ரகுவம்சம்-7
– சாந்திப்பிரியா – 

மன்னன் தசரதன் 
பெற்ற சாபம்   

அயன் மரணம் அடைந்த பிறகு ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றுக் கொண்ட தசரதனும் தன் தந்தையைப் போலவே நல்லாட்சி நடத்தி வந்தார். தீய செயல்களோ அல்லது தீய குணங்களோ அவரிடம் சிறிதும் காணப்படவில்லை. அவரும் தனது தந்தையைப் போல பல நாடுகள் மீதும் படையெடுத்து சென்று தனது நாட்டை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார். ஜனங்கள் அவர் மீது பெரும்  மதிப்பு வைத்து இருந்தார்கள். பல விஷயங்களிலும் அவர்  சிறந்து விளங்கினார். அமைதியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கையில் அவர் கோசலநாட்டு மன்னனின் மகளான கௌசல்யயையும், கேயதேசத்து அரசனின் மகளான கைகேயி மற்றும் மகர தேசத்து மன்னனின் மகளான சுமித்திரையும் மணந்து கொண்டார்.  இப்படியாக மூன்று மனைவிகளுடனும் ஆனந்தமான வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கையில் அவருக்கும் ஒரு சோதனை வந்தது.

வசந்த காலத்தில் பொதுவாக மன்னர்கள் வன வேட்டைக்குச் செல்வார்கள். அப்போதுதான் காட்டில்  வனவிலங்குகள் ஓடியாடித் திரியும். உணவுக்கு இறை தேடி அங்கும் இங்கும் அலையும். செடி கொடிகள் அற்புத பச்சை நிறத்தில் மனதுக்கு இனிமையாக காட்சி தரும். அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்படியான வசந்த காலம் வந்தபோது தசரத மன்னனும் தனது சிறு சேனையுடன், வன நாய்கள், மிருகத்தைக் கட்டும் கயிறு என அனைத்தையும் எடுத்துக் கொண்டு வனத்துக்கு வேட்டையாடச் சென்றார். வன தேவதை தசரதனை மனதார வரவேற்றாள். வனத்துக்கு வேட்டைக்கு சென்ற தசரதன் பல மிருகங்களைக் கொன்றார். மறைந்து இருந்த மிருகங்களை தூரத்ததில் இருந்தே பாணம் விட்டு அழித்தார். மதியம் வேட்டையாடி களைப்புற்றவர்கள் ஒரு அரத்தடியில் அமர்ந்து கொண்டார்கள். அப்போது காத தூரத்தில் இருந்த நதி ஒன்றில் மிருகம்  ஒன்று களுக், களுக் என்று நீர் அருந்துவது போல சப்தம் கேட்டது. ஆனால் அது யானை அல்ல. ஒரு குருட்டு பெற்றோர்களின் புதல்வர் அவர்களுக்காக தனது குடத்தில் நீரை மொண்டு கொண்டு இருந்தபோது எழுந்த சப்தமே ஆகும்.

தசரதர் வில் வித்தையில் சிறந்தவர். ஓசை வரும் திசையைக் கண்டே துல்லியமாக அந்த ஓசை வரும் இடத்திற்கு அம்பை ஏவும் வல்லமைக் கொண்டவர். ஆகவே ஓசை வந்த திசையில் அம்பை ஏத்தினார்…..அந்தோ பரிதாபம். அந்த அம்பும் அங்கிருந்த குருட்டு பெற்றோர்களின் புதல்வர் உடலிலே தைத்து அவரை கீழே வீழ்த்த, ஐயோ என அலறினான் அந்த சிறுவன். ஒ ….மனிதக் குரல் ஒலிக்கிறதே…ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டதோ ….வந்த குரல்  மனித ஒலியாக இருக்குமா என திடுக்கிட்ட தசரதர் ஓசை வந்த இடத்துக்கு ஓடோடிச் சென்று பார்க்க அங்கே தான் எய்த அம்பினால் கீழே விழுந்து கிடந்த சிறுவனைக் கண்டார். தசரதரைக் கண்ட சிறுவனோ இருகரமும் கூப்பி ‘மன்னா சற்று தூரத்தில் தோள் கூடையில் சுமந்து வந்துள்ள கண் பார்வை அற்ற என்னுடைய பெற்றோர்களை விட்டு விட்டு வந்திருக்கிறேன். அவர்கள் தாகத்தினால் தவித்தபடி இருப்பார்கள். ஆகவே தயவு செய்து உடனடியாக இந்த குடத்தில் உள்ள நீரைக் கொண்டு சென்று அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் தாகத்தைத் தணிக்க உதவுங்கள்’ என்று கூறி விட்டு அப்படியே மரணம் அடைந்து விழுந்தான்.

