அத்தியாயம் – 46

சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”தீபாவளிக்கு சில நாட்கள் முன்னர் அக்கம் பக்கங்களில் இருந்த பல இடங்களிலும் இருந்து தங்களுடைய கிராமங்களுக்கு ஸ்வாமிகள் வருகை தர வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. பல்வேறு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி ஸ்வாமிகளிடம் சென்று அவரை தம் கிராமத்திற்கு வருகை தருமாறு நேரிலே அழைத்தார்கள். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கிராமத்தினர் அனைவரும்  அழைத்தால் நான் ஒருவன் அத்தனை இடங்களுக்கும், அதுவும் ஒரே நேரத்தில் அனைத்து கிராமங்களுக்கும்  எப்படி வர முடியும் என்பதால் தான் எந்த கிராமத்திற்கு முதலில் செல்ல வேண்டும் என்றும் அதன் பின்  வரிசைகிரமமாக  எந்தெந்த கிராமங்களுக்கு வருகை தர வேண்டும் எனக் கூறினால் அந்தந்த கிராமத்துக்கு தக்க  நேரம் ஒதுக்கித் தருவதாக கூறியும்  கிராம மக்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அங்கு வந்த ஒவ்வொருவருமே தம்முடைய கிராமத்துக்கே ஸ்வாமிகள் முதலில் வர வேண்டும் என்றே விரும்பினார்கள்.

ஸ்வாமிகளை சந்தித்த கிராமத்தினர்  கூறினார்கள் ‘ஸ்வாமிகளே நீங்கள் எங்களிடையே ஏழை அல்லது பணக்காரன் என்ற பேதம் காட்டாமல், கிருஷ்ணர் எப்படி அரசில் இருந்த துரியோதனர்கள் கூட்டத்தை விட்டு விலகி,  வனவாசத்தில் ராஜ்ஜியம் எதுவும் இல்லாமல் இருந்த பாண்டவர்களுக்கு துணையாக இருந்தாரோ அது போலவே தீபாவளி பண்டிகை தினத்தன்று ஏழைகளான தங்களுடைய கிராமத்திற்கே ஸ்வாமிகள் முதலில் வரவேண்டும்’ என அழைப்பு விடுத்தார்கள். நேரிலே வந்து அவரை அழைத்த அனைத்து கிராமத்தினரும் ஏழ்மை நிலையில் இருந்தவர்களே.

அதனால் வேறு வழி இன்றி ஸ்வாமிகள் ஒவ் ஒரு கிராம அதிகாரியையும் தனித் தனியாக அழைத்து அவர்களின் காதில் அவர்கள் கிராமத்திற்கு தான் வரும் நேரத்தை ரகசியமாகக் கூறி விட்டு அதை மற்ற கிராமத்தினருக்கு கூறக் கூடாது என சொல்லி அனுப்பினார். அவர் தமக்குக் கூறிய நேரத்தை ஸ்வாமிகள் வந்து விட்டுப் போகும்வரை மற்ற கிராமத்தினரிடம் கூற மாட்டோம் என ஸ்வாமிகளிடம் சத்தியம் செய்து கொடுத்து விட்டுச் சென்றார்கள். ஸ்வாமிகள் தமது கிராமத்திற்கு வரும் நேரத்தை அவரிடம் இருந்து ரகசியமாக பெற்றுக் கொண்டதினால் ஸ்வாமிகள் தங்களுடைய கிராமத்துக்கு எத்தனை மணிக்கு வருகை தர இருக்கிறார் என்பதை மற்றவர்களிடம் கூறாமல் அனைத்து கிராம அதிகாரிகளும் மக்களும் கலைந்து சென்றார்கள்.

தீபாவளி பண்டிகையும் வந்தது. குருதேவர் தன்னுடைய சக்தியினால் எட்டு ரூபங்களை மேற்கொண்டு தான் சொன்னபடியே ஒரே சமயத்தில் அவரை அழைத்த அந்த எட்டு கிராமங்களிலும் ஒரே ரூபத்தில்  தரிசனம் தந்தார். அனைத்து  இடங்களிலும் இருந்தவர்கள் தீபாவளிக்கு ஸ்வாமிகளின் தரிசனம் முதலில் நமக்குக் கிடைத்தது என்றே மனம் மகிழ்ந்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு அனைவரும்  ஆஸ்ரமத்தில் வந்து ஒன்றாக கூடியபோது அவர்கள் ஒருவருக்கொருவர் ஸ்வாமிகள் தம் கிராமத்துக்கு வந்த நேரத்தைக் கூறி அவருடைய அவதார கோலத்தையும் விவரிக்க அப்போதுதான் ஸ்வாமிகள் அனைத்து இடங்களிலும்  ஒரே நேரத்தில்  தரிசனம்  கொடுத்த  விஷயம் அனைவருக்கும் தெரிய வந்தது. அவரால் எப்படி அனைத்து கிராமங்களிலும் ஒரே நேரத்தில் காட்சி அளிக்க முடிந்தது என்பதை தெரிந்து கொண்டபோது ஸ்வாமிகளின் உண்மையான சக்தியை அறிந்து கொள்ள முடிந்தது. அதைக் கேட்ட அனைவரும்  வியந்தனர். அதைப் பற்றி கிராமத்தினர் நன்கு கற்றறிந்த பண்டிதர்களைக் கேட்க அந்த பண்டிதர்கள் கூறினார்கள் ‘கடவுளால் எத்தனை ரூபங்களை வேண்டுமானாலும் எடுக்க முடியும். ஒரே நேரத்தில் எத்தனை இடங்களில் வேண்டுமானாலும் அதே ரூபத்தில்   காட்சி தர முடியும்”  (இத்துடன் அத்தியாயம்-46 முடிவுற்றது) .

………தொடரும்