–சாந்திப்பிரியா
1 

நீண்ட நாட்களாகவே எனக்கு மரணம் அடைந்தவர்கள் வீட்டில் பதிமூன்றாம் நாளன்று கிரேக்கியம் அல்லது சுபஸ்வீகாரம்  எனப்படும் புனித சடங்கின் மாலையில் கூறப்படும் ‘ஆத்மாவின் பயணக் கதை’ குறித்து எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்தது. நான் பல இடங்களில் அந்தக் கதைகளைக் கேட்டு இருந்தாலும் அவற்றைக் கூறும் பண்டிதர்கள், இடை இடையே  ஆன்மீக் கதையை விட்டு சற்றே விலகி உலக நடப்புகளைக் சேர்த்துக் கூறி  எதை   அவசியம் கூற வேண்டுமோ அதை  கூறாமல்  கதையில் இருந்து விலகிச் செல்கிறார்கள் என்பதை நேரிடையாக கண்டிருக்கிறேன். 

சுபஸ்வீகாரம் எனப்படும் பதிமூன்றாம் நாளன்று கதை  எதற்காக கூறப்படுகின்றன என்றால், இறந்து விட்டவர்கள்  குடும்பத்தினர் மரணம் அடைந்து விட்டவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை தங்கு தடை இன்றி செய்ய வேண்டும், சடங்குகளின் தாத்பர்யம் என்ன,  அதனால் அந்த ஆத்மாவிற்கு என்ன பலன் கிடைக்கும் என்பவற்றை எடுத்துரைக்கும் கதை போன்ற  நீதி போதனை ஆகும். மேலும் மரணம் அடைந்தவர்களில் வீட்டில் உள்ள இளம் தலைமுறையினருக்கு, மரணம் அடைந்தவர்களின் நிலை ஆன்மீகத்தில் எப்படி கூறப்பட்டு உள்ளது என்பதை எடுத்துக் காட்டவும், பண்டைய காலம் முதல் செய்யப்பட்டு வரும் சடங்கு முறைகளில் எத்தனை ஆழமான அர்த்தம் இருந்துள்ளது என்பதை விளக்கவும்  கூறப்பட்டு வந்துள்ள நீதி போதனை கதைகள் ஆகும்.

சுபஸ்வீகாரம் எனப்படும் பதிமூன்றாம் நாளன்று கூறப்படும் உண்மையான கதை கருட புராணத்தில் உள்ளது. ஆனால் கருட புராணத்தில் கூறப்பட்டு உள்ள பல விஷயங்கள் பொதுஜன மக்களுக்கு புரிவதில்லை, அவை விளக்கப்படவில்லை  என்பதினால் அவற்றின் அர்த்தங்களை ஆங்காங்கே எடுத்து உரைக்க வேண்டியது பண்டிதரின் கடமை ஆகும்.  உடலை விட்டு வெளியேறும் ஆத்மா எப்படி பயணித்து இறுதியாக யமபுரியை அடைந்து அடுத்த ஜென்மத்தை எடுக்கும் நிலைக்கு செல்லும்  என்பன நமது சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் அழகாக கூறப்பட்டு உள்ளன. ஆகவே ஆத்மாவின் அமைதியான பயணத்துக்கு நாம் என்ன செய்ய வேண்டும், இறந்தவர்களின் வீட்டில் செய்யும் சடங்குகள் என்ன, அந்த இறப்பை நாம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பதை  சுருக்கமாக அதே நேரத்தில் அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் ஒரு பாடம் போல எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது தாத்பர்யம். சமீப காலத்தில் ஒருமுறை அப்படிப்பட்ட சடங்குகள் நடைபெற்ற  ஒரு இடத்தில் கதையைக் கேட்டேன்.  மனதிற்கு ஏற்புடையதாக இல்லை.  இறந்தவருக்கு பதிமூன்று நாட்கள் செய்யப்படும் சடங்குகளை எப்படி, எதற்காக  செய்ய வேண்டும்  போன்றவற்றை விவரமாக கூறாமல்  இருந்ததை கவனித்தேன்.

