தக்ஷ யாகத்தினால்
உலகம் அடைந்த நன்மைகள்
சாந்திப்பிரியா
நவராத்திரி கொண்டாட்டத்தின் சிறப்பம்சம் சக்தி ஸ்வரூபங்களின் வழிபாடு. நவராத்திரி கொண்டாட்டம் முடிந்து விட்டாலும் செல்வ செழிப்பு, மன ஆரோக்கியம், குடும்பத்தில் அமைதி, தொடரும் சர்ச்சைகள் விலக வேண்டும் மற்றும் தாயத்துக்கள் செய்ய, அமானுஷ்ய, யோக மற்றும் தாந்த்ரீக சக்திகளை பெற வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக அந்த ஸ்வரூப சக்தி தேவிகளின் சில தெய்வங்களை பல்வேறு மக்கள் யந்திர தந்திர வழிமுறைகளில் வழிபட்டு வணங்கி வருகின்றார்கள். அந்த யந்திரங்கள் மந்திரங்களால் சக்தி ஊட்டப்பட்டவை ஆகும். அந்த சக்தி தேவிகளில் முக்கியமாக வணங்கப்படும் ஒரு சக்தி தேவியே ஆதி பராசக்தியின் அவதாரமான பார்வதி தேவியாகும். அவர் நடத்திய திருவிளையாடல் மூலம் உலகம் பல நன்மைகளை பெற்றது.
சக்தி பூஜை அல்லது சக்தி வழிபாடு என்பது ஆன்மீக உலகில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சக்தி வழிபாட்டின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளது என்றாலும், தக்ஷ யாகத்திற்குப் பிறகு தோன்றிய சக்தி வழிபாடு இந்து மதத்தின் மிக முக்கியமான அம்சமாகும். பண்டைய வேதங்களையும் தந்திர சாஸ்திரத்தையும் பார்த்தோம் எனில் மூன்றாம் நூற்றாண்டு முதலே சக்தி பூஜை வழிபாடு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முக்கியத்துவம் பெற்று இருந்துள்ளது என்பது தெளிவாகும். தந்திர சாஸ்திர சடங்குகளும் தக்ஷ யாகத்திற்குப் பிறகே தோன்றின. அதன் காரணம் தந்திர சாஸ்திரங்களுக்கு தேவையான தெய்வங்கள் தக்ஷ யாகத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டன.
ஆதி பராசக்தி தேவியின் பல்வேறு ஸ்வரூபங்களே சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவி அவதாரத்தின் மூலம் வெளியான சக்தி தேவிகள் ஆகும். ஆகவே ஆதி பராசக்தியின் அவதார சரித்திரத்தையும், அவர் பார்வதி தேவியாக மாறிய பின் மனிதகுலத்தின் நலனுக்காக தக்ஷய யாக நாடகத்தின் மூலம் அவர் வெளிப்படுத்திய பல்வேறு பெண் தெய்வங்களையும் பிற தெய்வங்களையும் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அகண்டத்தை ஆதி பராசக்தி உருவாக்கியபோது அதில் ஒரு தெய்வீக நாடகத்தை அரங்கேற்ற விரும்பி ஆதி பராசக்தி தானே பார்வதி தேவியின் சதி எனும் வடிவத்தை எடுத்தார். அந்த அவதாரத்தின் மூலம் நடைபெற்ற நாடகத்தின் மூலம் மனித குலத்துக்கு தேவையாக பல முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்றன. முக்கியமாக சாதகர்களுக்கு அமானுஷ்ய, யோக மற்றும் தாந்த்ரீக சக்தி அளிக்கும் வகையிலான பல தெய்வங்களும் தோன்றின. ஆதி பராசக்தி சதி என்ற பெயரில் தோற்றம் எடுக்காது இருந்தால் ஆன்மீக உலகம் பதினொரு சிவ பீடங்களையும் (திருநாங்கூர் சிவ பீட ஆலயங்கள் ), 51 சக்தி பீடங்களையும், பதினொரு விஷ்ணு பீடங்களையும் (திருநாங்கூர் திவ்ய தேச ஆலயங்கள்), பகவான் வீரபத்திரர், பகவான் பைரவர், பைரவிகள், பத்து மஹா வித்யா பீட சக்தி தேவிகள், மந்திர தந்திர சக்திகளை பெற்று இருந்த யோகினிகள், மோகினிகள் மற்றும் பத்திரகாளி தேவி போன்றவர்களை பார்த்து இருக்க முடியாது என்பதினால் ஆதி பராசக்தி சதி என்ற அவதாரத்தில் நடத்திய தக்ஷ யாக நாடகம் ஆன்மீக உலகில் முக்கியத்துவம் பெறுகின்றது. அதில் வெளியான யோகினிகளே ஆதி பராசக்தியின் அவதாரமான பார்வதி பல்வேறு அவதாரங்களில் பல அசுரர்களையும் அரக்கர்களையும் அழித்த யுத்தங்களில் பங்கேற்ற அபாரமான தந்திர மந்திர சக்திகளை பெற்று இருந்த தச மஹா தேவிகள் மற்றும் யோகினிகள் ஆவர்.
உலகை படைத்ததாக கூறப்படும் ஆதி பராசக்தி என்பவர் உண்மையில் யார், அவர் எப்படி சதி எனும் பிறப்பை எடுத்து, எதற்காக அந்த நாடகத்தை அரங்கேற்றினார் என்பதற்கு உள்மேல் உள்ளாக, ஒன்றுடன் ஒன்று இணைந்த சில கதைகள் உள்ளன. பிரபஞ்சத்தை படைத்தது ஆதி பராசக்தியா அல்லது பரப்பிரம்மனா என்பதில் புராணங்களில் வேறுபாடுகள் உள்ளன.
புராணங்களின்படி இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் அனைத்து உலகிலும் வியாபித்து உள்ளவர், திருமூர்த்திகளை படைத்தவர், அசையும் மற்றும் அசையா ஜீவன்களை படைத்தவர் என்றும், படைத்தவற்றையே மீண்டும் அழிக்கும் வல்லமை படைத்தவர் என்பதாகவும், எல்லை இல்லா சக்தியைக் கொண்டவரும், இந்த பிரபஞ்சத்தை தாண்டிய சக்தியைக் கொண்டவர் என்பதாகவும் கூறப்படுகின்றது.
ஆதி பராசக்தியான பெண் சக்தியை வணங்கித் துதிக்கும் பக்தர்களை சாக்தர்கள் என்பார்கள். அவர்கள் ‘ஆதி சக்தி எனப்படும் பெண் தெய்வமே அனைத்திற்கும் மேலான தெய்வம்’ என்ற எண்ணம் கொண்டவர்கள். ‘ஆதி பராசக்தி அழிவற்ற ஞானம் எனும் உண்மை, ஆரம்பமும் முடிவும் இல்லாத தெய்வம், அனைத்திலும் ஊடுருவி வியாபித்து எல்லையற்ற தெய்வீக சக்தி உள்ளவர், நிகுணா மற்றும் சகுணா எனும் தன்மை கொண்ட அதாவது கண்களுக்கு புலப்படாத மற்றும் வெளித் தெரியும் உருவம் கொண்ட தன்மையுடன் உள்ள தெய்வம் ஆவார்.
நிகுணா என்றால் உருவம் அற்ற என்றும் சகுணா என்றால் வெளித் தெரியும் உருவம் கொண்டவர் என்றும் பொருள் ஆகும். ஸ்கந்த மற்றும் பல்வேறு புராண நூலின்படி ‘ஆதி பராசக்தி சகுணா எனும் வெளித் தெரியும் உருவத்தில் உள்ள அன்னை பார்வதி ஆவார்’.
அதே சமயத்தில் சாக்த வழிபாட்டிற்கு எதிர்மறையான வழிபாட்டு முறைகளைக் கொண்டவர்கள் கருத்து என்ன என்றால் ‘இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் பரபிரும்மன் அல்லது பரமாத்மன் என்பவர் ஆவார். ஆதி பராசக்தியின் அனைத்து தன்மைகளையும் கொண்டவர் அவர்தான்’ என்பதாகும். வேதகாலத்தை சேர்ந்த, யஜுர்வேதத்தை சார்ந்த, சமிஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு உள்ள தைத்ரிய உபநிஷத் எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது என்ன என்றால் ‘பரபிரும்மன் என்பவரே பிரபஞ்சத்தை படைத்து, அனைத்து உயிர் இயக்கங்களையும் படைத்தார், உயிரினங்களை வாழ வைத்து மீண்டும் தன்னுள் அடக்கிக் கொண்டார் (அழிவு). அவரே உலகெங்கும் வியாபித்து உள்ளவர், படைத்த ஒவ்வொன்றும் தனித் தனியே இயங்க, அவற்றுக்கான தன்மைகளையும் தந்தார். அந்த இயக்கங்களை கட்டுப்படுத்தும் சக்தியையும் தன்னிடமே வைத்து இருந்தார்’. இதன் உள்ளர்த்தம் என்ன என்றால் அவரே படைத்தார், படைத்தவற்றை இயக்கினார் மற்றும் இயங்கியவற்றை மரணிக்க வைத்தார் என்பதாகும்.
