அத்தியாயம் – 49

நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ‘ முனிவரே ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்கை பற்றிய பெரும்பாலான கதைகளை நீங்கள் எனக்கு மிக அழகாக எடுத்துரைத்து வந்துள்ளீர்கள். குருவை மதித்து நடப்பது கல்பதாரு விருட்ஷத்தை அடைந்தது போன்றது. சத்குரு, சத்குரு என்கிறார்களே அந்த சத்குருவின் தன்மை என்ன, மகிமை என்ன என்பதை எனக்கு விளக்குவீர்களா?’ அதைக் கேட்ட சித்த முனிவர் அதை விளக்கும் ஒரு கதையைக் கூறினார்.

‘நமத்ஹரகா, நீ உண்மையிலேயே பேரானந்த நிலை என்பதென்ன என்பதைக் குறித்து மிக நல்ல கேள்வியைத்தான் கேட்டாய். பேரானந்த நிலையே சத்குருவைக் காண்பது. அதை அறிந்து கொள்வதின் மூலம் விவேகத்தைப் பெற்று அறியாமையை விலக்கிக் கொள்ள முடியும்.

ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமான் பார்வதியுடன் அமர்ந்து கொண்டு இருந்தபோது பார்வதி தேவி சிவபெருமானிடம் கேட்டாள் ‘பரப்பிரும்மனே, தயவுசெய்து பிரும்மனை அடையும் வழிக்கான மந்திரோபதேசம் எதுவும் இருந்தால் அதை எமக்கு போதிப்பீர்களா?’

சிவபெருமான் அதற்குக் கூறினார் ‘தேவி இதுவரை வேறு எவருமே கேட்காத ஒரு கேள்வியை நீ ஒருவள் மட்டுமே என்னிடம் இப்போது கேட்டு உள்ளாய். என்னுள் பாதியானவள் நீ. ஆகவே நான் உனக்கு இதை போதிக்கிறேன். இது உன் மூலம் மற்றவர்களுக்கும் பரவட்டும்’ என்று கூறி விட்டு பிரும்மனை அடையும் மார்கத்தை விளக்கத் துவங்கினார்.

‘மகாதேவி, பேரானந்த நிலை என்பது அனைத்து சுக போகங்களை பெறுவதும், விவேகம் மற்றும் முக்தியை பெறுவதும் ஆகும். அதை அடைய வேண்டுமானால் ஒரு நல்ல குருவை சென்றடைய வேண்டும். அதை ஆத்மார்த்தமான தியானம் என்பார்கள். அவர் மூலமே சத்குருவையும் காண முடியும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், நம்மைப் பெற்ற தாய் தந்தையருக்கு அடுத்த நிலையில் வைத்துப் பூஜிக்கத் தகுந்தவர்  நம்மைப் பெற்று எடுக்காமல் இருந்தாலும் ஞானத்தைத் தருபவராக இருந்தபடி நல்லறிவு புகட்டி, இறைவனை அடையும் பாதையை காட்டி வாழ்வின் பயனை அடையச் செய்யும் குருவே  ஆவார். குருவருள் இல்லை என்றால்  திருவருள் கிடைப்பது கடினம் என்று கூறும் அளவுக்கு உயர்வானவரே குரு என்பவர்.  குருவை தந்தைக்குச் சமானமானவராகவும், குருவின் மனைவியை, தாய்க்குச் சமானமானவளுமாகவும், குருவின் குழந்தைகளை தம் சகோதர சகோதரியருக்குச் சமானமானவர்களாகவும் மதிக்க வேண்டும் என்பதில் இருந்தே குருவின் மேன்மையை புரிந்து கொள்ள முடியும். தம்மை தஞ்சம் அடைந்த சிஷ்யரின் அகக்கண்களைத்  திறந்து, அஞ்ஞான இருளில் மூழ்கியிருக்கும் உள்ளத்தில் ஞானம் எனும் ஒளியைத்  தந்து, சத்குருவை நோக்கி  பயணிக்க உதவுபவரே  ஒரு குரு ஆவார்.

குரு என்பதின் அர்த்தம் என்ன தெரியுமா? குருவில் உள்ள ‘கு’ என்பது அறியாமையைக் குறிக்கும். ‘ரு’ என்பது அந்த அறியாமையை அழிக்கும் வெளிச்சம் ஆகும். இப்படியாக ஒருவருடைய அறியாமையை அழித்து விவேகம் எனும் வெளிச்சத்தை நோக்கிச் செல்லும் வழியைக் காட்டுபவராகவே  குரு  இருக்கிறார்.

பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவன் என்கின்ற மூன்றுபேரும் ஒன்றிணைந்த உருவமே பரப்பிரும்மன். அந்த பரப்பிரும்மனே இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவர். அவரே மாயையை அழித்து விவேகத்தை தந்து அனைத்து வித்யாக்களையும் தருபவர். சிவனும், பிரும்மாவும் விஷ்ணுவும் சாபம் தந்தால் கூட அந்த சாபத்தை ஒரு குருவினால் விலக்க முடியும் என்ற அளவு சக்தி கொண்டவர் குரு.

