காலம் காலமாக இந்தியாவின் பல கிராமங்களிலும் உள்ள கிராம மக்கள் கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பல்வேறு பூதங்களை வழிபாடு செய்தவண்ணம் இருக்கிறார்கள். கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பல்வேறு பூதங்களுக்கு தம் மீது உள்ள கோபம் காரணமாக தமது சக்திகளை கொண்டு அவை அதி பயங்கரமான நோய் நொடிகளை பரப்பி, அகால மரணங்களை நிகழ்த்தி, குடும்பங்களின் ஒற்றுமையை சிதைத்து கிராமத்தில் நிம்மதியை அழிக்க முயலும் என மக்கள் நம்பியதினால் அவற்றின் சீற்றங்களை தணிப்பதற்கு அவைகளை ஆராதித்து வழிபடுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களில் பெரும்பான்மையோர் வேளாண்மை மற்றும் கைத்தொழில்களில் ஈடுபட்டு கிராமங்களில் வசிக்கும் சமூகத்தினர் ஆவர். ஆனால் இப்படிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பூதங்களை வழிபடுவது இந்திய கிராமங்களில் மட்டுமே நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்ல, இப்படிப்பட்ட நம்பிக்கைகள் வனப் பிரதேசங்களையும், மலைப் பகுதி வாழ் மக்களையும் அதிகம் கொண்டுள்ள ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் சில இடங்களில் உள்ளன என்பதே உண்மை நிலை ஆகும். காலமாக இருந்து வரும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான இப்படிப்பட்ட வழிபாட்டு முறை பெரும் அளவிலான நாகரீகம் அடைந்துள்ள நிலையிலும் இன்னமும் அதே வேகத்துடன் தொடர்ந்து கொண்டு உள்ளன என்பதும் வியப்புக்குறிய செய்தியாகும்.
முன் காலத்தில் கிராமங்களில் இருந்த கிராமிய மக்கள் பல்வேறு காரணங்களினால் ஆவிகள், பூதங்கள் மற்றும் கிராம தேவதை  போன்றவை தமது கிராமங்களுக்கு வருகை தருவதாகவும் அதற்குக் காரணங்கள் கீழுள்ளவை என்றும் நம்பினார்கள்:
  • அந்த கிராமங்களில் வாழ்ந்தவர்களின் ஆவிகள்
  • அங்கு வசித்து வந்தபோது அகால மரணம் அடைந்தவை
  • அந்த கிராமங்களில் அவர்களது நெருங்கிய சொந்த பந்தம் அல்லது விரோதிகள் வசித்து வந்துள்ளனர்
  • தமது அகால மரணத்துக்குக் காரணமானவர்களை பழி வாங்க அங்கு வருகின்றன
  •  புராணங்களின் கூற்றின்படி ஒருவர் மரணம் அடைந்து விட்டாலும் மீண்டும் அந்த  ஆத்மா மறு பிறப்பு எடுக்கும்வரை தமது நெருங்கிய சுற்றத்தாரைப் பாதுகாக்கவும், தமது பசி மற்றும் தாகத்தை தீர்த்துக் கொள்ளவும் தாம் வாழ்ந்த இடத்தில் வந்து தங்குகின்றன
இவற்றை எல்லாம் தாண்டி உள்ள நம்பிக்கை என்னவென்றால் நல்ல ஆத்மாக்கள் தமது கிராமங்களில் வந்து தங்கி இருக்கையில் அவை அந்த கிராமத்தின் காவல் தெய்வமாக இருந்து கொண்டு தமது பூர்வ ஜென்ம பாபங்களின் விளைவாக தீய ஆவிகளாகி வானுலகில் சுற்றித் திரிந்து கொண்டு இருக்கும் ஆவிகள் அந்த கிராமங்களில் நுழைய முயன்றால் அவற்றை அடித்துத் துரத்துவதுடன் இயற்கையின் சீற்றங்களான புயல், பெரும் மழை மற்றும் வெள்ளங்களினால் ஏற்படும் தாக்கங்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்துகின்றன என கிராம மக்கள் நம்பினார்கள். அப்படிப்பட்ட நல்ல ஆவிகள் மற்றும் பூதங்களை வழிபட்டு துதிக்காவிடில் அவை கோபம் அடைந்து கிராமத்தில் தீராத நோய் நொடிகளை பரப்பி சொல்லொணா துயரங்களுக்கு தம்மை ஆளாக்கும் எனவும் பயந்தார்கள். இந்த காரணங்களினால் கிராம மக்கள் ஆவிகள் தத்தம் கிராமங்களில் தமக்கு உதவும் என நினைத்த கிராம தெய்வங்களை ஸ்தாபிக்களானார்கள்.
இன்னென்ன பாவங்களுக்கு இன்னென்ன தண்டனை கிடைக்கும் என்றும் தீமைகளை செய்பவர்கள் தீய ஆவிகளாக மாறுவார்கள் எனவும் ஆகவே அவற்றை தடுத்து நிறுத்திக் கொள்ள பல்வேறு தெய்வங்களுக்கு பரிகார பூஜைகளையும், பிரார்தனைகளையும் செய்ய வேண்டும் என்றும் புராணங்களில் கூறப்பட்டு உள்ளன. வேத நியமங்களின்படி தீமைகளை செய்பவர்கள் ராக்ஷசர்களாகவோ அல்லது அசுரர்களாகவோ பிறந்து தனிமைக் காடுகளில் பசியோடு அலைந்து திரிவார்கள் என்றும், வேறு சிலர் தீய ஆவிகளாக மாறி பசியோடும், தாகத்தோடும் வானில் சுற்றித் திரிவார்கள் என்றும், பல்வேறு செய்திகள் காலம் காலமாக மக்களின் மனதில் ஒரு பய நிலையை தோற்றுவித்ததினால் கிராம மக்கள் தம்மை அப்படிப்பட்ட தீய ஆத்மாக்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள தக்க வழிமுறைகளைத் தேடி அலைந்து கீழ் கண்ட காரியங்களை செய்யத் துவங்கினார்கள்.
  • கிராம தேவதைகளை, பூதங்களை, தூய ஆத்மாக்களைஆராதித்தல்
  •  ஆத்மாக்கள் அமர்ந்திருந்த பாறைகள் , நிழல் தரும் மரங்கள் போன்ற இடங்களை வழிபாட்டுத் தளங்களாக மாற்றி அமைத்து அங்கு வழிபடுவது