ஆகவே அப்படிக் கூறப்பட்ட கதைகள், மற்றும் மயானத்திலும்,  சடங்குகள் செய்யப்படும் இடங்களிலும்  இருந்த சில பண்டிதர்களிடம் பேசிக் கொண்டு அவர்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள்  போன்றவற்றை   குறித்து சுமார் பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு இருந்த புத்தகம் போன்றவற்றில் காணப்பட்ட  விஷயங்களையும் தொகுத்து இந்த கட்டுரையை எழுதுகிறேன். இந்தக் கட்டுரையை படிப்பதின் மூலம் மரணம் அடைந்தவர்களின் ஆத்மா பயணிக்கும் விதம்,  சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள,  சடங்குகளின் அர்த்தம், அவற்றின் அடிப்படைக் காரணம்   என்பவற்றை ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என நினைக்கின்றேன். புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் இந்துக்களாகிய பலர், ஒருவர் இறந்த பின் செய்யும் கிரியைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும், முக்கியமாக இளம் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக  இது பற்றிய விபரங்களை என் அறிவுக்கு உகந்த வகையில் விளக்க முற்பட்டு இருக்கிறேன்.  இது வேத புத்தகம் போல எழுதப்பட்டு உள்ள கட்டுரை அல்ல. நாம் ஆத்மாவின் பயணக் கதை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பொது நலக் கட்டுரை ஆகும். 

1) உருவமற்ற, கண்களுக்கு தெரியாமல் ஒருவரது உடலுக்குள் உள்ள ஆன்மாவை ஜீவாத்மா அல்லது ஷூஷ்ம சரீரம் என்றும், அது புகுந்துள்ள உடலை ஸ்தூல சரீரம் என்றும் ஆன்மீகத்தில் கூறுவார்கள். எப்போது அந்த  ஷூஷ்ம சரீரம் அது குடி இருந்த ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியேறிச் செல்கின்றதோ அந்த நிலையையே மரணம் என்கின்றோம்.

2) எந்த ஒரு ஆத்மாவுக்கும் அழிவில்லை. பல்வேறு பிறவிகளில், பல்வேறு ரூபங்களில், பல்வேறு உடல்களில் வாழ்ந்திருந்த  ஆத்மாவிற்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த மொத்த கால அளவும் முடிந்தவுடன், அது மீண்டும் தன்னை வெளிப்படுத்திய  இறைவனிடமே  சென்று, அவனுடன் கலந்து, மறைந்து, இன்னொரு பிறவியின் ஆத்மாவாக வெளி வருகிறது என்பதே உயிரின் தத்துவம் ஆகும். எனவே ஒவ்வொரு ஜீவாத்மாவும் பரபிரம்மன் எனும் இறைவனிடத்தில் இருந்து  வெளிப்பட்ட பிரும்மா மூலம் வெளியான தெய்வீக சக்திக் கதிர்கள் ஆகும். அதனால்தான் ஆன்மீக ஞானிகள் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அவதாரங்கள் அல்லது பிரதிநிதிகளே என்பார்கள்.  இவ்வாறே  கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்துள்ளார் என்பதை  மஹாபாரதத்தில் காணலாம். உண்மையில் ஜீவாத்மா பரபிரம்ம நாடகத்தின் ஒரு கதாபாத்திரமேயாகும் என்பதே ஆன்மீக கருத்தாகும்.

3) சாஸ்திரங்களில் கூறப்பட்டிருப்பதை கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் அது தங்கி இருந்த சரீரத்தை விட்டு வெளியேறி விட்டாலும், அதன் அங்கங்களில் உள்ள தெய்வாம்சம் கொண்ட தேவகணங்களின் ஜீவன் – கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன்- என்பன அனைத்தும் உடனே அதனதன் மூல ஸ்தானத்துக்குப் போய் விடுவதில்லை. இந்த மூவரைத் தவிர பல பாகங்களிலும் பல்வேறு தெய்வ கணங்கள் குடி உள்ளன என்பதினால்தான் ஒருவருடைய தேகத்தை மந்திரங்களை ஓதி, நெய் ஊற்றி, அக்னி குண்டத்தில் போடுவதை போல சிதையில் வைத்து அந்த தேகத்தில் உள்ள தேவ கணங்களை யாகத் தீயின் வழியே மேலுலகிற்கு திருப்பி அனுப்பி வைக்கின்றோம். ஜீவாத்மா என்பது பதினைந்து தெய்வீக கலைகளை துணிநூல் அடக்கிக் கொண்டு ஒரு உடலுக்குள் உள்ளது. ஆகவே வேற்று உடம்பும் கூட அந்தக் கலையின் ஒரு அங்கமே என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே பிரேத ஸம்ஸ்காரம் என்பதை செய்கின்றார்கள். இதனால்தான் சாஸ்திரங்களில் தஹனம் செய்வதை ‘அந்த்யேஷ்டி’ அதாவது  இறுதியான வேள்வி  என்றே மிக உயர்வாகவே சொல்லப்பட்டு உள்ளது. ஒரு பிரேதம் சிதையில் வைத்து எரிக்கப்படும் நிலை அக்னி ஹோமத்தில் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்தியப் பொருட்களின் நிலை ஆகும். பித்ரு கர்மாவில் செய்யப்படும் கர்மாக்கள் மூலம்தான் அவற்றை மெல்ல மெல்ல அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம் என்பது அந்த பன்னிரண்டு நாட்கள் செய்யப்படும் கர்மாக்களில் உச்சாடனை செய்யப்படும் மந்திரங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். 

