சாந்திப்பிரியா
11
170) எந்த ஒரு தீட்டுக் காலமும் காலை 8 மணி 24 நிமிடங்களில் இருந்துதான் விலகும் என்கிறது சாஸ்திரம். அதற்கு மேல்தான் தீட்டு விலகும் என்பதினால் தீட்டை விலக்கிக் கொள்ள காலையில் 8 மணி 24 நிமிடங்களுக்குப் பிறகுதான் குளிக்க வேண்டும், அதற்கு முன்னால் குளித்தால் தீட்டு விலகியதாக எடுத்துக் கொள்ள முடியாது, அது தொடரும் என்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் இதை நடைமுறையில் வைத்திருக்க முடியவில்லை என்பதினால் விடியற்காலை ஐந்து மணிக்கு மேல் குளிப்பதில் தோஷம் இல்லை என்பதாக பண்டிதர்கள் கூறுவார்கள். ஆகவே இது விஞ்ஞான அடிப்படையில் எழுந்துள்ள நியதி அல்ல, ஓரளவிற்கு ஆன்மிகம் மற்றும் தர்ம நெறி முறைகளின் அடிப்படையில் அமைந்ததே என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
171) அது சரி, 8 மணி 24 நிமிடங்கள் என்பது என்ன கணக்கு என்ற கேள்வி எழலாம்? இந்த நேரம் மிக முக்கியமானது. அதை புரிந்து கொள்ள முதலில் இவற்றை படியுங்கள். சாஸ்திரங்களின்படி ஒரு நாள் என்பது அறுபது நாழிகை ஆகும். அதில் பகல் நேரம் 30 நாழிகை கொண்டதாகவும், இரவு நேரம் 30 நாழிகையையும் கொண்டதாகும். சாஸ்திர விதிப்படி அந்த காலைப் பொழுதான 30 நாழிகை பொழுதை ஐந்து காலமாக பிரித்து வைத்து ஒவ்வொரு காலத்துக்கும் 2 மணி நேரம் 24 நிமிடங்கள் என பிரித்து வைத்து உள்ளார்கள். ஏன் என்றால் அந்த ஒவ்வொரு கால பிரிவிலும் சூரியனின் கிரணங்கள் தனித்தன்மைக் கொண்டவையாக உள்ளனவாம். அதனால்தான் ஐந்து தன்மைகளைக் கொண்டக் காலமாக பிரித்து வைத்துள்ளார்கள்.
172) தேவலோகத்தில் சூரியம் எழுவது காலை 4 மணி 30 நிமிடம் ஆகும். அந்த தேவ கிரணங்கள் பூமிக்கு வந்து விழும்போது பூமியில் அப்போது காலை 6 மணியாக இருக்குமாம். அப்படி வந்து விழும் கிரணங்கள் கண்களுக்கு தெரியாமலும் இருக்கும், சில நேரங்களில் தெரியும். இதனால்தான் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான கால கட்டத்தை ஐந்தாக பிரித்து வைத்தார்கள்.
173) காலை 6 மணியிலிருந்து காலை 8 மணி 24 நிமிடம் வரை ப்ராதஹ் காலம் என்றும், 8 மணி 24 நிமிடம் முதல் 10 மணி 48 நிமிடம் வரை ஸங்கவ காலம் என்றும், 10 மணி 48 நிமிடத்திலிருந்து பகல் 1 மணி 12 நிமிடம் வரை மாத்யானிக காலம் என்றும், மதியம் 1 மணி 12 நிமிடத்திலிருந்து 3 மணி 36 நிமிடம் வரை அபரான்னம் காலம் என்றும், 3 மணி 36 நிமிடத்திலிருந்து மாலை 6 மணி வரை சாயங்கால காலம் என்றும் பெயரிட்டு உள்ளார்கள்.