என்ன செய்வதென்று தெரியாத தசரதனும் இறந்து கிடந்த சிறுவனையும், குடத்து நீரையும் எடுத்துக் கொண்டு போய் கண் பார்வை அற்ற கிழவர்களின் அருகில் சென்று முதலில் நடந்த எதைப் பற்றியும் கூறாமல் நீர் குடத்தைக் கொடுத்து அதை அருந்துமாறு கூறினார். ஆனால் அந்த கண்பார்வை அற்ற பெற்றோர்களோ தமது புதல்வன் வராமல் வேறு யாரோ வந்தல்லவா தண்ணீரைத் தருகிறார் ….நமது புதல்வனுக்கு என்ன ஆயிற்று என தவித்தபடி தமது புதல்வனின் பெயரைக் கூறி அவனை அழைத்தார்கள். அவன் வந்து விடுவான் என்றும், அதற்குள் நீரை அருந்துமாறு தசரதன் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் சந்தேகம் கொண்ட அவர்கள் தமது புதல்வன் குரலைக் கேட்காமல் அந்த நீரை அருந்த மாட்டோம் என்று உறுதியாகக் கூறினார்கள்.

சில கணம் யோசனை செய்தபின் வேறு வழி இன்றி தசரதனும் நடந்த அனைத்தையும் கூறி, தான் யார் என்பதையும் கூறி அவர்களிடம் தான் அறியாமல் செய்து விட்ட பிழைக்காக மன்னிப்பைக் கோரினார். ‘பெரியோர்களே, நான் தெரியாமல் செய்து விட்ட பிழையை மன்னித்து என்னையே உங்கள் மகனாக ஏற்றுக் கொண்டு என்னுடன் அரண்மனைக்கு வந்து விடுங்கள். நான் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்’ என்று கூறியதும் அந்த கண்பார்வை அற்ற பெற்றோர்கள் கதறி அழுதார்கள். தாம் ஆசையுடன், அன்புடன் வளர்த்து வந்த தமது ஒரே மகனை இழந்து விட்டவர்களினால் மகனின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சற்றே கோபமுற்ற கிழவர் தசரதனுக்கு சாபமிட்டார். ‘மன்னா, எங்களை நீ எப்படி புத்திர சோகத்தினால் வருத்தமடையச் செய்து விட்டாயோ அதைப் போலவே உன் வாழ்விலும் உனக்கு புத்திர சோகம் ஏற்படட்டும்’ என்று கூறிய பின் அப்படியே கீழே விழுந்து இருவரும் மரணம் அடைய, பெரும் துயரம் அடைந்த தசரதனும் வேறு வழி இன்றி அந்த மூவருக்கும் அங்கேயே கிரியைகளை செய்து அவர்களை தகனமும் செய்து விட்டு நாடு திரும்பினார்.

காலம் விரைவாக ஓடிற்று. மரணம் அடைந்து விட்ட, கண்பார்வை அற்ற கிழவர்களின் சாபமோ என்னவோ, பதினாறாயிரம் வருடம் கழிந்தும் தசரதனுக்கு புத்திர பாக்கியமே கிடைக்கவில்லை. அதனால் தனது மூதையோரான திலீபனைப் போலவே ‘தமக்கு பிறகு ஸ்ரார்தங்கள் செய்து பித்ருக் கடன்களை தீர்க்க மகன் பிறக்கவில்லையே’ என மனம் வருந்திய தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்யலானார்.

