இந்த பத்ரினாத்  தலத்தின் மகிமையைக் கூறும் இன்னொரு கதையும்  உண்டு.  அது என்ன? மகாபாரத யுத்தம் முடிந்து அனைவரும் ஊருக்குத் திரும்பினார்கள். பீஷ்மர், யுதிஷ்டர், தருமர், அர்ஜுனன் என அனைவரும் மறைந்து  விட்டார்கள்.  அவர்களின் சந்ததியினர் ஒவ்வொருவராக அரியணை ஏறிக் கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் பரீட்சித்து மன்னனின் மகனும், அர்ஜுனனின் பேரனுமான ஜனமேஜெயன் என்பவர் ஆட்சிக்கு வந்தார்.  அவர் அவ்வப்போது தானே தனக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டு அதனால் தவிப்பது உண்டு. தன் தந்தையைக் கொன்ற பாம்புகளின் வம்சத்தையே அழிக்க முடிவு செய்து சர்ப்ப யாகம் செய்து பாம்புகளை அழித்தார். நாக அரசன் தக்சகனையும் கொன்றபோது அவனது ராஜகுருவான அஸ்திகா என்பவரே அவனது வெறித்தனமான செயல்களை தடுத்து நிறுத்தி அவனுக்கு புத்திமதிகளைக் கூறி அதை தடுத்து நிறுத்தினார்.

ஜனமேஜெயன் அடிக்கடி யாகங்கள் மற்றும் வேள்விகளை செய்வது உண்டு. இந்தப் பழக்கம் அந்த கால ராஜாக்களுக்கு நிறையவே இருந்தது. இப்படி இருந்த நிலையில் ஒருமுறை ஜனமேஜயன் குருக்ஷேத்திரத்தில்  ஒரு பெரிய யாகத்தை  நடத்திக் கொண்டு இருக்கையில்  அங்கு ஒரு நாய்க்குட்டி வந்து விட அதைக் கண்டு கோபமுற்ற அவரது சகோதரர்கள் அதை அடித்து காயப்படுத்தி விரட்டினார்கள். வந்திருந்ததோ ஒரு  தெய்வீக பெண்  நாய். ஒரு சாபத்தின் காரணமாகவே அது பூமியிலே பிறந்து இருந்தது. அந்த தெய்வீகத் தன்மையின் காரணமாகவே அதுவும் யாகத்தினால் ஈர்க்கப்பட்டு யாகம் நடந்த இடத்துக்கு வந்து நின்றிருந்தது. அது எந்த விதத்திலும் யாகத்தின் புனிதத் தன்மை குறையும் வகையில் நடந்து கொள்ளவில்லை. தூரத்தில் நின்றிருந்தே யாகத்தை நோக்கியவாறு  இருந்தது.

 
 ஆனால் அதைப் புரிந்து கொள்ள முடியாத ஜனமேஜயனின் சகோதரர்கள் யாகம் நடக்கும் இடத்தில் ஒரு நாய் நுழைவதா என சினம் கொண்டு அதை அடித்து விரட்டினார்கள். இதில் வேதனை என்ன என்றால் நடந்த  நிகழ்ச்சி எதுவுமே ஜனமேஜயனுக்குத் தெரியாது என்றாலும் ஒரு யாகம் நடக்கும்போது, அந்த யாகத்தில் பங்கு பெரும் குடும்பத்தினர் அனைவருமே அதன் தீய மற்றும் நல்ல விளைவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது நியதி.  ஆகவே எக் குற்றமும் செய்யாத தெய்வீக பெண்ணான நாய் குட்டியை அடித்து விரட்டியது ஜனமேஜயனுக்குத் தெரியாமல் அவனது சகோதரர்களால் நடந்து இருந்தாலும், நடந்த நிகழ்ச்சி அவன் யாகம் செய்த  பூமியில் அவன் இருந்தபோதே நடந்ததினால் அவனை அறியாமலேயே அவனுக்கு ஒரு பெண்ணாலேயே தீமை ஏற்படும், வாழ்வில் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற சாபம் ஏற்பட்டது.

ஆனால் அது குறித்து ஜனமேஜயன் அதிகம் கவலைக் கொள்ளவில்லை என்றாலும் அதற்குப் பரிகாரமாக தான தர்மங்களை செய்தும், புனித யாத்திரைகளை மேற்கொண்டும் பரிகாரங்களை செய்து கொண்டு இருக்கையிலேயே அடுத்து சர்ப்ப நாச யாகத்தை நடத்தி இன்னொரு தவறை செய்தார்.  ஒன்றன் பின் ஒன்றாக நடந்து முடிந்த நிகழ்ச்சிகள்  ஜனமேஜயனின் மனதை பெரிதும் பாதித்தது.  தவறான முடிவில் எடுக்கப்பட்டு செய்த சர்ப்ப நாச யாகமும் அதன் விளைவால் அவருக்கு ஏற்பட்ட சாபமும் கூட ஒரு தெய்வீக பெண் நாயை காயப்படுத்தியதினால் விளைந்த கேடோ என அஞ்சினார்.  ஏற்கனவே அடிபட்ட பெண் நாயின் தாய் கொடுத்த சாபத்தினால் அவனது ஆன்மீக பலமும்  குறைந்திருந்தது.

ஆகவே மனம் வெதும்பி இருந்த ஜனமேஜயனும் சர்ப்ப நாச யாகம் நடந்து முடிந்ததும் புரோகிதர்களை அழைத்து தான் என்ன பரிகாரம் செய்தால் அடுத்தடுத்து  செய்யும் தவறினால் ஏற்படும் துயரங்கள் விலகும் என்று கேட்டார். அவர்களும் அது குறித்து வியாச முனிவரிடம் சென்று ஆலோசனைக் கேட்குமாறு கூற  வியாச முனிவரிடம் சென்றார். அவரிடம் தனது மனத் துயரத்தைக் கூறினார்.

வியாச முனிவரோ  தன்னிடம் வந்த ஜனமேஜயனை பார்த்து சிரித்தபடிக் கூறினார்  ‘ஜனமேஜயா, நடக்க இருப்பதை  அதாவது  நம் விதியை சந்தித்தே ஆக வேண்டும். அதை யாராலும் தடுக்க முடியாது. அப்போதுதான் இந்த ஜென்மத்திலேயே நம் பாவங்கள் அகன்று அடுத்த ஜென்மத்தில் நம்மை அந்த சாபங்கள் நம்மைத் தொடராது இருக்கும். உன் சகோதரர்கள் செய்த பாவத்திற்கு நீ அனுபவிக்க வேண்டி  உள்ளது என்பது  உன் விதி. அதுவே இன்னமும் தொடர்கிறது.  உனக்கு விரைவில் இன்னொரு தோஷம் ஒன்று பிடிக்க உள்ளது. எச்சரிக்கையாக இரு. அதன் பின் உன் துயரம் நீங்கத் துவங்கும்’ என்று கூற  ‘இதென்ன கூத்து, ஒன்று மாற்றி ஒரு பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே உள்ளதே’ எனக் கலங்கிய ஜனமேஜயன் அதிர்ந்து போனார்.  வியாசர் அப்படி என்ன கூறினார் ?
………தொடரும்