174) அந்த ஐந்து கால கட்டத்தில் சூரியனின் கிரணங்கள் சில விசேஷ தன்மைகளைப் (சக்தியை) பெற்றதாக இருந்தாலும் சில பிரிவில், முக்கியமாக மத்தியான வேளையில் இருந்து துவங்கி மாலை வரை அவற்றின் தன்மையில் சில தன்மைகளையும் அவை இழக்கின்றன. காலை 6 மணியிலிருந்து காலை 8 மணி 24 நிமிட காலத்தில் பூமியில் விழும் சூரிய கிரணங்கள் மிதமான தன்மைக் கொண்டவையாக, மனதுக்கு அமைதி தரும் கிரணங்களாக உள்ளன. அதாவது அந்த ஒளிக் கற்றைகள் நமது உடலுக்குள் ஊடுருவி, மனதில் அமைதியான காந்த அதிர்வலைகளை தோற்றுவிக்கின்றன. அந்த விசேஷ சக்தி கொண்ட சூரிய கிரணங்கள் நமது கண்களுக்கு புலப்படுவது இல்லையாம். விடியற்காலைப் பொழுதுகளில் மனம் அமைதியாக இருக்கும். ஆகவேதான் தபஸ்விகளுக்கும், யோகக் கலை மற்றும் தியானங்களை செய்பவர்களுக்கும் அதை உகந்த நேரமாக வைத்து உள்ளார்கள்.
175) அதைப் போலவே ஸங்கவ காலம் துவங்குகிறது எனக் கூறப்பட்டு உள்ள காலை நேரமான 8 மணி 24 நிமிடங்களுக்கு பூமியிலே விழும் கண்களுக்கு தெரியாத விசேஷ சக்தி கொண்ட சூரிய கிரணங்கள் நமது உடல் நலத்தைப் பேணும் வகையில் உள்ளதாம்.
176) முன்னரே கூறி உள்ளபடி தீட்டு காலத்தில் தினமும் கர்மா செய்து விட்டு வரும் இடங்களில் பல்வேறு காரணங்களினால், முக்கியமாக அங்கு உலவும் ஆத்மாக்களினால் படர்ந்திருக்கும் தீய அணுக்கள் நமது உடல்களிலும் தொற்றிக் கொண்டு இருந்திருக்கும். இரவில் நாம் படுத்திருக்கும்போதும், வீட்டில் உலவும்போதும் கூட அவை நம் உடலை விட்டு விலகுவதில்லை. ஆன்மீக எண்ணப்படி அந்த கணங்கள் உடல் பந்தத்தினால் நம்மை விட்டு வெளியில் செல்வதில்லை. ஆனால் அந்த கணங்கள் சூரிய ஒளியின் ஒரு குறிப்பிட்ட தன்மையின் விளைவாக அழிந்து போகக் கூடியவை. ஆகவே குளித்தப் பின் சூரியனின் ஒளி உடலில் படும்போது அதன் கிரணங்களின் தன்மையினால் அந்த கணங்கள் ஓடி விடும், நமது உடலின் மீதுள்ள தோல் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை மனதில் கொண்டுதான் அந்த குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட சூரிய ஒளிக் கிரணங்கள் நம் மீது படவேண்டும் என்பதற்காகவே எந்த ஒரு தீட்டையும் விலக்கிக் கொள்ளும் உத்தமமான காலம் காலை 8 மணி 24 நிமிடங்களுக்கு அதாவது ஸங்கவ காலம்தான் என்பதாகவும், அதனால்தான் காலை 8 மணி 24 நிமிடங்களுக்குப் பிறகுதான் குளிக்க வேண்டும் என்பதான விசேஷ நடைமுறை இருந்துள்ளது என்பதாகவும் சாஸ்திரங்கள் கூறி உள்ளதான ஐதீகம் உள்ளது.