கதா உபநிஷத் எனும் நூலில் காணப்படுவது என்ன எனில் ‘பரமாத்மனே உலகெங்கும் வியாபித்து உள்ளவர், கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் பிற்காலம் என்ற அனைத்து கால ஓட்டத்திலும் நிலையாக தனித் தன்மையுடன் தானாகவே இருப்பவர் ஆவார். எறும்பு முதல் யானை வரை அனைத்து உயிர்களிலும் உள்ளவரும் அவரேதான். அவருடைய மேன்மையை புரிந்து கொள்ளும்வரை எந்த ஒருவரும் மீண்டும் மீண்டும் பிறப்பை எடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
புராண நூல்களில், முக்கியமான தேவி பாகவத புராணம் எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது என்ன என்றால் ‘ஆதி பராசக்தி என்பவள் பாதி ஆண் மற்றும் பாதி பெண் சக்திகளை உள்ளடக்கிக் கொண்ட, வெளித் தெரியாத உருவத்தில் உள்ள ஒரு சக்தியாகும். அந்த வெளித் தெரியாத நிலையில் இருந்த ஆதி பராசக்தி முதலில் தன்னுள் இருந்து சிவபெருமானை வெளிப்படுத்திய பின் பல ஆயிரம் ஆண்டுகள் மெளனமாக இருந்து விட்டாள்’.
அப்படியாக ஆதி பராசக்தியின் இருந்து வெளிவந்த சிவபெருமான் பீஜ மந்திரமான ஹிரீம் எனும் மந்திரத்தை ஓதியபடி ஆதி பராசக்தியை துதித்தபடி பல ஆயிரம் ஆண்டு வருடங்கள் கடுமையான தவத்தில் அமர்ந்து கொண்டார். அவர் தவத்தினால் மனம் மகிழ்ந்த ஆதி பராசக்தி அவரது இடது பக்கத்தில் இருந்து தானே வெளி வந்தாள். அதுவரை சிவபெருமானுக்கு கூட தானும் சக்தியும் இணைந்து இருந்த ஒரு சக்தியே தான் என்பது தெரியாமல் இருந்தது. அந்த ஆதி பராசக்தியே அவரது மனைவியான பார்வதி தேவியாவார்.
சிவ புராணம் என்ன கூறுகின்றது என்றால் ‘பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது ஆதி பராசக்தி சிவபெருமானின் இடது பக்க உடலில் இருந்து பரம் பிரகிருதி என கூறப்படும் வடிவத்தில் அவதரித்தார். இருவரும் தோன்றியவுடன், ஒன்றிணைந்த அவர்கள் சக்தியின் மூலம் ஒரு முட்டையின் வடிவத்தில் பிரபஞ்சம் வெளிப்பட்டது. அதன் பின் திருமூர்த்திகளை அவள் வெளிப்படுத்தினாள். சிவபெருமானின் உடலில் இருந்து வெளிவந்த ஆதி அபராசக்தி சிவபெருமானிடம் கூறினார் ‘நான்தான் ஆதி பராசக்தி என்பவள். இந்த பிரபஞ்சத்தின் அதிபதி. உண்மை எனும் நிலையான பெரும் சக்தி கொண்டவளும், ஆண் மற்றும் பெண் எனும் சக்திகளை உள்ளடக்கியவளும் ஆவேன். திருமூர்த்திகள் எனப்படும் நீங்கள் மூவரும் என் சக்தி மூலம் வெளியான என்னுடைய விரிவாக்கங்களே. நீங்கள் அனைவருமே என் ஆட்சியின் கீழ் உள்ளவர்கள். உங்கள் மூலம் இந்த உலகை நான் நிர்வாகிக்கின்றேன். நீங்கள் மூவரும் உண்மை எனும் யதார்த்தத்தின் ஆண் வடிவம் என்றாலும், நான் அந்த யதார்த்தத்தின் ஒரே பெண் வடிவம் ஆவேன் . நான் இந்த வடிவத்திற்கும் அப்பாற்பட்டவள் , வரம்பு இல்லாத சக்திகளைக் கொண்டவள்’.
தேவி பாகவத புராணத்தின் ஏழாவது காண்டத்தில், அத்தியாயங்கள் 31 முதல் 40 வரை உள்ள தேவி கீதை எனப்படும் பாகத்தில் பார்வதி தேவிக்கும் ஹிமாலய பர்வதத்தின் மன்னனான ஹிமாயவன் என்பவருக்கும் நடைபெற்ற உரையாடல் என்பதாக வெளியிடப்பட்டு உள்ள செய்தியில் அந்த தேவியானவள் அவரிடம் கூறினாள் ‘அனைத்து லோகங்களுக்கும் மேல் உள்ள ஸ்ரீ சக்கரத்தின் மணித்துவீபத்தில் அமர்ந்துள்ள தானே இந்த பிரபஞ்சத்தை படைத்ததவள், அழிவற்றவள் , நிலையான தெய்வம், ஆரம்பமும் முடிவும் இல்லாதவள், அழிவற்ற உண்மை மற்றும் அனைத்து ஞானத்தையும் உள்ளடக்கியவள், வெளிப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படுத்தாத உருவங்களைக் கொண்டவள் என்றும், தானே பிரபஞ்சத்தின் நிலையான தெய்வம் என்றும் கூறி விட்டு தனது நிஜ ரூபத்தை காட்டினாள். ‘அதில் யுகங்களில் முதல் யுகமான சத்ய யுகம் அவளது நெற்றியிலும், பிரபஞ்சம் தலை முடியாகவும், சந்திர சூரியர்கள் கண்களாகவும், நான்கு திசைகளும் காதுகளாகவும், வேதங்கள் மரணம், அன்பு, மற்றும் ஆற்றல்கள் அவளது பற்களாகவும் தெரிய அவளது சிரிப்பின் மூலம் மாயையையும் வெளிப்படுத்தி காட்டினாளாம்’ . இந்த செய்தி பிரும்மாண்ட புராணம் மற்றும் கேனா உபநிஷத் போன்ற பல நூல்களில் காணப்படுகின்றது.
ஆதிபராசக்தி தக்ஷயானியாக மாறிய கதை
ஆதி பராசக்தி தேவி எப்படி தக்ஷ மன்னனின் மகள் சதி என்பவராக மாறினார் என்ற கதையை இப்போது படியுங்கள். பிரபஞ்சம் படைக்கப்பட்ட பல பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரம்மாவின் மகன்களில் ஒருவராக தக்ஷன் பிறந்து பிரபஞ்சத்தில் ஒரு மன்னனாகினார். குழந்தை இல்லாத அந்த தம்பதியினர் தங்களுக்கு ஒரு மகள் பிறக்க வேண்டும் என விரும்பியபோது, பகவான் பிரம்மா மகளை பெற்றெடுக்க ஆதி பராசக்தி தேவியை தியானிக்க அறிவுறுத்தினார். திரைக்குப் பின்னால், சில தெய்வீக நாடகங்களைச் செயல்படுத்த விரும்பிய ஆதி பராசக்தி கொடுத்து இருந்த அறிவுரைப்படியே பிரம்மா அந்த அறிவுரையை தக்ஷனுக்கு கொடுத்தார். ஆனால் அவருக்கும் ஆதி பராசக்தி என்ன நாடகத்தை நடத்த அந்த அறிவுரையைக் கூறினார் என்பது தெரியாது.
