சூதகர் கூறி விட்டு கதையை தொடரலானார். ”திருமால் அமிர்த கலசத்தை எடுத்துக் கொண்டு சென்றபோது அதில் இருந்து மூன்று இடங்களில் அமிர்தம் விழுந்தது. அதில் ஒன்றே திருப்பூவணம் ஆகும்.  விஷ்ணுவின் கலசத்தில் இருந்து விழுந்த அமிர்தம் மணி மணியாக இந்த தீர்த்தத்தில் விழுந்ததினால்தான் இதன் பெயர்   மணி கன்னிகையென்று ஆயிற்று. அமிர்தம் விழுந்ததினால்தான் இந்த தீர்த்தத்தில் ஆயிரம் கோடி தேவர்களும் முனிவர்களும் வசிக்கிறார்கள் என்பது ஐதீகம். (இந்த தீர்த்தம் தற்போது காணப்படவில்லை.  அது எதோ சில காரணங்களினால்  மூடப்பட்டு விட்டதோ என்று கருத வேண்டி உள்ளது.   ஆனால்  அம்மன் ஆலயத்தின் அக்னி திசையிலே ஒரு சிறு கிணறு உள்ளது. அதுவே மணி கன்னிகை தீர்த்தத்தின் ஒரு பகுதி என்று கருதப்படுவதினால்  அதில் இருந்தே தண்ணீரை எடுத்து  தலையில் ப்ரோட்ஷனம்  செய்து கொள்கிறார்கள்- சாந்திப்ரியா) மணி கங்கையின் புனிதத் தன்மை வந்ததின் காரணம் இங்குதான் பாரிஜாதப் பூக்களை  தூவி சிவனை வழிபட்டதினால்தான் பார்வதி சாப விமோசனம் பெற்றாள்.
இந்த தலத்திலே சிவலிங்கங்கள் வந்து கூடி இந்த தீர்த்தத்திலே குளித்தமையால்  அது மேலும் புனிதம் அடைந்தது. ஆகவேதான் தெரிந்தோ தெரியாமலோ இந்த தீர்த்தத்தில் ஒருநாள் குளித்தாலும் நம் பாபங்கள் அகலும் என்பார்கள்.  குளிக்கும்போது அங்கு ஆறெழுத்து சிவ மந்திரத்தை உச்சரித்தால் மேலும் புண்ணியம் கிடக்கும் என்பார்கள். ஆயிரம் பசுக்களை கங்கைக் கரையிலோ அல்லது காவிரி தீர்த்ததிலோ தானம் செய்வதினால் கிடைக்கும் பலனை விட அதிக பலன் இந்த தீர்த்தத்திலே குளிப்பவர்கள்  பெறுவார்கள் என்பதின் காரணம் சிவலிங்கங்கள் அனைத்தும்- அதாவது சிவபெருமானின் மாய அவதாரங்கள் இங்கு வந்து குளிப்பதினால் இங்குள்ள தண்ணீர் பல ஆயிரம் கோடி புனிதம் அடைகிறது. சுய அறிவுடனோ அல்லது அறிவின்றியோ ஒரு கணப் பொழுதாவது திருப்பூவணத்தில் வசித்தால் சிவ உருவம் பெறுவர், ஒரு மரக் கிளையையோ, பழத்தையோ இங்குள்ள சிவபெருமானுக்கு அபிஷேகப் பூஜையில் கொடுப்பார்களோ அவர்கள் முத்தி அடைவர். இந்த  தீர்த்தத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் என்ன என்றால்  இறந்தவர்களின் சாம்பலை காவிலும், காசியிலும் சென்று கரைப்பதைவிட அதிக புண்ணியம் இங்குள்ள தீர்த்தத்தில் அவற்றைக் கரைப்பதே. இதற்கு ஒரு கதை உள்ளது. முன் ஒரு காலத்தில் ஒரு அந்தணன் பித்ரு காரியங்களை செய்துவிட்டு திரும்புகையில் ஒரு மயானத்தின் அருகில் இருந்த சாலை மூலம் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தபோது கண் மறைக்க அங்கிருந்த ஒரு  பாறையில் அடிபட்டு ரத்தம் வழிந்து மூர்ச்சையாகக் கிடந்தான்.  