சின்ன முன்னுரை
நீண்ட நாட்களாகவே எனக்கு மரணம் அடைந்தவர்கள் வீட்டில் பதிமூன்றாம் நாளன்று கிரேக்கியம் அல்லது சுபஸ்வீகாரம் எனப்படும் புனித சடங்கின் மாலையில் கூறப்படும் ‘ஆத்மாவின் பயணக் கதை’ குறித்து எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்தது. நான் பல இடங்களில் அந்தக் கதைகளைக் கேட்டு இருந்தாலும் அவற்றைக் கூறும் பண்டிதர்கள், இடை இடையே ஆன்மீக் கதையை விட்டு சற்றே விலகி உலக நடப்புகளைக் சேர்த்துக் கூறி எதை அவசியம் கூற வேண்டுமோ அதை கூறாமல் கதையில் இருந்து விலகிச் செல்கிறார்கள் என்பதை நேரிடையாக கண்டிருக்கிறேன்.
சுபஸ்வீகாரம் எனப்படும் பதிமூன்றாம் நாளன்று கதை எதற்காக கூறப்படுகின்றன என்றால், இறந்து விட்டவர்கள் குடும்பத்தினர், மரணம் அடைந்து விட்டவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை தங்கு தடை இன்றி செய்ய வேண்டும், சடங்குகளின் தாத்பர்யம் என்ன, அதனால் அந்த ஆத்மாவிற்கு என்ன பலன் கிடைக்கும் என்பவற்றை எடுத்துரைக்கும் கதை போன்ற நீதி போதனை ஆகும்.
மேலும் மரணம் அடைந்தவர்களில் வீட்டில் உள்ள இளம் தலைமுறையினருக்கு, மரணம் அடைந்தவர்களின் நிலை ஆன்மீகத்தில் எப்படி கூறப்பட்டு உள்ளது என்பதை எடுத்துக் காட்டவும், பண்டைய காலம் முதல் செய்யப்பட்டு வரும் சடங்கு முறைகளில் எத்தனை ஆழமான அர்த்தம் இருந்துள்ளது என்பதை விளக்கவும் கூறப்பட்டு வந்துள்ள நீதி போதனை கதைகள் ஆகும்.
சுபஸ்வீகாரம் எனப்படும் பதிமூன்றாம் நாளன்று கூறப்படும் உண்மையான கதை கருட புராணத்தில் உள்ளது. ஆனால் கருட புராணத்தில் கூறப்பட்டு உள்ள விஷயங்கள் மக்களுக்கு புரிவதில்லை, அவை விளக்கப்படவில்லை என்பதினால் அவற்றின் அர்த்தங்களை ஆங்காங்கே எடுத்து உரைக்க வேண்டியது பண்டிதரின் கடமை ஆகும்.
உடலை விட்டு வெளியேறும் ஆத்மா எப்படி பயணித்து இறுதியாக யமபுரியை அடைந்து அடுத்த ஜென்மத்தை எடுக்கும் நிலைக்கு செல்லும் என்பன நமது சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் அழகாக கூறப்பட்டு உள்ளன.
ஆகவே ஆத்மாவின் அமைதியான பயணத்துக்கு நாம் என்ன செய்ய வேண்டும், இறந்தவர்களின் வீட்டில் செய்யும் சடங்குகள் என்ன, அந்த இறப்பை நாம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக, அதே நேரத்தில் அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் ஒரு பாடம் போல எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது தாத்பர்யம். சமீப காலத்தில் ஒருமுறை அப்படிப்பட்ட சடங்குகள் நடைபெற்ற ஒரு இடத்தில் கதையைக் கேட்டேன். மனதிற்கு ஏற்புடையதாக இல்லை. இறந்தவருக்கு பதிமூன்று நாட்கள் செய்யப்படும் சடங்குகளை எப்படி, எதற்காக செய்ய வேண்டும் போன்றவற்றை விவரமாக கூறாமல் இருந்ததை கவனித்தேன்.
ஆகவே அப்படிக் கூறப்பட்ட கதைகள், மற்றும் மயானத்திலும், சடங்குகள் செய்யப்படும் இடங்களிலும் இருந்த சில பண்டிதர்களிடம் பேசிக் கொண்டு அவர்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள், சுமார் பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு இருந்த புத்தகம் போன்றவற்றில் காணப்பட்ட விஷயங்களையும் தொகுத்து இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
இந்தக் கட்டுரையை படிப்பதின் மூலம் மரணம் அடைந்தவர்களின் ஆத்மா பயணிக்கும் விதம், சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள, சடங்குகளின் அர்த்தம், அவற்றின் அடிப்படைக் காரணம் என்பவற்றை ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என நினைக்கின்றேன். புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் இந்துக்களாகிய பலர், ஒருவர் இறந்த பின் செய்யும் கிரியைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும், முக்கியமாக இளம் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இது பற்றிய விபரங்களை என் அறிவுக்கு உகந்த வகையில் விளக்க முற்பட்டு இருக்கிறேன். இது வேத புத்தகம் போல எழுதப்பட்டு உள்ள கட்டுரை அல்ல. நாம் ஆத்மாவின் பயணக் கதை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பொது நலக் கட்டுரை ஆகும்.
ஜீவாத்மாவின் பயணம் :
ஜீவாத்மா, ஸ்தூல சரீரம், சூஷ்ம சரீரம், பித்ருக்கள், ஆதித்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள்
1. கண்களுக்கு தெரியாமல் உடலுக்குள் உள்ள ஆத்மாவை ஜீவாத்மா அல்லது சூஷ்ம சரீரம் என்றும், உடலை ஸ்தூல சரீரம் என்றும் கூறுவார்கள். எப்போது அந்த சூஷ்ம சரீரம் அது குடி இருந்த ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியேறிச் செல்கின்றதோ அந்த நிலையையே மரணம் என்கின்றோம். ஆத்மாவுக்கு அழிவில்லை. ஒரு உடலில் வாழும் ஆத்மாவிற்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த கால அளவு முடிந்தவுடன், தான் வாழ்ந்து கொண்டிருந்த ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியேறி மேலுலகிற்கு சென்று அதன் பாவ புண்ணிய கர்ம வினைக்கேற்ப தண்டனைகளை அனுபவித்த பின்னர் மீண்டும் இன்னொரு பிறவியின் ஆத்மாவாக வெளி வருகிறது என்பதே உயிர் தத்துவம் ஆகும்.
2. எனவே ஒவ்வொரு ஜீவாத்மாவும் பரபிரும்மனிடத்தில் இருந்து பிரும்மா மூலம் வெளிப்பட்ட தெய்வீக சக்திக் கதிர்கள் ஆகும். அதனால்தான் ஆன்மீக ஞானிகளை நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அவதாரங்கள் அல்லது பிரதிநிதிகள் என்கின்றோம்.
3. ஜீவாத்மா என்கிற உருவமற்ற ஜீவன் வாழும் ஸ்தூல சரீரத்தில் (அதையே ஜடமான உடல் என்கின்றோம்) கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் போன்றவை உட்பட மன எண்ணங்கள், நினைவுகள், சொல், இயக்கம், போன்றவற்றை உள்ளடக்கிய பதினைந்து தெய்வீக ஆற்றல்கள் உள்ளன. ஜடமான உடலையே பதினாறாவது தெய்வ அம்சம் என்கின்றோம். இதனால்தான் ஜடமான உடலில் இருந்து ஜீவன் வெளியேறிய பின்னர், தெய்வாம்சம் மிக்க அந்த உடலை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காக பிரேத ஸம்ஸ்காரங்களை செய்கின்றார்கள்.
4. அந்த நிலையில்தான், யாகத் தீயைப் போன்று சிதையில் எரியும் நெருப்பின் வழியே தெய்வாம்சங்களைக் கொண்ட பதினைந்து ஆற்றல்களையும், பதினாறாவது தெய்வ அம்சமான ஸ்தூல சரீரத்துடன் மேலுலகிற்கு திருப்பி அனுப்பி வைக்கின்றோம். இதனால்தான் சாஸ்திரங்களில் தகனம் செய்வதை ‘அந்த்யேஷ்டி’ அதாவது ‘இறுதி வேள்வி’ என்றே மிக உயர்வாக சொல்லப்பட்டு உள்ளது.
5. ஒரு பிரேதம் சிதையில் வைத்து எரிக்கப்படும் நிலை அக்னி ஹோமத்தில் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்தியப் பொருட்களின் நிலை ஆகும். பித்ரு கர்மாவில் செய்யப்படும் கர்மாக்கள் மூலம்தான் மரணம் அடைந்தவரது ஆத்மாவையும், சரீரத்தில் இருந்த பதினைந்து ஆற்றல்களையும் அதனதன் ஸ்தானத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கிறோம் என்பது அந்த பன்னிரண்டு நாட்கள் கூறப்படும் மந்திர உச்சாடனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
6. மரணம் அடைந்தவருக்கு முதல் பன்னிரண்டு நாட்கள் செய்யப்படும் கர்மாக்கள் பித்ரு கர்மா எனப்படும். ஆனால் பதிமூன்றாம் நாளன்று நடைபெறும் சுபஸ்வீகாரம் எனும் சடங்கிற்கு பின்னர் ஒவ்வொரு வருடமும் அதே திதியில் செய்யப்படும் சடங்கிற்கு சிரார்த்தம் அல்லது திவசம் என்பது பெயர். பித்ரு கர்மா என்பது மரணம் அடைந்தவருடைய ஜீவாத்மாவுக்கு பித்ரு எனும் அந்தஸ்தை தரும் சடங்காகும். அதை போலத்தான் சிரார்த்தம் என்பது அதே பித்ருக்களுக்கு மன மகிழ்ச்சியை தரும் சடங்காகும்.
