சாந்திப்பிரியா                                             –  1 

நான் என்னுடைய குடும்பத்துடன் சமீபத்தில் நான் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இடமான தேவாஸ் எனும் சிறு நகருக்குச் சென்று இருந்தேன். மால்வா எனப்படும் அந்த பகுதியில் நடைபெறும் நவராத்திரிப் பண்டிகை கொண்டாத்தைக் கண்டு களிக்கவும் சொந்த சில காரணங்களுக்காகவும்  நாங்கள் அங்கு சென்றோம். தேவாஸ் எனும் சிறு நகரத்துக்கு சென்ற நாங்கள் அங்கிருந்து இருந்து 30 முதல் 100 கிலோமீட்டர் தொலைவில் சுற்றுப்புறங்களில் இருந்த   இந்தூர், உஜ்ஜயினி, நல்கேடா, மகேஷ்வர் மற்றும் ஒம்காரீஷ்வர் போன்ற இடங்களில் இருந்த ஆலயங்களுக்கும் சென்று இருந்தோம். அது குறித்த செய்திக் கட்டுரை இது.

தேவாஸ் நகரில் நாங்கள் முதலில் சென்றது பிலாவலி எனும் கிராமத்தில் இருந்த சிவன் ஆலயம். தேவாஸ்  எனும் சிற்றூர்  போபால்  மற்றும் இந்தூர்  நகரங்களுக்கு  இடையே உள்ளது.  எங்கள் குலதெய்வத்துக்கு அடுத்து நாங்கள் பெரும் நம்பிக்கை மற்றும் பக்தி கொண்டுள்ள ஆலயம் அது. அங்குள்ள சிவலிங்கம் ஆத்ம லிங்கம் ஆகும். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல ஆலயங்கள் பிரசித்தி பெற்றவை. அவற்றில் பல ஆலயங்களின் எழுதி  வைக்கப்பட்டு  உள்ள வரலாறு  கிடைக்கவில்லை என்றாலும் சில ஆலயங்களுடைய மகிமைகளை கிராமிய மக்கள் பரம்பரை பரம்பரையாக வாய் மொழி செய்தியாகவே தெரிவிக்கின்றனர். அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான்  தேவாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஆனால் பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த ஆலயமான பிலாவலி சிவன் ஆகும்.

ஒரு காலத்தில் உஜ்ஜயினி, போபால், இந்தோர் மற்றும் தேவாஸ் போன்ற மராட்டிய பகுதிகள் அடங்கிய மால்வா எனப்படும் பகுதியை பேஷ்வாவுடன் அரச குடும்பத்தினரான துகோசி ராவ் மற்றும் ஜீவாஜி ராவ் போன்றவர்கள் செய்து கொண்டு இருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டு வந்தார்கள். அந்த மால்வா எனப்படும் பிரதேசத்தில் இருந்ததே தேவாஸ். பிலாவலி சிவன் ஆலயம் இந்த சிறு நகரின் ஒரு பகுதியில் இருந்து சுமார் இரண்டு கி.மீ தொலைவில் ஒரு குக் கிராமத்தில் உள்ளது. அந்த ஆலயத்தின் பெயர் மகாகாளீஷ்வர் ஆலயம். மகாகாளீஷ்வர் உள்ள இடம் உஜ்ஜயினிதானே என யோசனையா? உஜ்ஜயினியில் உள்ள மகாகாளீஷ்வர் ஆலயத்திற்கும் இதற்கும் உள்ள சகோதர பந்தமே அந்த பெயர் ஏற்பட்டதின் காரணம்.

இந்த ஆலயம் சிறு குன்று போன்ற இடத்தில் பிரதான சாலைக்கு உயரத்தில் அமைந்து உள்ளது. ஆலயத்தின் உள்ளே  முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த சுமார் ஒரு அடி உயர  சிவலிங்கம் இன்று சுமார் இரண்டு அடி உயரத்தில் வளர்ந்து உள்ளது. அந்த அதிசயத்தை நேரில் தரிசித்தவர்களில் நானும் ஒருவன் என்ற பெருமை எனக்கும் உள்ளது. ஆலயத்தின் உள்ளே சிவலிங்கம் மட்டுமே உள்ளது. அதன் விஷேசம் என்ன எனில் ஆவுடையார் இடப்புறம் அமைந்து உள்ளது. அந்த ஆலயத்தில் சென்று அமர்ந்து தியானித்தப் பின் வந்தால் மனதில் பெரும் அமைதி கிடைப்பது அனுபவமான உண்மை. அதன் எதிர்புறத்தில் அனுமான் சன்னதியும் கால பைரவர் சன்னதியும் அமைந்து உள்ளன. இன்னொருபுறம் வீர்  தேஜாஜி எனும் ஒரு காவல் தெய்வத்தின் சிலையும் உள்ளது. ஆலயத்தின் எதிர்புறத்தில் சற்று தொலைவில் ஒரு மயானம் உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் ஆலயத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மயில்கள் வந்து விளையாடுவதைக் காணும் பொழுது ஆனந்தமாக இருக்கும்.