  • அப்படி தாம் ஸ்தாபித்த கிராம தேவதைகளுக்கும், ஆத்மாக்களுக்கும் வருடாந்திர பண்டிகைகள் நடத்தி வழிபடுவது
கிராம மக்கள் களிமண்ணால் ஆன ஆண் மற்றும் பெண்களின் சிலைகளை செய்து அவற்றை கிராம எல்லைகளில் வைத்து கிராம தேவதைகளாக வழிபடலானார்கள். அப்படி செய்வதின் மூலம் அவை தமது கிராமத்தை பாதுகாக்கும் என நம்பினார்கள். இப்படிப்பட்ட நிலை கிராமங்களில் இருந்தாலும் தனிப்பட்ட முறையிலும் தமது வீடுகளில்   வேறு ஒரு வழிபாட்டு முறையையும் வைத்து இருந்தார்கள். தமது முதியோர்கள் மறு பிறப்பு எடுக்கும்வரை அவர்கள் ஆவிகளாக சுற்றித் திரிவதாக நம்பியதினால் அந்த ஆவிகளை வணங்கித் துதிப்பதின் மூலம் அவர்களது ஆசிகளைப் பெற முடியும் என்றும் அதன் மூலம் தமது வீட்டில் நன்மைகள் விளையும் என நம்பினார்கள். ஆகவே தமது வீடுகளில் சுவற்றில் சில குறிப்பிட்ட சின்னங்களை வரைந்து வைத்தோ அல்லது அந்த சின்னங்களைப்  போன்ற பொருட்களை வைத்தோ  அதன் முன் ஒரு எண்ணை விளக்கு ஏற்றி வைத்து, பூ மாலைகளை சூட்டி தினமும் வணங்கித் துதித்தார்கள். அப்படி அவர்களுக்கு மரியாதை தராமல் அவமரியாதை செய்தால் அவர்களுடைய கோபத்துக்கு ஆளாகி தீராத நோய் மற்றும் வியாதிகள் வந்து தம் குடும்பத்தினர் அவதியுறுவார்கள் என நம்பியதினால் அந்த ஆவிகளுக்கும் தத்தம் வீடுகளில் மரியாதை செலுத்தலானார்கள்.
இவற்றைத் தவிர அவரவர் வீடுகளின் வாயிலில் பசு சாணம் தெளித்து காயவைத்த தரையில் ஸ்வஸ்திக், வட்ட வடிவங்களின் நடுவில் பொட்டு போன்றவற்றை வரைந்து வைத்து அவற்றுக்கு மஞ்சள் குங்குமம் பூசி வைத்தார்கள். பசுவின் சாணம் தெய்வீகம் மிக்கது, மஞ்சளும், குங்குமமும் ஆண் மற்றும் பெண்களின் சக்திகளைக் கொண்டவை மற்றும் வீடுகளில் வரையப்பட்டுள்ள அந்த குறிப்பிட்ட சின்னங்கள் ஆண் மற்றும் பெண்களின் யந்திரங்கள் என்றும் அதில் அந்த தெய்வங்களின் சக்தி அடங்கி உள்ளது, சின்னங்களின் நடுவில் உள்ள போட்டு பொட்டு சிவபெருமானின் நெற்றிக் கண்ணைப் போன்றது என்றும் பயந்து எந்த ஆவிகளும் அவற்றைத் தாண்டிச் செல்லாது என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்தது.
இவற்றை எல்லாம் மனதில் கொண்டு கிராம மக்கள் களிமண்ணால் ஆன சிலைகளை வடிவமைத்து அவற்றை தத்தம் கிராம எல்லையின் நுழைவிடத்தில் வைத்து அவற்றை காவல் தெய்வமாக வணங்கத் துவங்கினார்கள்.  பல கிராமங்களின் நுழை வாயிலில் இன்றும் கையில் கத்தி, வாள் மற்றும் பிற ஆயுதத்தை ஏந்திய ஆண் மற்றும் பெண்களின் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளதைக் காண முடியும். முருகப் பெருமானுக்கு துணைவராக கடம்பன் உள்ளது போல, அம்மனுக்கு துணையாக முனீஸ்வரன் காவலில் உள்ளதைப் போல தாம் வைத்துள்ள காவல் தெய்வங்களின் சிலைகளுக்குள் குடி உள்ள நல்ல ஆத்மாக்கள் தமது கிராமத்தை பாதுகாத்து, ஊருக்குள் நுழைய முயலும் தீய ஆவிகளை விரட்டி அடித்தவண்ணம் இருக்கும் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள்.
பல கிராமத்துக்குள் நுழையும்போது அவற்றின் நுழை வாயில் பகுதிகளில் களிமண்ணால் செய்யப்பட்ட உருவ சிலைகள் மட்டும் அல்லாமல் அவர்களுக்கு அருகில் ஏதாவது ஒரு மிருகமும் நின்று கொண்டு இருப்பதைக் காணலாம். அவற்றில் சில உருவங்கள் கொடூரமான தோற்றத்தில், கையில் ஏதாவது ஆயுதத்துடனும், அவர்கள் பக்கத்தில் பெரும்பாலும் குதிரை அல்லது வேறு ஏதாவது மிருகத்துடன் நின்று கொண்டு இருப்பதைக் காணலாம். குதிரைக்கு ஒரு விஷேச குணம் உண்டு. அவற்றுக்கு சற்று தொலைவில் நிற்கும் பேய் மற்றும் பூதங்கள் கூட தெளிவாக கண்களில் தெரியுமாம். ஆகவேதான் குதிரைக்கு முக்கியத்துவம் தந்து கிராம தெய்வங்களின் வாகனமாக அதை பல கிராமங்களிலும் வைத்து உள்ளார்கள். தூரத்தில் இருந்தே தீய ஆவிகளை அடையாளம் கண்டு கொள்ளும் கிராம தெய்வங்கள் அந்த குதிரை மீது ஏறிக் கொண்டு விரைவாக தீய ஆத்மாக்களின் அருகில் சென்று அவர்களை அடித்துத் துரத்தும் என்பது நம்பிக்கையாக உள்ளது. யார் யாரை எல்லாம் கிராம காவல் தெய்வங்களாக கருதுகிறார்கள் ? காவல் தெய்வம் ஆண் அல்லது பெண்ணாக இருந்தாலும் அந்த கிராம தேவதை :
  • அந்த ஊரில் பிறந்தவர்களாக இருப்பார்கள்
  • கிராம மக்களின் நலனுக்காக உழைத்தவர்களாக  இருப்பார்கள்
  • அநீதி மற்றும் அக்கிரமங்களை எதிர்த்து நின்றவர்களாக இருந்திருப்பார்கள்
  • யுத்தங்களில் பங்கேற்று மரணம் அடைந்தோ அல்லது யாரையாவது காப்பாற்ற எண்ணி அந்த நிகழ்ச்சியில் மரணம் அடைந்து இருப்பார்கள்
  • யாராவது அவர்களை வேண்டும் என்றே கொலை செய்யப்பட்டு  இருப்பார்கள்

