கிராம தேவதைகளும் 

நகர தெய்வங்களும் -4
(வழிபாட்டுத் தலங்கள் தோன்றிய  வரலாறு  ) 

-சாந்திப்பிரியா-

நான் முன்னரே எழுதியது போல கிராமப்புறங்களில் இருந்த மக்களினால் வணங்கப்பட்டு வந்திருந்த தெய்வங்கள் அதாவது சுடலை மாடன் (பார்வதியினால் மயானத்தில் படைக்கப்பட்டவர் என்பது கதை) , ஐய்யனார், இசக்கி அம்மன், மாரி அம்மன் முதல் வினாயகர், முருகன், வள்ளி போன்றவர்கள் பிற்காலத்தில் படித்தறிவு பெற்று நகர்ப்புறங்களுக்கு சென்று குடி அமர்ந்த கிராம மக்களின் குல தெய்வம் ஆயினர். இன்னொன்றையும் கவனியுங்கள். ஆகம வழிபாட்டு முறையிலான ஆண் தெய்வங்களில் கூட வெங்கடாசலபதி, முருகன் மற்றும் வினாயகரை தவிர அதாவது ஒரு குடும்பத்தில் ஆண்டாண்டு காலமாக அவர்களுடைய மூதையார்கள் தொடர்ந்து வழிபட்டு வந்திருந்த ஆலய தெய்வம் வெளி இடங்களுக்குச் சென்று குடி அமர்ந்த அந்த குடும்பத்தை சார்ந்த சந்ததியினரால் குல தெய்வமாக ஏற்கப்பட்டது. அதில் ஒரு விசேஷம் என்ன என்றால் ஒரு கட்டத்தில் பல கிராம ஆலயங்கள் ஆச்சாரமான பிராமண குடும்பங்களை சேர்ந்தவர்களினால் கூட வணங்கப்பட்டு வந்திருந்த ஆகம விதிப்படி பூஜிக்கப்படாத ஆலயமாகவும் இருந்துள்ளது. ஆகம விதிப்படி பூஜிக்கப்படாத அதே கிராம ஆலயங்கள்தான் பிற் காலத்தில் ஆகம விதிப்படி பூஜைகளைக் கொண்ட ஆலயங்களாக மாறி உள்ளன.

இவற்றில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு கட்டத்தில் கிராம தேவதைகள் என கருதப்பட்ட தெய்வங்கள் பின்னர் ஆகம தெய்வங்களாக ஏற்கப்பட்டார்கள். கிராம தேவதை ஆலயங்களிலும் பொதுவாக பெண் தெய்வங்களையே அதிகம் வணங்கி உள்ளார்கள். அதற்குக் காரணம் ஒருவருக்குத் தேவையான அனைத்தையும் அன்பையும் தருபவள் ஒரு தாயார் என்ற பொதுவான காரணமே. இன்னொன்று என்ன என்றால் தெய்வீக சம்மந்தமான பல கதைகளையும் படித்தால் பெரும்பாலான அரக்கர்கள் மற்றும் அசுரர்களையும் அழித்தவர்கள் பெண் உருவில் இருந்த தெய்வங்களே என்பது புரியும். ஆகவே அசுரர்களையும், அரக்கர்களையும் அழிக்கச் சென்ற பெண் தெய்வங்களுக்கு யுத்தத்தில் உதவியாக இருக்க அவர்களது உடலில் இருந்து வெளி வந்த படையினர் பெரும்பாலும் பெண் கணங்களே. இதனால்தான் விட அதிக தெய்வங்கள் பெண்களாகவே இருந்துள்ளன. இதனால் பெண் தெய்வங்களுக்கே கிராமங்களிலும் அதிக ஆலயங்கள் அமைந்துள்ளன. அவை அனைத்துமே அம்மன் ஆலயங்களாக இருந்துள்ளன. அதற்கும் மேலே ஒரு படி போனால் இன்னொரு உண்மை புரியும். இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவள் பெண் தெய்வம் என்பதான நம்பிக்கை உள்ளது. மேலும் முக்கியமான மந்திர வழிபாட்டு வழிமுறையைக் பாருங்கள். அவற்றில் சுமார் 90 சதவிகிதம் பெண் தெய்வங்களின் ஆராதனைகளாகவே இருக்கும். ஆகவே ஆண் தெய்வங்களை விட பெண் தெய்வங்களையே சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதி உள்ளார்கள். அதனால்தான் பலருடைய குலதெய்வம் என்பது பெண் தெய்வமாகவே இருந்துள்ளது.