மன்னர் தக்ஷனும் அவரது மனைவியும் தமக்கு ஆதி பராசக்தியே மகளாக பிறக்க வேண்டும் என்று ஆதி பராசக்தியை வேண்டி தவம் இருக்க, ஆதி பராசக்தியே தனது நாடகத்தின் ஒரு அங்கமாக, தன்னை சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவி என்று அவதரித்துக் கொண்டாள். ஆகையால், தக்ஷ மன்னனின் தபஸ்ஸினால் மனம் மகிழ்ந்துபோன ஆதி பராசக்தி, பார்வதி தேவியின் அவதாரமாக மாறி இருந்தாலும், வேண்டும் என்றே தன்னுடைய மூல வடிவான ஆதி பராசக்தி உருவில் அவருக்கு காட்சி கொடுக்க, அவளிடம் தக்ஷ மன்னர் தனக்கு ஒரு மகளாக ஆதி பராசக்தியே பிறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆதி பராசக்தியும் அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கினாள், வரத்தை வழங்கினாள். பிரபஞ்சத்திற்கு செய்ய வேண்டிய சில நன்மைகளுக்காக சதி எனும் என்ற பெயரில் அவர்களின் மகளாகப் பிறந்தாள். சதி வடிவத்தில் இருந்த பார்வதி தேவி தக்ஷனுக்கு பிடிக்கவில்லை என்றாலும், வேண்டும் என்றே சிவபெருமானை மணந்தார்.
சதி மற்றும் தக்ஷயானி என்பவர்கள் யார் ?
புராண நூல்களில் சதி மற்றும் தக்ஷயானி எனக் குறிப்பிட்டு உள்ளதை படிக்கையில், முக்கியமாக தக்ஷ யாக கதையை படிக்கையில் அவர்கள் பெயரில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதி பராசக்திதான் தன்னை பார்வதி தேவியாக மாற்றிக் கொண்டார், பார்வதி தேவி அவதாரத்தின் மூலம் பல்வேறு அவதாரங்களையும் எடுத்து உள்ளார் என்பது நினைவில் இருக்கலாம். பிரம்மாவின் வேண்டுகோளின்படி பேரில், பிரம்மாவின் மகன் தக்ஷ மன்னருக்குப் மகளாக பிறந்தபோது தன்னை அவள் சதி என்ற பெயரில் அழைக்கப்பட வைத்துக் கொண்டாள். மன்னர் தக்ஷன் நிகழ்த்திய யாகத்தில் தற்கொலை செய்து கொண்ட பிறகு, இமயமலை மன்னரான இமயவனின் மகளாக பிறந்தபோது தன் பெயரை தக்ஷயானி என்று மாற்றிக் கொண்டாள். மீண்டும் சில காலத்திற்குப் பிறகு தன்னை பார்வதி தேவியாக மாற்றிக் கொண்டாள். பார்வதி தேவி எத்தனை வெவ்வேறு அவதாரங்கள் எடுத்தாலும் அத்தனை அவதாரங்களிலும் சிவபெருமானை மட்டுமே திருமணம் கொண்டார் என்பதின் காரணம் அடிப்படையில் அனைத்து அவதாரங்களும் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி ஒன்றாக இணைந்துள்ள ஆதி பராசக்தி எனும் சிவ சக்திதான்.
தச மஹா வித்யா தேவிகளின் தோற்றம்
தன்னை சதி என்ற பெயரில் பார்வதி தேவியாக மாற்றிக் கொண்ட ஆதி பராசக்தியின் லீலை துவங்கியது. தக்ஷனுக்கும் சிவபெருமானுக்கும் இடையே மனக்கசப்பு தோன்றி விரிவடைந்தது. தன்னுடைய மருமகனே சிவபெருமான் என்பதை மறந்து அவரை அவமரியாதை செய்யத் துவங்கிய தக்ஷன் தான் நடத்திய முக்கியமான யாகத்துக்கு சிவபெருமானை அழைக்கவில்லை. அதன் காரணம் ஆதி பராசக்தியே தனக்கு மகளாக பிறந்து உள்ளாள், மற்றும் பகவான் பிரும்மனே தனது தந்தை எனும்போது தானே சிவபெருமானை விட உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்டான். ஆனால் சதி உருவில் இருந்த பார்வதி தேவியோ தான் அந்த யாகத்தில் கலந்து கொள்ள முடிவு செய்து சிவபெருமானின் அனுமதியைக் கோரியபோது அவர் திட்டவட்டமாக அவள் செல்வதை தடுத்து நிறுத்த முயல, கோபமுற்ற சதி எனும் பார்வதியோ அவரை தன் வழிக்கு கொண்டுவர முதலில் காளி எனும் பயங்கர உருவை எடுத்து அவர் முன் தோன்றி அவரை பயமுறுத்த, பயந்து ஓடிய அவரை காளி உருவில் இருந்த தேவியோ பயங்கரமான மேலும் பத்து உருவங்களை எடுத்து அனைத்து பக்கங்களில் இருந்தும் சிவபெருமானை பயமுறுத்த, அவரும் அவளது கோரிக்கைக்கு இணங்கி அவளை யாகத்தில் கலந்து கொள்ள சம்மதித்தார். இப்படியாக பார்வதி தேவியின் ஞானத்தில் இருந்து தோன்றிய அந்த பத்து அவதாரங்கள்தான் பல சித்திகளையும், மந்திர தந்திர சக்திகளையும் கொண்ட தச மஹா வித்யா எனும் தேவிகளாக மாறினார்கள். அதனால்தான் தமக்கு ஞானம் கிடைக்க வேண்டும், பல சித்திகளையும் பெற வேண்டும் என்று நினைக்கும் சாதனாத்விகள் அந்த பத்து தேவிகளையும் ஞான தேவிகளாக ஆராதனை செய்து பூஜிப்பார்கள். தச என்றால் பத்து என்றும் வித்யா என்றால் ஞானம் என்பது பொருள் ஆகும். அந்த தேவிகள் ஒரு சாந்தமான தாயார் மற்றும் அதி கோபமான நிலையில் உள்ள தன்மைகளைக் கொண்டவர்கள். அதனால்தான் சாக்த வழிபாட்டை கொண்ட பிரிவினர் பெண் தெய்வங்களே மிக மேலான தெய்வங்கள் என்ற கொள்கை கொண்டவர்களாக உள்ளனர்.
சக்தி வழிபாட்டை மேற்கொள்பவர்கள் சிவப்பு நிற உடை உடுத்தி நெற்றியில் சிவப்பு பொட்டையும் வைத்துக் கொள்கின்றார்கள். அவர்களின் எண்ணப்படி ‘இந்த பிரபஞ்சத்தை படைத்து, காத்து, அழிப்பவளும் மற்றும் எங்கும் நிறைந்தவளே சக்தி தேவி’ என்பதாகும். வேத காலத்தில் நிலவி இருந்த ஆண் தெய்வ வழிபாட்டை தாண்டி பக்தி மார்க்கம் சற்றே திசை மாறி சக்தி வழிபாட்டிலும் ஈடுபடக் காரணம், ஞானம் தரும் தெய்வங்கள் என போற்றப்பட்ட தச மஹா வித்யா தேவிகளின் தோற்றமே ஆகும். அதுவே ஆஸ்திக வழிபாட்டில் பெண் தெய்வங்களே அனைத்து தெய்வங்களிலும் மேன்மையானவர்கள் என்ற எண்ணம் எழக் காரணம் ஆயிற்று. ஆதி பராசக்தி எனும் பார்வதி தேவியின் தன்மைகளான காலம் , நேரம், மாற்றம், செயல் சக்தி, செயலற்ற தன்மை, இயக்கத்தை நிறுத்தும் சக்தி, கலைகளின் சக்தி, அழகு, செல்வம், மற்றும் ஆசை எனும் அனைத்து தன்மைகளையும் தம்முள் அடக்கிக் கொண்டவர்களே தச மஹா வித்யா தேவிகள் ஆவர்.