கிராம தெய்வங்களில் சிலருடைய கதைகள் சுவாரஸ்யமானவை. கிராம மக்களின் மூலம் கொலை செய்யப்பட்டு இருந்தவர்களின் ஆத்மா அங்கு உலவியவாறு இருந்து கொண்டு இயற்கை அழிவுகளான வெள்ளம், புயல் போன்றவற்றை உருவாக்கும். அல்லது நதிகளின் அணைக்கட்டுக்களை உடைத்து வெள்ளத்தை உருவாக்கும் என்பதினால் அவற்றின் சினத்தை தணிக்கும் வகையில் அவற்றை போற்றி வணங்கி வந்தால் கிராமத்துக்கு அவை பாதுகாப்பாக இருக்கும் என்பது நம்பிக்கையாக இருந்தது. இப்படியாக ஒவ்வொரு கிராம தெய்வத்தின் தோற்றத்துக்கும் வழிபாட்டுக்கும் பல கதைகள் தனித்தனியே உள்ளன.

அனைத்து கிராம தெய்வங்களின் சிலைகளும் குறிப்பிட்ட வடிவம் தரப்பட்டு  அமைந்தவை அல்ல. சில கிராமங்களில் காணப்படும் தெய்வங்களின் உருவங்கள் வெறும் கற்கள் (கிராம தேவதைகளாகக் கருதி) மட்டுமே. எந்த உருவமும் கொண்டிராத அந்த கற்கள் கருங்கல் பாறைகளின் மீது வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன. மேலும் சில கிராம தேவதைகளின் உருவங்களை பாறைகளின் மீதும் வரைந்து வைத்து உள்ளார்கள்.