இன்னொரு காரணம் பொதுவாகவே ஒவ்வொருவருடைய வீட்டிலும் உள்ள பெண்கள் அதிக பூஜை போன்ற வழிபாடுகளைக் கொண்டுள்ளார்கள். தமக்கு தாலி பாக்கியம் வேண்டும், குழந்தை வேண்டும், ஊரில் மழை பொழிய வேண்டும், நோய் பரவக் கூடாது, என்றும் பெரும்பாலும் பராசக்தியின் அம்சங்களையே வேண்டிக் கொண்டதினால் அவர்கள் சக்தியின் ஆலயங்களுக்கு செல்லத் துவங்கினார்கள். தொடர்ந்து சக்தி ஆலயங்களுக்கே அவர்கள் சென்று கொண்டு இருந்ததினால் சக்தியே அவர்களுடைய குல தெய்வம் ஆயிற்று. சக்தி என்பது பலதரப்பட்ட அம்பிகைகள், அம்மன்களை உள்ளடக்கியது. . மேலும் முன்னர் இருந்த நிலப்பரப்புக்கள் பெரும்பாலும் கிராமங்களே என்பதாலும், கிராமங்களில் இருந்த கிராம மக்கள் அம்மன் போன்ற பெண் தெய்வங்களையே ஆண்டாண்டு காலம் பெரிதும் வணங்கி வந்தார்கள் என்பதினாலும் பெரும்பாலான குடும்பங்களில் குல தெய்வமானது பெண் சம்மந்தப்பட்ட தெய்வமாகவே- அதாவது அம்மன் சம்மந்தப்பட்டதாகவே இருந்துள்ளது என்பதே உண்மை நிலை. ஆகவேதான் ஆண் தெய்வத்தை குல தெய்வமாக ஏற்று இருப்பது மிகவும் குறைவானதாகவே இருந்துள்ளது.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். கிராமப்புறங்களில் எந்த காலத்திலுமே ஆண் தெய்வங்களுக்கு அதாவது சிவன், விஷ்ணு, பிரும்மா, கிருஷ்ணர், ராமர் போன்றவர்களுக்கு அதிக வழிபாட்டுத் தலங்கள் இருந்ததில்லை. அப்படி இருந்தாலும் அங்கெல்லாம் அம்பிகை சன்னதிகளும் இருந்துள்ளன. அதற்கும் காரணம் அந்த ஆண் தெய்வங்களைப் படைத்ததும் சக்தியே என்பதாகும். ஆகவே அம்மன் மற்றும் அம்பிகைகளுக்கே பக்தர்கள் பெரும்பாலும் முக்கியத்துவம் தந்துள்ளனர். சிவாலயங்களில் வழிபாடுகள் சிவலிங்கத்துக்கு அதிகம் இருந்தாலும் சிவலிங்கத்தை சக்தி-சிவன் என்ற தத்துவத்தில் பார்த்ததினால் அங்கும் அம்பிகைகளே அதிக முக்கியத்துவம் பெற்றார்கள். மேலும் வம்சம் விருத்தி அடைய வேண்டும் என்றால் பெண்கள் மூலமே அது நடக்கும் ( கர்ப்பம் அடைந்து குழந்தைகளைப் பெற்றெடுப்பது என்பதே இதன் பின்னணி) என்பதினாலும் பெண் தெய்வங்களே முக்கியத்துவம் பெற்றார்கள். இப்படியாக பல விதங்களிலும் பெண்களே முக்கியத்துவம் பெற்று இருந்ததினால் ஆண் தெய்வங்களை விட பெண் தெய்வங்கள் அதிக முக்கியத்துவம் பெற்று இருந்தன. அதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை என்பதாக ஒரு பண்டிதர் கூறினார்.

குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.தங்களுக்குள் வழிகாட்டியாய் விளங்கி, வாழ்ந்து மறைந்த முன்னோர்களையோ, கன்னியாக இருந்த நிலையில் வாழ்ந்து மறைந்த பெண்களையோ, தங்களின் வீட்டுத் தெய்வமாக வழிபடும் மரபு காணப்படுகிறது. இது பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். இதனை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், வாழ்வரசி என்று கூறுவதுண்டு.