அந்த இடத்தில் கழுகுகள் வட்டம் அடித்துக் கொண்டு இருந்தன. யாரோ ஒருவன் உடல்  கிடக்கிறதே என எண்ணிய அவை கூட்டமாக வந்து அவனைக் கொத்தித் தின்னத் துவங்கின. மூர்ச்சையாகிக் கிடந்த அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் மரணம் அடைந்தான். அவன் உடலில் இருந்த ஒரு சதைப் பகுதியை கவ்விக்  கொண்டு  பறந்து  சென்ற ஒரு கழுகின் வாயில் இருந்து  அந்த சதை கீழே ஓடிக் கொண்டு இருந்த இந்த தீர்த்தத்தில் விழ அவன் ஆத்மாமேலுலகம் செல்ல, அவன் கணக்கை ஆராய்ந்த சித்ரகுப்தர் அவன் செய்திருந்த அனைத்து பாபமும் விலகி இருப்பதைக் கண்டார்.  அதில் அவன் ஆத்மா சிவலோகம் செல்ல வேண்டும் என முடிவாக எழுதப்பட்டு இருந்தது.  ஆகவே அவனது ஆத்மா சிவ லோகத்துக்கு சென்றது. அதைக் குறித்து அந்த பக்கமாக வந்து கொண்டு இருந்த நாரத முனிவரிடம்  விளக்கம் கேட்ட  யம தர்மனுக்கே அவர் கூறிய செய்தியினால்தான்  அந்த தீர்த்தத்தின் மகிமை புரிந்தது.   ”  என்றார். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு முனிவருக்கு இன்னும் ஒரு சந்தேகம் எழுந்தது. அவர் சூதகரிடம்  கேட்டார் ‘ மா முனிவரே, எனக்கொரு சின்ன சந்தேகம். நீங்கள் பல கதைகளை எங்களுக்கு கூறியு வந்துள்ளீர்கள் அதில்  பல ஆலயங்களுக்கு வந்து  பிரும்மாவும், விஷ்ணுவும், சூரியனும், யமனும்  மேலும் பல கடவுட்களும் அவரவர்கள்  பெற்று இருந்த ஒரு குறிப்பிட்ட சாபத்தை நீக்கிக் கொண்டு சாப விமோசனம் பெற்று உள்ளார்கள் என்று கூறி உள்ளீர்கள். அது போலவேதான் இந்த தலத்திலும் அவர்கள்  வந்து  அதே சில குறிப்பிட்ட சாபங்களுக்காக சாப விமோசனம் பெற்று உள்ளதாக கூறி உள்ளீர்கள்.
குறிப்பிட்ட சாப விமோசனம் பெற பல ஆலயங்களுக்கும் அவர்கள் சென்று  பிரார்த்தனை செய்து ஒரு குறிப்பிட்ட கடவுள் மூலம் சாப விமோசனம் பெற்றுள்ளதாக கூறி உள்ளதினால் உண்மையில் அவர்கள் எந்த தலத்தில் குறிப்பிட்ட சாப விமோசனம் பெற்றார்கள்?  ஒரு தலத்திலே சென்று பூஜித்து ஆராதித்து  அங்கு சாப விமோசனம் பெற்றப் பின் மற்ற தலங்களுக்கும்  சென்று அதே சாபத்திற்காக ஏன்  வேண்டிக் கொண்டு சாப விமோசனம் தேட வேண்டும்?   மற்ற தலங்களில்  அதே சாபத்திற்காக சாப விமோசனம் அடைந்ததாக கூறுவது ஏற்கும்படியாக இல்லையே.   இப்படி இருக்கையில்  எந்த தலம் உண்மையிலேயே சாப விமோசனம் தரும்  இடம்  என்பதை  விளக்குவீர்களா?” என்று  கேட்டார்.  அதற்க்கு சூதகர் விளக்கம் அளிக்கலானார்.
.……….தொடரும்