தமக்கு மந்திர, தந்திர, அமானுஷ்ய சக்திகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அந்த தேவிகளை மந்திர உச்சாடனைகளை செய்து, அந்தந்த தேவிகளின் யந்திரத்தை பூஜித்து வணங்கித் துதிக்கின்றார்கள். பல்வேறு தந்திர நூல்களில் கூறப்பட்டு உள்ள நியமங்களின்படி, அதில் கூறப்பட்டு உள்ள ரகசிய தந்திர சடங்கு முறைகளை அனுஷ்டித்து அந்த ஆன்மீக சடங்குகளை செய்கின்றார்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆன்மீக சடங்கு முறைகளைக் கொண்ட தந்திர, மந்திர வழிபாடு என்பது இந்து மதம், சமண மதம், பௌத்த மதம், மற்றும் சீனாவில் தோன்றிய தாவோயிசம் போன்ற மதக் கிளைகளில் காணப்படுகின்றன. ஆனால் அப்படிப்பட்ட சடங்குகளை செய்து தாம் விரும்பியதை முழுமையாக அடைய வேண்டும் எனில், மன சக்தி மற்றும் உடலுழைப்போடு அவர்களுக்கு தக்க வழிகாட்ட தகுதி வாய்ந்த குருமார்கள் தேவையாகும். அவர்களது மேற்பார்வையில் மட்டுமே அவற்றை செய்ய வேண்டியது அவசியம் ஆகும் என்பதின் காரணம் அந்த சடங்குகளில் பலவிதமான ரகசிய சடங்குகள் அடங்கி உள்ளன. அந்த தந்திர மந்திர முறைகளிலான சடங்குகளை செய்பவர்களுக்கு நேர்மறை ஆற்றல்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களும் தேவை ஆகும். அந்த சடங்குகளை செய்யும் சாக்தர்கள் சடங்குகளுக்கான முறையான நியமங்கள், மந்திர உச்சாடனைகள் போன்றவற்றை செய்தால் நிச்சயம் அவர்கள் விரும்பிய பலன் அந்த தேவிகளின் கருணையால் கிடைக்கும். தச மஹா வித்யா தேவிகளின் வழிபாட்டு முறையில் பஞ்ச மார்க்க எனும் இன்னொரு முக்கியமான சடங்கு முறையும் உள்ளதாம். அந்த முறையிலான சடங்குகளை செய்தால் அவர்கள் விரும்பியதை வெகு விரைவில் அடைய முடியுமாம். பாராம்பரியமான வழிபாட்டு முறையில் இருந்து விலகி செய்யப்படும் பஞ்ச மார்க்க முறையில் சாராயம், இறைச்சி, மீன், புளித்துப் போன தானியங்கள், மற்றும் உடலுறவு போன்ற ஐந்து விஷயங்கள் தாந்த்ரீக சடங்கு முறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அந்த பஞ்ச மார்க்க முறையிலான சடங்குகளை செய்ய தக்க ஆசானின் வழிகாட்டுதல் அவசியம் ஆகும்.
தச மகா வித்யா தேவி வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குகளை முறைப்படி செய்ய தக்க ஒரு குருவிடமிருந்து தீட்சை தேவை. முறையற்ற வகையில் தன் இச்சையாக செய்தால், அதன் விளைவுகள் பேரழிவு தரும் வகையில் அமையும் என்பது மட்டும் அல்ல உயிருக்கு ஆபத்தை கூட விளைவிக்கும். ஏனெனில் அவற்றில் சில தெய்வங்கள் உக்ர தேவிகள் ஆகும். ஆகவே, தச மஹா தேவிகளை ஆராதிக்க விரும்புபவர்கள் சடங்குகளை நன்கு அறிந்த, தக்க ஒரு குருவிடமிருந்து தீட்சை எடுத்து சடங்கின் தக்க வழிமுறைகளை கற்றறிய வேண்டும். சரியான குருவின் தீட்ஷை இன்றி மேலோட்டமாக புத்தகங்களைப் படித்து விட்டு புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளதை போல அந்த சடங்குகளை செய்து ஆராதிக்கக் கூடாது. அதை விட அந்த தேவிகளின் ஆலயங்களுக்கு சென்று அவர்களை ஆராதிப்பது மிக நல்லது. தச மஹா வித்யா தேவிகள் என்பவர்கள் காளி தேவி, தாரா தேவி, மகா திரிபுரசுந்தரி தேவி, புவனேஸ்வரி தேவி, பைரவி தேவி, சின்னமஸ்தா தேவி, தூமா தேவி, பகலமுகி தேவி, மாதங்கி தேவி மற்றும் கமலத்மிகா தேவி ஆகிய பத்து தேவிகள் ஆவார்கள். அந்த பத்து தெய்வங்களின் தனித் தனியான கதையும் அவர்களின் தன்மைகளும் தனியே கூற உள்ளேன்.
நவதுர்கைகளின் அவதாரம்
தக்ஷ யாகத்தில் தோன்றியதாக கூறப்படும் நவதுர்கா தேவிகளின் அவதாரம் குறித்து சரியான விவரம் கிடைக்கவில்லை . சில புராண நூல்களில் சதி தன் உயிரை மாய்த்துக் கொள்ள யாகத் தீயில் குதித்தபோது அவள் உடலில் இருந்து ஒன்பது தேவிகள் வெளிப்பட்டதாகவும், அவர்களே சிவபெருமான் மூலம் வெளிப்பட்ட தெய்வங்களுடன் சேர்ந்து தக்ஷ யாகத்தை அழித்தார்கள். அவர்களே நவதுர்கா எனப்பட்டதாகவும் கூறுகின்றது. அதே சமயத்தில் சிவபெருமானை பயமுறுத்த சதியின் உடலில் இருந்து வெளியான காளி தேவியின் உடலில் இருந்து வெளியான தேவிகளே பத்து மஹா வித்யா தேவிகள் என்பதாகக் கூறினாலும், இன்னும் சிலரின் கூற்றின்படி சதி தேவியின் உடலில் இருந்து முதலில் நவதுர்க்கைகளே வெளிவந்தார்கள் என்றும் அவர்களே தம்மை தச மஹா வித்யா தேவிகளாக உருமாற்றிக் கொண்டார்கள் என்பதாகவும் நம்புகின்றார்கள். ஆனால் நவ துர்கை பற்றிய சரியான தகவல்கள் இல்லை.
அனைத்து தேவிகளுமே சதி தேவியின் உடலில் இருந்து வெளிப்பட்டாலும் அவரவர்களுக்கான தனித் தன்மைகளை கொண்டவர்கள். அவற்றில் நவராத்ரி பண்டிகையில் கொண்டாடப்படும் நவதுர்கைகள் சாந்தமானவை . தாந்த்ரீக சாதகர்களினால் ஆராதிக்கப்படும் பத்து தேவிகளும் உக்ர தேவிகள் ஆவார்கள். நவதுர்காக்களில் ஷைலாபுரி தேவி என்பவர் ஆதி பராசக்தியின் முழுமையான வடிவம், பிரம்மச்சாரினி தேவி என்பவர் ஆதி பராசக்தியின் அன்பு, விசுவாசம், ஞானம் மற்றும் அறிவைக் கொண்டவர், சந்திரகாந்தா தேவி ஆதி பராசக்தியின் ஆன்மீக மற்றும் உள் சக்தியைக் கொண்டவர், குஷ்மந்தா தேவி ஆதி பராசக்தியின் ஆற்றலைக் கொண்டவர், ஸ்கந்தமாதா தேவி என்பவர் ஆதி பராசக்தியின் ஞானத்தை தரும், செழுமை சக்தி, பொக்கிஷங்களை வழங்கும் சக்திகளைக் கொண்டவர் , காத்யாயினி தேவி என்பவர் ஆதி பராசக்தியின் போர்வீரர் அம்சங்களை கொண்டவர், காலராத்திரி தேவி என்பவர் ஆதிசக்தியின் தன்மைகளான அறியாமையை அழித்து மற்றும் பிரபஞ்சத்திலிருந்து இருளை அகற்றும் சக்தியைக் கொண்டவர், மஹா கௌரி தேவி ஆதிபராசக்தியின் தன்மைகளான பாவாத்மாக்களை மன்னித்து அவர்களை நல்வழிப்படுத்தும் தன்மைகளை கொண்டவர் மற்றும் சித்திஹாத்ரி தேவி என்பவர் அதி பராசக்தியின் தன்மைகளான எட்டு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளான அனிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிரப்தி, பிரகாம்பியா, இஷித்வா மற்றும் வசித்வா என அழைக்கப்படும் சித்திகளைக் கொண்டவர் ஆவார்கள். ஜே.எல். ஸாஸ்திரி என்பவர் எழுதி உள்ள சிவா மஹா புராணத்தில் பகவான் பிரும்மா நாரத முனிவருக்கு நவதுர்காக்களின் பெயர்களை காளி, காத்யாயினி, ஈசானி, சாமுண்டா, முண்டமர்தினி, பாத்திரகாளி, பத்ரா, த்வரிதா மற்றும் வைஷ்ணவி என்பதாக கூறினாராம். தக்ஷ யாகம் அழிக்கப்பட்டபோது அங்கிருந்த அறுபத்தி நான்கு யோகினிகளும் ஆக்ரோஷமாக அந்த நவதுர்கா தேவிகளுடன் சேர்ந்து தக்ஷாவின் யாகத்தை அழிக்க கோபமாக புறப்பட்டார்களாம்.
