சூதகர் கூறலானார் ” முனிவர்களே இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றால் ஒன்றை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கடவுளும் நம்மைப் போன்ற சாதாரண உருவத்தைக் கொண்டவர்கள் அல்ல. அவர்களுடைய உருவம் தற்காலத்தில் உள்ளது போல ஆறு அடி, ஏழு அடி என்பதல்ல. அவர்கள் சாதாரண மனிதர்களும் அல்ல. ஒவ்வொரு தேவ மனிதரும் அசாதரணமான உருவங்களைக் கொண்டு இருந்து உள்ளார்கள். குறிப்பாக மும்மூர்த்திகள் பிரும்மாண்டமான உருவைக் கொண்டவர்கள். அவர்களுடைய உருவம் ஆகாயம் முதல் பூமி வரை படர்ந்து இருக்கும். அவர்களால் எந்த அளவிலும் தம்முடைய உருவை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.  பல கடவுட்கள் நான்கு கைகள், எட்டுக் கைகள் மற்றும் பன்னிரண்டு கைகளைக் கொண்டவர்கள். ராவணனே பத்து தலைகளைக் கொண்டவன் என்றெல்லாம் புராணங்கள் வர்ணிக்கும்போது அப்படிப்பட்ட உருவங்களை சாதாரண உருவம் கொண்ட மனிதர்களால் பெற்று இருக்க முடியுமா? பிரும்மாவுக்கும் விஷ்ணுவிற்கும் காட்சி தந்த சிவபெருமானின் தலை தேவலோகத்தில் இருக்க அவர் கால்களோ பாதாளத்தில் இருந்ததாக புராணக் கதை இல்லையா ? கிருஷ்ணர் காட்டிய விஸ்வரூப தரிசனத்தில் அனைத்து கோள்களும், ஆயிரம் கோடி தேவர்களும் இருந்தார்கள் எனும்போது அது எந்த அளவு பரந்து விரிந்து  இருக்கும் என்பதை எண்ணினால் நீங்களே அந்த உருவத்தின் அளவை எண்ணிப் பார்க்காலாம். அப்படி என்றால் தேவ மனிதர்களான அவர்கள் சாதாரண உருவங்களைப் படைத்தவர்களாகவா இருந்திருப்பார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
 சூதகர்  திருப்பூவண  மகிமைகளை 
தொடர்ந்து கூறினார்  

இதை விளக்க சில கடவுட்கள்  சிவபெருமானை வேண்டி சாப விமோசனம் பெற்ற  நிலையை  ஒரு உதாரணமாகக் கூறுகிறேன்.  பலருக்கும் தரிசனம் கொடுத்த மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான்  முன்னர் பரத பூமி  எனக் கூறப்பட்ட இந்த    இந்த புண்ணிய பூமிக்கு  வந்தபோது அவருடைய  உருவம் ஒரு கோடியில்  இருந்து மறு கோடிவரை பரவி இருந்தது. அவரிடம்  ஒரு குறிப்பிட்ட சாபத்தை நீக்கிக் கொண்டு  சாப விமோசனம் பெற வந்த விஷ்ணு, திருமால், சூரியன், சந்திரன், சனீஸ்வரர் போன்றவர்கள்  அவரை  சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தவாறு  பல இடங்களிலும்  அமர்ந்து கொண்டு பூஜைகளை செய்தபோது அந்த இடங்கள் சிவபெருமான் அருள் புரிந்த புண்ணிய தலங்கலாயின. அவற்றில் பிற்காலத்தில் ஆலயங்கள் எழுந்தபோது   அந்த ஆலயங்கள் அனைத்துமே குறிப்பிட்ட சாப விமோசனம் கொடுக்கும் ஆலயங்களாக  இருந்ததாக  வரலாறு அமைந்தது.   அதனால்தான் உங்களுக்கு  இந்த சந்தேகம் வந்துள்ளது.  ஆகவே  ஒரு குறிப்பிட்ட சாபத்துக்கு சாப விமோசனம் பெற அந்த ஆலயங்களில் எதில்  ஒன்றில் சென்றாலும்  சாப விமோசனம் கிடைக்கும் என்பதே உண்மை.  அதற்குக் காரணம்  ஒவ்வொரு ஆலயத்துக்கும் தனி மகிமை என்பது இருக்கும் என்பது உண்மை என்றாலும், அதற்கும்  காரணம் அந்த பூமி பெற்று இருந்த தன்மை.
அதாவது அந்த ஆலயங்கள் அனைத்தும் உள்ள இடங்களை தழுவியவாறு பரவி நின்றிருந்த  சிவனை  சுற்றி வலம்  வந்த கடவுட்கள் ஒவ்வொரு இடத்திலும் அமர்ந்து கொண்டு பிரார்த்தனைகளை செய்தபோது அந்தந்த இடங்களில் அவர்கள் ஓதிய  பூஜை  மந்திரங்கள், ஹோமத்தில் விழுந்த மந்திரங்கள் போன்றவை அந்தந்த இடங்களில்  சில சக்திகளை பெருக்கிற்று. ஒவ்வொரு மந்திரத்துக்கும் தனி சக்தி உண்டல்லவா. ஒவ்வொரு சாப விமோசன பிரார்த்தனை  செய்தபோதும்  அதை செய்தவர்கள்  அஷ்ட திக்குகள் எனப்படும் எட்டு திக்குக்களிலும் சென்று அமர்ந்து பூஜைகளை செய்து வலம் வந்தனர். அப்படி வலம் வந்தபோது அவர்கள் செய்த சக்தி வாய்ந்த பூஜைகளும், ஓதிய சக்தி மிக்க மந்திரங்களும்  அந்த இடங்களின் சக்திகளை பெருக்கின. அதனால்தான் அந்த பூமிகளில்  பிற்காலத்தில் எழுந்த ஆலயங்கள் சக்திகளில் வேறுபட்டு இருந்தது என்றாலும், அந்த அனைத்து ஆலயங்களுமே குறிப்பிட்ட சாப விமோசனம் கொடுத்த  ஆலயங்களாக இருந்துள்ளன. ஆகவே அப்படி சாப விமோசனம் கொடுத்த ஆலயங்களில் எது உண்மையான ஆலயம், எது சிறந்த ஆலயம்  என்ற சந்தேகத்தை  எழுப்புவதோ நினைப்பதோ  தவறானது ” என்றார்.