7. மரணம் அடையும் சூஷ்ம சரீரமான ஜீவாத்மாவானது (ஆத்மா) பிரும்ம தேவரால் படைக்கப்பட்டுள்ள வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர் என்கின்ற துவாதசாதித்யர் போன்றவர்களின் பாதுகாப்பில் இருந்தவாறு, பதினோராம் நாள் கிரியைகள் நடைபெற்று முடிந்த பின்னர், அதற்கு கர்தாவினால் கொடுக்கப்பட்டவற்றை உண்டு விட்டு அமைதியாகி விடும். காரணம் மறுநாள், அதாவது பதினோராம் நாள் வரை அந்த ஜீவாத்மாவை பாதுகாத்து வந்திருந்த வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர் போன்றவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து, பன்னிரண்டாம் நாள் யம தூதர்கள் கட்டுப்பாட்டில் சென்று விட்ட பின், அதற்காக காத்திருந்த யமதூதர்களினால் யமலோகத்தில் உள்ள யம தர்மராஜனிடம் அழைத்துச் செல்லப்படுகிறது.
8. பல்லாயிரக்கணக்கான கோடி பித்ருக்கள் தேவலோகத்தில் உள்ளார்கள். அவர்கள் வம்சாவளியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளார்கள். ஒவ்வொருவருடைய பித்ருக்களின் மரணம் அடைந்து விட்ட ஆறு வம்சாவளியினரும் தேவலோகத்தில் உள்ளார்கள் (ஒருவரது குடும்பத்தினரோடு ஆறு வம்சாவளியினரும் சேர்ந்து மொத்தம் ஏழு வம்சங்கள்). அவர்களது ஏழாவது அல்லது எட்டாவது அல்லது ஒன்பதாம் வம்சாவளியினர் மரணம் அடைந்து, அவர்களின் ஆத்மாக்கள் தேவலோகத்தை சென்றைடையும்போது, அங்குள்ள முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வம்சத்தை சேர்ந்த ஆத்மாக்கள் அதனதன் கர்ம விதிக்கேற்ப ஏதாவது ஒரு உயிராக-மானிடர்கள், விலங்குகள், பூச்சிகள் என எந்த பிறப்பையாவது எடுத்து விடும்.
9. இந்த நிலை சுழன்று கொண்டே இருக்கும் சக்கரத்தைப் போன்றது என்பதினால் எப்போதும் தேவலோகத்தில் நமது ஆறு வம்ச பித்ருக்கள் நமது பித்ருக்களோடு (ஒருவரது குடும்பத்தினரோடு ஆறு வம்சாவளியினரும் சேர்ந்து மொத்தம் ஏழு வம்சங்கள்) தங்கி இருப்பார்கள் என்பதாக கூறப்படுகின்றது. ஆகவேதான் தேவலோகத்தில் உள்ள பித்ருக்கள் அங்கு தங்கி உள்ள காலம் நிலையானது அல்ல என்பது புரிகின்றது. நமது ஏழு வம்ச பித்ருக்களும் தேவலோகத்தில் அப்படியே அமர்ந்து இருப்பார்களா, அவர்கள் யமலோகத்தில் இருந்து எப்போது தேவலோகத்திற்கு செல்வார்கள் போன்றவைகளும் அவர்களுக்கு என்ன வேலை தரப்படுகின்றது என்பவைகளும் பின் வரும் ஒரு பத்தியில் விளக்கப்பட்டு உள்ளது.
10. பூவுலக வாழ்க்கைக்கு எப்படி பூதேவி, இந்திரன், அக்னி, வாயு மற்றும் வருணன் போன்றவர்கள் முக்கியமோ அப்படித்தான் மரணம் அடைந்து விட்டவர்களின் ஆத்மாக்களையும் காப்பாற்ற பிரும்மனால் படைக்கப்பட்ட எட்டு வசுக்கள், 11 ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர் என்கின்ற துவாதசாதித்யர் போன்றவர்கள் முக்கியமானவர்களாக உள்ளார்கள்.
11. ஏழாவது அல்லது எட்டாவது அல்லது ஒன்பதாம் வம்சாவளியினர் மரணம் அடைந்து அவர்களின் ஆத்மாக்கள் தேவலோகத்தை சென்றைடையும்போது, முதல் மூன்று நிலைகளில் உள்ள வம்ச பித்ருக்கள் அடுத்த பிறவியை எடுக்கும் முன்னர் தெய்வ அம்சம் மிக்க வசுக்களாக, ருத்ரர்களாக மற்றும் ஆதித்யர்களாக பிரும்மாவினால் நியமிக்கப்படுகிறார்கள். அப்படி தெய்வ அந்தஸ்தை பெறும் வசுக்கள், ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்களே மரணம் அடைந்து விட்டவரது ஆத்மாக்களை முதல் பன்னிரண்டு நாட்களும் பாதுகாத்து வருகின்றார்கள்.
12. இந்த உலகில் பல கோடி ருத்திரர்கள் உள்ளதாகவும் அதில் இந்த 11 ஏகாதச ருத்ரர்களே முக்கியமானவர்கள் என்றும் கூறப்படுகின்றது. ருத்ரர்கள் பயங்கர முகத் தோற்றம் உடையவர்கள். கண்களுக்கு தெரியாமல் பிரேதமாகவும், பிசாசுகளையும் மற்றும் பூதமாக விண்வெளியில் அலைந்து திரியும் தீய ஆத்மாக்களை கட்டுப்படுத்தி வைக்கும் அதிபதிகள் அவர்கள்.
13. ருத்திரர்களுக்கு உருவம் இல்லை என்பதாகவும், அவர்கள் பதினோரு லிங்க உருவில்தான் பூஜிக்கப்படுகின்றார்கள் என்று கூறப்பட்டாலும் காஞ்சி கைலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ரர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன என்பதாகவும் கூறுகின்றார்கள்.
14. ருத்ரர்கள் படைக்கப்பட்டதில் புராணங்களில் இரு கதைகள் உள்ளன. முதலாவது கதையின்படி அவர்களை சிவபெருமான் படைத்ததாகவும், இரண்டாம் கதையின்படி அவர்களை பிரம்மன் படைத்ததாகவும் உள்ளது. முதலில் பிரும்மா படைத்த நான்கு சனத் குமாரர்களும் ஞான மார்கத்தில் சென்று விட்டதினால், சிருஷ்டியில் ஜீவன்களை படைக்க பகவான் பிரும்மாவே பதினோரு ருத்ரர்களை படைத்தாராம். சிவபெருமான் மூலம் அவதரித்த ருத்ரர் வேறு, இந்த ருத்ரர்கள் வேறு ஆகும்.
15. மானிடர்கள் பிரம்மாவினால் படைக்கப்பட்டவர்கள் என்பதினால் அனைவரது ஆத்மாக்களும் அவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. ஆகவே மரணம் அடைந்து விட்டவர்களின் ஆத்மாக்கள் யமலோகத்திற்கு செல்லும்வரை அந்த ஆத்மாக்களை காப்பாற்ற வேண்டியது பிரம்மனின் கடமை. உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவை, அகண்ட வெளியில் சுற்றித் திரியும் பேய், பிசாசு மற்றும் பூதகணங்கள் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு விடக் கூடாது என்பதற்காக, யமலோகத்திற்கு பயணிக்கும் ஆத்மாக்களின் பாதுகாப்பிற்காக பிரும்மாவினால் ருத்திரர்கள் படைக்கப்பட்டார்கள்.
16. அஷ்ட வசுக்கள் யார்? அஷ்ட வசுக்கள் என்பவர்கள் மனுவின் மைந்தனான பிரஜாபதியின் எட்டு மகன்கள் என்கின்றார்கள். புராணங்களின் கூற்றின்படி அஷ்ட வசுக்கள் எனப்படும் தேவதைகள் இந்திரனின் காவல் தெய்வங்கள். வசு எனும் சொல்லுக்கு வெளி (Space) என்று பொருள். இவர்கள் குறிப்பிட்ட இயற்கை தன்மைகளை உள்ளடக்கியவர்கள்.
17. அஷ்ட வசுக்களில் தரா எனும் வசு புவியையும், அனலன் எனும் வசு நெருப்பையும், ஆப எனும் வசு நீரையும், அனிலன் எனும் வசு காற்றையும், துருவன் எனும் வசு துருவ நட்சத்திரத்தையும், சோமன் எனும் வசு சந்திரனையும், பிரபாசன் எனும் வசு கதிரவன் எழும் முன் உள்ள விடியற் காலைப் பொழுதையும், பிரத்யூசன் எனும் வசு ஒளியையும் குறிப்பவர்கள். அப்படிப்பட்ட புண்ணியமும் சக்தியும் கொண்ட அஷ்ட வசுக்களின் பாதுகாப்பில்தான் இறந்தவர்களது ஆத்மாக்கள் அவர்களுக்காக செய்யப்படும் கர்மாக்கள் முடியும்வரை தங்கி இருக்கும் என்பது ஐதீகம்.
18. மூல வசுக்களின் கடமைகளை நிறைவேற்ற அவர்களுக்கு துணையாக பல்லாயிரக்கணக்கான துணை வசுக்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். அவர்களில் நமது வம்சத்தை சேர்ந்த பல பித்ருக்கள் அடங்கி உள்ளார்கள். அந்த வசுக்களே தத்தமது வம்சத்தை சேர்ந்த இறந்தவர்களின் ஜீவாத்மாவை மூல வசுக்களுக்கு அடையாளம் காட்டுவார்கள்.
19. சூரிய பகவான் தேவர்களின் தலைவர். அவர் தனது ஒளிக்கிரணங்களில் பன்னிரண்டு தன்மைகளைக் கொண்ட ஆதித்யர்களை வைத்து உள்ளாராம். ஆதித்யர்களை துவாதசாதித்யர் (துவாத + ஆதித்யர்) என்ற பெயரிலும் குறிப்பிடுகின்றார்கள். அந்த பன்னிரண்டு ஆதித்யர்களே உயிர் வாழத் தேவையான தன்மைகளை வைத்து உள்ளவர்கள்.