அனைத்து கிராம தேவதைகளும் களிமண்ணால் செய்யப்பட்ட உருவ அமைப்பைக் கொண்டதாகவும் இருந்திடவில்லை. சில கிராமங்களில் மறைந்தவர்களின் ஆத்மாக்கள் அமர்ந்து இருந்த பாறைகளை வழிபாட்டுத் தலமாக மாற்றி அமைத்து உள்ளார்கள். பூதமோ, ஆத்மாவோ  இல்லை கிராம தேவதையோ, எதுவாக இருந்தாலும் சரி அவர்களது உருவங்களாக செய்து வைக்கப்பட்டு  வழிபடப்படும் சிலைகள் அல்லது பாறைகள் என அனைத்திலும் அவர்களது ஆவிகள் குடி கொண்டு இருக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது என்பதினால் களிமண்ணால் செய்து வைக்கப்பட்ட சிலையானாலும் சரி, வெறும் கல்லாக இருந்தாலும் சரி, வழிபடப்படும் கிராம தெய்வங்களின் சிலைகளுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு ஆராதிக்கிறார்கள். மலர் மாலைகளை சூட்டி வணங்குகிறார்கள்.

இன்னும் சிலர் கிராம தேவதைகள் மற்றும் ஆவிகளை மேலுலகில் உள்ள கடவுட்களே தமது கிராமங்களை பாதுகாக்க தம்  சார்ப்பில் தமது தூதர்களாக அனுப்பி உள்ளார்கள் என்றும் அவற்றுக்கு குறிப்பிட்ட சக்திகள் மட்டுமே இருக்கும் எனவும் நம்புகிறார்கள். ஆகவே அப்படிப்பட்ட ஆவிகளையும், கிராம தெய்வங்களையும் ஆராதனை செய்வதின் மூலம் தமக்கும் தம்முடைய கிராமத்துக்கும் வரவுள்ள தீமைகளை முன் கூட்டியே அவை தெரிவிக்கும் என்றும் நம்பி அவற்றை வணங்கித் துதித்தார்கள். அது மட்டும் அல்ல கிராமத்தினர் அவ்வப்போது சாமியாடிகள் மூலம் ஆவிகளுடன் தொடர்பு கொண்டு பேச முயலுவார்கள். அப்படிப்பட்ட நிகழ்வுகள்  இடத்துக்கு இடம் மாறுபட்டு இருக்கும்.

