…………அத்தியாயம் -2 (iv)

தீபிகா எப்படித்தான் சமைத்துப் போட்டாலும் அதில் குறைக் கூறி அதை அவன் மீதே துப்புவார். தீபிகா சாப்பிட அமர்ந்தால் அவர் தட்டின் மீதே காரி உமிழ்வார். ஆனாலும் தீபிகா முகம் சுளிக்காமல் அந்தக் கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்டே அவருக்கு பணிவிடைகளை செய்து வந்தார். சீழ்பிடித்துப் போன கொப்புளங்களில் இருந்து ரத்தம் வடியலாயிற்று. அவற்றையும் தீபிகாவே துடைத்து விட வேண்டியதாயிற்று. இரவெல்லாம் தீபிகா தூங்க முடியாமல் இருக்கும். அதன் காரணம் வலியினால்  அவருடைய குருநாதர் கத்துவதே. இவ்வளவு கஷ்டத்திலும் சேவை செய்து வந்தாலும்  குருநாதருக்கு தீபிகாவின் மீது குறை இருந்து கொண்டே இருந்தது.  அவரைக் வேண்டும் என்றே திட்டித் தீர்ப்பார்.  ஆனாலும் குருவிற்கு செய்து வந்த பணிவிடைகளை தீபிகா எந்த விதத்திலும் குறை வைக்காமல் செய்து வந்தார். காலப்போக்கில் குருநாதரின் கண் பார்வையும் மறைந்தது. முற்றிலும் குருடராகி விட்டார்.
இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்கையில் காசியில் அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த காசி விஸ்வநாதர் (சிவபெருமான்) தீபிகா தனது குருவுக்கு செய்யும் பணிவிடைகளைக் கண்டு அவர் மீது இறக்கம் கொண்டார்.  ஆகவே  ஒருநாள்  வேத சர்மா உறங்குகையில் காசி விஸ்வநாதர் தீபிகாவுக்கு முன்  தோன்றி ‘உனக்கு என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டார்.  குருநாதரைக் கேட்டு விட்டு கூறவும், சிவபெருமான் ‘உடனடியாக உன் குருநாதரிடம் கேட்டுவிட்டு என் சன்னதிக்கு வந்து கூறு’ என்று ஆணையிட்டு விட்டு சென்றார். தீபிகாவும் உடனடியாக உள்ளே சென்று தனது குருவை எழுப்பி  தன்  முன் தோன்றிய சிவபெருமான் ”உனக்கு என்ன வரம் வேண்டும்’ என்று கேட்பதினால் ‘குருநாதருக்கு உடல் நலத்தைக் கொடு’ என்று வேண்டவா”  என்று  குருவிடம் வினவ, குருநாதர் அவர் மீது எரிந்து விழுந்தார்.
”உனக்கு என்னிடம் சேவகம் செய்ய பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் இப்படிக் கேட்கிறாய். நான் இந்த ஜென்மத்திலேயே  என் பாபங்களைத் தொலைத்து விட நினைத்தால், நீயோ அதை அடுத்த ஜென்மத்திலும் அனுபவிக்க ஏற்பாடு செய்யட்டுமா என்று கேட்கிறாயே. அதை விட என்னை இந்த கங்கையிலேயே  தூக்கிப் போட்டுவிட்டு சென்று விடுவதுதானே” என்று தாறுமாறாகக் கத்தினார். அதைக் கேட்டும்  தீபிகா வருத்தம் சற்றும் அடையாமல், குருவிற்கு வந்துள்ள வியாதியின் உபாதையினால் அப்படி எரிந்து விழுகிறார் என்று மனதில் எண்ணியவாறு உடனடியாக காசி விஸ்வநாதரிடம் சென்று தனக்கு எந்த வரமும் வேண்டாம் என்று கூறி விட்டு வந்து விட்டார்.  குருநாதருக்கு அவருடைய சேவகம் தொடர்ந்தது.