இது நடைபெற்றுக் கொண்டு இருந்த நேரத்திலே பாற்கடலில் சயனித்திருந்த மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் சென்று இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தமக்கு தேவலோகத்திலும், பூலோகத்திலும் ராவணன் எனும் அசுரனின் மூலம் பல தொல்லைகள் நேரிடுவதாகவும், ராவணனின் ஆட்களினால் தாம் எந்த ஒரு யாகத்தையும் பூஜை புனஸ்காரங்களையும் செய்ய முடியாமல் தவித்துக் கிடப்பதையும் கூறி தம் அனைவருக்கும் ராவணனின் அட்டகாசத்தில் இருந்து விடுதலை பெற்றுத் தர வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்கள். அதைக் கேட்ட நாராயணரும் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அமைதிப்படுத்தி  ‘தேவர்களே நீங்கள் அஞ்ச வேண்டாம். நடப்பதை நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த ராவணன் பிரும்மாவிடம் இருந்து பல அறிய வரங்களை பெற்றுக் கொண்டு உள்ளான். அதில் ஒன்றாக அவன் தனக்கு தேவர்களால் மரணம் சம்பவிக்கக் கூடாது என்ற வரத்தையும் பெற்று இருக்கிறான். ஆகவே அவனுக்கு தேவர்களால் மரணம் சம்பவிக்காது. ஒரு மானிடப் பிறவியினால் மட்டுமே மரணம் கிடைக்கும்.  அந்த மரணமும் நான் மானிடப் பிறவி எடுத்தப் பின் என்னால் மட்டுமே மரணம் சம்பவிக்கும் என்பது விதியாக உள்ளது. தற்போது தசரதன் தனக்கு மகன் வேண்டும் என புத்ர காமேஷ்டி யாகம் ஒன்றை நடத்திக் கொண்டு இருக்கிறார். ஆகவே நானே தசரதனின் மகனாக பிறந்து  பூமியிலே மானிடனாக வாழ்ந்து  அந்தப் பிறவியிலே ராவணனுடன் யுத்தம் செய்து அவனை அழிப்பேன். கவலைப்படாதீர்கள்’ என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

அதே நேரத்தில் தசரதன் செய்த யாகமும் நிறைவேறும் கட்டத்தை எட்டியபோது அந்த யாகத் தீயில் இருந்து தோன்றிய பூதம் ஒன்று தனது கையில் ஒரு மண்பாண்டத்தை எடுத்து வந்து அதில் இருந்த பிரசாதத்தை தசரதனுக்கு கொடுத்து அதை அவருடைய மனைவிகள் உண்டால் அவர்கள் கருதரிப்பார்கள் என்று கூறி விட்டு மறைந்தது.   தசரதரும் அதைக் கொண்டு போய்  தனது மூன்று மனைவிகளுக்கும் கொடுத்தார். அதை அருந்திய கோசலை நல்ல நாளில் நாராயணருடைய அவதாரமான ஒரு புத்திரனைப் பெற்று எடுத்தாள்.  அவனுக்கு ராமன் எனப் பெயர்  சூட்டினார்கள். பிரசாதத்தை உண்ட கைகேயி பரதனைப் பெற்று எடுக்க, பிரசாதத்தை உண்ட சுமித்திரைக்கு லஷ்மணர் மற்றும் சத்ருக்னன் பிறந்தார்கள். நான்கு புதல்வர்களில் ராமரும், லஷ்மணரும்  ஒன்றாக வளர, பரதனும் சத்ருக்னனும் ஒன்றாக வளர்ந்தார்கள். அவர்கள் நால்வரும்  நல்லொழுக்கம் நிறைந்தவர்களாக கல்வி அறிவு மிக்கவர்களாக  வளர்ந்து வந்தார்கள்.

தொடரும்………8