கிராம தெய்வங்களுக்கு செய்யப்படும் வழிபாட்டு முறைகள் ஆகம முறைகளில் அமைந்தவை அல்ல. கிராம தேவதைகளின் திருவிழாவின்போது அங்கு வினோதமான நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த கூட்டத்தில் உள்ளவர்களில் யார் உடலிலாவது கிராம தெய்வம் அல்லது அதன் ஆவி புகுந்து கொள்ள அவர்கள் தன்னை மறந்த நிலையில் ஆடிப் பாடத் துவங்குவார்கள். அந்த நேரத்தில் அதற்கு முன்னர் அவர்கள் பார்த்திராத, முன்பின் பழகிராத சில தீயவர்களின் அந்தரங்க வாழ்க்கைகளையும் வெளிப்படுத்துவார்கள். ஊருக்கு வரவுள்ள தீமைகளை முன்கூட்டியே கூறுவார்கள். ஆகவே அங்குள்ள கிராமத்தினர் அந்த சாமியாடிகள் உடலில் அங்குள்ள கிராம தெய்வமே புகுந்து கொண்டு அனைத்தையும் கூறுவதாகவும், இல்லை எனில் முன்பின் பார்த்திராதவர்களின் அந்தரங்க வாழ்க்கைக் குறித்து அவர்களால் எப்படிக் கூற முடியும் எனவும்  வியந்து  கிராம தேவதை மீது மேலும் நம்பிக்கை கொள்கிறார்கள்.

காதைப் பிளக்கும் சப்தங்களுடன் மேளக் கச்சேரியினர் அடிக்கும் மேள சப்தத்தில் சாமியாடிகள் நடனத்தில் தாம் கூற வேண்டிய வெளித் தெரியாத உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியபின் சிறிது நேரம் தன்னை மறந்த நிலையில் ஆடிக்கொண்டு இருந்துவிட்டு அப்படியே விழுந்து விடுவார்கள். அவர்களது உடலில் புகுந்திருந்த ஆவியும் வெளியேறி விடுமாம். அங்கு கூடி உள்ளவர்கள் ஒருவித பயம் கலந்த நிலையில் அமர்ந்திருப்பார்கள். அதே சமயத்தில் இன்னொரு பக்கம் பூஜைகளும் தொடர்ந்து கொண்டு இருக்கும்.

கர்னாடகா, தமிழகம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில் உள்ள கிராமத்தினர் தமது குடும்பத்தினர் நலனுக்காக ஏதாவது ஒரு கிராம தேவதைக்கு வினோதமான முறையில் ஆராதனைகள் செய்து வழிபடுவார்கள். ஆராதனையின் முடிவில் அந்த தெய்வங்களை திருப்திப்படுத்த மிருக பலிகளும் தரப்படும். அந்த மிருகங்களின் தலையை வெட்டி, அதில் இருந்து கொட்டும் ரத்தத்தை அங்கு வைக்கப்பட்டு உள்ள குடத்தில் கொட்டியோ அல்லது படையலில் கலந்தோ அதை பிரசாதமாகத் தருவார்கள்.

கர்னாடகாவில் கங்கே மாதா எனும் பிரிவினர் தமது முகத்தில் விஷேசமான முகமூடிகளை அணிந்து கொண்டும், இடுப்பில் வேப்பிலை மாலைகளை கட்டிக் கொண்டும் ரத்தக் காட்டேஸ்வரி மற்றும் மரியம்மா (மாரி அம்மன் அல்ல) போன்ற கிராம தெய்வங்களுக்கு முன்னால் நடனம் ஆடுவார்கள். அதில் தீய மற்றும் நல்ல ஆவிகளின் பாவங்களைக் காட்டும் விதத்தில் சிரிக்கும் மற்றும் பயங்கர முகத்தைக் காட்டும் வகையில் முகமூடிகளை மாற்றி வைத்துக் கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் அந்த திருவிழா துவங்கும் முன்னால் பூதகணங்களை மகிழ்வூட்டும் வகையில் மிருக பலியும் தந்து ரத்தத்தை ஊற்றுவார்கள். கர்னாடகாவின் துளு மாவட்டத்தில் நடைபெறும் திருவிழா கேரளத்தில் காணப்படும் கிராமிய நாட்டியமான யக்ஷகானா எனும் நடனத்தை ஒத்திருக்குமாம். பொதுவாக ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் அந்த திருவிழாவை பூத ஆராதனா என்பார்கள். அந்த பூத ஆராதனா எனும் நிகழ்ச்சி மங்களூரில் அதிகம் உண்டு.