20. இறந்தவரின் உடலில் இருந்து வெளியேறும் ஜீவாத்மாக்களின் கர்ம காலம் முடியும்வரை அந்த ஜீவாத்மாக்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டு உள்ள வசுக்களோடு பாதுகாப்பு பணியில் உள்ள ஆதித்யர்களின் தன்மையினால்தான் ஜீவாத்மாக்கள் யமலோகம் செல்லும்வரை அழிவின்றி இருப்பார்கள்.
21. மூல ஆதித்யர்களின் கடமைகளை நிறைவேற்ற அவர்களுக்கு துணையாக பல்லாயிரக்கணக்கான துணை ஆதித்யர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். அவர்களிலும் ஒவ்வொருவருடைய வம்சத்தை சேர்ந்த பல பித்ருக்கள் அடங்கி உள்ளார்கள்.
22. மறைந்து விட்ட நம் முன்னோர்களான பித்ருக்களே ஆதித்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள் ஆகிய மூன்று உருவில் இருக்கிறார்கள் என்பதினால்தான் அவரவர் குடும்பத்தைச் சேர்ந்த இறந்தவர்களது ஆத்மாவை, அவர்களுடைய கர்மம் முடியும்வரை அவரவர்களுடைய குடும்பங்களை சேர்ந்த பித்ரு தேவதைகள் பாதுகாப்பாக வைத்து இருப்பார்கள் என்பது ஐதீகம்.
23. இந்து மதத்தின் முக்கியமான நூல்கள் ரிக்வேதம், ‘இறந்தவர் உடலில் இருந்து வெளியேறிச் செல்லும் ஆத்மாவானது தன் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் இந்த பிரபஞ்சத்தில் தான் தோன்றக் காரணமான பரமாத்மாவுடன் மீண்டும் கலந்து விடுகிறது’ என்று கூறுகிறது.
24. ‘ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு, வேறு அல்ல; இரண்டும் ஒன்றே. மாயையின் சேர்க்கையினால், அந்த ஒன்றே பலவாறாக காட்சித் தருகின்றது’ என்று அத்வைதம் கூறுகிறது.
25. ‘எப்படி சரீரத்தின் செயல்பாடுகளுக்கும் ஜீவாத்மா அவசியமோ, எப்படி ஜீவாத்மா சரீரத்தில் இருந்து வெளியேறி விட்டால் உடல் அழிந்து விடுமோ, அதே போலவேதான் ஜீவாத்மா என்பது, பரமாத்மாவின் உடல் போன்றது. ஜீவாத்மா இல்லாத பரமாத்மாவும், பரமாத்மன் இல்லாத ஜீவாத்மாவும் கிடையாது’ என்பதாக துவைதம் கூறுகின்றது.
26. ஒவ்வொரு ஆத்மாவிற்கும் பிறப்பும் இறப்பும் ஒரு சக்கரம் போல உள்ளது. அவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜனன மரண காலம்வரை அவை ஒரு உடலில் வாழ்கின்றன. அந்த காலம் முடிந்த பின் வெவ்வெறு உடல்களில் சென்று தங்குகின்றன.
27. ‘எப்படி ஒருவன் பயன்படுத்த முடியாத துணிகளை தூக்கி எறிந்து விடுவானோ, அதை போலவேதான், ஜீவாத்மாவும் ஒவ்வொரு உடலிலும் தங்க வேண்டிய காலம் முடிவடைந்ததும், அந்த உடலில் இருந்து வெளியேறி இன்னொரு உடலில் குடி கொள்ளும். ஜீவாத்மாவை எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது; தண்ணீர் விட்டு துவைக்கவோ, உலர வைக்கவோ முடியாது; காரணம் மானிடர்களின் கண்களுக்கு புலப்படாத ஜீவாத்மாவிற்கு, எந்த ரூபமும் கிடையாது’ என்று பகவத் கீதை கூறுகின்றது.
28. பிரகதாரண்யக உபநிடம் ஜீவாத்மாவைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘ஜீவாத்மா என்பது ‘பார்க்கப்படாமல் பார்க்கும், கேட்கப்படாமல் கேட்கும், நினைக்கப்படாமல் நினைக்கும், அறியப்படாமல் அறியும். ஒருவனது உடலுக்குள் உள்ளுறைவது, அழிவற்றது என்பதே ஜீவாத்மா’ என்பதாக கூறுகின்றது.
29. முற்றிலும் சுதந்திரமான ஜீவாத்மா ஒருவர் உடலை விட்டு வெளியேறும் போது மற்றவர் துக்கப்படக் கூடாது. மாறாக, அது நல்ல முறையில் அதன் அடுத்த கட்ட பயணத்தை தொடர வேண்டும் என்பதற்காக, அதற்கான கிரியைகளை முன்னோர்கள் கூறி உள்ள முறையில் உணர்ச்சி பூர்வமாக செய்ய வேண்டும் என பண்டிதர்கள் கூறுகின்றார்கள். ஆத்மாவை ஆன்மா, ஆத்மா, ஜீவாத்மா என்ற பல்வேறு பெயர்களில் பல நூல்கள் குறிப்பிட்டு இருந்தாலும், அவை அனைத்துமே ஒருவரது உடலுக்குள் குடி உள்ளஜீவாத்மாவைகுறிப்பிடுகின்றன.
30. மானிடர்களின் சரீரத்தில் குடி இருக்கும் ஜீவாத்மாக்கள் சுதந்திரமானவை, எதற்கும் கட்டுப்பட்டவை அல்ல, அவை உடலின் எந்த செயல்பாட்டையும் இயக்குவது இல்லை என்பதாக புராணங்களிலும், சாஸ்திரங்களிலும் கூறப்பட்டாலும், அவை தங்கி உள்ள உடல்களில் ஐம்புலன்களின் செயல்பாடுகளினால் ஏற்படும் பாவ புண்ணியங்களை வேறு வழி இன்றி அவைகளும் சுமந்து கொண்டு கர்மாக்களை பெறுகின்றன. அதனால்தான் அந்த ஆத்மாக்களுக்கும் வெவ்வெறு பிறப்புகள் எடுத்து கர்மாக்களை அழிக்க வேண்டி உள்ளது.
31. யாராக இருந்தாலும் சரி, அவர்கள் பூமியில் வாழ்ந்து இருந்தபோது செய்த பாவ புண்ணியங்களின் கர்மாக்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது இறைவனின் நியதி என்பதினால், மரணம் அடைந்தவருக்காக செய்யும் மரணச் சடங்குகள் அல்லது கிரியைகள் மூலம் அந்த ஆத்மாக்கள் மன சாந்தி பெற்று எதையும் எதிர் கொள்ளும் மன நிலையில் இயற்கையோடு வாழத் துவங்கும்.
32. கர்மாக்கள், பிறப்பு, இறப்பு, பாவ புண்ணியம், கிரியைகள் மற்றும் சடங்குகள் போன்ற அனைத்துமே இறைவன் நிர்ணயித்து உள்ள நாடகத்தின் வடிவங்களே. அதன் கதாநாயகனே ஜீவாத்மா என்பது என பல ஆன்மீக அமைப்புகள் கருத்துக்களை தெரிவிக்கின்றன.
33. பூலோகத்திற்கும் யமலோகத்திற்கும் இடையே சுமார் 86,000 காத தூரம் இருப்பதாகவும், அந்த அளவிலான பாதையை கடந்து செல்வதற்கு ஆன்மாக்களுக்கு ஒரு வருடம் வரை ஆகும் என்று கருட புராணத்தில் கூறப்பட்டு உள்ளது என்பதினால் ஒருவர் மரணமடைந்த ஒரு வருடத்திற்குப் பின்னரே அவரது ஜீவாத்மா (ஆத்மா) எமபுரிக்குள் நுழைய முடியும்.
34. ஒரு வருட பயண முடிவில், யம தூதர்களினால் அழைத்து செல்லப்படும் ஜீவாத்மா யமபுரியில் யமதர்மன் முன் விசாரணைக்கு நிறுத்தப்படும். அங்கு அந்த ஜீவாத்மாவின் முன்னிலையில் 12 எம கணங்கள், அந்த ஜீவாத்மா மீதுள்ள பாவ புண்ணிய கணக்குகளைப் யமதர்மனிடம் தெரிவிப்பார்கள். அவற்றின் அடிப்படையில் யமதர்மன் அவற்றுக்கு தண்டனை தருகின்றார் என்பதாக கருட புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.
35. ஜீவாத்மா உருவமற்றது எனக் கூறப்படுகையில் எம தர்மன் முன்னால் எப்படி ஜீவாத்மா கொண்டு சென்று நிறுத்தப்படுகிறது? அது முரண்பாடாக உள்ளதே என நினைக்கலாம். ஆனால் அது முரண்பாடு அல்ல.
36. மரணம் அடைந்தவர் உடலில் இருந்து வெளியேறும் ஜீவாத்மா, பூமியில் உள்ள மானிடர்களின் கண்களுக்கு புலப்படாத, ஆனால் தேவலோகத்தினருக்கு மட்டுமே தெரியும் வகையிலான, மரணம் அடைந்தவரது தோற்றத்தை மட்டும் அல்ல, அவரது மன எண்ணங்களின் தன்மையையும் கொண்ட சூஷ்ம உருவிலான கணமாக வான்வெளியில் பெற்று விடுவதினால், அந்த சூட்சும உருவிலான ஜீவாத்மாவை வசுக்கள், ஆதித்யர்கள் மற்றும் ருத்திரர்களும், யம லோக தூதுவர்களும் பித்ரு தேவதைகளும் அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது. ஜீவாத்மா தேவலோகத்துக்கு தேவ கணமாக செல்லும் வரை அந்த சூட்சும உருவிலான தோற்றமும் தன்மைகளும் நீடிக்கும்.