ஆலயம் எழுந்த கதை

வெகு காலத்திற்கு முன் அந்த கிராமத்தில் குரு மகராஜ் என்ற ஒரு சிவபக்தர் வசித்து வந்தார். தினமும் அதி காலை எழுந்து குளித்தப் பின் நடந்தே உஜ்ஜயினிக்குச் சென்று மகாகாளேஸ்வர் ஆலயத்திற்கு சென்று அங்கு மகா மகாகாளீஷ்வரரை தரிசனம் செய்த பின்தான் உணவு அருந்துவார். தேவாஸ் மற்றும் உஜ்ஜயினிக்கு செல்லும் பாதையின் இடையே நர்வர் என்ற நதி ஓடுகின்றது. அந்த காலத்தில் பலர் உஜ்ஜயினிக்கு நடந்தே செல்வது சாதாரணம். ஏன் எனில் நடந்து செல்பவர்கள் பல குறுக்கு வழிகளில் சென்று விடுவார்கள்.

அப்படி கட்டுப்பாட்டுடன் தினமும் நடந்து செல்லும் பழக்கத்தை வைத்திருந்தவர் ஒரு  மழை காலத்தில் ஒரு சோதனையை சந்திக்க வேண்டி இருந்தது. எப்பொழுதும் போல காலை எழுந்து குளித்து விட்டு உஜ்ஜயினிக்குக் செல்லக் கிளம்பியவர் நர்வர் எனும் கிராமத்து அருகில் இருந்த நதியில் ஏற்பட்டிருந்த திடீர் வெள்ளத்தினால் மேலே செல்ல முடியாமல் தவித்தார். மழையும் நின்றபாடில்லை. என்ன செய்வது என மனம் தடுமாறி நின்று கொண்டு இருந்த அவரை இரவு நறவார் கிராமத்தின் ஊர் தலையாரி தன் வீட்டிற்கு அழைத்துப் போய் மழை நின்ற பின் கிளம்பிச் செல்லும்படிக் கூறி உணவு அருந்த அழைத்தார். ஆனால் குரு மகராஜ் உணவு அருந்த மறுத்து விட்டு தன் சங்கல்பத்தைக் கூறி விட்டார். நதியின் வெள்ளம் அடங்க இரு நாட்கள் ஆகும் என்ற அளவில் மழை பெய்து கொண்டு இருந்தது. இரண்டு நாட்களும்  எப்படி சாப்பிடாமல் இருப்பார் என குழம்பிய தலையாரியும் அவரைக் இரவு அங்கேயே தங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்திய பின் இருவரும் தூங்கச் சென்றனர். குரு மகராஜ் அந்த கிராம தலையாரியின் வற்புறுத்தலால் ஒரு கோப்பை பால் மட்டும் அருந்தினார். அன்று இரவு குரு மகராஜின் கனவில் சிவபெருமான் தோன்றி ‘பக்தா உன் பக்தியை மெச்சுகின்றேன். இனி நீ உஜ்ஜயினிக்கு வந்து என்னை தரிசிக்க வேண்டாம். மீண்டும் பிலாவலிக்கே திரும்பிச் சென்று உனக்கு எந்த இடத்தில் விருப்பமோ அங்கு ஐந்து வில்வ இலைகளை வைத்து அதன் மீது ஒரு கல்லை வைத்து விடு. மறுநாள் நான் அங்கே எழுந்தருளுவேன்’ எனக் கூறி விட்டு மறைந்தார். அன்று இரவு இருமுறை அவருக்கு அதே கனவு வந்ததாம்.