பல மலைவாழ் மக்களை உள்ளடக்கிய ஒரிஸ்ஸா மற்றும் மத்தியப் பிரதேச மானிலங்களில் ஒன்பதாம் நூற்றாண்டில் பல கிராமங்களிலும் பார்வதியின் அவதார கணங்களாக கருதப்படும் மோகினி மற்றும் யோகினி எனும் பூத கணங்களின் வழிபாடு நடைபெறுகிறது. மோகினியில் அறுபத்தி நான்கு வகைகளிலான மோகினிகள் உள்ளார்கள். அவர்கள் பல்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்களாக காட்சி தருவார்கள். அதில் சிலருக்கு மிருகங்களின் முகங்களும் அமைந்திருக்குமாம். இவற்றை ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ள மோகினி ஆலயங்களில் காணலாம். மோகினி மற்றும் யோகினி எனும் பூதங்கள் இரவு நேரத்தில் அந்த ஆலயப் பகுதியின் மேல்பரப்பில் சுற்றித் திரியும் என்றும், அவை பல விசேஷ தந்திர மந்திர சக்திகளைக் கொண்டவை என்றும் மந்திர தந்திரங்களை செய்பவர்கள் நம்புகிறார்கள். அதனால் அந்த இடங்களுக்கு வருகை தரும் மந்திரவாதிகள் மந்திர சக்திகளை கொண்ட மோகினி மற்றும் யோகினிகளை வணங்கித் துதித்து அவற்றிடம் இருந்து மந்திர சக்திகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த கிராமத்து மக்களோ அந்த யோகினிகளும், மோகினிகளும் தமது கிராமங்களை பாதுகாக்க வந்த கிராம தேவதை என நம்புகிறார்கள். அவற்றுக்கு சிலை வைத்து கிராம தேவதையாக வழிபடுகிறார்களாம். இதே போன்ற நிலை தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் சிரிலங்காவின் சில பகுதிகளில் காணப்படுகிறதாம்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஐயனார், கருப்பசாமி, குதிரை வீரன், காட்டேரி அம்மன், பேச்சியம்மன், எல்லையம்மன், அக்னி வீரபத்திரர், கருப்பாயி அம்மன், சங்கிலிக் கருப்பு, மெய்யாண்டி அம்மன், நாகப்பசாமி, சன்னாசி, பச்சை அம்மன், சப்பாணி, சோனை, லாட சன்யாசி, சப்பாணி கருப்பன், சங்கிலிக் கருப்பன், சின்னக் கருப்பன், இடும்பன், வீரபத்திரன், பைரவர், சுடலை மாடன் போன்றவர்கள் பல கிராமங்களிலும் கிராம தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள். அந்தந்த கிராமங்களில் உள்ள கலாச்சாரம் மற்றும் ஜாதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள கிராம தேவதைகளின் பெயர்கள் அமைந்துள்ளன.

வடநாட்டைப் பொருத்தவரை பீகார், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா போன்ற மானிலங்களைத் தவிர பல இடங்களிலும் உள்ள கிராமங்களில் கிராம தேவதை வழிபாடு உள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் பல கிராமங்களின் நுழை வாயில்களிலும் சிவபெருமானின் கழுத்தில் உள்ள பாம்பு, மோகினி, யோகினி, காளி  மற்றும் பைரவர் போன்றவர்களின் வடிவமைப்புக்கள் உள்ளடக்கிய சிறு வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. அவற்றில் சில உருவங்கள் பாதி உருவ அமைப்புடனோ, வெறும் கல்லாகவோ உள்ளது என்றாலும் சில இடங்களில் அந்தந்த தெய்வங்களின் முகம் மட்டுமே வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. இவர்களைத் தவிர அதிக கிராமங்களில் ஆஞ்சனேயர் கிராம தெய்வமாக வழிபடப்படுகிறார். அதனால்தான் அநேகமாக அனைத்து கிராமங்களிலும் ஆஞ்சனேயர் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. ஆஞ்சனேயரின் உருவமற்ற கற்கள் காவிக் வண்ணம் பூசி வைக்கப்பட்டு ஆஞ்சனேயராக கருதி வணங்கப்படுகின்றன. அந்த உருவ சிலைகள் மற்றும் கற்களில் ஆஞ்சனேயரின் கணங்கள் அமர்ந்து இருந்து கிராமங்களைப் பாதுகாத்து வருவதாக மக்கள் நம்புகிறார்கள்.