37. ஜீவாத்மா எதற்காக அப்படி சூஷ்ம உருவிலான தோற்றத்தையும், தன்மைகளையும் பெறுகின்றன என்றால் அப்போதுதான் ஜீவாத்மாவிற்கு கொடுக்கப்படும் தண்டனைகளின் இன்ப துன்பங்கள் அதற்கு புரியும். அந்த ஜீவாத்மாவின் மனத் துயரின் தாக்கங்கள் அந்த ஜீவாத்மாவின் குடும்பங்களை பாதிக்கும் பொழுது அந்த குடும்பத்தினர் அப்படிப்பட்ட தவறுகளை செய்யாமல் இருக்கக் கூடும் என்ற எண்ணமே காரணம் ஆகும்.
38. இறந்து போனவர்களுடைய ஜீவாத்மா பூமியில் ஒரு ஸ்தூல உடலில் வாழ்ந்து கொண்டு இருந்தபோது அது தங்கி இருந்த உடல் மூலம் அடைந்து இருந்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை அனுபவித்தப் பின்னர் பித்ரு லோகத்திற்கு திரும்பச் சென்று பித்ருக்கள் ஆகி அங்கேயே தங்குகிறார்கள் என்பதினால்தான் நாம் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்கிறோம். அப்படியாக அந்த ஜீவன்கள் ஓய்வு எடுக்கும் இடமே சூட்சும லோகம் எனப்படும் பித்ரு லோகம் ஆகும்.
39. இனி மரணப் படுக்கையில் உள்ளவர் மற்றும் மரணம் அடைந்து விட்டவரது வீடுகளில் என்ன நடை முறைகளைக் கையாளுகிறார்கள், அங்கு நிலவும் சூழ்நிலைகள் என்ன என்பதை படிக்கலாம்.
ஜீவாத்மாவின் பயணம் (1) :
மரணம் அடையும் தருவாயில் உள்ளவரை சுற்றி எதற்காக தெய்வீக பாராயணங்களை ஓதிக் கொண்டே வேண்டும் ?
40. நோயினால் பீடிக்கப்பட்டு, அல்லது வேறு காரணங்களினால் படுத்த படுக்கையாக, சுய நினைவற்று மெல்ல மெல்ல சுவாசம் நிற்கும் நிலையில் வந்து விட்டவர்களையும், மருத்துவர்கள் கை விட்டப் பின், இன்னும் சில மணி நேரத்திலேயே மரணம் அடைய உள்ளவரையும் சுற்றி உள்ளவர்கள், அவர்களுடைய மூச்சு நிற்கும் வரை விஷ்ணு சஹஸ்ரநாமம், நாராயணீயம் போன்றவற்றை பாராயணம் செய்தபடி இருப்பார்கள். சிலர் ராம நாமத்தை ஜெபித்தபடியும் இருப்பார்கள்.
41. மரணத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களின் குடும்பத்தில் மூத்த மகன் இருந்தால், அவர் மரணம் அடைய உள்ளவரின் தலையை தன் தொடையில் வைத்துக் கொண்டு வலது காதில் பஞ்சாக்ஷரி, மற்றும் ராம ராமா, சிவாய நமஹ போன்ற மந்திரங்களை சற்று நேரம் ஓதிக் கொண்டு இருக்க வேண்டும்.
42. ஒரு சிலர் மரணம் அடையும் தறுவாயில் உள்ளவர் காதில் கர்ண மந்திரத்தைக் கூற வேண்டும் என்பார்கள். கர்ண மந்திரம் என்ன என்பதைக் குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை . சிலர் அதை அதை கிருஷ்ணர் இறக்கும் தருவாயில் இருந்த கர்ணன் காதில் ஓதியதாக கூறி அதற்கான மந்திரத்தை கூறுகின்றார்கள். வேறு சிலர் வேறு மந்திரத்தைக் கூறி உள்ளார்கள் என்பதினால் அவற்றை விட காலம் காலமாக கூறப்பட்டு வரும் பஞ்சாக்ஷரி, மற்றும் ராம ராமா, சிவாய நமஹ போன்ற மந்திரங்களை உச்சரிப்பதே நல்லது ஆகும்.
43. சில குடும்பங்களில் சமய தீட்சை பெற்ற ஒருவர் மூலம் வலது காதில் பஞ்சாக்ஷரி, மற்றும் ராம ராமா, சிவாய நமஹ போன்ற மந்திரங்களை ஓதுவார்கள், அது தவறல்ல. ஆனால் கர்மா செய்ய பாத்யதை உள்ள இளைய அல்லது மூத்த மகன் அதை செய்வதின் மூலம் மரணம் அடைய உள்ளவர் மனம் மேலும் அமைதி அடையும் என்பது நம்பிக்கை.
44. இது சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள விதி முறை என்றாலும் தற்காலத்தில் இதை கடை பிடிக்க முடியவில்லை என்பதினால், இறந்து போக உள்ளவரின் தலையின் அடியில் தன் கையை ஒரு நிமிட நேரம் வைத்துக் கொண்டு அவரது காதில் இரு முறை ராம ராமா, சிவாய நமஹ போன்ற மந்திரங்களை கூறினால் கூடப் போதும் என்பதாகவும் கூறப்படுகின்றது.
45. இது மரணம் அடைய உள்ளவருடைய ஜீவாத்மா, தனக்கு தன்னுடைய குடும்பத்தினர் துணையாக இருக்கின்றார்கள், தமக்கு எம பயம் இல்லாமல் இருக்க உரிய கர்மாக்களை நிச்சயம் அவர்கள் செய்வார்கள் என்ற எண்ணத்தை தன்னுள் வைத்துக் கொண்டு அமைதியாக, துக்கம் இன்றி பிராணனை விடும் என்பதற்காக செய்யப்படுகின்றது. கர்மா செய்ய உள்ளவன் உச்சரிக்கும் ராம ராமா, சிவாய நமஹ போன்ற மந்திர அலைகள், மரணம் அடைய உள்ளவரின் எண்ண அலைகளை சூழ்ந்து கொண்டு அமைதியை தரும். அது தியான நிலையில் பெறும் மன அமைதியைப் போன்ற நிலையை அந்த ஜீவாத்மாவிற்கு தரும் என்பது ஐதீகம்.
46. அப்படியாக எழுப்பப்படும் மந்திர ஒலிகள், உடலில் உள்ள ஸ்வாசக் காற்றை இயக்கும் மற்றும் ஒவ்வொரு தேவ கணத்துடன் சம்மந்தப்பட்ட பிராணன், அபானன், உதானன், வியானன், மற்றும் சமானன் என்கின்ற ஐந்து வாயுக்களையும் ஒன்றாக்கி, அவற்றின் மூலம் ஜீவாத்மாவை அமைதியாக வெளியேறும் என்பது ஐதீகம். அவற்றில் பிராணன் என்பது சூரியன் மற்றும் அபானன் என்பது சந்திரன் என்கின்றார்கள்.
47. உலகில் உள்ள அனைத்து அசைவுகளுக்குமே காரணம் வாயு என்பதை போலவே ஒருவரின் உடலுக்கு அத்தியாவசிய தேவையான வாயுவின் ஐந்து பிராணங்களில்தான் ஜீவாத்மா சஞ்சரிக்கின்றது என்றும், அந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவாத்மா, உடலில் உள்ள வாயுக்களுடன் வெளியேறும்போது மந்திர ஒலியை எழுப்புவது நல்லது. மந்திரங்களை ஓதத் தெரியாதவர்கள், அல்லது சரியான முறையில் மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்கள், அவற்றை சரியான முறையில் உச்சரிக்கத் தெரிந்தவர் யார் மூலமாவது அந்த மந்திரங்களை ஓதலாம்.
48. சில குடும்பங்களில் மரணம் அடையும் தருவாயில் உள்ளவர்களை சூழ்ந்து கொண்டு பஜனை பாடல்களை பாடுவார்கள். அந்த பக்திப் பாடல்களின் ஒலி அலைகளும் தியான நிலையில் பெறும் மன அமைதியைப் போன்ற நிலையை அந்த ஜீவாத்மாவிற்கு தரும் என்பது ஐதீகம். அனுபவம் மிக்கவர்கள் நாடி பிடித்து பார்த்து ஜீவன் பிரியும் நிலையை உணர்ந்தால் ‘யாரும் அழக் கூடாது, ஜீவன் போகப் போகுது, ராம ராம ராமா என்று கூறத் துவங்குங்கள்’ என்பார். அடுத்த நொடியில் மரணம் அடையும் தருவாயில் உள்ளவர் ஜீவன் அமைதியாக பிரிந்து விடுவதைக் காணலாம்.
49. ஜீவாத்மா ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியேறும்போது ஆசா பாசங்களில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு விடக் கூடாது, இறைவன் நினைவோடுதான் வெளியேற வேண்டும் என்பதற்காகவே இறைவன் நாமத்தைக் உச்சரித்துக் கொண்டோ அல்லது மனதை மயக்கும் பக்திப் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பது நல்லது என்று கூறுவார்கள். மரணம் அடையும் தருவாயில் உள்ளவர் அறையில், உரத்த குரலில் பாடாமல், மெல்லிய தொனியில் பாடுவது ஒரு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி, ஜீவாத்மா அமைதியாக உடலை விட்டு வெளியேற வழி வகுக்கும் என்பார்கள்.
50. பஜனை பாடல்களை பாடும் மன நிலையில் இல்லாதவர்கள் வீட்டில் தொடர்ந்து சஹஸ்ரநாமம் அல்லது நாராயணீயம், சுந்தர காண்டம், ராம ராமா, கோவிந்த நமஹா, கோவிந்த நமஹா போன்றவற்றை உச்சரித்துக் கொண்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் ஒலி நாடாவில் போட்டு அதை அமைதியான சூழ்நிலையில் ஒலி பரப்பினால் அதுவும் நல்லதற்கே. இது சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டதா என்ற தயக்கம் தேவை இல்லை.