தேவர்கள் மற்றும் முனிவர்களின் சாபத்திலிருந்தும், மிருகங்கள், பறவைகள், ஊர்வன போன்றவற்றின் பயங்களில் இருந்தும்   இடி மின்னல்களின் தாக்குதல்களில் இருந்தும், பகைவர்களின் தாக்குதல்களிலிருந்தும் குருவின் கருணை ஒருவரைக் காக்கும். ஒரு குருவின் சாபத்தைப் பெற்றவருக்கு சிவனும், விஷ்ணுவும் கூட அருள் புரிய முடியாது. குரு என்பவர் தனி மனிதரல்ல. குரு மற்றும் சிஷ்யர் இணைந்து செயல்படும்போது அவர்களுக்குள் இருந்து வெளிப்படும் ஆத்மார்த்த பக்தியே சக்தியாக மாறி பரப்பிரும்மனின் சக்தியை கொண்ட சத்குருவை அடைய வழி வகுக்கும்.

ஒருவருக்கு நல்ல குரு  கிடைத்தால் அவர்களது அறியாமை விலகி விவேகம் தன்னால் கிடைக்கும். அவருக்கு சேவை செய்வதின் மூலம் பிரும்மனுடன் இணைந்து கொள்ள முடியும். வேதங்கள், சாஸ்திரங்கள், தர்ம நூல்கள் போன்றவற்றைப் படிப்பதின் மூலம் மாயை விலகுவதில்லை. அவற்றில் உள்ள சாரங்களை குரு போதனை செய்வதின்  மூலமே அது நடக்கும்.   நல்ல குருவை அடைவது என்பது நிச்சயம் நம் பூர்வ ஜென்ம புண்ணிய பலனாலேயே கிடைக்கும். ஒருவருடைய கர்மவினைப் பயன் நன்றாக இருக்குமேயானால் நல்ல குருவை எளிதில் கண்டறிய முடியும். நல்ல ஒரு குருவை அடைபவர்கள் பாக்கியவான்கள்.

ஒரு குரு என்பவரைப் முற்றிலும் புரிந்து கொண்டு அவரை வழிபட முடியாதவர்கள் ஹோமம், யக்னம், விரதம், தானம் என அதையும் இதையும் செய்தாலும், புண்ணியத் தலங்களுக்கு விஜயம் செய்தவண்ணம் இருந்தாலும் கூட அவை எதுவுமே நல்ல பலனை தருவதில்லை. மனதில் உள்ள அறியாமை என்ற மாயை அகலாமல் அந்த மாயையின் சூழ்ச்சிக்கு உள்ளேயே உழன்று கொண்டு இருப்பதின் காரணம் அவர்கள் சூரியனைப் போன்ற ஒளியைத் தரும் ஒரு குருவின் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பதும் அவருடைய அருளைப் பெற முடியாமல் இருப்பதுதான்.

குருவை மதியாதவர் நரகத்தை அடைவார்கள். ஏன் என்றால் குருவே சத்குருவை அடையாளம் காட்டுபவர். ஒருவருடைய குரு எப்படிப்பட்டவராக இருந்தாலும், ஒருமுறை ஒருவரை குருவாக ஏற்றுக் கொண்டு விட்டால் அதன் பின் அவரை விட்டு விலகலாகாது.  குருவிடம் பொய் சொல்லக் கூடாது. குருவை எந்த நிலையிலும் நிந்திக்கக் கூடாது. தாமரை மலர் போன்ற குருவின் பாதங்கள் பட்ட தண்ணீர் காசி மற்றும் பிரயாகையின் நீருக்கு சமம் என்பதை மனதார உணர வேண்டும். குருவினுடைய பாதங்களை அலம்பிய நீரை கண்ணில்  ஒற்றிக் கொள்வதின் மூலம் பாவம் என்னும் சேற்றை வற்ற வைக்கலாம் . அது ஞானத்தைத் தந்து, சம்சாரம் எனும் பெரும் கடலைக் கடக்க வைக்கும்.

ஒரு குருவிற்குத் தேவையான உடை, தங்க  இடம், உணவு என அனைத்தும் கிடைக்க ஏற்பாடுகளை செய்பவனே ஒரு குருவின் உண்மையான சிஷ்யன் ஆவார். சிஷ்யர்கள் எத்தனைப் பெரும் ஞானம் கொண்டவர் என்றாலும் குருவிடம் அந்த கர்வத்தை வெளிப்படுத்தக் கூடாது. குருவை எவன் நிந்தனை செய்கிறானோ அவன் இந்த பிரபஞ்சத்தில் சந்திர சூரியர்கள் உள்ளளவரை பெரும் துன்பத்தையும், துயரத்தையும் பெறுவான்.

குருவிற்கு சமர்பிக்காமல் எந்தப்பொருளையும் உண்ணக் கூடாது. அவருக்கு சமர்ப்பணம் செய்தபின் அவர் கொடுத்தால் அதை மட்டுமே பிரசாதமாக உட்கொள்ளவேண்டும். குருவின் இருப்பிடத்தில் சத்தியம் இல்லாததை ஒருபோதும் பேசலாகாது. குருவின் பாதுகைகள், படுக்கை, இருக்கை முதலானவற்றைக் கைகூப்பி நமஸ்கரிக்க வேண்டும். அவைகளை ஒருபோதும் காலால் மிதிக்கலாகாது. அவை புனித இடங்கள்.