தேவலோகத்துக்கு திரும்பிச் சென்ற சிவபெருமானும் நடந்த விவரங்கள் அனைத்தையும் – தீபிகா செய்யும் சேவைகள் முதல் அவருக்கு தான் வரம் கொடுக்க முன்வந்த நிகழ்ச்சிவரை-   விஷ்ணுவிடம் கூற அவற்றைக் கேட்ட  விஷ்ணு  ‘இப்படியும் ஒரு சிஷ்யன் குருவுக்கு பணிவிடை செய்வாரா?’ என ஆச்சர்யம் அடைந்து அந்த சிஷ்யரை தானும்  சந்தித்து அவருக்கு வரம் ஏதும் தர முயற்சி செய்யலாம் என முடிவு செய்தபின் பூலோகம் சென்றார்.  அங்கு சென்று தீபிகாவுக்கு  காட்சி தந்தவர்  ”குழந்தாய், உன் குரு பக்தியைக் குறித்து சிவபெருமான்  என்னிடம் மிக மனை நிறைவோடு கூறினார்.  உன்னைப் போல இந்த பூமியிலே  ஒரு சிஷ்யன் இருக்க முடியாது எனும் வகையில் சிறப்பாக குரு வந்தனம் செய்கிறாய். ஆகவேதான் நானும் உன்னிடம் வந்தேன். சரி, உன் குருவிற்கு எந்த வரமும் வேண்டாம். உனக்கும் இப்போது எந்த வரமும் வேண்டாம். ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள். அதை தந்துவிட்டுச் செல்கிறேன்”’ என்று   கூற  தீபிகா  எத்தனை கூறியும் விஷ்ணுவும் அவரை விடாமல் நச்சரித்து ‘என்ன வரம் வேண்டும் என்று கூறியே ஆகவேண்டும்’ என்று கட்டாயப்படுத்த   முடிவாக தீபிகா அவரிடம் கூறலானார்.

”தெய்வமே, உங்களது தரிசனத்தைப் பெற்று  பல வரங்களை பெற நினைக்கும்  பல்லாயிரக்கணக்கானோர் தவித்துக்  கொண்டு உள்ளபோது என்னிடம் வந்து ஏன் வரம் என்ன வேண்டும் என்று  கேட்கிறீர்கள்? குருவிற்கு சேவை செய்வதை விட ஒருவனது வாழ்க்கையில் பெரிய பாக்கியம் வேறு  என்ன   இருக்க முடியும்? அதை விட வேறு என்ன வேண்டும்?? குரு என்ற இரண்டு எழுத்து மந்திரம் மும்மூர்த்தி எனும் மூவரையும் விட வலிமையானது என்பதாக நான்  அறிந்திருக்கிறேன். என் குருவின் உண்மையான உருவத்தைக் கண்டு களித்திடவும், அவருக்கு அனைத்து விதத்திலும்  சிறப்பாக பணிவிடை செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதையும்  என் மனதிலே பதிய வைத்தால் அதுவே போதுமானது”.  இப்படிக் கூறிய பின் அவரை விழுந்து வணங்கியவன் தான் இப்பொழுது கேட்ட வரங்களைத்  தவிற தனக்கு வேறு எந்த விதமான வரமும் தனக்குத் தேவை இல்லை என்று கூறினார்.

ஆனால் விஷ்ணுவோ அவருக்கு வரம் தராமல் செல்வதில்லை என்ற முடிவோடு இருந்ததினால் தீபிகா கூறினார் ” பிரபோ, ஆகவே அப்படி ஏதாவது வரம் கொடுத்து விட்டுதான் செல்வேன் என நீங்கள் கூறினால் என் குருநாதருக்கு இன்னும் சிறப்பாக பணிவிடை செய்யும் மனதை எனக்கு கொடுத்து விட்டுச் செல்லுங்கள்” என்று பணிவுடன் கேட்க அதைக் கேட்ட மகாவிஷ்ணு பரமானந்தம் அடைந்துக் கூறினார் ”குழந்தாய் நீ உன் குருவிற்கு செய்யும்  மகத்தான சேவையையும், உன் குரு பக்தியையும் கண்டு வியக்கிறேன்.   குருவுக்கு அவருடைய சிஷ்யர் செய்யும் சேவையும் எனக்கு செய்யும் சேவையும் ஒன்றே ஆகும். அந்த நிலையில் உள்ள சிஷ்யர் யாராக இருந்தாலும், அவன் கேட்காமலேயே அவனை நான் என் என்னுடைய பக்தனாகவே ஏற்றுக் கொள்வேன். நானும் குருவும் வெவ்வேறானவர்கள்  அல்ல. நீ  உன் குருவிற்கு செய்து வரும் சேவையை எனக்கு செய்துவரும்  சேவையாகக் கருதியே உனக்கு அருள் புரிய இங்கு வந்தேன். நீ கேட்ட அனைத்தையும் நீ அடைவாய்” என்று அவருக்கு அருள் புரிந்துவிட்டு விஷ்ணு மறைந்து போனார்.

