நிற்க, அது நடந்த பல காலத்துக்கு முன்னரே சூரபத்ம யுத்தம் நடைபெற்றபோது சூரபத்மன் முருகப் பெருமானால் இரண்டாக பிளக்கப்பட்டு மரணம் அடைந்தான். மரணம் அடையும் தருவாயில் முருகனிடம் அவன் ‘நான் உமக்கு மயில் வாகனமாக அமைய வேண்டும்’ என வேண்டிக் கொண்டான். ஆகவே அவனிடம் நீ பொம்மபுரத்துக்கு மேற்கே உள்ள மயிலத்தில் மயில் உருவத்தில் ஒரு மலையாக இருந்தபடி என்னை நினைத்து தவம் புரிந்தால் உன்னை என்னுடைய மயில் வாகனமாக மாற்றிக் கொள்வேன் என்று முருகன் உறுதி கொடுத்தார்.

ஆகவே சூரபத்மனின் ஆத்மாவும் மயிலத்துக்குச் சென்று அங்கு மயில் உருவில் ஒரு மலையாக மாறி இருந்தபடி முருகனை வேண்டிக் கொண்டு கடும் தவத்தில் இருந்தது. சூரபத்மனின் கடும் தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த முருகனும் அவனை தனது மயில் வாஹனமாக ஏற்றுக் கொண்டார். அப்போது அவனுக்கு தோற்றம் தந்த முருகனிடம் சூரபத்மன் தான் மயிலாக இருந்த மலையில்  முருகன் தனது மனைவிகளோடு நிலையாக தங்கி இருக்க வேண்டும் என இன்னொரு வேண்டுகோளை வைக்க முருகனும் தக்க நேரத்தில் அவனுடைய ஆசையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்து இருந்தார்.

காலம் கடந்தது. அப்போது முருகனின் வாக்கு பலிதம் ஆகும் நேரமும் வந்தது. ஆனால் அதே சமயத்தில் அந்த காரியமும் சிவகணமான சங்குகன்னர் பூமியிலே சிவஞான பாலசித்தராக அவதரிக்கும் நேரத்தில் நடக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்த நாரதர் உடனடியாகக் கிளம்பி பால சித்தரிடம் சென்றார். பாலசித்தர் முன் தோன்றிய நாரதரும் பாலசித்தருக்கு சூரபத்ம யுத்தம் குறித்த கதையினை விவரமாகக் கூறிய பின்னர் மயிலத்தில் சூரபத்மன் மயில் உருவில் இருந்த மலை மீது சென்று அங்கு தவம் இருந்தால்  நீங்கி  சிவனருள் பெற முடியும் என்று கூறி விட்டு அங்கிருந்துக் கிளம்பிச் சென்றார்.

அதைக் கேட்ட சிவஞான பாலசித்தரும் சிவபெருமான் தனக்குக் கொடுத்திருந்த அருள்வாக்கை பெற்றிடும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்து கொண்டு, உடனடியாக மயிலம் மலைக்கு அருகில் சென்று அங்கிருந்த சுனைகளில் நீராடிய பின்னர் பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு சுமார் முப்பத்தி ஐந்து வருடங்கள் தவத்தில் இருந்தார். அவ்வளவு காலம் தவம் புரிந்தும் முருகப் பெருமான் தமக்கு அருள் புரியவில்லை என்பதினால் தவத்தை மேலும் கடுமையாக்கும் விதத்தில் பஞ்சாக்கினி எனும் நெருப்பு குண்டத்தில் இருந்தபடி தவம் இருந்தார்.  அப்போதும் முருகனின் அருள் அவருக்குக்  கிடைக்கவில்லை. அதற்கு வேறு காரணம் இருந்ததை அவர் உணர்ந்திருக்கவில்லை.

ஆகவே இனி முருகனை வேண்டுவதை விட அவரது மனைவிகளை வேண்டிக் கொண்டு தவம் இருக்கலாம் என முடிவு செய்த சிவஞான பாலசித்தர் அந்த தேவியர் இருவரையும் வேண்டி கடுமையான தவம் புரிந்தார். அவரது தவத்தின் நேர்மையைக் கண்ட முருகனின் மனைவிகளான தெய்வானை மற்றும் வள்ளி என்ற இருவரும் முருகனிடம் சென்று பால சித்தருக்கு அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டார்கள். முருகப் பெருமான் சங்குகன்னன் ஒரு சிவ அபராதி எனச் சொல்லி, அவருக்கு தரிசனம் தர மறுத்தார்.  அதற்கும் ஒரு காரணம் இருந்தது.

முருகனோ தன்னுடைய மனைவிகள் இருவரும் இந்த விஷயத்தில் தலையிடுவதை விரும்பாதது போல பாசாங்கு செய்து விட்டு அவர்களை தன்  விருப்பத்துக்கு மாறாக அவர்கள் தம்மை நிர்பந்திப்பதினால் அவர்களுடன் வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், ஆகவே இனி தன்னை விட்டு விலகிப்  போய் விடுமாறு கோபத்துடன் கூறினார்.  அப்போதுதான் அவர் சிவஞான பாலசித்தரின் சாப விமோசனத்துக்கான நடவடிக்கைகளை விதிப்படி எடுக்க முடியும் என்பதே அதற்கான உண்மையான காரணம்.

முருகன் தன்னை விட்டு விலகிச் சென்று விடுமாறு தெய்வானை மற்றும் வள்ளியிடம் கூறியதும் அவர்களும் பதிலுக்கு கோபமடைந்தார்கள். ஒரு பக்தரின் உண்மையான தவத்திற்கு மதிப்புத் தராமல் பாராமுகமாக முருகன் இருந்ததை அவர்களால் ஏற்க முடியவில்லை.  ஆகவே அவர்கள் கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி மானிட உருவெடுத்து தம்மை வேண்டிக் கொண்டிருந்த பாலசித்தரிடம் சென்று விட்டார்கள். அவரிடம் தாம் தேவலோகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தம் இருவரையும் அவருடைய மகள்களாக ஏற்றுக் கொண்டு தம்மை பாதுகாத்து வர வேண்டும் என்று வேண்டினார்கள். ஆனால் உண்மையில் தாம் யார் என்று கூறவில்லை. வந்துள்ளவர்கள் தெய்வ கன்னிகைகள் என்ற அளவில் அறிந்து கொண்டார் சிவஞான பாலசித்தர். ஆனால் அவர்கள் வள்ளி மற்றும் தெய்வானை என்பதை அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை என்பதும் விதியின் விளைவாகவே இருந்தது.

………….தொடரும்