முடிவாக கிராம தேவதைகள் அல்லது காவல் தெய்வங்களும் நகர தெய்வங்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவைதான். அதாவது அனைவரும் தெய்வீக நிலையில் உள்ளவர்கள். அவற்றில் சிலர் ஆகம வழி முறையில் வழிபடப்பட்டவர்கள். சிலர் ஆகம முறையில் வழிபடப்படாதவர்கள். சிலர் தெய்வங்களில் முதன்மை தெய்வம். சிலர் தெய்வீக கணங்கள், சிலர் பரிவார தேவதைகள். இதுவே உண்மை நிலை.

கிராம தேவதைகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது தெரியுமா?

ஆண் தேவதைகள் அல்லது காவல் தெய்வங்கள் :-
கருப்பசாமி, சுடலை மாடன், கருப்பண்ணசாமி, காத்தவராயன், பெரியாண்டவர், முனீஸ்வரன், ஐயனார், பெரியசாமி, பெரியண்ண ஸ்வாமி , மலையாள கருப்பு, கொல்லி மலை கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு, ஒண்டிக் கருப்பு, சங்கிலி கறுப்பர், பனையடி கருப்பு, கூத்தாண்டவர், சமயக் கருப்பசாமி, கழுவடியான், இருளப்ப சாமி, மாடசாமி, உத்தாண்ட சாமி, எல்லைக் கறுப்பு, மாதேஸ்வரர், மகாலிங்கா, ராஜவாயன், மதுரை வீரன், மாகா முனி, லாட சன்னாசி, வீரபுத்திர ஸ்வாமி, ஆந்திரமுடையார், சிதம்பர நாடார், தாடி வீரசாமி, பொன்னர், தூண்டி வீரன், கொன்றையாண்டி, வேம்புலி ஐயனார், மருது ஐயனார், விருமாண்டி, சீவலப்பேரி சிங்காரம், கலியாண்டி ஐயனார், சமணமலை ஐயனார், சிறை மீட்ட ஐயனார், குளத்து அய்யனார் , வீர முத்து ஐயனார், பிராண்டி ஐயனார், வீர பயங்கர ஐயனார், வீரப்பிள்ளை ஐயனார், இருளப்பர், காவல்காரன், நொண்டிக் கருப்பு, பாவாடைக்காரன், கிளுகிளுப்புக்காரன், மண்டக் கருப்பு போன்றவர்கள்.

பெண்களில் காவல் தெய்வம் அல்லது கிராம தேவதைகள் :-
மாரியம்மா, மரம்மா, காளியம்மா, கங்கம்மா , சௌடம்மா , பொலிமேரம்மா, கிகிரம்மா, வெங்கலியாம்மா, மரியம்மா, மைசம்மா, ஐடம்மா, பொசம்மா, எல்லம்மா , சீதலதேவம்மா, எட்டுகை அம்மன், கொல்லிப் பாவை, பாப்பாத்தி, கருப்பாயி, பாலம்மா, பத்ரகாளி, பூலங்கொண்டாள் அம்மன், பொன்னிறத்தாள் அம்மன், அங்காள பரமேஸ்வரி, கன்யகலம்மா, மந்தராலம்மா, ஜம்புலம்மா, ஜனம்மா, நண்டையலம்மா, திரௌபதம்மா, அன்னம்மா, கௌரம்மா , கேலுவலம்மா, பெரண்டலம்மா, நீலி, பைரவி, மாடச்சி, அம்மாச்சி, பேராத்துசெல்வி, தளவாய்பேச்சி, பூங்குறத்தி, பெத்தம்மா, மஞ்சலம்மா, மலசிசெம்மா, பகவடல்லி, மன்கலியம்மா, கோனியம்மா, துர்கம்மா, பப்பம்மா, சுன்குலம்மா, அங்கம்மா, திருபதம்மா, அன்காரம்மா, மாரியம்மா, விழியம்மா, கெம்பம்மா,தீப்பாச்சி அம்மன் , இடைச்சியம்மன், கிச்சம்மா, தொட்டிச்சி அம்மன், பூலம்மா, சப்தகன்னிகை, துர்க்கை, உடலம்மா, உக்கிரமாகாளி, உச்சினமாகாளி, வாசுகோடி, ஈலம்மா, வானமாலம்மன், பேச்சியம்மன் போன்றவர்கள்.

கட்டுரை முடிவுற்றது