51.எதற்காக தெய்வீக பாராயணங்களை ஓத வேண்டும் என்றால் அந்த இடத்தின் சூழ்நிலையை முதலில் தெய்வீகத் தன்மைக் கொண்டதாக மாற்ற வேண்டும் என்பதே. சாதாரணமாகவே பல்வேறு தன்மைகளைக் கொண்ட நல்ல மற்றும் தீய கணங்கள் வான் வெளியில் அங்காங்கே சுற்றிக் கொண்டு உள்ளன. இவ்வாறு வான் வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கும் தீய கணங்கள் மரணம் அடையும் தறுவாயில் உள்ளவர் அறைக்குள் நுழைந்து அந்த அறையின் மேல் பகுதியில் சுற்றியபடி இருக்கும். அவை நம் கண்களுக்கு புலப்படாது; ஆனால் அவற்றால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
52. மரணம் அடைய உள்ளவரது ஆத்மா வசுக்களின் கட்டுப்பாட்டில் செல்வதற்கு முன் அந்த ஆத்மாவை தம்முடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு விட தீய கணங்கள் முயலும். அதற்காகவே மரணம் அடையும் தறுவாயில் உள்ளவர் அறைக்குள் அந்த தீய கணங்கள் நுழைந்து அந்த அறையின் மேல் பகுதியில் சுற்றியபடி இருக்கும்.
53. உடலில் இருந்து வெளியேறும் ஜீவாத்மாவை தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால், அந்த ஆத்மாக்களுக்கு செய்யப்படும் கர்மாக்களின் பலன்கள் தனக்கும் கிடைக்கும், தமக்கும் நல்ல கதி கிடைக்கும் என அவை நம்புகின்றனவாம். அதே சமயத்தில் அந்த தீய கணங்களினால் தெய்வீக மந்திர சக்தி ஒலிகளை தாங்க முடியாது என்பதினால், தெய்வீக மந்திர ஒலி அலைகள் தீய கணங்களை அங்கிருந்து துரத்தி அடித்து விடுகின்றன.
54. மந்திர உச்சாடனைகளின் தெய்வீக அதிர்வலைகள் மரணம் அடைய உள்ளவர் உள்ள அறையின் வெற்றிடத்தை நிரப்பி விடுகின்றன என்பதினால் உடலில் இருந்து வெளியேறும் ஜீவாத்மாவின் மேலுலகப் பயணத்திற்கு முன்பாக அந்த தெய்வீக அதிர்வலைகளில் மூழ்கி மிதக்கிறது என்பதினால் அதற்கு நற்கதி கிடைக்கின்றது என்பது புராணங்கள் மற்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள ஆன்மீக கூற்றுக்கள் ஆகும்.
ஜீவாத்மாவின் பயணம் (2)
உடலில் இருந்து வெளியேறும் பாதை எது?
55. ஒருவர் இறக்கும் போது ஜீவாத்மாவானது உடம்பில் உள்ள பத்து வாசல்களில் ஏதாவது ஒரு வாசல் மூலம் வெளியேறுவதாகவும் இறந்தவுடன் அந்த வாசல் பகுதி சற்று ஈரப்பதமாக காணப்படும் என்றும் அதன் மூலம் ஆத்மா வெளியேறிய பாதையை அனுபவஸ்தர்களினால் உணர முடியும் என்றும் கூறுகின்றார்கள்.
56. சாஸ்திரங்களின்படி இறந்தவர்களது ஆத்மா இரண்டு கண்களின் வழியாகவோ, இல்லை வாயின் வழியாகவோ, உச்சி மண்டை வழியாகவோ, ஆசன துவாரத்தின் வழியாகவோ, மூத்திர வாசல் அல்லது இரண்டு காதின் வழியாகவோ அல்லது இரண்டு நாசி துவாரத்தின் வழியாகவோ வெளியேறும் என்பார்கள். இதுவே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியாகும்.
57. தாயின் வயிற்றில் செல்லும் ஜீவனானது அங்கு வளரும் கருவின் உச்சி மண்டையின் வழியாகவே அதனுள் உள்ளே நுழைகிறது என்பது ஆன்மீக நம்பிக்கையாகும். அந்த உச்சி மண்டையைக் கபாலம் என்பா். உச்சி மண்டையில் புகுந்த அந்த உயிர் உச்சந் தலை வழியாக வெளியேறுவதுதான் சிறப்பு. அதுவே சரியான மரணம், அது புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டுமே கிடைக்கும், அதன் பின் ஆத்மா வேறு எந்த பிறவியும் எடுப்பதில்லை என்று புராணங்களில் கூறப்படுவதினால் ஜீவன் வெளியேறும் இடங்கள் பொதுவான பத்து இடங்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது.
58. கபாலம் வழியே வெளியேறும் ஜீவனானது பூமியிலே பிறப்பு எடுக்காமல் அவர்கள் வாழ்ந்திருந்த இடத்தின் வான் வெளியிலேயே தெய்வ ஆத்மாவாக தங்கி இருந்து விடுகிறது என்பதும் நம்பிக்கை ஆகும். அதனால்தான் அப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாக்களை உண்மையான தெய்வம் எனக் கருதி அவர்களுடைய உடலை எரிக்காமல் புதைத்து வைத்து அதன் மீது சமாதியும் கட்டி வைத்து பூஜிக்கிறார்கள்.
59. ஆனால் புலிப் பாணி முனிவர் மற்றும் போக முனிவருக்கு உயிர் எந்த விதங்களில் மனித உடல்களில் இருந்து வெளியேறுகிறது என்பதை குறித்து விளக்கிய அகஸ்திய முனிவர் இந்த பத்து மண்டலங்களைத் தவிர ஜீவன்கள் வெளியேற உடலில் ஆயிரக்கணக்கான ஓட்டைகள் உள்ளன என்றும், அந்த இடங்கள் கை, கால் விரல்கள், மற்றும் அவற்றின் இடைப் பகுதியில் உள்ள ஓட்டைகள் என்றும், அவற்றைத் தவிர உடலில் உள்ள பல்லாயிரக்கணக்கான மயிர் கால்களின் அடியில் உள்ள ஓட்டைகளின் வழியாகவும் ஜீவன் வெளியேறும் என்றும், அந்த வழிகளில் வெளியேறும் ஜீவன் என்னென்ன பிறவிகள் எடுக்கின்றன என்பதையும் அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
60. கபாலம் வழியே வெளியேறும் ஜீவனானது பூமியிலே பிறப்பு எடுக்காமல் அவர்கள் வாழ்ந்திருந்த இடத்தின் வான் வெளியிலேயே தெய்வ ஆத்மாவாக தங்கி இருந்து விடுகிறது என்பதும் நம்பிக்கை ஆகும். அதனால்தான் அப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாக்களை உண்மையான தெய்வம் எனக் கருதி அவர்களுடைய உடலை எரிக்காமல் புதைத்து வைத்து அதன் மீது சமாதியும் கட்டி வைத்து பூஜிக்கிறார்கள்.
61. அந்தந்த உடல்களின் விதிக்கேற்ப எந்த வாசல் வழியே ஜீவாத்மாவானது வெளியேற வேண்டுமோ, அந்த வாசலில் இருந்து ஆத்மா வெளியேறும்போது உடலின் அனைத்து இயக்கங்களும் நின்று விடும். அப்போது அந்த உடலை சுற்றிக் கொண்டிருக்கும் எம கணங்கள் மூன்றரை மணி நேரம் ஜீவாத்மாவை அங்கேயே தங்க வைத்துக் கொண்டும், கண்காணித்துக் கொண்டும் இருந்த பின்னர், தம்மோடு அழைத்துச் சென்று அந்த ஆத்மாவை வஸுக்களிடம் சமர்ப்பித்து விட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள்.
62. மூன்றரை மணி நேர கணக்கை ஜீவாத்மாவின் இரண்டாம் கட்ட பயணத்தில் படிக்கலாம் .
ஜீவாத்மாவின் பயணம் (3)
ஒருவர் மரணம் அடைந்து விட்டால் எத்தனை கால அவகாசத்திற்குள் உடலை தகனத்திற்கு எடுத்துச் சென்று விட வேண்டும் ?
63. ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்த அடுத்த பத்து மணி நேரத்துக்குள் தகனம் செய்து விட வேண்டும் என்பதே சாஸ்திர விதி முறை. அதே சமயம் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் மூன்றரை மணி நேரத்துக்கு முன் அவருக்கு தகன காரியங்களை செய்து முடித்து விடக் கூடாது என்பது சாஸ்திர விதியாகும். ஆனால் கீழ் கூறப்பட்டு உள்ள நிலைமைகளில் என்ன செய்வது?
64. உதாரணத்திற்கு இறந்து போனவர்களின் வெளியூர்களில் உள்ள புத்திரன் அல்லது முக்கிய உறவினர்கள் வந்தே ஆக வேண்டும், வெளி ஊர்களில் வசிக்கும் அவர்கள் வந்து சேர இருபது மணி நேரம் ஆகும்; அதற்கு முன் காரியங்களை துவக்கக் கூடாது என்ற நிலையில் அந்த பூத உடலை உரிய மருந்துகள் இட்டு அல்லது ஐஸ் கட்டிகள் மீது பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். பூச்சிகள், ஈக்களிடம் இருந்து இறந்தவர் உடலைப் பாதுகாக்க கண்ணாடிப் பெட்டியால் மூடி வைத்து இருக்க வேண்டி உள்ளது.
65. இன்னொரு உதாரணம். காலை ஆறு மணி அளவில் ஒருவர் மரணம் அடைந்து விட்டாலும் முக்கியமானவர்கள் வந்து சேரும் வரை இறந்தவர் உடலை தகனம் செய்ய முடியாமல் நேரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. மாலை ஐந்து மணிக்கு மேல், அல்லது மறுநாள் காலையில்தான் தகனம் செய்ய முடியும் என்ற நிலைமை. ஒருவர் இறந்து போனதும் அடுத்த பத்து மணி நேரத்துக்குள் கர்மாக்களை துவங்க முடியவில்லை. அது பத்து மணி நேரத்துக்கும் அதிகமாகி விடுகிறது.
66. ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்த அடுத்த பத்து மணி நேரத்துக்குள் தகனம் செய்து விட வேண்டும் என்பதே சாஸ்திர விதி முறை. அதன் ஆன்மீகக் காரணம் பத்து மணி நேரம்வரை அந்த குறிப்பிட்ட ஆத்மாவை சுற்றி உள்ள குறிப்பிட்ட காற்று மண்டலத்துக்குள் வேறு எந்த ஆவிகளாலும் நுழைய முடியாது. பத்து மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால் அந்த காற்று மண்டலத்தில் சில தீய ஆவிகளால் நுழைய முடியுமாம். அதனால்தான் பத்து மணி நேரத்துக்குள் தகனம் செய்து விட வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறி உள்ளார்கள்.
67. பத்து மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டால் சாஸ்திர நம்பிக்கையின்படி உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை தீய ஆத்மாக்கள் சூழ்ந்து கொள்ளாதா என்ற கேள்வி எழலாம். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைகளில் காரிய தாமதம் ஏற்பட்டதினால் வரும் தோஷங்களை களைந்து கொண்டு கர்மாக்களை நடத்த சாஸ்திரங்களில் சில பரிகாரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
68. அப்படி செய்யப்படும் பரிகார சடங்குகளில் ஓதப்படும் குறிப்பிட்ட சக்திகளின் அதிபதி தேவதைகள் , ஜீவாத்மாவை வளைத்துக் கொள்ள முயலும் தீய ஆவிகளை அடித்துத் துரத்தி விடும். ஒருவர் மரணம் அடைந்து விட்ட பத்து மணி நேரத்திற்கு முன்னால் அதே சடங்கை செய்து, அதே மந்திர உச்சாடனைகளை செய்தாலும் கூட, அந்த மந்திர உச்சாடனைகளுக்கு தீய ஆத்மாக்களை விரட்டும் சக்தியை அந்த மந்திர சக்தியின் அதிபதி தேவதையினால் கொடுக்க முடியாது; காரணம் ஒருவர் மரணம் அடைந்து விட்ட பத்து மணி நேரத்திற்கு பிறகே குறிப்பிட்ட சக்தி தேவதைகளினால் அந்த காற்று மண்டலத்தில் நுழைய முடியும். இந்த செய்திகள் அனைத்துமே சாஸ்திரங்களின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கேட்டு அறிகின்றோம்.
69. ஒருவேளை மரணம் அடைந்தவரது ஜீவாத்மா, சடங்குகளின் கால தாமதத்தினால் தீய ஆவிகளிடம் பிடிபட்டு இருந்தாலும், பரிகார சடங்குகளில் ஓதப்படும் மந்திரங்களின் அதிபதி தேவதைகள் உடனடியாக சென்று தீய ஆவிகளிடம் இருந்து அந்த ஜீவாத்மாவை மீட்டுக் கொண்டு வந்து விடுமாம். அப்படி செய்யப்படும் பரிகார சடங்கின் சக்தியானது அந்த உடல் தகனம் செய்யப்படும் வரை நிலையாக இருக்குமாம்.
70. காற்று என்பது நமது கண்களுக்கு தெரியாது என்றாலும், அது உணரக் கூடியது என்பதின் காரணம் அதுவும் வாயு பகவானின் பல லட்சக்கணக்கான உயிர் கணங்களைக் கொண்டு இயங்குவதுதான். இறந்தவர் உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவை மேலுலகில் உள்ள வஸுக்களிடம் கொண்டு செல்லும் கடமை வாயுதேவருக்கு விதிக்கப்பட்டு உள்ள நியதியாகும் என்பதாக தன்னிடம் சந்தேகம் கேட்ட நாசிகேதனுக்கு யமதர்ம தேவர் எடுத்துரைத்தாராம்.
71. அதே சமயத்தில் இறந்தவர் உடலை அடுத்த பத்து மணி நேரத்துக்குள் தகனம் செய்து விட வேண்டும் என்கின்ற சாஸ்திர விதி எதற்காக உள்ளது என்பதற்கு விஞ்ஞான ரீதியில் ஒரு காரணம் உள்ளது. பத்து மணி நேரத்துக்கும் அதிகமாக உடலை வைத்திருந்தால் இயற்கையின் விளைவாக அதன் உடலில் தீய கிருமிகள் தோன்ற வாய்ப்பு உள்ளது, அது நோய்களை பரப்பும், அது மட்டும் அல்லாமல் அந்த இடத்தில் நாற்றம் வீசத் துவங்கும் என்பதினால்தான் கர்மாவைத் துவக்க பத்து மணி நேர அவகாசம் மட்டுமே கொடுத்துள்ளார்கள் என்பது விஞ்ஞான அடிப்படையின் ஒரு உண்மையாகும்.
72. பத்து மணி நேரத்துக்கும் அதிகமாகி விட்டது என்ற நிலையில் உள்ளவர்கள் தகனம் செய்யக் கிளம்பும் முன் அந்த சவத்தை பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து புனித திரவியங்களைக் கொண்டு தயாரிக்கும் பஞ்சகவ்யம் எனும் கலவையைக் கொண்ட தண்ணீரால் குளிப்பாட்டி அதன் பின்னரே தகனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதி இருந்தது. சிலர் அதை சவத்தின் மீது புரோஷணம் செய்வார்கள். பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணம், பசுவின் மூத்திரம், பசுவின் பால், பசுவின் பாலில் எடுத்த நெய், பசுவின் பாலில் செய்த தயிர் – போன்றவற்றைக் கொண்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலவை ஆகும்.
73. பஞ்சகவ்யம் எனும் கலவையைக் கொண்டு குளிப்பாட்டிய பின்னரே தகனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. விஞ்ஞான ஆராய்வில் பஞ்சகவ்யம் கிருமி நாசினி என்றும், இறந்தவர் உடலில் உள்ள கிருமிகளை அவை நாசம் செய்து விடும் என்றும் கூறுகிறார்கள்.
74. பசு என்பது காமதேனுப் பசுவின் சந்ததி என்பதினால் பசுக்கள் தெய்வத்துக்கு சமமானவை., அதன் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு தேவர்கள் அமர்ந்துள்ளனர் என சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளது.
75. பசுவின் மூத்திரத்தில் வருணன் வசிக்கிறார், சாணத்தில் அக்னி வசிக்கிறார், தயிரில் வாயுவும், பாலின் சந்திரனும் மற்றும் நெய்யில் சூரியனும் வசிக்கிறார்கள். அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பஞ்சகவ்யம் செய்யப்படும்போது காயத்ரி மந்திரத்தை ஓதி ஒன்று சேர்ப்பார்கள். ஆகவே அத்தனை சக்தி வாய்ந்த பஞ்சகவ்யம் கலந்த நீரைக் கொண்டு சவத்தைக் குளிப்பாட்டும்போது அதில் இருந்து வெளிவரும் அந்தந்த தெய்வங்களின் கணங்கள் அங்குள்ள தீய ஆத்மாக்களை விரட்டி அடிக்கும் என்று சாஸ்திரங்கள் அந்த சடங்கை நியாயப்படுத்தி உள்ளார்கள்.
76. ஆகவே இறந்தவருக்கு கர்மா செய்ய பத்து மணி நேரத்துக்கும் அதிகமாகி விட்ட நிலையில் பஞ்சகவ்யம் கொண்டு அந்த உடலை குளிக்க வைத்தாலோ அல்லது புரோஷணம் செய்தாலோ அங்குள்ள தீய கணங்களை பஞ்சகவ்யம் துரத்தி விடும் என்பது நம்பிக்கை.
77. ஒருவர் இறந்தப் பின் அவருடைய ஆத்மா உடனடியாக யம தூதர்களால் கொண்டு செல்லப்படாதாம். ஒருவரது மூச்சு நின்று விட்டதாக சமிக்கை கிடைத்ததும் உடனடியாக யம கணங்கள் பூமிக்கு வந்து விட்டாலும் இறந்தவரது உடலில் இருந்து வெளியேறிய ஜீவாத்மாவை தம்முடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள அவர்கள் கண் சிமிட்டும் நேர அளவில் காத்திருப்பார்களாம்.
78. அதன் காரணம் இறந்தவருடைய வாழ்க்கையின் கால அளவை ஆராய்ந்து பார்க்கும் சித்ரகுப்தரிடம் இருந்து அவர்களுக்கு அந்த ஆத்மாவின் காலம் முடிந்து விட்டது என்ற ஒப்புதல் கிடைக்க கண் சிமிட்டும் நேரம் ஆகுமாம். அவர்களுக்கு கண் சிமிட்டும் நேரம் என்பது பூமியின் கணக்கின்படி மூன்றரை மணி நேரம் என்பதினால்தான் மூன்றரை மணி நேரத்துக்கு முன்னதாக தகன காரியங்களை செய்யத் துவங்கி தகனமும் செய்து முடிக்க மாட்டார்கள்.
79. மூன்றரை மணி நேர காலம் முடிந்த பின்னர் அந்த ஜீவாத்மா உண்மையில் இறந்தவர் உடலில் இருந்து வெளியேறி விட்டது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் அந்த ஜீவாத்மாவை முதலில் வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர் போன்றவர்களின் கட்டுப்பாட்டில் விட்டு விடுவார்கள். பன்னிரண்டாம் நாள்தான் அவர்களிடம் இருந்து அந்த ஜீவாத்மாவை மீண்டும் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு எம லோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள். இதைக் குறித்து ஏற்கனவே விளக்கப்பட்டு விட்டது.