4) மரணம் அடைந்தவருக்கு முதல் பன்னிரண்டு நாட்கள் செய்யப்படும் கர்மாக்கள் பித்ரு கர்மா எனப்படும். ஆனால் பதிமூன்றாம் நாளன்று நடைபெறும் சுபஸ்சவீகாரம் எனும் சடங்கிற்கு பின்னர் ஒவ்வொரு வருடமும் அதே தேதியில் செய்யப்படும் சடங்கிற்கு சிரார்த்தம் அல்லது திவசம் என்பது பெயர். பித்ரு கர்மா என்பது மரணம் அடைந்தவருடைய ஜீவாத்மாவுக்கு பித்ரு எனும் அந்தஸ்தை தரும் சடங்காகும். அதை போலத்தான் சிரார்த்தம் என்பது அதே பித்ருக்களுக்கு மன மகிழ்ச்சியை தரும் சடங்காகும்.

5) ஜீவாத்மா என்கிற உருவமற்ற ஜீவன் மன எண்ணங்கள், நினைவுகள், சொல் இயக்கம், பல்வேறு உணர்வுகள் போன்றவை உள்ளடங்கிய பதினாறு தெய்வீக ஆற்றல்களை கொண்டது. அவற்றில் பதினைந்து ஆற்றல்கள் உயிராக உள்ளவை என்றும், பதினாறாவது தெய்வாம்சம் உடல் எனும் ஜடமாகும் என்பதாகவும் கூறுவார்கள். எனவே ஜீவன் வெளியேறிய பின்னர் ஜடமாக ஆகி விட்ட தெய்வாம்சம் மிக்க அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் எனும் சடங்கை செய்கின்றார்கள் என்பதும் மஹா பண்டிதர்கள் மற்றும் ஞானிகளின் கூற்று ஆகும். 

6) மரணம் அடையும் ஸூஷ்ம சரீரமான ஜீவாத்மாவானது (ஆத்மா) பிரம்மனால் படைக்கப்பட்டுள்ள வஸுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர் என்கின்ற துவாதசாதித்யர் போன்றவர்களின் பாதுகாப்பில் இருந்தவாறு, பதினொராம் நாள் தனக்கு சடங்குகளை செய்யும் கர்தாவினால் கொடுக்கப்பட்டவற்றை உண்டு, கிரியைகள் நடைபெற்று முடிந்த பின்னர், பன்னிரண்டாம் நாளில் வரும் யமதூதர்களினால் யமலோகத்தில் இருக்கும் யமதர்மராஜனிடம் அழைத்துச் செல்லப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான கோடி பித்ருக்கள் தேவலோகத்தில் உள்ளார்கள். அவர்கள் ஒவ்வொரு வம்சாவளியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளார். நம்முடைய பித்ருக்களின் ஆறு வம்சத்தினர் தேவலோகத்தில் உள்ளார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் மரணம் அடைந்த ஏழாவது வம்சத்தினர் தேவலோகத்துக்கு சென்றடையும் போது, பூமியில் எப்படி பிறப்பும் இறப்பும் நிகழ்கின்றது அப்படியே ஆறு வம்சத்தினரில் முதலில் உள்ள மூன்று வம்சத்தினர் புதிய பிறப்புக்களை எடுத்து சென்றுவிட நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது வம்சத்தினர் முதல் மூன்று நிலைகளை அடைய அடுத்தடுத்து வரும் வம்சத்தை சேர்ந்த ஜீவாத்மாக்கள் அடுத்தடுத்த நிலைகளை பெறுவார்கள். இந்த நிலை சுழன்று கொண்டே இருக்கும் சக்கரத்தைப் போன்றது என்பதினால் எந்த நிலையிலும் ஆறு வம்சத்தை சேர்ந்த பித்ருக்கள் தேவலோகத்தில் இருந்து கொண்டே இருப்பார்கள் என்பதாக கூறப்படுகின்றது. ஆக தேவலோகத்தில் உள்ள பித்ருக்கள் அங்கு தங்கி உள்ள காலம் நிலையானது அல்ல என்பது புரிகின்றது.