யோகினிகள் மற்றும் மோகினிகளின் தோற்றம்
யாகத்தை அழிக்க தோன்றிய தச மஹா வித்யா தேவிகளின் உடம்பில் இருந்து பல யோகினிகளும் மோகினிகளும் வெளிவந்தார்கள். அந்த யோகினிகளும் ஆதி பராசக்தியின் பல்வேறு யுத்தங்களில் அவளுக்கு உதவும் யுத்த தேவதைகளாக இருந்துள்ளார்கள். தக்ஷ யாக அழிவின்போது முதலில் சதி தேவியின் உடலில் இருந்து அஷ்ட மாத்ரிகா எனும் தேவதைகள் தோன்றினார்களாம். அவர்கள் அஷ்ட பைரவர்களுடன் இணைந்து கொள்ள ஒவ்வொரு அஷ்ட மாத்ரிகா உடலில் இருந்தும் எட்டு, எட்டு யோகினிகளை வெளிப்படுத்தினார்கள். இப்படியாக அவர்கள் மூலம் 64 சக்தி யோகினிகள் வெளிப்பட்டார்களாம். அந்த யோகினிகளும் தக்ஷனின் யாகத்தை அழிக்கும் பணியிலும், அவரது சேனைகளை அழிக்கும் பணியிலும் பிற தெய்வங்களுடன் இணைந்து கொண்டார்கள். இப்படியாக பல யோகினிகள் அஷ்ட மாத்ரிகா மற்றும் தச மஹா வித்யா தேவிகள் மூலம் வெளி வந்தார்கள்.
சிவ புராணா நூலின்படி ‘தக்ஷயாக அழிவின்போது 64 யோகினிகளும், வேறு யோகினிகளும், நவதுர்கா தேவைகளும் சிவபெருமானின் தலை முடியில் இருந்து வெளிப்பட்ட வீரபத்ரர் மற்றும் பெற்ற பத்ர காளியுடன் சேர்ந்து யுத்தம் செய்தார்கள். அதை போலவேதான் பல்வேறு யோகினிகள் பல்வேறு நிலைகளில் ஆதி பராசக்தியின் மூலம் தந்திர மந்திர சக்திகளை உள்ளடக்கியபடி வெளி வந்தார்கள்’. ஆனால் அஷ்ட மாத்ரிகா தேவதைகள் மூலம் வெளிவந்த 64 யோகினிகள் மட்டும் ஆக்ரோஷமான யோகினிகளாக இருந்ததினால் தாந்த்ரீக ஆலயங்களில் குடி கொண்டார்கள். தந்திர மந்திர மற்றும் அமானுஷ்ய சக்தியை அடைய விரும்பும் சாதகர்கள் அவர்களை ஆலயங்களில் ஆராதனை செய்து பல சக்திகளை பெறுகின்றார்கள். அப்படி பெற்ற சக்திகளை நல்ல காரியங்களுக்கும், தீய காரியங்களுக்கும் அந்தந்த சாதனங்களை செய்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். அந்த அறுபத்து நான்கு யோகினிகள் அவர்களை ஆராதிப்பவர்களுக்கு அதி நுட்ப மற்றும் மிகப் பெரிய, நுண்ணியமான ஆன்மீக வளர்ச்சிகளையும் தருவதோடு ஆன்மீகத்தில் மிகவும் மேலான ஞானம் என்பதை அடையும் அடித்தளத்தையும் தருகின்றார்கள்.
சக்தி வாய்ந்த அந்த 64 யோகினிகள் பிற்காலத்தில் தாந்த்ரீக மந்திர சக்தி கிடைக்க வேண்டும் எனக் கூறி வணங்கி துதிக்கும் சாதகர்களின் யோகினிகளாக மாறினர். அந்தந்த தேவதைகளுக்கு உட்பட்ட நியமங்களின்படி, பீஜாக்ஷ மந்திர உச்சாடனங்களை செய்து சடங்குகளை செய்தால் தம்மை பூஜிப்பவர்களுக்கு அவர்களது விருப்பங்கள் நிறைவேற்றவும், எதிர் மறை எண்ணங்களையும் மன பயத்தையும் விரட்டி அடித்து துரதிர்ஷ்டங்களைத் தடுக்கவும், அறிவு, அமைதி, வாழ்க்கையில் வளம், மற்றும் நல்ல வம்சாவளி அமையவும் அருள் புரிகின்றனறாம். ஆனால் அவற்றை செய்யும் முன் தக்க ஆசானின் தீட்ஷயைப் பெற்றே அந்த ரகசிய முறையிலான சடங்குகளை செய்ய வேண்டும். ஏன் எனில் யோகினிகளில் இரு வகையினர் உள்ளனர். ஒரு வகையினர் மந்திர உச்சாடனைகளுக்கு ஏற்ப வெளிவந்து அருள் புரிபவர்கள். இரண்டாம் வகை யோகினிகளோ மயானவாசிகள். சுடுகாட்டிலும் , மயானங்களின் மேற்புறத்திலும் சுற்றிக் கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு முறையற்ற சடங்குகளை செய்தால் ஆபத்தை விளைவிப்பவர்கள். முறையான சடங்குகளை செய்தால் அற்புதமான அருள் புரிவார்கள்.
பெரும்பாலான தெய்வீக பெண்களின் தந்திர வழிபாட்டு முறை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே இருந்துள்ளது. தாந்த்ரீக தேவதைகளின் ஒரு தனித்துவமான பண்பு என்னவென்றால் அவர்கள் என்றுமே ஜனநடமாட்டம் அதிகம் அற்ற, தொலைதூர இடங்களில் அமைந்துள்ள, மேல் கூரை இல்லாத வட்ட வடிவிலான அல்லது சதுரமான கட்டிடக் காலையில் கட்டப்பட்டு உள்ள ஆலயங்களில் வசிப்பதை விரும்புபவர்கள். என்பதினால்தான் பொதுவாக, யோகினிகள் திறந்தவெளி ஆலயங்களின் வெளிச்சுற்று பிராகாரங்களில் நடுப்பகுதியில் அமர்ந்துள்ள தமது தலைவரான பைரவரை நோக்கி பார்த்தபடி அமர்ந்து கொண்டு உள்ளார்கள். அவருடைய உத்தரவின் பேரில் மட்டுமே அவர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது.
பைரவர்களின் தலைவரே ஷேத்ரபாலா எனப்படுபவர். ஆகவே யோகினிகள் பைரவர்களின் தலைவரான க்ஷேத்ரபாலாவின் உதவியாளர்களாக பணியாற்றுகிறார்கள். யோகினிகளில் சிலர் பாதி மனித உடலுடனும் பாதி விலங்குகளாகவும் உள்ளார்கள் அல்லது விலங்குகளை தம்முடைய வாகனங்களாக வைத்துக் கொண்டு உள்ளார்கள். அவர்கள் சாதாரண நிலைக்கு அப்பாற்பட்ட, அபரிதமான தந்திர, மந்திர சக்தியையும் பெற்றவர்கள். ஆழ்ந்த தாந்த்ரீக சக்தியை கொடுப்பவர்கள். ஸ்கந்த புராணத்தின்படி ‘பகவான் சிவ அவதாரமான பைரவர், பிசாசு பேய் போன்றவர்களை கட்டுப்படுத்தி வைத்து உள்ளவர், அவர்களுடைய தலைவர் என்றும் கூறலாம்’. பைரவர் துஷ்டர்களையும் தீயவர்களையும் தண்டிப்பவர், பாவங்களையும் துடைப்பவர் ஆவார். சில யோகினிகள் சிவன் மற்றும் பார்வதி தேவிக்கும் உதவியாளர்களாக உள்ளார்கள். 64 யோகிகள் மற்றும் அவற்றின் சக்திகள் பற்றிய குறிப்புகள் பிரும்மாண்ட புராணம், அக்னி புராணம், ஸ்கந்த புராணம், காளிக புராணம், சண்டி புராணம் போன்ற பண்டைய வேத கால நூல்களில் காணப்படுகின்றன.
