ரகுவம்சம்-6
– சாந்திப்பிரியா – 

அயன்  மரணமும்,  தசரதன் பதவி ஏற்றதும் 

அயன் பல விஷயங்களிலும் சிறந்து விளங்கினான்.  பெரும் பலமும் வீரமும் மிக்கவனாக இருந்தார். எந்த நாட்டு அரசனுக்கும் எந்த விதமான தொல்லையும் கொடுத்ததில்லை.  அமைதியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கையில் ஒருநாள் அவன் தனது மனைவி  இந்துமதியுடன் சோலையில் அமர்ந்திருந்தபடி பூக்களைப் பறித்தபடி ஓடியாடிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தார். இருவரும் ஒரு மரத்தடியில் படுத்திருந்தவாறு பேசிக் கொண்டு இருக்கையில் வானத்து வழியே சென்று கொண்டு இருந்த நாரத முனிவருடைய வீணையில் இருந்து ஒரு மாலை கீழே விழுந்தது. விழுந்த மாலை இந்துமதியின் மார் மீது வந்து விழ அவள் ஒரு கணம் பரவசம் அடைந்து மகிழ்ந்த பின் அப்படியே பூமியிலே வீழ்ந்து மாண்டாள். அதைக் கண்ட அயனும் அப்படியே மூர்ச்சை அடைந்து விழுந்தார். அவருடைய பரிவாரங்கள் அனைவரும் அழுது புலம்பினார்கள். அன்னமும், ஆகாயத்திலே பறந்து சென்ற கிளிகளும் கூட அழுது புலம்பின. சற்று நேரத்தில் அயன் மட்டும் கண் விழித்தார். இறந்து கிடந்த தனது மனைவியின் உடலைக் கண்டு திக்கிட்டுப் போய் துக்கம் தீராமல் அழுது புலம்பலானார்.
‘தேவி, என்னே விதி என்பது? ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்த மாலையினால் உன் உயிர் போனதின் காரணம் என்னவோ …..தெரியவில்லையே….உன் மெல்லிய உடலை அந்த மெல்லிய மலர் மாலை பறித்ததின் காரணமும் தெரியவில்லையே……பிரியமானவளே ….. நாம்  எந்த பாவமும் செய்யவில்லையே… அனைவருக்கும் நல்லதையல்லவா செய்து வந்தோம்…இப்படி என்னை தனியே தவிக்க விட்டுச் சென்று விட்டாயே…இது நீதியாகுமா. இது நியாயமா……உனக்கே இது தகுமா? தேவி….உயிர் பிழைத்து எழுந்து வந்து அந்த காரணத்தைக் கூற மாட்டாயா? இனி நான் எப்படி உறங்குவேன்? உன் அழகிய வதனம்   மீது   உன்னைப் பொசுக்க போடப்படும்  கட்டைகளை எப்படியம்மா உன் உடம்பு தாங்கும்?’  என்றெல்லாம் கூறிக் கூறி கதறி அழுதவண்ணம் இருந்தார். அவரை உற்றாரும் உறவினரும், சுற்றத்தாரும் தேற்றி அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். இந்துமதியின் உடலையும் எடுத்துச் சென்று பத்து நாட்கள் இறுதிக் காரியங்களை  முறையோடு செய்து முடித்தார்கள்.