அவர் சென்றதும் தீபிகா உள்ளே சென்று குருவின் முன்னால் நிற்க தீபிகா கூறும் முன்னரே அனைத்தையும் ஞானதிருஷ்டியினால் அறிந்து கொண்ட குரு அவரிடம்  ”விஷ்ணுவிடம் இருந்து நீ என்ன வரம் பெற்றாய்?’ என்று கேட்டார். நடந்த விவரங்கள் அனைத்தையும் சற்றும் மாற்றாமல்  ”குருவே,  நான் யாரையும் எனக்கு தரிசனம் தருமாறு கேட்காமல் இருந்தாலும் சிவபெருமானும், விஷ்ணு பகவானும் என்னிடம் அவர்களாகவே வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டதினால் அவற்றை மீற முடியாமல் போய் எனக்கு எப்பொழுதும் என் குருவிற்கு பணி செய்யும் பாக்கியத்தைத் தருமாறு அவர்களிடம் கேட்கும்படி ஆகிவிட்டது” என்று தீபிகா தனது  குருவிடம் கூறினார்.
அடுத்தகணமே தீபிகா முன்னால்   பளபளக்கும் சரீரத்துடன் எந்த வியாதியும் இல்லாத நிலையில்  காட்சி தந்த வேத சர்மா தீபிகாவை   ஆசிர்வதித்தார் ”தீபிகா, உன்னுடைய குரு பக்தியை சோதிக்கவே நான் இந்த நாடகத்தை நடத்தினேன்.   நீயே ஒரு குருவின் உண்மையான சிஷ்யன்.  இனி உன் வாழ்வில் எந்த விதமான துயரத்தையும் நீ பெற மாட்டாய். நீ இனிமேல் இங்கு தங்கி இருக்க வேண்டும். உனக்கு மேன்மைக் கிட்டிடும். சித்திகள் கைகூடும் மற்றும் ஆத்ம சக்தியும் பெருகிடும். பல சித்தர்களும் யோகிகளும் உன்னிடம்  வந்து உன்னை போற்றி   வணங்குவார்கள்.  குபேரனின் அனைத்து அருளும் உனக்குக் கிடைக்கும். இந்த உலகில் உனக்கு கிடைக்காத  தெய்வீக அருள் வேறு எதுவுமே இல்லை எனும்படி அனைத்து தெய்வீக அருளையும் நீ  பெறுவாய். மும்மூர்த்திகளில் சிவபெருமானும், விஷ்ணுவும் உனக்கு ஆசி தந்துள்ளதினால் உன்னைக் கண்டமட்டிலேயே அனைவரது வியாதிகளும் விலகி ஓடும். நீ  நீடூழி வாழ வேண்டும் என்பதே என் ஆசிகள்” என்று கூறிய பின்னர்  அப்படியே ஆகாயத்தில் பறந்து சென்று மறைந்து விட்டார்.  அதற்குப் பிறகே  அனைவருக்கும் தெரிந்தது  தீபிகா மூலம்  குருவின் மகிமையை  உலகிற்கு உணர்த்த சிவபெருமானும், விஷ்ணுவும் சேர்ந்து நடத்திய நாடகம் அது என்பது.  மேலும் பூர்வ ஜென்ம பாபங்களைத் தொலைக்கும் இடமாக உள்ள காசியின் மகிமையை   எடுத்துக் காட்ட அவர்கள் நினைத்தது அதற்கு இன்னொரு காரணம். அதைக் கேட்ட கலியுகமும் பிரும்மாவை வணங்கி துதித்துவிட்டு தன் கடமையை செய்ய பூலோகத்துக்கு கிளம்பிச் சென்றது”
இப்படியாக நமத்ஹராவுக்கு சித்த  முனிவர் கூறியதும் தன்னை மறந்து அவற்றைக்  கேட்டுக் கொண்டிருந்த நமத்ஹரகா பக்தி பூர்வமாக அப்படியே அவர் கால்களில் மீண்டும் வீழ்ந்து வணங்கி  எழுந்தார்  (இத்துடன் அத்தியாயம்-2 முடிந்தது). 
………தொடரும்