காளி யோக தந்திரா எனப்படும் நூலில் கூறப்பட்டு உள்ள செய்தி என்ன என்றால் ஒருநாள் காளி தேவியானவள் தன் முன் கூடி இருந்த ரிஷி முனிவர்களிடம் இப்படியாகக் கூறினார் ‘அறுபத்தி நான்கு யோகினிகளும் என்னுள் உள்ளவர்கள், நான் அவர்களுக்குள் இருக்கின்றேன். நான்தான் அந்த 64 தோற்றங்களில் உள்ளேன். அவர்கள் அனைவருமே என்னுள் இருந்து வெளிப்பட்டவர்கள் என்பதினால் ஒவ்வொருவரும் என் உடலில் உள்ள சக்திகளையும் கொண்டு உள்ளனர். அந்த 64 யோகினிகளும் எனக்கு சேவகம் செய்பவர்கள்’ .
64 யோகினிகளுக்கு தாந்த்ரீக வழிபாடு செய்ய மிக முக்கியமான ஆலயங்கள் உள்ளன. அவை ராணிப்பூர்-ஜாரியல் 64 யோகினி ஆலயம் (ஒடிசாவின் பாலாங்கிர் மாவட்டத்தில் அமைந்துள்ளது), கஜுராஹோ 64 யோகினி ஆலயம் , பைரகாட் 81 யோகினி ஆலயம் (மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது), மிட்டோலி 64 யோகினி ஆலயம் (மத்திய பிரதேசத்தின் மிதாலி கிராமம்), ஹிராபூர் 64 யோகினி ஆலயம் (ஒடிசாவின் சிறிய கிராமம்) மற்றும் போடா யோகினி ஆலயம் (மத்தியப் பிரதேசத்தில் குல்ஹார் ரயில் நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ).
வீரபுத்திர பகவான் மற்றும் பத்ர காளி தேவியின் தோற்றங்கள்
தக்ஷ யாகத்தில் தனது தந்தையால் அவமானப்படுத்தப்பட்ட சதி தேவி அதே யாக குண்டத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட பின்னர் யாக குண்டத்தை அழித்தாள். அதனால் கோபமடைந்த சிவபெருமான் தனது தலைமுடியிலிருந்து இரண்டு முடியை பறித்து தரையில் வீசினார். அதில் இருந்து அதி பயங்கர அவதாரத்தில், எட்டு கைகள் மற்றும் அவற்றில் ஆயுதங்களை ஏந்தியவண்ணம் ஒரு கடுமையான போர்வீரரான வீரபத்திரர் வெளிவந்தார். அவரை தொடர்ந்து 18 கைகள் கொண்ட அந்த கைகளில் பல ஆயுதங்களையும் வைத்து இருந்த நிலையில் பத்திரகாளி தோன்றினார். இருவரும் இணைந்து யாகத்தை அழித்து தக்ஷனின் சேனைகளையும் கொன்று தீர்த்தார்கள். மனைவி மரணத்தைக் கண்டு துக்கமடைந்த சிவ பெருமான் தனது மனைவியின் இறந்த உடலை தனது தோள்பட்டையில் சுமந்து கொண்டு பிரபஞ்சத்தை சுற்றி வரலானார். பகவான் வீரபத்திரர் என்ன தன்மைகளைக் கொண்டவர் ? அறியாமை மற்றும் அகங்காரத்தை அழிப்பவர். நில சம்மந்தப்பட்ட சச்சரவுகள், சூனியம் பிடித்தவர்கள் அவற்றின் தாக்கத்தில் இருந்து விடுதலை பெறவும், மற்றும் மன நலம் குன்றியவர்கள் நலமடையவும் அவரை வேண்டுவார்கள். சிவபெருமானின் கோவில்களில் அவர் இரண்டாம் நிலை தெய்வமாக வாங்கப்படுகின்றார் என்றாலும், சிவபெருமானுக்கு வழிபாடு செய்தபின் வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தெய்வீகமாக அவர் கருதப்படுகிறார். இருப்பினும் கர்நாடக மற்றும் தெலுங்கானா பிரதேசங்களில், பகவான் வீரபத்திரர் பலரது குல தெய்வமாகவே வாங்கப்பட்டு வருகின்றார். அங்கெல்லாம் இவருக்கு பிரத்யேகமான பல ஆலயங்கள் உள்ளன. அக்னி வீரபத்ரா, அகோர வீரபத்ரா, பவானா வீரபத்ரா, கல்யாண வீரபத்ரா, உத்தந்தா வீரபத்ரா போன்ற பல அவதார தோற்றங்களில் அவர் வணங்கப்பட்டு வருகின்றார்.
பயங்கரமான மற்றும் மூர்கத்தனமான வடிவில் உள்ள பத்ரகாளி தேவி என்பவர் துர்கா தேவியின் அவதாரம், காலத்தின் தெய்வம் என்பார்கள். காளி தேவி என்பவர் காலம் என்பதின் பெண் வடிவம், அதை போல அறியாமை எனும் இருட்டின் ஆண் வடிவமும் அவளே. அதில் அவளை காலா என அழைப்பார்கள். அதனால்தான் காளி தேவியை அறியாமையை அகற்றி மன வெளிச்சம் தரும் தெய்வம் என்பார்கள். தேவி மகாத்மியத்தில் காளி தேவியை பற்றிய முக்கியமான குறிப்புகள் உள்ளன. வாயு புராணம் மற்றும் மகாபாரத நூல்களின் செய்தியின்படி பத்ர காளி தேவி என்ற அவதாரம் தக்ஷ யாகத்தின் போது வெளிப்பட்டது. சிவபெருமானின் வடக்கு முகத்திலிருந்து பத்ர காளி தேவி வெளிவந்ததாக தந்திர சாஸ்திர நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இதன் பொருள் என்னவென்றால், சிவ பெருமான் ஒவ்வொரு திசையிலும் கண்ணுக்குத் தெரியாத கண்களைக் கொண்டிருப்பதால் எல்லா திசைகளையும் ஒரே நேரத்தில் அவரால் பார்க்க முடிந்தது, எனவே தக்ஷ யாகத்தில் அவருடைய வடக்கு திசையில் இருந்த கண்களுக்கு தெரியாத முகத்திலிருந்து வெளிப்பட்டாள் என்பதாகும்). காளி தேவி பல அவதாரங்களை கொண்டிருக்கிறாள். அவற்றில் ஒன்றில் அவள் ருத்ரா வடிவத்தில் இருந்த சிவபெருமானின் மனைவியாகவும் இருக்கிறாள். அதேபோல் அவள் பகவான் வீரபத்திரரின் மனைவியாகவும் இருக்கின்றாள். அவளுக்கு எட்டு வடிவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் தாந்த்ரீக உலகில் மிக முக்கியமான தெய்வமாக கருதப்படுகிறார். பிரபஞ்சத்தின் நன்மைக்காக சாதகர்களுக்கு பல்வேறு தத்துவார்த்தமான (அதாவது மனத்தால் மட்டுமே உணரக் கூடிய) ரூபங்களிலும் காட்சி தருகின்றார்.