இறுதிக் காரியங்கள் நடந்து முடிந்தேறிய பின் அங்கு வந்திருந்த வசிஷ்ட முனிவருடைய சீடர்கள்  மன்னர் அயனிடம் சென்று கூறினார்கள் ‘மன்னா அனைத்து முக்கால சம்பவங்களை ஞானக் கண் கொண்டு நோக்கும் எம்முடைய மா முனிவரான வசிஷ்ட முனிவர் உமக்கு சில உண்மைகளைக் கூற எம்மை இங்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இறந்து போன உன்னுடைய மனைவி பூர்வ ஜென்மத்தில் அருணை என்பவளாக  இருந்தாள். அவள் இந்திரனின் சபையில்  ஒரு அப்ஸரை ஆவாள். ஒருமுறை திருணவின்து எனும் மாமுனிவர் தவத்தில் இருந்தார். அவர் தவம் வெற்றிகரமாக நடந்து  முடிந்து விட்டால் அவர் இந்திரனையும் மிஞ்சிய சக்தி கொண்டவர் ஆகிவிடுவார் என்ற பயத்தில் இந்திரன் ஒரு சூழ்ச்சி செய்து அருணை எனும் தனது ராஜசபை அப்ஸரையை அந்த முனிவரின் தவத்தைக் கலைக்க அனுப்பினார். அவளும் திருணவின்து எனும் அந்த முனிவர் தவம் இருந்த இடத்தை அடைந்து நடன நாட்டிய ஓசை எழுப்பி அவர் தவத்தைக் கலைத்தாள். தவம் கலைந்த முனிவரும் கோபம் கொண்டு அவளை மானிடப் பெண்ணாக பிறவி எடுத்து பூமியிலேயே சென்று  வாழுமாறு சாபமிட்டார். அழுது புலம்பியவாறு தான் அறியாமையினால் செய்து விட்ட தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கோரினாள்.  தான் வேண்டும் என்றே எந்த தவறையும் செய்யவில்லை, இந்திரனின் கட்டளைப்படியே வேறு வழி இன்றி அங்கு வந்து அவர் தவத்தைக் கலைக்க வேண்டியதாயிற்று என்று கூறி தனக்கு சாப விமோசனம் தருமாறு வேண்டினாள். முனிவர் திருணவின்துவும் அவள் மீது இரக்கப்பட்டு  ‘அவள் பூமியிலே பிறந்து அயனுக்கு மனைவியாக வாழ்ந்து கொண்டு இருக்கையில் நாரதர் வீணையில் இருந்து எப்போது அவள் மார்பின் மீது  கற்பக மாலை விழுமோ அப்போது அவளுக்கு  மரணம் சம்பவித்து அவள் மீண்டும் இந்திர லோகத்துக்கு சென்று விடுவாள். அதுவரை அவள் பூமியிலே மானிடப் பிறவியில் இருந்து அவதியுற வேண்டும்’ என்று அவளுக்கு தான் முதலில் கொடுத்த சாபத்தின் தன்மையை மாற்றினார்.
வசிஷ்ட முனிவருடைய சீடர்கள் மேலும் தொடர்ந்தார்கள் ‘மன்னா இதனால்தான் பூர்வ  ஜென்மத்தில் அருணையாக இருந்த உன்னுடைய மனைவியான இந்துமதியும் சாப விமோசனம் அடைந்து தேவலோகத்துக்கு திரும்பச் சென்று விட்டாள். ஆகவே நீ எத்தனைதான் அழுது புலம்பினாலும் அவள் மீண்டும் உயிர் பிழைத்து வரமாட்டாள் எனும் உண்மையை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எங்களை வசிஷ்ட முனிவர் இங்கு அனுப்பினார். ஆகவே மனதை தேற்றிக் கொண்டு உன் கடமையை வழுவாமல் செய்து வா. அதுவே நீ பிறந்த இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் செயலாக இருக்கும்’ என்று கூறி விட்டு சென்று விட்டார்கள்.
ஆனாலும் அயனினால்  தனது மனைவியாக இருந்த இந்துமதியை மறக்க முடியவில்லை. அவர்  மனதில் ஏற்பட்டு இருந்த துக்கம் ஆற முடியாத பெரிய ரணமாகவே  உருமாறிக்  கொண்டு  இருந்தது. காலம் கடந்தது. துக்கத்தினால் தன் நிலை இழந்த மன்னன் தனது மகன் தசரதன் எட்டு வயதாகும்வரைக் காத்திருந்தார்.   தசரதன் இளம் வயதுக்கு வந்து முடி சூட்டிக் கொள்ளும் நிலைக்கு வந்ததும், அவரை அரியணையில் அமர்த்திவிட்டு  ராஜ்ய பரிபாலனத்தையும் அவரிடத்திலே தந்து விட்டு  பல காலம் உபவாசம் இருந்து ஒருநாள் சராயு நதிக்கரைக்குச் சென்று சராயு நதியில் விழுந்து உயிரைத் துறந்து கொண்டார்.
தொடரும்……….7