மறு நாள் காலை மழை நின்றது. ஆனால் நதியின் வெள்ளம் அடங்கவில்லை என்பதால் உஜ்ஜயினிக்கு  முடியவில்லை. ஆகவே காலையில் எழுந்து குளித்து விட்டு பிலாவலிக்குத் திரும்பியவர், தன் கனவைக் குறித்து கிராமத்தினரிடம் கூறினார். ஒருவரும் அதை நம்பவில்லை. ஆனால் குரு மகராஜோ பரிபூரண நம்பிக்கையுடன் ஒரு சிறு குன்றின் மீது (தற்பொழுது ஆலயம் உள்ள இடத்தில்) ஐந்து வில்வ இலைகளை வைத்தப் பின் அதன் மீது ஒரு கல்லையும் வைத்து விட்டு தூங்கச் சென்றார். இரவு திடீரென பெரும் மழை பெய்து ஓய்ந்தது. அடித்தக் காற்றில் வில்வ இலைகள் பறந்து விட்டன. காலை எழுந்து தான் வில்வ இலைகளை வைத்திருந்த இடத்திற்கு சென்று பார்த்தவர் ஒரு அதிசயத்தைக் கண்டார். வில்வ இலைகளை வைத்திருந்த இடத்தை சுற்றி இருந்த மண் விலகி இருந்தது. பூமியிலே புதைந்திருந்த ஒரு லிங்கம் வெளியில் தெரிந்தது. ஓடிச் சென்று ஊராரை அழைத்து வந்து அந்த அற்புதக் காட்சியைக் காட்ட அனைவரும் வாயடைத்து நின்றனர். சிவபெருமான் தான் அளித்த வாக்குறுதிப்படி உஜ்ஜயினி மகா காளீஸ்வரராக அங்கேயே எழுந்தருளி விட்டார். அந்த லிங்கம் தோன்றிய இடத்திலேயே சிறு ஆலயம் அமைத்தனர். ஆகவே அந்த ஆலயத்திற்கு மகா காளீஸ்வரர் ஆலயம் எனப் பெயரிட்டனர். அதற்கு மறு நாள் முதல் குரு மகராஜ் உஜ்ஜயினிக்குச் செல்வதை நிறுத்தி விட்டு அந்த இடத்திலேயே வழிபடத் துவங்கினார். அதனால்தான் அந்த ஆலயத்தின் பெயரையும் உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் என்று வைத்தார்கள்.

1974 நாங்கள் அங்கு சென்று வேலையில் அமர்ந்தபோது அந்த சிவலிங்கம் சுமார் ஒரு அடி உயரமே இருந்தது. ஆனால் பின்னர் நாங்கள் அது வளர்ந்து இருந்ததைக் கண்டோம். இந்த முறை அது சுமார் இரண்டு அடி உயரத்தில் உள்ளதையும் நல்ல பருமனாக ஆகி உள்ளதையும் கவனித்தோம். இது ஒரு அதிசயமான காட்சியாகும்.

அதன் பின் அந்த இடத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த சியா எனும் குக் கிராமத்தில் இருந்த தேவி ஆலய தரிசனமும் செய்து விட்டு திரும்பினோம். அடுத்த நாள் காலை நாங்கள் செல்ல இருந்தது நல்கேடா எனும் கிராமத்தில் இருந்த பகளாமுகி எனும் ஆலயம் ஆகும்.

ஆலயத்தின் படங்கள் 

1974 ஆம் ஆண்டு ஆலய சிவலிங்கத்தின் தோற்றம்
இன்று ஆலய சிவலிங்கத்தின் தோற்றம்


இன்று ஆலய சிவலிங்கத்தின் 

இன்னொறு தோற்றம்

இன்று ஆலய சிவலிங்கத்தின்
இன்னொறு தோற்றம்
இன்று ஆலய சிவலிங்கத்தின்
இன்னொறு தோற்றம்


இன்று ஆலய சிவலிங்கத்தின்
முன்னால் உள்ள நந்தி


பிலாவலி சிவன் ஆலய 

முகப்பு தோற்றம்


தனி சன்னதியில் உள்ள 

கால பைரவரின் தோற்றம்


தனி சன்னதியில் உள்ள இரட்டை
ஹனுமான் தோற்றம்


ஹனுமான் சன்னதி முகப்பு தோற்றம்


சாஸ்திர அடிப்படையில் சிவன் ஆலயத்தில்
தேங்காய் உடைப்பது தவறு என்ற அறிவிப்பு


வீர் தேஜாஜி

………தொடரும்