177) சூரியோதயம் இடத்துக்கு இடம் மாறுபட்டாலும், பூமியிலே அப்படிப்பட்ட தனித் தன்மைக் கொண்ட கிரணங்கள் விழும் காலம் காலை ஆறு மணிக்கு துவங்குவதால்தான் பூமியிலே சாஸ்திரப்படி சூரியன் ஆறு மணிக்கு உதயம் ஆவதாக கூறி உள்ளார்கள். சூரியோதயம் இடத்துக்கு இடம் மாறுபட்டாலும், பூமியிலே தனித்தன்மைக் கொண்ட சூரிய கிரணங்கள் (நமது பார்வைக்கும் தெரியாமல் உள்ளவை) ஆறு மணிக்குதான் விழத் துவங்குகின்றதாம். இவற்றை எல்லாம் விளக்கி எழுதி வைக்கப்படாவிடிலும், வாய் மொழி வாய்மொழியாக கூறப்பட்டு வரும் நம்பிக்கையின் அடிப்படையில் இவை இருந்திருந்தாலும், நவீன கால விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள அர்த்தங்களும் காரணங்களும் மெல்ல மெல்ல தெரிய வருகின்றன.
178) மேலே தொடரும் முன் ஒரு விஷயத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட தர்ம சாஸ்திர நெறிகளையும் அவற்றின் அர்த்தங்களையும் நாம் பண்டைக் கால தேவ முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் போன்றவர்களின் அவரவர் தர்க்க வாதங்கள், மற்றும் அவர்களால் பிறருக்கு போதித்தவை மூலமே அறிகிறோம். அப்படிப்பட்ட மகரிஷி மற்றும் முனிவர்களில் மனு, கர்கர், கௌசிகர், கோபிகர், பராசரர், யாக்யவால்யகர், ஜமதக்னி, அன்கீரசர், ஆபஸ்தம்பர், அகஸ்தியர், போகர், வியாசர், தேவலர், காத்யாயனர், போதாயனர் போன்ற மாபெரும் புருஷர்கள் உள்ளதினால் அவர்களின் கூற்றுக்கள் அனைத்துமே காரணம் இன்றி இருந்திடாது என்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். அவற்றில் சில ஆன்மீகத்தின் அடிப்படையில், தர்ம நெறியை போதிக்க இருந்தாலும், பெரும்பாலானவை உள் அர்த்தம் கொண்டவையாக இருந்துள்ளன. அவை நமக்கு விளங்கவில்லை. அர்த்தம் அற்றதாக நாம் பல காலம் கருதி வந்திருந்த பல விஷயங்கள் தற்காலத்தில் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அர்த்தம் உள்ளதாக தெரிய வருகின்றன.
179) அடுத்த கேள்வி, இரவு நேரத்தில் ஒருவர் இறந்து விட்டால் அந்த குடும்பத்தினருக்கு தீட்டுக் காலம் எப்போது துவங்கும் என்பதாகும்? சாஸ்திரங்களின்படி சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகைகளுக்கு முன்னர் ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்தது முதல் நாள் கணக்கில் அடங்கும். சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகை என்பது பூமியில் இரவு 1 மணி 30 நிமிடத்தைக் குறிக்குமாம்.
180) ஆகவே ஒரு குடும்பத்தில் இரவு 1.30 மணி வரை நேரத்தில் யாராவது இறந்து விட்டால் அவரது மரணம் முதல் நாளைய கணக்கில் சேரும். 1.30 மணிக்கு மேல் இறந்தால் மறுநாள் கணக்கில் சேருமாம். தேவலோகக் கணக்கின்படி காலை ஆறு மணி என்பது தேவலோகத்தில் விடியற்காலை 4 மணி 30 நிமிடமாகுமாம். அப்போது தேவலோகத்தில் எழும் சூரியனின் ஒளிக் கற்றைகள் பூமிக்கு வந்து சேர 1.30 நிமிடங்கள் ஆகிறதாம். அதாவது தேவலோகம் மற்றும் பூமியின் நேரக் கணக்கில் சுமார் 1.30 மணி நேர வேறுபாடு உள்ளது. அதனால்தான் தேவலோகத்தில் நடு இரவு 12 மணி ஆகும்போது பூமியில் அந்த நேரம் இரவு 1.30 மணி என்பதாக உள்ளதினால், சாஸ்திர நியதிகளை கணக்கிடுகையில் பூமியில் இரவு 1.30 மணிக்கு முன்னர் உள்ள காலத்தை முதல் நாள் கணக்கிலும் 1.30 மணிக்கு பின் காலத்தை மறுநாள் கணக்கிலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றார்கள்.