80. யமதூதர்களுக்கு தரப்பட்டு உள்ள மூணரை மணி நேர அவகாசத்திற்கு இன்னும் சில அடிப்படை காரணங்கள் உள்ளன. உலகில் பல்வேறு மலைகள், குகைகள் மற்றும் யாருமே செல்ல முடியாத நதிக் கரைகளில் தவம் செய்யும் பல சாதுக்களும் சன்யாசிகளும், சித்தர்களும், ராஜ ரிஷிகளும், முனிவர்களும், யோகக் கலையை கைக்கொண்ட ஆன்மீகவாதிகளும் சித்திகளைப் பெற மூச்சை நிறுத்தி வைத்துக் கொண்டு சமாதி நிலையில் இருப்பார்களாம்.
81. கூடு விட்டு கூடு பாய்ந்து செல்லும் கலை என்பது தனது உடலில் உள்ள ஜீவனை வெளியேற்றி தற்காலிகமாக மற்றொரு சடலத்தில் வைத்துக் கொண்டு இருக்கும் நிலை ஆகும். இந்தக் கலை பண்டைக் காலத்தில் பல சாதுக்கள், முனிவர்கள், ரிஷி மற்றும் சித்தர்களால் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.
82. ஆதி சங்கரரின் வாழ்க்கையில் கூட இது நடந்துள்ளது. அவருக்கு விடப்பட்ட சவால் ஒன்றில் தாம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக தாம்பத்தியம் என்பது என்ன என்பதைக் கண்டறிய தன் உடலில் இருந்த ஆத்மாவை வெளியேற்றி, இன்னொருவர் உடலில் புகுந்து கொண்ட அதாவது கூடு விட்டு கூடு பாய்ந்து சென்ற கதை உள்ளது.
83. அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாய்ந்து கிளி உருவில் சென்றபோது அவர் உடலை அவரது எதிரி அழித்த கதையும் உண்டு. அதனால் அருணகிரிநாதர் கிளியாக வாழ வேண்டி இருந்ததாம். இவை அனைத்துமே மேன்மையான மூச்சை அடக்கிக் கொள்ளும் யோகக் கலையை அபாரமாக கற்றறிந்திருந்தவர்களால் மட்டுமே செய்ய இயலும், இதை அனைவராலும் செய்ய முடியாது. அதற்கு அவர்கள் தெய்வீக ஆற்றலும், அருளும் பெற்று இருக்க வேண்டும்.
84. அந்த நேரத்தில் அவர்கள் உடலில் இருந்து தமது ஜீவனை தாமே வான் வெளியில் மிதக்க வைத்து விட்டு தவ நிலையில் இருப்பார்களாம். அந்த நிலையில் அவர்கள் இறந்து விட்டதாகக் கருதி யமகணங்கள் அந்த ஆத்மாவை பிடித்துச் சென்று தவறு இழைத்து விடக் கூடாது என்பதற்காக யமபெருமானின் இந்த நியதி, சாஸ்திர விதிகளில் வைக்கப்பட்டு உள்ளதாம்.
85. மரணம் அடைந்தவரின் தகனத்தை துவக்கும் முன், மரணம் அடைந்த கால நேரத்தைக் கணக்கிட்டு சில சடங்குகள் செய்யப்படுகின்றன. ஒருவர் தக்ஷிணாயனத்தில், க்ருஷ்ண பக்ஷத்தில், இரவில் இறந்தால் அந்த தோஷங்களுக்கு நிவர்த்தி கிடைக்க ஒவ்வொன்றுக்கும் அதற்கென தரப்பட்டு உள்ள குறிப்பிட்ட ஹோமங்களை செய்தாக வேண்டும். அதற்கான பரிகார ஹோமம் என்பது என்ன என்பதை வீட்டு ப்ரோஹிதர் கூறுவார் ஒருவர் உத்திராயணத்தில், சுக்ல பக்ஷத்தில், பகலில் இறந்தால் பரிகார ஹோமம் கிடையாது.
86. பூரட்டாதி, உத்திரட்டாதி போன்ற நக்ஷத்திரங்களில் இறந்தால் பூமி தானம் செய்யவேண்டும்.
87. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நக்ஷத்திரங்களில் இறந்தால் ஹிரண்யதானம் செய்யவேண்டும்.
88. பூமி தானம், ஹிரண்ய தானங்கள் போன்றவை இந்த காலங்களில் அனைவராலும் செய்யக் கூடிய காரியம் இல்லை என்பதினால், அதற்கு பதில் புரோகிதர்களுக்கு தட்க்ஷணை பணம் தந்து விடுகின்றார்கள்.
89. செவ்வாய், வியாழன், வெள்ளிகளில் இறந்தால் அந்தந்த க்ரஹத்திற்கு ப்ரீதிகரமானதை தானம் செய்யவேண்டும். இவற்றை அந்தந்த வீட்டு புரோகிதர்களை கலந்து ஆலோசனை செய்து செய்ய வேண்டும்.
90. ஒருவர் இறந்த 6 மணி நேரத்திற்கு பிறகு உடலை தஹனம் செய்ய வேண்டுமானால் பர்யுஷித ஹோமம் என்பதை செய்ய வேண்டும். ஆனால் இறந்த 4 மணி நேரத்திற்குள் உடலை தஹனம் செய்தால் பர்யுஷித ஹோமம் செய்யத் தேவையில்லை.
91. பர்யுஷிதம் என்றால் பழையதானது என்பது பொருள். இதன் தாத்பர்யம் என்ன என்றால் இறந்தவர்களை ஆறு மணி நேரத்துக்குள் தகனம் செய்யவில்லை என்றால் அந்த உடல் பழையதாகி விட்ட உடல் என்ற ஆன்மீக நிலையை அடைந்து விடுமாம்.
92. இறந்து போனவர்களை மீண்டும் உயிர் பிழைத்து எழ வைத்த சம்பவங்கள் நவீன கால தத்தாத்திரேயர் அவதாரமான ஸமர்த்த ஸ்வாமிகள், சீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல மகான்களுடைய வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகின்றன. உஜ்ஜயினியை ஆண்டு வந்த விக்ரமாதித்தன் கூட இந்தக் கலையை பயன்படுத்தி உள்ளதாக அவர் வரலாற்றில் கதை உண்டு.
93. சில நேரங்களில் இறந்து விட்டதாக கருதப்பட்டு தகனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட சவங்கள் நடு வழியில் உயிர் பிழைத்து எழுந்தான உண்மைக் செய்திகள் உள்ளன. அது போல மருத்துவர்கள் நின்று போன மூச்சை உடனடியாக செயற்கை ஸ்வாசம் செலுத்தி மீண்டும் உயிர் பிழைக்க வைத்த சம்பவங்களும் நிறையவே உள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள், அவர்கள் உடல் நிலையின் ஒத்துழைப்பைப் பொறுத்து அதை செய்ய வேண்டி இருந்தது.
94. அதனால்தான் ஒருவர் இறந்து விட்டால் அடுத்த மூன்றரை மணி நேரத்துக்குள் (யமலோக கணக்கின்படி கண் சிமிட்டும் நேரம்) தகன காரியங்களை செய்து முடித்து விடக் கூடாது என்று வைக்கப்பட்டு உள்ள நியதிக்கு விஞ்ஞான அடிப்படை உள்ளது.
95. சாஸ்திரங்களில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்ன என்றால் மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குள் தகன காரியங்களை செய்யத் துவங்கி அக்கினிக்கு சமர்ப்பணம் செய்து விட வேண்டும் (தகனம்). எப்படி நாம் ஹோமத்திற்கென்றே சில மணி நேரங்களுக்கு முன்னர் சமைத்து இருந்த உணவை ஹோமங்களில் அக்னிக்கு சமர்ப்பித்து விடுகின்றோமோ, அதை போலவேதான் மரணம் அடைந்து விட்டவர் சடலத்தையும் வெகு நேரம் வைத்திருக்காமல் சில மணி நேரங்களிலேயே அக்னிக்கு கொடுத்து விட வேண்டும். ஆறின கஞ்சி பழைய கஞ்சி என்பதை போல பழதாகி விட்ட அதாவது மரித்து பல மணி நேரம் ஆகி விட்ட சரீரத்தையும் அக்கினிக்கு கொடுக்கலாகாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவாம்.
ஜீவாத்மாவின் பயணம் (4)
இறுதிக் கிரியைகளை யார் செய்வார்கள்?
96. உடலுக்கு செய்யும் இறுதிக் கிரியைகள் இரண்டு வகைப்படும். ஒன்று சுபகிரியை மற்றது அபரக்கிரியை. இறந்த பின் ஒருவருக்கு செய்யப்படும் சடங்குகள் (இறுதிக் காரியங்கள்) அனைத்துமே அபரக்கிரியை என அழைக்கப்படுகின்றது.
97. இறந்தவர்களது இறுதிக் கிரியைகளை யார் செய்ய வேண்டும் என்பதற்கு சில விதி முறைகள் உள்ளன. மரணம் அடைந்து விட்டவரின் நெருங்கிய இரத்த உறவினர்கள் மட்டுமே இறுதிக் கிரியைகளை செய்ய உரிமை கொண்டவர்கள்.
98. குடும்பங்களில் இறந்து விட்ட தந்தைக்கு மூத்த மகனே காரியங்களை (கொள்ளி போடுவது) செய்ய உரிமைப்பட்டவர் ஆவார். குடும்பத்தில் மூத்த மகன் ஏற்கனவே இறந்து விட்டார் என்றால் அவருக்கு அடுத்த மகன் தந்தைக்கு சடங்குகளை செய்ய உரிமைப்பட்டவர் ஆகி விடுவார். அவரும் மரணம் அடைந்து விட்டவர் என்றால் அடுத்தவர், அதற்கு அடுத்தவர் என்று பட்டியல் நீளும்.
