளும்
சில பண்டிதர்கள் தேவி அஸ்வாரூடா என்பவள் துர்கா தேவியின் அவதாரமாக கூறுகின்றார்கள் இன்னும் சிலர் அவளை பார்வதி தேவியின் அவதாரமாகக் கருதுகிறார்கள். ஆனால், ஒரு உண்மையை எவரும் உணரவில்லை, எந்த பெண் தெய்வம் என்றாலும் அவர்கள் ஏதோ ஒரு வகையில் பராசக்தி தேவியின் அவதாரங்கள்தான். காரணம் பார்வதி தேவி எனும் ஆதி பராசக்தியே பல்வேறு தோற்றங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள, அந்த அவதாரங்கள் மூலமாகவே வேறு பல பெண் தெய்வங்களும், வெவ்வேறு வடிவங்களிலும், தோற்றங்களிலும் வெளிப்பட்டார்கள். ஆக பெண் தெய்வங்களின் வெளிப்பாட்டின் மையப் புள்ளி பராசக்தி தேவி மட்டுமே ஆவார் என்பதினால் பராசக்தியின் எண்ணற்ற அவதாரங்களில் ஒரு அவதாரமே அஸ்வாரூடா தேவி என்பதே உண்மை ஆகும்
பண்டாசுரனுடனான யுத்தத்தின்போது, திரிபுரசுந்தரி தேவியின் பாசபாணம் எனும் பாசக் கயிற்றில் இருந்து எனப்படும் கயிற்றில் இருந்து அஸ்வாரூடா தேவி வெளிப்பட்டவள் என்று பொதுவாக நம்பப்படுகிறது. திரிபுரசுந்தரியை லலிதாம்பிகை என்றும் அழைக்கின்றார்கள். லலிதா சகஸ்ரநாம நாமாவளியில், லலிதாம்பிகை தேவியை போற்றி கூறப்படும் 1000 நாமாவளியில், அஸ்வாரூடா தேவியின் பெயர் 67ஆம் வரிசை எண்ணில் காணப்படுகிறது. அதில் அவரைக் குறித்துக் கூறுகையில் ‘அஸ்வரூடாதிஷிதாஸ்வ கோடி கோடி பிருவ்ருதா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ‘கோடிக் கணக்கான குதிரைப் படைகளால் சூழப்பட்ட அஸ்வாரூடா தேவி’ என்பது அர்த்தம் ஆகும். அஸ்வாரூடா தேவி நான்கு கைகளைக் கொண்டவராக காணப்படுகின்றார் என்கின்றார்கள்; அவற்றில் ஒன்றில் ஆசைகளைக் கட்டுப்படுத்துவதைக் குறிக்கும் பாசக் கயிறு காணப்படுகின்றது ; இரண்டாவது தண்டம் (அங்குசம்) எனப்படுகின்றது. அது தடைகளை அகற்றி வழி நடத்தும் சக்தியைக் குறிக்கிறது; மூன்றாவதில் ஒரு சிறிய தடி போன்ற ஒன்று அதாவது (சில நூல்களில் இது கரும்பு) அனைத்தையும் கட்டுப்படுத்துவதையும், நான்காவதில் மனம் மற்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் கடிவாளம் போன்ற ஒன்று காணப்படுகின்றது. அவள் சிவப்பு நிற சேலை அணிந்திருக்கிறாள். திரிபுரசுந்தரியின் குதிரைப் படையின் தலைவராக அஸ்வாரூடா தேவி உள்ளதினால், அஸ்வரூடா தேவியின் முகம் குதிரையின் முகம் போல இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அவள் மகிழ்ச்சியான முகத்தோடு காணப்படுகிறாள். அவள் எப்போதும் அபராஜிதா என்ற தூய வெள்ளைக் குதிரையின் மீது அமர்ந்திருப்பதைக் காணலாம்.
அஸ்வாரூடா தேவியின் தியான மந்திரம்
தினமும் குளித்தப் பின் 108 முறை கீழ்கண்ட ஸ்லோகத்தை ஜபம் செய்தால், நமக்கு ஏற்படும் தீமைகள் அழியும் என்பார்கள். அந்த ஸ்லோகம் இது:
‘’அம்பிகா அனாதினிதனா அஸ்வாரூடா அபராஜிதா’’
இந்த பிரார்த்தனையின் பொதுவான அர்த்தம் இது :-
”உலகைக் காக்கும் அம்பிகையின் சக்தியில் இருந்து வெள்ளை குதிரை மீது அமர்ந்தபடி வெளி வந்துள்ள அஸ்வாரூடை தேவியே, உன்னை நான் மனதார தியானிக்கிறேன். நீயே என்னுடன் இருந்து கொண்டு, அலை பாயும் என் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியை கொடுத்து என்றும் அமைதியோடு இருக்க எனக்கு அருள் புரிய வேண்டும். தேவியே உன்னிடமே நான் என் மனதை முழுமையாக சரணடைய வைக்கின்றேன்”.
அதைப் போலவே அஸ்வாரூடை படத்தை வீட்டு வாயிலில் காவல் தெய்வமாக மாட்டி வைத்தால் வீட்டில் தீய சக்திகள் நுழைய முடியாது. காரணம் அஸ்வாரூடை எதிரில் வரும் தீய சக்திகளின் அனைத்து சக்திகளும் அவள் கையில் உள்ள தண்டத்தில் (அங்குசம்) அடங்கி விடுவதினால் தீய சக்திகளினால் வீட்டில் நுழைந்து தீமைகளை விளைவிக்க முடியாது. அப்படி நுழைந்தாலும் வீட்டில் உள்ளவர்களை அவற்றினால் ஒன்றும் செய்ய இயலாது போய்விடும். இதனால்தான் இன்றுள்ள நிலையில் அமைதி கிடைக்க அஸ்வாரூட யாகங்கள் மற்றும் ஹோமங்கள் மீண்டும் அங்காங்கே நடக்கத் துவங்கி உள்ளன. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வைகோம் மகாதேவர் ஆலயத்தில் அஸ்வாரூடையின் யாகமும், ஹோமமும் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். மரத்தால் ஆன அவரது உருவக் சிலை கேரளாவின் துறவூர் நரசிம்ம சுவாமி ஆலயம் மற்றும் கவியூர் ஆலயத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.