- சாஸ்திரங்களில் இரவு மரணம் அடைந்தவர்கள் மரண நேரத்தைக் குறிப்பிடுகையில், மரணம் சூரியோதயத்துக்கு பதினொன்றே கால் நாழிகைகளுக்கு முன்னர் என்றால் அது முதல் நாள் கணக்கே என்றும், அதன் பின் இறந்தால் மறு நாள் கணக்கு என்றும் கூறுகிறார்கள். அதன்படி பூமியில் இரவில் ஒருவர் 1.30 க்கு முன்னால் இறந்து விட்டால் அவர் இறந்தது முதல் நாள் கணக்கில் சேர்ந்து விடும் என்று ஆகிறது.
- ஆனால் விதி விலக்காக இந்த தீட்டு கணக்கு பக்ஷிணீ தீட்டு உள்ளவர்களுக்கு பொருந்ததாம். பகலிலோ இரவிலோ எப்போது மரண செய்தி கிடைத்தாலும், பக்ஷிணீ தீட்டு உள்ளவர்களுக்கு அந்த தீட்டு காலம் 36 மணி நேரம் மட்டுமே ஆகும்.
180.1) சூரியோதயத்துக்கு பதினொன்றே கால் நாழிகைகளுக்கு முன்னர் என்பது முதல் நாள் கணக்கு என்பது எப்படி ஆகும் ? தேவலோகக் கணக்கின்படி ஒரு நாழிகை என்பது பூமியில் 24 நிமிடங்கள் ஆகும். ஆகவே கீழுள்ள கணக்கை பாருங்கள்.
- பதினொன்றே கால் நாழிகை x 24 நிமிடங்கள் = 270 நிமிடங்கள்
- 270 நிமிடங்கள் என்பது = 270 நிமிடங்கள் /60 நிமிடங்கள் = 4.30 மணி
- பூமியில் சூரியோதயம் = காலை 6.00 மணி
- ஆகவே சூரியோதயத்துக்கு முன்னால் பதினொன்றே கால் நாழிகை என்பது = சூரியோதயம் காலை 6 மணியில் இருந்து பதினொன்றே கால் நாழிகை 4.30 மணி நேரத்தைக் கழித்தால் வருவது = 1.30 நிமிடங்கள். அதாவது இரவு 1.30 மணி என்பதாகும்.
181) ஒரு கிரஹஸ்தர் சன்யாசி ஆகி விடுகிறார் என்றால் அவருடைய தாய் மற்றும் தந்தை அல்லது உறவினர் இறந்தால் அவருக்கு தீட்டுக் காலம் உண்டா என்றால் இல்லை என்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சன்யாசியின் தாய் அல்லது தந்தை இறந்தால் ஸந்யாசிக்கு ஸ்நானம் மட்டுமே உண்டு. அதன் காரணம் அந்த சன்யாசியின் உடலை அவர்கள் ஈன்று எடுத்ததினால் அந்த உடலுக்கு தர வேண்டிய மரியாதை ஆகும் அந்த செயல். தீட்டு கிடையாது.
182) சாஸ்திரத்தின்படி பத்து நாள் தீட்டு உள்ள ஆண் ஒருவர் நோயினால் குளிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் கிடக்கிறார். அப்படி என்றால் அவருடைய தீட்டு எப்படி விலகும்? அப்படிப்பட்ட நோயாளியை எவராவது ஒருவர் தொட்டு விட்டு குளிக்க வேண்டும். குளித்தப் பின் மீண்டும் தொட்டுவிட்டு குளிக்க வேண்டும். இப்படியாக பத்து முறை தொட்டு விட்டு பத்து முறை குளித்தால் நோயால் படுத்துள்ளவரின் தீட்டு விலகி விடுமாம். அதென்ன பத்து முறை தொட்டு விட்டு பத்து தடவை குளிக்க வேண்டும்? நோயால் படுத்திருப்பவருக்கு பதிலாக இன்னொருவர் பத்து முறைக் குளிப்பதின் மூலம் பத்து நாளைய கர்மாவில் நோயால் படுத்துள்ளவர் கலந்து கொண்டு விட்டதாக தேவர்கள் ஏற்றுக் கொள்வார்களாம். ஆனால் அந்த நோயாளி நோய் விலகி வீடு திரும்பியதும் வீட்டில் புண்ணியாஜனம் செய்ய வேண்டும். இது முழுமையாக நம்பிக்கையின் அடிப்படையில், தர்ம சாஸ்திர முறையில் அமைந்த விதியாகும், விஞ்ஞான பூர்வமான காரணம் எதுவும் கிடையாது.