சிறு விளக்கம் 
சூதகர் கூறியதை சரிவரப் புரிந்து கொள்ள அதை  ஒரு உதாரண படத்துடன் சற்று விளக்க வேண்டி உள்ளது.   இது ஒரு உதாரணமே. முன் காலத்தில் பாரதம் என்பது ஒரே பூமியாக அதாவது இலங்கைவரை ஆசியாவின் பல பகுதிகளை கொண்ட தரை பகுதியாகவே இருந்துள்ளது.  ஒரே பூமியாக இருந்த அவை அனைத்தும் பிற் காலத்தில் கால கோளாறினால் பிளந்து தனித் தரை ஆயின.   கடவுட்களின் உருவம் தற்கால மனிதர்களைப் போன்றதன்று.  அவர்கள் ஆகாயத்துக்கும் பூமிக்கும் பரவி  உள்ள பெரும் உருவைக் கொண்டவர்கள். ஆகவேதான் அவர்கள் அமர்ந்தாலோ அல்லது நின்று கொண்டு இருந்தாலோ அந்த உருவத்தின் அளவு தென் இந்தியாவின் கன்யாகுமரியில் இருந்து இமயமலை அளவுக்கும், பங்களா தேசத்தில் இருந்து பாகிஸ்தான் வரையிலுமான அளவில் பரவிய வகையில் சர்வசாதாரணமாக விஸ்வரூபமாக இருக்கும். இல்லை சிலருடைய உருவம் சற்றே சிறியதாகவும் இருந்திருக்கும்.   
அப்படிப்பட்ட நிலையில் ஒரு குறிப்பிட்ட சாப விமோசனம் தர பூமிக்கு சிவபெருமான் வந்ததாக  உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.  அப்படி வந்த போது பெரும் உருவத்தைக்  கொண்ட கடவுளான  சிவபெருமானின் கால் கன்யாகுமரியில் பதிந்திருக்க  ஒரு கை குஜராத் பகுதிவரை நீண்டு இருக்க மறு கையோ கல்கத்தா வரை நீண்டு இருக்கும்.  தலைப் பகுதியோ  ஹிமாசலப் பிரதேசத்தை தொட்டபடி இருக்கும். அப்படி அவர் நின்று கொண்டு இருக்கையில்  சாப விமோசனம் பெறுவதற்கு அவரை சுற்றி வலம் வந்தவர்கள் ஒருமுறையும்  வலம் வந்து எடுத்து வைக்கும்  ஒவ்வொரு அடியும் பெரும் தூரத்தைக்  கடக்கும் அளவில் இருக்கும். அதாவது கன்யாகுமரியில் நின்றிருந்த அவர்கள் வலம் வரத் துவங்கியதும் கன்யாகுமரியில் இருந்து எடுத்து வைக்கும் அடுத்த காலடி கோவா, மகாராஷ்டிரா, குஜராத், அடுத்து   உத்திரப்பிரதேசம்,  ஒரிஸ்ஸா என பல இடங்களிலும் ஒன்று ஒன்றாகப் பதியும்.   அங்கெல்லாம் அவர்கள் செய்த பூஜைகள் மற்றும் ஓதிய மந்திரங்கள் அந்தந்த பூமிக்கு  சிறப்பு சக்தியை தந்தன.  அப்படி வலம் வந்தவர்கள்  அனைத்து இடங்களிலும் அதாவது எட்டு திக்குக்களிலேயே அமர்ந்தார்கள் என்பதல்ல இதன் பொருள். அவர்கள் சில இடங்களில் அமர்ந்து பூஜித்திருக்கலாம். சில இடங்களை தவிர்த்து இருக்கலாம். ஆகவே  எட்டு திக்கிலும் அவர்கள் அமர்ந்து இருக்க வேண்டும் என்பதும் சரி அல்ல.  ஒரு குறிப்பிட்ட சாப விமோசனம் பெற அவர்கள் வலம் வந்த எட்டு திக்குக்களில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டுமே அவர்கள் ஹோமம், பூஜை போன்றவற்றை  செய்து இருப்பார்கள். பிற்காலத்தில் அங்கெல்லாம் எழுந்த  இரண்டு அல்லது மூன்று ஆலய வரலாற்றிலும்  அந்த  ஆலயங்கள்  சிவபெருமாணினால் சில கடவுட்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாப விமோசனம் கொடுத்த ஆலயங்களாக  கூறப்பட்டன.   அந்தக் கடவுட்கள்  சாப விமோசனம் பெற்றது ஒரே ஒரு முறைதான் என்றாலும் சில திக்குக்களில்  அவர்கள் அமர்ந்திருந்து பூஜித்த இடங்களே பின்னர் சாப விமோசனம் கொடுத்த ஆலயங்களாக மாறின.   