99. குடும்பங்களில் இறந்து விட்ட தாயாரின் இறுதிச் சடங்குகளை (கொள்ளி போடுவது) செய்ய உரிமைப்பட்டவர் இளைய மகன் ஆவார். இயற்கையாகவே மூத்த மகன் மீது தந்தைக்கும், இளைய மகன் மீது தாயாருக்கும் அதிக பாசம் உள்ளது என்பதினால் இந்த வழக்கம் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனாலும் அவரவர் குடும்ப பழக்கங்களின்படி அவரவர் குடும்ப பண்டிதர்கள் கூறுவது போல மூத்தவரோ அல்லது இளையவரோ இறுதி காரியங்களை செய்வார்கள்.
100. மரணம் அடைந்து விட்டவர்களுக்கு ஈமக்கிரியைகள் செய்ய மகன்கள் யாருமே இல்லாத நிலையில் (இறந்து விட்டார்கள் அல்லது மகன்கள் பிறக்கவில்லை என்பது அர்த்தம்) இறந்து விட்ட மகன்களின் மகன்கள், இறந்து விட்ட மகன்களின் மகன்கள் (பேரன்கள்), தத்து பிள்ளை, தத்து பிள்ளையின் மகன்கள், தத்து பிள்ளையின் பேரன், சொத்தை அடைய உள்ள பெண் வயிற்று பேரன், மாப்பிள்ளை, உடன் பிறந்த மூத்த சகோதரன் அல்லது இளைய சகோதரன் அல்லது அவர்களின் புதல்வர்கள் என்பவர்கள் இறுதிக் கடன்களை செய்யலாம்.
101. மகன்கள் இல்லாத தாயார்கள் இறந்தால் அவர்களுக்கான கர்மங்களை அவர்களுடைய கணவர்களே செய்ய வேண்டும்.
102. அவர்களும் இல்லை என்றால், அல்லது அவர்கள் இருந்தும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக சடங்குகளை செய்ய மறுத்து விட்டால், இறந்தவர்களது மனைவியின் கையால் தர்ப்பைப் புல்லை வாங்கி பங்காளி உறவினர்கள் கர்மாவை செய்யலாம்; அல்லது சக்களத்தி இருந்தால் அவளது மகன்கள்; நண்பர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பிராமண வேலைக்காரன் என சாஸ்திரங்களில் பட்டியல் நீளுகிறது.
103. மரணம் அடைந்து விட்டவர்களுக்கு ஈமக்கிரியைகள் செய்ய கீழுள்ள பட்டியல் இந்து மதத்திலேயே சமூகத்திற்கு சமூகம் மாறுபட்டு உள்ளது
- மகன்
- மனைவி
- மகள்
- இறந்தவரின் அண்ணன்
- இறந்தவரின் இளைய சகோதரர்
- இறந்தவரின் சகோதரரின் மகன்
- இறந்தவரின் தந்தை
- இறந்தவரின் தாய்
- இறந்தவரின் மருமகன்
- இறந்தவரின் சகோதரி
- இறந்தவரின் சகோதரியின் மகன்
- தந்தை வழி சபிண்டன்
- தந்தை வழி சமானோதகன் (ஏழு தலை முறைக்கு உட்பட்ட ரத்த சம்மந்த உறவு கொண்ட, பிதுர்களுக்கு தண்ணீர் விட உரிமை உள்ளவர்)
- தாயின் சமானோதகன்
- தாய் வழிச் சபிண்டன்(ஏழு தலை முறைக்கு உட்பட்ட ரத்த சம்மந்தமான உறவு கொண்டவர்)
- சீடன்
- மகளின் கணவன்
- நண்பன்
104. சில சந்தர்பங்களில் மகன்கள் யாருமே இல்லை எனில், மூத்த பெண்ணின் கணவரும் ஈமக் கிரியைகளை செய்யலாம். ஆனால் அவரது தந்தை உயிரோடு இருந்தால் அவராலும் அதை செய்ய முடியாது. அதற்கு சாஸ்திர விதிகள் இடம் தரவில்லை என்பதினால் தற்காலத்தில் சில வீடுகளில் அந்த வீட்டின் பெண்கள் கூட கிரியைகளை செய்யத் துவங்கி உள்ளார்கள்.
105. பெண்கள் இறுதிக் கிரியைகள் செய்யக் கூடாது என்று எந்த நூலிலும் குறிப்பிடவில்லை. ஆனால் சாஸ்திரப்படி பெண்கள் தங்களின் பெற்றோர்களுக்கு இறுதி சடங்கு, காரியம் செய்ய முழு உரிமை உண்டு. தர்ம சாஸ்திரத்திலும் ஆண் பெண் எனும் பாகுபாடு கூறப்படவில்லை.
106. இறுதிக் கிரியைகளை பெண்கள் செய்யக் கூடாது என்பது ஒரு நடைமுறை வழக்கமாகவே இருந்து வந்துள்ளது என்பதினால் இதில் நாம் கருத்து கூற விரும்பவில்லை.
107. ஆனால் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்று விட்ட பெண்களால் தனது பெற்றோர்களுக்கு ஈமக் கிரியைகளை செய்ய முடியாது. அதற்கு சாஸ்திரங்கள் இடம் கொடுக்கவில்லை.
108. ஒருவேளை மரணம் அடைந்தவர்களுக்கு யாருமே இல்லாத அல்லது செய்ய மனம் இல்லாத உறவினர்கள் இருந்தால் கர்மாக்களை புரோகிதரே செய்து கொடுக்கலாம்.
109. அப்படிப்பட்ட நிலையில் அதற்கென சில சடங்குகளை புரோகிதர்கள் சொல்வதை போலவே செய்த பின்னரே இறுதிக் காரியங்களை செய்ய வேண்டும் என்பதாக சாஸ்திர விதி முறைகள் உள்ளன. ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் அபூர்வமாகவே நடைபெறுகின்றன.
110. ஆனால் தற்காலத்தில் பண்டைய காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ள சம்பிரதாயங்கள் மாற்றப்பட்டு விட்டன. வெளி ஊர்களில் அல்லது வெளிநாட்டில் உள்ள மகன்கள் வருவதற்கு ஓரிரு நாட்கள் ஆனாலும் இறந்து விட்டவர்களது உடலை குளிர் சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருந்து அவர்கள் வந்ததும் காரியங்களை செய்யத் துவக்குகின்றார்கள். அப்படி தாமதமாக ஈமக்கிரியைகள் செய்யத் துவங்கும் முன்னால் சில மாற்று சடங்குகளை செய்ய வேண்டும் என்பதாக புரோகிதர்கள் கூறுகின்றார்கள்.
111. தன் பெற்றோர்களின் விருப்பமில்லாமல் அவர்களுக்கு மன வேதனை அளித்து, தனக்கு பிடித்தவளுடன் வாழ்ந்து கொண்டு ஒரு புதல்வனையும் பெற்று விட்ட மகனுக்கு அவனுடைய பெற்றோர்களுக்கு கர்ம காரியங்களை செய்யும் உரிமை கிடையாது என்பதாக கருட புராணம் கூறுகின்றது. அதையே சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.
112. இறந்தவருடைய குடும்பத்தில் அவர்களுக்கு கர்மாக்களை செய்ய ஒருவரும் இல்லை, அவர்கள் அனாதை என்றால் அந்த ஆத்மாக்கள் யமலோகத்தில் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை அனுபவித்தப் பின்னர் யம தர்மரின் எமகணங்களில் ஒருவராகி விடுகிறார்களாம்.
113……….தொடர்கின்றது
Thanks for sharing such a longish essay on this topic. few months back my beloved mother was passed away. I had always find difficulty with the vaathiyaar on this topic. No one wanted to elaborate like what you did on this topic. Thanks again Sir. Do you have a printed copy (like book) about this compiled essay? I would like to buy that one has an reference if have so! Kindly reply alankeshwaran@gmail.com when you find time.
Thanks for your effort.
Lankesh
I am sorry sir for the inordinate delay in replying. I do not have any printed book. I just published the article compiled by me in my site. You can take printout and keep it. I am planning to publish the same in English too and provide PDF which can be downloaded and kept.
I had a to your article you have written on the subject.I liked it. will
dear shri jayaraman. I had a chance to read your posting on the subject. It is informative, I would like to take a print our and keep it. incidentally I am also a retired govt servant
with kind regards
Thank you sir. The information is getting updated for the last one week with more news content. If time permit read it again from Part-1 onwards.
தங்களின் பதிவு மிக கடினமான காரியம்…. முதலில் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.இனிமையாக வாழ நம் முயற்சி போதும். ஆனால், நல் மரணம் அதுவும் இறைவனின் நாமங்களை சொல்லி கொண்டே இறக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை ஆகும்.
Thanks for the comments
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இந்த பதிவுகளை கடந்த ஒரு வாரமாக மேலும் நிறைய செய்திகளுடன் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறேன். முடிந்தால் மீண்டும் பாகம் – 1 முதல் படிக்கவும்.
ஐயா, உங்களின் இந்த கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள். இறந்த ஒரு ஜீவன் தன் பயணத்தை எவ்வாறு தொடரும் என்பதை கண் முன்னே பாடமாகக்காட்டியுள்ளீர்கள்.படிக்கும்போது அங்கு சென்று மீண்டும் திரும்பிய உணர்வு.எனக்கு ஒரு சந்தேகம்.. பிராமண குலத்தில் பிறவாதவர்களுக்கு இவ்வாறு கர்மங்கள் நடைபெறாதே? அவர்களுடைய ஆத்மா எப்படி நற்கதி அடையும்?? விளக்குகள் தயைசெய்து.
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இந்த பதிவுகளை கடந்த ஒரு வாரமாக மேலும் நிறைய செய்திகளுடன் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறேன். முடிந்தால் மீண்டும் பாகம் – 1 முதல் படிக்கவும் . உங்கள் கேள்விக்கான பதில்களும் பின்னர் வெளியிடுகின்றேன்.