தந்திர உரைகளை விவரிக்கும் மிக முக்கியமான நூல்களில் ஒன்று ‘மகா நிர்வாண தந்திரம்’ என்பதாகும். இது மிக முக்கியமான தாந்த்ரீக நூல்களில் ஒன்றாகும். அதில் சிவ பெருமானே காளி தேவியின் மகிமைகளை குறித்து தனது மனைவியான பார்வதி தேவியிடம் கூறுவது போன்ற உரையாடல் வடிவத்தில் எழுதப்பட்டு உள்ளது. அந்த உரையாடல் மூலம் இறைவன் தானே தந்திர வழிபாட்டு முறையின் கோட்பாட்டையும் நடைமுறையையும் பார்வதி தேவிக்கு விளக்குகிறார் மற்றும் அவளுக்கு பல்வேறு ரகசிய மந்திரங்களையும் போதனை செய்தார் என்று எழுதப்பட்டு உள்ளது. ஆதி பராசக்தி தேவியின் வெளிப்பாடான காளி தேவியின் மகிமையை எடுத்துரைத்தபோது அவளிடம் கூறினாராம் ‘நீதான் மேம்மை மிக்க யோகினி என்பவள்.எண்ணங்கள் மற்றும் தோற்றம் அற்ற இருண்ட உருவில் மஹா காலா எனும் வடிவில் இருந்தவள், பரபிரும்மனின் ஆசைப்படி இருளிலிருந்து அண்டத்தை உருவாக்கி, உலகத்தை படைத்து, அசையும் மற்றும் அசையா ஆத்மாக்களை உருவாக்கி, அவற்றை பாதுகாத்து, முடிவில் அவற்றை அழித்தும் காட்டினாய். நீயே முழுமையான உண்மை மற்றும் மூல வடிவமான அத்ய காளி என்பவள். நீயே தாரினி, துர்கா, ஷோடாஷி, புவனேஸ்வரி, துமாவதி போன்ற வடிவத்திலும் உள்ளவள். நீங்கள் தொடக்கமும் முடிவும் இல்லாத நித்தியமானவள், மாயா சக்தியால் பல வடிவங்களில் காட்சி தரும் நீயே பகலமுகி, பைரவி, மற்றும் சின்னாமஸ்தா போன்ற வடிவங்களிலும் இருந்தாய். நீயே அன்னபூர்ணா, வாக்தேவி, கமலாலயா போன்ற ரூபங்களைக் கொண்டவள். அனைத்து சக்தி தேவிகள் மற்றும் அனைத்து தேவர்களின் உருவங்கள். நீயே படைத்தவர், பாதுகாவலர், அனைத்தையும் இயக்குகின்றவர் மற்றும் அழிப்பவர் என்பதால், எப்போதும் நிலையான, என்றுமே மாறாத, சர்வ வல்லமையுள்ள, தூய்மையான நுண்ணறிவு கொண்டவள் என்பதினால், பலகாலம் பிரம்ம மந்திரத்தை உச்சாடனை செய்து சாதகர்கள் பெறும் நன்மைகளை, உன்னை வணங்கித் துதிப்பதின் மூலமும் பெற முடியும் என்பதே உண்மை. பலவிதமான தந்திர வழிபாடுகளில்உன்னை வணங்கித் துதிக்கும் வழிமுறையிலான வெவ்வேறு மந்திரங்களையும் யந்திரங்களையும் கூறி அவற்றின் மூலம் ஒருவர் பெறும் நன்மைகளையும் பற்றி நானே கூறி உள்ளேன்’. மேலும் தொடர்ந்த அந்த உரையாடலில் சிவபெருமான் காளி தேவியின் நூறு பெயர்களைக் கொண்ட பார்வதி தேவியின் மேன்மையைக் கூறும் ஒரு ஸ்லோகத்தையும் கூறினார். மேலும் காளி தேவியின் அந்த நூறு பெயர்களையும் தொடர்ந்து எவர் ஒருவர் உச்சரித்து வருவார்களோ அவர்கள் எண்ணங்கள் நிறைவேறும், எதிரிகள் அழிவார்கள், அதிருஷ்டம் அவர்களை சூழ்ந்து கொள்ளும், செல்வ செழிப்பைப் பெறுவார்கள் என்றும் கூறினாராம். பத்ரகாளி தேவி என்றும் அழைக்கப்படும் மஹா காளி தேவியின் பெருமையை எடுத்துரைக்க இதைவிட வேறு என்ன வேண்டும்?
பத்ரகாளி தேவி மிகவும் பழமையான புராண தெய்வம். இந்தியாவில் எழுதப்பட்டு உள்ள பல்வேறு தந்திர நூல்களிலும் அந்த தேவியின் ஆராதனை முறைகள் மென்மையாக கூறப்பட்டு உள்ளன. மகாபாரதாவின் கடபர்வா, பத்ம புரணா, மார்க்கண்டேயா புராணம், சரலா தாஸின் சண்டி புராணம், விஷ்ணு புராணம், ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத்பாகவத தந்திரப்பிரசங்கா மற்றும் ஹரிவம்சத்தின் இரண்டாம் பகுதி ஆகியவை காளி தேவியே எங்கும் நிறைந்துள்ள, அழிவற்ற மற்றும் நிலையான பரப்பிருமனின் அவதாரம் என்பதாக கூறி உள்ளன .
தந்திர யோகா முறையிலான பயிற்சிகளில் காளி தேவி முக்கிய பங்கு வகிக்கிறார். பார்வதி தேவியே பெரும்பாலான தந்திர வடிவத்தில் சிவனின் ஞானத்தைப் பெற்றவர் என்று கூறப்பட்டாலும், காளி தேவியும் பார்வதி தேவியும் ஒருவரே என்றாலும், தாந்த்ரீக சடங்குகள் மற்றும் தாந்த்ரீக நூல்களில் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்துவது காளி தேவியின் அவதாரமே.
சக்தி பீடங்கள் எழுந்தன
சிவ பெருமான் பயங்கரமான ரூபத்தைக் கொண்டு தாண்டவ நடனத்தை ஆடினார். அப்போது அவர் கையில் வைத்து இருந்த உடுக்கையில் இருந்து எழுந்த டம் டம் எனும் ஓசை காதை கிழிக்கும் வகையில் இருந்தது. பிரபஞ்சமே நடுங்கியது, தெய்வங்கள் முதல் தேவதைகள், ரிஷி, முனிவர்கள் மற்றும் மானிடர்கள் என அனைவருமே நடுங்கி கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில்தான் பிரும்ம பகவானின் மானஸ மகன்களான ஸனத்குமாரர்கள் சத்ருங்க மலையில் அமர்ந்து சிவபெருமானை தியானித்துக் கொண்டிருந்தார்கள். மாய உலகில் பற்றற்ற நிலையில் தம்மை வைத்துக் கொண்டு இருந்தவர்கள் பிரபஞ்சம் படைக்கப்பட்டதில் இருந்து, தாம் வெளிவந்தவரை அனைத்திலும் இருந்த படைப்பு என்பது என்ன என்பதை தமது தந்தையான பிரும்மனாலும் விளக்க முடியவில்லை என்பதினால் பிரும்மாவே அவர்களுக்கு அறிவுறுத்தியபடி படைப்பின் தத்துவத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர்கள் சிவபெருமானை நினைத்தவாறே நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தியானத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு பதிலும் கிடைக்கவில்லை. அந்த நிலையில் அவர்கள் முன்னால் சிவபெருமான் பார்வதி சமேதராக வந்தபோதிலும் அவர்கள் கண்களை திறந்து பார்க்கவில்லை என்பதின் காரணம் அவர்கள் ஏதாவது ஒரு குருவின் ஆசியோடு தம்முடைய வினாக்களுக்கு விளக்கம் கிடைக்க வேண்டும் என்று சிவபெருமானை வேண்டிக் கொண்டு தீவிரமான தவத்தில் இருந்தார்கள். அப்போது பயங்கர தாண்டவ நடனத்தை ஆடிக்கொண்டு இருந்த சிவபெருமானின் கையில் இருந்த உடுக்கையில் இருந்து வெளிவந்த பயங்கரமான ஓசையினால் கண் விழித்தார்கள். சிவபெருமானைக் கண்டதும் தூரத்தில் இருந்தே வணங்கினார்கள்.
விரைவில் தேவர்கள் மற்றும் பிற தெய்வீக சக்திகளின் வேண்டுகோளின் பேரில் விஷ்ணு பகவான் தனது சுதர்சன் சக்கரத்தை ஏவி தாண்டவ நடனம் ஆடிக் கொண்டு இருந்த சிவபெருமானின் தோள்களில் கிடந்த பார்வதி தேவியின் உடலை 51 உடல் பாகங்களாக வெட்டிவிட அந்த பாகங்கள் பூமியில் பல இடங்களிலும் விழுந்தது. இன்னும் சில நூல்களின்படி சிவபெருமான் பார்வதி தேவியின் உடலை தோளில் சுமந்தபடி வெறி பிடித்தவர் போல உலகெங்கும் சுற்றித் திரிந்தபோதுதான் விஷ்ணு பகவான் தனது சுதர்சன் சக்கரத்தை ஏவி பார்வதி தேவியின் உடலை வெட்டி விட்டதாக கூறப்பட்டு உள்ளது. பார்வதி தேவியின் உடல் பாகங்கள் அனைத்தும் சிவபெருமானின் தோள்களில் இருந்து கீழே விழுந்ததும் அவர் மனம் அமைதி அடைந்தது. இப்படியாக பார்வதி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில், ஆதி பராசக்தி தேவியின் சக்தி பீடங்கள் எழுந்தன அல்லது கட்டப்பட்டன. அந்த சக்தி பீடங்களுக்கு பாதுகாவலராக இருக்க பைரவரை சிவபெருமான் அனுப்ப, பைரவரும் பல்வேறு தோற்றங்களில் சென்று அந்த சக்தி பீடங்களை பாதுகாக்கும் பணியில் அமர்ந்து கொண்டார்.