183) அது போலவே சாஸ்திரத்தின்படி பத்து நாள் தீட்டு உள்ள பெண் ஒருவர் குளிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையில் கிடக்கிறார். அப்படி என்றால் அவருடைய தீட்டு எப்படி விலகும்? இவரை யாராவது ஒரு பெண்மணி 12 முறை தொட்டு விட்டு பன்னிரண்டு முறை குளித்து விட்டால் அவளது தீட்டு விலகி விடுமாம். ஆனால் அந்த நோயாளி நோய் விலகி வீடு திரும்பியதும் வீட்டில் புண்ணியாஜனம் செய்ய வேண்டும்.
184) ஒருவர் வீட்டில் சிரார்த்த காரியம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அந்த சிரார்தத்தை செய்பவருக்கு சிரார்த்தம் நடந்து கொண்டு இருக்கும்போதே இன்னொரு இறப்பு தீட்டு வந்துவிட்டது எனும் போது சிரார்த்தம் முடிந்த பின்னர்தான் அந்த தீட்டு துவங்கும்.
185) எந்த ஒரு பிரும்மச்சாரிக்கும் தீட்டு இல்லை. ஸ்நானம் மட்டுமே உண்டு.
186) ஒருவர் பங்காளியின் மரணத் தீட்டை அனுஷ்டித்துக் கொண்டு உள்ள காலத்தில், அவர்கள் செய்ய வேண்டிய குடும்ப சிரார்த்த தினம் வந்து விட்டால் அவர்கள் அந்த தீட்டு முடியும்வரை அவர்கள் சிரார்த்தம் செய்யக் கூடாது. பண்டிதரிடம் அடுத்த தேதி கேட்டு சிரார்த்தம் செய்ய வேண்டும்.
187) திருமணம் நடக்கும்போது, மணப்பெண் அல்லது மாப்பிள்ளையின் பெற்றோர்கள் இறந்து விட்டால், அந்த திருமணம் முடிந்து, மணமக்களின் கிரஹப்பிரவேச சடங்கும் முடிந்து சுபமாக திருமண சடங்கை முடித்து வைக்கும் சேஷ ஹோமம் செய்யும்வரை அவர்களுக்கு தீட்டு கிடையாதாம்.
188) சாதாரணமாக தீட்டு உள்ளவர்களின் வீடுகளில் உள்ள உணவு பண்டங்களை அந்த நாட்களில் வேறு யாரும் பயன்படுத்த மாட்டார்கள். காரணம் அந்த பொருட்களுக்கும் தீட்டு உண்டு என்பதே. ஆனால் அவர்கள் வீட்டில் உள்ள தயிர், பால், நெய், காய்கறிகள், உப்பு, தேன், மற்றும் பழங்களுக்கு தீட்டு கிடையாது. அவற்றை யார் மீதும் படாமல் அவர்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்து மற்றவர்கள் உபயோகிக்கலாமாம்.
189) எத்தனை நாள் தீட்டானாலும் சரி, அந்த தீட்டு உள்ள காலத்தில் கிரகணம் வந்தால் கிரகணம் துவங்கி முடியும்வரை அங்குள்ளவர்களுக்கு தீட்டுக் கிடையாதாம்.
190) ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து பார்க்காமலும், எந்த சம்மந்தமும் இல்லாமல் இருந்திருந்தால் ஒருவருக்கொருவர் குடும்பத்தில் ஏற்படும் மரணத்தில் மற்றவர்களுக்கு ஸ்நானத் தீட்டு மட்டுமே உண்டு. அவர்களுக்கு பத்து, மூன்று, ஒரு நாள் தீட்டு போன்றவைக் கிடையாதாம்.