ஒரு கருத்தரங்கில் பூதகணங்கள் குறித்து ஒருவர் ஆற்றிய சொற்பொழிவு சுவையானது. அந்தக் சொற்பொழிவின் சாரம் இது :-

பொதுவாக இறந்து போனவர்களின் ஆவிகள் வானில் சுற்றித் திரிவதாக மக்கள் நம்புகிறார்கள். பெரும்பாலும் அப்படி சுற்றித் திரியும்  ஆவிகள் கிராம எல்லைகளில் அதிகம் காணப்படும் புளிய மரங்களில் குடியிருக்குமாம். (புளிய மரத்தில் மட்டும் ஏன் அவை குடி இருக்க வேண்டும் என்பதற்கான காரணம் தெரியவில்லை). அந்த வழியே செல்லும் யாராவது உடலில் அந்த ஆவிகள் புகுந்து கொள்ள அவர்கள் விசித்திரமான முறையில் நடந்து கொள்வார்கள். ஊரில் சென்றதும் அவர்கள் சம்மந்தமே இல்லாமல் எதை எதையோ கூறத் துவங்க மக்கள் பயந்து விடுவார்கள். அப்படி ஆவி புகுந்தவரின் வாயில் இருந்து வெளிவரும் அறிவுரைகளை நம்பி விடுவார்கள். அவர் உடலில் எந்த மரத்தில் குடி இருந்த ஆவி புகுந்ததோ அந்த மரத்தை சுற்றி தடுப்புப் போட்டு அந்த பகுதியை புனிதப் பகுதியாக கருதி, அந்த மரத்துக்கு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். அப்படி செய்வதின் மூலம் அந்த மரத்தில் உள்ள ஆவி மகிழ்ச்சி அடைந்து தமது கிராமத்தைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் அப்படி செய்கிறார்கள். இப்படி செய்வதின் மூலம் அந்த மரமும் கிராம தேவதையின் இருப்பிடம் ஆகிவிடும். புராணங்களில் தெய்வமாகிவிட்ட ஆவிகள், பூதங்கள் பற்றிய  விவரங்கள் காணப்படவில்லை என்றாலும், பல்வேறு பூதங்கள், ஆவிகள் கிராம தேவதைகளாகி விட்ட கதைகளை காலம் காலமாக நாம் கிராமியக் கதைகளாகவே படித்து வருகிறோம். அதைப் போல கிராம தெய்வங்களுக்கு குறிப்பிட்ட வடிவம் தரப்பட்டு அமைத்துள்ள உருவங்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள யாராவது ஒருவருக்கு கனவில் வந்த தோற்றம் ஆகும்.

முன் காலங்களில் ஒரு ஊரில் ஏற்பட்ட  இயற்கை சீற்றங்கள், தீராத நோய்கள் போன்றவற்றின்போது மற்றும் கொடுங்கோலர்கள் மூலம் அங்குள்ள மக்கள் அவதிப்பட்ட நேரங்கள் போன்றவற்றில் ஊரில் இருந்த யாராவது ஒருவர் தாமே முன் வந்து அந்த ஊர் மக்களை அநீதியில் இருந்தும், இயற்க்கை சீற்றங்களில் இருந்தும் காப்பாற்றுவார்கள். அப்படிப்பட்டவர்களை ஊர் மக்கள் தம்மைக் காத்த வீரர்களாகக் கருதுவார்கள். அவர்கள் இறந்தப் பின் அவர்கள் அமர்ந்திருந்த இடங்களை புனிதமாக கருதி வழிபடத் துவங்குவார்கள். அவரைக் குறித்த பெருமைகளைக் கூறும் செய்திகளை, அவர் பிறந்தது முதல், இறந்தவரை செய்து வந்த வீரச் செயல்களை நாட்டுப்புறப் பாடல்களாகப் பாடுவார்கள். உதாரணமாக இன்னார், இன்னென்ன குதிரையில், இப்படி, இப்படி ஏறி வந்தார். அப்படி வருகையில் அந்த குதிரையில் இருந்து எதிரிகள் மீது இப்படியாக பாய்ந்து பாய்ந்து தாக்கி அவர்களை அழித்தார் போன்ற அழகான வர்ணனைகள் அவற்றில் இருக்கும். அதைப் போல முன்காலத்தில் மக்கள் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குச் சென்றபோது ஊரின் எல்லையில் இருந்த கல்வெட்டுக்களை வணங்கிவிட்டே சென்றார்கள் என்றும், அந்த கல்வெட்டுக்களில் புகுந்து அங்கு தங்கி இருக்கும் வீரர்களின் ஆவிகள் அவர்கள் பயணம் நல்ல முறையில் அமைந்திட அவர்களுக்கு துணை புரிந்தன என்பது நம்பிக்கையாக இருந்தது. அந்த கல்வெட்டுக்களும், அதில் குடி உள்ளதாக நம்பப்பட்ட வீரர்களும் கிராம தெய்வங்களாக கருதப்பட்டன.