இதற்கு இன்னொரு உதாரணம்.  ராமபிரான் தமது பிரும்மஹத்தி தோஷத்தை தொலைத்துக் கொள்ள ராமேஸ்வரம் சென்று சிவனை வழிபட்டதாகவும், அதே காரணத்துக்காக கூத்தனூரில் உள்ள  திலதர்ப்பண பூமி எனும் ஆலயத்துக்கும் வந்து  சிவனை ஆராதித்து அதே தோஷத்துக்கு சாப விமோசனம் பெற்றதாகவும் புராணக் கதைகள் உள்ளது.   இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால்  சிவபெருமான் தரிசனம் கொடுத்தபோது  அவர்  உருவம் ராமேஸ்வரத்தில் இருந்து மாயவரத்துக்கு செல்லும் வழியான கூத்தனூர் வரை பரவி இருந்திருக்க அவரை சுற்றி வலம் வந்த ராமர் ராமேசவம் இருந்த இடத்திலும், திலதர்ப்பண  பூமி இருந்த இடத்திலும் பூஜைகளை செய்துள்ளார். பிற்காலத்தில் அங்கு ஆலயங்கள் எழுந்தபோது   அந்த இரண்டு இடங்களில் உள்ள ஆலயங்களில் ராமர் வந்து பூஜை செய்து சாப விமோசனம் பெற்றதாக  புராணக் கதைகள் எழுந்துள்ளன.  ஆனால் ராமபிரான் பிரும்மஹத்தி தோஷத்தை தொலைத்து சாப விமோசனம் பெற்றது  ஒரே  ஒரு முறைதான் என்றாலும் ஆனால் அப்போது ராமர் வலம் வந்த இடங்களில் இரண்டு இடங்களில் பூஜைகளை செய்திருக்க அங்கு ஆலயங்கள் தோன்றி உள்ளன. இதுவே மற்றவர்கள் சாப விமோசனம் பெற்றதாக கூறப்படும் அனைத்து ஆலயங்களின் நிலையும். கீழுள்ள மாதிரிப் பட அமைப்பு    இந்த விளக்கத்தை மேலும் தெளிவாக்கும்  —சாந்திப்பிரியா }

சிவபெருமானின் தோற்றம்  (உருவ அமைப்பு) .
அவரை சுற்றி எட்டு திக்கிலும் வலம் வந்த  
கடவுட்கள்  சில  இடங்களில் செய்ததாக 
நம்பப்படும் பூஜைகள், ஹோமங்கள் நடந்த இடங்கள்
இது ஒரு விளக்கப்  படமே .சாந்திப்பிரியா }
சிவபெருமானின் தோற்றம்  (உருவ அமைப்பு) .
அவரை சுற்றி எட்டு திக்கிலும் வலம் வந்த கடவுட்கள்  
பாதம் பதித்த  அனைத்து இடத்திலும்  ஆலயம் எழவில்லை. 
அவர்கள் எங்கெல்லாம் அமர்ந்து பூஜைகளை 
செய்தார்களோ அந்த இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டுமே  
ஆலயங்கள் எழுந்துள்ளன. அவை  குறிப்பிட்ட சாப விமோசனம் 
தந்த இடங்களாயின.  ஆனால் உண்மை என்ன என்றால்
 சாப விமோசனம் கிடைத்தது ஒரே முறைதான். அந்த ஒரு முறையில்   
அவர்கள் பூஜித்த இடங்களில் எழுந்த மூன்று ஆலயங்கள்  
சாப விமோசனம்  கொடுத்த ஆலயங்களாகக்  கருதப்பட்டன  .சாந்திப்பிரியா }

 
…………….தொடரும்