191) மரணம் சடங்குகள் நடக்கும்போது ஒருவருடைய தாயார் அல்லது தந்தை மரணம் அடைந்து விட்டார். அதனால் மகன்களுக்கும் மகளுக்கும் பத்து நாள் தீட்டு வந்துள்ளது. அப்போது பத்து நாட்களுக்குள் அவர்களது தந்தை அல்லது தாயாரும் மரணம் அடைந்து விட்டால் மகன்களுக்கும் மகளுக்கும் மொத்தம் எத்தனை நாள் தீட்டு உண்டு?
- சாதாரணமாக ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து விட்டார் எனும்போது, தந்தை இறந்து பத்து நாட்களுக்குள் தாயாரும் இறந்து விட்டால் தந்தைக்காக அனுஷ்டிக்கும் தீட்டுக் காலமான பத்து நாட்களுக்கு மேல் தாயார் மரணத்துக்காக ஒன்றரை நாள் தீட்டு உண்டு. அதாவது தாயார் இரவில் இறந்து விட்டால் பத்து நாட்களுக்கு மேல் இரண்டு இரவு மற்றும் ஒரு பகல் அல்லது தாயார் பகலில் இறந்து விட்டால் பத்து நாட்களுக்கு மேல் இரண்டு பகல் மற்றும் ஒரு இரவு தீட்டு உண்டு. இருவரது மரணத்தினால் ஏற்பட்ட இரண்டு தீட்டுக்களும் அதாவது தந்தையின் பத்து மற்றும் தாயாரின் ஒன்றரை நாள் தீட்டு இரண்டும் சேர்ந்தே 13 ஆம் நாள் காரியத்துக்குள் முடிவடைந்து விடுவதினால் 13 ஆம் நாள் சுபஸ்வீகாரத்தோடு மொத்த தீட்டு காலமும் விலகி விடும்.
- ஆனால் தாயாரின் மரணம் சடங்குகள் நடக்கும் 11 அல்லது 12 ஆம் நாள் ஏற்பட்டால் தந்தைக்கான சுபஸ்வீகாரம் தந்தை இறந்துவிட்ட 14 ஆம் நாள்தான் செய்ய முடியும். அன்றுதான் இரண்டு தீட்டும் விலகும்.
- அதே சமயம் தாயாரின் மரணம் சடங்குகள் நடக்கும் 13 ஆம் நாள் ஏற்பட்டால் தாயாருக்காக பத்து நாள் தீட்டு உண்டு. ஆகவே 13 ஆம் நாள் தந்தைக்கு செய்ய வேண்டிய சுபஸ்வீகாரம் தாயாரின் சுபஸ்வீகாரத்துடன் 26 ஆம் நாள்தான் செய்ய முடியும். இது குறித்து வீட்டு புரோகிதர் கூறும் அறிவுரையின் அடிப்படையில் சுபஸ்வீகாரம் செய்ய வேண்டும்.
- ஆனால் இந்த நியதி மரணம் சடங்குகள் நடக்கும்போது தாயார் இறந்து பத்து நாட்களுக்குள் தந்தை இறந்த நிலைக்கு பொருந்துமா என்றால், இல்லை என்பதே உண்மை. தாயாரின் மரணத்திற்குப் பிறகு நடைபெறும் பத்தாவது நாள் காரியம் முடியும் முன் அந்த பத்து நாட்களுக்குள் தந்தை என்றைக்கு இறந்தாலும் அவர் இறந்த தினத்தில் இருந்து பத்து நாள் தந்தைக்கு தீட்டு காக்க வேண்டும். தாயார் இறந்த பத்தாவது நாளன்று தந்தை இறந்தால், தாய் மற்றும் தந்தைக்கான சுபஸ்வீகார காரியங்கள் தாயார் இறந்துபோன 20 நாட்களுக்குப் பிறகே நடைபெறும் என்பதினால் தாய் மற்றும் தந்தைக்காக அனுஷ்டிக்கும் தீட்டு காலம் தாயாரின் மரணத்துக்கு பின் 23 ஆம் நாள் அன்று விலகும். இந்த இரு நிலைகளிலும் – அதாவது தாயார் மற்றும் தந்தை இருவருக்கும் செய்ய வேண்டிய 11 மற்றும் 12 ஆம் நாட்களுக்கான சடங்குகளை என்று செய்ய வேண்டும் என்பதை வீட்டு புரோகிதரிடம் கேட்டு செய்ய வேண்டும்.