இன்னொரு காரணம் முன்காலத்தில் ஜாதி பிளவு மிக அதிக அளவில் இருந்தது. கீழ் ஜாதிகள் எனக் கருதப்பட்டவர்களை அந்த காலத்தில் இருந்த அந்தணர் சமுதாயம் ஆலயங்களுக்குள் நுழைய விடவில்லை. மேலும் கருப்பு மந்திரங்கள் எனப்படும் தீய மந்திரங்கள் மூலம் பேய் பிசாசு போன்றவற்றை ஏவி மக்களை பயமுறுத்துதல் நடைமுறையில் இருந்தது. அதனால் ஆலயத்துக்குள் சென்று கடவுளிடம் வேண்டிக் கொள்ள முடியாமல் போகும் ஒடுக்கப்பட்ட ஊர் மக்கள் தமக்கு பாதுகாப்பிற்காக வேறு தெய்வங்களை வணங்கித் துதிக்கலானார்கள். இப்படியாகத் தோன்றியவையே ரத்தக் காட்டேரி, மாரியம்மா, பேயாண்டி, குதிரை வீரன், காத்தவராயன் மற்றும் சோலைப் போன்ற கிராம தெய்வங்கள். அவர்களது உருவச் சிலைகள் பெரிய அளவில் சுட்ட களிமண்ணால் செய்யப்பட்டு ஊர்களில் வைக்கப்பட்டு வணங்கப்பட்டன.

அதே போல பெரும்பாலான கிராம தெய்வங்கள் பெண் தெய்வங்களாக இருப்பதேன் என்ற கேள்வி எழலாம். அதன் காரணம் தானியங்களிலும் பெண் இனத்தை சேர்ந்த தானியங்களின் விதைகளே செடியாகி முற்றி, அதாவது கருவுற்ற பெண் பிரசவிப்பதைப் போல, கனிந்தப் பின் காய் கனிகளைத் தருகிறது. ஆகவே தோட்டங்களில் பெண் இனத்தை சேர்ந்த தானியங்களே நிறைந்து இருப்பதினால் அவற்றைப் பாதுகாக்க பெண் இனத்தை சேர்ந்த கடவுளே சரியானதாக இருக்கும் என மக்கள் எண்ணினார்கள். அதனால்தான் அந்த தோட்டங்களைப் பாதுகாக்க பெண் இனப் பூதங்கள் வசிப்பதாகக் கருதப்படும் களிமண் அல்லது மூங்கில் கட்டைகளில் பெண் பூதங்களைக் குறிக்கும் பயங்கரமான உருவத்தைப் படைத்து அதை தோட்டங்களில் பெரிய கொம்புகளிலும், பரண்கள் மீதும் வைத்து விடுவார்கள்.

ஒரு கிராமியக் கதியினபடி முன்னொரு காலத்தில் மதுரை வீரன் எனும் வீராதி வீரன் வாழ்ந்திருந்தார். மன்னரின் படை வீரராக இருந்தாலும் அவர் தனது கிராம மக்களின் நலனின் அக்கறைக் கொண்டவர். ஒருமுறை அவர் நன்னடத்தையில் சந்தேகம் அடைந்த மன்னன் அவரை வஞ்சகமாகக் கொன்று விட மதுரை வீரனின் ஆவி மரணம் அடையாமல் கிராமத்தில் சுற்றிக் கொண்டு இருந்தவாறு மக்களைக் காப்பாற்றி வந்தார். ஆகவே அது முதல் பல கிராமங்களிலும்  மதுரை வீரன் கிராம தெய்வமாகவே போற்றப்படலானார்.