அது போலவே தன் மூலம் சாபம் விலகிய சிவஞான பாலசித்தரையும் இன்னும் ஐநூற்றாண்டு காலம் அங்கேயே தங்கி இருந்து கொண்டு வீர சைவ சித்த நெறியையும் பக்தி மார்கத்தையும் பரப்பிக் கொண்டும், சித்த முனிவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டும் இருக்குமாறு அருள் புரிந்தப் பின்னர் தமது மனைவிகளான தெய்வானை மற்றும் வள்ளியுடன் முருகப் பெருமான் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

சிவஞான பாலசித்தரும் அங்கு பல காலம் தங்கி இருந்து வீர சைவ நெறியை பரப்பி வந்த காலத்தில் அவருக்கு பக்தர்கள் குவிந்தார்கள். அவர்களில் ‘அம்மவை’ என்ற பெண்மணியும் அவரது கணவரும் அடக்கம். அந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி  பல காலம் வரை புத்திர பாக்கியமே இன்றி வருந்தி வந்தார்கள். ‘அம்மவை’க்குத் தனக்கு குழந்தையில்லையே எனற ஏக்கம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதனால் மன நிம்மதியாவது பெறலாம் என்றெண்ணி சிவஞான பாலசித்தரிடம் வந்து அவருக்கு தொண்டு புரியலானார்கள்.

சிவஞான பாலசித்தர், மற்ற மானிடர்களைப் போல சாதாரண உணவை உண்ணவில்லை. மாறாக தினமும் காலையில் கறந்து வந்த சதுர கள்ளிப் பாலை உணவாக அருந்துவார். தினமும் ‘அம்மவை’ சதுரக் கள்ளிப் பாலை எடுத்து வருவார். சிவஞான பாலசித்தர் அதை மட்டுமே பருகி வந்து கொண்டு இருந்தார். அத்தோடு சிறிது ஆவாரம் பூ கிடைத்தால் அதையும் சாப்பிடுவார். அவற்றைத் தவிர வேறு எதையும் உண்டதில்லை. சிவஞான பாலசித்தர் தம் வாழ்நாள் முழுவதும் பாலையே பருகினார் என்பதும், மக்களின் குறைகளை தன் திருநீறு ஒன்றினாலேயே குணப்படுத்தினார் என்பதும் அதிசயமான உண்மை ஆகும்.

உண்மையில் சதுரக் கள்ளி என்பது ஒருவித கள்ளிச் செடி. அதன் தன்மை எப்படிப்பட்டது என்றால் அதனுடைய பாலை ஈர அரிசியுடன் கலந்து வைத்தால் அரிசி வெந்து சாதமாகிவிடும். ஆனால் இது உண்பதற்கு உரியது அல்ல.  அத்தனை வீரியம் கொண்டது அந்த செடியின் பால் என்றாலும் அது பல மருத்துவக் குணங்களைக் கொண்டது. சதுரக் கள்ளிப் பாலை நீருடன் கலந்து திரியிட்டுக் கொளுத்தினால் விளக்கு எரியும் என்று சித்தர்கள் கூறுவது உண்டாம்.

எபோபோதும் போல ஒரு நாள் பாலைக் கறந்து சிவஞான பாலசித்தரின் எதிரில் வைத்துவிட்டு சோகமாக நின்றிருந்தார்கள் ‘அம்மவை’ தம்பதியினர். அம்மையின் மன எண்ண ஓட்டத்தை அறிந்து கொண்ட சிவஞான பாலசித்தர் தான் குடித்த பாலின் மிச்சத்தை அவளிடம் கொடுத்து அதை குடிக்கச் சொன்னார். ‘அம்மை’யும் மறுப்பேதும் கூறாமல் அந்த பாலை சிவஞான பாலசித்தர் கொடுத்த பிரசாதமாக ஏற்றுக் கொண்டு அதை ஆனந்தத்தோடு குடித்தார்கள். ஆச்சர்யமாக அடுத்த சில தினங்களிலேயே அந்த அம்மையார் கர்பமடைந்தார்கள். பத்து மாதத்தில் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தை சிவஞான பாலசித்தர் கொடுத்த பாலை உண்டு பிறந்ததால் சிவஞான பாலைய ஸ்வாமிகள் என்று பெயர் பெற்றது.

சிவஞான பாலசித்தர் தினமும் ‘அம்மை’ கொண்டு வந்த பாலை அருந்தும் பொழுது அவள் கையில் வைத்துக் கொண்டு இருக்கும் அந்தக் குழந்தையைப் பார்ப்பார். அதை பார்த்துக் கொண்டு இருக்கும்போதே சூட்சமமாக தம் சிவஞான சக்தியை அந்தக் குழந்தைக்கு செலுத்துவார். தினமும் குழந்தையும் ஸ்வாமிகளை பார்த்துக் கொண்டே இருந்ததினால் அதற்கு அவருடைய சக்தி கிடைத்து வந்தது. அதனால் குழந்தை ஆன்மீக எண்ணம் கொண்டு தெய்வீகத்தில் வளர்ந்தது. ஒரு நாள் சிவஞான பாலசித்தர் அந்தக் குழந்தையின் பெற்றோர்களிடம் கூறினார் ‘இந்தக் குழந்தையும் நான் கொடுத்த சதுரக் கள்ளிப் பாலின் மகிமையினாலேயே பிறந்த காரணத்தினால் என்னுடைய சீடப் பரம்பரையோடு சிவஞான பாலய தேசிகன் என பெயர் பெற்று வாழ்ந்து வரும்’.

அந்தக் குழந்தை வளர்ந்து பாலகனான பின் அவருக்கு  சிவஞான பாலசித்தர் ஞானாபதேசம் செய்து ஆச்சார்ய பீடத்தையும் ஏற்படுத்தினார். அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பி பிரம்மபுரத்திற்கு வந்து அங்கேயே சிறிது காலம் தங்கி இருந்து  தம்மிடம் வந்து கொண்டிருந்த பக்தர்களின் குறைகளை போக்கினார். அதன் பின்னர் தான் சமாதி அடைய வேண்டிய காலம் கனிந்து வந்ததை உணர்ந்து கொண்டவர் மீண்டும் மயூராசலம் சென்றார். அங்கு  தங்கி இருந்து சிவஞான யோகத்தில் ஆழ்ந்திருந்தபடி தான் சமாதி அடைய வேண்டிய நிலைக்கான முருகப்பெருமானின் கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.

 

அவர் எண்ணியது போலவே அங்கிருந்தவருக்கு வெகு விரைவில்  முருகப் பெருமானின் கட்டளைக் கிடைக்க  மயிலம் மலையில் முருகப்பெருமான் வீற்றுள்ள  சன்னிதானத்தின் தென்பகுதியில் இருந்த குகை ஒன்றில் ஆத்ம சமாதி அடைந்தார். அங்கு அமர்ந்திருந்தவர் அப்படியே வீபுதி லிங்க வடிவாகி விட்டதாக கூறுகிறார்கள். சிவஞான பால சித்தர் ஸ்வாமிகள் மொத்தம் 500 ஆண்டுகள்  பூவுலகில் வாழ்ந்திருந்தார் என்று நம்புகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலத்தில் உள்ள அவருடைய சமாதி பாண்டிச்சேரி சமாதிகளில் மேன்மையானது.  அவர் அருளை பெறுபவர்கள் பல நன்மைகளை அடைவதாக நம்புகிறார்கள்.

  மைலம் முருகன் ஆலயம்
 -முற்றியது-