7) பூலோகத்திற்கும் யமலோகத்திற்கும் இடையே சுமார் 86,000 காத தூரம் இருப்பதாகவும் அப்பாதையை கடந்து செல்வதற்கு ஆன்மாக்களுக்கு ஒரு வருடம் வரை ஆகும் என்று கருட புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. மரணமடைந்து ஒரு வருடத்திற்குப் பின்னரே ஜீவாத்மாவானது (ஆத்மா) எமபுரிக்குள் நுழைய முடியும். எமதர்மன் முன்னால் நியாய விசாரணைக்கு நிறுத்தப்படும் ஜீவாத்மாவின் முன்னிலையில் 12 எம சேவ கணங்கள் இறந்த ஆத்மா செய்த பாவ புண்ணிய கணக்குகளைப் பார்ப்பார்கள். அதன் பின்னரே எமதர்மனால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள் என்றும் கருட புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.

8) பூவுலக வாழ்க்கைக்கு எப்படி பூதேவி, இந்திரன், அக்னி, வாயு மற்றும் வருணன் போன்றவர்கள் முக்கியமோ அப்படித்தான் மரணம் அடைந்து விட்டவர்களின் ஆத்மாக்களையும் காப்பாற்ற பிரும்மனால் படைக்கப்பட்ட எட்டு வஸுக்கள், 11 ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர் என்கின்ற துவாதசாதித்யர் போன்றவர்கள் முக்கியமானவர்களாக உள்ளார்கள். முதல் மூன்று நிலைகளில் உள்ள வம்ச பித்ருக்கள் அடுத்த ஜென்மத்தை எடுக்கும் முன்னர் வஸுக்களாக, ருத்ரர்களாக மற்றும் ஆதித்யர்களாக தெய்வீக அம்சத்தை பெற்று பிரும்மாவினால் நியமிக்கப்படுகிறார்கள். 