192) ஒரு குடும்பத்தில் தாயாரோ அல்லது தந்தையோ இறந்து விட அந்த குடும்பத்தில் உள்ள மகன்களுக்கும் திருமணம் ஆகாத மகள்களுக்கும் பத்து நாள் தீட்டு வந்துவிட்டது. அந்த பத்து நாட்களுக்குள் மகன்களில் மனைவிகளோ இல்லை மகள்களோ இறந்து விட்டால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு எத்தனை நாட்கள் தீட்டு இருக்கும்?
- ஒருவருடைய தாயாரோ அல்லது தந்தையோ இறந்து விட்டதினால் ஏற்பட்ட பத்து நாள் தீட்டு முடிவதற்குள், அந்த பத்து நாட்களுக்குள் அவர்களுடைய மனைவியோ இல்லை, மகன்களோ இல்லை மகள்களோ இறந்து விட்டால் முந்தய தீட்டோடு பிந்தைய தீட்டும் போய் விடும். அதாவது தாயாரோ அல்லது தந்தையோ இறந்து விட்டதினால் ஏற்பட்ட பத்து நாள் தீட்டு முடியும் அதே தேதியிலேயே மனைவியோ இல்லை, மகன்களோ இல்லை மகள்களின் இறப்பினால் ஏற்பட்ட தீட்டும் விலகி விடும். இந்த நிலையில் சுபஸ்வீகாரத்துக்கு முன்னால் குளித்ததும் தீட்டு விலகும். 13 நாட்களுக்கு மேல் தீட்டு கிடையாது.
193) தந்தையின் முதல் மனைவி உயிருடன் இருக்கையில் அவருடைய இரண்டாம் மனைவி அல்லது மூன்றாம் மனைவி என யார் மரணம் அடைந்தாலும் தந்தையின் மூலம் பிறந்த பிள்ளைகள் மற்றும் பெண்களுக்கும் பத்து நாட்கள் தீட்டு உண்டாம். ஆனால் அந்த செய்தியை அவர்கள் ஒரு வருடத்துக்குப் பிறகு கேட்டால் தீட்டு காலம் மூன்று நாள் மட்டுமே.
194) மனைவி கர்பமாக இருந்தால் அவளது கணவர் சவத்தை சுமக்கவோ அல்லது தகனமோ செய்யக் கூடாது. ஆனால் அவர்களுடைய தாய் மற்றும் தந்தை அல்லது சந்ததி இல்லாத மூத்த சகோதரர்களின் சவத்தை சுமக்க தடை இல்லை.
195) ஒரு குடும்பத்தில் ஏழு வயதுக்குள் சிறுவனோ அல்லது சிறுமியோ மரணம் அடைந்து விட்டால் அதன் சொந்த சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் தாய் தந்தைக்கும் மட்டுமே பத்து நாள் தீட்டு உண்டு. அந்த குடும்பத்தின் ஏழு தலைமுறையில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு தீட்டுக் கிடையாது.
………தொடரும்
COMMENT ஆத்மாவின் பயனம் அதன் சடங்குகள் பதிவு அருமை மிக்க நன்றி
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இந்த பதிவுகளை கடந்த ஒரு வாரமாக மேலும் நிறைய செய்திகளுடன் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறேன். முடிந்தால் மீண்டும் பாகம் – 1 முதல் படிக்கவும்.
வணக்கம்.. ஆன்மாவின் பயணம் மற்றும் சடங்குகள் பற்றி எழுதியிருந்தீர்கள்…அருமை..