அந்த சக்தி பீடங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அதன் காரணம் அப்படி வெட்டி விழுந்து அந்தந்த பூமியில் மறைந்து கிடைக்கும் பார்வதி தேவியின் உடல் பாகங்கள் அனைத்திலும் ஆதி பராசக்தியின் உயிரோட்டமான தந்திர, மந்திர, யோகா சக்திகளோடு கூடிய அனைத்து ஆற்றல்களும் சக்திகளும் பொதிந்து இருந்ததுதான். ஆகவேதான் அந்தந்த சக்தி பீடங்கள் அனைத்திலும் பார்வதி தேவியும் அவளது இன்னொரு அவதார உருவமான துர்கா தேவியும் உயிரோட்டமாக இருக்கின்றார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
சக்தி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழும்பிய ஆலயங்களை புனிதமான சக்தி பீடம் என அழைக்கின்றார்கள். இந்தியாவில் 41 சக்தி பீடங்களும், நான்கு சக்தி பீடங்கள் பங்களா தேசத்திலும், மூன்று பீடங்கள் நேபாளத்திலும், பாகிஸ்தான், திபெத் மற்றும் ஸ்ரீ லங்காவில் ஒவ்வொரு சக்தி பீடங்களும் அமைந்து உள்ளன.
அஷ்டாங்க பைரவர்கள் தோற்றம்
சக்தி பீடங்களைக் காவல் காக்குமாறு சிவபெருமான் தன்னுள் இருந்து வெளிவந்த பைரவரிடம் கூறியபோது அந்த பைரவரும் தன்னை 64 பைரவர்களாக மாற்றிக் கொண்டு அஷ்டாங்க பைரவர்களாக மாறினார். அந்த அஷ்டாங்க பைரவர்களும் தக்ஷ யாகத்தை அழிக்க சதி மூலம் வெளிவந்த அஷ்ட மாத்ரிகாக்களை மணந்து கொள்ள அவர்கள் மூலம் 64 பைரவர்களையும், 64 யோகினிகளையும் வெளிவரச் செய்தார்கள். இப்படியாகவே தக்ஷ யோகத்தின் மூலம் வெளி வந்த பெரும் எண்ணிக்கையிலான பைரவர்கள், யோகினிகள், மோகினிகள், தச மஹா வித்யா தேவிகள் போன்ற அனைவருமே மந்திர, தந்திர, சக்திகளை உள்ளடக்கிக் கொண்டு பிறந்தவர்கள். அவர்களே பிற்காலத்தில் ஆதிபராசக்தியின் பல யுத்தங்களிலும் அவளுக்கு துணை இருந்து யுத்தத்தில் பங்கேற்று, பல்வேறு சந்தர்ப்பங்களில் அசுரர்கள் மற்றும் பேய் சக்திகளை நிர்மூலமாக்குவதற்கு துணை இருந்தார்கள். அதை போலவேதான் அந்த மந்திர தந்திர சக்திகளை பெற்று இருந்த பைரவர்கள், யோகினிகள், மோகினிகள், தச மஹா வித்யா தேவிகள் போன்ற அனைவருமே அனானுஷ்ட சக்திகளை அடையவும், ஞானத்தை அடையவும் அவர்களை ஆராதித்த சாத்வீகர்களுக்கு உதவி செய்தார்கள். இப்படியாகவே அவர்கள் அனைவருமே ஆன்மீக உலகின் தந்திர மந்திர மார்க்க வழிபாட்டின் முக்கியமான தேவிகளாக மாறினார்கள்.
குரு தட்சிணாமூர்த்தியின் அவதாரம்
பயங்கரமான தாண்டவ நடனம் ஆடிக் கொண்டு இருந்த சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவியின் உடல் பூமியின் பல பகுதிகளிலும் விழுந்த உடனேயே சாந்தம் அடைந்ததும் ஸனத்குமாரர்கள், அவர் நடனத்தை நிறுத்திய சத்ருங்க மலையின் இடத்துக்கே சென்று தம்முடைய சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் தர வேண்டும் என வேண்டிக் கொள்ள சிவபெருமானோ தான் தக்க நேரத்தில் அவர்களுடைய குருவாக வந்து அனைத்து வினாக்களுக்கும் விடை தருவதாக உறுதி அளித்தார். அதன்படி ஒருநாள் கருணை மிக்க சிவபெருமான் தான் ஒரு பதினாறு வயது சிறுவனாக உருமாறிக் கொண்டு ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டார். அவரை முதன் முதலில் சானகாதி முனிவர்களே அடையாளம் கண்டு கொண்டு அவரிடம் இருந்து ஞானம் பெற்றார்கள். ரிக் வேதத்தில் கூறப்பட்டு உள்ளதை போல சிவபெருமானின் அவதாரமான பகவான் ருத்ரரே ஞானத்தை தரும் கடவுளான பகவான் தக்ஷிணாமூர்த்தியானார். பகவான் தரும் போதனைகளை வாயால் கூறியதில்லை ஆனால் ஞானத்தை பெற அவரிடம் சென்றவர்களின் காதுகளில் மட்டுமே ஒலிக்கும் மௌன மொழியான பாரா வாக் என்பதின் மூலமாகவே போதனைகளை செய்தாராம். பிரம்மத்தின் உண்மையான அர்த்தத்தை இயற்கையாக விளக்கும் பகவான் தட்சிணாமூர்த்தியின் போதனைகளைப் புரிந்துகொள்ள சாதாரண வெளிப்பாடுகள் எதுவுமே தேவையில்லை.
51 சமஸ்கிருத எழுத்துக்கள்
சிவபெருமானின் கைகளில் இருந்த உடுக்கையில் இருந்து வெளியான ‘டம் டம்’ என்ற ஒலி சமஸ்கிருதத்தின் 51 எழுத்துக்களாக மாறியது என்றும், அந்த 51 சமஸ்கிருத எழுத்துக்கள் நட்சத்திரத்தின் தீப்பொறி போல பூமியில் விழுந்த இடங்களில் அமைக்கப்பட்ட ஆலயங்களே அட்சரா (எழுத்துக்கள்) சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டன. ஆதி பீஜாக்ஷர மந்திரத்தில் சமஸ்கிருத மொழியின் அனைத்து 51 எழுத்துக்களும் அடங்கி உள்ளன. ஆகவே ஆதி பீஜாட்சர சக்தி ஆலயங்களில் தவம் செய்வதின் மூலம் ரிஷிகளும் சாதானாவீக்களும் யோக மற்றும் தாந்த்ரீக சித்திகளை பெற்று உள்ளார்கள்.
திருநாங்கூர் திவ்ய தேச ஆலயங்கள்
மற்றும் திருநாங்கூர் சிவ பீடங்கள்
சிவபெருமான் உக்கிர தாண்டவ நடனம் ஆடியபோது நிகழ்த்தியபோது, அவரது தலையில் இருந்த ஜடா முடிகள் சில, உபயா காவேரி நதி படுக்கையில் பதினொரு இடங்களில் விழுந்தது. உடனடியாக அவை அனைத்தும் அங்கங்கே சிவபெருமானின் பன்னிரண்டு ருத்ர வடிவங்களாக மாறி , ஒரே நேரத்தில் சிவபெருமானின் முக்கிய வடிவத்துடன் உக்கிர நடனம் ஆடாத துவங்கின. அதைக் கண்ட உடனேயே விஷ்ணு பகவானும் தன்னை பதினோரு வடிவங்களாக்கிக் கொண்டு அங்கு சென்று அந்த ருத்ரர்களை கட்டி அணைக்க ருத்ரர்களின் சினம் மறைந்தது. சினம் அடங்கிய பதினோரு ருத்ர வடிவங்களும் ஒன்றாக இணைந்து ஒரே ருத்ரராகின. ருத்ரனோ சிவபெருமானின் அவதாரமே. தமிழ்நாட்டின் சீர்காழி நகருக்கு அருகிலுள்ள திருநாங்கூர் கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள புனித இடங்களில் எங்கெல்லாம் அந்த பதினொரு ஜடா முடிகள் விழுந்தனவோ அங்கெல்லாம் சிவபெருமானின் சிவ பீட ஆலயங்கள் தோன்றின. அதை போலவே அந்த பதினொரு புனித இடங்களும் விஷ்ணு பகவானின் திருநங்கூர் திவ்ய தேசம் (ஆலயங்கள்) என்று அழைக்கப்படும் பதினொரு புனித ஆலயங்களாயிற்று .
தக்ஷ யாகத்தின் மூலம் இப்படியாக பலவேறு தெய்வங்களையும், ஆலயங்களையும் உலக நன்மைக்காக அந்த ஆதி பராசக்தி படைத்தாராம்.