அத்தியாயம் -30

சித்த முனிவர் கூறலானார் ”ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் கனக்பூரில் இருந்தபோது அவருடைய புகழ் பல இடங்களிலும் பரவி இருந்தது. பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் குருதேவரை தரிசனம் செய்ய வந்து கொண்டு இருந்தனர். ஆகவே அவருடைய அனைத்து  மகிமைகளையும் கூறுவது கடினமானது. ஆனாலும் தத்தருடைய  அவதாரமான ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள்   பற்றி  நான் சிலவற்றைக் கூறுகின்றேன். கேள்.

மாகூர் எனும் இடத்தில் கோபினாத் எனும் பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு அந்தணர். தத்தருடைய பக்தர். அவருக்குப் பிறந்த அனைத்துக் குழந்தைகளுமே இறந்து கொண்டே இருந்தன. தத்தருடைய அருளினால் மீண்டும் அவருக்கு கடைசியாக  பிறந்த மகனுக்கு ஐந்தாவது வயதில் உபநயனம் செய்தப் பின், பதினாறாவது வயதில் திருமணமும் செய்தார்கள். திருமணம் ஆனதும் மிக்க மகிழ்ச்சியோடு  வாழ்ந்து வந்தபோது ஒருமுறை அவனுக்கு எதோ வியாதி வந்து படுக்கையில் வீழ்ந்தான்.  அந்த சிறுவனின் மனைவியான சாவித்திரி என்பவள் மகா பதிவிரதை. என்ன மருத்துவம் செய்தும் அவன் வியாதி குணம் அடையவில்லை. ஆகவே அவள் கணவனுக்கு வேண்டிய அனைத்தையும் செய்தபடி நாள் முழுதும் அவனுடன் அமர்ந்து இருந்தாள் . அவன் உணவு அருந்திய பின்னரே அவள் உணவை அருந்தினாள். ஆனால் அவனால் முழு அளவில் உணவை உண்ண முடியவில்லை என்பதால் அவளும்  தான் உண்ணும் உணவின் அளவை அவன் உண்ணும் அளவுக்கு குறைத்துக் கொண்டாள்.

மூன்று வருடங்களாக படுக்கையில் வீழ்ந்து கிடந்தவன் உடல் நாறத் துவங்கியது.  மருத்துவர்கள் கூட அவன் அருகில் செல்ல தயங்கும் அளவுக்கு அவன் உடல்நிலை மோசம் அடைந்தது.  அவனுக்கு பணிவிடை செய்யவும் எவரும் முன்வரவில்லை என்பதினால் அவன் மனைவியே முழு நேரமும் அவன் அருகில் இருந்தபடி மருந்து கொடுப்பது, உடைகளை மாற்றுவது, உணவு கொடுப்பது என அனைத்தையும் முகம் சுளிக்காமல் செய்து வந்தாள். அவனுடைய பெற்றோர்கள் பணக்காரர்கள் என்பதினால் அனைத்து விதமான மார்க்கங்களையும் பயன்படுத்திப் பார்த்தார்கள். யாகம், ஹோமம், யக்யம், மந்திர தந்திரம் என எதை பயன்படுத்தியும் வியாதி குணமாகவே இல்லை.  ஆகவே இனி தெய்வம் விட்ட வழி என மனம் வருந்தி ஒடிந்து போனார்கள்.

நாளாக நாளாக வியாதியின் உக்ரஹமும் அதிகரித்ததே ஒழிய குணமடையும் சுவடே இல்லை. அவனும் தனது பெற்றோர்களையும் மனைவியையும் தன்னால் முடிந்த அளவு தேற்றிப் பார்த்தான். அவன் படும் அவஸ்தையை தாங்கிக்கொள்ள முடியாமல் போன சாவித்ரிக்கு திடீர் என கனக்பூரில் தங்கி இருந்த ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின்  நினைவு வந்தது. தன்னுடைய மாமனார்-மாமியாரிடம்  தங்களை அவரிடம் அழைத்துச் செல்லுமாறும், அவர் தனது கணவனின் வியாதியை நிச்சயம் குணப்படுத்துவார் என்றும் கேட்டாள்.

அவர்களும் அவளுடைய கோரிக்கையை ஏற்று ஒரு பல்லக்கில் அவர்களை ஏற்றி  அவர்களை அனுப்பி வைத்தார்கள்.  ஆனால் ஸ்வாமிகளை  தரிசிக்க சென்று கொண்டிருந்தபோது வழியில் சாவித்ரியின் கணவன் மரணம் அடைந்து விட்டான். அதைக் கண்டவள் அழுது புலம்பினாள். ஒருவேளை தன்னால்தான்    அவனுக்கு மரணம் வந்து விட்டதோ    என நினைத்தாள். இனி அவருடைய பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்வது என  சோகமடைந்து தரையில் முட்டி மோதிக்  கொண்டு அழுதாள்.

அப்போது உடல் முழுதும் பஸ்மம் பூசிக்கொண்டு, ருத்திராக்ஷம், அணிந்து கொண்டு , கமண்டலம் ஏந்தி, திரிசூலத்தை கையில் ஏந்தியபடி ஒரு சந்நியாசி  அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். அந்தப் பெண் அழுது கொண்டு இருந்ததைக் கண்டு அவள் அருகில் சென்று கேட்டார் ‘அம்மா, எதற்காக நீ அழுது புலம்பிக் கொண்டு இருக்கிறாய்?’ அப்படிக் கேட்டவரிடம் அவள் நடந்த அனைத்தையும் கூறி அழுதாள். அதைக் கேட்ட அவர் அவளை தேற்றினார் ‘அம்மா, இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒருநாள் மரணம் அடைந்தே ஆகவேண்டும் என்பது படைப்பின் நியதி. வாழ்வு நிரந்திரமானது அல்ல. கங்கையில் கூட எங்கிருந்து எல்லாமோ மிதந்து வரும் மரக்கட்டைகள் சில இடங்களில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தப் பின், நீரின் ஓட்டத்தோடு செல்லும் வழியில் அவற்றில் சில மக்கிப்போய் அங்கும் இங்குமாக நதிக்குள் மூழ்கி விடும், அல்லது அவற்றில் சில கட்டைகள் பிரிந்து வேறு திசையில் சென்று விடும். ஆகவே எதுவுமே நிரந்தரம் அல்ல எனும்போது நீ ஏன் இறந்தவனை நினைத்து அழுகிறாய்?

பறவைகளைப் பார். பல பறவைகள் கூட்டமாக பறந்து சென்று எங்காவது ஒரு இடத்தில் அமரும். திடீர் என அவற்றில் பலவும் அங்குமிங்கும் பறந்து சென்றுவிடும். அது போலத்தான் சம்சார வாழ்கையும். எங்கிருந்து வந்தோம் என்பது தெரியாமல் ஒரே குடும்பமாக வாழும் நேரத்தில் யாராவது மரணம் அடைந்து விடும்போது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருமே ஒன்றாக மரணம் அடைய வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா? இந்த வாழ்கை நீர்க் குமுழி மற்றும் ஒரு கனவைப் போன்றது. நீர் குமுழி எப்போது வெடிக்கும் என்பது தெரியாது. ஆனால் அது நிச்சயம் வெடிக்கும் என்பது நியதி. உறங்கி எழுந்ததும் கனவும் கலைந்தே ஆக வேண்டும் என்பதும் உண்மையே. ஆகவே நீ ஏன் அனாவசியமாக இறந்தவனை நினைத்து அழுது கொண்டு இருக்கிறாய்?’ என்றார் (இதனுடன் அத்தியாயம் -30 முடிவடைந்தது).

…….தொடரும்