  • இந்த உலகில் பல கோடி ருத்திரர்கள் உள்ளதாகவும் அதில் இந்த 11 ஏகாதச ருத்ரர்களே முக்கியமானவர்கள் என்று கூறப்படுகின்றது. ருத்ரர்கள் பயங்கர முகத் தோற்றம் உடையவர்கள். அவர்கள் கண்களுக்கு தெரியாமல் பிரேதமாகவும், பிசாசாகவும் மற்றும் பூதமாகவும் விண்வெளியில் அலைந்து திரியும் சில ஜீவன்களின் தீய ஆத்மாக்களை கட்டுப்படுத்தி வைக்கும்   அதிபதிகள் ஆவர். ருத்திரர்களுக்கு உருவம் இல்லை என்பதாகவும், அவர்கள் பதினொரு லிங்க உருவில்தான் பூஜிக்கப்படுகின்றார்கள் என்று கூறப்பட்டாலும் காஞ்சி கைலாசநாதர் கோவிலில்  ஏகாதச ருத்ரர்களின்  சிற்பங்கள் காணப்படுகின்றன என்பதாகவும் கூறுகின்றார்கள்.
  • ருத்ரர்கள் படைக்கப்பட்டதில் புராணங்களில் இரு கதைகள் உள்ளன. ஒன்று அவர்களை சிவபெருமான் படைத்ததாகவும், இன்னொரு கதை பிரம்மன் படைத்ததாகவும் உள்ளது. முதலில் தான் படைத்த நான்கு சனத் குமாரர்களும் ஞான மார்கத்தில் சென்று விட்டதினால் தன் சார்ப்பில் சிருஷ்டியில் ஜீவன்களை படைக்க பகவான் பிரம்மாவே பதினோரு ருத்ரர்களை படைத்தாராம்.  சிவபெருமான் மூலம் அவதரித்த ருத்ரன் வேறு, இந்த ருத்ரர்கள் வேறு ஆகும். அந்த ருத்ரர்கள்தான் உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை அகண்ட வெளியில் சுற்றித் திரியும் பேய், பிசாசு மற்றும் பூதகணங்கள்  எந்தவித  தொல்லைகளும்  தரக்கூடாது என்பதற்காக பிரம்மாவினால் நியமிக்கப்பட்டவர்கள். ஏகாதச ருத்ரர்களின் பெயர்கள் மச்ச புராணம், அக்னிபுராணம், பத்மபுராணம், ஜோதிட சாத்திரம், ருத்ரபுராணம் எனப் பலவற்றிலும்  வேறுபட்டு இருக்கின்றன. மானிடர்கள் பிரம்மாவினால் படைக்கப்பட்டவர்கள் என்பதினால் அவர்களின் உள்ளே உள்ள ஆத்மாக்கள் அவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. ஆகவே அந்த ஆத்மாக்களையும் மறு பிறவி எடுக்கும்வரை  காப்பாற்ற வேண்டியது பிரம்மனின் கடமை.    
  • அஷ்ட வஸுக்கள் யார்? அஷ்ட வஸுக்கள் என்பவர்கள் மனுவின் மைந்தனான பிரஜாபதியின் எட்டு மகன்கள் என்கின்றார்கள். புராணங்களின் கூற்றின்படி அஷ்ட வஸுக்கள் எனப்படும் தேவதைகள் இந்திரனின்   காவல்  தெய்வங்கள். வஸூ  எனும் சொல்லுக்கு வெளி (Space) என்று பொருள். இவர்கள் குறிப்பிட்ட இயற்கை தன்மைகளை உள்ளடக்கியவர்கள். அஷ்ட  வஸூக்களில் தரா எனும் வஸூ புவியையும், அனலன் எனும் வஸூ நெருப்பையும், ஆப எனும் வஸூ நீரையும், அனிலன் எனும் வஸூ காற்றையும், துருவன் எனும் வஸூ துருவ நட்சத்திரத்தையும், சோமன் எனும் வஸூ சந்திரனையும், பிரபாசன் எனும் வஸூ கதிரவன் எழும் முன்  உள்ள விடியற்காலைப் பொழுதையும், பிரத்யூசன் எனும் வஸூ ஒளியையும் குறிப்பவர்கள். அப்படிப்பட்ட புண்ணியமும் சக்தியும் கொண்ட அஷ்ட வஸுக்களின் பாதுகாப்பில்தான் இறந்தவர்களது ஆத்மாக்கள் அவர்களுக்காக செய்யப்படும் கர்மாக்கள் முடியும்வரை தங்கி இருக்கும் என்பது ஐதீகம். அந்த வஸுக்களின் கடமைகளை நிறைவேற்ற அவர்களுக்கு துணையாக பல்லாயிரக்கணக்கான துணை வஸுக்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். அவர்களில் நமது வம்சத்தை சேர்ந்த பல பித்ருக்கள் அடங்கி உள்ளார்கள். அவர்களே ஒரு வம்சத்தை சேர்ந்த இறந்தவர்களின் ஜீவாத்மாவை மூல வஸுக்களுக்கு அடையாளம் காட்டுபவர்கள்.