குருவை இடைவிடாது தியானிக்கவேண்டும். அப்போதுதான் ஞானம் சித்திக்கும். குருவை முற்றிலும் உணர்ந்துகொண்டு அவரால் உபதேசம் பெற்றவன் நிச்சயமாக ஜீவன் முக்தி பெறுவான். தினமும் காலையில்,  சிரஸ்ஸில் வரத, அபய முத்திரைகளோடு கூடிய கரங்களை வைத்து அருள் புரிபவராக குருவை நினைத்து அவரை தியானிக்க வேண்டும். அவரையே எல்லா தேவர்களின் ஸ்வரூபமாகக் கருதி, மானசீகமாக நமஸ்கரிக்க வேண்டும். குருவின் திருவுருவை எந்நேரமும் ஸ்மரணை செய்தவண்ணம் இருக்க வேண்டும். குருவைத் தவிர வேறொன்றையும் நினைக்கலாகாது. குருவின் நாமத்தைக் கூறியபடியே இருந்தால், அவருக்கு பணிவிடை செய்து கொண்ட வண்ணமே இருந்தால், எப்போதுமே குருவின் நினைவோடு மட்டுமே இருந்தால் விவேகம் என்ன, ஆத்ம ஞானம் என்ன, பேரானந்த நிலையை பெறுவதென்ன, அப்படிப்பட்ட சிஷ்யர்கள் என்னைப் போலவே தெய்வமாகக் கூட ஆகி விட முடியும்.

குருவின் ஸ்தலத்தில் தங்கியிருக்கும்போது அவரின் அடிமை போல அவர் இட்ட கட்டளையை மட்டுமே செய்ய வேண்டும். குருவின் கட்டளைப்படியே நடக்க வேண்டும். குரு கூறுவது தீயவையாக இருந்தாலும் அதில் முரண்படாமல் அவர் கூறியதைப் போலவே முழு மனதோடு அவற்றை செய்யவேண்டும்.  ஏன் என்றால் சில நேரங்களில் வேண்டும் என்றே தனது சிஷ்யர்களின் மன நிலையை சோதிக்க ஒரு குரு  நல்லவற்றையும் தீயவைப் போல காட்சி தரும் வகையில் கூறுவார். எப்போதுமே குருவின் பின்னால் மட்டுமே அவரைத் தொடர்ந்து நடக்கவேண்டும். அவரைத் தாண்டிக் கொண்டு செல்லக் கூடாது.  குருவின் எதிரில் அடக்கமாக இருக்க வேண்டும்.

தத்வமசி அதாவது உன்னையே உணர்ந்து கொள் என்ற நிலையை கொடுப்பவர், எங்கும் நிறைந்திருப்பவர், ஆகாயம் போல விரிந்து படர்ந்துள்ளவர், ஞானம் எனும் பொக்கிஷத்தை தன்னுள் வைத்துள்ளவர், அவர் உள்ள இடமே அனைத்து ஆலயங்களும் உள்ள இடம், பேரானந்த நிலையைத் தருபவர் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டவரே சத்குரு எனப்படுபவர். சத்குருவிற்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. அவர் அழிவில்லாதவர். அனத்து சக்திகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டவர். மூன்று லோகங்களின் அதிபதி.

பிரபஞ்சத்தில் உள்ள அனைவருமே சத்குருவால் படைக்கப்பட்ட மண் பாண்டங்களைப் போன்றவர்களே. சத்குருவை வணங்கித் துதிக்காதவர்கள், அவருக்கு சேவகம் செய்யாதவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் ரிஷி, முனிவர்கள், சித்தர்கள், யக்ஷ புருஷர்கள், முன்னோர்கள் போன்ற யாராக இருந்தாலும் மோட்ஷத்தை அடைய மாட்டார்கள். அப்படிப்பட்ட சத்குருவிடம் அழைத்துச் செல்பவரே ஒரு குரு ஆவார். ஆன்ம முன்னேற்றத்திற்கான பாதையில் வழி நடத்திச் செல்லும் குரு ஒருவரைக் காக்கும் கவசம் போன்றவர்.

மனிதர்களால், இந்த போதனைகள் பக்தியோடு கேட்கப்பட்டால் அல்லது பாராயணம் செய்யப்பட்டால் ஸம்ஸார பந்தம் அடியோடு நீங்கி அதீதி பலன்கள் கிட்டும்.  இதன் மகிமை மற்ற எந்த மந்திர ஜபங்களுக்கும் கிடையாது.   இதைக் கேட்பவர்களின் அனைத்துப் பாவங்களும் விலகும். எல்லா சித்திகளையும் பெறுவார்கள். இதை ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம்’. இப்படியாக சிவபெருமான் பார்வதிக்கு போதித்ததை குரு கீதை என்பார்கள் (இத்துடன் அத்தியாயம்-49 முடிவடைந்தது).

…………தொடரும்