இதுவே திடீர் மரணம் அடைந்தவர்களுக்கும் சடங்குகள் வேறு விதமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்… அதுவும் panchak days and gandmool days இதில் இறந்தவர் சடங்குகளும்..accident,sudden death,suicide இப்படி இறந்தவர்கள் சடங்குகளும் எப்படி என்று சற்று விவரமாக கூறுங்கள்.
என்னதான் இப்படி இறந்தவர்களுக்கு normal சடங்கு செய்தாலும் நாராயணன்பலி போன்றவை செய்தால்தான் அவருக்கு மோக்சம் உண்டாகும் என்று படித்திருக்கிறேன். அதைப்பற்றி சில கட்டுரை கொடுத்தால் இன்னும் தெளிவாக இருக்கும்.
நன்றி..
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இந்த பதிவுகளை கடந்த ஒரு வாரமாக மேலும் நிறைய செய்திகளுடன் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறேன். முடிந்தால் மீண்டும் பாகம் – 1 முதல் படிக்கவும். உங்கள் கேள்விக்கான பதில்களும் பின்னர் வெளியிடுகின்றேன்.
வர்ணிக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை.
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இந்த பதிவுகளை கடந்த ஒரு வாரமாக மேலும் நிறைய செய்திகளுடன் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறேன். முடிந்தால் மீண்டும் பாகம் – 1 முதல் படிக்கவும்
Realy very useful article. Thank you.
Thank you sir. The information is getting updated for the last one week with more news content. If time permit read it again from Part-1 onwards.
Maranam. Aham Excellent., Excellent, and Excellent. Very very useful information. My heartiest kodanakidi nammeskarams to Mr.Jayaraman.
The information is being updated for the last one week. Please read from Part-1 onwards for more information.
மிக அற்புதமான பதிவு. நன்றியுடன் நமஸ்காரங்கள். என் வயது 59. என் குடும்பத்தில் வயது மிக்க (80 முதல் 89 வரை) பல தாயாதிகள் இருக்கின்றர். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவராக இறக்க கடந்த 5 வருடங்களாக எந்த பண்டிகையும் இல்லை. பெரிய குடும்பம். என் சந்தேகத்தை தீர்க்க வேண்டுகிறேன். தாயாதி என்பவர் யார்?தாயாதி இறந்தால் எவரெல்லாம் ஒரு வருடம் பண்டிகை கொண்டாட கூடாது? குழி தர்ப்பணம் செய்பவர்களுக்கு பொருந்துமா? கர்த்தாவுடன் சேர்ந்திராமல் தனியே இருந்தாலும் / அயல் நாடுகள்ல் இருந்தாலும் பொருந்துமா? அல்லது கர்த்தா மட்டுமே ஒரு வருட பண்டிகை தவிர்த்தால் போதுமா? தங்கள் பதில் எங்களின் பல குடும்பத்திற்கு தெளிவு கிடைக்கும். மீண்டும் நன்றி.
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இந்த பதிவுகளை கடந்த ஒரு வாரமாக மேலும் நிறைய செய்திகளுடன் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறேன். முடிந்தால் மீண்டும் பாகம் – 1 முதல் படிக்கவும். உங்கள் கேள்விக்கான பதில்களும் பின்னர் வெளியிடுகின்றேன்.
சார், எனது அன்பான தந்தையை இந்த மாதம் 02.06.2021 அதிகாலை 1.20 மணியளவில் இழந்து விட்டேன். வாத்யார்கள் சொன்னபடி எல்லாவற்றையும் சிரத்தையாக பண்ணினோம். இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது ? சரியாகச் செய்ய வேண்டுமே என்கின்ற கவலையில் இருக்கும் போது உங்கள் கட்டுரை மிகவும் உதவியாக இருக்கிறது. தெளிவான, அழகாக எல்லோருக்கும் புரிகின்ற எழுத்து நடை… மிக்க நன்றி சார். உங்களுக்கு மிகவும் புண்ணியம்..
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா. நான் எழுதியவை ஒரு வழிகாட்டி போலத்தான். உங்கள் வாத்தியார் கூறியபடி செய்யுங்கள். உங்கள் தந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும்.