  • சூரியபகவான் தேவர்களின் தலைவராம். அவர் தனது ஒளிக்கிரணங்களில் பன்னிரண்டு தன்மைகளைக் கொண்ட  ஆதித்யர்களை வைத்து உள்ளாராம். அந்த பன்னிரண்டு தன்மைகளும் கொண்ட ஆதித்யர்களே உயிர் வாழத்  தேவையான தன்மைகள். எனவேதான் ஆத்மாக்கள் கர்மம் முடியும்வரை அந்த தன்மைகளின் பாதுகாப்பில் அழிவில்லாமல் இருந்து கொண்டு இருப்பார்களாம். ஆதித்யர்களை  துவாதசாதித்யர் (துவாத + ஆதித்யர்) என்ற பெயரிலும் குறிப்பிடுகின்றார்கள்.அந்த ஆதித்யர்களின் கடமைகளை நிறைவேற்ற அவர்களுக்கு துணையாக பல்லாயிரக்கணக்கான துணை ஆதித்யர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். அவர்களில் நமது வம்சத்தை சேர்ந்த பல பித்ருக்கள் அடங்கி உள்ளார்கள்
  • மறைந்து விட்ட நம் முன்னோர்களான பித்ருக்களே  ஆதித்யர்கள், ருத்ரர்கள், வஸுக்கள் ஆகிய மூன்று உருவில் இருக்கிறார்கள் என்பதினால்தான் அவரவர் குடும்பத்தை சேர்ந்த இறந்தவர்களது ஆத்மாவை, அவர்களுடைய கர்மம் முடியும்வரை  பித்ரு தேவதைகள் எனப்படும்  ஆதித்யர்கள், ருத்ரர்கள், வஸுக்கள்  பாதுகாப்பாக வைத்து இருப்பார்கள் என்பது ஐதீகம்.  இறந்து போனவர்களுடைய ஆத்மா அவர்களது  கர்மம் முடிகிற வரை மட்டும் அல்ல, யமலோகத்தில் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை அனுபவித்தப் பின்னர் பித்ரு லோகத்திற்கு  திரும்பச் சென்று  பித்ருக்கள் ஆகி அங்கேயே தங்குகிறார்கள் என்பதினால்தான் நாம் பித்ருக்களுக்கு  சிராத்தம் செய்கிறோம். பித்ரு லோகம் என்பது ஜீவாத்மா உடலை  விட்டு நீங்கிய பிறகு ஒரு வருடத்திற்குப் பிறகு  யமராஜரிடம் சென்று அங்கு அவரால் தரப்பட்ட தண்டனைகளை அனுபவித்தப் பிறகு  பித்ருலோகத்துக்கு அனுப்பப்படுவார்கள். அப்படியாக அந்த ஜீவன்கள் ஓய்வு எடுக்கும் இடமே சூட்சும லோகம் ஆகும்.   இறந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திற்கு விரைவில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு உதவிட நாம்  முறையாக சடங்குகளை செய்ய வேண்டும்.   அப்போதுதான் அவர்களுக்கு  பித்ருலோகத்தில் இடம் கிடைக்கும். தவறினால் அவர்களால் தமது முன்னோர்களோடு போய் சேர முடியாமல் அலைந்து கொண்டிருப்பர். நற்கதி கிடைக்காத அவர்கள் மனம் கலங்கினால் நமக்கு நல்லதல்ல. பித்ரு லோகத்திற்கு பிறகு அவரவர் செய்த பாவபுண்ணியங்களுக்கேற்ப சொர்கம் அல்லது நரகம் கிடைக்கும். அதை போலவேதான் இறந்தவருடைய குடும்பத்தில் அவர்களுக்கு கர்மாக்களை செய்ய ஒருவரும் இல்லை, அவர்கள் அனாதை என்றால் அந்த ஆத்மாக்கள் யமலோகத்தில் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை அனுபவித்தப் பின்னர் யமதர்மரின் எமகணங்களில் ஒருவராகி விடுகிறார்களாம். 

  9) சாதாரணமாக நோயினால் பீடிக்கப்பட்டோ,  அல்லது வேறு காரணங்களினாலோ படுத்த படுக்கையாகி ,சுய நினைவற்று மெல்ல மெல்ல சுவாசம் நிற்கும் நிலையில் வந்து விட்டவர்களையும்,   மருத்துவர்கள் கைவிட்டப் பின், இன்னும் சில மணி நேரத்திலேயே மரணம் அடைய உள்ள நிலையில் உள்ளவரையும்  சுற்றி உள்ளவர்கள் அவர்களுடைய மூச்சு நிற்கும்வரை விஷ்ணு சஹஸ்ரநாமம், நாராயணீயம் போன்றவற்றை பாராயணம் செய்தபடி இருப்பார்கள். சிலர் ராம நாமத்தை ஜெபித்தபடியும்  இருப்பார்கள். ஆனால் அவற்றில் முக்கியமான ஒரு காரியத்தை அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டும் என்பதாக சாஸ்திரங்கள் கூறி உள்ளன. அதை பலரும் அறிந்திருக்கவில்லை.

.…………….தொடரும்